அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 48 - அன்னாய் வாழி! வேண்டு அன்னை!
                
                                 “ஆம்பள-ன்னா இவந்தான்!”


“யம்மா! முல்லை! முல்லை!” என்று கூவிக்கொண்டு நாலாபக்கமும் பார்த்துக்கொண்டே அந்த நெடிய வீட்டின் 
ஒவ்வொரு கட்டாய்க் கடந்துகொண்டே வந்தாள் முத்து என்ற முத்தம்மா. முத்து முல்லையின் வளர்ப்புத்தாய். 
நெடுநாட்களாகவே அந்த வீட்டின் அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்பவள். வீட்டிற்கு வெளியே முற்றத்தில், 
ஒரு பந்தல்காலைப் பிடித்துக்கொண்டு எதிரே இருக்கும் பெரிய மலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் 
முல்லை. “இங்கனக்குள்ள இருக்கியா” என்று சொல்லியவாறு முல்லையின் கிட்டே வந்த முத்து, முல்லையின் 
வாட்டமுற்ற முகத்தைக் கண்டு திடுக்கிட்டாள். “என்னா கண்ணு, என்ன ஆச்சு?” என்று வாஞ்சையுடன் அவள் 
முகத்தைத் தூக்கிப்பிடித்துக் கொஞ்சியவாறு கேட்டாள். “ஏன் கண்ணெல்லாம் கலங்கிக் கெடக்கு?” என்று 
முந்தானையை இழுத்து அவள் முகத்தண்டை கொண்டுசென்றாள். அவளிடமிருந்து விலகிய முல்லை, 
“ஒண்ணுமில்ல, கண்ணுல தூசி விழுந்திருச்சு” என்று கூறியவாறு, “இப்ப எதுக்கு என்னயத் தேடிக்கிட்டுத் திரியற? 
வேற சோலி இல்லையா ஒனக்கு?” என்றாள். “என்ன கண்ணு மறந்துட்டியா? பால் குடிக்கிற நேரமில்ல இது. 
அதான் எடுத்துக்கிட்டு ஒன்னத் தேடித் திரியரேன்” என்றாள் முத்து. “எனக்கு ஒண்ணும் வேணாம். அது 
ஒண்ணுதான் கொறச்சல்” என்றாள் முல்லை. “ஒனக்கு என்ன தாயி கொறச்சல்? என்ன இருந்தாலும் எங்கிட்ட 
சொல்லு” என்றாள் முத்து. ஓங்கி ஒரு பெருமூச்சை விட்ட முல்லை, “அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்று 
சொல்லியவாறே வீட்டினுள் நுழைந்து ஏதோ ஓர் அறைக்குள் மறைந்துவிட்டாள். “என்னமோ ஆயிருச்சு இந்தப் 
பொண்ணுக்கு? அந்தப் பொன்னி வரட்டும், கேக்கணும்” என்று முனங்கியவாறு முத்து வேறு வேலையைப் பார்க்கச் 
சென்றுவிட்டாள். பொன்னி முல்லையின் உயிர்த்தோழி.

இரண்டு நாட்கள் ஆயின. முல்லையின் நிலையில் முன்னேற்றம் இல்லை. முன்னைக் காட்டிலும் இப்போதெல்லாம் 
தனிமையைத் தேடினாள். சரியாக உண்பதில்லை. உடம்பும் மெலிந்துகொண்டே சென்றது. கொஞ்சம் வெளிறிக் 
காணப்பட்டாள். இனியும் தாமதிக்கக்கூடாது என்று முத்தம்மா பொன்னியைத் தேடிப் புறப்பட்டாள். அவளைக் 
கண்டுபிடித்து ஒரு புளியந்தோப்புக்குக் கூட்டிச் சென்றாள். நிழலிலிருந்த ஒரு கல்லில் இருவரும் உட்கார்ந்தார்கள். 
“என்ன நடந்துச்சு, ஒளிக்காமச் சொல்லுடீ. ஒங்கூட்டுக்காரி பேய்பிடிச்சது கெணக்காத் திரியறா. கேட்டா 
ஒண்ணுமில்ல’ன்னு சொல்றா. ந்தா பாரு, எதுவா இருந்தாலும் எங்கிட்ட மறைக்காத” என்று கொஞ்சம் கெஞ்சும் 
குரலிலும், கொஞ்சம் அதட்டும் குரலிலும் முத்தம்மா பொன்னியை மடக்கினாள்.  

பொன்னி முதலில் பேந்தப்பேந்த விழித்தாள். “எனக்கு ஒண்ணும் தெரியாது” என்றாள். முத்து விடவில்லை. 
நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். “யாருடீ அவன்?” என்று அதட்டினாள். இனி மறைக்கமுடியாது என்று உணர்ந்த 
பொன்னி, தொண்டையைக் கனைத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.

“அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் (துன்பம்) கொண்டு நனி பசந்தனள்
என வினவுதி. அதன் திறம் யானும் தெற்றென உணரேன்.

“மேல் நாள், மலி பூஞ் சாரல் என் தோழிமாரோடு ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழிப் ‘புலி புலி’ 
என்னும் பூசல் தோன்ற,

“ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ் ஊசி போகிய சூழ் செய் மாலையன், பக்கம் சேர்த்திய செச்சைக் 
கண்ணியன், குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி, வரி புனை வில்லன், ஒரு கணை தெரிந்து கொண்டு, 
‘யாதோ மற்று அம் மா திறம் படர்’ என வினவி நிற்றந்தோனே.

“அவன் கண்டு, எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, நாணி நின்றனெமாக,

“பேணி, ‘ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல், மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப் பொய்யும் உளவோ?’ என்றனன்.

“பையெனப் பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச் சென்றோன்
மன்ற! அக் குன்று கிழவோனே!.

“பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து, அவன் மறை தேஎம் நோக்கி, ‘மற்று இவன் மகனே தோழி’ என்றனள்.

“அதன் அளவு உண்டு கோள்! மதி வல்லோர்க்கே!”

அகநானூறு 48 - சொற்பிரிப்பு மூலம் - இயற்றியவர்: தங்கால் முடக்கொற்றனார்.

அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள்
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
யானும் தெற்றென உணரேன் மேல் நாள்
மலி பூஞ் சாரல் என் தோழிமாரோடு		5
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்
புலி புலி என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்		10
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு
யாதோ மற்று அம் மா திறம் படர் என
வினவி நிற்றந்தோனே அவன் கண்டு
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி	15
நாணி நின்றனெமாகப் பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய்ப்
பொய்யும் உளவோ என்றனன் பையெனப்
பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து	20
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற அக் குன்று கிழவோனே
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன்
மகனே தோழி என்றனள்				25
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே

அருஞ்சொற் பொருள்

பழங்கண் = துன்பம்; தெற்றென = தெளிவாக; ஒலி சினை = தழைத்த கிளை; பூசல் = ஆரவார ஒலி; 
செச்சை = வெட்சி, scarlet ixora; குயம் = இளமை, juvenility; ஆகம் = மார்பு; முடுகு = வேகம்; தேஎம் = திசை.
 
அடிநேர் உரை

அன்னையே வணக்கம், நான் கூறுவதைக் கேட்குமாறு வேண்டுகிறேன். ‘உனது மகள்
பாலையும் பருகாள், துன்பம் கொண்டு
மிகவும் மெலிவடைந்துள்ளாள்’ என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை
நானும் தெளிவாக அறியேன், முன்பொருநாள்
நிறைந்த பூக்களையுடைய மலைச்சாரலில் என் தோழிமாருடன்
தழைத்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் பூக்களைக் கொய்யச் சென்றபோது
‘புலி, புலி’ என்று நாங்கள் கூச்சலிட,
ஒளி பொருந்திய செங்கழுநீரின் கண்போன்ற அழகிய இதழ்களை
ஊசியினால் கோத்துத் தைத்துக் கட்டிய மாலையை அணிந்தவன்,
தலையின் ஒரு பக்கத்தே சேர்த்துச் செருகிய வெட்சிப்பூவாலாகிய தலைமாலை அணிந்தவன்,
இளமை தங்கும் மார்பினில் சிவந்த சந்தனத்தைப் பூசி,
வரிந்து கட்டிய வில்லையுடையவன், ஒரு நல்ல அம்பைக் கையினில் கொண்டு,
‘அந்தப் புலி சென்ற வழி எது?’ என்று
வினவி நின்றான்; அவனைக் கண்டு
எமக்குள்ளே ஒருவரையொருவர் மறைத்துக்கொண்டு
நாணி நின்றோம், அதனால், ‘அக்கறையுடன்
ஐந்துவகையாக வகுத்த கூந்தலையும், அழகிய நெற்றியையும்,
கரிய நெய்தடவிய கொண்டையினையும் உடைய இளமங்கையரே! உமது வாயில்
பொய்யும் உண்டோ?’ என்றனன், (பின்னர்) மெதுவாகச் செல்லுமாறு
தன் தேரின் குதிரைகளின் வேகத்தைத் தடுத்தவன், எதிர்நோக்கலாக
நின் மகளின் மையுண்ட கண்களைப் பலமுறை நோக்கிச்
சென்றான், அந்தக் குன்றுக்கு உரியவன்;
பகல் முடிந்த அந்தியில் மலையில் ஞாயிறு மறையும் நேரத்தில்
அவன் சென்று மறைந்த திசையை நோக்கியவாறே, ‘இவனே
ஆண்மகன், தோழியே’ என்றாள் உன் மகள்;
அது எத்தகையது என்று அறிவு மிக்கோர் அறிந்துகொள்வார்’.