புறம் காட்டும் நெறிகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக


   1. பாடல் 86 - புலி தங்கிய குகை
   2. பாடல் 94 - நீர்த்துறைப் பெருங்களிறு
   3. பாடல் 121 - பொதுநோக்கு ஒழி
   4. பாடல் 134 - அறவிலை வணிகன்
   5. பாடல் 182 - உண்டால் அம்ம இவ்வுலகம்

 6. பாடல் 183 கற்றல் நன்றே
 7. பாடல் 184 - யானை புக்க புலம்
 8. பாடல் 185 - சாகாடு உகைப்போன்
 9. பாடல் 189 - செல்வத்துப் பயன்
 10. பாடல் 191 - நரை இல ஆகுதல்

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
புறம் காட்டும் நெறிகள் - பாடல் கதை
பாடல் 94 - நீர்த்துறைப் பெருங்களிறு


ஔவைப்பாட்டிக்கு ஒரே களைப்பாக இருந்தது. இந்த ஏறு வெயிலில் அவர் அதியமானின் அவைக்குச் சென்றுகொண்டிருந்தார்.
இன்னும் சிறிது நேரத்தில் அவர் தகடூரை அடைந்துவிடுவார். அதியமானின் அவையில் பல சிற்றரசர்கள், அமைச்சர்கள்,
ஆலோசனைக்குழுவினர் போன்ற முக்கியமான மதிப்பிற்குரியவர்கள் அமர்ந்திருப்பர். அப்போது புலவர்கள் வந்தால்
அவர்களையும் வந்து அமரச் சொல்லி, அவர்களைப் பாடவும் சொல்லி மகிழ்வான். அவர்களுக்குப் பல சிறப்புக்களும் செய்வான்.
எனவே அந்த நேரத்தில் அங்கு இருக்கவேண்டும் என்ற அவாவினால் ஔவையார் வேகமாக நடந்துசென்றார். அப்போது
அவருக்குத் தாகம் எடுத்தது. அப்போது அவர் ஒரு காட்டாற்றைக் கண்டார். அண்மையில் பெய்த மழையின் காரணமாக,
நீர் வடிந்து தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. நீரைக் குடித்து, அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் சற்று ஓய்வெடுக்க எண்ணினார்.

அப்போது அங்கு மிகுந்த ஆரவார ஒலி கேட்டது. ஒரு யானை வரும் மணியோசையும் கேட்டது. ஒரு பாகன் மேலே
அமர்ந்திருக்க, ஒரு யானை வேகமாக ஆற்றின் குளிக்கும் துறையில் இறங்கியது. அந்த யானையைச் சுற்றி ஒரு சிறுவர்
கூட்டம் ஆரவாரக் கூச்சல் எழுப்பியபடி பின்தொடர்ந்து வந்தது. அங்கிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் இருந்த நீரில் அதை
நிறுத்தினான் பாகன். யானையை விட்டிறங்கிய பாகன் அதனை அந்த நீருக்குள் படுக்கவைத்தான். பின்னர் அவன் யானையின்
மேனி மீது நீரை வாரி இறைத்து, கழுவத் தொடங்கினான். அதுவரை அச்சத்துடன் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
சிறுவர்களையும் அருகில் வரும்படி அழைத்தான். மிகுந்த கவன உணர்வுடன் யானையின் அருகில் சென்ற சிறுவர்கள்
தாங்களும் யானையின் முதுகுப்பக்கம் தேய்க்க ஆரம்பித்தார்கள். சில சிறுவர்கள் பக்கத்தில் சிதறிக்கிடந்த வைக்கோல்களைச்
சேகரித்துக் கையில் சுருட்டிக்கொண்டு, துணிவுடன் யானையின் தும்பிக்கையைக் கழுவிவிட்டார்கள். அவர்களில் இருவர்,
இன்னும் சற்றுத் துணிவுடன் யானையின் வெண்மையான தந்தத்தில் படிந்திருந்த அழுக்கைச் சுத்தம் செய்யத் தொடங்கினர்.
கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் யானை சுகமாகப் படுத்துக்கிடந்தது. அத்துணை பெரிய யானை ஒரு குழந்தைபோல
அந்தச் சிறுவர்களின் தேய்ப்புக்கு இடங்கொடுத்துப் படுத்துக் கிடந்தது .ஔவையாரைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

நேரம் கடப்பதை உணர்ந்த ஔவை, மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார். இப்போது அவர் அதியமானின் அரண்மனையை
நெருங்கிவிட்டார். வாயில் காவலரிடம் சொல்லிவிட்டு முற்றத்தைக் கடந்து அரண்மனை அவைக்குள் செல்லவேண்டும்.
திடீரென்று அங்கு ஒரு பெருத்த பரபரப்புடன் கூடிய பேரொலி கிளம்பியது. “யானைப்படையில் ஒரு யானைக்கு மதம்
பிடித்துவிட்டது, ஓடுங்கள்” என்று சொல்லிக்கொண்டே சிலர் நகரை விட்டு வெளியே ஓடினார்கள். வாயில் காவலரும்
சிட்டாய்ப் பறந்துவிட்டார்கள். ஔவையார் வாயிற்கதவின் இடுக்கில் நின்றுகொண்டார். அப்போது வெறிபிடித்த யானை
வேகமாக வெளியே சென்றது. அதன் பின்னால் பலர் ஒடினார்கள். அருகில் சென்று அதன் கால்களைச் சங்கிலியால் வீசிப்
பிணிக்க முயன்றார்கள். யானைப் பாகன் தன் அங்குசத்தை நீட்டியவண்ணம் அதன் அருகில் செல்ல முயன்றான். அந்த
யானையோ யாரையும் அருகில் வர விடவில்லை. நான்கு புறங்களிலும் சுற்றிச் சுற்றித் திருப்பி, சீற்றத்துடன் தன்
துதிக்கையைச் சுழற்றி யாரையும் கிட்ட நெருங்கவிடாமற்செய்தது.

ஓடிய காவலர் மீண்டும் வந்தனர். அவர்கள் ஔவையைப் பார்த்துப் பதறிப்போயினர். அடிக்கடி அதியமானின் தகடூருக்கு
ஔவை வருவதால் அவர்களுக்கு அவரை நன்றாகத் தெரியும். ஔவையார் அதிகமாகப் பதறிப்போய்விடவில்லை.
“யானை வெளியேறிவிட்டது. இனி ஓடிக்களைத்துப் படுத்துவிடும். மதமும் குறைந்துவிடும். அதை அவர்கள்
பார்த்துக்கொள்வார்கள். மன்னனின் அவை கூடிவிட்டது. ஆனால் நீங்கள் எப்போதும் செல்லலாம். செல்லுங்கள்”
என்று அவருக்கு வழிவிட்டார்கள்.

ஔவையைக் கண்ட அதியன் இருக்கையைவிட்டு எழுந்து ஓடோடி வந்தான். வந்து அவரின் இரு கரங்களையும்
பற்றிக்கொண்டான். மெதுவாக அவரை அழைத்துச் சென்று தனக்கு மிக அருகில் இருந்த ஓர் இருக்கையில்
அமர்த்திக்கொண்டான். பின்னர் நலம் விசாரித்தான். 
“ஒரு பாடல் மட்டும் பாடிவிட்டு உள்ளே சென்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் சந்திக்கலாம்” என்றான்.
தொண்டையைச் செறுமிக்கொடுத்தவாறு ஔவையார் பாட ஆரம்பித்தார்.

ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்
நீர்த் துறை படியும் பெரும் களிறு போல
இனியை பெரும எமக்கே! மற்று அதன்
துன்னரும் கடாஅம் போல
இன்னாய் பெரும! நின் ஒன்னாதோர்க்கே!

பாடல் : புறநானூறு 94 - பாடியவர் : ஔவையார் - திணை : வாகை: துறை : அரச வாகை

அருஞ்சொற்பொருள் : 
குறுமாக்கள்  = சிறுவர்கள்; கோடு = கொம்பு,தந்தம்; கழாஅலின் = கழுவுவதற்காக; 
துன் அரும் = நெருங்குவதற்கு அரிய; கடாஅம் = மதம் (பிடித்த நிலை); ஒன்னாதோர் = பகைவர்.

அடிநேர் உரை:-

ஊர்ச் சிறுவர்கள் வெண்மையான தந்தத்தைக் கழுவுவதற்காக
நீருள்ள துறையில் படிந்து கிடக்கும் பெரிய ஆண்யானை போல
இனியவன் பெருமானே நீ எமக்கு! மேலும் அதன்
நெருங்க முடியாத மதம்பிடித்த நிலை போல
கடுமையானவன் பெருமானே! உன் பகைவருக்கு!

Elephant in the bathing ghat
Like an elephant in the bathing ghat that calmly
Yields its tusks for wash by the kids,
You are sweet to us - for bards like me;
But to your enemies, 
You are tough and unapproachable too,
As a raging elephant in its musting state.




1:17 PM 10/11/2020