அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 60 - பெரும் கடல் பரப்பில்
                
                                 வீட்டுக்காவல் உறுதி


பொன்னிக்கு வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. மாலை நேரம் நெருங்க நெருங்க அவளை ஒருவிதப் பதற்றம் 
தொத்திக்கொண்டது. அன்றைக்கு மாலை கடற்கரையில், ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் ஒரு படகின் 
மறைவில் முல்லையும் அவளின் காதலனும் சந்திப்பதாக ஏற்பாடு. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது 
அவர்களுக்குக் காவலாக, அங்கே கடற்கரையின் ஈர மணலில் தோழியருடன் மணல்வீடு கட்டி 
விளையாடுவதாகவும் ஏற்பாடு. அதற்குச் சில தோழியரையும் வரச்சொல்லியிருந்தாள். நேரம் ஆனதும் 
முல்லையின் வீட்டுக்குச் சென்று அவளையும், போகிறவழியில் மற்ற தோழியரையும் கூட்டிக்கொண்டு 
செல்லவேண்டும்.

“ஆத்தா, நான் முல்லை வீட்டுக்குப் போயி, அவளையும் கூட்டிக்கிட்டு கரைப்பக்கம் விளையாடிட்டு வர்ரேந்த்தா” 
என்று குரல் கொடுத்தாள் பொன்னி. 

“சித்தப் பொறுடீ! இன்னக்கி, கடலுக்குப்போன அப்பாரு வர்ர நாளு இல்லையா? பசியோட வருவாரு. சோறு 
ஆக்கிக்கிட்டு இருக்கேன். செத்த வடத்துல முடிஞ்சிரும். அதை எடுத்துட்டுப்போயி பசியோட வர்ர அப்பாருக்கு 
முதல்ல கொடுத்துட்டு அப்புறம் வெளையாடப்போ” என்று வீட்டுக்குள்ளிருந்து ஓங்கிக் குரல் கொடுத்தாள் 
பொன்னியின் தாய்.

ஆர்வத்துடன் அடுப்படிக்கே சென்றுவிட்டாள் பொன்னி. 

“அரிசி இன்னும் எவ்வளவு இருக்கு?” என்று பானையைத் திறந்து பார்த்தாள் அவள்.

“அரிசி இருக்குடி, ஆனா நெல்லுதான் தீந்து போச்சு”

“அப்படீன்னா, நாளக்கி, நானு கூடையில உப்பு எடுத்துக்கிட்டு அடுத்த ஊரப்பக்கம் போயி, நெல்லுக்கு மாத்திக் 
கொண்டாரேன். அப்பாருக்கு என்ன சமச்சு வச்சிருக்க?”

“வேற என்னத்த வைக்கிறது? நெல்லுச்சோறு அவருக்குப் பிடிக்கும். அயிர மீனுக் கொழம்பு வச்சிருக்கேன்” என்று 
குழம்புச் சட்டயைத் திறந்து காட்டினாள் பொன்னியின் தாய். வீடே கமகமத்தது. இழுத்து ஒரு மூச்சு விட்டு அதன் 
வாசனையை உள்ளுக்கு இழுத்த பொன்னி, “ஊரவே தூக்குதாத்தா” என்று பாராட்டினாள். சட்டுப்புட்டென்று 
அவற்றைத் தூக்குப்போணிகளில் எடுத்துவைத்தவள், கடைசியில் ஒரு கொழுத்த கருவாட்டுத்துண்டையும் 
பொரித்து வைத்தாள். 

