புறம் காட்டும் நெறிகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக


   1. பாடல் 86 - புலி தங்கிய குகை
   2. பாடல் 94 - நீர்த்துறைப் பெருங்களிறு
   3. பாடல் 121 - பொதுநோக்கு ஒழி
   4. பாடல் 134 - அறவிலை வணிகன்
   5. பாடல் 182 - உண்டால் அம்ம இவ்வுலகம்

 6. பாடல் 183 கற்றல் நன்றே
 7. பாடல் 184 - யானை புக்க புலம்
 8. பாடல் 185 - சாகாடு உகைப்போன்
 9. பாடல் 189 - செல்வத்துப் பயன்
 10. பாடல் 191 - நரை இல ஆகுதல்

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
புறம் காட்டும் நெறிகள் - பாடல் கதை
பாடல் 189 - செல்வத்துப் பயன்


மதுரையில் வடக்குஆவணத்தெருவில் இருந்த ஒரு பெரிய மாளிகையினின்றும் மாணவர்கள் பாடம் பயிலும் ஓசை 
பெரிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அது கணக்காயனாரின் மாளிகை. அவர் ஒரு பெரும் புலவர். அவரது மகன் கீரன், 
நல் கீரன் என்ற அடைபொழியுடன் நக்கீரன் என்று அழைக்கப்பட்டார். தனது புலமையால் தந்தையையும் விஞ்சி நின்றார் 
நக்கீரர். அவர் இயற்றிய நெடுநல்வாடையின் பெருமையை உலகமே போற்றிக்கொண்டிருந்தது. அதற்காக, அரசன் 
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அவருக்கு ஒரு பெரிய மாளிகையையே பரிசாக அளித்தான். 
அதில்தான் தந்தையுடன் அவர் வசித்துவந்தார்.
 
ஒருநாள் மாலையில், மகளிர் இரும்பு விளக்கு ஏற்றி, நெல்லும் மலரும் தூவிக் கைதொழுது இறைவனைக் கும்பிடும் 
வேளையில் கீரனார் அடுத்த தெருவில் இருக்கும் தன் சிறுவயது நண்பனான நெடுங்கண்ணனைக் காணச் சென்றார். 
நெடுங்கண்ணன் பெரும் செல்வர். அவரது மாளிகை பல அடுக்குகளைக் கொண்டது. மிகவும் விசாலமான 
முற்றத்தைக்கொண்டது. அவரிடம் மூன்று யானைகள் இருந்தன. அவற்றைப் பராமரிக்கப் பாகர்கள் இருந்தனர்.

