அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 53 - அறியாய் வாழி, தோழி!
                
                                 பொருளே காதலர் காதல்


வயக்காட்டுப் பக்கம் புல்லறுக்கச் சென்றிருந்த பொன்னி, அவசரம் அவசரமாக அறுத்தவரைக்கும் போதுமென்று 
அறுத்ததை அள்ளிக் கட்டித் தலையில் எடுத்துக்கொண்டு வேகமாக வீடு திரும்பினாள். கூலி வேலைக்குச் 
சென்றுகொண்டிருந்த கண்ணம்மா – பொன்னியின் உயிர்த்தோழியான முல்லையின் எதிர்வீட்டுக்காரி – 
காற்றுவாக்கில் சொல்லிச் சென்ற செய்திதான் முல்லையைப் பாதி வேலையில் வீடுதிரும்ப வைத்தது. 
“என்னாடீ, நீபாட்டுக்கு இங்கனக்குள்ள புல்லறுத்துக்கிட்டு இருக்க, அங்க ஒஞ்சோட்டுக்காரி கண்ணக் கசக்கிக்கிட்டு 
குப்புறப்படுத்துக்கெடக்கா”, போகிறபோக்கில் கண்ணம்மா உதிர்த்துவிட்டுப்போன செய்தி இதுதான். சோட்டுக்காரி 
என்பது முல்லை. “முல்லைக்கு என்ன ஆச்சு” எனப் பதைபதைத்தவாறே வீட்டுக்கு வந்த பொன்னி, புல்கட்டைப் 
போட்டுவிட்டு, முந்தானையை ஒரு உதறு உதறி, முகத்தை அழுந்தத்துடைத்துவிட்டுத் தோளில் போட்டுக்கொண்டே 
முல்லையின் வீட்டுக்கு விரைந்தாள். முல்லையின் வீடு ‘பப்பரப்பா’ என்று திறந்துகிடந்தது. வீட்டுக்குள் நுழைந்து 
கட்டிலில் குப்புறப்படுத்துக்கிடந்த முல்லையைத் திருப்பினாள் பொன்னி. கண்ணெல்லாம் சிவந்துபோய், மார்புச் 
சேலையெல்லாம் தொப்பல் தொப்பலாக நனைந்திருக்க, முல்லை பொன்னியைக் கட்டிக்கொண்டாள். 

“என்னடீ ஆச்சு? அண்ணன் என்னமும் வஞ்சுச்சா?” விசாரித்தாள் பொன்னி.

அழுகையை நிறுத்திய முல்லை, “வஞ்சாலும் பரவாயில்லையே, ‘போறேன் போறேன்’னு சொல்லிக்கிருந்த மனுசன் 
இன்னக்கிப் போயேபுட்டாரு” என்று முல்லை மீண்டும் கேவினாள்.

“ஏன்டீ, நீ அம்புட்டுச் சொல்லியுமா?”

“சொன்னதக் கேட்டாத்தான அந்த மனுசன்”

சற்றுநேரம் அமைதிகாத்தாள் பொன்னி.

“ந்தா பாரு, அண்ணன் பக்கமும் கொஞ்சம் யோசிச்சுப் பாருடீ, மனுசனுக்குக் கையில கொஞ்சம் காசு வேணாமா?”

“காச வச்சு என்னடி பண்ண? இங்க என்ன, வெந்த சோத்துக்கும் விதியத்துப்போயா இருக்கோம்?”

“சோத்துக்கும் சொகத்துக்கும் கொறயில்லதான். ஆனா, ‘இல்லே’-ன்னு ஒருத்தன் கையேந்தி நிக்கயில 
இருந்தாத்தானடி எடுத்துக்கொடுக்கமுடியும்?”

“அதுக்கு? ஏதோ இங்க அங்க’ன்னு அண்ட அசலுக்குப் போயி சம்பாரிக்கக் கூடாதா? கொள்ளத் தூரமாம்’டி.”

“வீட்ட விட்டுப் போயிட்டா பக்கம் தூரம்’னு பாக்கவா முடியும்? நெறையக் காசு கெடைக்கிற எடமாப் பாத்துத்தான் 
போவாங்க”

“போற வழியெல்லாம் ஒரே கட்டாந்தரையாம். பாளம் பாளமா தரயெல்லாம் வெடிச்சுக்கெடக்குமாம். அது 
இருக்குறதுகூடத் தெரியாம முருங்கப் பூவு மூடிக்கெடக்குமாம்”

“பாத்தியா, இப்ப வெடிச்சுகெடக்குற ஒம் மனசு நெறஞ்ச மாதிரி அண்ணன் கைநெறயக் காசோடத் திரும்பிவருவாரு”

“இவ யாருடீ, நானென்னத்தச் சொல்றேன், நீயென்னதச் சொல்றவ. காசுமேல ஆசப்பட்டுக் கட்டுனவளயே மறந்துட்டு 
மனுசன் போயிட்டாரு’ன்னு சொல்ல வந்தா?”

