பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்


   1.இந்திரகோபம்                                       6.திசை திரியும் வயங்கு வெண்மீன்
   2.இருகோல் குறிநிலை                     7.புலித்தொடர்விட்ட புனைமாண் நல் இல்
   3.இருகோட்டு அறுவையர்                8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?
   4.மதுரைக்காஞ்சியில் வைகை    9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்
   5.நிலவைக் கவ்விய பாம்பு            10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                       3.இருகோட்டு அறுவையர்	பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடை என்னும் பாடலில், ஆசிரியர் நக்கீரனார் (மதுரை)நகரை ஒட்டிய பகுதியில், 
ஆறு போன்ற அகன்ற நெடிய பாதையில் சில விந்தை மனிதர்களைக் காட்டுகிறார் . 
	மதுரை நகரை அடுத்த ஒரு மலைத்தொடரின் சரிவுகளில், இரவில் மாடுகளைக் கிடைபோட்டுக் காக்கும் இடையர்கள் 
அன்று பெய்த மழையினால் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று கூறுவதில் ஆரம்பித்த நக்கீரர், 
அடுத்து (வைகை)ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் இருக்கும் செடிகொடிகள், மீன்கள், பறவைகள், வயல்கள், கமுகுத் தோப்புகள், 
பூஞ்சோலைகள் ஆகியவை குளிர்கால மழையை எதிர்கொள்ளும் அழகையெல்லாம் வருணித்துவிட்டுக் கரையேறி, 
(மதுரை)மாநகரையும். அதனை நோக்கிச்செல்லும் அகன்ற சாலையையும் காட்டுகிறார்.

	மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
	ஆறுகிடந்தன்ன அகல்நெடுந் தெருவில் - நெடு 29-30


அத் தெருவில் சில விந்தை மனிதர்களைப் புலவர் காட்டுகிறார். அவர்கள், படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் - நெடு.31-32 இவர்கள் பச்சிலை போன்ற இலை, தழைகளைக் கொண்ட ஒரு மாலையைத் தலையில் அணிந்திருக்கிறார்கள். (படலைக் கண்ணி). பருத்த, அழகிய, வலிமையான, ‘கிண்'-ணென்ற தோள்களை உடையவர்கள் (பரேர் எறுழ் திணி தோள்). முறுக்கேறிய உடலை உடையவர்கள் (முடலை யாக்கை). உடம்பு முழுக்க வலிமை குடிகொண்டிருப்பது போன்ற மாந்தர் (முழு வலி மாக்கள்). இவர்கள் இன்னார் என்ற குறிப்புகள் நூலில் இல்லை. ஆனால் இதே அடிகள் பெரும்பாணாற்றுப்படையிலும் காணப்படுகின்றன. அங்குக் குறிப்பிடப்படும் மாந்தர், நீண்ட தனிவழியே உப்பை எடுத்துச் செல்லும் உப்பு வணிகரான உமணரின் உப்பு வண்டிகளுக்குக் காவலாக, வண்டித் தொடரின் இரு பக்கங்களிலும் காவல் காத்துச் செல்பவராகக் குறிப்பிடப்படுகிறார்கள். கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த பெருங்கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப - பெரும். 59 - 63. முல்லைப்பாட்டு என்னும் பத்துப்பாட்டு நூலில், போர்மேற் சென்றிருக்கும் மன்னனின் பாசறையில் உள்ள மன்னனின் அறையை உருவாக்கி, அதனைக் காக்கும் வீரர்களாக யவனர் இருந்திருக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த யவனர்கள் மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலி புணர் யாக்கை வன்கண் யவனர் - முல். 59 - 62 என்று குறிப்பிடப்படுகின்றனர். இந்த மூன்று குறிப்புகளையும் ஒப்புநோக்கிப் பார்த்தால் நெடுநல்வாடையில் குறிப்பிடப்படும் முழுவலி மாக்கள் யவனர்களாக இருக்கலாம் என்று யூகிக்க இடமுண்டு. அடுத்து, மதுரையில் இன்று புகைவண்டி நிலையம் இருக்குமிடத்திற்கு வடக்கே, ஹார்வி ஆலை (Harvey Mills) என்ற ஒரு பஞ்சாலை உண்டு. அது பின்னர், மதுரா ஆலை(Madura Mills) என்ற பெயர்மாற்றம் பெற்று, இன்றைக்கு மதுரா கோட்ஸ் (Madura coats) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலை கட்டுவதற்காக அடித்தளம் அமைக்கத் தோண்டியபோது அங்கு ரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. எனவே, அந்த இடம் அந்நாளில் ரோமர் குடியிருப்பாக இருந்திருக்கலாம். அது அரசரடியிலிருந்து செல்லும் இரு சாலைகளுக்கும் நடுவே நகர் எல்லைக்கு அருகில் இருக்கிறது. அந்த இரு சாலைகளுமே ஆறு கிடந்தன்ன அகல்பெரும் தெருக்கள் என்று சொல்லப் பொருத்தமானவை. எனவே நக்கீரர் நகருக்குள் நுழையும் பாதையில் காட்டுபவர் இந்த யவனர்களே எனத் துணியலாம். அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து துவலைத் தண் துளி பேணார் பகல் இறந்து இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர - நெடு. 