அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 51 - ஆள் வழக்கு அற்ற
                
                                 நெஞ்சின் முகத்தில் கரி!


முல்லைக்கு ஒரே மகிழ்ச்சி – திடீரென்று அப்பாவைப் பார்த்ததில். வெளியூரிலிருந்து வேறு சோலியாக வந்திருந்த 
அவர், வேலையை முடித்துவிட்டு மகளைப் பார்க்க வந்திருந்தார். கைகால்களையும் முகத்தையும் நடு முற்றத்தில் 
நன்றாக அழுத்திக் கழுவிப் பின் தோளில் கிடக்கும் துண்டால் அழுந்தத் துடைத்துவிட்டு, “உஸ், அப்பாடா!” என்று 
முற்றத்துப் பாதை ஓரத்தில் காலைத் தொங்கப்போட்டு அமர்ந்துகொண்டார். ஊரில் எல்லாரின் நலத்தையும் 
விசாரித்த முல்லை, “இருங்கப்பா, சாப்பிட்டுட்டுத்தான் போகணும்” என்று சொல்லி சமையலுக்கான ஆயத்தங்களைச்
செய்ய ஆரம்பித்தாள். “மாப்பிள்ளை எப்பம்மா வேலையிலிருந்து திரும்புவார்?” என்று கேட்டார் அப்பா. 
“அவரெங்கப்பா வேலைக்குப் போறாரு!” என்று அங்கலாய்த்தாள் முல்லை. “ஏம்மா? என்ன ஆச்சு?” என்று 
வியப்புடன் கேட்ட தந்தையின் பேச்சை மாற்றினாள் முல்லை. “அவருக்குச் சொல்லிவிடுறேன், வருவாரு, 
அவர்கிட்டயே கேளுங்க. இப்ப நம்ம கதயப் பேசுவோம்” என்று ஊர்ப் பேச்சையும் சமையலையும் தொடர்ந்தாள்.

சமையல் முடிந்ததும், எதிர்வீட்டுப் பையன் மூலம் உடனே வரச்சொல்லி கணவனுக்குச் சேதி அனுப்பினாள் முல்லை. 
ஊர்ச்சாவடியில் உட்கார்ந்துகொண்டு வெளியூருக்கு வேலைக்குப் போவதைப் பற்றியே பீற்றிக்கொண்டிருப்பான் 
அவன். என்னமோ ஏதோவென்று பதறியடித்துக்கொண்டு அவன் உடனே வந்தான். வந்தவன், உட்கார்ந்திருந்த 
மாமனாரைக் கண்டதும், அவசரம் அவசரமாக இடுப்பு வரை ஏற்றிக் கட்டியிருந்த வேட்டியைக் கால்வரைக் குனிந்து 
இறக்கிவிட்டு, “வாங்க மாமா! என்ன சொல்லாமக் கொள்ளாம” என்றவாறு நலம் விசாரித்தான். “சரி, சரி, 
நேரமாச்சு, சாப்பிட வாங்க” என்று முல்லை கூற, அவனும் கைகால் கழுவி வந்தபின், மாமனார், மருமகன் 
இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.

தடபுடல் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்ட அவன், சிறிது நேரம் மரியாதைக்குப் பேசியிருந்துவிட்டு, “கொஞ்சம் 
சாஞ்சுக்கிறேன் மாமா, நீங்களும் வாங்களேன்” என்றான். அவர், “இல்ல மாப்பிள, ஊருக்குப் போகணும், இன்னும் 
கொஞ்ச நேரம் பேசிட்டுப் பொறப்படுறேன். நீங்க போங்க, நான் போகும்போது சொல்றேன்” என்று சொன்னார். 

அவன் அடுத்த அறைக்குள் நுழைந்து, பாய்விரித்துப் படுத்துக்கொண்டான். தந்தைக்கும் மகளுக்கும் நடக்கும் 
உரையாடலில் தன்னைப்பற்றியும் பேச்சு வருமோ என்ற எண்ணத்தோடு அவன் தூக்கத்தில் ஆழ்ந்துபோனான். 