“இல்லடீ, அண்ணன் காசுமேல ஆசப்பட்டுத்தான் போச்சு’ன்னு மட்டும் சொல்லாத. ஒம் மேல அவருக்குக் கொள்ளப் 
பிரியம்’டீ”

“போடி அறிவுகெட்டவளே, ஒங்கண்ணன நீதான் மெச்சிக்கணும். அதுமட்டும் இல்லடீ, அங்க களவாணிப்பயலுக 
போற வர்ர ஆளுகள அம்புவிட்டே கொன்னுப் பொதச்சுப்புடுவாங்களாம். அது மட்டுமில்ல, இது இன்னாரு’ன்னு 
எழுதிக் கல்லையும் நட்டுவச்சுருவாங்களாம். செத்த பொணங்கூடக் கெடைக்கிலயே’ன்னு செந்நாயி 
ஆணும்பெண்ணுமா அந்தக் கல்லு நெழல்’ல படுத்துக் கெடக்குமாம்”.

 “பாத்தியா, காட்டுல இருக்கிற நாயிகூட ஒண்ணாத் தூங்குது. அண்ணன் வந்த பெறகு நீயும் சொகமா 
இருக்கப்போறடி”

“அதெல்லாம் சரி, இல்லேன்னு ஒருத்தன் வந்தா, என்கிட்டயும் இல்லேன்னு சொல்லவேண்டியதுதான.”

“அப்படிச் சொல்ல அண்ணனப் போல ஆளுகளுக்கு மனசு வராதுடீ. அந்த நெலம வந்துறப்புடாது’ன்னு அவரு மனசு 
கெடந்து அடிச்சிக்கிட்டதனாலதான் அவரு பொருளு தேடப் பொறப்பட்டுப் போயிருக்காரு”

“ஆரம்பிசுட்டியா ஒங்கண்ணன் புராணத்த, காசாச புடிச்ச மனுசன் கட்டுனவ கண்ணு கலங்கிறதப் பாத்த பெறகும் 
மனசக் கல்லாக்கிக்கிட்டுப் போயிட்டாரு. அவருக்கு எம்மேலதான் ஆச’ன்னு இன்னமும் சொல்லிக்கிட்டிருக்கா 
இந்த அறிவுகெட்டச் சிறுக்கி”

அகநானூறு 53 - பாலை - சீத்தலை சாத்தனார்

அறியாய் வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரி
கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடும் கால் முருங்கை வெண் பூ தாஅய்,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும்
அரும் சுர கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்
அருளே காதலர் என்றி நீயே

அருஞ்சொற்பொருள்

திகிரி = ஞாயிறு; விடுவாய் = வெடிப்புகள்; தாஅய் = பரவிகிடந்து; உழிஞ்சில் = வாகைமரம்; நொள்ளை = நத்தை; 
அரை = மரத்தின் நடுப்பகுதி; இயவு = காடு; விழுத்தொடை = குறிதப்பாமல் அம்பு தொடுக்கும் ஆற்றல்; 
வதியும் = தங்கியிருக்கும்; கவலை = பிரிந்துசெல்லும் வழிகள்; நீந்தி = கடந்துசென்று; கரத்தல் = மறைத்தல்;

அடிநேர் உரை

நீ அறியமாட்டாய் தோழி, நீ வாழ்க! இருள் நீங்க
வானமெங்கும் ஒளிரும்படியாக, விரைந்து செல்லும் சூரியனின்
கடுமையான கதிர்கள் பொசுக்கியதால் ஏற்பட்ட பிளவுகள் நிறையும்படியாக
நீண்ட அடிமரத்தைக் கொண்ட முருங்கையின் வெள்ளைப் பூக்கள் பரவ,
தண்ணீர் அற்றுப்போனதால் வறண்டுபோன கடக்கமுடியாத நீண்ட வெளியில்,
கூரிய பற்களையுடைய செந்நாய் பசியால் வருந்தும் தன் பெட்டையோடு
கள்ளி மரங்கள் நிறைந்த கட்டாந்தரை நிலத்தில், வாகை மரத்தினை,
மெலிந்துபோனதும் சுரிந்த மூக்கினையுடையதுமான சிறு நத்தைகள்
பொரித்த அரையை உடையது போல மொய்த்துக்கிடக்க, அந்த ஆளில்லாக் காட்டில்
இழுத்துக்கட்டிய வில்லுடைய மறவர்கள் அம்பெய்ததால் இறந்துபோனவரின்
பெயர் பொறித்த நடுகல்லின் நிழலில் (அந்தச் செந்நாய்கள்) தங்கியிருக்கும்
கடுமையான வறண்ட நிலத்தின் பாதைகளைக் கடந்து சென்று, என்றும்
இல்லையென்று வருவோருக்கு இல்லையென்று கூறித் தம் நிலையை மறைப்பதை
செய்யமாட்டாத நெஞ்சம் வற்புறுத்த(சென்றுவிட்டதால்), நம்மைக் காட்டிலும்
பொருளே காதலரின் விருப்பம்,
(நீயோ நம் மீது) காதலர் அருள்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறாயே!