அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 56 - நகை ஆகின்றே, தோழி!
                
                                 நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது


இரண்டு மூன்று நாட்களாகப் பொன்னிக்கு முல்லையின் நினைப்பாகவே இருந்தது. முல்லையின் 
பேறுகாலத்தின்போது கைக்குழந்தையுடன் அவளைப் பார்த்தது. ஒருநாள் கைக்குழந்தையைக் குளிப்பாட்டிக்கூட 
விட்டாள். அதன்பின் தாயும் பிள்ளையும் எப்படி இருக்கின்றனர் என்று ஒரு நடை போய்ப் பார்த்துவர அவளுக்கு 
நேரம் அமையவில்லை. அன்று நாள் சரியாக அமைந்தது. கதிரறுப்புக்குப் போகவேண்டாம் என்று பொன்னியின் 
ஆத்தாள் சொல்லிவிட்டாள். எனவே காலைவேலைகளைச் ‘சட்டுப்புட்’-டென்று முடித்துவிட்டு, அவளது 
ஆத்தாளிடம் சொல்லிவிட்டு முல்லையின் வீட்டுக்குச் சென்றாள் பொன்னி.

பொன்னியின் தலையைப் பார்த்ததும்,  “எண்டீ கொள்ள நாளாக் காணோம், அன்னிக்கு என்னியக் குளிப்பாட்டிவிட்டுப்
போன என் அத்தைய ஏன் இன்னுங் காணோம்’னு ஒன் மருமகன் கேட்டு அழுதுகிட்டே இருக்கான்” என்றாள் 
முல்லை பொய்க்கோபத்துடன். 

“மன்னிச்சுக்கங்க எம் மருமவனே!” என்றவாறு கைத்தாங்கலாகக் கழுத்தில் கைகொடுத்தவாறு குழந்தையை 
வாங்கித் தன் மார்போடு சேர்த்துக்கொண்டாள் பொன்னி. அதுவரை சிணுங்கிக்கொண்டிருந்த கைக்குழந்தை 
சிணுங்கலை உடனே நிறுத்தியது.

“பரவாயில்லையே! அத்தை மாராப்பு வாசனய ஐயா இன்னும் மறக்கல பாரு” என்று சிரித்தாள் முல்லை.

“அப்புறம், எப்படி இருக்கே?” என்று விசாரித்தாள் பொன்னி.

“என்னமோ இருக்கோம், நானும் எம் பையனுமா!” என்று ஒருவித சோகத்துடன் சொன்ன முல்லை, உடனே, 
“என்னய விடு, உன்னய எங்க ஆளவே காணோம்’னு கேட்டனே!” என்று பேச்சை மாற்றினாள்.

“அந்தக் கூத்த ஏன் கேட்குற? எங்கப்பா ரெண்டு எருமை வாங்கிச்சு. அதுல ஒண்ணு ரொம்பச் சண்டி, சொன்னபடியே 
கேக்கமாட்டேங்குது, நானும் அடிச்சுக்கூடப் பாத்துட்டேன், ஊகும், சாணி அள்ளிட்டுக் கழுவிடுறதுக்குக் கொஞ்சம் 
தள்ளிவிட்டு, ஒதுங்கி நில்லு’ன்னு சொன்னா ஒதுங்கும்’கிற? ஐயோ அதோட மாரடிக்கிறதே பெரும்பாடா இருக்குடீ”
என்று சலித்துக்கொண்டாள் பொன்னி. மூச்சு வாங்கிய பொன்னி மீண்டும் தொடர்ந்தாள்.

“இந்தக் கூத்தக் கேட்டியா? ஒருநாள் குளிப்பாட்டிவிடலாம்னு நம்மூருக் குளத்துக்கு ரெண்டு மாட்டயும் பத்திக்கிட்டுப்
போனேன். இது சொன்னபடி கேக்காதேன்’னு இதுக்கு மட்டும் ஒரு கயத்தக் கழுத்தில கட்டிக் கையில 
பிடிச்சிட்’ருந்தேன். குளத்துமேட்டுல ஏறி இறங்குறப்போ, குளத்துக்குள்ள இருக்குற குவளப்பூவப் பாத்துச்சோ 
இல்லையோ, வெடுக்கு’ன்னு கயத்தப் பிடுங்கிக்கிட்டு விடுவிடு’ன்னு போயி தண்ணிக்குள்ள எறங்கிருச்சு. நான் 
வெரசாப் போயி கொம்பப் பிடிச்சேன்.”

