பத்துப்பாட்டு - சிறப்புக் காட்சிகள்


   1.திருமுருகாற்றுப்படை - அருவிக் காட்சி
   2.பொருநராற்றுப்படை - யாழ்க் காட்சி
   3.சிறுபாணாற்றுப்படை - திங்கள்மறைப்புக் காட்சி
   4.பெரும்பாணாற்றுப்படை - காடைப்பறவைக் காட்சி
   5.முல்லைப் பாட்டு - பாசறைக் காட்சி


   6.மதுரைக் காஞ்சி - மின்னல் காட்சி
   7.நெடுநல்வாடை - யவனர்க் காட்சி
   8.குறிஞ்சிப்பாட்டு - மலர்க் காட்சி
   9.பட்டினப்பாலை - வெண்மீன் காட்சி
   10.மலைபடுகடாம் - இசைக்கருவிகள் காட்சி
 
பத்துப்பாட்டு - பத்துக் கட்டுரைகள்
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                                              4.பெரும்பாணாற்றுப்படை - காடைப்பறவைக் காட்சி

									கறை அணல் குறும்பூழ்

	
	பெரிய யாழை இசைத்து வாழ்பவன் பெரும்பாணன். அந்தப் பெரிய யாழ் பேரியாழ் எனப்படும். காஞ்சியை ஆண்ட தொண்டைமான் 
இளந்திரையனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு பெரும்பாணன், தன்னைப் போன்ற வேறொரு பெரும்பாணனைக் கண்டு, அவனைத் 
தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இப்பெரும்பாணாற்றுப்படை. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர்.
	இப்பாடலில் புலவர் தொண்டைமானின் மாண்பையும் ஆட்சியின் பெருமையையும் பெருமைபட விவரிக்கிறார். அம் மன்னன் வாழும் 
காஞ்சிப் பெருநகருக்குச் செல்லும் வழியில் காணும் உமணர் என்னும் உப்பு வணிகரையும், கழுதைச் சாத்து எனப்படும் கழுதை மீது பொதியேற்றி 
விற்றுச்செல்லும் வணிகரையும் நம் கண்முன் உயிரோவியங்களாகக் காட்டுகிறார் புலவர். அந்த வழி பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய 
நிலங்களின் வழியே செல்வதாகக் கூறும் புலவர், அந்தந்த நிலங்களைச் சார்ந்த எயினர், கோவலர், உழவர், வலைஞர், பட்டின மக்கள் ஆகியோரின் 
வாழ்க்கை முறைகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார். இறுதியில் காஞ்சிநகரின் சிறப்பையும், இளந்திரையன் பரிசிலர்க்குப் பரிசு வழங்கும் 
திறத்தையும் மனமாரப் பாராட்டுகிறார். 
	பரிசில் வாங்கச் செல்லும் பாணன், வழியில் முல்லை நிலத்தில் காணும் ஓர் அறுவடைக் காட்சியையே இங்கு நாம் பார்க்கப்போகிறோம்.
	முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமும் என்பர். காடு என்பது இங்கு புன்செய் நிலத்தைக் குறிக்கும். புன்செய் என்பது புஞ்சை 
என்ற வானம் பார்த்த பூமியைக் குறிக்கும். பொதுவாக இது ஒரு மேட்டுப்பாங்கான கடினமான நிலமாக இருக்கும். மலைகளின் அடிவாரப் 
பகுதியாகவும் இருக்கும். வாய்க்கால் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகியவை இங்கு சாத்தியம் இல்லை. எனவே, இங்கு மக்கள் விவசாயத்திற்கு மழை
நீரையே நம்பியிருப்பார்கள். மழைக்கால ஆரம்பத்தில் உழுது பயிரிடுவார்கள். இடையிடையே பெய்யும் மழையில் பயிர்கள் வளர்ந்து, மழைக்கால 
முடிவிற்குள் அறுவடைக்கு வந்துவிடும். பெரும்பாலும், வரகு, கம்பு, சோளம் போன்ற தானியங்களும், பயறு வகைகளும் இங்கு பயிரிடப்படும். 
அப்படிப்பட்ட ஒரு முல்லைநில மக்களின் உழவு வாழ்க்கையைப் புலவர் அழகாக விவரிக்கிறார். 

