அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 47 - அழிவு இல் உள்ளம்
                
                                 நல்லா இருப்படா, சாமி!


கோழி கூவின சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள் முல்லை. அவளது தோளில் தலையைச் சாய்த்துப்
படுத்துக்கிடந்த கணவனின் உச்சந்தலையைக் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தாள். அவள் கண்கள் கலங்கின. இன்னும் 
சிறிது நேரம்தான். அவன் கிளம்பிவிடுவான். இதோ இன்னும் பத்து நாள், ஐந்து நாள், இரண்டு நாள், நாளை காலை 
என்று நினைத்துத் தள்ளிக்கொண்டே வந்த காலம் இப்போது வாசலில் வந்து நிற்கிறது. ‘போகத்தான் வேண்டுமா?’ 
என்றெல்லாம் நீண்ட நேரம் விவாதித்து, அவளின் முழுச் சம்மதத்துடன் கிளம்புவதற்குரிய எல்லா ஆயத்தங்களும் 
செய்தாகிவிட்டது. ‘பல பல’-வென்று விடியும் நேரத்தில் கிளம்பினால்தான் இராத்தங்க இடையில் இருக்கும் 
சத்திரத்துக்குப் போய்ச்சேர முடியும். எனவே முதல்நாள் இரவிலேயே துணிமணிகள், இன்னும் வேண்டிய 
பொருள்களையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டான். அவள்கூட இரவே புளிக்காய்ச்சல் செய்து சோறும் ஆக்கிப் 
பிசைந்து வைத்துவிட்டாள். பலகணிக்கு வெளியே இருண்டுகிடந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளுக்கத் 
தொடங்கியது. அவள் விட்ட பெருமூச்சினால் ஏறி இறங்கிய மார்பின் அசைவால் அவன் விழித்துவிட்டான்.

“என்ன முல்லை, விடிஞ்சிருச்சா?” என்றவன் ‘விசுக்’-கென்று எழுந்தான். ‘கடகட’-வென்று கொல்லைப்பக்கம் 
சென்று காலைக்கடன் முடித்து வந்து பல்துளக்கி, குளித்து, ஆடை மாற்றி, தாழ்வாரத்தில் சம்மணம் போட்டு 
அமர்ந்தான். கும்பாவில் பழைய சோறும், சிறுதட்டில் வாடூனும் (பொரித்த உப்புக்கண்டம்) எடுத்துவைத்தாள். அவன் 
வாடூனைக் கடிக்கும்போது மட்டும் எழும் ‘கடுக்-முடுக்’-ஒலியைத் தவிர வேறு ஓசைகள் இன்றி எல்லாமே 
இயந்திரகதியில் பேச்சுவார்த்தை இன்றி நடந்துகொண்டிருந்தன. இருவர் மனமும் கனத்துக்கிடந்ததால் யார் 
வாயைத் திறந்தாலும் அழுகை பொத்துக்கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சம் மேலோங்கி இருந்தது.

ஆயிற்று, இனிக் கிளம்பவேண்டியதுதான். 

“வர்ரேம்மா” என்றவனின் முகத்தைப் பார்க்கத் துணிவு இன்றி, தலையைக் கவிழ்த்தவண்ணம் “உம்” என்றாள் 
முல்லை. அவள் நாடியைப் பிடித்து மெதுவாக முகத்தை நிமிர்த்தினான். அவள் கண்களினின்றும் கண்ணீர் 
‘பொலபொல’-வென்று கொட்டியது. “போகும்போது அழுதா, எனக்கு அங்க நெலகொள்ளாது’ம்மா!” என்றான். 
“தோ, பாரு, அங்க வேல முடிஞ்சதும் சிட்டாப் பறந்து வந்துருவேன். கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே வழியனுப்பு’ம்மா” 
என்று கெஞ்சினான் அவன். அவசரமாக முந்தானையை இழுத்துக் கண்களைத் துடைத்துக்கொண்ட முல்லை, 
வலிய வரவழைத்துக்கொண்ட முறுவலோடு தலையை ஆட்டினாள். அவன் கிளம்பிவிட்டான்.