“அச்சச்சோ அப்புறம்?” என்று வியப்புடன் கேட்டாள் முல்லை.

“அப்புறம் என்ன, ஒத்தத்தக் கொம்பும் நல்லா இரும்பால செஞ்ச மாதிரி, தலைய ஒரு அசச்சு அசச்சித் 
தட்டிவிட்டுட்டுத் தண்ணிக்குள்ள போயிருச்சு.  நல்லா தெளிஞ்சு கெடக்குற தண்ணிய எல்லாம் ஒரு கலக்குக் 
கலக்கி, ஆம்பல் கொடி மெல்லிசான எலய எல்லாம் அப்படி யிப்படிக் கிழிச்சு - உள்ள குவள அப்பத்தான் 
பூத்திருஞ்துச்சு - அதுகள லபக்கு லபக்கு’ன்னு பிடுங்கிப் பிடுங்கி வாய்க்குள்ள அதக்கிக்கிருச்சு. அப்புறம், 
வேற பக்கம் போயி கரையில ஏறி’ருச்சு. அங்கக் கரை மேல நிக்கிற காஞ்சி மரத்துப் பூவுல இருக்குற 
பொடியெல்லாம் அந்த ஈரமான முதுகில உதுந்து விழுக, பளபள’ன்னு மின்னிகிட்டே, வாயில அதக்கியிருக்கிறத 
அசபோட்டுக்கிட்டே போயிருச்சு. நான் என்ன செய்யுறது? இருந்த மாட்டக் குளிப்பாட்டிட்டு வீட்டுக்கு வந்தா, 
வீட்டுல நல்ல புள்ளயாட்டம் இன்னம் அசைபோட்டுகிட்டே நின்னுகிட்டு நம்மளப் பாக்குது. போட்டேன் ஒரு போடு. 
ஆனா அதுகளுக்கு ஒறய்க்கும்’கிற?”

“அதுகளுக்கும் ஒறய்க்காது, இதுகளுக்கும் ஒறய்க்காது” என்றாள் முல்லை.

“என்னடி புதிர்போட்டுப் பேசுறவ? என்ன ஆச்சு ஒங்களுக்குள்ள?” என்று பதறினாள் பொன்னி.

உள்ளிழுத்து ஒரு பெருமூச்சு விட்டாள் முல்லை. அவள் கண்கள் கலங்கிக் குளமாகிவிட்டன. முந்தானையால் 
முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.

மீண்டும் பொன்னியே பேசினாள். “அண்ணன் நல்லவருடீ, ஏதாவது கோவத்துல பேசியிருக்கும். கோவம் இருக்குற 
எடத்துலதான் குணம் இருக்கும்’பாங்க”

“கோவமும் இல்ல, கொணமும் இல்ல. எல்லாம் ஒங்க வீட்டு எரும மாட்டப்போல இந்த எருமையும் அத்துக்கிட்டுப் 
போயிருச்சு. நல்லா இரும்பு கெணக்கா நெஞ்சழுத்தம்’டீ. என்னயத் தட்டிவிட்டுப் போயிருச்சு. பளிங்கு போல 
இருந்த குடும்பத்த பாழாக்கிப்புடுச்சு. ஆம்பல் எல ரொம்ப மெல்லிசா இருக்கும்’லயா, அதப்போல இந்த 
மெல்லிசான மனத்தக் கிழிச்சுக் கொதறிப்புடுச்சுடீ.”

பொன்னிக்கு இன்னும் புரியவில்லை. “அப்படி என்னத்த பண்ணிச்சு அண்ணன், வெளங்குற மாதிரி சொல்லுடீ” 
என்றாள்.

