பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்


   1.இந்திரகோபம்                                       6.திசை திரியும் வயங்கு வெண்மீன்
   2.இருகோல் குறிநிலை                     7.புலித்தொடர்விட்ட புனைமாண் நல் இல்
   3.இருகோட்டு அறுவையர்                8.பானாள் என்பது நள்ளிரவு மட்டுமா?
   4.மதுரைக்காஞ்சியில் வைகை    9.நெல்கின்டா என்னும் நெற்குன்றம்
   5.நிலவைக் கவ்விய பாம்பு            10.கொல்லை நெடும்வழி கோபம் ஊரவும்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
                       5.நிலவைக் கவ்விய பாம்பு

	

	ஒரு நாட்டிற்கு வளம் சேர்ப்பது அதன் வயல்வெளிகளே. வயல்வெளிகள் நிறைந்த நிலப்பகுதியை மருதநிலம் என்கிறோம். 
நீர்வளம் இல்லையென்றால் இந்த வயல்களும் வறண்டுவிடும். ஓய்மாநாட்டு நல்லியக்கோடனின் நாடு நீர்வளம் மிக்கது என்று கூறவந்த 
சிறுபாணாற்றுப்படையின் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் ஓர் அழகிய சொல்லோவியத்தைக் காட்டுகிறார்.

	நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை 
	குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி
	நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
	புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்
	வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
	முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது
	கொங்கு கவர் நீல செம் கண் சேவல்
	மதி சேர் அரவின் மான தோன்றும்
	மருதம் சான்ற மருத தண் பணை - சிறு 178 - 186
 
	நறு மலர்களின் மாலை போல நாள்தோறும் பூக்கும் கிளைகளைக் கொண்ட 
	குட்டையான அடிமரத்தை உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி, 
	நிலையான நீர் இல்லாத குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து
	புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீலநிற மீன்கொத்தியின்
	பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன்
	முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
	தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம்
	திங்களைச் சேர்கின்ற (கரும்)பாம்பு போலத் தோன்றும்,
	மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல்வெளிகள்'

	என்பது இப் பகுதியின் பொருளாகும்.

	‘நீர் நிறைந்த குளங்களைக் கொண்ட மருதநிலம்' என்பதுவே கூறவந்த செய்தியாகும். 
அதை நேரிடையாகச் சொன்னால் அது உரைநடை ஆகும். எனவே இங்கே ஒரு குளத்தங்கரைக் காட்சியைச் சொல்லால் வடிக்கிறார் புலவர். 

	ஒரு குளத்தில் தாமரை பூத்திருக்கிறது. அதில் ஒரு பூ அன்றுதான் மலர்ந்திருக்கிறது. 
அன்றலர்ந்த மலர் என்று இப்போது கூறுகிறோம். இதைத்தான் புலவர் ‘முகிழ் விரி நாள் போது' என்கிறார். 
எனவே அதில் தேன் நிறைய இருக்கும். அது வெள்ளைத் தாமரையாக இருக்கவேண்டும். 

	ஒரு வண்டுக்கூட்டம் அதை மொய்த்துக் கொண்டிருக்கிறது. இக்காட்சி வெண்ணிலவைப் பாம்பு விழுங்குவது போன்று இருந்தது 
என்று புலவர் கூறுகிறார். உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடத் தயாராகுங்கள்! 

	சந்திர கிரகணம் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியும். சூரிய ஒளி பூமியின் மீது விழும்போது ஏற்படும் 
நிழல்கூம்பினுள் (cone of shadow) சந்திரன் நுழைய நேரிடும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 
அந்த நிழல்கூம்பைத் தான் நம் முன்னோர் பாம்பு என்று கூறினர். கூம்பின் நுனி பாம்பின் வால். கூம்பிற்குள் சந்திரன் நுழைகிறது 
என்பதற்குப் பதிலாக பாம்பு வந்து சந்திரனை விழுங்குவதாகக் கூறினர். 	நிழலை விட்டு சந்திரன் வெளியே வருவதையே பாம்பு அதை உமிழ்ந்துவிட்டதாகக் கூறினர். 
இது அவர்களின் கற்பனைத் திறமா அல்லது மூட நம்பிக்கையா என்பது அவரவர் சொந்தக் கருத்து. 
இன்றைக்கும் நம்மில் பலர் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கை பண்டைக் காலத்திலேயே இருந்திருக்கிறது. 

