அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை-
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 49 - கிளியும் பந்தும் கழங்கும்
                
                                 “அப்பவே தெரியாமப் போச்சே!””


“யம்மா! முல்லை! முல்லை!” என்று கூவிக்கொண்டு நாலாபக்கமும் பார்த்துக்கொண்டே அந்த நெடிய வீட்டின் 
ஒவ்வொரு கட்டாய்க் கடந்துகொண்டே வந்தாள் முத்து என்ற முத்தம்மா. முத்து முல்லையின் வளர்ப்புத்தாய். 
நெடுநாட்களாகவே அந்த வீட்டின் அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்பவள். வீட்டிற்கு வெளியே முற்றத்தில், 
ஒரு பந்தல்காலைப் பிடித்துக்கொண்டு எதிரே இருக்கும் பெரிய மலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் 
முல்லை.

“இங்க என்ன செஞ்சுக்கிறுக்கா இவ?” என்றவாறு நனைந்திருக்கும் கைகளை முந்தானையில் துடைத்தவாறு 
யோசனையில் ஆழ்ந்தாள் முத்து. “பொதுவா, இந்நேரத்துக்கு அந்தக் கூட்டுக் கிளிகூடக் கொஞ்சிக்கிட்டு இருப்பா. 
இல்லன்னா அந்தக் கூட்டுக்காரிகளோட பந்து வெளயாடிட்டு இருப்பா, இல்ல, தட்டாங்கல்லு ஆடிட்டு இருப்பா. 
ஒரே கூத்துக் கும்மாளமுமா என்னா சிரிப்புச் சத்தம் கேக்கும். இப்ப அவளுகளயும் காணோம். அவளுக வராம 
இருக்கமாட்டாளுக! வரவேண்டாம்’னு சொல்லிட்டாளோ?” 

இவ்வாறு முத்து யோசனையில் ஆழ்ந்தவண்ணம் கொஞ்சம் தயங்கி நின்றாள். அப்போது தெருவில் 
தட்டைக்குச்சியில் நுனியை மடக்கி, தரையில் தேய்த்து ஓடிக்கொண்டுவந்த சிறுவன் “அம்மா” என்று காலைப் 
பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். காலில் முள் தைத்துவிட்டதுபோலும். வாசலோரம் நின்றிருந்த முல்லை 
மரக்கட்டை போல் அசையாது நின்றுகொண்டிருந்தாள். எதிர்வீட்டுக் கண்ணம்மாதான் ஓடிவந்து முள்ளைப் 
பிடுங்கிவிட்டாள். எதுவுமே நடக்காததுபோல் நின்றுகொண்டிருந்த முல்லையைப் புதிராகப் பார்த்தவாறு 
போய்விட்டாள். சாதாரண நேரமாயிருந்தால் முல்லை முதலில் ஓடிப்போய்ச் சிறுவனைக் கவனித்திருப்பாள். 
அவ்வளவு அருள் உள்ளம் படைத்தவள் அவள். இன்றைக்கு என்ன ஆயிற்று இவளுக்கு? 

“ம்மா” என்று கன்றுக்குட்டி முடியாத குரலில் கத்திக்கொண்டே எழுந்து நிற்க முயன்றது. நேற்றுத்தான் ஈன்றது. 
எனவே கால்களை ஊன்றி எழ முடியாமல் தவித்தது. ஒருவாறு தட்டுத்தடுமாறி எழுந்த கன்று நிற்பதற்குத் 
தள்ளாடியது. கால் தொடைகள் வலுவின்றி வளைந்துபோய் இருந்தன. மிக்க ஆதரவுடன் அதன் தாய்ப்பசு கன்றின் 
முதுகை நக்கிக்கொடுத்தது. நேற்று ஈன்றபோது இந்த முல்லை எவ்வளவு மகிழ்ச்சியுடன் கைகளைத் தட்டிக் 
குதூகலித்தாள்! இன்று என்ன ஆயிற்று இவளுக்கு? முடியாமல் தவித்த கன்றின் பக்கம் முகத்தைக் கூடத் 
திருப்பவில்லையே! 

