புறம் காட்டும் நெறிகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக


   1. பாடல் 86 - புலி தங்கிய குகை
   2. பாடல் 94 - நீர்த்துறைப் பெருங்களிறு
   3. பாடல் 121 - பொதுநோக்கு ஒழி
   4. பாடல் 134 - அறவிலை வணிகன்
   5. பாடல் 182 - உண்டால் அம்ம இவ்வுலகம்

 6. பாடல் 183 கற்றல் நன்றே
 7. பாடல் 184 - யானை புக்க புலம்
 8. பாடல் 185 - சாகாடு உகைப்போன்
 9. பாடல் 189 - செல்வத்துப் பயன்
 10. பாடல் 191 - நரை இல ஆகுதல்

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
புறம் காட்டும் நெறிகள் - பாடல் கதை
பாடல் 183 கற்றல் நன்றே


மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடுகள்தோறும் வாசலில் பெரிய பெரிய கோலங்கள் வரைந்திருந்தனர். 
வாசல்நிலைகளில் மாவிலைத் தோரணங்களையும், மலர்ச் சரங்களையும் தொங்கவிட்டிருந்தனர். நகரின் நான்கு
தெருக்களிலும் முரசுகளை முழங்கியவண்ணம் யானைகளில் வீரர்கள் சுற்றிவந்துகொண்டிருந்தனர். ஆங்காங்கே வீதிகளில் 
தாரை தப்பட்டையுடன் இசைக்குழுவினர் குழுமியிருந்து ஒலியெழுப்பிக்கொண்டிருந்தனர். மக்கள் புத்தாடை அணிந்துகொண்டு 
அங்குமிங்கும் விரைவாக நடந்துகொண்டு தம் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டிருந்தனர். அனைத்துக்கும் காரணம் வடநாடு 
சென்றிருந்த மன்னன் நெடுஞ்செழியன் அன்றைக்குக் காலையில் நகருக்குத் திரும்பியிருந்தான். எங்குபார்த்தாலும் 
“ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்க” என்ற ஆரவார முழக்கம் விண்ணை நிரப்பியது.

இருபத்தைந்தே வயதில் இமாலயச் சாதனை புரிந்த மன்னன் நெடுஞ்செழியன் அரசவையில் வீற்றிருந்தான். தமிழ்ச் சங்கத்தார் 
ஒவ்வொருவராக அவனது வெற்றியைப் புகழ்ந்து பாடினர். போர்களில் பெரும் வெற்றி பெற்று இமயமலையின் பெருங்கற்களில்
பாண்டியனின் மீன்கொடியைப் பொறிக்க உதவிய படைஞர்களுக்கும், படைத்தலைவர்களுக்கும் மன்னன் பலவித பரிசுகள் 
கொடுத்து மகிழ்ந்தான். கூடவே சென்று போர்வெற்றியைப் பாடித் திரிந்த போர்க்களப் பொருநருக்கும் மன்னன் வேண்டிய 
அளவு பொருளுதவி செய்தான். அவை கலைய, மன்னன் அடுத்திருந்த அந்தப்புரம் விரைந்தான் , அரசியுடன் தன் 
மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள. 

அந்தப்புரமும் மன்னனை மகிழ்ச்சியுடன் வரவேற்றது. அரசி கோப்பெருந்தேவி மன்னனுக்கு மஞ்சள் நீர் தெளித்து ஆரத்தி 
எடுத்து, நெற்றியில் திலகமிட்டு மன்னனை வரவேற்றாள். பின்னர் அரசி தன் தனியறைக்கு மன்னனை அழைத்துச் சென்றாள். 
அவர்களுடன் இளவல் வெற்றிவேற்செழியனும் சேர்ந்துகொண்டான். வெற்றிவேற்செழியன் மன்னனின் தம்பி.. பாண்டியநாட்டு 
இளவல். மன்னனுக்குப் பிறகு ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன். அரசி கோப்பெருந்தேவி இளையவன் 
செழியனைத் தன் மகன் போலவே கருத்துடன் வளர்த்துவந்தாள். தொடக்க காலத்தில் செவிலியர்கள் செழியனுக்குத் தமிழ் 
எழுதும் முறை கற்றுத் தந்தனர். பின்னர் உயர்கல்விக்காக அவனை நகருக்குள் இருந்த ஒரு புகழ்பெற்ற ஆசிரியரிடம் 
அனுப்பினாள் தேவி. அதில்தான் சிக்கல் எழுந்தது.

இளையவனின் தோள்களை அணைத்தவாறு மன்னன், “என்ன உன் கல்வியெல்லாம் எப்படி இருக்கிறது?” என்று வினவினான்.

அதற்குச் செழியன் பதிலிறுக்கும் முன்னர் தேவி குறுக்கிட்டாள். “நீங்கள்தான் இளையவனிடம் கூறவேண்டும். நேற்று ஒருநாள் 
அரண்மனைக்கு வெளியில் இருக்கும் ஆவணவீதியில் ஓர் நல்ல ஆசிரியரிடம் அனுப்பினேன். திரும்பி வரும்போதே இனிமேல் 
நான் அங்குச் செல்லமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு வருகிறான் உங்கள் அருமைத் தம்பி” என்று முறையிட்டாள் தேவி.

“என் கண்ணா? என்ன ஆயிற்று உனக்கு?” என்று மன்னன் வினவினான்.

“எனக்குக் கால் வலிக்கிறது அண்ணா” என்று தன் குறையைத் தெரிவித்தான் செழியன்.

“என்ன தேவி? இளையவனை நடந்துசெல்லவா பணித்தாய்?” என்று மன்னன் வினவினான்.

“அப்படிச் செய்வேனா? நம் சிறுதேரில்தான் இளவலை அனுப்பினேன்”

“பிறகென்ன? ஏனப்பா கால்வலி?” மன்னன் வினவினான்.

“அங்கே ஆசிரியர் எழுதச் சொல்லும் நேரத்தில் அமர்ந்துகொண்டு எழுதச்சொல்கிறார். பயிலும் நேரங்களில் நின்றுகொண்டே 
பயிலவேண்டுமாம். நான் ஏன் நிற்கவேண்டும்? மேலும் எனக்குப் பழக்கமில்லை. செவிலியரிடம் அமர்ந்துகொண்டே கற்றுப் 
பழகிவிட்டேன்” என்றான் இளவல்.

“ஆ, ஆ, ஆ” என்று மன்னன் வாய்விட்டுச் சிரித்தான்.

“அப்புறம் ஆசிரியர் தனக்கான சிறுசிறு வேலைகளையெல்லாம் செய்யும்படி ஏவுகிறார். என் ஏவலைக் கேட்க எத்தனையோபேர் 
இங்கிருக்க நான் ஏன் அவருக்கு ஏவல் செய்யவேண்டும்?”

“வேறு ஏதேனும் இருக்கிறதா?” மன்னன் குறும்புடன் தம்பியை வினவினான்.

“அவரிடம் சேரும்போது அவருக்குத் தட்டு நிறைய முத்தும், பவளங்களும் அளித்தோம் அல்லவா? பின்னர் அவர்தானே நமக்கு 
ஏவல்செய்யவேண்டும்?

அதற்கும் மன்னன் வாய்விட்டுச் சிரித்தான்.

இளவலின் கோபம் இன்னும் அதிகமானது.

“நாம் கொடுக்கும் நிலையில் இருக்கிறோம். ஆசிரியர் அதனைப் பெற்றுக்கொள்ளும் நிலையிலிருக்கிறார். அப்புறம் எதற்கு நான் 
அவர் முன் நின்றுகொண்டு கற்கவேண்டும்? அதுவும் மன்னனின் இளவல் என்ற முறையில் என்னை முன் வரிசையில் 
நிறுத்தாமல், நான் உயரமாக இருப்பதால் என்னைப் பின் வரிசையில் நிறுத்துகிறார் அவர். நான் இனி அங்குச் செல்லமாட்டேன்” 
இளவல் உறுதியாகக் கூறினான்.

அதற்கும் வாய்விட்டுச் சிரித்த மன்னன் கூறினான், “இளவலே, ஆசிரியரிடம் இருக்கும் அறிவுச் செல்வம் விலைமதிப்பில்லாதது. 
அதனை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளவே நாம் அங்குச் செல்கிறோம். எனவே விலை மதிப்புள்ள பொருளைக் கொடுத்துவிட்டு,
விலைமதிப்பற்ற அறிவுச் செல்வத்தை நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். அதற்கு நாம் கொடுக்கும் பொருள் ஈடாகாது. 
எனவே, உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்று”.

