புறம் காட்டும் நெறிகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக


   1. பாடல் 86 - புலி தங்கிய குகை
   2. பாடல் 94 - நீர்த்துறைப் பெருங்களிறு
   3. பாடல் 121 - பொதுநோக்கு ஒழி
   4. பாடல் 134 - அறவிலை வணிகன்
   5. பாடல் 182 - உண்டால் அம்ம இவ்வுலகம்

 6. பாடல் 183 கற்றல் நன்றே
 7. பாடல் 184 - யானை புக்க புலம்
 8. பாடல் 185 - சாகாடு உகைப்போன்
 9. பாடல் 189 - செல்வத்துப் பயன்
 10. பாடல் 191 - நரை இல ஆகுதல்

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
புறம் காட்டும் நெறிகள் - பாடல் கதை
பாடல் 182 - உண்டால் அம்ம இவ்வுலகம்


பாண்டிய மன்னரின் அரண்மனையே மிக்க பரபரப்புடன் இயங்கிக்கொண் டிருந்தது. மன்னர் பெருவழுதி அங்குமிங்கும்
நடைபோட்டுக்கொண்டு பார்ப்போரிடம் பலவித ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தார். காரணம், அன்று மதிய உணவுக்குப் 
பின்னர் இளவரசன் இளம்பெருவழுதி கடாரம் நோக்கிக் கப்பலில் பயணம் மேற்கொள்ளவிருந்தான். அவனுடன் பதினேழு 
கப்பல்களில் பல பண்டங்களும், அவற்றுக்குக் காவலாகப் பல படைவீரர்களும் செல்லவிருந்தனர். அதுமட்டுமா, ஒன்பது 
கப்பல்கள் நிறைய போர்வீரர்கள் ஏற்றப்பட்டிருந்தனர். அவர்களுடன், போர்க்குதிரைகளும், அவர்களுக்குத் தேவையான 
ஆயுதங்களும் ஏற்றப்பட்டிருந்தன. இறுதிநேரப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. காலையுணவு 
முடிந்தாயிற்று. இன்னும் சில நாழிகைக்குள் மதிய உணவும் முடிந்து அனைவரும் புறப்படவேண்டியதுதான்.

தமிழகக் கப்பல்கள் இங்கிருந்து கொற்கை முத்துகளையும், பொதினி மணிகளையும், மேலைமலை மிளகு, இலவங்கம் 
போன்றவைகளையும் மயில் தோகைகளையும் ஏற்றிக்கொண்டு கடாரத்துக்குச் சென்று அவற்றை விற்று, அங்கிருந்து அந்த 
நாட்டின் வளங்களைத் தமிழகத்துக்குக் கொண்டுவரும் கடல்வணிகம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. 
இந்த வணிகத்துக்கு இடையூறாகப் பல கடல் கொள்ளையர்கள் இருந்தனர். அவர்களுக்குத் துணையாக அப்பகுதி மன்னர்களும் 
இருந்தனர். ஒரு பெரும்படையுடன் கடாரம் சென்று அந்தக் கொள்ளையர்களையும், அவருக்குத் துணைநிற்கும் அரசர்களையும் 
போரில் முறியடித்துத் தமிழக வணிக உரிமையை நிலைநாட்டுவதே இளவரசன் இளம்பெருவழுதியின் பயணத்தின் நோக்கம்.

அப்போது இளவலின் நண்பன் முகிலன் அங்கு வந்தான். அவசரம் அவசரமாக இளவரசனைக் கையைப் பிடித்து 
அழைத்துக்கொண்டு இளவரசனின் தனியறைக்குள் நுழைந்தான். இளம்பெருவழுதிக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னப்பா இது? 
ஏனிந்த அவசரம்?” என்று வினவியவாறே முகிலன் இழுத்த இழுப்புக்கு உடன்பட்டுச் சென்றான். அறைக்குள் நுழைந்த முகிலன் 
முதலில் அறையைத் தாழிட்டான். இருவரும் இருக்கைகளில் அமர்ந்தனர். முகிலன் தன் கையிலிருந்த ஒரு சுருக்குப்பையை 
அவிழ்த்தான். அதினின்றும் இரு மாங்கனிகள் வெளிவந்தன. அவற்றின் மணம் அந்த அறையெங்கும் பரவியது. “இந்தா இதை 
உண்” என்று ஒன்றை எடுத்து முகிலன் இளம்பெருவழுதியிடம் கொடுத்தான். “முதலில் இது என்ன மாங்கனி? இதன் சிறப்பு 
என்ன? எங்கிருந்து இவை உனக்குக் கிடைத்தன? என்று சொல்” என்றான் இளவரசன். “இவை தொலைதூரக் கொல்லிமலைக் 
காடுகளில் மிகவும் அரிதாகக் கிடைப்பவை. மாங்கனி வகைகளிலேயே மிகவும் சிறந்த சுவையுள்ளவை. எனக்குக் கிடைத்தன. 
உனக்குக் கொடுக்கக் கொண்டுவந்தேன்” என்றான் முகிலன்.

இளவரசன் மனம் நெகிழ்ந்துபோனான். தன் ஆருயிர்த் தோழனாகிய முகிலனின் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு 
“ஏனடா, தோழா, இவற்றை நீயே உண்டிருந்திருக்கலாம். தனியனாய் இரண்டையும் உண்ணவேண்டாம் என்று எண்ணி, உன் 
தோழனாகிய என்னுடன் சேர்ந்து இவற்றை உண்ணவேண்டும் என்ற உனது பெருநோக்கினை எண்ணிப் பூரித்துப்போகிறேன்” 
என்றான். “இவை என்ன இளவரசே, இந்திரனுடைய அமிழ்தமே கிடைத்தாலும், அதனை உன்னுடன் சேர்ந்து உண்பதுதான் 
எனக்கு மகிழ்ச்சி” என்றான் முகிலன். இளவரசனை ஒருமையில் அழைக்கும் உரிமை அவனுக்கு இருந்தும், 
அரசகுடும்பத்துக்குரிய மரியாதையைக் கொடுக்கும் விதமாக, ‘இளவரசே’ என்றுதான் முகிலன் விளிப்பான். “இந்தா! நீயும் 
ஒன்று உண்” என்று ஒரு கனியை இளவரசன் முகிலனிடம் எடுத்துக்கொடுக்க, இருவரும் அக் கனிகளை உண்டு கைகளைக் 
கழுவிய நேரம் கதவு தட்டப்பட்டது. 

“இளவரசே, மன்னர் தங்களை அழைத்துவரச் சொன்னார்” என்று ஒரு வீரன் அவனை அழைத்தான். “மன்னர் சற்றுக் 
கடுமையாக இருந்தார், தங்களைக் காணாமல் பலவிடங்களிலும் ஆள்வைத்துத் தேடிக்கொண்டிருக்கிறார்” என்றும் அந்த 
வீரன் கூறினான். “முகிலா, நீ இங்கேயே இரு, என்னவென்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிய இளவரசன் 
வேகமாக வீரன்பின் சென்றான்.

மன்னர் சற்றுக் கடுமையாகத்தான் இருந்தார். தற்காலிகமாகப் போடப்பட்ட ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஏதோ 
தவறுசெய்துவிட்ட ஒரு காவலாளியைக் கடிந்துகொண்டிருந்தார். “ஏனப்பா, இளவரசருக்குரிய பொருள்களைக் கவனமாகப் 
பார்த்துக்கொள்ளவேண்டாமா? யாரோ காலால் இடறிவிட எல்லாம் இறைந்துகிடக்கின்றன பார்” என்று கூறிக்கொண்டிருந்தவர், 
இளவலைக் கண்டதும், “வா, இளம்பெருவழுதி, இவையெல்லாம் நாவாய்க்குச் செல்லவேண்டியவை – உனது பொருள்கள். 
எப்படியோ இங்கு இறைந்து கிடக்கின்றன, எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று சரிபார்த்து அனுப்பு” என்று அமைதியாகக் 
கூறினார். அந்தப் பரபரப்பில் அத்துணை கவலையீனத்தைப் பார்த்து யாருக்கும் பெருங்கோபம் மூண்டிருக்கும். அரசர் 
பெருவழுதியாரோ அச் சூழ்நிலையைப் பக்குவமாகக் கையாண்டார். தேவையற்ற மிகையான சினத்தை வெளிப்படுத்தவில்லை. 
அச் சூழ்நிலையிலும் தந்தையின் நிதானத்தை எண்ணிவியந்தான் இளவரசன்.

