புறம் காட்டும் நெறிகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக


   1. பாடல் 86 - புலி தங்கிய குகை
   2. பாடல் 94 - நீர்த்துறைப் பெருங்களிறு
   3. பாடல் 121 - பொதுநோக்கு ஒழி
   4. பாடல் 134 - அறவிலை வணிகன்
   5. பாடல் 182 - உண்டால் அம்ம இவ்வுலகம்

 6. பாடல் 183 கற்றல் நன்றே
 7. பாடல் 184 - யானை புக்க புலம்
 8. பாடல் 185 - சாகாடு உகைப்போன்
 9. பாடல் 189 - செல்வத்துப் பயன்
 10. பாடல் 191 - நரை இல ஆகுதல்

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
புறம் காட்டும் நெறிகள் - பாடல் கதை
பாடல் 134 - அறவிலை வணிகன்


பொதிகை மலைச் சாரலை ஒட்டிய அந்தச் சிற்றூர் வெகுவிரைவில் வரவிருக்கும் இரவை எதிநோக்கியிருந்தது. மலைச் சரிவில்
மேய்ந்து திரும்பிய பசுக்கூட்டங்கள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்தன. அவற்றை ஓட்டிவந்த இடையர்கள் அவற்றை ஊரை
ஒட்டி இருந்த அவற்றுக்குரிய தொழுக்களில் அடைத்தனர். வீதிகளில் விளையாடும் சிறுவர்களின் ஆராவாரக்கூச்சல்கூட அந்த
மந்தைகள் எழுப்பிய மணியோசையில் அமுங்கிப்போயின. ஊர் ஓரத்துச் சாவடியில் அமர்ந்திருந்த சில பெரியவர்களின் கூட்டம் 
வருகின்ற மாடுகளைப் பார்த்தே, “இன்னார் மாடு வருது” என்று கூறிக்கொண்டிருந்தனர். 

அப்போது அந்தப் புழுதிகளுக்கிடையே ஒருவர் காலைக் கெந்திக் கெந்தி நடந்துவந்தார். பிறவியிலேயோ அல்லது இடையிலே 
ஏற்பட்ட ஒரு விபத்தினாலோ ஒரு கால் சற்றே ஊனமாயிருந்தது. அங்கிருந்த எல்லாரையும் ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு, 
“அப்பாடா” என்று ஒரு பெருமூச்சு விட்டபடி, அந்தச் சாவடித் திண்ணையில் ஆளில்லாத ஒரு மூலையில், தன் தோளில் கிடந்த 
துண்டை எடுத்து ‘டப் டப்’ என்று தூசிதட்டிவிட்டு அமர்ந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு இடைச் சிறுவன், அங்கிருந்த ஒரு பெரியவரைப் பார்த்து, “ஐயா, மாடெல்லாம் நல்லா மேஞ்சிருச்சு, 
காலம்பற போற அவசரத்துல கஞ்சி கொண்டு போகல. மாடத் தொழுவத்துல அடச்சுட்டு வீட்டுல போயி ஆத்தாகிட்ட நீங்க 
சொன்னதாச் சொல்லி ஒரு வாயிச் சோறு சாப்புட்டுக்கிறேன்” என்றான்.
 
“நான் சொன்னதாச் சொல்லி ஆத்தாகிட்ட நெறயவே வாங்கி நல்லாச் சாப்டுட்டு அப்புறமா ஒங்க வீட்டுக்குப் போடா. 
நாளய்க்கிருந்து நீ ஒங்க வீட்ல இருந்து கஞ்சி எடுத்தார வேணாம். நானே ஆத்தாகிட்ட சொல்லி எடுத்துவைக்கச் சொல்றேன். 
போகும்போது மறக்காமமட்டும் எடுத்துட்டுப் போயிறுடா” என்றார் அந்தப் பெரியவர்.

