அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணி ஒலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 64 - களையும் இடனால், பாக!
                
                                 பசுவின் மணி ஒலி கேட்டு மயங்கியவள்
அவன் ஒரு முத்து வணிகன். மதுரை மாநகரின் நாளங்காடியிலும், அல்லங்காடியிலும் கிடைக்கும் விலையுயர்ந்த முத்துக்களைத் தெரிவுசெய்து விலைக்கு வாங்கிப் பின்னர், உள்நாட்டில் இருக்கும் பெருநகரங்களில் இருக்கும் செல்வர்களுக்கும், சிறுவணிகர்க்கும் விற்பனை செய்பவன். இவ்வாறு வீட்டைவிட்டு அடிக்கடி வெளியே செல்வதால், வீட்டில் தனித்திருக்கும் இளம் மனைவியின் தனிமைத் துயரத்தைப் பற்றி அவன் மிகுந்த கவலை கொண்டவனாய் இருந்தாலும், பிழைப்புக்கு வழி வேண்டுமல்லவா? இவ்வாறு தன் வணிகம் தொடர்பாக வெளியூருக்குச் சென்றிருந்தவன் தன் வேலையை முடித்துக்கொண்டு ஆயத்தமாகக் காத்திருக்கும் தன் தேரில் ஏறுகிறான். தேரின் பாகன் குதிரையின் கடிவாளத்தைக் குதிரைக்குப் புரியும்படியாக இழுத்து குதிரையை ஓட்டத் தொடங்குகிறான். தன் வணிகத்துக்குத் துணையாகவும் காவலாகவும் தான் அழைத்து வந்த இளம் ஏவலர்கள், நெய் பூசிப் பளபளக்கும் கூர்மையான அகன்ற இலையையுடைய உறுதியான வேல் கம்புகளைப் பிடித்தவாறு தேருடன் வேகமாக ஓடிவருகிறார்கள். அவர்களின் ஓட்டத்திற்கு இசைந்தவாறு தேரும் ஓடத்தொடங்குகிறது. அன்றைக்கென்னவோ, அவனுக்குத் தன் மனைவியின் நினைப்பு அதிகமாக எழுந்து அவனை அலைக்கழித்தது. குதிரையோ வேகமாகப் பறக்கும் பறவையைப் போல் இந்த உலகத்தையே ஒரே தாவலில் தாவிக் கடந்துசெல்லும் திறம் படைத்தது. கூட ஓடிவரும் வேல் இளைஞருடன் ஈடுகொடுத்துப் போக வேண்டும் என்பதற்காகப் பாகன் தேரை அதன் முழு வேகத்தில் இயக்காமல் இருப்பதைக் கண்ட அவன் சற்றுப் பொறுமை இழந்தான். “இந்தா பாருப்பா, அவங்க வரும்போது வந்து சேரட்டும். நீ குதிரையை எவ்வளவு வேகமா ஓட்ட முடியுமோ அவ்வளவு வேகமா ஓட்டு” தன் தலைவனின் பொறுமையின்மையை ஒருவாறு உணர்ந்துகொண்ட பாகன், ஒரு பொருள் பொதிந்த பார்வையை அவன் மேல் செலுத்திவிட்டு, குதிரையின் கடிவாளத்தை இழுத்துச் சுண்டிவிட்டான். அவ்வளவுதான், குதிரை அந்தப் பெரிய பாதையில் காற்றாய்ப் பறக்க ஆரம்பித்தது. மொட்டு விரிந்த செம்முல்லைப் பூக்கள் வழியெங்கும் மணம் பரப்பின. எங்கும் செக்கச்செவேல் என்று காணப்பட்ட அந்த முல்லை நிலப் பரப்பில் அப்பொழுதுதான் மழை பெய்து முடிந்திருந்ததால், நீர் பரந்த இடமெல்லாம் வரிவரியாகக் காணப்பட்டது. வண்டிகளும் தேர்களும் சென்றதால் ஏற்பட்ட தண்டவாளம் போன்ற இரட்டைத் தடத்தில் ஈரமாக இருந்த குறுமணலைக் காட்டுக்கோழிகள் புழுப்பூச்சிகளுக்காகக் கிளறிக்கொண்டிருந்தன. திடீரென்று தேர் வேகமெடுத்ததால் தாம் நினைத்ததற்கு முன்பாகவே தேர் நெருங்கிவிட்டதால் அக் கோழிகள் சிதறிப் பரந்தன. அப்பொழுது ஒரு பசுக்கூட்டம் பகலெல்லாம் மேய்ந்துவிட்டு, மாலையில் வீடு நோக்கித் திரும்பிச் சென்றுகொண்டிருந்தது. ஈரமான பாம்புப் புற்றின் மேல் பகுதியைக் குத்திப் புரட்டிய கொம்புகளில் மண் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு காளைமாடு, தான் விரும்பும் ஒரு பசுமாட்டைப் பாசமுடன் உரசியவாறு