அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 54 - விருந்தின் மன்னர்
                
                                 முகிழ் நிலா


வந்த காரியம் இவ்வளவு சீக்கிரமாகவும் எளிதாகவும் முடிந்துவிடும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மிகுந்த 
சீற்றத்துடன்தான் வேந்தன் படையெடுத்து வந்தான். புதிதாய்த் தோன்றிய சில சிற்றரசர்கள் வேந்தனின் ஆளுகையை 
எதிர்த்துக் குரல் எழுப்ப, பெரும்படையுடன் அந்தப் புற்றீசல்களைப் புறமுதுகிடவைக்கப் புறப்பட்டுவந்தான் வேந்தன். 
அந்தப் பெரும்படையின் பேராற்றலுக்கு எதிராற்றல் காட்டமுடியாமல் இளைத்துப்போன அந்தப் புதிய அரசர்கள் தம் 
செல்வத்தையெல்லாம் வேந்தன் முன் கொட்டி வேந்தனின் சீற்றத்தைத் தணித்தனர். வேந்தனும் போரை முடித்து 
நாடுதிரும்ப உத்தரவிட்டான். எல்லாருக்கும் மிக்க மகிழ்ச்சி. அதிலும் தேர்ப்படையின் ஒரு தளபதியாகிய நம் 
தலைவனுக்கோ பேருவகை. இளம்குழந்தையுடன் தனித்திருக்கும் தன் அன்பு மனைவியைக் காண முதல் ஆளாய்ப் 
புறப்பட்டுவிட்டான்.

கார்கால மழையும் தொடங்கிச் ‘சடசட’-வென்று கொட்டித் தீர்த்தது. மாலை ஆகிவிட்டது. பிறைநிலா வானில் 
தோன்றும் முன்னிரவுக் காலத்திற்குள் வீடுபோய்ச் சேரவெண்டும் என்ற ஆவலில் தன் தேர்ப்பாகனை நோக்கி 
தேரை விரைவாக ஓட்டச்சொன்னான். செக்கச் செவேலென்ற செம்மெண் நிலத்தில் சேறும் சகதியுமாய்க் கிடந்த 
பாதையில் தேர்ச் சக்கரம் ஆழப்புதைந்தாலும், குதிரைகளை விரைந்து செலுத்தச் சொன்னான் அவன். 

வண்டியை மறித்து ஒரு மாட்டுக்கூட்டம் போய்க்கொண்டிருந்தது. அதிலிருந்த பசுக்கள் மடி நிறையப் 
பாலேந்தியவண்ணம் வீட்டில் காத்துக்கிடக்கும் கன்றுகளை எண்ணி வேகமாய் நடைபோட்டுக்கொண்டிருந்தன. 
இருப்பினும் நேரமாகிவிட்டதாலும், மழைவேறு பெய்துகொண்டிருந்ததாலும் அவை பொறுமையிழந்து கழுத்துப் 
பட்டையில் கட்டியிருந்த மணிகள் அலற, நாலுகால் பாய்ச்சலில் ஓடத்தொடங்கின. மடித்துக்கட்டிய வேட்டியில் 
மடிநிறைய தின்பொருள்களைச் சுருட்டிவைத்திருந்த கோவலர்கள் குழல்போன்ற கொன்றைக் காயை வாயில் 
வைத்து ஊதியவண்ணம் கையிலிருந்த கோலைக்கொண்டு மாடுகளைப் பின்னின்று ஓட்டியவாறு மாடுகளின் 
வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் மெதுவாக வந்துகொண்டிருந்தனர். வழியிலிருந்த ஒரு சிற்றூர் வரை ஓடிய 
அந்தப் பசுக்கள், ஊர் வந்ததும் தாமாகவே தத்தம் வீடுகளுக்குள் புகுந்து கன்றுகளுக்குப் பாலூட்ட முனைந்தன.
 
மாடுகளினால் தேரின் வேகம் குறைய, தலைவன் எரிச்சல் அடைவானோ என்ற எண்ணத்தில் பாகன் கூறினான்,
“சே, இந்த மாட்டுக்கூட்டம் இல்லை’னா இந்நேரம் கொள்ளத் தூரம் போயிருக்கலாம்”

தலைவனுக்கு உண்மையில் எரிச்சல் இல்லை. கன்றுகளைப் பார்க்க அந்தப் பசுக்கள் படும் பாட்டைப் பார்த்து, 
மனைவியையும் குழந்தையையும் பார்க்கத் தன் மனம் தவியாய்த்தவிப்பதோடு ஒப்பிட்டுச் சிரித்துக்கொண்டான். 
குடும்பப் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தான் சொந்தமா? அவன் கூறினான்,
“பரவாயில்ல, மாடுகள்’லாம் அதுஅது வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துருச்சு. மாலையும் நெருங்கிருச்சு. இன்னும் 
கொஞ்சம் நாழிகைக்குள்ள பிறைநிலா எழும்பிரும். அந்த வெளிச்சத்தில தாமதிக்காம வீடுபோய்ச்சேரணும்”

அப்போது ஒரு பெரிய ஊர் வழியில் வந்தது.

“ஏனப்பா இது எந்த ஊர்?”

“ஐயா இது சிறுகுடி”

“அதென்ன அங்கே ஒரு தோட்டத்துல நெறயப்பேர் கூடியிருக்காங்க?”