தேவி தன்னருகே இருந்த ஒரு பணிப்பெண்ணுக்குக் கண்ணால் குறிப்புக் காட்டினாள். உடனே அவள் தன் மடியிலிருந்த ஓர் 
ஓலையையையும் எழுத்தாணியையும் எடுத்து அவசரம் அவசரமாக மன்னன் கூறியதை எழுதத் தொடங்கினாள்.

மன்னன் பெரும் வீரன் என்பதைப் போல் நன்கு கல்விகற்றவனும் ஆவான். அவ்வப்போது அவன் வாயிலிருந்து வரும் 
நல்முத்துக்கள் போன்ற சொற்களை எழுதுவதற்கு அவனருகில் எப்போதும் ஏடெழுதுவோர் இருப்பர். அப்படித்தான் எழுத 
ஆரம்பித்தாள் அந்த பணிப்பெண்.

“அதென்ன பிற்றை நிலை?” இளவல் வினவினான்.

“தம்பி, அரசகுடும்பத்தாராகிய நாம் எவருக்கும் கொடுக்கும் நிலையில் இருக்கிறோம். இருப்பினும் ஓர் ஆசிரியரிடமிருந்து
பெற்றுக்கொள்ளும் நிலையில் அவரிடம் கல்வி கற்றுக்கொள்கிறோம். அதைத்தான் பிற்றைநிலை என்றேன். மேலும் நீகூடச் 
சொன்னாயே, ஆசிரியர் என்னை முன்னிடத்தில் நிறுத்தாமல் பின்னே நிற்கச் சொன்னார் என்று. அதனையும் பிற்றை நிலை 
என்னலாம். அதனால்தான் கூறுகிறேன், ஆசிரியருக்குத் தேவையான உதவிகள் செய்தும், தேவைக்கும் மேல் அவருக்குப் 
பொருள் கொடுத்தும், நாம் நம்மை முன்னிலைப்படுத்தாமல் கல்விகற்க முன்வரவேண்டும். ஏனம்மா என்ன எழுதியிருக்கிறாய்? 
அதை இவனிடம் படித்துக்காட்டு” என்றான் மன்னன்.

பணிப்பெண் படித்தாள்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்று”

“கற்றல் நன்றே என்று எழுதிக்கொள்” என்றான் மன்னன்.

அப்போது அங்கு ஒரு மூத்த செவிலிப்பெண் வந்து அனைவருக்கும் வணக்கம் செலுத்தி நின்றாள்.

“என்ன வேண்டும் உனக்கு?” என்று வினவினாள் கோப்பெருந்தேவி.

“மன்னரிடம் ஒரு விண்ணப்பம்” என்று சொல்லி நிறுத்தினாள் அவள்.

“என்ன, சொல்லம்மா” என்றான் மன்னன்.

“அரசே! இவன் எனது மகன். நன்றாகத் துடிப்புடன் இருப்பான். சொல்வதை நன்கு புரிந்துகொள்வான். இதுவரை கொடுத்த 
கல்வியில் மிகச் சிறந்து விளங்குகிறான். இவனையும் இளவரசர் கற்கும் இடத்தில் கற்க அனுமதியும் ஆணையும் வேண்டும்” 
என்றாள்.

“இவன் உனது மூத்த மகனா?” என்றான் மன்னன்.

“இல்லை அரசே, இவனுக்கு மேலே இரண்டுபேர் இருக்கிறார்கள். இருப்பினும் இவனே சற்று துடிப்பானவன்” என்றாள் அவள்.

அரசன் கூறினான்,

“பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின்பாலால் தாயும் மனம் திரியும்”

“இந்தச் சிறுவனுக்கும் பெரிய குழந்தைகள் இவளுக்கு இருந்தும், நன்கு கற்கக்கூடிய இந்தச் சிறுவனுக்காக இந்தத் தாய் 
பரிந்துரைக்க வந்திருக்கிறாள். செழியா, இன்றுமுதல் இந்தச் சிறுவனையும் உன் பள்ளித்தோழனாக ஏற்றுக்கொள். இவனது 
கல்விச் செலவை அரண்மனை ஏற்கும்” என்று மன்னர் கூற அந்தச் செவிலிப்பெண் தலைதாழ்த்தி வணங்கி விடைபெற்றாள். 
ஏடெழுதும் பெண்ணும் மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தாள்.