“அப்பத்தான் பூத்திருக்கிற குவளயப் பிடுங்கிப் பிடுங்கித் தின்னுச்சுன்னியே ஒன் எருமை, அதப்போல நானெல்லாம் 
கூம்பிப்போன ஆம்பலாயிட்டேன். இம்பத்தான் பூத்துச் சிரிக்கிற புதுப்புது குவளயத் தேடி ஒங்கண்ணன் போகாத 
எடத்துக்குப் போயிட்டாருடீ” 

“அச்சச்சோ”

“அதுமட்டுமா? அந்தக் காஞ்சிப் பூப்பொடி அந்தக் ‘கழுத’ முதுகில விழுந்து பளபளத்துச்சு’ன்னு சொன்னியே, 
இங்க ஓரஞ்சாரத்துல இருக்குறவய்ங்க அவர உசுப்பேத்திவிடுறாய்ங்க. ஒன் எருமை கெணக்கா இது மினுக்கிக்கிட்டுத்
திரியுது. ஒன் எருமையாவது அச போட்டுக்கிட்டே வீட்டுக்கு வந்து சேந்துருச்சு. இந்த எரும அசபோட்டுக்கிட்டே 
அங்கணக்குள்ளயேதான் இருக்கு. இதுக்கென்னிக்குப் புத்திவர? வந்தாலும் நான் விடமாட்டேன்”

ஒரு பெருத்த அமைதி அங்குக் குடிகொண்டது. கைக்குழந்தை நன்றாகத் தூங்கிவிட்டது. அதைப் பொன்னியிடமிருந்து
வாங்கிய முல்லை, சேலையினால் கட்டிய தொட்டிக்குள் மெதுவாகப் படுக்கவைத்து சிறிது ஆட்டிவிட்டாள்.
 
“சரி அதெல்லாம் போகட்டும், நேத்து இங்க நடந்த ஒரு கூத்தக் கேட்டியா? ஐயோ எனக்குச் சிரிச்சு மாளல” என்று 
துக்கத்தையெல்லாம் மறந்து வாய்விட்டுச் சிரிக்கலானாள் முல்லை.

ஆச்சரியத்துடன் முல்லையை ஏறிட்டு நோக்கிய பொன்னியைப் பார்த்து முல்லையே பேசத்தொடங்கினாள்.

“ஒங்க அண்ணங்கூடவே திரிவானே ஒரு பாணன். அவனுக்கு இப்ப என்ன சோலி’ன்னா, புதுப்புதுப் பூவா பிடுங்கி 
ஒங்க அண்ணன் கழுத்துல மாட்டிவிடுறதுதான்”

“அண்ணன் கழுத்தில நீதானடி மால போட்டிருக்கயே” என்றாள் பொன்னி.

“இவ எவடீ, கூறுகெட்டவ, புதுப்புது ஆளாச் சேத்துவிடுறவன்’டீ இவன்”

“அட, நாசமாப்போன நாயீ”

“அவன் என்னமோ நல்லாத்தான் இருக்கான். அவன் இந்தப் பக்கம் ஒரு புதுச் சிறுக்கியத் தள்ளிக்கிட்டு வந்திருக்கான்
– ஒங்க அண்ணங்கிட்ட கூட்டிட்டுப் போக. நம்ம வீட்டுக்கிட்ட வரும்போது, ஒரு பசுவுங்கன்னும் வந்துருக்கு. 
அந்தப் பசு இவனப் பாத்து வெறிச்சுப்போயி முட்ட வந்திருக்கு. இவன் கையில வச்சிருந்த யாழயுங்கூடக் கீழ 
போட்டுட்டு ஓடியாந்து நம்ம வீட்டுக்குள்ள புகுந்துகிட்டான்”

“அடப் போக்கத்த பொசகெட்ட பயலே!”

“வாசல்’ல பசுமாடு, நடையில இவன்”

“வெளிய வெறிச்சுகிட்டு நிக்கிற பசுமாடு, உள்ள பொசுபொசு’ன்னு பொங்கிப்போயி இருக்கிற தாய்ப்பசு, அவன 
சும்மாவா விட்ட?”

“நல்லா வேணும் இவனுக்கு, இவனொத்தவங்களுக்கு இதுவும் கெடய்க்கும், இன்னமும் கெடய்க்கும்’னு எனக்கு 
உள்ளுக்குள்ள பூரிப்பா இருந்துச்சு. இருந்தாலும் நாம மனுசப்பொறப்பு இல்லயா? அடுத்தவங்களுக்கு ஒரு 
தொயரம்’னா நாம சந்தோசப்படக்கூடாது இல்லயா?”

