அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 57 - சிறு பைந்தூவி செங்கால் பெடை
                
                                 பீர்க்கு போல் நெற்றி


பொருளீட்டியது போதும், இனி புறப்படவேண்டியதுதான் என்று முடிவு கட்டியவனாய், தன் முதலாளியாகிய 
வணிகரிடம் சென்றான் அவன். ஏற்கனவே அவரிடம் ஓரிரு நாட்களுக்கு முன்னர் சொல்லிவைத்திருந்தான் - தன் 
கணக்கு வழக்குகளை முடித்துவைக்குமாறு. அவன் முகத்தைப் பார்த்த அவர் கேட்டார், “என்னப்பா, கணக்கை 
முடிச்சுறலாமா?” ”முடிச்சுருங்கய்யா, நாளக்குக் காலையில வெள்ளென புறப்படணும்” என்று சொன்ன அவன் அந்த 
மளிகைக்கடையின் வாசலில் இருந்த படிக்கட்டில் அமர்ந்தான். அவனுக்குரிய ஏடுகளைக் கொண்டுவந்த அந்த 
முதலாளி, அவற்றை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தார். “ஐயா, இந்தக் கணக்கு விபரமெல்லாம் எனக்கு 
வேண்டாம். மொத்தப் பணத்தைச் சொல்லி, அதப் பொன்னாக் குடுத்துருங்கய்யா” என்றான் அவன். அவன் இருப்பது 
முசிறிப் பட்டனம் அல்லவா! மேற்கத்திய யவனர்கள் கப்பலில் பொன்னை அள்ளிக்கொண்டு வந்து நம்மூர் மிளகு, 
லவங்கம், முத்து போன்றவற்றை அள்ளிக்கொண்டு திரும்பும் இடமல்லவா! தனக்குரிய பணத்தை வாங்கிக் 
கட்டிக்கொண்டு, அவன் தன் இருப்பிடத்திற்கு வந்துசேர இருட்டாகிவிட்டது. 

அறை நண்பன் அதற்குள் விளக்கினை ஏற்றிவைத்திருந்தான். “என்னப்பா, கணக்கு முடிச்சாச்சா? நாளைக்குக் 
கிளம்புறயா?” என்று விசாரித்தான். “போதும் சம்பாரிச்சது, இனிப் பொறப்பட வேண்டியதுதான்” என்று தன் 
பொருள்களை மூட்டைகட்ட ஆரம்பித்தான் அவன். 

“ஆமா, நான் வர்ரதுக்கு முன்னாடியே நீ இங்க இருக்க. ஊரப்பக்கம் போகலியா?” என்று அவன் தன் நண்பனைப் 
பார்த்துக் கேட்டான். 

“எனக்கென்ன ஒண்டிக்கட்டை, எந்த ஊருல இருந்தா என்ன?” என்றான் நண்பன்.

“ஆமா, நீ எப்ப இந்த ஊருக்கு வந்த?”

“நம்ம பாண்டி மகாராசா இங்க படையெடுத்து வந்தாருல்ல அப்பத்தான் நானும் வந்தேன்”

“முசிறி’ங்குறது சேர நாடு. இங்க எதுக்கு அந்த ராசா வந்தாரு?”

“அது ஒரு பெரிய கதை. முசிறி’ங்குறது சேர நாடுதான். இங்க வர்ர நிறைய யவனக் கப்பலாலதான் இதுக்கு 
வளப்பமே!. அதக் கெடுக்கப்பாத்தாங்க எங்க இருந்தோ வந்த கடல் கொள்ளைக்காரங்க. அவங்கள அடக்க முடியல 
இந்த ராசாவுக்கு. அதனால வெளிநாட்டு வாணிபம் ரொம்ப உருக்குலஞ்சுபோச்சு. அதனால பாண்டிநாடும் 
பாதிக்கப்பட்டுச்சு. பாத்தாரு பாண்டிநாட்டுச் செழியன். படையெடுத்து வந்து ஒரே போடு. முசிறி பணிஞ்சுருச்சு. 
அப்புறம் கொள்ளைக்காரங்களையும் அந்தப் பாண்டி ராசா அடக்குனப்புறம்தான் முசிறி முசிறியாச்சு”

“சண்டை ரொம்ப உக்கிரமமா நடந்துச்சோ?”

“அதையேன் கேக்குற?  ரெண்டு பக்கமும் ரொம்பச் சேதம். செத்தவங்களக் காட்டிலும் காயப்பட்டவங்க நிறையப் 
பேரு. அவங்க அழுதுகிட்டு எழுப்புன ஓலம் இருக்கே, அப்பப்பா, காதுகொடுத்துக் கேக்கமுடியாது”

நண்பன் சொன்னதைக் கேட்டதும் அவனுக்குத் தன் இனிய மனைவியின் நினைவு வந்தது. இப்படித்தானே, நம்ம 
பிரிஞ்சு வந்துட்டதால அவ மனசளவுல காயப்பட்டு, ராத்திரி பகலா அழுதுகிட்டு அவ மனசும் பெருசா ஓலம் 
எழுப்பிக்கிட்டு இருக்கும். அவனையும் அறியாமல் ஒரு பெருமுச்சு கிளம்பியது அவனிடமிருந்து. 