சென்றுகொண்டிருந்தது. அதனை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவனைக் கடைக்கண்ணால் பார்த்துப் புன்முறுவல் பூத்துக்கொண்டான் அந்தத் தேர்ப்பாகன். “இதுக்கு முன்னால போன மாட்டுக்கூட்டம் வீடு போய்ச் சேர்ந்திருக்கும் இல்லையா?” தலைவன் தனக்குள் பேசுவதுபோல் சற்று உரக்கவே கூறினான். “ஆமாங்கய்யா, அது நெறையாப் போய்க்கிட்டே இருக்கும்” “போய்ச்சேந்த கூட்டத்தப் பாத்ததும், அங்க இருக்கிற கன்னுக்குட்டிக்க ‘மா மா’ன்னு ஆசயோட கத்தும் இல்லயா?” பாகன் ஒன்றும் பேசவில்லை. “அந்தக் கன்னுக்குட்டிக சத்தத்தையும், அந்த மாடுக கழுத்துல இருக்கிற மணி எல்லாம் ‘டொய்ங், டொய்ங்’ன்னு அடிக்கிற சத்தத்தையும் பொழுது சாயுற நேரத்துல கேட்டுத் தனியா இருக்குற அவள் மனசுக்குள்ள பொலம்பிக்கிட்டு இருக்குற நிலை இன்னும் கொஞ்ச நேரத்துல மாறிப்போகும் - நம்ம இன்னும் கொஞ்சம் வேகமாப் போனால்” தேர் இன்னும் வேகமெடுத்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? பாடல் - அகநானூறு -64 : திணை - முல்லை : பாடியவர் - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார் களையும் இடனால் பாக உளை அணி உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி_மா வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் 5 வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல கடு நீர் வரித்த செம் நில மருங்கின் விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி 10 மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ ஊர்_வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை 15 புலம்பு கொள் மாலை கேள்-தொறும் கலங்கினள் உறைவோள் கையறு நிலையே அருஞ்சொற்பொருள்: உளை = பிடரி மயிர்: வள்பு = கடிவாளம்; தளவு = செம்முல்லை; நோன் காழ் = வலிமையான தண்டு; பரி = ஓட்டம்; வாரணம் = காட்டுக்கோழி; சிதர் = கிளறு, சிதறு; கோட்ட = கொம்புகளையுடைய; ஏறு = காளைமாடு; மடநாகு = இளம்பசு; மன்று = ஊர்ப்பொதுவிடம்; அடிநேர் உரை களைகின்ற காலம் இதுவே! பாகனே! தலையாட்டம் அணிந்த, உலகத்தையே கடந்து செல்வது போன்ற, பறவையின் தன்மை கொண்ட குதிரையின் செம்மையாக அமைந்த அழகினையுடைய கடிவாளத்தை நீ கையிலெடுக்க, செம்முல்லை மொட்டுகள் தம் கட்டுகள் அவிழ்ந்த குளிர்ந்த பதத்திலுள்ள பெருவழியில் அழகாக ஒளிறும் அகன்ற இலையையும், எண்ணெய் நிறையப் பூசிய வலிய தண்டையும் உடைய வெற்றி வேலை ஏந்திய இளைஞர்கள் விரைந்த ஓட்டத்தில் மிகுந்த வேகம் கொள்ள, பயணத்தை நாம் மேற்கொள்வோமாயின், மழைபெய்த விரைந்து செல்லும் நீர் வரிவரியாகச் செய்த செம்மண் நிலத்துப் பக்கத்தில் தேர் விடும் தடத்திலுள்ள ஈர மணலைக் காட்டுக்கோழிகள் காலால் கிளற பாம்புகள் தங்கும் புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தைக் குத்திக் கொம்பினில் மண்ணைக் கொண்ட தலைமைப் பண்புள்ள காளை தன்னோடு உடனிருப்பதை விரும்பிய இளம் பசுவைத் தழுவிக்கொண்டு ஊருக்குத் திரும்பிவரும் பொழுதில், எல்லாம் ஒன்று சேர்ந்து கன்றுகளை அழைக்கும் குரலுடையவாய்த் தொழுவத்துக்குள் நிறையப் புகும் பசுக்கள் அணிந்துள்ள தெளிவான மணிகளின் அழகாக எழும்பும் இனிய ஒலியை தனிமையைக் கொண்டுள்ள மாலையில் கேட்கும்போதெல்லாம் கலங்கியவளாய் இருக்கும் நம் தலைவியின் செயலற்ற நிலையை