	1. குடி நிறை வல்சி செம் சால் உழவர்
	2. நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி
	3. பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
	4. உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி
	5. தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை	
	6. அரி புகு பொழுதின் இரியல் போகி
	7. வண்ண கடம்பின் நறு மலர் அன்ன
	8. வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
	9. கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும்
	10 .வன்புலம்           -- பெரும் 197 - 206 

இதன் பொருள்:

1. குடி நிறை வல்சி செம் சால் உழவர் - வீடு நிறைய உணவினையுடைய ஒழுங்கான சாலாக உழுகின்ற உழவர்கள்,
2. நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி - நடை பயின்ற பெரிய எருதுகளை நுகத்தில் பூட்டிக்கொண்டு,
3. பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் - பெண்யானையின் வாயைப் போன்ற, மடங்கிய வாயையுடைய கலப்பையின்
4. உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி - உடும்பின் முகத்தைப் போன்ற பெரும் கொழு மறைய அமுக்கி,	
5. தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை - உழுத பகுதிகளில் விதைகளைத் தூவி விதைத்தவாறே உழுது, (பின்னர் வளர்ந்த களைகளைக்) 
களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை,
6. அரி புகு பொழுதின் இரியல் போகி - (கதிர்)அறுப்பதற்குச் செல்லும்போது, (ஆட்களின் அரவத்தால்)நிலைகெட்டு ஓடி,
7,8. வண்ண கடம்பின் நறு மலர் அன்ன வளர் இளம் பிள்ளை தழீஇ -(வெண்மையான)நிறத்தையுடைய கடம்ப மரத்தின் மணமுள்ள பூவைப் போன்ற 
வளர்கின்ற இளம்குஞ்சுகளைத் அணைத்தவாறு, 
8,9 குறும் கால், கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் - குட்டையான காலினையும்,
கரிய கழுத்தினையும் உடைய (ஆண்) காடைப்பறவை வனப்பகுதிக்குச் செல்லும்
10. வன்புலம் - கடினமான புலமான முல்லைநிலம்

	உழும்போது கொழு மண்ணில் ஏற்படுத்தும் பள்ளத்தைச் சால் என்பர். முதலில் நிலத்தைச் சுற்றி உட்புறம் பெரிய நீள்வட்டமாக உழுவர். 
பின்னர் அடுத்து அடுத்து, முதலில் உழுத சாலுக்கு இணையாக உள்ளே உழுதுகொண்டு வருவர். சில சமயங்களில் இரண்டு பேர் உழுவர். முதலில் 
உழுபவரின் பின்னே அடுத்தவர் முதல் சாலுக்கு இணையாக கொஞ்சம் உள்ளே தள்ளி உழுதுகொண்டே வருவார். உழுததன் மேலேயே உழாமலும், 
அதற்கு மிகவும் விலகி இல்லாமலும் இரண்டாமவர் உழவேண்டும். அப்படி இல்லாவிட்டால், “நல்லா சால்பிடிச்சு உழுடா” என்று முன்னவர் கூறுவார். 
ஒருவரே உழுதாலும், அடுத்தடுத்த சால்கள் ஒட்டியிருக்கும்படி உழுவார். இதற்கு நிரம்பப் பயிற்சி தேவை. இப்படி உழுவதையே செம்மையான சால் 
என்பர். இதனையே புலவர் செஞ்சால் என்கிறார்.
	மாடுகளை நினைத்தவுடன் நினைத்தபடி வண்டியில் பூட்டவோ அல்லது உழவு செய்விக்கவோ முடியாது. தக்க பருவம் வந்த 
ஆண்கன்றுகளை அதற்கென்று பழக்குவார்கள். அதிலும் இடப்பக்கமா அல்லது வலப்பக்கமா என்று முடிவு செய்து பின்னர் அதே நிலையிலேயே 
பழக்குவார்கள். இடப்பக்கம் பழக்கிய மாட்டை, இடத்து மாடு என்றும், வலப்பக்கம் பழக்கிய மாட்டை வலத்து மாடு என்றும் கூறுவார்கள். 
விற்கும்போதும் வாங்கும்போதும் அப்படியே சொல்லிச் செய்வார்கள். முதலில், வளர்ந்த கன்றுகள் இரண்டனை ஒன்றாக நிறுத்தி, அவற்றை 
இணைத்து, கயிறைப் பிடித்துக்கொண்டு மெதுவாக ஓட்டிப் பழக்குவார்கள். இதற்கு, ‘மாடு பழக்குதல்' என்று பெயர். இதற்கென்றே தனிப் 
பயிற்சியாளர்களும் உண்டு. மாடுகள் இரண்டும் ஒன்றாகக் காலெடுத்து வைத்து, ஒன்றன் வேகத்தை மற்றது அனுசரித்துப் போகுமாறு பழக்குவார்கள். 
பின்னர், வலப்பக்கம், இடப்பக்கம் திரும்புதலைப் பழக்குவார்கள். வலப்பக்கம் திரும்பும்போது, வலது மாடு சற்று மெதுவாகத் திரும்பவேண்டும். 
அதே நேரத்தில் இடத்து மாடு விரைவாகத் திரும்ப வேண்டும். இவ்வாறு செய்வதை நடை பழக்குதல் என்பார்கள். ஒரு காளையை வாங்கும்போது 
அதை நடக்கவிட்டுப் பார்த்தே வாங்குவார்கள். நன்றாகத் தலையை உயர்த்திச் சீராகக் கால் எடுத்து வைத்து நடக்கும் காளையின் விலை அதிகம். 
காளை கம்பீரமாக நின்றாலே அதன் அழகு தனிதான். இதைத்தான் நடை நவில் பெரும் பகடு என்று புலவர் கூறுகிறார். நன்றாக நடை பயின்ற பெரிய
காளைகளை உழவர் பூட்டி உழுகின்றனர் எனப் புலவர் கூறுகிறார். நவிலுதல் என்பதற்குத் திரும்பத் திரும்பப் பயிற்சி செய்தல் என்று பொருள். 
மாடுகளை நுகத்தடியில் இணைத்து, கயிற்றால் கழுத்தைச் சுற்றி நுகத்தடியில் பொருத்தி, முளையிட்டு, நுகத்தடியுடன் ஏரை இணைத்துக்
கட்டுவதையே ஏர் பூட்டுதல் என்கிறோம். “ஏரு பூட்டிப் போவாயே அண்ணே, சின்னண்ணே” என்பது பழைய திரைப்பாடல். 
	நாஞ்சில் என்பது கலப்பை. தமிழர்கள் உழுவதற்குப் பயன்படுத்தும் மரத்தால் ஆன ஒரு சாதனம். அதன் படத்தைப் படத்தில் பாருங்கள்.

