பத்துப்பாட்டு - சிறப்புக் காட்சிகள்


   1.திருமுருகாற்றுப்படை - அருவிக் காட்சி
   2.பொருநராற்றுப்படை - யாழ்க் காட்சி
   3.சிறுபாணாற்றுப்படை - திங்கள்மறைப்புக் காட்சி
   4.பெரும்பாணாற்றுப்படை - காடைப்பறவைக் காட்சி
   5.முல்லைப் பாட்டு - பாசறைக் காட்சி


   6.மதுரைக் காஞ்சி - மின்னல் காட்சி
   7.நெடுநல்வாடை - யவனர்க் காட்சி
   8.குறிஞ்சிப்பாட்டு - மலர்க் காட்சி
   9.பட்டினப்பாலை - வெண்மீன் காட்சி
   10.மலைபடுகடாம் - இசைக்கருவிகள் காட்சி
 
பத்துப்பாட்டு - பத்துக் கட்டுரைகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              8.குறிஞ்சிப்பாட்டு - மலர்க் காட்சி

								99 மலர்கள்



	குறிஞ்சித்திணையில் அமைந்த பாடல் குறிஞ்சிப்பாட்டு எனப்பட்டது. இது ஓர் அகத்திணைப் பாடல். நமது இலக்கிய மரபில், குறிஞ்சித்திணை 
என்பது தலைவனும் தலைவியும் சந்தித்துக்கொள்வதைக் குறிக்கும். இந்தச் சந்திப்பு எவ்வாறு ஏற்பட்டது, அதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றிப் 
பாடும் பாடல்கள் குறிஞ்சித்திணைப் பாடல்கள் எனப்படும். தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலித்தாய், நற்றாய் ஆகியோர் இத்திணையின் 
மாந்தர்கள் (கதைப் பாத்திரங்கள்). இது ஒரு கதைப் பாடல். இதனைப் பாடியவர் புலவர் கபிலர்.
	குறிஞ்சித்திணைக்குரிய பின்புலம் மலையும் மலைசார்ந்த இடங்களும் ஆகும். இந்த மலைசார்ந்த இடங்களுள், தினைப்புனங்களும் 
அடங்கும். தினைப் புனத்தில் நன்றாக கதிர் முற்றி அறுவடை செய்யப்படும் சில நாட்களுக்கு முன்னர், கிளிகள் கதிரைக் கொத்தித்தின்ன கூட்டம் 
கூட்டமாக வரும். அவ்வாறு வரும் கிளிகளை ஓட்டுவதற்குத் தலைவி தன் தோழியருடன் வருவாள். அப்போது விலங்குகளை வேட்டையாடிக்கொண்டு
வரும் தலைவன் தினைப்புனத்தின் பக்கம் வருவான். அப்போது தலைவன் - தலைவி காதல் முகிழ்க்கும். இது ஒரு நாடகப்பாங்கு. இந்தக் 
குறிஞ்சிப்பாட்டிலும் தலைவன் - தலைவி காதல் இவ்வண்ணமே முகிழ்க்கிறது. வேறு ஊரைச் சேர்ந்த தலைவன் தலைவியைச் சந்திக்க நள்ளிரவில் 
வருகிறான். அவன் வருகின்ற பாதையில் இருக்கும் இடையூறுகளையும் ஆபத்தையும் நினைத்து தலைவி மனக்கலக்கம் அடைகிறாள். அவளது 
கலக்கத்தைச் செவிலிக்கு எடுத்துக்கூறி, தோழி தலைவியின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முனைகிறாள். 
	தலைவியின் காதல் முகிழ்த்த கதையைச் சொல்லவந்த தோழி, ஒருநாள் அவர்கள் தினைப்புனத்தைக் காத்துக்கொண்டிருந்தபோது வந்த 
மழையைப் பற்றிக் கூறுகிறாள். திடீரென்று பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து, மலைச் சரிவுகளில் ஓடி, பெரும்பள்ளத்தில் அருவியாய்க் 
கொட்டுகிறது. மழை நின்றபின்னர் தினைப்புனத்தில் காவல் காத்துக்கொண்டிருந்த மங்கையர் அருவிநீரில் குளித்து மகிழ்கின்றனர். பின்னர், அங்கு 
மரம், செடி, கொடிகளில் மலர்ந்து கிடக்கும் பூக்களைப் பறித்து ஒன்றுசேர்க்கின்றனர். இக்காட்சியைக் கூறவந்த கபிலர், மகளிர் பறித்ததாகத் 
தொண்ணூற்றொன்பது வகைப் பூக்களின் பெயர்களை அழகுற அடுக்கிக் கூறுகிறார். எதுகையும் மோனையும் துள்ளி விளையாடும் அற்புதச் 
சொற்குவியல் இதோ:-