அந்த நேரத்தில் மாறன் என்ற படைத்தளபதி அங்கு வந்தார். “என்ன மாறரே, படைகளுக்குரிய தேவைகள் அனைத்தும் 
நாவாய்களில் ஏற்றப்பட்டுவிட்டனவா? குறிப்பாக உணவுப்பண்டங்களும், போர்க்கலன்களும் சரியான அளவில் 
சேர்க்கப்பட்டுள்ளனவா?” என்று மன்னர் வினவினார். சோர்ந்த கண்களுடன் இருந்த மாறன் “அனைத்துமே சரியாக 
இருக்கின்றன அரசே” என்றார். “பார்த்தாயா, இளம்வழுதி, இந்த மாறன் சென்ற பத்து நாள்களாகச் சரியாக 
ஓய்வெடுத்துக்கொள்வதில்லை. சொல்லப்போனால் ஊண் உறக்கம் இன்றித் தன் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார்” 
என்று சொல்லியவாறே மாறனை அருகில் இழுத்து அவரது தோள்களைத் தட்டிக்கொடுத்தார் அரசர்.

“ஏன் மாறரே, நாம் ஏற்கனவே கடாரத்தில் நிறுத்தியிருந்த படைகளும், படைத்தலைவனும் நலமாக இருக்கிறார்களா? 
அவர்களுக்கு ஒன்று நேர்ந்துவிடவில்லையே?” என்று அரசர் மாறனை வினவினார்.

அதற்கு மாறன், “அரசே அந்தப் படைத்தலைவன் உத்தமமானவன். அவனோடு சேர்ந்த வீர்ர்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள். 
அவர்களைத் தன்பக்கம் இழுத்துக்கொள்ள உள்ளூர் அரசன் முயன்றிருக்கிறான். எவ்வளவோ ஆசைகாட்டியிருக்கிறான். 
பாண்டிய நாட்டுமக்கள் அரசரை வஞ்சிப்பதற்கு அஞ்சுவது இயற்கை. இருப்பினும் தொலைதூரத்திலிருக்கும் அந்த வீரர்கள் 
பிறர் அஞ்சுவதைத் தாங்களும் அஞ்சிநடந்திருக்கின்றனர். பாண்டிய மன்னருக்கும் நாட்டுக்கும் புகழ் சேர்க்கும் எந்தச் 
செயலையும் உயிரைக்கொடுத்தாவது செய்ய முனையும் நேரத்தில், தமக்குப் பழி நேரிடும் எந்தச் செயலையும் இந்த 
உலகத்தையே தூக்கிக்கொடுத்தாலும் செய்ய முற்பாடாதவர்கள் அவர்கள். வெளிநாட்டில் இருந்தாலும் நம் நாட்டு வீரர்களைப் 
போலவே அயர்வின்றி நாட்டுக்காக உழைப்பவர்கள்” என்று சொல்லி முடித்தான். “அங்குச் சென்றதும் அவர்களுக்கு வேண்டிய 
பல பரிசுப்பொருள்களைக் கொடுத்து, ‘மன்னர் அவர்களின்மீது மிகவும் பற்றுக்கொண்டிருக்கிறார்’ என்று சொல்லுங்கள்” 
என்றார் மன்னர்.

அப்போது அங்கு வணிகர் குழுத் தலைவர் வந்தார். “என்ன தலைவரே, உமது குழுவினரின் பண்டங்கள் அனைத்தும் 
ஏற்றப்பட்டுவிட்டனவா?” என்று மன்னர் வினவினார். “எமது குழுவினரின் பண்டங்கள் என்று சொல்வதைக் காட்டிலும், 
நமது நாட்டு வளங்களும் செல்வங்களும் என்று கூறுங்கள் மன்னரே! எங்கள் குழு எமக்காக எதையும் செய்வதில்லை. 
நமது நாட்டு உயர்வுக்கும், நமது மக்களின் தேவைக்கும் என்ன வேண்டுமோ அவற்றைச் செய்வதே எங்கள் பணியாக 
மேற்கொண்டுள்ளோம்” என்று அந்த வணிகர்தலைவர் கூற, தன் முகத்து மீசைகளைப் பெருமிதமாக நீவிவிட்டவாறே, 
“மிக்க மகிழ்ச்சி, வேறு ஏதாவது வேண்டுமென்றாலும் தயங்காமல் வந்து கேளுங்கள்” என்று அவரை அனுப்பிவைத்தார் 
மன்னர்.

