அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 63 - கேளாய்! வழியோ! மகளை
                
                                 தூக்கம் கெட்டுப்போகுமே
”முல்லை ஓடிப்போய்ட்டா” ஊர் முழுக்கத் தீயாய்ப் பரவியது இச்செய்தி. அந்தப் பெரிய வீட்டில் இரவில் எல்லோரையும் போலப் படுக்கச் சென்றவள் காலையில் எழுந்து பார்த்தால் காணவில்லை. இதை முதலில் கண்டவள் முத்தம்மாதான் - அவள் முல்லையின் வளர்ப்புத்தாய். வீட்டில் அவள் எங்கும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்ட அவள், பின்னர்தான் பேச்சியம்மாளை - முல்லையின் தாயை - எழுப்பிப் படபடப்புடன் காதுக்குள் குசுகுசுவென்று கூறினாள். அவசரமாய் எழுந்து தலையை இழுத்து முடிந்துகொண்டு, முந்தானையை வாரிப்போட்டுக்கொண்டு பேச்சியம்மாள் தானும் வீடு முழுக்கத் தேடினாள். இந்தப் பரபரப்பில் உள் திண்ணையில் படுத்திருந்த முல்லையின் தந்தையும் விழித்துக்கொண்டார். அவர் எழுப்பிய குரலால்தான் செய்தி அடுத்த வீட்டுக்குக் கசிந்து, பின்னர் தெருமுழுக்க, ஊர் முழுக்க என்று காட்டுத்தீயாய்ப் பரவிவிட்டது. “மொதல்ல அந்தப் பொன்னியப் பிடி, செகுள்ள நாலு விடு விட்டா எல்லாத்தயும் கக்கிருவா” முல்லையின் தாய் பொறுமினாள். ஆனால் முத்தம்மா பதறவில்லை. அவளுக்கு அரசல்புரசலாக முல்லையைப் பற்றிய செய்தி தெரிந்திருந்தது. நேரம் வரும்போது அதைப் பேச்சியம்மாளுக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லி அவள் மனத்தை முதலில் சம்மதிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது. ”நான் வேணும்னா பொன்னி வீட்டு வரைக்கும் போயி, விசாரிச்சுட்டு வரவா?” முத்தம்மா கேட்டாள். “அவளச் சொல்லி என்ன பண்ண? நம்ம பொண்ணு இப்படிப் பண்ணிப்புட்டாளே”, தந்தை புலம்பினார். ”சும்மா என்ன ஏதுன்னு மட்டும் கேட்டுட்டு வர்ரேன்” என்று சொன்ன முத்தம்மாவுக்கு யாரும் மறுப்பு சொல்லாததினால், முத்தம்மா பொன்னியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள். “வழியில யார்ட்டயும் ஒண்ணும் பேச்சுவச்சுக்கிறாத” தாய் எச்சரித்தாள். முத்தம்மா தன் வீட்டை நோக்கி விரைவாக வருவதைத் தொலைவிலேயே பார்த்துவிட்ட பொன்னியின் தாய், வீட்டுக்குள் இருந்த பொன்னியிடம் உரத்த குரலில் கூறினாள் “அடியே, முத்தம்மா விறுவிறு’ன்னு வர்ரா. நீ புல்லறுக்கப் போய்ட்டதாச் சொல்லிர்ரேன். நீ வெளிய வராத” பொன்னியின் வீட்டு வாசலில் வந்து நின்ற முத்தம்மா, ‘பொன்னீ, பொன்னீ” என்று குரல் கொடுத்தாள். அப்பொழுதுதான் அவளைப் பார்த்தது போல் காட்டிக்கொண்ட பொன்னியின் தாய், “வா முத்தம்மா, பொன்னி புல்லறுக்க வயக்காட்டுப்பக்கம் போயிருக்கா” என்று கூறிச் சமாளிக்க நினைத்தாள். ”ஏன்டீ, ஒரு பக்கம் விடிஞ்சும் விடியாமலும் இருக்கு, புல்லறுக்கப் போறாளாக்கும். நான் சும்மாதான் விசாரிக்க வந்திருக்கேன். ஏ, பொன்னி வெளிய வாடி” என்று நிதானமாகவே குரல் கொடுத்த முத்தம்மாவை நம்புவதா, வேண்டாமா என்ற சந்தேகத்துடன் பொன்னி வெளியே வந்தாள். “ந்தா