	

	இதன் வாய் மடிந்திருப்பதைக் காணலாம். இதற்குப் புலவர் கூறும் உவமை மிக அழகானது. பெண்யானையின் திறந்த வாயைப் போன்று 
இது இருக்கிறது என்கிறார் அவர். 

	

	புலவரின் உவமை எவ்வளவு அழகாகப் பொருந்தியிருக்கிறது என்று பாருங்கள். பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் என்ற அடிகளில் 
எதுகை அழகு இவ்வுவமைக்கு மேலும் மெருகூட்டுகிறது. 
	மரத்தால் ஆன கலப்பையால் நிலத்தை எவ்வாறு கீறி உழமுடியும்? எனவே, கலப்பையின் நுனியில் ஓர் இரும்பாலான கூர்மையான 
முக்கோணம் போன்ற கருவியைப் பொருத்தியிருப்பார்கள். இது கொழு எனப்படும். இந்தக் கொழுதான் நிலத்தைக் கீறி உழுகிறது. இது மொட்டையாகப்
போனால் கொல்லனிடம் கொடுத்து கூர்மையாக்குவார்கள். 

	

	இங்கு மற்றோர் அழகிய உவமையைக் காண்கிறோம். உடுப்பு முக (முழு) கொழு என்பது புலவரின் உவமை. உடுப்பு என்பது உடும்பு என்ற 
விலங்காகும். உடும்பு மதில் மேல் ஏறும், தான் பற்றியதை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும். எவ்வளவு இழுத்தாலும் அதன் பிடியைத் 
தளர்த்த முடியாது. இதைத்தான் உடும்புப் பிடி என்று சொல்வார்கள். இக்காலத்தவருக்கு கொழுவும் தெரியாது. உடும்பும் தெரியாது. இரண்டையும் 
தெரிந்துகொள்ள அருமையான உவமை இது. உவமையின் நோக்கம் என்ன? தெரியாத ஒன்றினைப் புரிந்துகொள்ள, தெரிந்த ஒன்றினை ஒப்பிட்டுக் 
காட்டி ‘இதைப் போல் அது' என்று கூறுவது உவமையின் ஒரு பயன். ஆனால், இரண்டுமே தெரியாத பொருள்களாக இருந்தால் உவமையில் 
பயனில்லை. அன்றைய தமிழ் மக்களுக்குச் சாதாரணமாகத் தெரிந்த பலவற்றை இன்றைய மக்கள் அறியமாட்டார். அதனால்தான், சங்க 
இலக்கியங்களின் உவமைகளைப் படிக்கும்போது தகுந்த விளக்கங்களுடன் படிக்கவேண்டும். ஆனால், அன்றைய மக்கள் கொழு, உடும்புமுகம் ஆகிய 
இரண்டையுமே தெரிந்துவைத்திருந்திருப்பார்கள். எனவே இந்த உவமை எதற்கு? ஒன்றற்கொன்று தொடர்பில்லாதது போல் தோன்றுகிற இரு 
பொருள்களில் உள்ள ஏதோ ஒரு ஒப்புமையை நம் கண்முன் நிறுத்திக்காட்டுவது புலவரின் திறமை. அவற்றை மனத்தில் இருத்தி மகிழ்ந்து இரசிப்பது 
படிப்போர் கொடுப்பினை. இதுவே இலக்கியம் தரும் இன்பம்.
	இந்தக் கொழு ஏரின் நுனிக்குச் சற்று வெளியில் இருக்குமாறு பொருத்தப்பட்டிருக்கும். அந்தக் கொழு முழுவதும் நிலத்தில் ஆழ்ந்து 
போகுமாறு ஏரை அமுக்கிப் பிடித்து உழவர்கள் ஆழ உழுகிறார்கள் என்பதையே முழுக்கொழு மூழ்க ஊன்றி என்கிறார் புலவர். வளைத்து வளைத்து 
உழுவதையும், உழுவதன் மேல் விதைப்பதையும் தொடுப்பு என்பார்கள். முல்லைநிலக் காடுகளில் விதைகளைத் தூவித்தான் விதைப்பார்கள். இங்கே 
புலவர் தொடுப்பு எறிந்து உழுத என்பதால், முதலில் விதைகளைத் தூவிவிட்டுப் பின்னர் அதன்மேல் உழுகிறார்கள் எனக் கொள்ளலாம். தூவிய 
