பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்


   1.இந்திரகோபம்                                       6.திசை திரியும் வயங்கு வெண்மீன்
   2.இருகோல் குறிநிலை                     7.புலித்தொடர்விட்ட புனைமாண் நல் இல்
   3.இருகோட்டு அறுவையர்                8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?
   4.மதுரைக்காஞ்சியில் வைகை    9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்
   5.நிலவைக் கவ்விய பாம்பு            10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                       6.திசை திரியும் வயங்கு வெண்மீன்

	


	வயங்கு என்ற சொல்லுக்கு ஒளிர், சுடர் வீசு என்பது பொருள். வானத்து மீன்களெல்லாம் ஒளிவிடத்தான் செய்கின்றன. 
ஆனால் அவற்றில் ஒருசிலவே நம்மைக் கவர்கின்ற அளவுக்கு ஒளிர்கின்றன. அவற்றில் முதன்மையானது சுக்கிரன் 
என்று அழைக்கப்படும் வெள்ளி என்ற கோள்மீன் (planet) ஆகும். இதனை Venus என்பர். 
	இப்போது சிறிது வானியல் கற்போம். சூரியக் குடும்பத்தில், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள் புதன் (Mercury) ஆகும். 
அடுத்து இருப்பது வெள்ளி. அதனையும் அடுத்துத்தான் பூமி அமைந்திருக்கிறது. எனவே புதன், வெள்ளி ஆகிய இரு கோள்களும் 
உள் அமை கோள்கள் (Inferior Planets) எனப்படுகின்றன. இந்த உள் அமை கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் சுற்றுப்பாதை நம் பூமியின் 
சுற்றுப்பாதைக்கு உள்ளடங்கியே இருக்கின்றன. இந்த மாதிரி பூமியும், வெள்ளியும் சூரியனைச் சுற்றி வரும்போது ஒரு காலகட்டத்தில் 
பூமி, வெள்ளி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைய வாய்ப்பிருக்கிறது இல்லையா? இதனை நேர் அமைவு என்பர் (conjunction). 
இந்த நேரமைவின்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வெள்ளி இருந்தால் அது உள் நேரமைவு (Inferior conjunction) எனப்படும். 
அல்லது, பூமி, சூரியன், வெள்ளி என்ற மாதிரி நேராக அமைந்தால் அது வெளி நேரமைவு எனப்படும் (Superior conjunction). 
படத்தில் 1 எனக் காட்டப்படுவது வெளிநேரமைவு. 2 எனக் காட்டப்படுவது உள்நேரமைவு.	இப்போது 1 என்ற இடத்தில் வெள்ளி இருப்பதாகக் கொள்வோம். இது வெளிநேரமைவு. 
இந்த நேரமைவின்போது வெள்ளியும் சூரியனும் ஒரே நேரத்தில் உதித்து, ஒரே நேரத்தில் மறைவதால் நாம் வெள்ளியைக் காணமுடியாது. 
பின்னர் சிறிது சிறிதாக வெள்ளி இடஞ்சுழியாக நகரும்போது, அது சூரியனைவிட்டு விலகிச் செல்கிறது. அப்போது சூரியன் மறைந்த பின்னர் 
சிறிது நேரத்துக்கு மேற்கு வானில் மாலை விண்மீனாக (Evening Star) வெள்ளியைக் காணலாம். வெள்ளி மேலும் நகர நகர 
அது சூரியனைவிட்டு விலகியிருக்கும் கோணம் அதிகரிக்குமாதலால், வெள்ளி வானத்தில் காணப்படும் நேரமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். 
அதாவது வெள்ளி மேற்கு வானத்தில் ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே போவதைப் பார்க்கலாம். 
	அந்நாட்களில் சூரியன் மறைந்த பின்னர் முந்தைய வாரத்தைக் காட்டிலும் அடுத்த வாரத்தில் அது அதிக நேரத்துக்கு வானத்தில் தெரியும். 
இவ்வாறு அது எவ்வளவு உயரத்துக்கு எழ முடியும்? ஒரு கட்டத்தில் சூரியன் மறையும் போது வெள்ளி உச்சி வானத்தில் இருக்க முடியுமா? 
முடியாது. ஏன்? மீண்டும் படத்தைப் பாருங்கள். வெள்ளியின் சுற்றுப்பாதை முழுதும் பூமியின் சுற்றுப்பாதைக்கு உள்ளேயே அமைந்து இருப்பதால், 
பூமி, வெள்ளி, சூரியன் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோணம் ஒரு மிகப்பெரிய அளவை எட்டி, பின்னர் மீண்டும் குறையத்தொடங்குவதைக் 
காணலாம். அந்தக் கோணம் குறைந்துகொண்டே வந்து வெள்ளி உள்நேரமைவுக்கு வந்துவிடுகிறது. எனவே வெள்ளி மீண்டும் சூரியனோடு 
ஒன்றிக் காணப்பட்டு, நமது கண்ணுக்குத் தெரியாமற்போய்விடும். இதற்குச் சுமார் ஆறுமாத காலம் ஆகும். அதாவது தொடக்கத்தில் 
இரவு தொடங்கும்போது அடிவானத்துக்குச் சற்று மேலே தெரியும் மாலை வெள்ளி, அடுத்தடுத்த நாட்களில் அதே நேரத்தில் கொஞ்சம் உயரத்தில் 
தெரியும். சுமார் மூன்று மாத காலம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வரும் வெள்ளி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் 
தொடங்கும். பின்னர் ஒருநாள் அது சூரியனுடன் ஒன்றிவிடுவதால் பார்வையிலிருந்து முற்றிலும் மறைந்துவிடும்.
	தொடர்ந்து அது இடஞ்சுழியாக நகர்கையில், இப்போது வெள்ளியானது சூரியன் கிழக்கில் உதிக்கும் முன்னர் காணப்படும். 
இதுவே விடிவெள்ளி - Morning Star - எனப்படுகிறது. இந்த விடிவெள்ளி முதலில் காலை 5 மணியளவில் தோன்றும். 
நாட்கள் ஆகஆக அது சூரியனை விட்டு விலகிக்கொண்டே செல்வதால், அது மேலும் மேலும் உயர்ந்து காலை 3 மணியளவிலேயே தோன்ற 
ஆரம்பித்துவிடும். பின்பு சூரியன் எழுந்தவுடன் நம் கண்ணுக்கு மறைந்துவிடும்.
	இப்போது இந்த வயங்கு வெண்மீனின் நகர்வு தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்..

	பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பட்டினப்பாலையில் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் காவிரியின் சிறப்பையும், 
கரிகால் பெருவளத்தான் மாண்பையும் சிறப்பித்துக் கூறுகிறார். 

	பருவமழை பொய்த்துப்போனாலும் காவிரி வற்றாத நீர்வளம் கொண்டிருக்கும் என்று கூறவந்த புலவர் 
தன் பாடலை இவ்வாறு தொடங்குகிறார்:

	வசையில்புகழ் வயங்குவெண்மீன்
	திசைதிரிந்து தெற்குஏகினும்
	தற்பாடிய தளியுணவின்
	புள்தேம்பப் புயல்மாறி
	வான்பொய்ப்பினும் தான்பொய்யா
	மலைத்தலைய கடற்காவிரி - பட்: 1-6

	இங்கு வயங்கு வெண்மீன் என்று கூறப்படுவது நமது வெள்ளியே. இந்த வெள்ளியானது தான் வழக்கமாகச் செல்லும் பாதையினின்றும் 
திரிந்து தெற்குப்பக்கம் சென்றால் வானம் பொய்க்கும் – அப்படிப் பொய்த்தாலும் காவிரி பொய்க்காது என்கிறார் புலவர். 
இது அணைகள் கட்டப்படாத அன்றைய காவிரி.

	பட்டினப்பாலை மட்டுமல்ல, இன்னும் சில இலக்கியங்களும் வெள்ளி திசைமாறிப் பயணிப்பதன் விளைவுகளைப் பற்றிக் கூறுகின்றன.

	இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்
	அந்தண் காவிரி வந்துகவர் பூட்ட - என்கிறது புறநானூறு (பாடல் 35).

	மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
	தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
	--------.. ---------- ------------.. ----------- 
	பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே - புறம் 117: 1 - 7 

	கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
	விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
	----------------------------------------
	காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை - என்கிறது சிலப்பதிகாரம்(காதை 10:102-108) 

	கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
	தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை - என்கிறது மணிமேலை (பதிகம்:24,25)

	எனவே இது அன்றைய தமிழரின் நம்பிக்கை என்பது உறுதியாகிறது.

