அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணி ஒலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 65 - உன்னம் கொள்கையொடு
                
                                 இனிமேல் மகிழ்ச்சிதான்
அன்று மாலை நந்தவனத்திற்குச் சென்று பூப்பறித்துவர ஆயத்தமாய் இருந்தாள் முல்லை. அது ஒரு சாக்கு மட்டும்தான். பூப்பறிக்கிற சாக்கில் அங்கு வந்து காத்திருக்கும் ‘அவரை’ ஓரக்கண்ணால் பார்த்து மகிழ ஒரு வாய்ப்பு.. ஒருவரும் இல்லாவிட்டால் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கலாம். பொன்னி வந்தவுடன் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்படவேண்டும். முல்லை காத்திருந்தாள். சற்றுத் தாமதமாகப் பொன்னி வந்தாள். பார்வையாலேயே அவளின் தாமதத்தைக் கடிந்துகொண்ட முல்லை, “அம்மா, நந்தவனத்துக்குப் பொன்னியோட போயிட்டு வர்ரேன்” என்று குரல் கொடுத்தாள். “இந்தா பொறுடீ, வர்ரேன்” என்று பதில் குரல் கொடுத்த முல்லையின் தாய், வேகமாக நடைக்கு வந்தாள். “போனோமோ, வந்தோமோ’ன்னு இருக்கணும். அங்கிட்டு இங்கிட்டு போறவர்ரவங்கள வேடிக்க பாத்துக்கிட்டு நிக்காம, சட்டுப்புட்டு’ன்னு திரும்பி வாங்க” என்றாள் தாய். ”யப்பாடீ, நம்ம நெஞ்சுக்குள்ள இருக்குறத அப்படியே புட்டுபுட்டு வைக்கிறாக ஒங்க அம்மா! அதுவும் எதுவும் தெரிஞ்சமாதிரி காட்டிகிறாம. நச்சுனு முள்ளு குத்துற மாதிரி ஒரு சொல்லு” “அது கெடக்கு, விட்டுத்தள்ளுடீ, அது எப்பவும் அப்படித்தான் பேசும்” என்று சொன்னவாறு நடையில் வேகத்தைக் காட்டினாள் முல்லை. “ஏண்டீ, பொன்னீ, எங்கேடீ பொறப்பட்டீக? நந்தவனத்துக்குப் பூப்பறிக்கவா?” தன் வெற்றிலை உரலை இடித்தவாறு திண்ணையில் காலை நீட்டி உட்கார்ந்திருந்த கிழவி நீட்டி முழக்கினாள். “அதுக்கு எதுக்கு இத்தாத்தண்டி அவசரம் - யாரோ அங்க கால்வலிக்க காத்துக் கெடக்குற மாதிரி” அருகிலிருந்த ஒரு பெண் இவ்வாறு சாடை பேச, அங்கிருந்த பெண்கள் யாவரும் கொல்லென்று சிரித்தனர். அவர்களுக்குப் பதிலடி கொடுக்க ‘சட்’டென்று நின்ற பொன்னியின் கையைப்பிடித்து இழுத்தவாறு முல்லை முன்னே நடந்தாள். “அதுக கெடக்குதுக, அதுகளுக்கு இதே சோலி, விட்டுத்தள்ளு சனியன்கள” என்று முணுமுணுத்தவாறு முல்லை நடையில் வேகத்தைக் காட்டினாள். “அங்க என்னடான்னா, அம்மாகாரி பொறப்படும்போதே குத்துறமாதிரி பேசுறா. இங்க என்னடான்னா இந்த நாசமாப்போனவளுக வாய்க்கு வந்தபடி பேசுறாளுக” பொறுமிக்கொண்டே சென்றாள் பொன்னி. “இன்னக்கி ரெண்டுல ஒண்ணு கேக்கப்போறேன். அந்த அண்ணன. இப்படி எத்தினி நாளக்கி இந்தக் கொடுமையெல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்குறது?” அதற்குள் நந்தவனம் வந்துவிட்டது. அங்கே அவன் காத்திருந்தான். சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லை. “இந்தா