அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 52 - வலந்த வள்ளி
                
                                 சொல்லலாமா வேண்டாமா?


முல்லைக்கு ஒரே குழப்பமாக இருந்தது - வீட்டாருக்குச் சொல்லி-விடுவோமா அல்லது சொல்லாமல் 
இருந்துவிடுவோமா என்று. வீட்டார் என்பது யார்? அவளுக்கு வீட்டில் எல்லாமுமாய் இருக்கிற வளர்ப்புத்தாய் 
முத்தம்மாதான். அவளிடம் சொன்னால், அது நேரே அம்மாவிடம் சென்றுவிடும். அம்மா சும்மா இருப்பாளா? 
அப்பாவிடம் சொல்வாள். அப்பா இதை எந்தவிதத்தில் எடுத்துக்கொள்வார்? செல்ல மகளுக்கு இப்படியும் ஓர் 
ஆசையா என்று சிரித்துக்கொண்டே ஆகவேண்டியதைப் பார்க்கலாம் அல்லது சினங்கொண்டு சீறியெழுந்தால்? 
அண்ணன் தம்பிமார் அரிவாளைத் தூக்கிக்கொண்டு அடுத்த ஊர் நோக்கி ஓடுவர். வெட்டு – குத்து! பழியெல்லாம் 
இவள்மேல் விழும். 

“பாதகத்தி! ஆசதான் பட்டாள், அதக் கொஞ்சம் அடக்கிவச்சிருக்கக்கூடாதா?” 

அப்புறம்? வெளியாட்களை விட்டுத்தள்ளுங்கள். வீட்டுக்குள்ளிருப்போர் முகத்தில் விழிப்பது எப்படி? பேசாமல் 
செத்துத் தொலைக்கலாம் என்று வரும்.

பொன்னியிடம் யோசனை கேட்கலாம். பொன்னிக்குச் சொல்லிவிட்டாள். அவளும் வந்தாள். “என்னடி? இப்படிப் 
போயிட்ட? நாலஞ்சு நாளாக் கதிரறுப்புக்குப் போய்ட்டு வர்ரதுக்குள்ளெ இப்படி உருக்கொலஞ்சுபோயிட்ட?” என்று 
அங்கலாய்த்தாள். “எப்படி இருந்த அழகுக் கண்ணு இப்படி மஞ்சப்பூத்துக் கெடக்குது! வீட்ல யாருமே ஒன்ன 
பாக்கலியா, ஒண்ணுமே கேக்கலியா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

“அதாண்டி, பாக்கவும் முடியல, பாக்கவேணாமுன்னு மறக்கவும் முடியல, என் நெனப்பே என்னத் திங்குதுடி” என்று 
கலங்கினாள் முல்லை.

“அதான் ஒன் நெஞ்சத்தூக்கி அவங்கிட்ட கொடுத்திட்டியேடீ! என் நெஞ்சு எங்கிட்ட இல்ல, இப்ப வேற ஒருத்தன் 
மார்புக்குள்ள ஒடுங்கிக்கெடக்கு’ன்னு முத்தம்மாகிட்ட சொல்லிறலாமா?”

“அதுதாண்டி எனக்கும் குழப்பமாயிருக்கு. ஒனக்குச் சொல்லிவிட்டா நீ வந்து அதையே கேக்குற!” என்று 
பொன்னியைச் சற்றுக் கோபத்துடன் முறைத்துப்பார்த்தாள் முல்லை.

“என்னடி நீ புரியாமப் பேசுறவ! சொல்லிறலாமா’ன்னு நாஞ்சொன்னது சொல்லட்டுமா’ன்னுதான். ந்தா, அவளக் 
கூப்பிட்டு எப்படியோ புரியவச்சிட்டு வர்ரேன்” என்று சொல்லி அவசரமாகக் கையை ஊன்றி எழுவதற்கு முயன்ற 
பொன்னியைக் கையைப் பிடித்து அமுக்கினாள் முல்லை.

“பொறுடி, இப்ப என்னத்துக்கு இப்படி பறக்குற?” என்று மறித்தாள் முல்லை.

“சரித்தான்! இப்படி மறுகிக்கிட்டு கெடந்தா காலாகாலத்துல நடக்கவேண்டியது நடக்கவேணாமா?” 

“சரி, இந்த வெசயத்த என்னண்ணு சொல்லப்போற?” என்று வினவினாள் முல்லை.

