புறம் காட்டும் நெறிகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக


   1. பாடல் 86 - புலி தங்கிய குகை
   2. பாடல் 94 - நீர்த்துறைப் பெருங்களிறு
   3. பாடல் 121 - பொதுநோக்கு ஒழி
   4. பாடல் 134 - அறவிலை வணிகன்
   5. பாடல் 182 - உண்டால் அம்ம இவ்வுலகம்

 6. பாடல் 183 கற்றல் நன்றே
 7. பாடல் 184 - யானை புக்க புலம்
 8. பாடல் 185 - சாகாடு உகைப்போன்
 9. பாடல் 189 - செல்வத்துப் பயன்
 10. பாடல் 191 - நரை இல ஆகுதல்

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
புறம் காட்டும் நெறிகள் - பாடல் கதை
பாடல் 184 - யானை புக்க புலம்


ஆந்தையாரின் வீடே அமைதியாக இருந்தது. அவர் வீட்டின் உள்திண்ணையில் தூணில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்து தீவிர 
சிந்தனைவயப்பட்டிருந்தார். அப்படி அவர் இருக்கும்போது வீட்டில் யாரும் வாய்திறந்து பேசமாட்டார்கள். எல்லாம் 
‘குசுகுசு’-தான். காரணம் ஆந்தையாரது சிந்தனை தடைபட்டுப்போகக் கூடாது என்றுதான். வீடு மட்டும் என்ன அந்த ஊரே 
அவர் வந்தால் அதிர்ந்துபேசாது. அவரது ஊரான பிசிர் என்பதுவும் அவரது பெயரோடு சேர்ந்து அவர் பிசிராந்தையார் என்று 
பாண்டியநாடு முழுக்கப் பேசப்படுவதில் அந்த ஊர்க்காரர்களுக்கு அவ்வளவு பெருமை. இத்தனைக்கும் அவர் பாண்டிய 
மன்னன் அறிவுடைநம்பிக்கு அத்தனை நெருக்கமானவரும் அல்லர். அவர் நட்பு பாராட்டியதெல்லாம் சோழமன்னன் 
கோப்பெருஞ்சோழனிடம்தான். இருவரும் பார்த்துக்கொண்டவர் இல்லையெனினும் அவர்களிடையே நட்பு வேரூன்றி 
ஆழமாக இருந்தது. இருப்பினும் தமிழ்ப்புலவர் என்ற முறையில் பாண்டியனுக்குப் பிசிராந்தையாரிடம் பெரு மதிப்பு 
இருந்தது அவருக்கும் தெரியும். 

ஆந்தையாருக்கு அன்றைய பாண்டியநாட்டின் நிலைமை கவலை அளித்தது. மன்னன் வணிகரிடம் ஏராளமான வரி 
வசூலித்ததால் வணிகம் சிறுத்துப்போய் மன்னனுக்கு வருமானமும் குறைந்தது. வரிக்கு அஞ்சிய மக்கள் கொற்கை 
முத்துக்களை மறைமுகமாகச் சேரநாட்டு முசிறி தொண்டி ஆகிய துறைமுகப் பட்டினங்களுக்கு எடுத்துச் சென்றதால் 
மன்னனுக்குச் சுங்கவரியும் மிகவும் குறைந்துபோனது. உழவரிடமும் மலிவு விலையில் கட்டாயக் கொள்முதல் 
அதிகரித்ததால் உற்பத்தி மிகவும் குறைந்துபோனது. ஆகச் செல்வச் சிறப்பு மிக்க பாண்டியநாடு வறுமையின் எல்லைக்கு 
விரைந்து சென்றுகொண்டிருந்தது. இதுவே ஆந்தையாரின் கவலை.

“மதுரைவரை போய்வருகிறேன்” என்று வீட்டில் சொல்லிவிட்டு, அதற்கேற்ற ஆயத்தங்களுடன் பிசிராந்தையார் 
மதுரைக்குப் பயணமானார். மதுரையை நெருங்குகிற வழியில் ஆங்காங்கு நெல்வயல்களில் அறுவடை 
நடந்துகொண்டிருந்தது. அவர்களின் உணவைப் பகிர்ந்துகொண்டு அவர்களோடு உண்டுவிட்டு மதுரைக்குள் நுழைந்தார் 
புலவர். நாடறிந்த புலவராதலால் குறுக்கிட்டு நிற்கும் வேல்களெல்லாம் நிமிர்த்தப்பட்டு, மரியாதையுடன் அரண்மனைக்குள் 
அனுப்பிவைக்கப்பட்டார் புலவர்.