“ஐயா, அது பண்ணன் என்கிறவரின் தோட்டம். அங்கே யார் வேண்டுமானாலும் போய் எவ்வளவு வேண்டுமானாலும்
தின்னுக்கலாம்”

“தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் போல!”

“சரியாய்ச் சொன்னீங்கய்யா. அங்க ஒரு நெல்லி மரம் இருக்கும். அந்தக் காயத் தின்னு தண்ணி குடிச்சா என்னா 
இனிப்பு இனிக்கும்’கிறங்க!”

தலைவன் மெதுவாகத் தனக்குள் கூறிக்கொண்டான்

‘என் மனைவி தன் பிள்ளைக்குப் பாலூட்ட நிலாவைக் காட்டிக் கெஞ்சும் குரலில் கொஞ்சிப் பேசும் பேச்சைவிடவா 
இது இனிப்பு?’

“ஐயா என்ன சொன்னீங்க?”

“ஒண்ணுமில்ல”

“இல்ல ஏதோ பேச்சு’ன்னு கேட்டமாதிரி இருந்துச்சு”

“அதொண்ணுமில்ல, என் குழந்தைக்கு மூணு மாசம் இருக்கும். கெண்டியில பால் கொடுத்தாத் தட்டித்தட்டி 
விட்டுரும். இடுப்புல குழந்தைய வச்சுக்கிட்டு, அங்க தெரியுதுபாரு அந்தச் சின்ன நிலாவ விரலசச்சுக் கூப்பிட்டு, 
‘வர்ரயா நிலா! பாப்பா பால ஒனக்குத் தருவேன்’னு பொய்யாச் சொல்லிச்சொல்லிப் பாலூட்டுவா, அதச் 
சொன்னேன்”

பாடல் : அகநானூறு 54 : முல்லைத்தினை :
ஆசிரியர் : மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்

வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப
வேந்தனும் வெம் பகை தணிந்தனன், தீம் பெயல்
காரும் ஆர்கலி தலையின்று, தேரும்
ஓவத்து அன்ன கோபச் செந்நிலம்
வள் வாய் ஆழி உள் உறுபு உருள
கடவுக! காண்குவம் பாக! மதவு நடை
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக்
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர்
கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க
மனைமனைப் படரும் நனை நகும் மாலைத்
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலை
புன் காழ் நெல்லிப் பைம் காய் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள்!
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால் என
விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே

அருஞ்சொற் பொருள்: 

விருந்தின் மன்னர் = புதிய அரசர்; அருங்கலம் = அரிய அணிகலன்கள்; தெறுப்ப = கொண்டுவந்து குவிப்ப; 
தீம் பெயல் = இனிய மழை; ஆர்கலி = பெருஞ்சத்தம்; ஓவத்தன்ன = ஓவியம் போன்ற; 
கோப = இந்திரகோபப் பூச்சியைப் போன்ற சிவப்பு நிறமான; வள்வாய் = உறுதி வாய்ந்த; ஆழி = சக்கரம்; 
கடவுக = விரைந்து செலுத்துக; மதவு நடை = செருக்கிய நடை; தாம்பு அசை = கயிற்றால் கட்டப்பட்ட; 
சுரை = பசுவின் மடி; பரி = ஓட்டம்; மிடற்ற = கழுத்திலுடைய; நனை நகும் = மொட்டுகள் சிரிக்கும் (மலரும்); 
தீவியம் = இனிய சொல்; மிழற்றி = மென்மையாகப் பேசி; மூவாத் திங்கள் = மூப்பு அடையாத (இளைய) சந்திரன்; 

அடிநேர் உரை:

புதிய அரசர்கள் அரிய அணிகலன்களைக் குவிப்ப
(நம்)வேந்தனும் கொடிய பகைமை தீர்ந்தனன்; இனிமையான மழையைப் பெய்யும்
மேகமும் பேரொலி எழுப்புகிறது; தேரை
ஓவியம் போன்ற இந்திரகோபம் போன்று சிவந்த செம்மண் நிலத்தில்
உறுதியான சக்கரங்கள் பதிந்து உருண்டுவர,
விரைந்து செலுத்துக! காண்போம் பாகனே! செருக்கான நடையுடன்
கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க
ஒலிக்கும் மணிகளைக் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்
வளைந்த (வேட்டி)மடிப்பினையுடையர், கோலைக் கையிலே கொண்ட இடையர்,
கொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் நடந்துவர,
வீடுகள்தோறும் செல்லும் மொட்டுகள் மலரும் மாலை நேரத்தில்;
தனக்கென வாழாமல் பிறர்க்கெல்லாம் உரியவனான
பண்ணனின் சிறுகுடித் தோட்டத்திலுள்ள, நுண்ணிய இலைகளையும்
புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
வளரும் நிலவினால் விளங்கும் பிறைமதியே!
(கழுத்தில்)பொன்சங்கிலி அணிந்த என் மகன் இருப்பிடம் தெரிந்து
வந்தால் (உனக்குப்) பால் தருவேன் என்று
ஓரக்கண்ணால் பார்த்தவளாய் விரலால் (நிலவை) மீண்டும் மீண்டும் அழைத்து,
தேமல் படர்ந்த அல்குலையுடைய என் காதலி,
புதல்வனிடம் பொய்யாகக் கூறும் பூங்குடியின் நிலையை(காண்போம் பாகனே)