“சரியா, அப்பா கரையிறங்குறப்ப அங்க பக்கத்துல இருக்கணும். கரையிறங்கின உடனே மத்த உதவி ஆளுக 
மீனுகள இறக்கி வைக்கிறப்ப, அப்பாரு அங்கயே ஓரமா ஒக்காந்து சாப்பிடுவாரு. அப்புறமா நீ முல்லையோட 
வெளையாடப் போகலாம்.” என்று சொல்லி அனைத்துப் பொருள்களையும் பொன்னியிடம் கொடுத்து அவளை 
அனுப்பிவைத்தாள் அவள் அன்னை.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு முல்லையின் வீட்டுக்குச் சென்றாள் பொன்னி. அங்கு ஆயத்தமாக இருந்த 
முல்லையை அழைத்துக்கொண்டாள். கடற்கரையை நோக்கி இருவரும் விரைந்தனர். போகிற வழியில் 
விளையாட்டுத் துணைக்குச் சில தோழியரையும் கூட்டிச் சென்றனர்.

கடற்கரையில் மீன்துறையில் கூட்டம் அதிகமாக இருந்தது. முதலில் பொன்னியின் தகப்பனாரின் படகு 
வந்துவிட்டதா என்று பார்க்கச் சென்றனர். அங்கே அவரின் படகு இன்னமும் வரவில்லை. அடுத்த படகு 
வருவதற்கு இன்னும் சில நாழிகைகள் ஆகும்போல் தெரிந்தது. எனவே, சாப்பாட்டு மூட்டையை அங்கிருந்த 
பொன்னிக்குத் தெரிந்த ஓர் உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு, முல்லையின் சந்திப்பிற்கான நடமாட்டம் 
இல்லாத பகுதிக்கு விரைந்தனர். அங்கே அவன் இன்னும் வரவில்லை. அங்கே ஓர் ஓட்டைப்படகு கரையில் 
சாய்ந்து கிடந்தது.

“ந்தா, பாரு, அவரு வந்ததும் அந்தப் படகு மறைவுல நீ பேசிக்கிட்டு இரு” என்று முல்லையிடம் கூறிவிட்டு, 
மற்ற தோழிகளிடம் “ந்தா பாருங்கடி, கொஞ்சம் தள்ளிப்போயி மணல்ல வீடுகட்டி விளையாடிக்கிட்டு இருங்கடி. 
நான் அப்பாரப் பாத்துட்டு ஓடியாந்திரேன்” என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக மீன் துறைக்கு 
விரைந்தாள் பொன்னி. அவள் அங்கு போய்ச் சேர்வதற்கும், அவளின் தந்தையின் படகு வந்து சேர்வதற்கும் 
சரியாக இருந்தது. படகை விட்டிறங்கி முதலில் கரைக்கு வந்த தன் தந்தையின் கைகளை ஓடிச்சென்று 
பிடித்துக்கொண்டாள் பொன்னி. சிரித்துக்கொண்டே அவளின் தலையைத் தடவிக்கொடுத்தார் அவள் தந்தை. 
”சோறு கொண்டாந்திருக்கேன்’ப்பா” என்றவள் ஓடிச்சென்று சாப்பாட்டு மூட்டையை வாங்கிவந்தாள். இருவரும் 
ஓர் ஒதுக்குப்புறமாகச் சென்று அமர்ந்தனர். சாப்பாட்டை எடுத்துவைத்து ஆசையுடன் தந்தைக்குப் பரிமாறினாள் 
அந்தச் செல்ல மகள். அவர் சாப்பிட்டு முடித்தவுடன் பெரிதாக ஏப்பம் விட்டார். “இப்ப என்னம்மா செய்யப்போற? 
நான் வீடுவர கொள்ள நேரம் ஆகுமே!” என்றார் தந்தை.

