புறம் காட்டும் நெறிகள்

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக


   1. பாடல் 86 - புலி தங்கிய குகை
   2. பாடல் 94 - நீர்த்துறைப் பெருங்களிறு
   3. பாடல் 121 - பொதுநோக்கு ஒழி
   4. பாடல் 134 - அறவிலை வணிகன்
   5. பாடல் 182 - உண்டால் அம்ம இவ்வுலகம்

 6. பாடல் 183 கற்றல் நன்றே
 7. பாடல் 184 - யானை புக்க புலம்
 8. பாடல் 185 - சாகாடு உகைப்போன்
 9. பாடல் 189 - செல்வத்துப் பயன்
 10. பாடல் 191 - நரை இல ஆகுதல்

ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக
 
புறம் காட்டும் நெறிகள் - பாடல் கதை
பாடல் 185 - சாகாடு உகைப்போன்


தொண்டைமான் இளந்திரையன் தன் அரண்மனைக்குள் பரபரப்பாக இயங்கிக்-கொண்டிருந்தான். மன்னனே பரபரப்பாக 
இருந்தால், அவனைச் சுற்றியிருக்கும் மக்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? எள் என்றால் எண்ணெயாக 
இயங்கிக்கொண்டிருந்தனர் எல்லா எடுபிடிகளும். அரண்மனை மட்டுமல்ல, காஞ்சி மா நகரமே விழாக்கோலம் 
பூண்டிருந்தது. நகரத்தின் நடுவிலிருந்த மையமண்டபத்தை நோக்கி மக்கள் சாரிசாரியாகச் சென்றுகொண்டிருந்தனர். 
அந்த மைய மண்டபம் மிகப் பெரியது. ஏறக்குறைய ஐநூறுபேர் வசதியாக அமரக்கூடியது. அதைச் சுற்றிலும் மக்கள் 
அமர்வதற்காகப் பெரும்பெரும் பந்தல்கள் போடப்பட்டிருந்தன.

இந்த மகிழ்ச்சியான பரபரப்புக்குக் காரணமான நாயகர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர். அவர் 
பெரும்பாணாற்றுப்படை என்ற மாபெரும் இலக்கியப்படைப்பை உருவாக்கியிருந்தார். தொண்டை நாட்டுக் காஞ்சி 
மன்னன் இளந்திரையனின் சிறப்பை எடுத்தோதும் சிறப்புமிக்க பாடல் அது. அன்றைக்கு அந்தப் பாடலின் அரங்கேற்ற 
நாள். நகரின் மைய மண்டபத்தில், மன்னனும், அவனைச் சேர்ந்தவர்களும், புலவர்களும், சான்றோர்களும் அமர்ந்திருக்க, 
அவர்களின் முன்னிலையில் கடியலூரார் அப் பாடலைப் பலரும் அறிய பாடவுள்ளார். அதன் பின்னர், அது 
தமிழ்ச்சங்கத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அவர்கள் ஏற்றுக்கொண்டால் இறவா இலக்கியம் ஆகிவிடும்.

மன்னனும், மன்னனைச் சேர்ந்தோரும் மையமண்டபத்தை வந்து அடைந்தனர். அவர்களுக்கு  முன்பே ஏனையோர் 
வந்துவிட்டிருந்தனர். கடியலூரார் தன் இருக்கையில் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். மன்னன் தொண்டைமான் 
இளந்திரையன் நாழிகைக் கணக்கரை வரவழைத்தான். விழா தொடங்குவதற்காகக் குறிக்கப்பட்டிருக்கும் நேரத்துக்கு 
இன்னும் எத்தனை நாழிகை இருக்கிறது என்று வினவினான். இன்னும் மூன்று நாழிகைகழித்துத் தொடங்கலாம் 
என்றும் சரியான நேரம் வந்ததும் முகப்பில் தொங்கவிட்டிருந்த நீண்ட நாவைக்கொண்ட பெரிய மணியை ஒலித்துக் 
காட்டுவதாகவும் நாழிகைக் கணக்கர்கள் கூறிச்சென்றனர்.