“அப்புறம் என்ன செஞ்ச?”

“சொல்றேன் கேளு, நேர அவன்கிட்டப் போனேன். என்னப்பா வீடு மாறி வந்துட்டியா? இப்பல்லாம் இது ஒன் வீடு 
இல்லியே, அங்க’ல்ல இருக்கு ஒங்க வீடு’ அப்படின்னு ஒரு போடுபோட்டேன் பாரு, கதிகலங்கிப்போயிட்டான். 
அப்ப அந்தப் பசுவும் போயிருச்சு. அவன் என்னயப் பாத்தான். குனிஞ்சு தன்னயப் பாத்தான். மனசு என்ன 
பண்ணிச்சு’ன்னு தெரியல்ல. ரொம்பச் சங்கடப்பட்டவன் மாதிரி கூனிக்குறுகிப்போயிட்டான். அப்படியே குனிஞ்சு 
ரெண்டு கையும் எடுத்து ஒரு கும்பிடுபோட்டு நின்னாம் பாரு, அத நெனய்க்க நெனய்க்கச் சிரிப்புத் தாங்கல” 
என்று கூறியபடி சிரித்துச் சிரித்துத் தன் துயரத்தை மென்று முழுங்கிக்கொண்டிருந்த அருமைத் தோழி 
முல்லையின் பேச்சைக் கேட்ட பொன்னி உள்ளம் கலங்கிப்போய் நின்றாள்.

பாடல் : அகநானூறு 56 - திணை : மருதம்
ஆசிரியர் : மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

நகை ஆகின்றே தோழி! நெருநல்
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க,
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை
ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன் மலர் மாந்திக் கரைய
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணி புதுவோர் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன், தெருவில்
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு
எம் மனைப் புகுதந்தோனே அது கண்டு
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று
இம் மனை அன்று அஃது உம் மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே!

அருஞ்சொற்பொருள்

நெருநல் = நேற்று; மணி = பளிங்கு; துணி கயம் = தெளிந்த குளம்; துளங்க = கலங்க; 
இயன்றன்ன = செய்தததைப்போன்ற; கோடு = கொம்பு; அடை = இலை; மாந்தி = நிறைய உண்டு; புறம் = முதுகு; 
உறைப்ப = உதிர்ந்து விழ; கவுள = கன்னத்தையுடையதாய்; அல்குநிலை = தங்குமிடம்; திண் தார் = செறிந்த மாலை;
அகலம் = மார்பு; வதுவைநாள் = திருமண நாள். புனிற்று ஆ= அண்மையில் ஈன்ற பசு. மம்மர் = மயக்கம், மருட்சி.

அடிநேர் உரை

சிரிப்பை உண்டாக்குகின்றது தோழி, நேற்று
பளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க
இரும்பினால் செய்தது போன்ற கரிய கொம்பை உடைய எருமை
ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியுமாறு, குவளையின்
அப்போது மலர்ந்த பல மலர்களை நிறைய உண்டு, கரையிலிருக்கும்
காஞ்சி மரத்துப் பூவின் நுண்ணிய தாதுக்கள் ஈரமான முதுகில் உதிர்ந்து விழ,
மெல்லும் கதுப்புகளையுடையவாய்த் தன் கொட்டிலுக்குள் நுழையும்
குளிர்ந்த துறையினையுடைய ஊரனின் செறிந்த மாலையணிந்த மார்பினில்
மணக்கோலத்திலிருக்கும் புதிய பெண்களைச் சேர்க்க
ஆசையுடன் வந்த பாணன், தெருவில்
அண்மையில் ஈன்ற ஒரு தாய்ப்பசு தன்மீது பாய்ந்ததால் கலங்கிப்போய், யாழினைக் கீழே போட்டு,
எமது வீட்டுக்குள் புகுந்துவிட்டான், அதனைக் கண்டு
மனத்தில் தோன்றிய மிகுந்த மகிழ்ச்சியை மறைத்து, அவனை எதிர்கொண்டு
இந்த வீடு அல்ல , அதுவே உமது வீடு என்ற
என்னையும் தன்னையும் நோக்கி
மருண்ட மனத்தினனாய் (என்னைத்) தொழுதுநின்ற நிலையே!