	தாமரை மலர் மீது மொய்த்திருக்கும் வண்டுக்கூட்டம் நிலவை விழுங்கும் பாம்பு போல் இருந்தது என்று அவர் கூறிமுடித்திருக்கலாம். 
புலவரின் கற்பனைத் திறன் இதோடு முடியவில்லை. ‘காஞ்சி மரத்தின் கிளையில் காத்திருந்த மீன்கொத்தி, மீன் ஒன்றைக் கொத்தித் தூக்க, 
அதன் கால் நகங்களால் கிழிக்கப்பட்ட இலைகளைக் கொண்ட தாமரை' என்ற புலவரின் வருணனை நீளமானதாகவும், 
தேவையற்றதாகவும் தோன்றலாம். ஆனால் தேவையற்ற எதனையும் சங்கப் புலவர்கள் கூறுவதில்லை. 	ஒரு குளத்தில் மீன் கொத்தி ஒன்று மீன் பிடிக்கும் காட்சிகள் இங்கு காட்டப்பட்டுள்ளன. நெடுநெரம் காத்திருக்கும் பறவை, 
தக்க தருணம் அமைந்ததும், மீனை நோக்கி அம்பு போல் பாய்கிறது. நீருக்குள் மூழ்கி மீனைக் கவ்விப்பிடிக்கிறது. 
அந்த வேகத்தில் அது நீருக்குள் சற்று ஆழமாகவே செல்ல நேர்கிறது. மேல் மட்டத்தில் உள்ள தண்ணீர் ‘பளார்' என்று வெளியே தெறிக்கிறது. 
	பின்னர், பறவை மேல் நோக்கித் திரும்பித் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு வருகிறது. மேலே தன் இருப்பிடத்திற்குத் திரும்புகிறது. 
இந் நிகழ்ச்சி அப் பகுதியில் ஒரு பெரிய சலசலப்பையே உண்டாக்கியிருக்கும். நீரைக் கிழித்துக்கொண்டு பறவை உட்சென்று வெளிவருவதால் 
நீர்ப்பரப்பு இரண்டு முறை அதிர்கிறது. அதனால் நீரில் மேலுள்ள தாமரை போன்ற மலர்கள் ஆட்டங்கொள்ளும். ஆனால் இது கண்ணிமைக்கும் 
நேரத்தில் நடந்து முடிவதால் மலர்கள் நீண்ட நேரம் பாதிப்படைவதில்லை. ஆனால், புலவர் இங்கு குறிப்பிடும் பறவை ஒரு பேரதிர்ச்சியை 
உண்டாக்குகிறது. போகிற போக்கில் அதன் கால்கள் அங்கிருக்கும் தாமரை இலையில் படுகின்றன. காலின் கூரிய நகங்கள் அந்த இலையை 
இழுத்துக் கிழித்துவிடுகின்றன. இதனால் மலருடன் சேர்ந்த கொடி முழுவதுமே பாதிப்படைகிறது. எனவே தாமரை மலர் பெரும்பாதிப்புக்கு 
உள்ளாகி நீண்ட நேரம் ஆடிக்கொண்டே இருக்கும். இச் சூழ்நிலையில் வண்டுக்கூட்டங்கள் பாம்பு போல் அம் மலரைச் சூழ வரமுடியுமா? 

	கொஞ்சம் மாற்றி யோசிப்போம். 

	விடியற்காலத்தில் ஓரளவே மலர்ந்த (முகிழ் விரி நாள் போது) மலரினுள் சென்று தேனீக்கள் ஏற்கனவே தேன் உறிஞ்சிக்கொண்டு 
இருக்கின்றன. மேலும் பல தேனீக்கள் மலரைச் சுற்றிலும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. 
எனவே, அவை மலரை ஏறக்குறைய மறைத்து விட்டிருக்கின்றன.