மகளின் அருகே அமர்ந்துகொண்ட தந்தை, பரிவுடன் அவள் தலையைக் கோதிவிட்டார். சோறுபோட்ட கையைத் 
தடவிக்கொடுத்தார். அப்புறம், “ஏம்மா, மாப்ள எந்த வேலைக்கும் போகாம சும்மா ஊரச் சுத்திக்கிட்டா திரியுறாரு?”
என்று கவலையுடன் கேட்டார். “ஷ், அவர் தூங்கிட்டாரா’ன்னு பாத்துட்டு வாரேன்” என்று சொல்லிய முல்லை 
மெதுவாக எழுந்துசென்று அடுத்த அறையை எட்டிப்பார்த்தாள். அவன் அந்தப்பக்கம் திரும்பி ஒருக்களித்துப் 
படுத்துக்கிடந்தான். சற்றுநேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, திரும்பிய முல்லை, “தூங்கிட்டார்’னு 
நெனக்கிறேன், எதுக்கும் மெல்லவே பேசுங்க” என்று குசுகுசுத்த குரலில் அப்பாவையும் எச்சரித்தாள்.

“எந்த வேலக்கும் போகாம மனுசன் என்ன செய்யுறாரு”

“அந்தக் கூத்த ஏன் கேக்குறீங்க? என்னமோ வேலை செய்ய வெளிய போறாராம்”.

“வெளியூருக்கா?”

“இல்லப்பா! அடுத்தநாட்டுக்கே!”

“கொள்ளத்தொலவெட்டு போகணுமே! ஆளரவமே இல்லாத அத்துவானக் காட்டத் தாண்டில்ல போகணும்!”

“ஆமா! அது அவருக்குப் பெரிசாப் படல”

“யம்மா, இங்கயே வெயிலு இந்தக் கொளுத்து கொளுத்துது! அந்த கட்டாந்தரைப் பூமி கங்கு மேலக் கால்வச்சது 
மாதிரி கொதிக்குமே’மா!”

“என்ன செய்யுறது? போய்த்தேன் ஆவேன்’னு மனுசன் ஒத்தக் கால்’ல இல்ல நிக்கிறாரு!”

“அந்த யா மரத்து உச்சிக்குள்ள காத்து புகுந்து ‘உய்ங் உய்ங்–னு ஊளை எழுப்பி அலறுமேம்’மா!”

“அப்படியா? அங்க வேற யாரும் இருக்கமாட்டாங்களா?”

“ரெண்டு பேரு இருப்பாங்க! என்னடா கெடைக்கும்’னு மேல சுத்திக்கிட்டு இருக்கிற கள்ளப்பராந்தும், அது எப்படா 
வரும்’னு காஞ்சுபோன மரத்துல காத்துட்டு இருக்கிற பொட்டப் பராந்தும்”

“எது? அந்தக் கறித்துண்ட பொதச்சுவச்சமாதிரி சிவீர்’னு காத வச்சுக்கிட்டு வட்டம்போட்டுச் சுத்திவருமே அந்தப் 
பராந்தா?”

“ஆமா, வேற யாரு அங்கபோயி இருப்பா? அடிக்கிற வெயில்’ல அந்தப் கள்ளப்பராந்து றெக்க கூடக் 
கருகிப்போயிருக்கும்’னா பாத்துக்கோயேன்!”

“ஆமா, இம்புட்டயும் தாண்டிப்போகணும்’னு இந்த மனுசனுக்கென்ன தலையெழுத்தா?”

“கேட்டா, மருமகன் காசு கெடைக்குதில்ல’ம்பாரு.”

“ஆனா, வீட்ட விட்டுப் போகணுமே’ன்னு யோசிக்கமாட்டாரா?” என்று கேட்ட முல்லைக்குக் கண்கள் குளமாயின. 