அந்தப் பெரியவரின் தாராள குணம் மற்றவர்களுக்கு வியப்பை ஊட்டியது. “என்னா பெரிசு, எதுக்கெடுத்தாலும் கணக்குப்பாப்ப, 
இப்ப ரொம்பத் தாராளமா அள்ளிவிடுற?” என்று ஒரு இளந்தாரி அந்தப் பெரியவரைப் பார்த்துக் கேட்டார்.

“என்னாப்பா, பசிச்ச வாயிக்குக் கொஞ்சம் சோறு போட்டா, போற வழிக்குப் புண்ணியம் சேர்த்ததாகாதா?” என்றார் அந்தப் 
பெரியவர்.

“ஆக, இல்லாதவனுக்கு இரங்கி ஒண்ணும் கொடுக்கல, புண்ணியம் சேத்துக்கறதுக்குத்தான் கொடுங்கிறீங்களாக்கும்” என்றார் 
இன்னொருவர்.

“என்னப்பா செய்யுறது? இந்தப் பெறவியில ஒரு நல்லது செஞ்சா அதுக்குப் பலன் அடுத்த பெறவியில கெடய்க்கும்னுதான 
பெரியவங்க சொல்லிவச்சுட்டுப்போயிருக்காங்க”

“அப்படீன்னா, நம்ம ராசா ரொம்ப தானமெல்லாம் செய்யுறாரு’ல்ல, அதுவுங்கூட அடுத்த பெறவிக்குப் புண்ணியம் 
சேத்துக்குறதுக்குத்தானாக்கும்?”

“யாரு? நம்ம ராசா ஆய் அண்டிரனச் சொல்றீயா? அவரு அள்ளி அள்ளிக் கொடுக்குற மாதிரி யாரு கொடுக்குறா இந்த 
ஒலகத்துல? ஆனா அவர்கூட அடுத்த பெறவிக்குப் புண்ணியஞ்சேக்கத்தான் அள்ளி அள்ளிக் கொடொக்குறாரு’ன்னு தோணுது” 
என்றா அந்தப் பெரியவர்.

இந்த இடத்தில், அந்தப் புதிதாய் வந்து சாவடித் திண்ணையின் ஓரமாக அமர்ந்துகொண்டிருந்த பெரியவர், தன் தொண்டையைச் 
சிறிது கனைத்துக்கொண்டு, “நான் ஒன்று சொல்லலாமா?” என்று சொல்லியவாறே திண்ணையைவிட்டுக் கீழிறங்கி அந்தக் 
கூட்டத்துக்கு முன்னால் வந்து நின்றார்.

“ஆமா, நான் அப்பாதயே கேக்கலாமின்னு நெனச்சேன். அந்த எடப்பய குறுக்கால வந்துட்டான். ஐயா நீங்க யாரு? எங்க’ருந்து 
வர்ரீங்க? யாரத் தேடி வந்துறிக்கீங்க?” என்று தன் கேள்விகளை அடுக்கினார் அந்த ஊர்ப் பெரியவர்.

அதற்கு அந்தப் பெரியவர், “ஐயா, நான் சோழநாட்டு உறையூர்க்காரன். உறையூரில் ஏணிச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவன். 
எனது பெயர் மோசி. சிறுவயதில் நோய்வந்து ஒருகால் சற்று முடமாகிப்போனது. எனவே என்னை உறையூர் ஏணிச்சேரி 
முடமோசியார் என்பார்கள். நான் ஒரு புலவன். உங்களூருக்கு முந்தைய ஊரில் ஒரு வீட்டில் வயிறார உணவு தந்தார்கள். 
இப்பொழுது உங்களூரில் தங்கிவிட்டுக் காலையில் உங்கள் மன்னர் ஆய் அண்டிரனைப் பார்க்க எனது பயணத்தைத் 
தொடரவேண்டும்” என்றார்.

“நல்லது’ய்யா, ஆமா என்னமோ சொல்லவந்தீங்களே?” என்று அந்தப் பெரியவர் வினவினார்.