	-----     -----     -----     வள் இதழ்
	ஒண் செம் காந்தள், ஆம்பல், அனிச்சம்
	தண் கயம் குவளை, குறிஞ்சி, வெட்சி,
	செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை
	உரிது நாறு அவிழ் தொத்து, உந்தூழ், கூவிளம்,
	எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் 
	வடவனம், வாகை, வால் பூ குடசம்,
	எருவை, செருவிளை, மணி பூ கருவிளை,
	பயினி, வானி, பல் இணர் குரவம்,
	பசும்பிடி வகுளம், பல் இணர் காயா,
	விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
	குரீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
	குருகிலை மருதம், விரி பூ கோங்கம்,
	போங்கம், திலகம், தேம் கமழ் பாதிரி,
	செருந்தி, அதிரல், பெரும் தண் சண்பகம்,
	கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
	தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
	குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
	வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
	தாழை, தளவம், முள் தாள் தாமரை,
	ஞாழல், மௌவல், நறும் தண் கொகுடி,
	சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
	கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
	காஞ்சி, மணி குலை, கள் கமழ் நெய்தல்,
	பாங்கர், மராஅம், பல் பூ தணக்கம்,
	ஈங்கை, இலவம், தூங்கு இணர் கொன்றை,
	அடும்பு அமர் ஆத்தி, நெடும் கொடி அவரை,
	பகன்றை, பலாசம், பல் பூ பிண்டி,
	வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
	தும்பை, துழாஅய், சுடர் பூ தோன்றி,
	நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
	பாரம், பீரம், பைம் குருக்கத்தி,
	ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
	நரந்தம், நாகம், நல்லிருள்நாறி,
	மா இரும் குருந்தும், வேங்கையும், பிறவும்
	அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்	  - குறிஞ். 61 - 96

	பெரும்பாலும் ஒரு அடியில் மூன்று பூக்களையும், அவற்றில் ஒன்றனுக்கு அழகிய பொருத்தமான அடைமொழியையும் வைத்து, எதுகை, 
மோனையுடன் கபிலர் இந்த 99 பூக்களையும் வரிசைப்படுத்தியிருப்பதனைப் படித்துப் படித்து இன்புறலாம்.
	இப்போது இப் பூக்களைத் தனித்தனியாகப் பார்க்கலாம். இந்தப் பூக்களைத் தாவரவியல்படி அடையாளம் காண பலர் முயன்றிருக்கிறார்கள். 
ஆனால் சில பூக்களுக்கு அவர்கள் காணும் அடையாளத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே இங்குக் குறிப்பிடப்படும் தாவரப்பெயர்கள் 
முடிவான முடிபு அல்ல.

வள் இதழ்,
ஒண் செம் காந்தள், ஆம்பல், அனிச்சம் - பெரிய இதழையுடைய ஒளிரும் 1.செங்காந்தள்(Malabar Glory lily - gloriosa superba L), 
2.ஆம்பல்(white water lily - Nymphaes lotus L ), 3.அனிச்சம்(Anagallis arvensis Linn.)

	

தண் கயம் குவளை, குறிஞ்சி, வெட்சி - குளிர்ந்த குளத்து(ப்பூத்த) 4.செங்கழுநீர்ப்பூ(Red water lily), 5.குறிஞ்சி(Strobilanthes kunthiana T), 
6.வெட்சி(Scarlet ixora),

	

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை - 7.செங்கொடுவேரி(Plumbago rosea L), 8.தேமா(Mangifera indica L), 9.செம்மணிப்பூ(Ipomoea sepiaria J)

	

உரிது நாறு அவிழ் தொத்து, உந்தூழ், கூவிளம் - (தனக்கே)உரித்தாக மணக்கும் விரிந்த கொத்தினையுடைய 10.பெருமூங்கிற்பூ(Bambusa arundinaca), 
11.வில்வப்பூ(Aegle Marmelos),

	