“ஒன்னப் பூப்போலக் கண்ணுக்குள்ள வச்சுக் காப்பாத்துவேன்’னு என் கையப் பிடிச்சுச் சொன்னாரும்மா மருமகன் 
அன்னிக்கி” என்றார் அப்பா.

முல்லையின் வீங்கிய மார்புகள் புடைத்தெழ அவள் ஓங்கி ஒரு பெருமூச்சுவிட்டாள். இந்த ஏந்திய மார்புகளை 
அவன் எத்துணை ஆசையுடன் தழுவி மகிழ்ந்திருப்பான் என்று ஏக்கத்துடன் நொந்துபோனாள். இந்தச் 
சங்குவளையல்கள் குலுங்க அவனைத் தான் தழுவி மகிழ்ந்ததையெல்லாம் மறந்துவிட்டானோ என்று மயக்கம் 
கொண்டாள். தான் வளர்த்த குஞ்சின் ஏக்கம் அந்தத் தந்தைச் சேவலுக்குப் புரியாமலிருக்குமா? 

“ந்தா பாரும்மா, எனக்கென்னமோ தோணுது. அவரு நிச்சயம் போகமாட்டாரு. இங்கயே இருக்கிற வேலயப் 
பாத்துக்கிட்டு, கஞ்சியோ கூழோ - அவரு சம்பாரிச்சுப்போட, நீ கண் கலங்காம இருப்ப’ம்மா” என்றார் ஆதரவாக.

அடுத்த அறையில் அரைத்தூக்கத்தில் அத்தனையையும் கேட்டுக்கொண்டுதான் அவன் படுத்திருந்தான். நன்கு 
விழிப்பு வந்ததும், ஒன்றுமே தெரியாதவன்போல், ஒரு பாவனைச் சோம்பல் முறுக்குப் போட்டுக்கொண்டே 
வெளியே வந்தான்.

முல்லை பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்தாள். 

“அப்பா எங்க?” என்றான் அவசரமாக. 

“அது போயிருச்சு அப்பவே” என்றாள் அவள். 

“எப்ப?” 

“நீ அந்தப்பக்கம் தூங்கப் போன ஒடனே இந்தப் பக்கம் எந்திருச்சுப் போயிருச்சு. கொள்ளச் சோலி கெடக்கு, இப்பப் 
பொறப்பட்டாத்தான் பொழுதிருக்க ஊர்போய்ச்சேர முடியும், மாப்ளகிட்ட சொல்லிரும்’மா-ன்னு சொல்லிட்டுத்தான் 
போச்சு”.

“அப்ப நானு வேல பாக்காம இருக்கிறது; வெளியூருக்குப் போகணும்’குறது-ன்னு ஒன்னுகூட நீ சொல்லலியா?”

“இதெல்லாம்போயி அப்பாகிட்டச் சொல்லுவனா? என்ன இப்படிக் கூறுகெட்டத்தனமா பேசுற?. வந்தாரு, ஊரப்பத்திப் 
பேசுனாரு, சாப்டாரு, போயிட்டாரு, அம்புட்டுதேன். ” என்று அதட்டினாள் முல்லை.

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. முல்லையின் அப்பா வந்துசென்றது நெசம். அவர் தன்னைப்பற்றி 
விசாரித்ததெல்லாம்? கனவா, மெய்யா அல்லது கயிற்றரவா? என்னதான் அவன் வீறாப்பாக வெளியூருக்குப் 
போவேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தாலும் மனத்துக்குள் ஒரு தயக்கம் இருந்துகொண்டேதான் இருந்தது. 
சொல்லப்போனால் அவனுக்கும் அவன் நெஞ்சுக்கும் ஒரு போராட்டமே நடந்துகொண்டு இருந்தது. “போ, போ” 
என்று நெஞ்சம் பிடித்துத் தள்ள, அவன் உள்ளமோ முரண்டுபிடித்தது. நெஞ்சத்துக்கு வேண்டுமானால் காசு 
அருமையானதாக இருக்கலாம். அந்த உள்ளத்துக்குத்தானே தெரியும் இங்கிருக்கும்போது கிடைக்கும் மனைவி சுகம்.