பாரு, மொதல்ல நீ உள்ள போயி பூப்பிடுங்கிக்கிட்டு இரு. நான் கொஞ்சம் அண்ணன்கிட்ட பேசிட்டு வர்ரேன்” என்று முல்லையை நந்தவனத்துக்கு உள்ளே அனுப்பிய பொன்னி, அங்கிருந்த அவனை நோக்கி நடந்தாள். முல்லைக்குப் பதிலாக இந்த வாயாடிப் பொன்னி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அவன் சற்றுக் குழம்பினான். அதற்குள் அங்கே வந்துவிட்ட பொன்னி, நேரிடையாகவே தாக்குதலை ஆரம்பித்தாள். “இந்தா பாருண்ணே! இனி ரொம்ப நாளு தாங்காது. வீட்டுக்குள்ளயும் சரி, வெளியிலயும் சரி ரொம்பவே பேச ஆரம்பிச்சுட்டாங்க. சட்டுப்புட்டுன்னு இவளக் கூட்டிட்டுப்போற வழியப் பாருண்ணே” “என்னம்மா பொன்னி சொல்ற? நான் நெதம் வர்ர வழியப் பத்தி ஒனக்குத் தெரியுமா? நான் இப்ப திரும்பிப்போற வழி எப்படி இருக்கும் தெரியுமா? காஞ்சுபோன மூங்கில் மரம் காத்துல ஒரசிக்கிட்டு அங்க அங்க தீப்பிடிச்சு எரிஞ்சுகிட்டு இருக்கும். கடல்ல மீன் பிடிக்கப் போறவங்க படகுல எரியுற விளக்குல இருக்குற தீ அலை எந்திரிச்சு எந்திரிச்சு அடங்கும்போது மறஞ்சு மறஞ்சு தெரியுமே அது போல பாக்கவே பயம்மா இருக்கும். போற பாதை எப்படி இருக்கும் தெரியுமா? மெலிஞ்சு வத்திப்போன யானை முதுகுல நடந்து போறது கணக்கா பாறை மேல ஏறி எறங்கிப் போகணும். வழியில மூங்கில் மரம் சாஞ்சு கெடக்கும். நிமிந்து நிக்கிற கொம்போட காட்டுயானை காவல் காக்குற மாதிரி யாருடா வருவா’ன்னு பாத்துக்கிட்டு இருக்கும். இந்தக் கரடு மொரடான ஒத்தையடிப் பாதையில இவளக் கூட்டிட்டுப்போனா இவ தாங்குவாளா’ன்னுதான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.” என்றான் அவன். “இதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல’ண்ணே. இனியும் நாளாச்சுன்னா காரியம் கெட்டுப்போகும். முல்லை அம்மாவுக்கும் தெரிஞ்சிருக்கும்’னு நினைக்கிறேன். வெளியில தெரிஞ்சமாதிரி காட்டிக்கிற மாட்டேங்கிறாங்க. தெருவுலயும் நடக்கமுடியல. சாடமாடையா ரொம்பப் பேசுறாங்க.” “சரிம்மா, காத்திருந்து இன்னக்கி ராத்திரியே கூட்டிட்டுப் போயிர்ரேன்” என்று அவன் சொன்னதும் பொன்னியின் முகம் பெரிதாக மலர்ந்தது. அந்நேரம் பூக்களைப் பறித்துக்கொண்டு முல்லையும் அவ்விடம் வந்தாள். “இந்தா பாரு, முல்லை, இனிமேல ஒங்கம்மாகிட்டயும் பேச்சு வாங்கவேணாம். ஊர்க்காரிக வாயிலயும் விழவேண்டாம். உதியன் மகாராசாகிட்ட பாடிக்கிட்டுப் போன பாட்டுக்காரங்க மாதிரி இனிமேல ஒனக்கு எப்பவும் சந்தோசம்தான்’டி” என்று முல்லையைக் கட்டிக்கொண்டாள் பொன்னி. “என்னடி சொல்ற?” புரியாமல் கேட்டாள் முல்லை. “அண்ணன் இன்னக்கே ஒன்னக் கூட்டிட்டுப் போறேன்’னு சொல்லிட்டாரு” பாடல் - அகநானூறு - 63 : திணை - பாலை: பாடியவர் - மாமூலனார் உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம் ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் 