	வெள்ளியானது சூரியனுடன் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது நாம் அதனைக் காணமுடியாது எனக் கண்டோம். 
அதன் பின்னர் அது சூரியனுக்கு வடக்குப் பக்கமாகவோ அல்லது தெற்குப் பக்கமாகவோ நகர்ந்து உயரத் தொடங்கும். 
இது பூமி, வெள்ளி ஆகிய இரு கோள்களின் அப்போதைய நிலைகளைப் பொருத்தது. தொடர்ந்து நாம் வெள்ளியைக் கண்காணித்து வந்தால், 
அது சூரியனைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மேலுயர்ந்து வரும்போது, அது தொடர்ந்து தான் இருக்கும் திசையையும் மாற்றிக்கொண்டே 
வருவதையும் பார்க்கலாம். பூமியும் வெள்ளியும் தங்கள் இருப்பிடங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதால் நாம் 
விண்ணில் காணும் தோற்றமே இது. பூமியில் ஒரே இடத்தில், ஒவ்வொரு நாளும் வெள்ளி எங்கு காணப்படுகிறது என்பதைக் 
குறித்துக்கொண்டே வந்த இரண்டு படங்களைக் கீழே காணுங்கள்.


இந்தப் படங்கள் 2010, 2011-12 ஆகிய ஆண்டுகளில் ஒரே இடத்தில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளி மாலையில் தோன்றிய நிலைகளைக் காட்டுகின்றன. இவற்றில், வெள்ளி தெற்குப்பக்கம் எழுந்து உயர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி நகர்வதைக் காணலாம் ஆனால் 2013-ஆம் ஆண்டு மிக அரிதாக, நேரமைப்பின் பின்னர், வெள்ளியானது ஞாயிற்றின் வடக்கில் ஜூன் மாதம் தோன்றி, மெதுவாக மேலெழுந்து, பின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, பின்னர் மெதுவாகக் கீழிறங்கி 2014-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அடுத்த நேரமைப்பில் மறைந்துவிடும். இந்த நிகழ்வுகளில் ஏதாவது ஓர் ஒழுங்கமைவு (periodicity) இருக்கிறதா என்று பார்க்கலாம். நமது பூமி 365.25 நாட்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றிவருகிறது என அறிவோம். இதுவே நமக்கு ஓர் ஆண்டு. ஆனால் வெள்ளி சூரியனை 224.7 நாட்களிலேயே ஒரு சுற்றுச் சுற்றிவந்துவிடும். இவ்வாறு பூமிக்கு 8 சுற்றுச் சுற்ற 2922 நாட்களாகும் (8 x 365.25 = 2922). வெள்ளிக்கு 13 சுற்றுச் சுற்ற 2922 நாட்களாகின்றன (13 x 224.7 = 2922). அதாவது இன்றைக்குப் பூமியும் வெள்ளியும் எந்த நிலைகளில் இருக்கின்றனவோ அதே நிலைக்குச் சரியாக 8 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துசேரும். இது ஒரு வட்டணை (Cycle). 2013-இல் வெள்ளி தெற்குநோக்கித் திசை திரிந்து சென்றால் மீண்டும் 2021-இல் மீண்டும் இவ்வாறே நிகழும். சரி, இதற்கு முந்தைய ஆண்டுகளில் இவ்வாறு நேர்ந்திருக்கிறதா? வெள்ளியின் நிலைகள் குறித்த வலைத்தளங்களில் சென்று பார்த்தபோது, 2005, 1997 ஆகிய ஆண்டுகளிலும் பூமியும் வெள்ளியும் இதே நிலைகளில் இருந்திருக்கின்றன எனக் காணமுடிந்தது. இப்போது பட்டினப்பாலை அடிகளை மீண்டும் பார்ப்போம். பொதுவாக, தெற்குப்பக்கம் தோன்றி, வடக்குப்பக்கமாக நகரும் மாலை வெள்ளி, 2013-ஆம் ஆண்டில் வடக்குப்பக்கம் தோன்றி தெற்குப்பக்கம் நகர்ந்துள்ளது – அதாவது திசை திரிந்து தெற்கு ஏகியுள்ளது. எனவே வானம் பொய்க்கும் என்ற சங்ககால மக்களின் நம்பிக்கை அந்த ஆண்டு மெய்யாகியிருக்கிறதா? 