மேற்கு நோக்கி நெடுக நடந்தவன் எதிரில் இருந்த நீண்டுயர்ந்த மலையில் ‘மளமள’-வென்று ஏறத் தொடங்கினான்.
பொழுதுபோவதற்குள் மலையைக் கடந்து அந்தப் பக்கம் அடிவாரத்தில் இருக்கும் சத்திரத்தை அடைந்துவிட 
வேண்டும். உச்சிப்பொழுதில் ஓர் ஓடையருகே அமர்ந்து மதிய உணவை அருந்தி, சிறிது ஓய்வுக்குப்பின் மலையைக் 
கடந்து, சரிவில் ‘சர சர’-வென்று இறங்கத் தொடங்கினான். எங்கு பார்த்தாலும் அடர்ந்த மூங்கில் புதர்கள். 
அவற்றுக்கு அடியில் உதிர்ந்து காய்ந்து கிடந்த சருகுகளும் செத்தைகளும் பம்பிக்கிடந்தன. அண்ணாந்து பார்த்தால் 
அழகிய தழைத்த தலையுடன் மூங்கில்கள் காற்றில் அலங்கிக்கொண்டிருந்தன. திடீரென்று காற்று சுழித்து அடிக்கத் 
தொடங்கியது. அடர்ந்த மூங்கிற் புதர்களுக்குள் நுழைந்து செல்லமுடியாத கடுங்காற்று மூங்கில்களுக்குக் குறுக்காய் 
எழுந்து, அந்த மூங்கிற் கழைகளைப் பேயாய் ஆட்டுவித்தது. குருகுகள் நரலுவதுபோல் கரகரத்த ஒலியில் மூங்கில் 
கழைகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டு ‘கிருட், கிருட்’-என்று ஓசை எழுப்பின. அதன் விளைவு என்னவென்று 
அவனுக்குத் தெரியும். இந்த உரசல்களால் வெப்பம் உண்டாகித் தீப்பொறி கிளம்பக்கூடும். அவன் வேகமாக நடக்கத் 
தொடங்கினான். இருப்பினும் காரியம் மிஞ்சிவிட்டது. மூங்கில்களின் உராய்வினால் எங்கேயோ கிளம்பித் தெறித்த 
ஓர் அக்கினிக் குஞ்சு காய்ந்த சருகுகளின் மேல் விழ,, காற்றின் வேகத்தால் மளமளவென்று நெருப்பு 
பற்றிக்கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த நெருப்பு பின்னர் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அங்கங்கே 
மான் கூட்டங்கள் அசந்துபோய் நின்றுகொண்டு நெருப்பையே வெறித்து நோக்கிக்கொண்டிருந்தன. அக்கம் 
பக்கமெல்லாம் கொடிவிட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பினின்றும் தப்பிக்க எங்காவது பள்ளங்களோ, பிளவுகளோ, 
குகைகளோ இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஆனால் எங்குமே அனல் சூழ்ந்துகொண்டது. காய்ந்த 
சருகுகளும் கட்டைகளும் எரிவதனால் ‘சடசட’-வென்ற சத்தம் காட்டையே நிறைத்தது. அதோடு சேர்ந்து, பச்சை 
மூங்கிலும் பற்றிக்கொண்டு எரிய, அதன் கணுக்கள் ‘படார் படார்’ என்று வெடித்த ஓசையும் பெரிதாய் எழுந்தது. 
அதுவரை ஒன்றும் புரியாமல் காதுகளை உயர்த்திக்கொண்டு மிரண்டுபோய்ப் பார்த்துக்கொண்டிருந்த கூட்டமான 
மான்கள் வெடிச் சத்தத்தைக் கேட்டு வெருண்டு சிதறி ஓட ஆரம்பித்தன. ஒரு போர்க்களம் போல் காட்சியளித்த 
அந்தக் காட்டுப் பாதையில் அவன் கண்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தான்.