“சரி நாம் அத்தாணி மண்டபத்துக்குச் செல்வோம்” என்று அங்கிருந்தவர்கள் புடைசூழ மன்னர் தன் அவைமண்டபத்தில் 
நுழைந்தார். அங்கு ஏற்கனவே பல புலவர்கள் அமர்ந்திருந்தனர். அறங்கூறும் அவையத்தாரும், எண்பேராயத்தாரும் தத்தம் 
இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர். மன்னர் அவர்களை நோக்கி இளவரசனின் பயணத்துக்கான காரணங்களையும், 
அதற்கான ஏற்பாடுகளையும் விளக்கினார். தொலைநாட்டில் பாண்டிய வணிகத்துக்கு ஏற்பட்ட இடையூறுகளைக் கவலையுடன் 
எடுத்துக்கூறினார். 

அப்போது அங்கிருந்த முதிர்ந்த ஒரு புலவர் எழுந்தார். “மன்னரே, நாட்டு நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. 
பாண்டியர் அரசாண்மையை எதிர்க்கக்கூடியவர்களும் அரசர் ஆட்சியில் உள்ளனர் என்பது வேதனையளிக்கக்கூடியதா-
யிருக்கிறது. நாட்டில் நன்மை சிறுத்து, தீமை பெருகிக்கொண்டுவருவதாகத் தோன்றுகிறது. சுயநலம் பெருகி, பொதுநலம் 
குறுகிக்கொண்டுவருவதாகவும் தோன்றுகிறது. ஊழிக்காலம் நெருங்கி, உலகம் அழியும்காலம் நெருங்குகிறதோ என்று 
எண்ணுகிறேன்” என்று கூறினார்.

இதைக் கேட்ட இளவரசன் இளம்பெருவழுதி ஏதோ சொல்ல முற்பட்டான். ஆனால் அப்போது தமிழ்ச்சங்கத் தலைவர் 
குறுக்கிட்டு, “ஒரு பெரும் கடமையாற்ற இளவரசர் புறப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நாம் இவ்வாறான சிந்தனைகளில் 
நேரத்தைக் கழிப்பது தேவையற்றது. இறைவனை நம்பி நாம் இயன்றதைச் செய்வோம்” என்றார்.

மன்னரும் அவர் சொன்னதை ஏற்று, அவையைக் கலைத்துவிட்டு, மீந்திருக்கும் பணிகளைச் செய்ய விரைந்தார்.

மதிய உணவும் முடிந்து இளவரசர் இளம்பெருவழுதி கடாரம் புறப்படும் நேரம் நெருங்கியது. அங்கிருந்து கொற்கைக்குச் 
சென்று, பின்னர் அங்கு நாவாய்களில் ஏறிக் கடாரம் நோக்கிப் பயணம் மேற்கொள்ளவேண்டும்.

இளவரசர் சென்று ஏழுநாள்களாகிவிட்டன. கொற்கையில் கப்பல்கள் புறப்பட்டு இரண்டு நாள்களாயின என்று செய்தி வந்தது.

அப்போது வந்தது அந்த இடிபோன்ற செய்தி. நாவாய்கள் புறப்பட்ட மூன்றாம் நாளில் அவை ஒரு கடும் புயலைச் 
சந்தித்திருக்கின்றன. நாவாய்க்காரர்கள் கடுமையாகப் போராடியும் பல கப்பல்கள் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அவற்றில் 
ஒன்றிலிருந்த இளவரசன் இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்துவிட்டான். மீந்திருந்த கப்பல்களும் அவற்றிலிருந்தோரும் 
சிதைந்த நிலையில் கொற்கை மீண்டும் வந்து அங்கிருந்து பறந்துகொண்டு வந்து மதுரைக்குச் செய்தியைச் சேர்த்தனர்.

“உலமே முடிவுற்றதைப் போன்ற ஒரு பெருந்துயரம் மதுரை நகரையும், அரண்மனையையும் பற்றிக்கொண்டது. 
தெளிவுகொண்ட மன்னர், “இறுதி நேரத்தில் என் இளவலுடன் இருந்தது யார்?” என வினவினார். ஒரு வீரன் முன்வந்தான்.
மன்னரைப் பணிந்துகொண்டு அவன் கூறினான்:

“மன்னா, புயல் வருவதற்குச் சில நாழிகைகள் முன்பு வரை கடல் அமைதியாகவே இருந்தது. இளவரசர், ஒரு இருக்கையில் 
அமர்ந்தவாறே ஓர் ஓலையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். திடீரென வானம் கறுத்து, மேகங்கள் சூழ, கடுங்காற்றுக் 
கிளம்பியது. நான் ஓடோடிச் சென்று இளவரசரைப் பற்றினேன். அப்போது கொடிக்கம்பம் முறிந்து விழுந்து இளவரசரைக் 
கடுமையாகத் தாக்கியது. இளவரசர் என் கையில் தன் ஓலையைக் கொடுத்துவிட்டு ஏதோ சொல்ல முயன்றார். அப்போது 
ஒரு பெரிய அலை கப்பலை மூழ்கடிக்கும்வண்ணம் பெரிதாக எழுந்து இளவரசரை என் கண்முன்னே கடலுக்குள் 
கொண்டுபோய்விட்டது. நான் ஒருவழியாகத் தப்பி அடுத்த கப்பலில் ஏறிவந்தேன்” என்று சொல்லியவாறு கதறி அழுதான். 

அவையிலிருந்த ஒருவர் மெல்ல எழுந்து அந்த வீரன் கையிலிருந்த ஓலையைப் பெற்றுவந்தார்.

“என்ன சொல்ல எண்ணினான் என் மகன்? படியுங்கள்” என்று மன்னர் கூற ஓலையை வாங்கியவர் படித்தார்.

உண்டால் அம்ம இவ் உலகம், இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது என
தமியர் உண்டலும் இலரே, முனிவு இலர்,
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்வு இலர்,
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.

அவையில் ஒருகணம் ஒரு பேரமைதி குடிகொண்டது. இறந்துவிட்ட இளவரசன் எழுதிய அந்த இறப்பிலாப் பெருவரிகளில் 
குடிகொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும், நேர்முகப் பார்வையும் அனைவர் இதயங்களிலும் கனத்த பாறையாய் இறங்கி
நின்றது.

“அப்புறம்?” என்றார் மன்னர்.

“இளம்பெருவழுதி என்று கையொப்பமிட்டிடுக்கிறார் இளவரசர்” என்றார் படித்தவர்.

“கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று அதனை மாற்றி எழுதித் தமிழ் சங்கத்தாரிடம் சேர்த்துவிடுங்கள். என் மகன் 
மாயவில்லை. இந்தப் பாடலின் மூலம் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகட்கு அவன் வாழ்வான்” 
கட்டுப்பட்டுத்தமுடியாமல் வடியும் கண்ணீரையும் துடைக்க ஆற்றலற்றவராய் துயரத்தில் ஆழ்ந்துபோனார் மன்னர் பெருவழுதி.

பாடல்: புறநானூறு 182: பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி;
திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக்காஞ்சி

அருஞ்சொற்பொருள் : 
தமியர் = தனித்தவர்; முனிவு = வெறுப்பு; துஞ்சல் = தூங்குதல்; 
அயர்வு = மனச்சோர்வு; தாள் = முயற்சி.

அடிநேர் உரை:-

இந்த உலகம் இன்னும் நீண்ட நாள் இருக்கும்; இந்திரரின்
அமிழ்தமே கிடைத்தாலும், மிகவும் இனிமையானது என்று
அதனைத் தாம் ஒருவராக உண்ணாதவர்; யாரோடும் வெறுப்பு இல்லாதவர்;
உறக்கம்கொள்ளாதவர்; மற்றவர் அஞ்சுவதைத் தாமும் அஞ்சி,
புகழ்கிடைக்கும் எனின் உயிரையும் கொடுப்பவர்; பழி வரும் என்றால்
இந்த உலகத்தையே சேர்த்துக் கொடுத்தாலும் கொள்ளாதவர்; சோர்வு இல்லாதவர்;
அப்படிப்பட்ட சிறந்த தன்மையர் ஆகி,
தமக்கென்று முயலாத, விழுமிய செயல்முனைப்புடன்
பிறருக்காக முயற்சிமேற்கொள்பவர்கள் இருப்பதனால்.

People with noble virtues
This world will go for ever; for, it has;
People who don’t seek to take by themselves 
Even if they get the nectar of Indra;
People who have no hatred; People who don’t slumber;
People who fear the feared;
Those who are ready to lay down their lives for the sake of fame;
But won’t accept disgrace even if it comes with all the world;
People who know no weariness;
Yes, there are people with such great virtues,
Who strive hard, not for themselves,
But strive for the sake of others.



1:17 PM 10/11/2020