2013-இல் தென்மேற்குப் பருவக்காற்று குடகு நாட்டிலும், அதனையும் தாண்டி தமிழகத்திலும் மிகுதியாகவே மழையைக் கொட்டியது. அதனால் மலைத்தலைய காவிரி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இது நடந்தது 2013 - ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அப்போது வெள்ளி வடக்குப்பக்கம் வெகுதொலைவிற்கு நகர்ந்துள்ளதைக் காணலாம். அதன் பின்னர், வெள்ளி தென்திசை நகர்ந்து வெகுதொலைவுக்குச் செல்கிறது. அந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவக்காற்று குறித்த காலத்தில் தோன்றியது என்று சொல்லப்பட்டாலும் ஏறக்குறைய தமிழகமெங்கும் பொய்த்துப்போய்விட்டது. பெய்த ஓரிரு மழைகளும் புயற்சின்னங்களால் கடலோரப்பகுதியில் பெய்தனவே ஒழிய, அவை பருவ மழை அல்ல! அந்த ஆண்டு 9-12-2013 பிற்பகல் 3.40 மணிக்கு சென்னையில் வெப்ப அளவு 860 F = 300 C.. நவம்பரில் அடிக்கிற வெயில் கோடை நீடினும் என்ற தொடரை மெய்ப்பிக்கிறதே! வெள்ளியின் பாதை ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறாகத் தோன்றினும், எட்டு ஆண்டுகட்கு ஒருமுறை அது பழைய நிலையை அடைகிறது. அதாவது 2005-இல் வெள்ளியின் பாதை எவ்வாறு அமைந்ததோ அதைப்போலவே 2013-இலும் அமையும். எனவே 2013-இல் வெள்ளி திசை திரிந்து தெற்கு ஏகியிருந்தால், 2005-இலும் வெள்ளி அவ்வாறே திசை திரிந்து தெற்கு ஏகியிருந்திருக்கும். எனவே 2005-இலும் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பொய்த்திருக்கும். ஆனால் 2005-இல் வழக்கத்துக்கும் மாறாகப் பருவமழை மிக அதிக அளவில் பெய்திருக்கிறது. சென்ற நூற்றாண்டில், இதே போன்று வெள்ளி விண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகியிருக்கக்கூடிய ஆண்டுகள்: 1901, 1909, 1917, 1925, 1933, 1941, 1949, 1957, 1965, 1973, 1981, 1989, 1997. அந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் அளவைக் குறிக்கும் அட்டவணை இதோ: குறைவுள்ள மழை சிவப்புக்கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. வழக்கத்துக்கும் 19% அதிகமாகக் குறைவுபட்ட மழை புள்ளிகோட்டுக்குக் கீழே செல்வதைக் காணலாம். இவை மிகக் குறைவான மழையைக் குறிக்கும். இங்கே, 1901, 1909, 1917, 1933, 1941, 1949, 1973, 1981, 1989 ஆகிய ஆண்டுகளில் மழை குறைவாகவே பெய்திருப்பதைக் காணலாம். எதிர்பார்த்ததற்கு மாறாக மழை மிகையாகப் பெய்திருக்கும் ஆண்டுகளான 1925, 1957, 1965, 1997, 2005 ஆகிய ஆண்டுகட்கு முந்தைய அல்லது அடுத்த ஆண்டுகளில் மழை பெருமளவு பொய்த்திருப்பதையும் காணலாம். எனவே நம் முன்னோர்களின் நம்பிக்கை அல்லது அச்சம் மிகப்பெரும்பாலான ஆண்டுகளில் மெய்யாகவே இருந்துள்ளதைக் காண்கிறோம். இந்த எட்டு ஆண்டு சுழற்சியை வேறொரு நிகழ்ச்சியிலும் காண நேரிடுகிறது. இது வெளிநாட்டுப் பறவைகள் குளிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து செல்வதைப் பற்றியது. இது தினமலர் நாளிதழில் (சென்னை, ஞாயிறு 8-12-2013 பக்கம் 3) வந்துள்ள செய்தி – “எட்டு ஆண்டுகளுக்கு(ப்) பின் சென்னை வந்த வெளிநாட்டுப் பறவை. “ஒயிட் ஸ்டாக் எனப்படும் செங்கால் நாரை எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் சென்னை வந்துள்ளதாக பறவை ஆர்வலர்கள் உறுதி செய்துள்ளனர். .. கடந்த 1997ம் ஆண்டு, செம்பியம், சிம்சன் வளாகத்தில் உள்ள