“என்ன இருந்தாலும் வயதுக்கு ஒரு மரியாதை இருக்கும் அல்லவா? இப்போது உங்கள் அவையில் இருப்போர் பெரும்பாலும் 
வயதில் மூத்தவர்கள்தானே!” என்று கோப்பெருந்தேவி கூறினாள்.

“இருப்பினும் தேவி, அவைக்கே ஒரு சிக்கல் ஏற்பட்டால், அவையில் மூத்தோரிடம் நான் தீர்வு கேட்பதில்லை. தீர்வுக்கு விடை 
காணக்கூடிய திறம் மிக்க அறிவாளியைத்தான் நான் கேட்பேன். அவர் சொல்படிதான் நடப்பேன். நான் மட்டுமல்ல, எந்த அரசும் 
நடைபெறுவது இப்படித்தான்” என்றான் மன்னன்.

“எப்படி?” என்றான் இளவல்.

மன்னன் கூறினான்,

“ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்”

“ஆறு என்றால்?” என்று கேட்டான் இளவல் செழியன்.

“ஆறு என்பது வழி; காட்டும் நெறி” என்றான் மன்னன்.

மன்னன் மேலும் கூறினான்.

“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”

“அதாவது கீழான நிலையில் இருக்கும் ஒருவன் கற்றால், அவனுக்கும் மேலான நிலையில் இருப்போன் அவன் சொற்படி 
நடப்பான்” என்று சொல்லி முடித்தான் மன்னன்.

“யாரைத் தாங்கள் கீழ்நிலை என்றும், மேல்நிலை என்றும் கூறுகிறீர்கள்? நேற்று, முதல் நாள் ஆசிரியர் ஒரு பாடல் 
கற்றுத்தந்தார். கணியன் பூங்குன்றன் என்றவரால் பாடப்பெற்றதாம். அவர் கூறினார், ’யாதும் ஊரே, யாவரும் கேளிர்’. 
அதாவது எல்லா நாடுகளையும் தம் நாடாகவே எண்ணவேண்டும், எல்லா மாந்தரையும் தம் உறவினராகவே பேணவேண்டும் 
என்றார். அப்படி எல்லாரும் நம் உறவினர் என்றால் அவர்களில் மேலானவர் யார், கீழானவர் யார்?”

“தம்பி, மிக நன்று கேட்டாய். முதல்நாளே மிக நல்லவற்றைக் கேட்டுக்கொண்டுவந்திருக்கிறாய் மிக்க மகிழ்ச்சி. உனக்கு 
இப்போது விளக்கமாகக் கூறுகிறேன். இப்பொழுது நம் அரண்மனையில் பலவிதமான மக்களைப் பார்க்கிறாய். முதலில் 
அரசகுடும்பத்தைச் சேர்ந்த நாம் இருக்கிறோம். நாம் குடிமக்களைப் பேணவேண்டிய மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம். 
‘நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பார்கள். அதனால் மன்னனும் 
அவனைச் சேர்ந்தோரும் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். அடுத்து, எண்பேராயம், ஐம்பெருங்குழு என்போர் அரசருக்கு 
ஆலோசனை சொல்லும் அவையில் இருக்கிறார்கள். இவர்களை அறவோர் அல்லது சான்றோர் எனலாம். இவர்கள் 
அறிவிற்சிறந்தவர்கள். இவர்களில் ஒருவரை இழப்பினும் அவருக்கு ஈடாக மற்றொருவரைக் காணுதல் அரிது. அடுத்து, 
காவலர், வீரர்கள் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் பணியும் சிறந்தது. ஆனால் இவர்களில் ஒருவரை இழந்தால் அவருக்கு 
ஈடாக இன்னொருவருக்குப் பயிற்சிகொடுத்துப் பெறலாம். இவரது பொறுப்புகள் மற்றவரைக் காப்பது. அடுத்து ஏவலர்களும் 
பணியாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் தாமாக எதையும் செய்யமாட்டார்கள். நாம் சொல்வதைத்தான் செய்வார்கள். 
இவர்களில் ஒருவரை இழந்தால் இன்னொருவரை வெகு எளிதில் பெறலாம். எனவே வகிக்கும் பொறுப்புகளை வைத்தே 
ஒருவர் மேலான நிலையில் உள்ளார் அல்லது கீழான நிலையிலுள்ளார் என்கிறோம். நம் அரண்மனையில் இருப்பதைப் 
போலவே வெளியுலகிலும் இந்த நால்வகை மாந்தர் உண்டு. அவரவர் பொறுப்புகளைப் பொறுத்தும் அவற்றின் முக்கியத்துவம் 
குறித்தும் அவரை மேல்நிலை மாந்தர் என்றும் கீழ்நிலை மாந்தர் என்றும் கூறுகிறோம்.