நெடுங்கண்ணனார் வீட்டுவாசலில் காவலாளிகள் இருந்தனர். அப்போது நெடுங்கண்ணனார் வீட்டில் இல்லையென்ற 
விபரத்தைச் சொன்னார்கள் அவர்கள். நகருக்கு வெளியிலிருந்த அவருடைய வயல்களில் அன்றைக்குக் கதிரறுப்பு. 
காலையில் சென்றவர் பகல்முழுக்க அங்கேயே தங்கிவிட்டார். மாலையில் வருவதற்குரிய நேரம் அதுதான் என்று 
ஒரு காவலாளி தெரிவித்தான். அதற்குள் இன்னொரு காவலாளி வீட்டுக்குள் ஓடிச்சென்று நக்கீரர் வந்த விபரத்தைச் 
சொல்ல, நண்பரின் மனைவி விரைந்து வெளியே வந்தார். “வாருங்கள் அண்ணா, அவர் வரும் நேரம்தான். வந்து 
சற்றுப் பொறுத்திருந்தால் அவர் வந்துவிடுவார். உள்ளே வாருங்கள்” என்று இனிமையுடன் அவரை வரவேற்று 
வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். அதற்குள் வாசலில் தேர் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. தேரை விட்டு இறங்கிய 
நெடுங்கண்ணனார், நக்கீரரைக் கண்டதும் ஓடோடி வந்து அவரின் இரு கைகளையும் பற்றிக்கொண்டார். சிறுவயது 
நண்பர் என்றாலும், இன்றைக்கு மதுரையின் தலைமைப் புலவரல்லவா! அதற்குரிய மரியாதையுடன் அவர் புலவரை 
அழைத்தார். “வாருங்கள் வாருங்கள், இன்றைக்கு வயல்களில் நல்ல விளைச்சல், பெரும் வரவு என்று மகிழ்ச்சியோடு 
வீட்டுக்கு வந்தால், இங்கு தாங்கள். இந்த வரவு அந்த வரவையெல்லாம் மிஞ்சிவிட்டது. கொஞ்சம் பொறுக்கவேண்டும், 
பகலெல்லாம் வயல்வெளியில் திரிந்த களைப்பு. சிறிது நேரத்தில் குளித்துவிட்டு வருகிறேன். மின்னொளி, நண்பரைச் 
சற்று நேரம் கவனி” என்று அவரின் மனைவிக்கு ஆணையிட்டார். “வேண்டாம், வேண்டாம், நான் காற்றாடத் தங்கள் 
மாளிகையின் சுற்றுப்புறத்தைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் குளித்துவிட்டு வாருங்கள்” என்று சொன்ன 
நக்கீரர், வீட்டைச் சுற்றி நடக்க ஆரம்பித்தார். ஒரு காவலாளியை அவருடன் அனுப்பிவிட்டு நண்பர் உள்ளே விரைந்தார்.

வீட்டுக்குக் கிழக்குப் பக்கம் இருந்த பெரிய திறந்த வெளியை அடுத்து ஓரத்தில் யானைக் கொட்டகைகள் இருந்தன. 
அந்தப் பக்கம் சென்ற புலவரைக் கண்டவுடன் அங்கு குத்திட்டு அமர்ந்திருந்த ஒரு யானைப்பாகன், தன் தலையில் 
உருமாலாகச் சுற்றியிருந்த துண்டைக் கழற்றிக் கையிலெடுத்து வைத்துக்கொண்டான். இடுப்பு வேட்டியைச் சரியாகக் 
கட்டிக்கொண்டான். புலவரை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டான். பதிலுக்கு வணக்கம்செலுத்திய நக்கீரர், 
“நீதான் பாகனா” என்றார். சட்டென்று பேச நா எழாத நிலையில் அவன் தலையாட்டி நின்றான். “பேசேன்டா” என்று 
காவலாளி அவனை அதட்டினான். “இருக்கட்டும்” என்று சொன்ன புலவர் கேட்டார்:

“ஏன் உன் கண்கள் சிவந்திருக்கின்றன?”

“அதுவா, ஐயா, நெசத்தச் சொல்லணுமின்னா, இந்த யானைக எந்த நேரத்துல எப்படி இருக்கும்’னு சொல்லமுடியாது. 
பகலு’ன்னும் இல்ல, நடுச்சாமம்’னும் இல்ல, எப்பவும் நாம உசாரா இருந்தாத்தான் அதுகள ஆரம்புத்தலயே 
கட்டுப்படுத்த முடியும். அதுக்காக ராப்பகலா தூங்காம பாத்துக்கிட்டே இருக்கணும்”.

“ஏனப்பா, அந்த யானைகளோடு பேசிப்பழக எங்கு கற்றாய்?”

“ஐயா, நம்ம காஞ்சீவரத்துல ஒருத்தருகிட்ட ஆறுமாசம் படிச்சேனுங்க, அப்புறம் நம்மளாச் சேத்துக்குறதுதான்”

“அதற்கு மேலே வேறு தமிழ் கற்றிருக்கிறாயா?”

“இதத்தவிர எனக்கு வேறு ஒண்ணும் தெரியதுங்கய்யா. ஓலயெழுத்து எனக்கு ஒண்ணுமே புரியாது”

“உனக்குக் குடும்பம் இருக்கிறதா?”