பாரு, எனக்கு ஏம் புள்ளயப் பத்தித் தெரியும். ஒன்னய என்ன சொல்லப்போறேன்” முத்தம்மாவின் நிதானமான வார்த்தைகளைக் கேட்ட பொன்னி, சற்றே நிம்மதியுடன், நடந்ததைச் சற்றுச் சுருக்கமாகவே கூறினாள். “அவன் எந்த ஊருடீ? கிழக்கயா, மேற்கயா, தெக்குப்பக்கமா, வடக்குப் பக்கமா? “கிழக்குப் பக்கம்’னுதான் அந்த அண்ணன் சொல்லும்” “கிழக்குலயா? அந்தப் பெரிய மலைக்கு அப்பாலயா?” அரற்றியவாறு வெளித்திண்ணையில் அமர்ந்தாள் முத்தம்மா. “காலங்காத்தால, முத்தத்துல கூடு கட்டியிருக்கிற குருவி ‘கீச்சு, கீச்சு’னு கத்துறதக் கேட்டு முழிச்சுக்கிருவா. என்னய சாணியக் கரைக்கவிடுவாளா, வாசல் தெளிக்கவிடுவாளா, கோலம் போட விடுவாளா? நான் செய்யுறேன், நான் செய்யுறேன்’ட்டு என்னயவே வளைய வளைய வந்துகிட்டு இருப்பாளே. கலகல’ன்னு சிரிச்சுக்கிட்டு வீட்டச் சுத்திச் சுத்தி ஏதாவது ஒரு வேலைய இழுத்துப்போட்டுக்கிட்டு செஞ்சுக்கிட்டு இருப்பாளே. அரமணை மாதிரி அத்தாம் பெரிய வீடே இப்ப வெறிச்சோடிப் போனது கணக்கா’ல்ல இருக்கு” ”இப்படிப் பெரிய வீட்டுல செல்லமா வளந்த பொண்ணு, இத்தனத்தண்டி மலயவா கடந்து போயிருக்கா’ன்னு நெனைக்கியல நெஞ்செல்லாம் நோவுதாத்தா?” சற்றே ஆதரவாகப் பேசினாள் பொன்னி. ”நான் அத நெனச்சு நோகலடீ” என்றாள் முத்தம்மா. பொன்னிக்குப் புரியவில்லை. முத்தம்மாவே பேசட்டும் என்று காத்திருந்தாள். “அந்த மலப்பக்கம் எனக்கும் தெரியும். பாக்குறதுக்கே பயமா இருக்கும் - ஒரே பொட்டக்காடு. ஆளப்பாத்தா வெறட்டுற யானை அங்க இருக்கும். அது முன்னங்கால வளச்சு பூமிய எத்துச்சுன்னா புழுதி பறக்கும். விடியக்கால வெயிலுல தங்கத்தூளு போல அது மின்னும். அந்தப் புழுதிய அங்க இருக்குற காடக்கோழிக ஆணும் பொண்ணுமா கிண்டிக் கிளறி இரை தேடும்” “அந்தப் புழுதிக் காட்டுல, பொசுக்குற வெயில்லுல நடந்து போனா, காலு பொசுக்குமே ஒம் மகளுக்கு’ன்னு மறுகுறயா?” “இல்லடீ, அவதான் வெயிலுக்கு முந்திப் போயிட்டாளே! நான் அத நெனச்சு நோகலடீ” மீண்டும் புதிர் போட்டாள் முத்தம்மா. பொன்னிக்கு ஒன்றும் புரிபடவில்லை. முத்தம்மாவே தொடர்ந்தாள். "அதயெல்லாம் தாண்டிப்போனா அங்க ஒரு ஊரு இருக்கும். களவாணிப்பய ஊரு. மேயுறதுக்காக மலப்பக்கம் யாராவது ஓட்டிட்டு வர்ர பசுமாடுகள, சண்டயப்போட்டுக் கூட்டமா ஓட்டிட்டு வந்துருவாய்ங்க. பொழு(து)சாய அந்தப் பசுமாடெல்லாம் தன்னோட கன்னுக்குட்டிகள நெனச்சுக் கத்தும் பாரு, கண்ராவியா இருக்கும். அங்கதான் ராத்தங்கணும். வீட்டுக்கு நாலு ஆளுக இருக்கும்” “அப்ப எந்த வீட்டுல போயித் தங்குவாங்க’ன்னு நெனச்சு மறுகுறயா? ஏதாவது ஒரு கெழவி இருக்குற ஓட்டக்குடிசை கெடைக்காதா - ஒரு பொழுது தங்குறதுக்கு?” “அது கெடய்க்கும். நடந்து நடந்து மெலிஞ்சுபோன என் மயில்குஞ்சுக்கு அங்க என்ன பஞ்சு மெத்தையா கெடைக்கும்?” “பஞ்சு மெத்தையில படுத்தாத்தான் தூக்கம் வருமாக்கும்? இதான் ஒன் கவலையா? கூட்டிட்டுப் போனவன் தோள அணவா வச்சு சொகம்மா தூங்குவா ஒன் மகள். கவலைய விடு” என்றாள் பொன்னி “இவ எவடீ, எனக்கு அந்தக் கவலையும் இல்லடீ. பசுமாடுகள