“மேலான நிலையிலுள்ளோரையே மேற்பால் ஒருவர் என்றும் கடைநிலை மாந்தரையே கீழ்ப்பால் ஒருவன் என்றும் நான் 
குறிப்பிட்டேன். உனக்குத் தகுந்த வயது வந்ததும், நம் நாட்டுக் கீழைக்கடற்கரையிலுள்ள கொற்கைப் பகுதிக்கு உன்னை 
இளவரசனாக அமர்த்தலாம் என்றிருக்கிறேன். யார் கண்டது? இப்போது இங்கு உன்னுடன் கற்பதற்கு அனுமதி 
வேண்டிநின்றானே அந்தச் சிறுவன் உனது அமைச்சனாக ஆனாலும் ஆகலாம். 

“எனவே கல்வி மிகச் சிறந்தது. எப்பாடுபட்டாயினும் நாம் அதனைப் பெற்றேதீரவேண்டும். என்ன? நாளையிலிருந்து அந்த 
ஆசிரியரிடம் கல்விகற்கச் செல்கிறாயா?” என்று மன்னன் கேட்க, இளவரசன் வெற்றிவேற்செழியன் மிகப் பலமாகத் 
தலையை ஆட்டினான்.

மன்னன் சென்ற பின்னர், ஏடெழுதும் பணிப்பெண்ணை அழைத்து, அவள் எழுதியதை மீண்டும் படிக்கச் சொன்னாள் அரசி 
கோப்பெருந்தேவி.

பணிப்பெண் படித்தாள்;

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே

பாடல்: புறநானூறு 183; பாடியவர்: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்;
திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக்காஞ்சி.

அருஞ்சொற்பொருள் : 
உற்றுழி = தேவைப்படும்போது; உறு = மிகுந்த; ஆறு = வழி, நெறி; 

அடிநேர் உரை:-

(ஆசிரியருக்கு)தேவையான இடத்து உதவியும், மிகுந்த பொருளைக் கொடுத்தும்,
பின்னிலைப்படுவதை வெறுக்காமல் கற்றல் நன்று;
பிறப்பில் ஒரு தன்மையுடைய ஒரு வயிற்றில் பிறந்தோருள்ளும்
(ஒருவரின்)கல்வியின் சிறப்பால் தாயின் மனமும் வேறுபடும்;
ஒரு குடியில் பிறந்த பலருள்ளும்
மூத்தவன் வருக என்று சொல்லாமல், அவர்களுள்
அறிவுடையோன் சொல்லும் வழியில் அரசும் செல்லும்;
வேறுபாடு தெரிந்த நான்குவகை மக்களுள்
கடைநிலையில் உள்ள ஒருவன் கற்றால்
மேல்நிலையில் உள்ள ஒருவனும் அவன் சொற்படி நடப்பான்.

Learning
It is always good to learn,
Offering timely help to the teacher, and paying sumptuous wealth to him,
And not minding the hind state one would get;
Even a mother, amongst the offsprings borne by her womb,
Would lean toward the learned one;
Amongst the multitude of people from the same race,
They don’t say “The most elder come”, 
Instead, even the king would abide by what the learned says;
Amongst the four different categories of people,
If one from the lower status learns,
The one from the higher echelon would readily abide by him