         முகிழ்        விரி        நாள் போது

	நன்கு விடிந்த பின்னர் பறவைகள் உணவு தேட ஆரம்பிக்கும். அப்போது வந்த மீன்கொத்தி, மரக் கிளையில் 
நீண்ட நேரம் (நெடிது இருந்து) காத்திருக்கிறது. அதற்குள் இன்னும் நிறைய தேனீக்கள் அம்மலரை மொய்க்க ஆரம்பிக்கின்றன. 
தக்க நேரத்தில் பறவை பாய்ந்து மீனைப் பிடித்த சலசலப்பினாலும், இலை கிழிக்கப்பட்ட அதிர்ச்சியினாலும் பாதிக்கப்பட்ட மலர், 
பெரிதாக ஆட்டங்கொள்ள, மலர் மீது மொய்த்து இருந்த தேனீக்கள் ‘விருட்டென்று' மேலெழும்புகின்றன. 
மேல் மட்டத்தில் இருந்த சில தேனீக்கள் முதலில் மேலெழும்ப, அதை அடுத்தடுத்து இருந்தவையும் அடுக்கடுக்காய் எழும்ப, 
பறந்துபோகும் தேனீக்கள் கூட்டம் ஒரு கூம்பைப் போல் தோன்றுகிறது. 	அப்போது சிறிது சிறிதாக வெளித்தெரிந்த வெள்ளைத் தாமரை, பாதி மூடிய முழுநிலவைப் போல் காட்சியளிக்கிறது. 
இதுவே, ‘மதி சேர் அரவின்' என்று புலவரைப் பாடச் செய்திருக்கிறது. எனவே, ‘கொங்கு கவர் சேவல்' என்ற வினைத்தொகைச் 
சொல்லுக்கு ‘தேனை நுகர்ந்த தேனீக்கள்' என்ற சென்ற காலத் தொடராக விரிவு காண்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. 
மேலும், தேனீக்களை ஆய்வோர், ‘தேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதில்லை. 
தனித்தனியாகவே சென்று பூக்களைத் தேடுகின்றன' என்று கூறுவர். எனவே, ‘கொங்கு கவர் சேவல்' என்ற வினைத்தொகைச் 
சொல்லுக்கு ‘தேனை நுகர்வதற்காக வரும் தேனீக்கள்' என்ற நிகழ்காலத் தொடராக விரிவு காண்பது பொருத்தமற்றது என்பது 
உறுதியாகிறது. இங்கே, சேவல் என்பது ஆண்தேனீக்களைக் குறிக்கும். அறிவியலார் கூற்றுப்படி, பெண் தேனீக்கள் மட்டுமே 
தேன் சேகரிக்க வெளியில் செல்லும். ஆண் தேனீக்கள் கூட்டிலேயே சோம்பியிருக்கும். எனவே ஆண் தேனீக்களுக்கு வீணன் 
அல்லது சோம்பித்திரிபவன் (drones) என்று பெயர். அக் காலத்தில் ஆண்கள் மட்டுமே வெளியில் பொருள் சேர்க்கச் செல்வர் 
என்பதால், தேன் சேகரிக்க வரும் தேனீக்களும் ஆண்களாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றைச் ‘சேவல்' என்று 
புலவர் அழைக்கிறார். எனினும், ஆண், பெண் என்ற இருபால் தேனீக்களில் ஒருபால் இனமே தேனெடுக்க வெளியில் வருகிறது 
என்ற உண்மையைப் பண்டைய மக்கள் அறிந்திருந்தனர் எனத் தோன்றுகிறது. ‘நீலச் செம் கண் சேவல்' என்ற தொடரை, 
‘நீலச்சேவல், செங்கண் சேவல்' எனப் பிரித்துக் ‘கரிய நிறமும் சிவந்த கண்களையும் உடைய வண்டு' என்று பொருள் கொள்ளப்படுகிறது. 
ஆனால் தேனீக்களின் கண்கள் சிவப்பானவை அல்ல. படங்களைப் பாருங்கள். 	தேனீக்களின் கண்கள் பெரும்பாலும் நீலமும் ஓரளவு சிவப்பும் கலந்த நிறத்தவை. 
எனவே, இத்தொடரில், ‘நீல', ‘செம்' ஆகிய இரண்டையுமே கண்ணுக்கு அடைகளாகக் கொண்டு, சிவப்புக் கலந்த நீல நிறமுடைய கண்கள் 
என்று பொருள் கொள்வதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. எனினும், தேனீக்களின் கண்களைக் கூட இத்தனை உன்னிப்பாகக் கவனித்து 
அதற்கேற்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ள புலவரின் கூர்த்த மதி எண்ணி எண்ணி வியத்தற்குரியது. 