“அதைத்தான் சொல்ல வருகிறேன். ஒருவர் ஒரு நன்மையைச் செய்தால் பலனை எதிர்பாராமல் செய்யவேண்டும். தான் 
இப்பிறவியில் செய்த ஓர் அறமான செய்கைக்கு அடுத்த பிறவியில் தனக்கு நன்மை கிடைக்கும் என்று செய்தால், 
உப்பைக்கொடுத்து நெல்லை வாங்கிச் செல்லும் உமணருக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு? அப்படிப்பட்டவர் 
அறவிலை வாணிகர் ஆகமாட்டாரா?”

“அதென்ன ஐயா அறவிலை வாணிகர்?”

“உப்பளக்காரர்கள் ஒருவீட்டில் தமது உப்பைக் கொஞ்சம் கொடுத்துவிட்டு அதற்குப் பண்டமாற்றாகத் தமக்கு வேண்டிய 
நெல்லைப் பெற்றுச் செல்கிறார்கள். அதைப் போல தனது செல்வத்தில் ஒரு பங்கை வறியவருக்குக் கொடுத்து, அதற்கு ஈடாக 
அடுத்த பிறவிக்கான புண்ணியத்தைச் சேர்த்துக்கொள்வதாக இவர் எண்ணினால் அவருடைய நற்செயலும் ஒரு பண்டமாற்று 
ஆகிவிடாதா? அப்படிச் செய்பவர் தன்னுடைய நற்செயல் என்னும் அறத்தையே விலை பேசுபராக ஆகிவிடமாட்டாரா? 
அவரை அற விலை வாணிகர் என்று சொல்வது பொருத்தம்தானே!”

“ஐயா! நீங்க புலவர்’னு சொல்றீங்க? மெத்தப் படிச்சிருப்பீங்க. எங்க ராசாவப் பத்தி நாங்க சொன்னதுகூடத் தப்புத்தானா?”

“உங்கள் மன்னரையே நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் கூறுவேன். உங்கள் மன்னரான வேள் ஆய் 
அண்டிரனை நான் நன்கு அறிவேன். முன்பு அவரிடம் பலகாலம் பழகியிருக்கிறேன். பாடிச் செல்லும் என்னைப்போல் 
இரவலருக்குப் பொன்னையும், மணியையும், யானைகளையும் வாரி வாரி வழங்கும் புரவலன் அவன். வறியவரைத் தாங்கும் 
நெறியானது சான்றோர் கூறிச் சென்ற நெறி. அந்த நெறிப்படி நடப்பவனே வள்ளண்மை மிக்க உங்கள் மன்னன்” என்று கூறி 
முடித்தார் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

பின்னர் பலநாள் கழித்து, மன்னன் ஆய் அண்டிரனைச் சென்று சேர்ந்த அவர், தான் முன்னர் அந்தச் சிற்றூர்ச் சாவடியில் 
சொல்லிவந்ததையே கவிதையாக ஓலையில் எழுதிப் படிக்க, அந்த அரசவையே ஆர்ப்பரித்தது.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன் ஆய் அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே


பாடல்: புறநானூறு 134 ; பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்; திணை: பாடாண்டினை; துறை: இயன்மொழி


அருஞ்சொற்பொருள் : 
இம்மை = இப்பிறவி; மறுமை = மறுபிறவி; அலன் = அல்லாதவன்; 
கைவண்மை = வள்ளல்தன்மை.

அடிநேர் உரை:-

இப் பிறப்பில் செய்தது ஒன்று மறுபிறப்பிற்கு உதவும் என்னும்
அறத்தையே விலைக்கு விற்கும் வணிகன் ஆய் அல்லன்; பிற
சான்றோரும் சென்றுகாட்டிய வழி என்று
அந்த நல்ல செய்கையிலேயே அமைந்தது அவனது வள்ளல்தன்மை.

Merchant of Virtue
Ay is not a merchant of virtue to say,
“Do good in this birth and reap its benefits in the next”
His munificence lies along
The path shown by the Nobles of the past.


1:17 PM 10/11/2020