இன்றைக்கு அந்த உள்ளம் மாமனார் வடிவில் வந்து பேசி அவன் மயக்கத்தைத் தெளிவாக்கிவிட்டது.

அவன் பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த முல்லையின் பின்பக்கத்தில் வந்து அவளை ஆசையுடன் 
அணைத்துக்கொண்டான். அவள் விசும்பினாள். “பொறு’ம்மா. ஒன்னு சொல்றேன் கேளு. நான் வெளியூருக்கெல்லாம்
போகல்ல. இங்கதான் இருக்கப்போறேன்.”

“நெசம்மா?”

“நெசம்மாடா தங்கம். நாளக்கே கலப்பயத் தூக்கிக்கிட்டுக் காட்டுக்குப் போவோம். கம்பு வெதைக்க உழுதுபோடணும்” 
என்றான் அவன்.
கரிச் சட்டியைவிட்டுக் கைகளைத் தூக்கிப் பின்புறமாக வளைத்து அவன் கன்னத்தை இறுக்கப்பிடித்தாள் அவள்.

அவன் கன்னமெல்லாம் அடுப்புக்கரி. கன்னத்தில் மட்டுமா? “போ, போ” என்று பொடனியைப் பிடித்துத் 
தள்ளிக்கொண்டிருந்த அவன் நெஞ்சில்தான் அத்தனை கரியும்!!!

அகநானூறு – பாடல் 51 - பாலை – பெருந்தேவனார்

ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்துப்
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி
ஊன் பதித்து அன்ன வெருவரு செஞ் செவி				5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை
நீ உழந்து எய்தும் செய்வினை பொருட்பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
பிரியின் புணர்வது ஆயின், பிரியாது				10
ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ்
சே இழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்
மனை முதல் வினையொடும் உவப்ப
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே

அருஞ்சொற்பொருள்

சுரம் = பாலைவெளி; எரி = வெம்மை; யா = யா என்ற ஒருவகை மரம்; போழ் = பிளந்து செல்; சினை =கிளை;
நசை =விருப்பம்; வெருவரு = அச்சம் வருகின்ற; செஞ்செவி = சிவந்த காது; எருவை = பருந்து; சிறை = சிறகு;
தீய = கருகிப்போக; வேய் = மூங்கில்; பொருட்பிணி = பொருள் மீது கொண்ட ஆசை; சே இழை = சிவந்த அணிகலன்;
தெளிர் = ஒலியெழுப்பு; 

அடிநேர் உரை

ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுவழியில், சூரியனின் கதிர்கள் சுடுதலால்
மிக்க வெம்மை பரவிய  - நீண்ட அடிமரத்தை உடைய யா மரத்தில்
புகுந்துகொண்டு செல்லும் காற்று முழங்கும் பொலிவற்ற உயர்ந்த கிளையில்,
புலால் விருப்பத்துடன் இருக்கும் தன் பேடையின் முகத்தைப் பார்த்து வரும்
மாமிசத்துண்டைப் பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய
ஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக,
வேனில் நீண்டிருக்கும் - மூங்கில்கள் உயர்ந்த - அகன்ற காட்டுவெளியில்
நீ துன்புற்றதால் கிடைக்கும் வேலையினால் அடையும் சம்பாத்தியம்
பூப்போன்ற குளிர்ந்த கண்களையுடைய மாநிறத்தவளைப்
பிரிவதால் பெறுவது என்றால், அவளைப் பிரியாமல்
அவளின் நிமிர்ந்த மார்பகங்கள் விம்ம, பலமுறை
சிவந்த அணிகலன்கள் ஒலிக்க அவளைத் தழுவி, நாள்தோறும்
தலைவியுடன் இல்வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க
நினைப்பாயாக! சிறந்த நெஞ்சமே! நீ அவளைவிட்டுப் பிரிதலை மறந்து -