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் - நெருப்பை ஒத்த 12.எறுழம்பூ(Calycopteris floribunda Lam), 13.மராமரப்பூ(diospyros ebenum), 
14.கூவிரப்பூ(Crateva religiosa G. Forst.),

	

வடவனம், வாகை, வால் பூ குடசம் - 15.வடவனம்(Ficus benghalensis L.), 16.வாகை(Albizia lebbeck L.), வெண்ணிறப் பூவுடைய 
17.வெட்பாலைப்பூ(Holarrhena antidysenterica)

	

எருவை, செருவிளை, மணி பூ கருவிளை - 18.பஞ்சாய்க்கோரை(arundo donax), 19.வெண்காக்கணம்பூ(Clitoria ternatea L. var. albiflora Voigt), 
(நீல)மணி(போலும்) பூக்களையுடைய 20கருவிளம்பூ(Clitoria ternatea typica)

	

பயினி, வானி, பல் இணர் குரவம் - 21.பயினி(Vateria indica L.), 22.வானி(Trachyspermum Copticum.), பல இதழ்களையுடைய 
23.குரவம்பூ(Webera corymbosa Willd.),

	

பசும்பிடி, வகுளம், பல் இணர் காயா - 24.பச்சிலைப்பூ(Garcinia xanthochymus), 25.மகிழம்பூ(Mimusops elengi L.), பல கொத்துக்களையுடைய 
26.காயாம்பூ(Memecylon edule Roxb.),

	

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல் - விரிந்த பூக்களையுடைய 27.ஆவிரம்பூ(Cassia auriculata L.), 28.சிறுமூங்கிற்பூ(Dendrocalamus strictus), 
29.சூரைப்பூ(Ziziphus oenoplia  L. Mill.),

	

குரீஇப்பூளை, குறுநறுங்கண்ணி - 30.சிறுபூளை(Aerva lanata (L.) Juss. ex Schult), 31.குன்றிப்பூ(Abrus precatorius)

	

குருகிலை, மருதம், விரி பூ கோங்கம் - 32.முருக்கிலை(Ficus Virens), 33.மருதம்(Terminalia arjuna), விரித்த பூக்களையுடைய 
34.கோங்கம்பூ(Cochlospermum gossypium (L.) DC.)

	

போங்கம், திலகம், தேம் கமழ் பாதிரி - 35.(Hopea Ponga)கோங்கப்பூ, 36.மஞ்சாடி மரத்தின் பூ(Barbadoes Pride), தேன் மணக்கும் 
37.பாதிரிப்பூ(Stereospermum chelonoides)

	

செருந்தி, அதிரல், பெரும் தண் சண்பகம் - 38.செருந்திப்பூ(Ochna squarrosa L.), 39.புனலிப்பூ(Derris scandens (Roxb.) Benth.), பெரிய குளிர்ந்த 
40.சண்பகப்பூ(Michelia champaca L.)

	

கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா - 41.நாறுகரந்தை(Sphaeranthus Indicus), 
42.காட்டுமல்லிகைப்பூ(Indian cork - Millingtonia hortensis), மணம் கமழும் தழைத்த 43.மாம்பூ(Mangifera pinnata /indica),

	

தில்லை, பாலை, கல் இவர் முல்லை - 44.தில்லப்பூ(Excoecaria agallocha L.), 45.பாலை(Wrightia tinctoria (Roxb.) R.Br. .), கல்லிலே படர்ந்த 
46.முல்லைப்பூ(Jasminum auriculatum)

	

குல்லை, பிடவம், சிறுமாரோடம் - 47.கஞ்சங்குல்லைப்பூ(Ocimum album), 48.பிடவம்(Randia malabarica Lam.), 
49. செங்கருங்காலிப்பூ(Acacia sundra (Roxb.) DC.),

	

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் - 50.வாழைப்பூ(Musa paradisiaca), 51.வள்ளிப்பூ(sweet potato-Convolvulus batatas), நீண்ட நறிய 
52.நெய்தற்பூ(Nymphaea stellata Willd/ lotus alba),

	

தாழை, தளவம், முள் தாள் தாமரை - 53.தெங்கின் பாளை(Cocunut flower - Cocos nucifera), 
54.செம்முல்லைப்பூ(jasminum polyanthum), முட்களைக்கொண்ட தண்டையுடைய 55.தாமரைப்பூ(Nelumbium speciosum),

	