தன் இருக்கையில் சாவகாசமாக அமர்ந்துகொண்ட மன்னன் இளந்திரையன் அப்படியே புலவர்கள் அமர்ந்திருக்கும் 
இடத்தை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினான். அங்கு ஓர் இருக்கை இன்னும் வெறுமையாக இருந்ததைக் 
கண்டு அதிர்ந்தான். அது யாராயிருக்கும் என்றும் யூகித்துவிட்டான். தனக்கு வலப்புறத்தில் உறைவாளைப் 
பிடித்துக்கொண்டிருந்த தளபதியை மன்னன் அருகில் வரவழைத்தான்.

“கச்சிப்பட்டார் எங்கே?” என்று வினவினான்.

“அரசே, கச்சிப்பட்டு இளந்தச்சனார் வந்துவிட்டார், பின் வரிசையில் அமர்ந்திருக்கிறார்” என்றான் தளபதி.

“அது தெரியும், பார்த்தேன். நான் கேட்டது பெருந்தச்சனாரைப் பற்றி. அவர்தானே மூத்தவர். அவரைத்தானே 
நெடுங்காலம் கச்சிப்பட்டார் என்றழைப்பது வழக்கம். அவர் இன்னும் வரவில்லையா? ஏன் தாமதம்? அவரை 
அழைத்துவர வண்டி அனுப்பவில்லையா?” மன்னன் கேள்விகளை அடுக்கினான்.

“அரசே! நான் தான் வண்டியுடன் ஆளையும், இரண்டு புரவிவீரர்களையும் அனுப்பினேன். அனுப்பி நெடுநேரமாயிற்று. 
வண்டி இன்னும் வரவில்லை” என்றான் தளபதி.

“நல்ல வண்டி அனுப்பினீரா”

“அரசே, மிகச் சிறந்த வில்வண்டியைத்தான் அனுப்பியிருக்கிறேன். பூட்டியிருக்கும் காளைகள் மிகவும் வலிமையானவை.”

“வண்டியோட்டியாக யாரை அனுப்பினீர்? நன்கு பயிற்சிபெற்றவர்தானே?”

“அரசே, மிகவும் பயிற்சியுள்ள ஒருவரை நியமித்திருந்தேன். இன்று அவனுடைய அன்னை பெரும்பிறிது எய்திவிட்டார். 
அன்னைக்கு ஈமச்சடங்காற்ற-வேண்டிய நிலையில் அவர் வரவில்லை. வேறு ஒரு புதியவரை வழிசொல்லி 
அனுப்பினேன்” என்றான் தளபதி.

“அங்குதான் ஏதோ தவறு நடந்திருக்கிறது. நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. உடனே வேறு ஒரு வண்டியையும் 
ஒரு நல்ல வண்டியோட்டியையும், இன்னும் சில புரவி வீர்ர்களுடன் அனுப்புங்கள். தாமதம் செய்யவேண்டாம்”

நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. கச்சிப்பட்டுப் பெருந்தச்சனார் வந்து சேரவில்லை. அந்நேரம் மண்டபத்து முகப்பிலிருந்த 
மணியின் நீண்ட நாக்கு “டணால், டணால்’ என்ற சத்தத்துடன் முழங்க, ‘சட்’-டென்று அங்கே பெரிய அமைதி 
குடிகொண்டது. கடியலூரார் மன்னனை நோக்கினார். அந்நேரம் பார்த்து அவசரம் அவசரமாகப் பெருந்தச்சனார் உள்ளே 
நுழைந்தார். அவரைக் கண்ட மன்னன் பெரிதும் கவலை நீங்கியவனாய், அவரைப் பார்வையாலேயே வரவேற்றான். 
பின்னர் எழுந்து புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரைப் பற்றித் தானே சில மொழிகள் கூறி, அவரைத் தன் 
பாடலைப் படைக்குமாறு வேண்டினான்.