நல்ல வேளை, மலையின் பக்கம் சரிவாக இருந்ததாலும், அவன் சுளுவாகத் தப்பித்து ஓடியதாலும் பெரிய தீங்கு 
ஏதுமின்றி அவன் சத்திரத்தையும் அடைந்து, அங்குத் தங்கி, மறுநாள் எழுந்து செல்லவேண்டிய இடத்தையும் 
சேர்ந்தடைந்தான். அது நெற்குண்டம் என்னும் ஓர் ஆற்றங்கரைப் பட்டினம். ஆற்றுவழியே சென்றால் சிறிது 
தொலைவில் கடல் வரும். மேலைக் காற்றால் (தென்மேற்குப் பருவக்காற்று) பாய்விரித்து வரும் யவனக் கப்பல்கள் 
தாம் கொண்டுவந்த மேனாட்டு மது, அதை ஊற்றிக்குடிக்க அழகிய சாடிகள், முரட்டுக் குதிரைகள் ஆகியவற்றை 
இறக்குவதற்காக நங்கூரம் போட்டு நிற்கும். பொருள்களை இறக்கிய பின்னர், தமிழ்நாட்டுப் பொருள்களான மிளகு, 
லவங்கம் போன்ற வாசனைப் பொருள்கள், பொதினியில் செய்த மணிச் சரங்கள், கொற்கை முத்துக்கள் எனப் 
பலவிதமான சரக்குகளைக் கப்பலில் ஏற்றவேண்டும். இவற்றுக்கெல்லாம் பாண்டிய நாட்டு முத்திரை குத்திச் 
சுங்கம் வசூலிப்பது அவன் வேலை. யவனர்கள் தம் கொஞ்சுமொழியில் நெல்கிண்டா (Nelcynda) என்றழைக்கும் 
மேலைக் கடற்பகுதி பாண்டியனின் கட்டுப்பாட்டில் இருந்தது. சென்ற ஆண்டு இங்கு வந்து இதே வேலையைச் 
செய்து கைநிறையச் சம்பாதித்து ஊர் திரும்பிய முத்தண்ணாவின் அறிவுரையின்படியேதான் அவன் இந்த ஆண்டு 
இங்கு வந்திருக்கிறான். அவர் சொன்ன இடத்தில் போய் இனஞ்சொல்லி வேலையும் பார்க்க ஆரம்பித்துவிட்டான். 
மேலைக் காற்று முடிந்து, அதன் பின்னர் வரும் வாடையின் (வடகிழக்குப் பருவக் காற்று)வேகத்தைப் 
பயன்படுத்திப் பாய்விரித்து நாவாய்கள் திரும்பிச் செல்லும். இந்த ஆறுமாதக் காலம் மட்டுமே இங்குப் பணி.