“நீ போகும்போது போய்க்கப்பா, நானு அந்தா அங்க போயி முல்லையோட வெளையாண்டுட்டு வர்ரேன்” என்று 
முல்லை இருக்கும் திக்கில் கையை நீட்டிக் காட்டினாள் பொன்னி. “சரி’ம்மா” என்று தன் படகை நோக்கி அவர் 
நடக்க ஆரம்பிக்க, முல்லை இருக்குமிடம் செல்லத் திரும்பிய பொன்னி திடுக்கிட்டாள். தொலைவில் முல்லையின்
தாய் ஒரு கூடையுடன் வந்துகொண்டிருந்தாள். ’மீன் வாங்க வருகிறாள் போல’ என்று எண்ணிய பொன்னி, 
அவளைப் பார்க்காதது போல முல்லை இருக்குமிடம் விரைந்தாள். அங்கே முல்லை இல்லை. “எங்கேடி முல்லை?”
என்று கேட்டவளை, ‘ஷ்ஷ்” என்று வாயில் விரல் வைத்து அடக்கினர் தோழிகள். அப்படியே அந்தப் படகுப்பக்கம் 
கையைக் காட்டினர். தான் இந்தப் பக்கம் வருவதைக் கவனித்திருந்தால் ஒருவேளை முல்லையின் தாய் அவளைத்
தேடி வந்தாலும் வரலாம் என்ற எண்ணத்தில், படகுக்கு இந்தப் பக்கம் சென்ற பொன்னி, மிகவும் மெதுவான 
குரலில், “முல்லை, ஒங்கம்மா மீனு வாங்க வந்திருக்காங்க, என்னயப் பாத்துட்டாங்க’ன்னு நெனய்க்கிறேன். 
ஒருவேள இந்தப் பக்கம் வந்தாலும் வரலாம். எதுக்கும் நீ இங்கிட்டு வா. அண்ணன் அங்கயே இருக்கட்டும்” என்று
கிசுகிசுத்தாள். சிறிது நேரத்தில் கலவரமான முகத்துடன் முல்லை வெளிப்பட்டாள். “ஒண்ணும் கவலப்படாத, 
நீபாட்டுக்கு எங்க கூட வெளையாடிக்கிட்டு இருக்கிற மாதிரி இரு” என்று கூறிய பொன்னி, அவளைத் தோழியர் 
கூட்டம் அருகே கூட்டிச் சென்றாள்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே முல்லையின் தாய் அங்கே வந்து நின்றாள். 

“ஆமா, எத்தன நேரம் இங்க மணல்மேட்டுல வெளையாடிக்கிட்டு இருப்பீக? ஊதக் காத்து வேற உய் உய்’னு 
அடிக்குது. ஒடம்பு என்னத்துக்கு ஆகும், வாடி முல்ல,  நாம போகலாம்” என்று கண்டிப்புடன் கூறினாள். 

“அம்மா, அம்மா, இன்னும் செத்த வடம்தான். நீங்க போங்க, நானே முல்லைய வீட்டுக்குக் கூட்டியாந்துறேன்” 
என்று கெஞ்சிய பொன்னியைப் பார்த்து, “சரி, சரி, சீக்கிரமா வீடு வந்து சேருங்க” என்று சொல்லிவிட்டுப் 
புறப்பட்டாள் முல்லையின் தாய்.

அவளின் உருவம் தொலைதூரத்தில் மறையும் வரை அவள் சென்ற திக்கையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த 
தோழியர் கூட்டம், அவள் தலை மறைந்த பின் ‘கொல்’லென்று சிரித்தது. 

“அப்பாடா, நான் பயந்தே போயிட்டேன்’டி” முல்லை ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். 

“எனக்குந்தான், ரொம்பப் பயமாப் போச்சு” என்று சொன்ன பொன்னி முல்லையின் கைகள் இரண்டையும் தூக்கிக் 
காட்டினாள். யாரோ அழுந்தப் பற்றியதால் வளையல்கள் கைகளில் அழுந்தி ஏற்படுத்திய தடம் அங்கே வளைவான
பள்ளங்களாக இருந்தது. 

“அண்ணே, செத்த இங்க வெளிய வாங்க, நாங்க மட்டுந்தான் இருக்கோம்” என்று உரக்கக் கூறினாள் பொன்னி.

அவன் தயக்கத்துடன் வெளியில் வந்து அவர்கள் எதிரில் நின்றான்.

