புறம் காட்டும் நெறிகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக


   1. பாடல் 86 - புலி தங்கிய குகை
   2. பாடல் 94 - நீர்த்துறைப் பெருங்களிறு
   3. பாடல் 121 - பொதுநோக்கு ஒழி
   4. பாடல் 134 - அறவிலை வணிகன்
   5. பாடல் 182 - உண்டால் அம்ம இவ்வுலகம்

 6. பாடல் 183 கற்றல் நன்றே
 7. பாடல் 184 - யானை புக்க புலம்
 8. பாடல் 185 - சாகாடு உகைப்போன்
 9. பாடல் 189 - செல்வத்துப் பயன்
 10. பாடல் 191 - நரை இல ஆகுதல்

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
புறம் காட்டும் நெறிகள் - பாடல் கதை
பாடல் 121 - பொதுநோக்கு ஒழி


பறம்பு நாட்டை ஆளும் பாரிமன்னனின் மிக நெருங்கிய நண்பராயிருந்தும் கபிலருக்குப் பாரியினிடத்தில் வெகுநாட்கள்
தங்கியிருக்க மனமில்லை. பாரி மிகச் சிறந்த வள்ளல்தான். இருப்பினும் தான் பாரிக்கு மட்டுமா உரித்தானவன் – 
தமிழ்நாட்டுக்கே உரித்தானவன் என்ற இறுமாப்பு கபிலருக்கு உண்டு. அது அவரது புலமையின்மீது அவர் கொண்ட 
அளப்பரும் நம்பிக்கை. சும்மாவா சொன்னார்கள் – “குறிஞ்சிக்குக் கபிலன்” என்று. குறிஞ்சித்திணைப் பாட்டுகளைப் 
பாடுவதில் அவருக்கு நிகர் யாருமில்லை என்ற பெரும்பெயர் பெற்றவரல்லவா கபிலர்! எனவே பாரியைத் தவிர வேறு 
ஒரு வள்ளலிடமும் சென்று அவனைப் பாடிப் பரிசில் பெற்றுவரவேண்டும் என்ற எண்ணத்தில் ‘யாரிடம் செல்லலாம்’ 
என்று சிந்தித்தவருக்குத் திருக்கோவலூரை ஆளும் மலையமான் திருமுடிக்காரியின் நினைவு வந்தது.  
பெண்ணையாற்றங் கரையில் இருந்த அவனது ஊருக்குப் புறப்பட்டார் அவர்.

வழியிலிருந்த சிற்றூர்களிலெல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பும் உபசரிப்பும் கிடைத்தன. “நான் கபிலன். பாடிப்பிழைப்பவன்.
காரியிடம் செல்கிறேன்” என்று அவர் யாரிடம் சொன்னாலும், “யார்? கபிலரா? வாருங்கள் வாருங்கள்” என்று இனிமையுடன்
அவரை உபசரித்தார்கள். அந்தந்த ஊர்களிலிருந்த படித்தவர்கள், பெரியவர்கள் அவரைப் பார்க்கவந்து மரியாதை செலுத்தினார்கள்.
செல்லுமிடமெல்லாம் நல்ல உணவும், வசதியான தங்குமிடமும் கபிலருக்குக் கிடைத்தன. எனவே எவ்வித வருத்தமுமின்றி, 
சில நாட்களில் அவர் கோவலூரை அடைந்தார்.