ஆயிற்று, வந்த கப்பல்கள் எல்லாம் திரும்பிவிட்டன. இன்னும் பத்துநாட்கள் இருந்து, வந்த சரக்குகளைப் பிரித்து, 
வணிகரின் கழுதைச் சாத்துகள் (trading donkey caravan), வண்டி ஒழுகைகள் (train of carts) ஆகியவற்றில் 
ஏற்றி அனுப்பவேண்டும். இதுவரை ஓய்வில்லாத வேலை. பகலெல்லாம் கண்குத்திப் பாம்பாய்க் கவனம் சிதறாத 
கணக்கு வேலை. முல்லையைப் பற்றி அவ்வப்போது நினைவுகள் வந்தாலும் மறு நிமிடம் வேலையில் 
மூழ்கிவிடுவான். வேலையின் அலுப்பில் இரவு உண்டவுடன் கண்களைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்து 
அமுக்கும். எல்லாம் முடிந்த இன்று காலை கொஞ்சம் தாமதமாக எழுந்தபோது முல்லையின் நினைப்பு வந்தது. 
‘சட்’-டென்று உதறிவிட்டு எழ முயன்றான். நெஞ்சு இடக்குபண்ணியது. “இதுவரை வேலை பார்த்தது போதும். 
முதலாளியிடம் கணக்கு முடித்து உடனே ஊருக்குக் கிளம்பு” என்றது. “எனக்கு அவளைப் பார்க்கவேண்டும், 
அப்படியே கட்டித் தழுவ வேண்டும்” என்று அடம்பிடித்தது. அந்த நெஞ்சின் உந்துதலோடு அவன் போராட 
ஆரம்பித்தான். “இதோ பார்! இன்னும் கொஞ்சம்தான் எஞ்சியிருக்கிறது. இருக்கிற வேலையையும் முடித்துவிட்டுக் 
கிளம்பலாம். காலையில் ‘வெள்’-ளெனப் புறப்பட்டு ஓங்கி எட்டெடுத்துவைத்தால் மாலையிலேயே ஊர் போய்ச் 
சேர்ந்துவிடலாம். மாலையில் மலைப் பக்கம் பொழுது சாயும் நேரத்தில், விளக்கு வைக்க அவள் வீட்டு 
முற்றத்துக்கு வருவாள். குட்டைக் கால்களுடன் விசுக் விசுக்-கென்று குட்டிநடை போடும் புறாகூட, அடுத்த வீட்டு 
மாடியில் இருக்கும் தன் இனிய காதலியைக் கூவி அழைக்கும். அதைக் கேட்ட அவளுக்கு நம் நினைவு பெரிதாய் 
எழ, ‘மனுசன் எங்க இருந்து என்ன பண்ணுராரோ?’ என்று கண்கலங்கி மறுகிக்கொண்டு நிற்பாள். பின் பக்கமாய்ச் 
சென்று அவள் தோளை அப்படியே இறுகக் கட்டிக்கொள்ளலாம்” என்றவன் மன்றாட்டுத் தொனியில் கெஞ்சினான், 
“சீக்கிரமா எந்திரிடா, என் ராசா’ல்ல, நீ நல்லா இருப்படா சாமி, வேலைக்கி நேரமாச்சுடா, வெரசாக் கெளம்புடா” 
என்றான். “ஆமாம், ஏன்? இப்பவே போனாக்கூடத்தான் அவளக் கட்டிக்கலாம். இன்னும் கொஞ்சம் நாள் 
கழிச்சுப்போனாத்தான் அது இனிக்குமா?” நையாண்டி செய்தது அந்தச் சண்டிக்குதிரை.

திகைத்துப்போன அவன் என்ன சொன்னான்? அதுதான் இந்தக் கவிதை. அகநானூறு பாடல் 47. 

இது பாலைத் திணைப் பாடல். ஆலம்பேரிச் சாத்தனார் பாடியது. உங்களுக்கு விடை கிடைக்கிறதா பாருங்கள். 

அகநானூறு 47 - பாலை - ஆலம்பேரிச் சாத்தனார்

அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி		5
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அரும் சுரம் நீந்திக் கைம்மிக்கு
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,	10
குறு நடைப் புறவின் செம் கால் சேவல்
நெடு நிலை வியன் நகர் வீழ் துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
“யாண்டு உளர்கொல்” எனக் கலிழ்வோள் எய்தி
இழை அணி நெடும் தேர்க் கைவண் செழியன்	15
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத் தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே.

அருஞ்சொற் பொருள்

ஒலி = தழைத்த; கழை = முள்ளுள்ள மூங்கில், Bambusa blumeana, Spiny Bamboo or Thorny Bamboo; 
நரலுதல் = (கொக்கு, நாரை போல்)கரகரத்த ஒலி; விலங்கு = குறுக்காக; கடு வளி = சூறாவளி; 
உருத்திய = வெப்பமுறச் செய்த; கொடி = பக்கவாட்டு; கூர் எரி = கொழுந்துவிட்டெரியும் நெருப்பு; விடர் = பிளவு; 
முகை=முழைஞ்சு, குகை; அடுக்கம் = மலைச் சரிவு; அமை = கெட்டி மூங்கில்; கண் = கணு; நொடி = வெடிப்பு; 
கணக் கலை = கலைமான்கள் கூட்டம்; வீழ் துணை = விரும்பும் துணை; பயிரும் = கூவி அழைக்கும். 
புன்கண் = துயரம்; கலிழ்வோள் = கலங்குவோள்; வேய் = பருத்த மூங்கில்; அசா வீட = வருத்தம் நீங்க.