“என்னடி புதுசாப் பேசுறவ? வேங்க மரத்த வள்ளிக்கொடி சுத்துனது கெணக்கா நீதானே அவனச் சுத்திச்சுத்தி வந்த? 
அதச் சொல்றேன். எட்டாத வேங்கப் பூவப் பறிக்க வந்த கொறத்திமக ‘வேங்க வேங்க’-ன்னு கத்த, ஏதோ புலிதான் 
வந்துருச்சு’ன்னு ஊரே ஓடிப்போயி பூப்பறிக்கிற கொறத்தியப் பாத்து ‘கொல்’-லுனு சிரிச்சாப்புல, நீயும் அந்த 
வேங்கமரத்தானும் கூடிக்கூடிப் பேசுனதப் பாத்து ஊரே சிரிச்சுக்கெடக்கு. முத்தம்மா காதுலயும் அரசபொரசலாச் 
சேதி விழுந்திருக்காதா என்ன? அதத்தான் நாம் இப்ப உண்டு’ன்னு சொல்லப்போறம்” என்றாள் பொன்னி கொஞ்சம் 
அதட்டலாக.

“சொல்லிறலாம்’னுதாண்டி நானும் முடிவுக்கு வந்துட்டேன். ஆனா, ‘ஒம் மக கண்ணு பூத்துக் கெடக்குறதுக்குக் 
காரணம் அவளுக்குக் கலியாண ஆசை வந்துருச்சு’ன்னு மட்டும் சொல்லிறாதடீ! அப்புறம் நான் செத்தே போவேன்” 
என்று கண்கலங்க பொன்னியின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள் முல்லை. அவளுக்குக் காதல் பெரிதுதான்.
ஆனால் தன்மான உணர்வு அவளைத் தடுமாறவைத்தது.

“சீ, இதுக்குப்போயி கண்கலங்குற! எனக்குத்தெரியாதா ஒன்னப்பத்தி, எல்லாத்தயும் நான் பாத்துக்குறேன்டீ” என்று 
சொல்லிவிட்டு நகர்ந்தாள் பொன்னி.

அகநானூறு பாடல் -52 : குறிஞ்சி – நொச்சி நியமம் கிழார்

வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர்ப்
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்
ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது எனத் தம்
மலை கெழு சீறூர் புலம்பக் கல்லெனச்
சிலை உடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என
இருபால் பட்ட சூழ்ச்சி ஒருபால்
சேர்ந்தன்று வாழி! தோழி! யாக்கை
இன் உயிர் கழிவதாயினும் நின் மகள்
ஆய் மலர் உண்கண் பசலை
காம நோய் என செப்பாதீமே

அருஞ்சொற்பொருள்

வலந்த=சுற்றிய; வள்ளி=ஒருவகைக் கொடி; மரன்=மரம்; வேங்கை=காட்டு வேம்பு; பொங்கர்=கிளை; பூசல்=ஒலி; 
ஏகல்=உயர்ந்த பாறை; அடுக்கம்=மலை; அளை=குகை; சிலம்பு=மலைச்சரிவு; சிலை=வில்; அமர்=விரும்பு; 
வியன்=அகன்ற; சூழ்ச்சி= ஆலோசனை,எண்ணம்; சேர்ந்தன்று=சேர்ந்தது; ஆய்மலர்=ஆராய்ந்தெடுத்த மலர்(போன்ற); 
உண்கண்=மைதீட்டிய கண்; பசலை=colour paleness due to love-sickness.

அடிநேர் உரை

சுற்றிய வள்ளிக் கொடியையுடைய, மரங்கள் உயர்ந்த மலைச் சரிவில்
செழித்தெழுந்த வேங்கை மரத்தின் மிக உயர்ந்த நெடிய கிளையிலுள்ள
பொன்னைப் போன்ற புதிய மலரினைப் பறிக்க விரும்பிய குறமகள்,
இனிமையற்ற குரலில் “வேங்கை வேங்கை” என்ற ஆரவாரத்தை அடுத்தடுத்து எழுப்பியதால்
உயர்ந்த பாறைகளின் அடுக்குகளில் இருண்ட குகைகள் கொண்ட மலைச் சாரலில்
பசுவைக் கவரும் வலிய புலியைக் கண்டு எழுப்பிய ஒலி அது என்று எண்ணி, தமது
மலையை அடுத்துள்ள சிறிய ஊரை விட்டுவிட்டு, பெருத்த ஒலியுடன்
இடது கையில் வில்லை உடையவராய் ஓடிவரும் நாட்டினைச் சேர்ந்த நம் தலைவனது
அகன்ற மார்பில் அடங்கியுள்ளது அவனை விரும்பும் நமது நெஞ்சம் என்பதை அன்னைக்குத்
தெரிவிப்போமா, தெரிவிக்காமல் இருப்போமா என்று
இருவகையால் நாம் எண்ணி ஆய்ந்தது, இப்போது (தெரிவிக்கலாம் என்ற) ஒரு முடிவுக்கு
வந்துள்ளது; நீ வாழ்வாயாக தோழியே! நம் உடம்பினின்றும்
இனிய உயிர் பிரிவதாயினும் உன் மகளின்
ஆய்ந்தெடுத்த மலர் (போன்ற) மைதீட்டிய கண்களில் படர்ந்துள்ள பசலையானது
காதல்நோயால் உண்டானது என்று(மட்டும்) உரைத்துவிடாதே!