33-35 இந்த யவனர்கள் தங்கள் விருப்பப்படி, அங்குமிங்கும் அலைந்து திரிந்துகொண்-டிருக்கிறார்கள் (வேண்டு வயின் திரிதர). எனவே அவர்கள் தங்கள் வசம் இல்லை - மதுவுண்ட களிப்பில் மனம்போனபடி திரிந்துகொண்டிருக்கிறார்கள் (வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து) எனத் தெரிகிறது. அவர்கள் கையில் வைத்திருக்கும் மதுக் குவளைகளில் தேனீக்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் தாங்கள் கொணர்ந்த பழரச மதுபான வகைகளில் ஒன்றாக அது இருந்திருக்கலாம். யவனர் தந்த வினை மாண் நன் கலம் - அகம் 149/9 யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் - புறம் 56/18 என்ற அடிகள் இதற்குச் சான்று. இந்தப் புறப்பாடல், இதே நக்கீரர், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடிய பாடல் ஆகும். எனவே நெடுநல்வாடை முழுவலி மாக்கள் யவனரே என்பதற்கு இது இன்னுமொரு சான்று. அறிஞர்.மா.இராசமாணிக்கனார் தாம் எழுதியுள்ள ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி' என்ற அரியதொரு நூலில் நெடுநல்வாடையில் 31,35-ஆகிய அடிகளில் யவனர் குறிப்பிடப்படுகின்றனர் எனக் கூறுகிறார். இவைமட்டுமல்ல இன்னும் வேறு சான்றுகளையும் பார்ப்போம். இந்த யவனர்கள் தங்கள் தலைகளில் படலைக் கண்ணியைச் சூடியிருக்கிறார்கள். படலைமாலை என்பது பச்சிலை போன்ற இலை தழைகளினால் ஆகிய மாலை. கண்ணி என்பது ஆண்கள் தலையில் அணியும் மாலை. நம் பாடலின் தொடக்கத்தில் மாடு மேய்க்கும் கோவலர்கள் கோடல் என்ற செங்காந்தளின் நீண்ட இதழ்களைக் கொண்ட மாலையைத் தலையில் அணிந்திருந்தார்கள் எனப் பாடல் கூறுகிறது. சங்க இலக்கியங்கள் எத்தனையோ விதமான கண்ணிகளைப் பற்றிக் கூறுகின்றன. ஆனால், படலைக் கண்ணி, பெரும்பாணாற்றுப்படையிலும், நெடுநல்வாடையிலும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் மாட்டு இடையர்கள் பூக்கள் கலந்த படலைக் கண்ணி அணிந்திருந்தனர் என்று பெரும். (174) கூறுகிறது. பல்பூ மிடைந்த படலைக் கண்ணி - பெரும் 174. பூக்கள் கலவாத படலைக் கண்ணியைப் பெரும்பாணாற்றுப்படையின் உமணர் வண்டிகளின் காவலாளிகளும், நெடுநல்வாடை முழுவலி மாக்களும்தான் அணிந்திருந்ததாக அறிகிறோம். அக் காலத்து உரோம நாட்டினர் பூக்கள், இலைகளால் ஆன பலவிதமான தலைமாலைகளை (Head wreath) அணிந்திருந்ததாக அறிகிறோம். உரோமப் பேரரசர்கள் ஒலிவ இலைகளால் ஆன தலைமாலையை அணிந்திருந்தனர். இயேசுவைப் பிடித்த உரோம வீரர்கள், அவர் தன்னை யூதர்களின் அரசர் என்று சொல்லிக்கொண்டதால், அவரை ஏளனம் செய்ய, அவருக்கு முள்ளால் ஆன முடியைத் தலையில் அணிந்ததாக விவிலியம் கூறுகிறது. அரசர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் பல்வேறு காரணங்களுக்காக தலைமாலை அணிந்துகொண்டனர். இந்தத் தலைமாலை corona எனப்பட்டது. இதில் பலவகை உண்டு. The Roman Crowns and Wreaths worn by Emperors were called Corona Radiata. Corona Convivialis were Roman crowns and wreaths worn in private parties celebrating Roman Festivals and made of various flowers or shrubs, such as roses, violets, myrtle, ivy and even parsley. http://www.roman-colosseum.info/roman-clothing/roman-crowns-and-wreaths.htm இங்கு Parsley என்பது aromatic leaves - அதாவது மணமிக்க இலைகள் - நமது பச்சிலை போல. புலவர் குறிப்பிடும் நாள் அந்த யவனர்களுக்கு ஏதோ ஒரு விழாநாள் போலும். எனவே, அதைக் கொண்டாடும் வகையில் அளவுக்கு மீறிக் குடித்துவிட்டுத் தலைமாலையுடன் தள்ளாட்டம் போடுகின்றனர். இவர்களுக்குச் சாரல் மழை