“ஐயா, எனக்கு வீடு, வாச, புள்ள குட்டி எதுவுமே கெடயாது. எல்லாமே இந்த வீடுதான். இந்தா என்னயப் போல இன்னும் 
ரெண்டு பெரு இங்க இருக்காக. யானைக்கி ஒருத்தர். மேல துண்டு, இடுப்புல வேட்டி, திங்கச் சோறு, இதுக்குமேல என்ன 
வேணும் ஐயா”

அந்தச் சொற்கள் புலவர் நக்கீரரை வெகுவாகப் பாதித்தன. எண்ணிப்பார்த்தால் எல்லா மனிதருக்கும் பொது இதுதானே. 
பின்னர் மனிதருக்கு மனிதர் வேறுபாடு என்ன? தனக்கிருக்கும் தனிப்புலமையை எண்ணிப்பார்த்தார் புலவர். அதைப் 
போலத்தான் அந்த யானைப் பாகனுக்கும் விலங்குமொழி அறிவு இருக்கிறது. அவனுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று 
ஒத்துக்கொண்டுவிட்டான். அவனால் ஏடுகளைப் படிக்கமுடியாதுதான். ஆனால் தன்னால் அந்த யானைகளோடு 
பேசமுடியுமா? தாம் சொல்கிறபடி அந்த விலங்குகளை நடக்கவைக்க முடியுமா? அந்தப் பாகனுக்கு விலங்குமொழி 
அறிவு இருக்கிறது. அதன் பயன் அவற்றைப் பழக்குவது. தனக்குத் தமிழ் மொழி அறிவு இருக்கிறது. இதன் பயன் 
இலக்கியம் படைப்பது. இந்த நெடுங்கண்ணனுக்கு என்ன இருக்கிறது? வேண்டுமளவு சொத்து இருக்கிறது. ஆனால் 
அதன் பயன்? 

இவ்வாறு புலவரின் சிந்தனை பலவாக ஓடிக்கொண்டிருக்கும்போது, அவரின் தோளைத் தொட்டார் அவரது நண்பர் 
நெடுங்கண்ணன். “என்ன புலவரே? இந்த யானைகளைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டீர். வாருங்கள் உள்ளே செல்லலாம். 
இவ்வளவு நேரம் தங்களை வெளியில் காக்கவைத்ததற்கு மிகவும் வருந்துகிறேன்” என்று சொல்லியவண்ணம் வீட்டுக்குள் 
நண்பரை அழைத்துச் சென்றார் அவர். அங்கே விதம் விதமான பழங்கள் காத்திருந்தன. அவற்றை அளவாக நறுக்கி 
வீட்டு வேலையாட்கள் தர, இருவரும் உண்டனர். சிவப்பு நிறத்தில் மிக அழகாக இருந்த மடக்கு விசிறியை விரித்துப் 
பணியாட்கள் பணிவுடன் மெதுவாக விசிறிவிட்டனர்.  இல்லத்தரசி மின்னொளி சுடசுடப் பாலைத் தானே கொண்டுவந்தாள். 

அப்போது வாசலில் பெருத்த ஓசை கேட்டது. யாரோ ஒருவர் பெரிதாக உரத்துப் பேசுவதும் கேட்டது. அருகிலிருந்த 
வேலையாளை அங்குச் சென்று என்னவென்று பார்த்துவரும்படி அனுப்பினார் நெடுங்கண்ணன். அவன் சென்று விசாரித்து 
வந்தான். 

“ஐயா, ஓலமிடுவது உழவடைக்காரன். தாங்கள் நண்பருடன் இருப்பதினால் அவனை உள்ளே அனுப்பக் காவலாளிகள் 
மறுத்திருக்கிறார்கள். அதனால்தான் அவன் கூச்சலிடுகின்றான்” என்றான் பணியாள்.