விதைகள் மண்ணுக்குள் சென்றால்தான் முளைக்கும். மேலும், பறவைகளும் கொத்தித் தின்னாமல் இருக்கும். எனவேதான் தூவியபின் அதைப் 
புரட்டிவிடுகிற மாதிரி உழுவார்கள். துளர் என்பது களைக்கொத்து ஆகும். துளர்படு என்பது களையெடுத்தல்.
	துடவை என்பது விவசாய நிலம். வயல் என்பது ஆற்றுநீர் அல்லது ஏரிநீர் கொண்டு விவசாயம் செய்யும் பூமி. தோட்டம் என்பது 
கிணற்றுநீர் கொண்டு விவசாயம் செய்யும் பூமி. துடவை என்பது மானாவாரி நிலம். ‘தோட்டம் தொரவை எல்லாம் நெறயக் கிடக்கு' என்பது 
கிராமத்தார் வழக்கு. துடவை என்பதே பேச்சுவழக்கில் தொரவை ஆனது. 
	பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர் விட்டு முற்றிய பின், கதிர் அறுக்கச் செல்வார்கள். அதற்கு முன் பொதுவாக நிலத்திற்குள் 
செல்லமாட்டார்கள். எனவே, அங்குக் காட்டுப் பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து வாழும். குறும்பூழ் என்பது காடை என்ற பறவையைக் 
குறிக்கும். இந்தக் காடையின் குஞ்சு வெண்கடம்பு மலரைப் போன்று இருக்கும் என்று கூறுகிறார் புலவர். அவர் தரும் இன்னொரு அற்புதமான 
உவமை இது. 

	

	கதிர் அறுப்பதற்கு ஆட்கள் காட்டினுள் நுழைந்தவுடன் அங்கு வாழ்ந்துகொண்டிருந்த காடைப் பறவைகள் வெருண்டுபோய்த் தங்கள் 
குஞ்சுகளோடு அந்த இடத்தை விட்டு வெளியேறுகின்றன. இதனையே, ‘அரி புகு பொழுதின் இரியல் போகி' என்று புலவர் கூறுகிறார். காடைப் 
பறவையை ஆங்கிலத்தில் jungle bush quail bird என்கிறார்கள். இதைப் பற்றி ஆய்ந்த உயிரியலார் கூறுவதைப் பாருங்கள்:
	Jungle bush quail bird is a terrestrial species, feeding on seeds and insects on the ground. It is notoriously difficult to see, keeping
hidden in crops, and reluctant to fly, preferring to creep away instead.
	The natural habitat of the Jungle bush quails mostly consists of the Indian dry grasslands.
	The bird is usually seen in small coveys and is quite shy by nature. One can get a glimpse of the Jungle bush quails of India 
mainly when they burst out into flight from under the vegetation.
	இயல்பாக, இப்பறவைகள் வெளியே வருவதில்லை. ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவை வெருண்டுபோகும் போது ‘வெடித்துச் 
சிதறுவது போல் வெளிக்கிளம்பும்' என்று மேலே காண்கிறோம். இதனையே புலவர் இரியல் போகி என்கிறார். burst out என்ற தொடருக்கு,‘வெடித்து 
மேலெழு', ‘தெறித்துச்சிதறு', ‘பீரிடு', ‘விரைவுடன் வெளிப்படு', ‘விசையுடன் வெளித்தோன்று' என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். எனினும் இன்று 
வழக்கொழிந்துபோன ‘இரியல் போகு' என்ற தொடரே இதற்கு இவ்விடத்தில் நேர்பொருள் தரும்.