பூங்காவிற்குள் செங்கால் நாரை பறவைகள் வந்தன ----- அதன் பின் செம்மஞ்சேரி பகுதியில் 2005-ம் ஆண்டு இந்த பறவை வந்தது உறுதி செய்யப்பட்டது. செங்கால் நாரைகள் தமிழகத்துக்கு வரும் ஆண்டுகள் வெள்ளி திசை திரிந்து தெற்கு ஏகும் ஆண்டுகளாகவே இருக்கின்றன. இது தற்செயல் உறவா? அல்லது பறவைகளின் உள்ளுணர்வா? செங்கால் நாரைகளைப் பற்றிய சங்ககாலக் குறிப்புகளினின்றும் மேலும் பல ஆய்வுகள் செய்யலாம். ஆக, புள்ளியியல், வானிலையியல், தமிழ் இலக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வுப்பகுதி இது – மேற்கொள்ளவேண்டியவர்கள் செய்யலாம். பின் குறிப்பு: இந்த வெள்ளி வயங்குகிறது என்பது உண்மை. ஆனால், ஏன் வசை இல் புகழ் என்ற அடைமொழி கொண்டுள்ளது? ஒவ்வோர் ஆண்டும் சில காலங்களில் இந்த வெள்ளி மீன் மேற்குத் திசையில் மாலை மீனாகத் தோன்றி மக்களை மகிழ்விக்கிறது. இருப்பினும் சில வருடங்களில் இது திசை திரிந்து தெற்கு ஏகும்போது வையத்தில் வானம் பொய்க்கிறது. எனவே அக்காலங்களில் இது கரியவனாகிய சனி என்னும் கோள்மீன், தூமகேது ஆகிய வால்விண்மீன் ஆகியவற்றோடு இணைத்துப்பேசப்படுகிறது. கரியவன் அல்லது மைம்மீன் என்பது சனிக்கிரகம் (Saturn)ஆகும். இதற்கு வளையங்கள் (Saturn’s rings)உண்டு என அறிவோம். இந்த வளையங்கள் சாதாரணக் கண்ணுக்குப் புலப்படமாட்டா. தொலைநோக்குக் கருவியின் மூலமாகவே இந்த வளையங்களைப் பார்க்க முடியும். இருப்பினும், சனி, பூமி, சூரியன் ஆகியவற்றின் நிலைகளைப் பொருத்து எப்போதாகிலும் ஒருமுறை இந்த வளையங்கள் மிக மெல்லிதாக்க் கண்ணுக்குப் புலப்படுவதுமுண்டு. அண்மைக்காலங்களில் அவ்வாறு சனிக்கோள் காணப்பட்ட்து உண்டு. அப்பொழுது, அந்தக் கோள் எப்போதும் காணப்படுவதைக் காட்டிலும் சற்றும் பெரிதாகவும், பெரிதான் பகுதி புகை படிந்து இருப்ப்பது போலவும் தோற்றமளிக்கும். இத்தகையா காட்சியை அன்று கண்ட நம் முன்னோர் சனியிலிருந்து புகை வருவதாக எண்ணினர். இதனையே மைம்மீன் புகையினும், கரியவன் புகையினும் என்று பாடினர். தூமகேது என்பது நமது வானில் வெகு அரிதாகத் தோன்றும் வால்மீன் (Comet) ஆகும். இந்த வால்மீன்கள் நீண்ட வால்பகுதியைக் கொண்டிருக்கும். இதனையே நம் முன்னோர் புகைக்கொடி என்றனர். இவ்வாறாகக் கரியவன் புகையும்போதும், வால்மீன்கள் தோன்றும்போதும் நாட்டில் பெரும் அழிவுகள் உண்டாகும் என்று நம் முன்னோர் அஞ்சினர். பெருவெள்ளம், நிலநடுக்கம், கடற்சீற்றத்தால் கடல்கோள்கள் ஆகியவை நடக்கலாம் என நம்பினர். அத்துடன் நாட்டில் வறட்சி நிலவும் என்றும் நம்பினர். கரியவனும், தூமகேதுவும் எப்போது தோன்றினாலும் அது அழிவைக் குறிப்பதாகையால் அவற்றை மக்கள் வெறுத்தனர். தம் வசைமொழிகட்கு அவற்றைப் பயன்படுத்தினர். வெள்ளிக்கோளும் சில காலங்களில் வறட்சியை உணர்த்தி நிற்பினும், மிகப் பெரும்பாலான ஆண்டுகளில் அது எந்த அழிவையும் ஏற்படுத்துவதில்லை என்பதையும் மக்கள் அறிந்திருந்தனர். அத்துடன் இது சனிக்கோளைப் போல் அன்றி அதைக் காட்டிலும் பன்மடங்கு ஒளிர்வுடன் தோன்றுகிறது. எனவேதான் இதனை வசை இல் புகழ் வயங்கு வெண்மீன் என்று கூறி மகிழ்ந்தனர் எனலாம்.

கரியவன் (சனி) புகைந்து தோன்றும் சில காட்களும், ஒரு தூமகேது காட்சியும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.