“என்ன, வீட்டுக்காரி நெனப்பு வந்துருச்சாக்கும், பெருமூச்சு பலமா இருக்கு” நண்பன் சிரித்தான். 

அடுத்த நாள் காலை. நன்றாகக்கூட விடியவில்லை. நண்பனை அரைத்தூக்கத்தில் எழுப்பிச் சொல்லிவீட்டுத் தன் 
உடைமைகளை எடுத்துக்கொண்டு அவன் ஊருக்குக் கிளம்பிவிட்டான். ஆங்காங்கே இருக்கும் ஊர்களைக் கடந்து, 
கிடைக்கிற இடத்தில் சாப்பிட்டுவிட்டு அப்புறம் நீண்டு கிடந்த அந்தப் பாலை வெளிக்கு வந்துவிட்டான். நல்ல உச்சி 
வெயில். பாதையில் ஒருவரும் இல்லை. தொலைவில் ஒரு குன்று தென்பட்டது. பொழுது சாய்வதற்கு முன்னர் 
அந்தக் குன்றில் ஏறி இறங்கி அடுத்த பக்கம் போகவேண்டும்.

தன்னந்தனியே நடந்து சென்றுகொண்டிருந்தவன் தலைக்கு மேலே ஒரு பெரிய வௌவால் பறந்து சென்றது. அது 
ஒரு பழந்தின்னி வௌவால். பசியினாலோ, வெயில் கொடுமையினாலோ ரொம்ப உயரத்தில் பறக்காமல் தாழவே 
பறந்து சென்றது. அவன் அதை அண்ணாந்து பார்த்தான். அதன் சிறிய மெல்லிய சிறகுகளுக்குக் கீழே மடக்கி 
வைத்திருந்த சிவந்த கால்கள்  தெளிவாகத் தெரிந்தன. இத்தகைய வௌவால்களுக்கு ஒரு முறை உண்ணுவதற்குப் 
பழங்கள் கிடைத்தால், அவை அந்த இடத்தை மறக்கமாட்டா - மீண்டும் மீண்டும் அந்த இடத்தைத் தேடி வரும் - 
என்று அவன் அறிவான். ஆக, அருகில் எங்கேயோ ஒரு பழ மரம் இருக்கிறது என்று எண்ணியவாறே எட்டி 
நடையைப் போட்டவன் வியப்படைந்தான். அந்த வௌவால் திரும்பி வந்துகொண்டிருந்தது. அதாவது அதற்குப் 
பழங்கள் கிடைக்கவில்லை என்பதை அறிந்துகொண்டான். எனினும் நிழலுக்காவது ஒரு மரம் இருக்கும் என்று 
விரைந்து நடக்க ஆரம்பித்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு மரம் தென்பட்டது. சற்று உற்று நோக்கியவன் அதிர்ந்துபோனான்.
அங்கே ஒரு யானை நின்றுகொண்டிருந்தது. தன் கையை உயர்த்தி மரத்தின் கிளையைப் பிடித்து 
ஆட்டிக்கொண்டிருந்தது. சில யானைகள் ஆட்களைப் பார்த்தால் சட்டைசெய்யாமல் நகர்ந்துபோகும். ஆனால் சில 
யானைகள் வெருண்டு தாக்க வரும். இது எந்த மாதிரி யானையோ என்று எண்ணியவாறு கவனத்துடன் அவன் 
மரத்தை நெருங்கினான். சற்று அருகில் சென்றபின்னர்தான் தான் அஞ்சியது தவறு என்று உணர்ந்தான். ஓர் இத்தி 
மரம் காய்ந்துபோய் நின்றுகொண்டிருந்தது. அதன் பல விழுதுகள் ஒன்றனையொன்று முறுக்கிக்கொண்டு கீழே 
இறங்கி, அங்கிருந்த ஒரு பெரிய குண்டாங்கல் பாறையின் மேல் உரசியவாறு காற்றுக்கு ஆடிக்கொண்டிருந்தன. 
அந்தப் பாறைதான் அவனுக்கு யானையாகவும், அதன் மேல் உரசியவாறு ஆடிக்கொண்டிருந்த ஒன்றுசேர்ந்த 
விழுதுகள், யானையின் தூக்கிய துதிக்கையாகவும் தோன்றியிருக்கின்றன. 