எள் போட்டால் எண்ணெயாக இறங்கும் அளவுக்குச் செறிவாக அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் ஊசி விழுந்த ஒலிகூட 
உரத்துக் கேட்குமளவுக்கு அமைதியாகக் கடியலூராரின் பாடலைக் கேட்டது. ஆங்காங்கே இலக்கிய நயமிகுந்த 
உவமைகள் தெறித்துவிழும்போது உச்சுக்கொட்டிய ஊகார ஒலிகள் மக்களின் இலக்கியச் சுவையை உணர்த்தி நின்றன. 
மன்னனின் சிறப்பைப்பற்றிய பாடல் வரிகள் வரும்போது கரவொலியால் மண்டபமே அதிர்ந்தது. 

பாடல் முழுவதையும் பாடிக்காட்டிய புலவர் இறுதியில் தலைகுனிந்து மன்னனை வணங்கிநிற்க எழுந்த கரவொலி 
விண்னை முட்டியது எனலாம். மன்னன் ஏற்கனவே கொணரச்செய்திருந்த பெரும் பரிசுப்பொருள்களைப் புலவருக்கு 
அளித்ததோடல்லாமல், தன் நாட்டிலுள்ள சில வளமிக்க ஊர்ப்பகுதிகளையும் புலவருக்குக் கொடையாக வழங்கினான். 
முறைப்படியான விழா முடிந்ததும், புலவர் கூட்டம் மன்னனைச் சூழ்ந்து நின்றது. அவர்களின் பின்னால் தயக்கத்துடன் 
நின்றிருந்த புலவர் கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனாரைக் கையுயர்த்தி வரச்சொன்னான் மன்னன். அருகில் வந்த புலவரை 
அமரச் செய்த மன்னன்,

“என்ன ஆயிற்று புலவரே? ஏன் தாமதம்? உடல்நலம் நன்றாயிருக்கிறதா? என்று பரிவுடன் விசாரித்தான்.

“எனக்கு ஒரு குறையுமில்லை, வண்டிதான் .. “ என்று சொல்லி முடிக்கும் முன்னர், மன்னன் திரும்பித் தளபதியை 
அருகில் வரக் குறிப்புக்கொடுத்தான்.

அருகில் வந்த தளபதி நடந்ததை விவரித்தான்.

பெருந்தச்சனாரின் பணிமனை ஊருக்கு வெளியில் இருந்தது. அங்குச் சென்று அன்றைய பணிகளைப் பற்றிக் கூறிவிட்டுத் 
திரும்ப எண்ணியிருக்கிறார் புலவர். அவரை ஏற்றிவரச் சென்றிருந்த வண்டி அங்கும் செல்ல, அங்கு அவர் வண்டியில் 
ஏறிக்கொண்டார். வரும் வழியில் ஓர் சிறிய ஓடையில் முந்தைய நாள் பெய்த மழைநீர் சிறிதாக 
ஒழுகிக்கொண்டிருந்திருக்கிறது. வண்டியோட்டி, சற்றுக் கவனக்குறைவாக வண்டியை நீரில் இறக்கியவுடன், நீர் 
அடியிலிருந்த சேற்றில் சக்கரம் மாட்டிக்கொண்டது. கூடவந்த புரவிவீரர்களும் இறங்கித் தள்ளியும் சக்கரத்தை 
மீட்கமுடியவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் திகைத்துக்கொண்டிருந்தபோது, அரண்மனையிலிருந்த 
வந்த அடுத்த வண்டியில் ஏறிப் புலவர் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார். சேற்றில் மாட்டிக்கொண்ட வண்டியும் 
பின்னர் மீட்டுக் கொணரப்பட்டுவிட்டது.