	

	ஆண்காடையின் கழுத்தின் கீழ்ப்புறம் கறுப்பாக இருக்கும். இதையே கறை அணல் குறும்பூழ் என்கிறார் புலவர்.

	

	இவற்றின் கால்கள் குட்டையாக இருப்பதையும் கவனியுங்கள். இதனையே புலவர் குறுங்கால் என்கிறார். இவை பார்ப்பதற்கு நாம் 
வீடுகளில் வளர்க்கும் கோழியைப் போல் தோற்றம் அளிக்கின்றன. பொதுவாகக் வீட்டுக் கோழிகளில், முட்டை இட்ட பின் சேவல் பேடையைக் 
கண்டுகொள்வதில்லை. குஞ்சுகளை வளர்ப்பது பேடை மட்டுமே. ஆனால், இங்கு ஆபத்து வரும்போது வளரும் இளம் பிள்ளைகளைத் 
தழுவிக்கொண்டு ஆண்காடை (குறும் கால், கறை அணல் குறும்பூழ்) கூட்டிச்செல்லும் என்று புலவர் கூறுகிறாரே! இங்கு உயிரியலார் கூறுவதைப் 
பாருங்கள்: 
	The male Jungle bush quail is very protective of the female as well as the newly hatched chicks.
	காடுகளிலும் மலைகளிலும் காத்துக்கிடந்து, அரிதின் முயன்று பெற்று, இன்றைய உயிரியலார் நமக்கு இந்த அரிய உண்மைகளைத் 
தருகின்றனர். ஆனால், சங்கப் புலவர் போகிறபோக்கில் இத்தனை உண்மைகளைத் தெரிவிப்பதைக் காணும்போது அவருடைய பட்டறிவின் 
ஆழத்தையும் அகலத்தையும் எண்ணி எண்ணி வியப்படையாமல் இருக்கமுடியவில்லை. அதே நேரத்தில், ஓரிரு சொற்களில் ஓராயிரம் 
செய்திகளைப் பொதிந்துவைத்திருக்கும் சங்க இலக்கியங்களின் திண்மையையும் செறிவையும் புகழ்ந்து போற்றாமலும் இருக்கமுடியவில்லை. 
	காடையைப் பற்றி மற்றொரு செய்தியும் காணக் கிடக்கிறது. காடை சித்திரை மாதத் தொடக்கத்தில் (April 14) முட்டையிடும். அது 
இளவேனில் தொடக்கம். சுமார் 7 நாட்கள் முட்டையிட்டு, 20 நாட்கள் அடைகாக்கும். எனவே, வைகாசியில் குஞ்சு பொரிக்கும். (The eggs are laid 
on consecutive days during the spring season i.e., around mid-April. The number of eggs laid falls between five and seven and is usually an 
odd number. The incubation period ranges from 19 to 20 days.)
	குஞ்சுகள் ஓரளவு நல்ல வளர்ச்சி அடைய சுமார் ஒரு மாத காலம் ஆகும். அதாவது ஆனி மாதம் ஆகும் அப்போது அது இளவேனில் 
முடிந்து முதுவேனில் தொடங்கும் காலம். அப்போதுதான் அறுவடை நடக்கிறது. பறவைகள் குஞ்சுகளைக் கூட்டிக்கொண்டு வெருண்டு ஓடுகின்றன. 
அந்நேரம் பாணன் குடும்பத்தினர் அவ்விடத்தைக் கடந்து செல்கிறார்கள். ‘காய்சினம் திருகிய கடுந்திறல் வேனில்' காலத்தில் அவர்கள் புறப்படுவதாக
(பெரும் 3) பாடல் தொடக்கத்தில் புலவர் கூறுகிறார். இந்த அடியுடன் இந்த அறுவடைக் காட்சியை இயைபு படுத்திப் பார்க்கும்போது பாணனின் 
பயணம் உண்மையிலேயே புலவர் நடந்து பார்த்த அனுபவமே என விளங்குகிறது.