முல்லையின் முன்னங்கைகளை அவனிடன் நீட்டிக் காட்டினாள் பொன்னி. “என்னதான் ரொம்ப நாள் கழிச்சுப் 
பாத்தாலும், இப்படியா, வளையல் தடம் பதியுறமாதிரி கையப் புடிச்சு அமுக்குவாங்க? இத மட்டும் அந்த அம்மா 
பாத்திருந்துச்சுன்னா, அவ்வளவுதான். சோழ மகாராசா, குடவாயில்’ன்கிற ஊருல கொள்ளச் சொத்துக்குக் காவல் 
வச்ச மாதிரி இந்த முல்லையையும் வீட்டோட காவல் வச்சுருவா!”

“அதுக்கு முன்ன இவளக் கட்டிக்கிட்டு கூட்டிப்போர வழியப் பாருங்க” என்று கூட்டத்தில் யாரோ ஒரு தோழி 
முணுமுணுக்க, அங்கே சிரிப்பலை எழுந்தது.

பாடல் - அகநானூறு - 60; திணை - நெய்தல்; பாடியவர் - குடவாயில் கீரத்தனார்

பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க
கொடும் தொழில் முகந்த செம் கோல் அம் வலை
நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளி சொரிந்து		5
கொழு மீன் தடியொடு குறு_மகள் கொடுக்கும்
திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ		10
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என
கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல்
கொற்ற சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே

அருஞ்சொற்பொருள் : 

சே இறா = சிவந்த இறால் மீன்; திமில் = படகு; நொடை = விற்றல், விலை; மூரல் = நெல் அரிசிச் சோறு; 
அயிலை = அயிரை மீன்; புளி = புளிக்குழம்பு; தடி = கருவாடு; ஒண் தொடி = ஒளிவிடும் (தங்க) வளையல்; 
ஞெமுக்கு = அழுத்து, press hard; ஊதை = வாடைக்காற்று; அடைகரை = மேடான கரை; கோதை = மாலை; 
ஆயம் = விளையாட்டுத் தோழியர்; வண்டல் = விளையாட்டு மணல்வீடு; தைஇ = செய்து;  
ஓரை = பெண்கள் விளையாட்டு; உயங்கு = வாடு; ஒளி = மேனி; கொன்னும் = காரணமின்றியும்; 
சிவப்போள் = கோபப்படுவோள், கடி = காவல்.

அடிநேர் உரை:

பெரிய கடற்பரப்பில் சிவந்த இறால் மீன் நடுக்கமுறும்படி
கொடிய தொழிலான (மீனை) முகக்கும் நேரான கோலையுடைய அழகிய வலையைக் கொண்ட
நீண்ட திமிலிலிருந்து மீன்பிடிக்கும் தொழிலில் நிலைத்த தந்தைக்கு
உப்பைவிற்றுக்கொண்ட நெல்லினின்றும் ஆக்கிய பதமான வெண்சோற்றில்
அயிரை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பைச் சொரிந்து
கொழுத்த மீனின் துண்டத்தோடே சிறுமி கொடுக்கும் இடமாகிய
திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டிநகரைப் போன்ற எமது
ஒளிவிடும் தோள்வளையை அமுக்கவேண்டாம்; 
ஊதற்காற்று குவித்த உயர்ந்த மணல் மேடாகிய கரையில்,
மாலையையுடைய தோழிகளுடனே மணல்வீடு கட்டி
விளையாடினும் குன்றும் உன் மேனி அழகு என்று,
காரணமின்றியே கோபிக்கும் அன்னை கண்டால், வெல்லும் வேலையுடைய
அரசாண்மை உள்ள சோழரின் குடவாயில் நகரில் வைத்த
பகை நாடுகள் தரும் செல்வத்தின் காவலைக் காட்டிலும், செறிந்த 
கடுமையான காவலில் வைத்துவிடுவாள் அறனில்லாத எம்முடைய தாய்.