“நல்ல வேளை தச்சனாரே, தொண்டைமண்டலத்துப் பெரும்புலவராகிய நீர் இல்லாமல் விழாவைத் தொடங்க நான் 
முதலில் பெரிதும் தயங்கினேன். அதற்காகத்தான் மிகச் சிறந்த வண்டியை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
என்ன செய்வது?”

சக்கரத்தையும் பாரையும் சரியாகக் கோத்து, சாலையில் இயக்கும்
பாதுகாப்புள்ள வண்டி, அதைச் செலுத்துவோன் சிறந்தவனாயிருந்தால்
எந்தவித ஊறும் இன்றி சாலையில் இனிதாக ஓடும்;
செலுத்துபவன் தெளிவற்றவனாயிருந்தால் ஒவ்வொருநாளும்
வண்டிக்குப் பகையாகிய சேற்றிலே அழுந்தி
மிகப் பல தீய துன்பத்தை மேலும்மேலும் உண்டாக்கும்.

ஆக, சிறந்த வண்டியாயினும், செலுத்துவோன் சிறந்தவனாயிராவிட்டால் சீரழிவுகள் தொடர்ந்து வரும் என்ற இன்றைய 
பாடம் வண்டியை ஓட்டிச் செல்பவனுக்கு மட்டுமல்ல, அரசியலை நடத்திச்செல்லும் அரசனுக்கும் ஒரு நல்ல பாடமே. 
இந்த நல்ல நாளில் இந்த நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.” என்றான் மன்னன்.

அதற்கு, அந்தப் புலவர், “அரசே, தாங்களே மிகப் பெரிய புலவர். பல பாடல்களைப் புனைந்துள்ளீர். இதனையும் ஒரு 
பாடலாக வரித்துவிட்டால், இந்த அருமையான பாடம் எத்தனையோ தலைமுறைக்குத் தங்கள் பாடலின் சிறப்பினால் 
பயன்பெற்றுக்கொண்டிருக்குமே” என்றார். 

உடனே மன்னன் கூற, அருகிலிருந்த ஏடெழுதுவோர் எழுதத்தொடங்கினர்.

கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகை கூழ் அள்ளல் பட்டு
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே

பாடல்: புறநானூறு 185 – பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன் – 
திணை: பொதுவியல் – துறை: பொருண்மொழிக் காஞ்சி

அருஞ்சொற்பொருள் : 
கால் = சக்கரம், பார் = வண்டியின் நீண்ட சட்டம்; ஞாலத்து இயக்கும் = பூமியில் இயக்கும்; சாகாடு = வண்டி; 
உகைப்போன் = செலுத்துவோன்; மாணின் = சிறந்தவனாயிருந்தால்; ஊறு = இடுக்கண்; ஆறு = வழி, பாதை; 
உய்த்தல் = ஓட்டுதல்; வைகலும் = ஒவ்வொருநாளும்; கூழ் = சேறு; அள்ளல் = செறிவு; தலைத்தலை = மேலும் மேலும்.

அடிநேர் உரை:-
சக்கரத்தையும் பாரையும் சரியாகக் கோத்து, சாலையில் இயக்கும்
பாதுகாப்புள்ள வண்டி, அதைச் செலுத்துவோன் சிறந்தவனாயிருந்தால்
எந்தவித ஊறும் இன்றி சாலையில் இனிதாக ஓடும்;
செலுத்துபவன் தெளிவற்றவனாயிருந்தால் ஒவ்வொருநாளும்
வண்டிக்குப் பகையாகிய சேற்றிலே அழுந்தி
மிகப் பல தீய துன்பத்தை மேலும்மேலும் உண்டாக்கும்

Expert Driving
With the wheels and the long bar properly fixed (to the axle)
If an expert drives a cart having safeguards
There won’t be any hardship and the journey would be pleasant
On any road on this earth;
If the driver is not sane,
The cart would dump into hostile thick mud,
Bringing multiple miseries more and more.