முல்லையின் தோற்றம்கூட மாறியதுபோல் தோன்றியது முத்தம்மாவுக்கு. நிற்கும்போது கொல்லைப்பக்கத்தில் 
படர்ந்திருக்கும் கொடிபோல் அவ்வளவு ஒய்யாரமாக இருப்பாள். “இன்னக்கி என்னமோ வெரச்ச கட்ட போல 
நிக்கிறாளே”, வியந்தாள் முத்தம்மா.

“எப்பவுமே குடுகுடு’ன்னு ஓடிகிட்டும் ஆடிகிட்டும் இருப்பாளே! சும்மா ஒரு எடத்துல ஒக்காரவே மாட்டாளே! 
இன்னிக்கி இவ்வளவு நேரம் என்னத்தயோ யோசிச்சுக்கிட்டு நின்னுகிட்டே இருக்காளே! ஊகும்! இவ முன்னப்போல 
இல்ல, இந்தப் பாழாப்போன பாதகத்திக்கு ஒன்னுமே புரியலியே!”

முல்லையின் முதுகுமட்டும்தான் தெரிந்தது முத்தம்மாவுக்கு. அவளின் முகக்குறிப்பையும் பார்க்க எண்ணி அவள் 
அருகே சென்றாள் முத்து. மெல்ல அவளை அணைத்து, மார்போடு சேர்த்துக்கொண்டு, வலக்கையை நீட்டி 
முல்லையின் நெற்றியை நீவிவிட்டாள். அதையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தவள் போல் முல்லை கழுத்தைத் 
திருப்பி, முத்துவின் மார்பில் முகம்புதைத்தாள். அப்படியே திரும்பிக் கைகளை எடுத்து முத்தம்மாவின் இடுப்பைச் 
சுற்றிக் கட்டிக்கொண்டாள். கட்டு விடும்போதெல்லாம் திரும்பத் திரும்ப இறுக்க அணைத்துக்கொண்டாள். அவள் 
முகம் பதித்திருந்த அழுத்தத்தில் முத்தம்மாவின் மார்பில் புழுக்கம் உண்டாகி, அவளின் பெருத்த மார்புகளின் 
இடையே வியர்வை முகிழ்த்துக் கசிந்தது. முத்தம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நெருக்கம் அவளுக்கு 
மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. அவள் மனம் இனம்புரியாத சஞ்சலத்தில் ஆழ்ந்தது.

மறுநாள் விடிந்தபோது முல்லையைக் காணவில்லை. வீடே அமளிதுமளிப்பட்டது. யார் முகத்திலும் ஈயாடவில்லை. 
முந்தின நாள் முல்லை நின்றிருந்த இடத்தில் வந்து தரையில் அமர்ந்தாள் முத்தம்மா. இப்போது அவளுக்குப் 
புரிந்தது – முல்லையின் முந்தின நாள் செயல்பாடுகள். நேற்றுக் காலையில் எப்போதும்போல்தான் இருந்தாள் 
முல்லை. மாலையில்தான் அவள் மாறி இருந்தாள். என்ன நடந்தது? இடையில் மத்தியானம் எல்லாரும் 
அயர்ந்திருந்தவேளையில் அந்தப் பொன்னி – அதுதான் முல்லையின் தோழி – வந்திருந்தாள். முல்லையைக் 
கூட்டிக்கொண்டு முன்பக்கம் போனாள். ஏதோ குசுகுசு-வென்று இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். 
தூங்குகிறவர்களைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்றுதான் அவர்கள் அங்கே சென்று அப்படிப் 
பேசிக்கொண்டார்கள் என்று எண்ணினாள் முத்தம்மா. இப்பொழுதல்லவா தெரிகிறது. வந்தவள் சேதி கொண்டு 
வந்திருக்கிறாள் என்று. என்ன சேதி என்று இப்போது புரிந்தது. அதைச் சொல்லி அனுப்பியது யார்? அவன்கூடத்தான் 
இவள் போயிருக்கிறாள். அவன் யாராயிருந்தால் என்ன? நினைத்ததைச் சாதித்த நெடுந்தகை ஆகிவிட்டான். 

“இந்த மத்தியான வெயிலில எங்க போய்க்கிட்டு இருக்காளோ? காய்ஞ்சுபோன மர நெழல்-லக் கால நீட்டி 
ஒக்காந்திருக்காளோ? கூட்டிக்கிட்டுப் போனவன் கொஞ்சிகிட்டு இருப்பான். என்னத்தச் சாப்பிட்டாளோ? ஒரு மான் 
குட்டிக்குக் கடிக்கக்கூடக் கிடைக்காத காஞ்சுபோன கத்தாழதான் போற வழியில இருக்கும்! இங்க என்னன்னா, 
மூட மூடயா நெல்லு அடுக்கி வச்சிருக்கு. 

“இப்படியாகும்’னு தெரிஞ்சிருந்தா, அவ எங்கெங்க போறாளோ அங்கல்லாம் போயி நெழலு போல ஒட்டிக்கிட்டு 
இருந்திருப்பேனே. காலுக் கொலுசு தெறிக்கிறாப்புல அவ தாவித்தாவி வெளயாடுறபோதெல்லாம் வெலகாமக் 
கிட்டயே இருந்திருப்பேனே!

“இந்தப் பாதகத்திக்கு அப்பவே தெரியாமப் போச்சே!”

அகநானூறு 49 - பாலை - வண்ணப்புறக் கந்தரத்தனார்
(காதலனுடன் போய்விட்ட தலைமகளை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது)

கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்
முன்நாள் போலாள், “இறீஇயர் என் உயிர்” என
கொடும் தொடைக் குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கிக்		5
குறுக வந்து குவவு நுதல் நீவி
மெல்லெனத் தழீஇயினேன் ஆக என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப
பல் கால் முயங்கினள்-மன்னே; அன்னோ!
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,		10
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின், தந்தை
அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர்ச்
செல்வுழிச் செல்வுழி மெய் நிழல் போலக்		15
கோதை ஆயமொடு ஓரை தழீஇ
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப அவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன்-மன்னே!

அடிநேர் உரை

கிளி, பந்து, கழங்கு ஆகியவற்றை விரும்பியள் (இப்போது)
அருள், அன்பு, மென்மை, செயல் ஆகியவற்றில்
வேறுபட்டுள்ளாள்; “என் உயிர் போவதாக” என்று கூறி,
வளைந்த தொடையினை உடைய கன்றுடன் மரத்தில் கட்டப்பெற்ற
ஆசைமிக்க பசுவைப் போல, (அவள்) முதுகினைப் பார்த்து,
கிட்டே வந்து குவிந்திருக்கும் நெற்றியைத் தடவி,
மென்மையாக தழுவிக்கொண்டேனாக – என் மகள்
என்னுடைய நல்ல மார்பின் முலைகளிடையே வியர்வை உண்டாக
பலமுறை என்னைத் தழுவிக்கொண்டாள்; ஐயகோ!
வெற்றி மிகு பெருந்தகையாளன் பலபடியாகப் பாராட்ட,
பட்டுப்போன மரநிழலில் தங்கி, தலையை மேல்நோக்கிப் பார்த்து வருந்தும்
இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும்
பாலைநிலத்தில் உடன்போகுதலை அறிந்திருந்தால் - இவள் தந்தையின்
உணவிருப்பு மிகுந்த காவல் பொருந்திய அகன்ற இல்லத்தில்
செல்லுமிடமெல்லாம் கூடவரும் நிழல் போல
மாலை சூடிய தோழியரோடு ஓரை விளையாட்டில்
கூடு போன்ற சிலம்பின் பரல்கள் ஒலிக்க, அவள்
ஆடுகின்றபோதெல்லாம் அகலாதிருந்திருப்பேனே!