ஞாழல், மௌவல், நறும் தண் கொகுடி - 56.ஞாழல்(Caesalpinia cucullata), 57.மௌவல்(Jasminum officinale), நறிய குளிர்ந்த 
58.கொகுடிப்பூ(Jasminum multiforum)

	

சேடல், செம்மல், சிறுசெங்குரலி - 59.பவழ மல்லிகைப்பூ(Nyctanthes arbor-tristis L.), 60.சாதிப்பூ(Jasminum grandiflorum L.), 
61.கருந்தாமக்கொடிப்பூ(Pentapetes phonicea)

	

கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை - 62.வெண்காந்தள்பூ(Gloriosa superba L.), 63.தாழம்பூ(Pandanus odoratissimus L. f.), 
தாது முதிர்ந்த நறிய 64.சுரபுன்னைப்பூ(Ochrocarpus  longifolius)

	

காஞ்சி, மணி குலை கள் கமழ் நெய்தல் - 65.காஞ்சிப்பூ என்னும் ஆற்றுப்பூவரசு(Trewia nudiflora L.), 
நீலமணிபோலும் கொத்துக்களையுடைய தேன் மணக்கும் 66.கருங்குவளை(Nymphaea Stellata)

	

பாங்கர், மராஅம், பல் பூ தணக்கம் - 67.ஓமை(toothbrush tree-Salvadora persica), 68.மரவம்பூ,வெண்கடம்பு (Barringtonia racemosa) 
பல பூக்களையுடைய 69.தணக்கம்பூ(Gyrocarpus americanus Jacq.),

	

ஈங்கை, இலவம், தூங்கு இணர் கொன்றை - 70.இண்டம்பூ(Acacia caesia), 71.இலவம்பூ(silk cotton -  Bombax malabaricum), 
தொங்குகின்ற பூங்கொத்தினையுடைய 72.கொன்றைப்பூ(Cassia fistula L.),

	

அடும்பு அமர் ஆத்தி, நெடும் கொடி அவரை - 73.அடும்பம்பூ(Ipomoea pes-caprae/), பொருந்தின 74.ஆத்திப்பூ(Bauhinia racemosa Lam.), 
நீண்ட கொடியையுடைய 75.அவரைப்பூ(Dolichos lablab L.)

	

பகன்றை, பலாசம், பல் பூ பிண்டி - 76.பகன்றை(Operculina turpethum), 77.பலாசம் என்ற புரசம்(Butea frondosa Roxb.ex Willd), 
பல பூக்களையுடைய 78.அசோகப்பூ(Saraca indica L.),

	

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம் - 79.வஞ்சி(Bassia malabarica (Madhuca neriifolia)), 80.பிச்சிப்பூ(Jasminum angustifolium), 
81.கருநொச்சிப்பூ(Vitex negundo L.),

	

தும்பை, துழாஅய், சுடர் பூ தோன்றி - 82.தும்பை(Leucas aspera (Willd.), 83.திருத்துழாய்ப்பூ(Ocimum sanctum L.), 
விளக்குப்போலும் பூவினையுடைய 84.தோன்றிப்பூ(Gloriosa superba),

	

நந்தி, நறவம், நறும் புன்னாகம் - 85.நந்தியாவட்டை(Tabernaemontana coronaria), 86.நறைக்கொடி(Luvunga scandens), 
நறிய 87.புன்னாகம்(Calophyllum elatum Bedd.),

	

பாரம், பீரம், பைம் குருக்கத்தி - 88.பருத்திப்பூ(Gossypium herbaceum L.), 89.பீர்க்கம்பூ(Luffa acutangula (L.) Roxb), 
பச்சையான 90.குருக்கத்திப்பூ(Hiptage madablota Gaertn.)

	

ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை - 91.சந்தனப்பூ(Santalum album L.), 92.அகிற்பூ(Aquilaria agallocha Roxb.), 
மணத்தையுடைய பெரிய 93.புன்னைப்பூ(Calophyllum inophyllum L.),

	

நரந்தம், நாகம், நல்லிருள்நாறி - 94.நாரத்தம்பூ(Citrus aurantium L.), 95.நாகப்பூ(Mesua ferrea L.), 96.இருவாட்சிப்பூ(Jasminum sambac var.),

	

மா இரும் குருந்தும், வேங்கையும், பிறவும் - கரிய பெரிய 97.குருத்தம்பூ(Atlantia monophylla Linn.), 
98.வேங்கைப்பூ(. Pterocarpus marsupium Roxb.) (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,

அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன் - சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய 
99.மலையெருக்கம்பூவுடன்(Calotropis gigantea (L.) W.T. Aiton),

	

	சங்கத் தமிழ் அறிந்த அத்தனைபேரும் அறிந்திருக்கும் அடிகள் இவை. இத்தனை பூக்களையும் புலவர் அறிந்திருப்பது மட்டுமல்ல, அவற்றை
அழகுற அடுக்கியிருக்கும் நேர்த்தியும் நம்மை வியக்கவைக்கிறது. வடவனம், வாகை, வான்பூங்குடசம் - சேடல், செல்லம், சிறுசெங்குரலி - 
பாரம், பீரம், பைங்குருக்கத்தி போன்ற அடிகள் சொல்லச்சொல்ல இனிக்கின்றன. சொக்கவைக்கும் சொல்லடுக்குகளுடன் எதுகையும், மோனையும் 
இணைந்து ஆடும் ஓர் அற்புத நடனம் இது. பெரும்பாலான அடிகளில் மூன்று பெயர்கள் - அவற்றில் பெரும்பாலான மூன்றாவது பெயர்களுக்குப் 
பொருத்தமான அடைமொழிகள் - என ஓர் இசைப்பாடலாக நம்மை இன்பத்தில் ஆழ்த்தும் அடிகள் இவை. 
	ஆனாலும், சிலருக்கு இங்கே நெருடல் தோன்றலாம். 261 அடிகள் கொண்ட இந்தப் பாடலில், 36 அடிகளில் இந்த வருணனை வருகிறது. 
இது தேவைதானா? ஆசிரியரின் அறிவுத்திறனைக் காட்ட இதுதான் இடமா? கதையின் ஓட்டத்தை இது தொய்வாக்கவில்லையா? இத்தகைய 
மாற்றோட்டம் (diversion) இங்கே தேவையா? குறிஞ்சித்திணைக்குத் தொடர்பில்லாத பல பூக்கள் இங்கே காணப்படுகின்றனவே! இவற்றில் பல பூக்கள் 
(வாழைப்பூ, மாம்பூ, மூங்கிற்பூ போன்றவை) சாதாரணமாகப் பெண்கள் அணிந்துகொள்வதில்லையே? இதைப் போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
	தலைவியின் காதலைத் தாயிடம் தோழி தெரிவிக்கிறாற்போல் அமைந்திருக்கும் இப் பாடலில், தோழி இத்தனை பூக்களையும் பறித்துச் 
சேர்த்தோம் என்று ஒவ்வொன்றாக அடுக்கிக்கூறுவதை எந்தத் தாய்தான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருப்பாள்? “சரி, சரி, அடுத்து என்ன 
செய்தீர்கள்?” என்று சலிப்புடன் கடிந்துகொள்ளமாட்டாளா? எனவே, பாடலைப் படிப்போர் சுவைத்து மகிழ்வதற்காகவே இந்த நெடுந்தொடரைக் கபிலர் 
இங்கு அமைத்திருக்கிறார் எனலாம். மிகவும் சுவையாகவும், சொல்பவருக்குச் சோர்வு ஏற்படாமல் இருக்கும் வண்ணமும் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் 
இந்த மலர்க்கண்காட்சியைப் படித்துச் சுவைக்க விரும்புவோர் உள்ளே சென்று நின்று நிதானமாக ஒவ்வொன்றாகப் படித்துச் சுவைத்து இன்புறலாம். 
இல்லையேல், இதனைத் தவிர்த்துத் தொடரலாம். எவ்வளவு விறுவிறுப்பான கதை என்றாலும் இடையிடையே சில பாடல் காட்சிகளும் நகைச்சுவைக் 
காட்சிகளும் நம் திரைப்படங்களில் அமைக்கப்படுவது இல்லையா? மேனாட்டுப் படங்களில் அவ்வாறு காண இயலாது. எனவே இதனை நம் பண்பாட்டு 
இயல்புடன் பார்க்கவேண்டுமே ஒழிய, மேனாட்டு இலக்கியத் திறனாய்வின் வழி பார்க்கக் கூடாது. தொடர்பற்ற பூக்களும் குறிப்பிடப்படுகின்றனவே 
என்ற கூற்றுக்கும் இதே பதில்தான்.