அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 59 - தண் கயத்து அமர்ந்த
                
                                 பொருள் தேடிப்போனவர்


அன்றைக்கு முழுதும் என்னவோ பொன்னிக்கு முல்லை நினைவாகவே இருந்தது. திருமணம் ஆகிக் கணவன் 
வீட்டுக்கு முல்லை புறப்பட்டுப்போகும்போது கண்கலங்க அவள் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு பிரியா விடை
கொடுத்து அனுப்பிய பின் அவளைப் பார்க்கவே இல்லை. அடுத்த ஊரில்தான் இருக்கிறாள். எட்டிநடந்தால் மூன்று 
நாழிகைதான் ஆகும். போய்ப் பார்த்துவிட்டு வந்தால் என்ன? தன் ஆத்தாளிடம் கேட்டாள். அவள் உடனே சம்மதிக்க,
முல்லையின் வீட்டுக்கு ஓடோடிச் சென்று முல்லையின் தாயிடம் சொன்னாள். அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. 
முல்லைக்குப் பிடித்த பலகாரங்கள் செய்துதருவதாகச் சொன்னாள்.

மறுநாள் வெள்ளென பொன்னி கிளம்பிவிட்டாள். முல்லையை எப்போது பார்ப்போம் என்றிருந்தது அவளுக்கு. 
முல்லையை நினைத்ததும் அவள் நினைவுக்கு வந்தது முல்லையின் அழகிய கண்கள்தாம். தாமரை மலர்கள் 
நிறையப் பூத்திருக்கும் குளிர்ந்த குளத்தில் வண்டுகள் மொய்க்க ஒன்றுபோல் இருக்கும் இரண்டு தாமரை மலர்கள் 
ஒன்றையொன்று பார்த்தபடி இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கும் அந்த அழகுக் கண்கள். அதே நினைப்பில்
வெயில் சுள்ளென்று அடிப்பதற்கு முன்பாகவே முல்லையின் ஊரை அடைந்தவள், அங்கு விசாரித்து முல்லையின் 
வீட்டை அடைந்து கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த முல்லை, முதலில் பொன்னியைப் பார்த்ததும் இன்ப 
அதிர்ச்சியில் ஒரு நொடி அசந்துபோனாள். ஆனால் முல்லையைப் பார்த்த பொன்னி உண்மையாகவே பெரும் 
அதிர்ச்சிக்கு உள்ளானாள். அப்படி இருந்தது முல்லையின் நிலை. அவள் மனத்துக்குள் நினைத்து மகிழ்ந்துகொண்டு 
வந்த அழகுக் கண்கள் தம்முடைய பெரிய அழகினை இழந்து வாடிய மலர்களைப் போல் கூம்பிப்போய்க் கிடந்தன.

“ஏண்டி! என்ன ஆச்சு உனக்கு? என்ன இப்படிப் போயிட்ட? கண்ணெல்லாம் குழிவிழுந்து போயி!” என்று 
அடுக்கடுக்காகக் கேள்விகளைத் தொடுத்தாள்.

“முதல்ல உள்ள வாடி, அப்புறம் பேசிக்கலாம்” என்று அவளைக் கையைப்பிடித்து இழுத்து வீட்டுக்குள் அழைத்து 
வந்தாள் முல்லை. 

வாசலுக்குள் நுழைந்து, உள்முற்றத்தைத் தாண்டி, அங்கிருந்த பெரிய திண்ணையில் கூரை நிழலில் இருவரும் 
அமர்ந்தார்கள்.

“எங்க அண்ணன்? வேலைக்குப் போயிருச்சா? எப்ப வரும்? வந்ததும் கேக்கணும், ‘எப்படிக் கூட்டிவந்தீக பிள்ளைய, 
இப்படி ஆக்கியிருக்கீகளே’ன்னு” பொறுமினாள் பொன்னி.

“அவர் எங்க இங்க இருக்காரு! அவர் போயி ஒரு வாரம் ஆச்சு. பொருள் சம்பாரிக்கணுமாம். இங்கயெல்லாம் 
நெறயாக் கெடைக்காதாம். வெளிநாடு போனா அள்ளிக்கிட்டு வரலாமாம். நானும் எவ்வளவோ சொல்லிப்பாத்தேன்,
‘இருக்குறத வச்சுப் பொழப்போம்’னு. மனுசன் கேட்டாத்தானே!” கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே
முல்லை புலம்பினாள்.

“ஏண்டீ, சாப்பிடுறயா? நாம்பாட்டுக்குப் பொலம்பிக்கிட்டு இருக்கேன்” 

“பழய கஞ்சியக் குடிச்சிட்டுத்தான் கெளம்பினேன். இப்ப ஒண்ணும் வேணாம். சரி, வெளிநாடு’ன்னா? 
கொள்ளத்தூரமா?”

“ஆமா, காடு மலையெல்லாம் தாண்டி போகணுமாம். யானையெல்லாம் இருக்குமாம்”

”யானை’ன்னதும் ஞாபகத்துக்கு வருது. காட்டுல இருக்குற ஆண்யானை தன் பொஞ்சாதி ஆனைகிட்ட ரொம்பப் 
பிரியமா இருக்குமாம். மரத்து உச்சியில இருக்குற கொழுந்து பொஞ்சாதிக்கு எட்டலை’ன்னா, புருசன் யானை 
ஒசரமா இருக்குமில்ல, அது அந்தக் கிளைய வளைச்சுக் கொடுக்குமாம். அதப் பாத்துங்கூடவா இந்த மனுசனுக்குத் 
தன் பொஞ்சாதி ஞாபகம் வந்து திரும்பி வரல்ல?” பொன்னி பொரிந்தாள்.

“அதெல்லாம் எங்க ஞாபகத்துக்கு வரப்போகுது - பொஞ்சாதியவிட பொருளுதான் பெரிசு’ன்னு நெனச்சுக்கிட்டு போன
மனுசனுக்கு? ஒருவேளை குருந்த மரத்துல ஏறி நின்னு கொப்புகளை வளைச்சுக்கொடுத்த குறும்புக்கார கண்ணன் 
தான் நினைவுக்கு வந்திருப்பான்.”

“அதாரு அந்தக் கண்ணன்?”

“அதாண்டி, நம்ம கிட்ணன்’னு சொல்றோம் இல்லையா? அவங்க கிருஷ்ணன்’னு சொல்வாங்க. அந்தக் கிட்ணன் 
சின்னப் பையனா இருக்குறப்ப நெறய தண்ணி ஓடுற யமுனை ஆத்துல பொம்பளைய்ங்க குளிச்சுகிட்டு 
இருக்குறப்போ அவங்களுக்குத் தெரியாம, அவங்க துணிமணியெல்லாம் எடுத்து ஒளிச்சுவச்சுட்டானாம். குளிச்சு 
முடிச்சதுக்கு அப்புறம் அந்த பொம்பளய்ங்க துணியக் காணாம, அங்க இருந்த சின்னப்பையன் கிட்ணனைக் 
கேட்டாங்களாம். அவன் அந்த மரத்துமேல ஏறி கொப்புகளக் கீழ வளச்சுவிட்டு, அந்த இலைகளைப் பிடுங்கி 
உடுப்பா உடுத்திக்கிங்க’ன்னு சொன்னானாம். இந்த ஆண்யானை தன் பொஞ்சாதியானைக்குக் கொப்ப 
வளைச்சுக்குடுக்கிறதப் பாத்தா ஒங்க அண்ணனுக்கு இந்தக் கதை வேணும்னா நெனவுக்கு வந்திருக்கும், 
நம்மளப்பத்தி நெனய்ச்சிருந்தார்னாத்தான் போயிருக்கவே மாட்டாரே”

“அப்படி ஒரேயடியா அண்ணனச் சொல்லமுடியாதுடி. இன்னுங்கொஞ்சம் காலம் போனா புள்ள குட்டி’ன்னு ஆயிரும்.
அப்புறம் போகமுடியுமா? புள்ள குட்டிகள வளக்கக் கையில கொஞ்சம் காசு வேணுமில்ல. அதான் அண்ணன் 
போயிருக்கு. மத்தபடி ஒன் மேல அண்ணனுக்குக் கொள்ளப் பிரியம்’ல” சமாதானம் கூறினாள் பொன்னி. 

“அதெல்லாம் ஒரு காலம்’டி. கலியாணத்துக்கு முன்னாடி, ஒளிஞ்சு ஒளிஞ்சு பாத்துக்கிட்டு இருந்தப்ப, ஒருநாளு 
திருப்பரங்குன்றத்துல இருக்குற சுனையில இருந்து ஒரு அழகான செங்குவளைப் பூவைப் பிடுங்கியாந்து கொடுக்க, 
அத நான் என் கூந்தலோட இறுக்கிக் கட்டிக் கொண்டை போட்டப்ப, என்னயத் திரும்பி நிக்கச் சொல்லி, என் 
பின்னழகப் பாத்துப் பாத்துப் பூரிச்சுப்போனாருடீ. அப்படியே இருந்திருக்கலாம் போலிருக்கு” - என்று சொல்லி ஒரு 
பெருமூச்சு விட்டாள் முல்லை.

”சும்மா இருடி, அப்படியே எத்தன நாள்தான் இருந்துருவ? தன் பொஞ்சாதி யானைக்குக் கிளைய வளைச்சுக்கொடுத்த
யானை என்ன பண்ணுமாம் தெரியுமா? தன் கன்னத்துல வழியுற மதநீர மொய்க்கிற வண்டுகள அந்தக் 
கிளையையே புடுங்கி அடிச்சு ஓட்டுமாம். அதுமாதிரி, தன் நெஞ்ச மொய்க்கிற பொருளாசய அடிச்சு வெரட்டி 
அண்ணன் வெரசா திரும்பி வந்துரும். 

ஒரு காலத்தில் பருத்து அழகாக இறங்கி இருக்கும் இரண்டு தோள்களையும் பற்றிக்கொண்ட பொன்னி, 
“வாடிப்போன இந்த தோள் ரெண்டும் மறுபடியும் வடிவான மூங்கிலப்போல ஆகுறமாதிரி அண்ணன் கொஞ்ச 
நாள்ல வந்துரும், கவலப்படாத” என்று ஆறுதல் கூறிய பொன்னி, முல்லையை அப்படியே கட்டிக்கொண்டாள்.

பாடல் - அகநானூறு - 59; திணை - பாலை; 
பாடியவர் - மதுரை மருதன் இளநாகனார்

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும்
வருந்தினை வாழியர் நீயே வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்		5
மரம் செல மிதித்த மாஅல் போல
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்		10
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த
தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம்
தாம் பாராட்டிய_காலையும் உள்ளார்		15
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு
அரும் செயல் பொருள்_பிணி முன்னி நம்
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே

அருஞ்சொற்பொருள் : 

துணை மலர் = ஒரே மாதிரியான மலர்கள்; பெருந்தகை = பேரழகு; தொழுநை = யமுனை ஆறு; 
அண்டர் மகளிர் = ஆயர் மகளிர்; மாஅல் = திருமால், கண்ணன்; யாஅம் = யா என்னும் மரம்; கவுள் = கன்னம்; 
ஞிமிறு = வண்டுகள்;  கடியும் = ஓட்டும்; சூர் = சூர பதுமன்; சந்து = சந்தனமரம்; 
செண் = ஒப்பனை, ஒப்பனை செய்யப்பட்ட கொண்டை; சிறுபுறம் = முதுகு; 

அடிநேர் உரை:

குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற
பெரிய அழகினை இழந்த கண்களையுடையவளாய்ப் பெரிதும்
வருந்துகின்றாய் வாழ்வாயாக நீயே; வடக்குத் திசையில் உள்ள
வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில்
ஆயர் பெண்கள் குளிர்ந்த தழைகளை உடுத்திக்கொள்ள
மரம் வளையும்படி மிதித்துத் தந்த கண்ணன் போல
புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை
உயர்ந்து நிற்கும் யா மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில்
படியும் வண்டுகளை ஓட்டும் ஆண்யானை - தோழி
சூரபதுமனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிவிடும் இலையுள்ள நீண்ட வேலின்
சினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள
இனிய சுவையுள்ள புதிய சுனையில் வழவழப்பான மேற்பகுதியையுடைய
குளிர்ந்த மணமுள்ள குவளை அணிந்த கொண்டை அசையும் முதுகினை
தான் பாராட்டிய காலத்தினையும் நினைத்துப்பாராமல்,
புடைத்த பக்கங்களைக் கொண்ட மூங்கில் போன்ற தோள்கள் மெலிய, தொலைநாட்டில்
அரிய செயலாகிய பொருளீட்டலை நினைத்து, நம்மைப்
பிரிந்து தூரத்தே தங்கியிருப்பவர் சென்ற வழியில்