மரத்தின் நிழலுக்கு வந்து சேர்ந்த அவன், நிம்மதியாகச் சற்று அமர்ந்து இளைப்பாறினான். சற்றுத் தொலைவிலிருந்த
குன்றின் அடிவாரத்தில் சில வீடுகள் தென்பட்டன. அங்கே உண்பதற்கு ஏதாவது கிடைக்கும் என்று சற்றே 
நிம்மதியடைந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த அத்துவானக் காட்டில் எங்கும் ஆள் அரவமே இல்லை. 
கண்ணுக்கெட்டிய தூரம் பசுமையே காணப்படாத அந்தப் பொட்டல் வெளியில் அவன் கண் எதிரே சில பச்சை 
இலைகள் காணப்பட்டன. அது ஒரு பீர்க்கங்கொடி. என்றைக்கோ பெய்த மழையில் எப்படியோ முளைத்த அது 
தனக்கு அருகில் தரை மட்டும் தாழ்ந்திருந்த ஒரு விழுதைப் பற்றிக்கொண்டு அந்த விழுதோடு ஊஞ்சல் 
ஆடிக்கொண்டிருந்தது. தனக்குரிய பருவம் வந்ததால் மஞ்சளாக ஒரு பூவையும் விட்டிருந்தது அந்தக் கொடி. 

அந்த மஞ்சள் பூவைப் பார்த்ததும் ‘குப்’பென்று அவன் மனத்துக்குள் வேர்த்தது. தன் மனைவியின் அழகு முகம் 
நினைவுக்கு வந்தது. இப்படித்தான் போயிருக்கும் அந்த அழகுக் கொடியின் முகமும். மொட்டு விரிந்த மலரினைப் 
போன்ற முழுமதிதான் அவள் முகம். பட்டொளி வீசும் அந்தப் பசு நிலா, இன்று மங்கிப்போன அழகுடன் இந்த 
மஞ்சள் நிறப் பீர்க்கம் பூப்போல வெளிறிப்போய் ஒளியிழந்து காணப்படுமோ என்று நினைத்துப் பார்க்கும்போதே 
அவன் நெஞ்செல்லாம் கனத்தது.

அகநானூறு - பாடல் 57 : ஆசிரியர் - நக்கீரர் : திணை - பாலை
பொருள்வயின் பிரிந்த தலைவன் கிழத்தியை நினைந்து சொல்லியது.

சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து
புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை		5
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ்
இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொர
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை
யாமே எமியம் ஆக தாமே			10
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி			15
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து
பானாள் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே

அருஞ்சொற்பொருள்:

தூவி = சிறகு; வாவுப்பறை = வாவிப்பறத்தல்; வாவு = தாவு, leap; நெடுநீர் = நீண்ட தன்மை; 
உலவை = உலர்ந்துபோன மரக்கிளை; இற்றி = இத்தி மரம்;துறுகல் = குத்துப்பாறை, குண்டாங்கல்; வளி = காற்று; 
நிவப்பு = உயர்த்தல்; தூங்கு = தொங்கு; வைப்பு = ஊர்; என்றூழ் = கோடைகாலம், வெயில்;
ஒரீஇ = ஒருவி, நீங்கப்பெற்று; வீ = பூ, ஏர் = அழகு; சுவல் = பிடரி மயிர்; முற்றி = முற்றுகையிட்டு; ஞாட்பு = போர்; 
கங்குல் = இரவு;

அடிநேர் உரை

சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து,
வெயில் தகதகக்கும் வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது
அம் மரத்தில் எந்நாளில் புதிய கனிகள் கிடைக்குமோ என நினைந்து வருந்தி,
உட்புகுந்து கனிதின்ன ஏங்கிப்போகும் புல்லிய கிளைகளையுடைய
குட்டையான அடிமரத்தையுடைய இத்திமரத்தில் புல்லிய உச்சியை உடைய நீண்ட விழுதுகள்
பெரிய சொரசொரப்பான உருண்டைக் கல்லைத் தொட்டுக்கொண்டு, காற்றடிப்பதால்
பெரிய துதிக்கையையுடைய யானை உயர்த்தினாற்போன்று ஆடும்,
குன்றத்துச் சிற்றூர்களைக் கொண்ட கோடைகாலத்து நெடிய வெளியில்
யான் தனியனாக இருக்க, தலைவியோ,
குளிர்ந்த நிலா விரிந்த பல கதிர்களையுடைய குறைமதியைப் போல,
மிகவும் சிறந்த ஆராயத்தக்க அழகு நீங்கப்பெற்று,
சிறிய பீர்க்கம்பூவினைப் போன்ற நிறம் கொண்டதோ!
கொய்த பிடரி மயிர்க் குதிரைகளையுடைய, கொடி கட்டிய தேரையுடைய பாண்டியன்
பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து,
யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்
விழுப்புண்பட்டவரைப் போல மிகவும் மனம் நொந்து வருந்தி
நடு இரவிலும் பகலிலும் 
நிற்காமல் அழுவோளின் அழகிய சிறு நெற்றியே!