“என்ன வேண்டுமாம் அவனுக்கு?”

“அதை அவன் உங்களிடம்தான் சொல்லுவானாம்”

“சரி, அவனை உடனே உள்ளே அனுப்பு”

ஓலமிட்ட உழவடைக்காரன் உள்ளே அழுது புலம்பிக்கொண்டு வந்தான்.

“என்னப்பா, இப்போதுதானே உனக்குக் கணக்கு முடித்து வீட்டுக்கு அனுப்பினேன். அதற்குள் என்ன?” விசாரித்தார் 
வீட்டுக்காரர்.

“ஐயா, எம் பொஞ்சாதி நெறமாசமா இருந்தா. இப்ப பிரசவ வலி வந்துருச்சு. ஆனா, குழந்த வெளிய வராம 
கொடிசுத்திக்கிருச்சு. மருத்துவச்சியாலதான் பாக்கமுடியும். அவ வீட்டுக்குப்போனா, அங்க அவ இல்ல. ஊருக்கு வெளிய 
மேலமடைக்கு மகன் வீட்டுக்குப் போயிருக்குறதாச் சொன்னாங்க. அங்க எம் பொஞ்சாதியக் கூட்டிக்கிட்டுப் போகணும். 
வெரசாப் போறதுக்கு ஏங்கிட்ட வேற வசதி இல்லங்கியா. நீங்க மனசு வச்சு, ஒங்க கட்டவண்டியத் தந்தீங்கன்னா 
புண்ணியமா இருக்கும்குங்கய்யா.”

நெடுங்கண்ணனார் திரும்பி வேலையாளைப் பார்த்தார்.

“ஐயா, கட்டவண்டியில நெல்லு மூட நெறய இருக்கு. அதுகள எறக்கிப்போட்டுட்டு எடுத்துட்டுப் போகட்டுமாயா”

நெடுங்கண்ணன் சில நொடிகள் யோசித்தார்.

“வேண்டாம். அதற்கு நேரமாகும். என்னுடைய தேரையே எடுத்துக் கொள்ளட்டும். குதிரைகள் விரைவாகச் செல்லும். 
தேர்ப்பாகனை உடனே தேரை எடுக்கச் சொல். அப்பா, நீயும் கூடப்போ. வேகமாகப் போய் உன் மனைவிக்கு வேண்டியதைப் 
பார்” என்று சொல்லி அவர்களை அனுப்பினார். 

அந்த நேரம் அவரின் மனைவி மின்னொளி வீட்டுக்குள்ளிருந்து வந்து, அவரிடம் குறிப்புக்காட்டி எதனையோ கொடுத்தார்.

“இந்தாப்பா இங்கே வா” என்று உழவடைக்காரனை மீண்டும் அழைத்த நெடுங்கண்ணன், எழுந்துசென்று அவனிடம்,
“இந்தா, மருத்துவச் செலவுக்கு வைத்துக்கொள்” என்று அவனிடம் கையை நீட்டினார். மேலேயிருந்த துண்டை நீட்டி 
அவரிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட அவனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.  
இது நன்றியால் வடித்த கண்ணீர். 

அப்பொழுதுதான் புலவர் நக்கீரர் அந்த உழவடைக்காரனை நன்றாகப் பார்த்தார். மேலே ஒரு துண்டு. இடுப்பில் ஒரு வேட்டி. 
திரும்பி நண்பரைப் பார்த்தார். அவர் போட்டிருந்ததுவும் ஒரு துண்டும் வேட்டியும்தான். மன்னாதி மன்னன் 
நெடுஞ்செழியனையும் நினைத்துப் பார்த்தார். அவருக்கும் மேலே உத்தரீயம் எனப்படும் ஒரு மேலாடையும், இடுப்பில் 
வேட்டியும்தான். அனைவருக்கும் ஒரு சாண் வயிறுதான். அதை நிரப்ப நாழி அரிசி போதுமா? 