மன்னன் தன் அவையில் மாலைநேர உரையாடலில் ஈடுபட்டிருந்தான். மன்னைச் சுற்றி ஏழெட்டுப்பேர் பணிவுடன் குனிந்து 
நின்றுகொண்டிருந்தனர். மற்றபடி ஆலோசனைக் குழுவினரான, எண்பேராயத்தார், ஐம்பெருங்குழுவினர் யாரும் அங்கு 
இருக்கவில்லை. இது ஆந்தையார் ஓரளவு எதிர்பார்த்ததுதான். இப்போதெல்லாம் மன்னன் ஆலோசனைக் குழுவைக் 
கூட்டுவதில்லை. அவர்களில் ஒருவர் ஆந்தையாருக்கு நெருக்கமானவர். முன்னொருநாள் அவரிடம் நாட்டு நடப்புபற்றிக் 
கவலையுடன் புலவர் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இதுபற்றிக் கேட்டார். மன்னன் இப்பொழுதெல்லாம் பெரியவர்களின் 
சிறப்பறியாத ஒரு சிறு கூட்டத்தைத் தன்னைச் சுற்றி வைத்திருப்பதாகவும் அவர்களின் சொற்படியேதான் மன்னன் 
நடப்பதாகவும் அவர் கூறினார். அந்தச் சிறுகூட்டம்தான் இதுபோலும் என்று அவர்களை உற்றுநோக்கினார் புலவர்.

மன்னனை வணங்கிய புலவரை மன்னன் இருக்கையில் அமரச் செய்தான். நலம் விசாரித்தான். பின்னர் வந்தகாரியம் 
வினவினான்.

“என்னுடன் சற்று வெளியில் வரமுடியுமா?” என்று புலவர் மன்னனை வேண்டினார்.

எங்கே, எதற்கு என்று மன்னன் கேட்கவில்லை. அவ்வளவு மரியாதை அவனுக்குப் புலவரிடம்.

அருகிலிருந்த வீரனிடம் தேரை ஆயத்தப்படுத்தச் சொன்னான் மன்னன். 

“தேர் வேண்டாம், தங்களது களிறுகளில் இரண்டு கொணருங்கள். ஆளுக்கொரு களிற்றில் செல்வோம்” என்றார் புலவர். 
அவ்வாறே களிறுகள் வர, அரசனும் புலவரும் ஆளுக்கொரு களிற்றில் ஏறி அமர்ந்தனர். அருகில் குதிரைவீர்ர்கள் 
காவலுக்கு நின்றனர். 

“புலவர் சொல்லும் இடத்துக்குப் போங்கள்” என்று மன்னன் கட்டளையிட, புலவர், “நகருக்கு வெளியே நெல்வயலில் 
அறுவடை நடக்கும் இடத்துக்குப் போங்கள்” என்றார்.

இரண்டு களிறுகளும் புறப்பட்டன. அவற்றைச் சுற்றிப் புரவி வீரர்களும் புறப்பட்டனர்.

நகருக்கு வெளியில், அறுவடை நடந்து, தலையடி முடிந்து நெல்மூடைகளைக் கட்டிக்கொண்டிருந்த ஒரு களத்துமேட்டில் 
நிற்கும்படி புலவர் கூறி, யானையை விட்டிறங்கினார். புரியாத புதிருடன் மன்னனும் தன் களிற்றைவிட்டு இறங்கி வந்தான்.

புலவர் களத்துமேட்டில் அமர்ந்திருந்து, மன்னனைக் கண்டதும் அவசரம் அவசரமாக எழுந்து நின்ற ஒரு பெரியவரிடம் 
கேட்டார்.

“ஐயா, தங்கள் வயலின் பரப்பு ஒரு மா அளவு இருக்குமா?”

“இல்லை ஐயா, ஒரு மாவுக்கும் குறைந்த அளவினதுதான் என் வயல்” என்றார் அந்தப் பெரியவர். அருகில் 
அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல்மூடைகளைக் காட்டி, “இந்த நெல்லை அரிசியாக்கி, இந்த யானைக்குக் கவளமாகக் 
கொடுத்தால் எத்தனை நாள்களுக்கு வரும்?” என்று கேட்டார் புலவர்.

பெரியவர் சிரித்தார். “அது பல மாதங்களுக்கு வரும்” என்றார் அவர்.

புலவர் அருகிலிருந்த அறுவடைக்கு இன்னும் சில நாள்கள் இருக்கும் ஒரு மிகப் பரந்த வயல்வெளியைப் பார்த்தார். 
பச்சைப்பசேல் என்று நிற்கும் பயிர்களைக் காட்டி, “இது யாருடையது?” என்று கேட்டார். பெரியவர் மிகப் பணிவுடன், 
”அரண்மனைக்குரியது, நூறு செய்யுக்கும் அதிகமானது” என்றார். 

“அரண்மனைக்குரியதுதானே!” என்று சொன்ன புலவர், தன் களிறை ஓட்டிவந்த பாகனிடம் வந்தார். “இந்த யானையை 
இந்த வயலுக்குள் விடு, வயிறு நிறைய மேய்ந்து திரும்பட்டும்” என்றார். பாகன் பதறிப்போனான். “என்ன ஐயா? யானைய 
வயலுக்குள்ள விட்டா, அது வாய்க்குள்ள போறதைவிட மிதிச்சு அழிக்கிறதே ரொம்ப இருக்குமே”. மன்னன் எதுவும் 
புரியாமல் நின்றான். இதெல்லாம் எதற்கு என்று அவன் அவரைக் கேட்கத் துணியவில்லை. புலவரின் மிடுக்கும், 
தோரணையும் அவனை வாய்பேசாமற் செய்துவிட்டன.

புலவர் “அவ்வளவுதான்” என்று சொல்ல, மன்னன், “திரும்பலாம்” என்று ஆணையிட அனைவரும் அரண்மனைக்குத் 
திரும்பினர். 

மீண்டும் அவைக்கு வந்த பின்னர், முதலில் மன்னனைச் சுற்றி இருப்பவரை எல்லாம் அனுப்பிவிடும்படி மன்னனிடம் 
கூறினார் புலவர். இருவரும் தனித்து இருக்கும்போது அவர் கூறினார்;

“காய்ந்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொண்டால்
ஒரு மாவிற்கும் குறைந்த நிலத்தில் விளைவதும் பல நாட்களுக்கு வரும்;
நூறு செய் நிலமாயினும் யானை தனித்துப் புகுந்து உண்ணுமாயின்
அதன் வாய்க்குள் போவதைக் காட்டிலும் மிகுதியானது காலால் மிதிபட்டு அழியும்;
அறிவுடைய அரசன் முறையறிந்து அதன்படி பெற்றால்
அவன் நாடு கோடிப்பொருளை ஈட்டித், தானும் பெரிதும் தழைக்கும்;
அரசன் அறிவிற் குறைந்து ஒவ்வொரு நாளும்
தரம் அறியாத வெற்றொலி எழுப்பும் ஆட்கள் சுற்றியிருக்க,
மக்களிடம் அன்பில்லாமல் பெறும் பொருளினை விரும்பினால்
யானை புகுந்த விளைநிலம் போல
தானும் உண்ணான், உலகமும் கெடும்”

இதைக் கேட்ட பாண்டியன் அறிவுடைநம்பியின் கண்களினின்றும் கண்ணீர் தாரை தாரையாய் ஒழுகியது. அவன் 
எழுந்துவந்து புலவரின் இருகரங்களையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டான். “புலவரே, நான் இப்போதுதான் என் பெற்றோர் 
வைத்த பெயருக்கிணங்க அறிவுடைய நம்பி ஆனேன். நான் என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்” என்று வினவினான்.

புலவரோ அமைதியாக, “இப்போது உன்னைச் சுற்றி இருக்கும் தரங்கெட்ட கூட்டத்தாரை வெளியில் துரத்து. மீண்டும் 
எண்பேராயத்தையும், ஐம்பெருங்குழுவையும் கூட்டு. அவர்கள் சொற்படி ஆட்சிசெய்” என்றார்.

“உடனே செய்கிறேன், தாங்கள் கூறியதைப் பாடலாக எழுதித்தரமுடியுமா? அதனை நான் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான 
ஆண்டுகளுக்கு இனிவரப்போகும் சந்ததியாரும் படித்துப் அதனைப் பின்பற்றவேண்டும்” என்றான்.

பாண்டியன் ஓலைகளையும் எழுத்தாணியையும் தருவிக்கப் புலவர் எழுதினார்.

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

பாடல்: புறநானூறு 184; பாடியவர்: பிசிராந்தையார்; 
திணை: பாடாண்டினை; துறை: செவியறிவுறூஉ.

அருஞ்சொற்பொருள் : 
மா = ஒரு சிறிய அளவு நிலம்; செறு = ஒரு பெரிய அளவு நிலம்; யாத்து = உற்பத்தி செய்து;
நந்து = வளர், பெருகு; வைகலும் = தினந்தோறும்; தப = கெட்டுப்போக; பிண்டம் = பொருள்;
நச்சின் = விரும்பினால்; புலம் = விளைநிலம்;

அடிநேர் உரை:-

“காய்ந்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொண்டால்
ஒரு மாவிற்கும் குறைந்த நிலத்தில் விளைவதும் பல நாட்களுக்கு வரும்;
நூறு செய் நிலமாயினும் யானை தனித்துப் புகுந்து உண்ணுமாயின்
அதன் வாய்க்குள் போவதைக் காட்டிலும் மிகுதியானது காலால் மிதிபட்டு அழியும்;
அறிவுடைய அரசன் முறையறிந்து அதன்படி பெற்றால்
அவன் நாடு கோடிப்பொருளை ஈட்டித், தானும் பெரிதும் தழைக்கும்;
அரசன் அறிவிற் குறைந்து ஒவ்வொரு நாளும்
தரம் அறியாத வெற்றொலி எழுப்பும் ஆட்கள் சுற்றியிருக்க,
மக்களிடம் அன்பில்லாமல் பெறும் பொருளினை விரும்பினால்
யானை புகுந்த விளைநிலம் போல
தானும் உண்ணான், உலகமும் கெடும்”

Process of taxation
Even from a small area of paddy field,
Reaping the dried ears of paddy and making rice balls to feed an elephant,
The yield would last long;
But even if it is hundreds of such fields,
If the elephant enters the fields on its own,
What gets ruined under its feet would be more than what goes into its mouth;
If a sensible king gets what is just,
The land would produce millions and it would prosper;
If he is less sensible and is surrounded by empty worded confidents
Who don’t know the value of eminence,
And likes to grab from people without love,
Like the field entered by an elephant,
He won’t get fed and his country too would be ruined.