	அதைப் போலவே ‘பொன் வாய் மணிச் சிரல்'-அதாவது ‘பொன்னிற வாயை யுடைய நீலமணி போன்ற சிச்சிலி-யின்' என்ற 
புலவரின் கூற்றும் எவ்வளவு உண்மை என்பதைப் படத்தில் பாருங்கள். 	எனவே, சங்கப் புலவர்களின் சொல்லோவியங்கள் ‘கறுப்பு-வெள்ளை' (Black and White)ப் படங்களாக இல்லாமல், 
வண்ணப் படங்களாகவே இருப்பதை மீண்டும் இங்குக் காண்கிறோம். 

	அடுத்ததாகப் பறவை அமர்ந்திருந்த மரத்தைப் பற்றியும் புலவர் கூறுகிறார். அது ஒரு காஞ்சிமரம்; 
இப்பொழுது அது ஆற்றுப்பூவரசு என அழைக்கப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இருக்கும். அதைக் குறுங்கால் காஞ்சி என்கிறார் புலவர். 
அதாவது சிறிய அடி மரத்தைக் கொண்டது அது. குட்டையான அந்த மரத்தின் கிளைகளில் சில நீரின் மேல் பகுதி மேலும் நீண்டிருக்கும். 
அப்போது அது நீருக்கு அருகில் இருக்கும். எனவே, அங்கிருந்து நீருக்குள் இருக்கும் மீன்களைப் பார்ப்பதற்கும், தக்க நேரத்தில் சீக்கிரமாய்ப் 
பாய்ந்து செல்வதற்கும் அது மிக்க வசதி உடையதாக இருக்கும். எனவேதான் மீன்கொத்தி அந்த மரத்தின் கிளை ஒன்றைத் தேர்ந்தெடுத்தது. 
பறவைகளின் உளப்பாங்கையும் புலவர் அறிந்து வைத்திருக்கிறார். 


 		காஞ்சி மரம்				 		காஞ்சிப் பூ

	காஞ்சி மரத்துக்கு வேறு ஒரு சிறப்பும் உண்டு. அதன் பூ ஏற்கனவே தொடுத்த ஒரு மாலையைப் போலிருக்கும். படத்தைப் பார்க்க.  

	இதையும் வருணிக்கப் புலவர் மறக்க வில்லை. எனவே இதனை, நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை என்கிறார். 
இதன் கிளைகள் பார்ப்பதற்குக் குச்சி போல் இருப்பினும் பறவை உட்காருமளவுக்கு வலுவுள்ளன என்பதை நாள் சினை 
என்பதன் வாயிலாகக் குறிப்பிடுவதற்கும் புலவர் மறக்கவில்லை.

	மதிசேர் அரவின் மான என்ற உவமைக்கான இந்தக் காட்சி ஒரு குறும்படமாகவே காட்டப்பட்டுள்ளதைக் காணலாம். 
குறும்படத்தில் காட்டப்படும் உயிருள்ள, உயிரற்ற பொருள் ஒவ்வொன்றையும் முழுமையாகக் காட்டும் வண்ணம், 
மலர்க் கொத்தாய்ப் பூத்திருக்கும் குட்டைக்கால் காஞ்சி, அதன் நாள் சினையில் நெடுநேரம் காத்திருந்து அமர்ந்திருக்கும் 
பொன் வாய் மணிச் சிரல், நீரின் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் முட்கள் கொண்ட தாமரைத்தண்டு, அதில் அப்போதுதான் மலர்ந்திருக்கும் 
முகிழ்விரி நாள் மலர், அதில் மொய்த்துக்கொண்டிருக்கும் செந்நீலக்கண்ணுடைய தேனீக்கள் என எத்துணை நுண்ணிய பார்வையுடன் 
இக் காட்சியைப் பார்த்துப்பார்த்துச் செதுக்கியிருக்கிறார் புலவர் என்று எண்ணி எண்ணி வியக்கத்தோன்றுகிறதல்லவா!