ஓட்டிட்டு வந்தவய்ங்க, கூட வந்த காளை மாட்ட கட்டிப்போடுறதுக்காக, விடிய விடியக் கொட்டு அடிச்சுக்கிட்டு ஊரே அலர்ர மாதிரி கும்மாளம் போட்டுக்கிட்டு இருப்பாய்ங்க. அந்தக் கலவரத்துல என் தங்க மயிலு எப்படித் தூங்குமோ’ன்னுதான் நெஞ்சு பதறிப்போயி இருக்கேன். பாடல் - அகநானூறு 63 : திணை - பாலை; ஆசிரியர் - கருவூர் கண்ணம்புல்லனார் கேளாய் வாழியோ மகளை நின் தோழி திரு நகர் வரைப்பு_அகம் புலம்ப அவனொடு பெரு மலை இறந்தது நோவேன் நோவல் கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி 5 பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்ப கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல் சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் அஞ்சுவர தகுந கானம் நீந்தி கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து 10 மன்று நிறை பைதல் கூர பல உடன் கறவை தந்த கடும் கால் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை மட மயில் அன்ன என் நடை மெலி பேதை 15 தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் வேட்ட கள்வர் விசி_உறு கடும் கண் சே கோள் அறையும் தண்ணுமை கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே அருஞ்சொற்பொருள்: திருநகர் = அழகிய மாளிகை; புலம்ப = வெறிச்சோடிப்போக; இறந்தது = தாண்டிப் போனது; நோவல் = நோகிறேன்; முடங்கு தாள் = வளைந்த கால்; பொலம் = பொன்; பூழி = புழுதி; தார் = மாலை; மிடற்ற = கழுத்தில் உடையன; செம்பூழ் = காடை; பைதல் = வருத்தம்; எல்லி = இரவு; அசைஇ = தங்கி; செதுகால் = சோர்ந்துபோன கால்; குரம்பை = குடிசை; கலுழும் = கலங்கும். அடிநேர் உரை கேட்பாயாக! வாழ்க! மகளே! உன்னுடைய தோழி அழகிய இல்லத்தின் இடங்களெல்லாம் வெறிச்சோடிப்போக, தன் தலைவனுடன் பெரிய மலைகளைத் தாண்டிச் சென்றதற்காக வருந்தவில்லை - வருந்துகிறேன் கடுமையான யானை தன் நீண்ட கையைச் சேர்த்து வளைந்த காலால் உதைத்த பொன்துகள் கிளம்பும் புழுதியை, பெரிதாக விடிகின்ற விடியலின் ஞாயிற்றின் கதிர்கள் விரிந்து வெயில் எறிக்க, கரிய மாலை போட்டது போன்ற கழுத்தையுடைய காடையின் சேவல் தன் சிறிய புல்லிய பெடையுடன் குடையும் அவ்விடங்களையுடைய அஞ்சத் தகுந்த பாலைநிலத்தைக் கடந்து, தம் கன்றுகளைக் காணாமல் துயரம் மிகுந்தனவாய்ச் செவிகளைச் சாய்த்து மன்றத்தில் நெருக்கிநிற்பதால் ஆகும் துன்பம் மிகுந்துபோக, பலவும் சேர்ந்த கறவைகளைக் கொண்டுவந்த மிகுந்த வேகமுள்ள காலையுடைய மறவர்களின் ஆரவாரமிக்க சிறிய ஊரில் இரவில் தங்கி முதிய பெண்ணின் சோர்ந்த கால்களையுடைய குடிசையில் இளம் மயிலைப் போன்ற எனது நடை மெலிந்த பேதைமகள் தன் தலைவன் தனது தோளையே அணையாக வைத்துத் தூங்கப்பண்ணவும் தூங்காதவளாகி, வேட்டையாடும் கள்வரின் வாரினை இழுத்துக்கட்டிய கடிய கண்களையுடைய, காளைகளைப் பிடிக்கும்போது அடிக்கும் பறையின் ஒலியினைக் கேட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்து அழும் என் நெஞ்சைக் குறித்து