கோவலூரில் அவருக்குத் தெரிந்த ஒரு புலவர் நண்பர் இருந்தார். கபிலர் பாரியிடம் இருந்தபோது பாரியைக் காண அவர்
வந்திருந்தார். அப்பொழுது ஏற்பட்ட பழக்கம். நேரே அவர் வீட்டுக்குச் சென்று, தங்கி ஓய்வெடுத்துவிட்டு, மலையமானின் 
அரண்மனைக்கு அந்தப் புலவருடன் சென்றார். அரண்மனை வாசலில் சிறிதளவு கூட்டம் இருந்தது. “இவர்களெல்லாம் யார்?” 
என்று கபிலர் வினவினார். “நம்மைப்போன்ற புலவர்கள். ஐயா! தாங்கள் வந்த நாள் நல்ல நாள். இன்று மன்னர் புலவர்களுக்கு 
பரிசில் வழங்குகிற நாள் போலும். அதுதான் கூட்டம் சற்று அதிகமாக இருக்கிறது.” “இதென்ன புதுமை? ஒரு புலவன் தான் 
நினைத்தநாளில் அரசனைச் சந்திக்கமுடியாதா?” சற்றுக் கோபத்துடன் கபிலர் வினவினார். “ஐயா எங்கள் மன்னரான 
மலையமான் என்னும் திருமுடிக்காரி வள்ளல்தன்மையில் பாரிக்குச் சற்றும் குறைந்தவர் அல்லர். அவரிடம் எந்தப் புலவர் 
சென்றாலும் பரிசில் பெற்றுத் திரும்பலாம்” என்று அந்த உள்ளூர்ப் புலவர் சொன்னார். மேலும், “இந்த வட தமிழகத்தில் 
காரி மிகவும் புகழ்பெற்ற வள்ளல். இந்த ஒருவனை நாடி நாலாபக்கங்களிலிருந்தும் நம்மைப்போல் இரவலர்கள் வந்தவண்ணம் 
இருப்பர்.” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் பரபரப்பு உண்டானது. ஒவ்வொருவராக உள்ளே 
அனுமதித்துக்கொண்டிருந்தார்கள். கபிலரின் முறை வந்தபோது அரண்மனை வாயிலோன் அவரைத் தடுத்து நிறுத்தினான். 
“ஐயா தாங்கள் யார்?” என்று வினவினான். கூடவந்த புலவர் பதறிப்போனார். “அப்பா! அவர் நாடறிந்த புலவர் கபிலர். 
என் நண்பர்” என்றார் அந்த உள்ளூர்ப் புலவர். “உங்கள் நண்பரா? சரி இருவரும் உள்ளே செல்லுங்கள்” என்று சேவகன் 
வழிவிட்டான்.

உள்ளே சென்ற அனைவரும் ஒரே மாதிரியான இருக்கைகளில் அமரவைக்கப்பட்டனர். “புலவர்கள் யாரேனும் பாடல் 
கொண்டுவந்திருக்கிறீர்களா?” என்று ஒருவன் கேட்டான். இன்னொருவன் பட்டுத்துணி போர்த்திய ஒரு அகலமான தட்டை 
ஏந்தியவண்ணம் ஒவ்வொரு புலவரிடமும் சென்று, அவரவர் கொண்டுவந்திருந்த ஓலைச்சுவடிகளைத் தட்டில் 
பெற்றுக்கொண்டே வந்தான். கபிலரிடம் அவன் வந்தபோது, “நான் மன்னனிடமே நேரில் பாடிக்கொள்கிறேன்” என்றார் அவர். 
“ஐயா, இன்று மன்னரைப் பார்க்க முடியாது. அவர் தம் மைத்துனரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். பரவாயில்லை. தாங்கள் 
பாடல் தராவிட்டாலும் தங்களுக்குப் பரிசில் உண்டு” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன். “தம்பீ!” என்று 
அவனைக் கபிலர் அழைத்தார். அவன் அருகில் வந்தபோது, “பறம்பு நாட்டிலிருந்து புலவர் கபிலர் வந்திருக்கிறார் என்று உன் 
மன்னனிடம் போய்ச் சொல்” என்றார். “ஐயா நான்தான் சொன்னேனே” என்று அவன் முடிக்கும் முன்னர் “நான் சொன்னதைச் 
செய்” என்று சற்று அதட்டும் குரலில் கூறிய கபிலரை அவன் உற்றுப்பார்த்தான். அவர் பார்வையிலிருந்த கடுமையைக் 
கவனித்த அவன், தட்டுக்காரனிடம் “நீ வாங்கிக்கொண்டிரு, நான் மன்னரிடம் போய்வருகிறேன்” என்று சொல்லிவிட்டு 
உள்ளே சென்றான். சற்று நேரத்தில் திரும்பி வந்த அவன், “ஐயா இன்னும் சற்று நேரத்தில் தங்களை உள்ளே அழைத்துவரச் 
சொன்னார். சிறிது தாமதியுங்கள். நான் மீண்டும் சென்று கேட்டுவருகிறேன்” என்று சொல்லிப்போனான்.