பாடலின் பின்புலமும் பாடல் சுருக்கமும்

தலைவன் பொருள்மேற் சென்றுள்ளான். கடத்தற்கரிய அரும் சுரம் கடந்து வினையின்கண் மூழ்கியுள்ளான். 
திடீரென நெஞ்சு மறுகி நிற்கின்றது. உடனே வீடு திரும்பவேண்டும் என்று அடம்பிடிக்கின்றது. வந்த வேலையை 
முடித்து மனநிறைவுடன் வீடு திரும்பித் தலைவியை முயங்கி மகிழலாம் என்று நெஞ்சினை ஆற்றுப்படுத்தித் 
தலைவன் கூறும் கூற்றாய் அமைகிறது இப் பாடல்.

அடிநேர் உரை

கொண்ட உறுதியினின்றும் பிறழ்வுபடாத உள்ளம் பன்னெடுங்காலம் சிறந்து விளங்க,
இவ்விடத்தில் வந்த வேலையை முடித்தோமென்றால், மிகவும் விரைவாக
எழுவாயாக, நெஞ்சே நீ வாழ்வாயாக; தழைத்த உச்சியினையுடைய
ஆடுகின்ற மூங்கிலை ஒலி எழுமாறு தாக்கி, குறுக்காக எழுந்து
சூறாவளி வெப்பமுறச் செய்த, பக்கங்களில் நீண்டும், கூரான கொழுந்துவிட்டும் எரியும் நெருப்பு
பிளவுகளும் குகைகளும் கொண்ட மலைச் சரிவில் பரந்து விரிதலால், அதனுடன் சேர்ந்து,
மூங்கில் கணுக்கள் வெடித்தலால் எழும் ஒலி மான் கூட்டத்தை விரட்டும்
கொடும் போர்முனையைப் போன்ற அரிய பாதையைக் கடந்து, அளவுகடந்து,
பெரிய ஞாயிறு மலையைச் சேர்ந்து மறைய, வீட்டில்
ஒளிரும் வளையணிந்த பெண்கள் வெள்ளிய திரிகளைக் கொளுத்த,
சிறுநடை போடும் புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா
உயர்ந்த மாடங்களை உடைய பெரிய மனையில் உள்ள தான் விரும்பும் பெடையை அழைக்கும்
தனிமைத் துயருடன் வந்த துன்பத்தைத் தரும் மாலைவேளையில்,
“எங்கு இருக்கின்றாரோ” என நினைத்துக் கலங்கியிருக்கும் தலைவியை அடைந்து,
இழைகள் அணியப்பெற்ற நெடிய தேரினைக்கொண்ட வள்ளல்தன்மை நிறைந்த செழியனின்
முகில்கள் தவழும் வளம் மிக்க சிறுமலை என்னும் மலையின்
சாரல்களில் கூதளம் கமழும் மலையின்
மூங்கிலைப் போன்ற பருத்த தோளில் பரவியுள்ள
பசலை நோயின் வருத்தம் நீங்கப் பலமுறையும் முயங்குவோம்.

பாடல் விளக்கம்

ஊர்திரும்ப நோங்கிநிற்கும் நெஞ்சினைப் பார்த்து தலைவன் கூறுகிறான் :-
 
“சுழற்றியடிக்கும் சூறைக்காற்றால் மூங்கிற்காடுகள் தீப்பிடித்து எரிந்தாலும் நாம் அவற்றைக் கடந்து செல்வோம். 
ஊரில் மாலையில் மகளிர் விளக்கேற்றும் நேரத்தில் போய்ச் சேரலாம். நம் வீட்டு முற்றத்தில் இரைதேடி 
நடைபோடும் புறாகூட அண்டை வீட்டு மாடப்புறாவைக் கூவியழைக்கும் அந்த மாலை வேளையில், 
‘எங்கே இருக்கிறாரோ, என்ன செய்கிறாரோ’ என்று நம்மைப் பற்றி எண்ணிக் கலங்கிக்கொண்டிருப்பாள் நம் 
தலைவி. அவளை அப்படியே அள்ளிக்கொண்டு கட்டிக்கொள்ளலாம். கொண்ட கொள்கையினின்றும் வழுவாமல் 
பணியாற்றிய உறுதிகொண்ட நம் உள்ளத்தை நம் பரம்பரையே வாழ்த்தும். நெஞ்சே! நீ விரைவில் எழுந்து 
பணியினை மேற்கொள்வாயாக”.