ஆனால், இல்லையென்று வரும் இரவலருக்கு மன்னன் வாரிவாரி வழங்குவதைக் கண்டிருக்கிறார் புலவர் நக்கீரர். 
இப்போதும் தம் அருமை நண்பர் தனது உழவடைக்காரனுக்குக் கேட்டதுக்கும் மேலே வாரி வழங்கிய அந்த 
வள்ளன்மையை நினைத்துப் பூரித்துப் போனார்.

“என்ன புலவரே! மீண்டும் பலத்த யோசனை?” என்று வினவினார் நண்பர்.

“நெடுங்கண்ணனாரே, உம்மை என் நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய 
பல கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்துவிட்டது” என்று புலவர் கூறினார்.

“நண்பரே, தாங்கள் பெரிய தமிழறிஞர். தாங்கள் இங்கு எதைக் கற்றுக்கொண்டீர் என்று அறிய ஆவலாய் இருக்கிறோம்.
கூறுங்கள்” என்றார் நெடுங்கண்ணன்.

புலவர் கூறினார்: 

“இந்த உலகத்தையே ஒருகுடைக் கீழ் ஆளும் பேரரசனாலும் சரி,
இராப்பகலாய்த் துங்காத கல்வியில்லாத யானைப்பாகனானாலும் சரி,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
தாம்தாம் கொண்டிருக்கும் செல்வத்தில் அனைவரும் ஒன்றே.
இந்தச் செல்வத்தின் பயன் ஈதல்,
தாமே துய்ப்போம் என்றால் தவறுவன பலவாகும்”

உற்றுக்கேட்டுக்கொண்டிருந்த நெடுங்கண்ணன் ஓடிவந்து புலவரைத் தழுவிக்கொண்டார். இன்றைக்கென்ன எனக்குப்
புதுவரவுகள் வந்துகொண்டே இருக்கின்றன! புலவரே, இந்த ஆழ்ந்த கருத்தை அழகு தமிழில் வடித்துத் தாருங்களேன்.
எனக்கு மட்டுமல்ல, இனி எல்லாத் தலைமுறைக்கும் இனிய பலனளிக்கும் என்று சொல்ல புலவரிடம் ஓலையும் 
எழுத்தாணியும் கொடுக்க, புலவர் எழுதினார்:

தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

பாடல்: புறநானூறு 189 – பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை : பொதுவியல் - துறை - பொருண்மொழிக் காஞ்சி

அருஞ்சொற்பொருள் : 
தெண் - தெள் = தெளிவு; நிழற்று = நிழல்செய்;
நடுநாள் = நள்ளிரவு; நாழி = ஓர் முகத்தலளவு.

அடிநேர் உரை:-
தெளிந்த கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும், தமக்கே உரித்தாகக் கொண்டு
வெண்கொற்றக்குடையால் நிழல்செய்யும் ஒருதன்மை உடையோர்க்கும்,
நள்ளிரவிலும் பகலிலும் தூங்காதவனாய்க்
கடும் விலங்குகளைப் பராமரிக்கும் கல்வியற்ற ஒருவனுக்கும்,
உண்பது நாழி அளவு, உடுப்பதுவும் இரண்டு ஆடைகளே
பிறவும் எல்லாம் ஒன்றே போல்வன,
செல்வத்துப் பயன் ஈதல்,
தாம் ஒருவரே நுகர்வோம் என்று கருதினால் தவறுவன பல ஆகும்

Purpose of wealth
For those who bring the whole earth surrounded by crystal waters,
Under the cool shadow of their mighty rule, leaving nothing to others;
And for those illiterate workers who look after animals with ferocity,
Without having even a wink of sleep day and night;
What they need is,
A bowl of meals to eat and two pieces of cloth to wear,
All others are quite similar too;
The purpose of wealth is to give;
Selfish relishing would lead to losing a lot.