ஒரு பொருட்டல்ல (துவலைத் தண்துளி பேணார்). குளிர்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நம்மூர் மழையும் குளிரும் ஒரு பொருட்டா? களிப்பு மிகுதியால் (மகிழ்சிறந்து) தன்னிலை மறக்கிறார்கள். இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர என்கிறார் புலவர். இதற்கு, முன்னும் பின்னும் தொங்கலாக நால விட்ட துகிலினை உடையராய் என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார். ஏனையோரும் இவரை ஒட்டியே பொருள் கூறுகின்றனர். இதற்கு என்ன பொருள்? பொதுவாக முன்னும் பின்னும் தொங்கவிடுவது துண்டு. அது அறுவை எனப்படாது. அறுவை என்பது நீளமானது. வேட்டி எனலாம். எனவே, இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டியைக் கழற்றித் தோளில் போட்டுக்கொண்டனர் எனலாம். இருப்பினும் இருகோட்டு அறுவை என்பதில் ஒரு அழுத்தமும் சிறப்புப்பொருளும் இருப்பதாகத் தோன்றுகிறது. உரோமர்களின் அன்றைய உடுப்பு வகைகளைப் பார்க்கும்போது, சாதாரண நிலையில் அவர்கள் Toga, Tunic என்ற இருவகை மேலாடைகளை உடுத்தியிருக்கின்றனர் என அறிகிறோம். இதில் Tunic என்பது தொடைவரை அணியும் அங்கியாகும். இதனை நம் இலக்கியங்கள் மெய்ப்பை என்னும். இதற்கு மேலே நீளமான ஒரு துணியை அவர்கள் உடம்பைச் சுற்றி அணிவர். அது Toga ஆகும். Tunic இல்லாமலேயே Toga அணிந்துகொள்ளலாம். டோகா பற்றி விக்கிப்பீடியா கூறுவது: http://en.wikipedia.org/wiki/Ancient_Rome The toga, a distinctive garment of Ancient Rome, was a cloth of perhaps 20 ft (6 m) in length which was wrapped around the body and was generally worn over a tunic - http://en.wikipedia.org/wiki/Tunic After the 2nd century BC, the toga was a garment worn exclusively by men, and only Roman citizens were allowed to wear the toga. .. it was considered the only decent attire out-of-doors. - http://en.wikipedia.org/wiki/Roman_citizenship As early as the 2nd century BC, and probably even before, the toga (along with the calceus (http://en.wikipedia.org/w/index.php?title=Calceus&action=edit&redlink=1) was looked upon as the characteristic badge of Roman citizenship. Because the toga was not worn by soldiers, it was regarded as a sign of peace. A toga is made by holding a piece of cloth under the right arm, half behind, half in front. The back part is folded over the left shoulder, and the front part is then folded over the left shoulder too. - http://en.wikipedia.org/wiki/Toga There were many kinds of togae, each used differently. Toga virilis (toga alba or toga pura): A plain white toga worn on formal occasions by most Roman men of legal age, generally about 14 to 18 years, but it could be any stage in their teens. The first wearing of the toga virilis was part of the celebrations on reaching maturity. Toga - வை எப்படி அணிவது என்பதைப் படித்தீர்களா?. நீண்ட துணியின் (அறுவை) நடுப்பகுதியை வலது அக்குளில் இடுக்கிக்கொண்டு, பின்பாதியை முதுகுப்பக்கம் இழுத்து, இடதுபக்கத் தோளின் மேல் முன் பக்கமாய்த் தொங்கப்போடவேண்டும். முன்பாதியை, மார்புக்குக் குறுக்காகக் கொண்டுவந்து அதனையும் இடது பக்கத் தோளினில் பின் பக்கமாய்த் தொங்கப்போடவேண்டும். இதுவே இருகோட்டு அறுவை!! இவ்வாறு மாறுபட்ட முறையில் அறுவையை அணிந்திருக்கும் அவர்களையே இருகோட்டு அறுவையர் எனப் புலவர் குறிப்பிடுகிறார். எனவே, இத்தகைய அகக்குறிப்புகளாலும், புறக்குறிப்புகளாலும், நெடுநல்வாடை குறிப்பிடும் முழுவலி மாக்கள் யவனர் என்றே துணியலாம்.

துவலைத் தண்துளி பேணாராய் வேண்டுவயின் திரிதரும் இந்த யவனர்கள் மேனாட்டினர். நம் ஊர் வாடையையும் தூறலையும் மகிழ்வுடன் எதிர்கொள்கிறார்கள்