5 பாடி சென்ற பரிசிலர் போல உவ இனி வாழி தோழி அவரே பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்கு செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும் மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி 10 மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்கு மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை உயவல் யானை வெரிநு சென்று அன்ன கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி 15 காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள் நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு அரியவால் என அழுங்கிய செலவே 20 அருஞ்சொற்பொருள்: உன்னம் = உள்ளக்கிடக்கை; கரந்து = மறைத்துவைத்து; கௌவை = பழிச்சொற்கள்; உவ = மகிழ்வாயாக; பொம்மல் = பொலிவு; ஓதி = கூந்தல் செலவு = உடன்போக்கு; அயர்தல் = மேற்கொள்ளுதல்; திமில் = படகு; புணரி = அலை; உயவல் = வருத்தம்; வெரிநு = முதுகு; கோடு = கொம்பு; ஒருத்தல் = ஆண்யானை; ஆறு = பாதை; கடி = காவல்; கொம்மை = செழுமை; அழுங்கு = தவிர்; அடிநேர் உரை நமது மனவோட்டத்தை உணர்ந்துகொண்ட அறிவுடன், தன் மனத்தை மறைத்துக்கொண்டிருக்கும் நம் தாயின் கடுஞ்சொற்களிலிருந்தும் தப்பித்துக்கொள்வோம்; சிறிதளவும் இரக்கமில்லாத இயல்பினையுடைய பொய்யே பேசும் சேரிப் பெண்களின் பழிச்சொற்களையும் நிறுத்திவிடுவோம்; தனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்திய உதியஞ்சேரலாதனைப் பாடிச் செல்லும் பரிசிலரைப் போல இப்பொழுது மகிழ்வாயாக, வாழ்க தோழியே! நம் தலைவர், அடர்த்தியான கூந்தலையுடையவளே! நம் கருத்தோடு ஒன்றிய கருத்துடையவராய் நம்மை அவருடன் கூட்டிச்செல்ல விரும்பினார் இப்போது - மலைகள்தோறும் பெரிய மூங்கில்கழைகள் உரசிக்கொள்வதால் ஏற்பட்ட, காற்றடிப்பதால் மிகுந்து எரியும் நெருப்பு மீன்பிடிக்கும் பரதவர்களின் வளைந்த படகில் தோன்றும் செறிவான சுடர்கள் வானளாவிய கடல் அலையின் மீது காணப்படுவது போல் காட்சிக்கினியதாய்த் தோன்றும், யா மரங்கள் உயர்ந்து நிற்கும் அகன்ற இடத்தில் பசியால் மெலிந்து வருந்திய யானையின் முதுகில் நடந்து போவது போலப் பாறைகளில் ஏறியும் இறங்கியும் செல்லும், மூங்கில்கள் கரிந்து சாய்ந்துகிடக்கும் சிறிய வழிகளையுடைய, காடுகளை உயர்த்திக் கூறுவதற்குக் காரணமான நிமிர்ந்த கொம்புகளையுடைய களிறு வழியினைக் காவல்கொண்டிருக்கிற கடத்தற்கரிய பாலை வழிகள், மூங்கில் போன்ற தோளினையும் மணங்கமழும் கூந்தலையும் திரட்சியான தொய்யில் எழுத‌ப்ப‌ட்ட‌ முலையினையும் வரிசையான இத‌ழ்க‌ளையுடைய‌ நீல‌ ம‌ல‌ர் போன்ற‌ மையுண்ட‌ க‌ண்க‌ளையும் உடைய‌ பெண்களுக்கு கடந்து செல்லக் கடுமையானதாகும் என்று சொல்லித் தள்ளிப்போட்டுகொண்டிருந்த உடன்போக்கினை.