புலவர்களிடமிருந்து பாடல்களைப் பெற்றுச் சென்றவன், அதே தட்டில் பல முடிப்புகளைக் கொண்டுவந்து, ஒவ்வொரு 
புலவருக்கும் கொடுத்தான். கபிலரிடம் வந்தபோது அவர் பரிசிலைப் பெற்றுக்கொள்ளவில்லை. “நான் மன்னனிடம் நேரில் 
பெற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டார். ஏனைய புலவர்கள் எல்லாரும் பரிசிலைப் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டனர். 
கபிலரும் அவர் நண்பர் மட்டும் அமர்ந்திருந்தனர். கபிலர் காத்திருந்தார். அழைப்பு வரவில்லை. வீரனும் உள்ளே சென்று 
வந்தவன் வேறு ஒன்றும் சொல்லவில்லை. கபிலர் தன் மடியில் சுருட்டி வைத்திருந்த ஓலைகளில் ஒன்றை எடுத்தார். 
பின்னர் சுருக்குப்பையிலிருந்து எழுத்தாணியை வெளியில் எடுத்தார். மடமடவென்று அந்த ஓலையில் எழுதத்தொடங்கினார். 
நறுக்குத் தெறித்தாற்போல் ஆறே அடிகள். எழுதிமுடித்துவிட்டு ஒரு முறை அதைத் திரும்பப் படித்துப்பார்த்தார்.

“தம்பீ” என்று மன்னன் அறையைக் காத்துநின்றவனை அழைத்தார். அவனிடம் அந்த ஓலையை நீட்டினார். அவன் 
பெற்றுக்கொண்டான். அவன் “என்ன?” என்று கேட்கும் முன்னர், “உனது மன்னர் எப்போது ஓய்வெடுக்கிறாரோ, அப்போது 
இதை அவரிடம் கொடு” என்றார். “ஐயா, தாங்கள் ..  “ என்று அவன் தயங்கும்போது, “பறம்பு நாட்டுக் கபிலன் 
என்று சொல்” என்று சொல்லிவிட்டுத் தன் நண்பரிடம், “வாருங்கள் போகலாம்” என்று அரண்மனையை விட்டு 
வெளிக்கிளம்பிவிட்டார்.

சற்று நேரத்தில் அந்த இன்னொரு வீரன் வந்தான். “இங்கே பறம்பு நாட்டுக் கபிலர் என்றொருவர் இருந்தாரே, அவர் எங்கே?” 
என்று வினவினான். “இதைக் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார்” என்றான் காவலன். “வேறு என்ன சொன்னார்” என்று 
அவன் கேட்க, “மன்னரிடம் கொடுக்கச் சொன்னார்” என்றான். அந்த வீரன், அந்த ஓலையை வாங்கிக்கொண்டு மன்னரிடம் 
சென்று அதனைக் கொடுத்தான். மன்னன் தன் பேச்சை நிறுத்திவிட்டு, அதனைப் படிக்கத்தொடங்கினான்.

ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மா வண் தோன்றல்
அது நற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே

பாடல் : புறநானூறு 121 - பாடியவர் : கபிலர் - திணை : பொதுவியல்: துறை : பொருண்மொழிக் காஞ்சி

அருஞ்சொற்பொருள் : 
உள்ளி  = நினைத்து; வரிசை = தகுதி; தோன்றல் = தலைவன்; 
நற்கு = நன்கு.

அடிநேர் உரை:-

ஒரு திசையிலிருக்கும் ஒரு வள்ளலை நினைத்து, நான்கு திசைகளிலிருந்தும்
பலரும் வருவர், பரிசில் கேட்டு வரும் மனிதர்கள்;
அவருடைய தகுதியை அறிவது மிகக் கடினம்;  பெரிதும்
கொடுத்தல் என்பது எளிது; பெரிய வள்ளலாகிய தலைவனே!
அதனை நன்கு அறிந்திருந்தால்,
எல்லாரையும் ஒன்றாகப் பாவிக்கும் பொதுநோக்கைத் தவிர்ப்பாயாக, என்னைப் போன்ற புலவரிடம்!

Be discrete while honoring
People seeking gifts will come in large numbers from all four directions,
Marching towards a single direction, aiming at one person!
It is hard to judge their merits;
Granting is much easier, Oh chief of great munificence;
If you know it thoroughly,
Avoid treating all equally amongst the learned ones!


1:17 PM 10/11/2020