அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 62 - அயத்து வளர் பைஞ்சாய்
                
                                 நேற்று வந்த கொல்லிப் பாவை
அவன் ‘விறுவிறு’-வென்று வேகமாக நடந்துகொண்டிருந்தான். நேரம் அதிகமாகிவிட்டது. பேய்களும் நடமாட அஞ்சும் கும்மிருட்டு. இருந்தாலும் பலமுறை நடந்து சென்று பழகிய பாதை. “பாவி, பாவி, குறித்த நேரத்தில் அங்குப் போய் இருக்கவேண்டாமா? வீணாக அவளை நள்ளிரவில் தனிமையில் காத்திருக்க வைக்கலாமா? இந்நேரம் வந்து காத்துக்கொண்டிருப்பாள்.” அவன் நெஞ்சு அவனை இடித்துரைத்தது. அவன் நடையைச் சற்று வேகப்படுத்தினான். என்ன செய்வது? குறிப்பிட்ட இடம் வந்து சேர்வதற்குள் நிறைய நேரம் ஆகிவிட்டது. அங்கு அவளைக் காணோம். கட்டாயம் வந்து, கால் நோக, கண்கள் பூத்துப்போக, காத்துக்கொண்டு இருந்திருப்பாள். நீண்ட நேரம் நிற்கவும் முடியாதல்லவா? அதனால் கோபத்துடன் திரும்பிப் போயிருப்பாள் - கோபம் மட்டுமா? பெரிதான ஏமாற்றம் கூடத்தான். கடந்த ஓர் ஆண்டாக நிகழ்ந்து வரும் இவர்களின் இப்படியான சந்திப்பில் இப்படி ஒரு நாளும் நடந்ததில்லை. சிலவேளைகளில் ஒவ்வொரு நாளும் சந்திப்பு நடக்கும். சில வேளைகளில் வாரக் கணக்கில் தாமதம் ஆகும். “நேற்று இந்நேரம் எப்படி இருந்தது? இன்றைக்கு நீ தாமதமாக வந்த வினை - அனுபவிக்கிறாய்” - அவன் நெஞ்சு மீண்டும் அவனை இடித்துரைத்தது. நேற்றைய நாள் சந்திப்பின் நினைவுகள் அவன் நெஞ்சில் நிழலாட ஆரம்பித்தன. சேர மன்னனின் கொல்லிமலையில் - வழிந்தோடும் அருவி நீரையுடைய அந்த மலைச் சரிவின் அழகே பொலிவுறும்படியாக, அருமையாக வடிக்கப்பட்ட அந்தக் கொல்லிப் பாவையைப் போல் தெய்வீக அழகுடன் அன்று காணப்பட்டாள் அவள். மூன்று எட்டு தள்ளி நின்றால் முகம்கூட தெரியாத அந்த கும்மிருட்டில், அவன் இடுப்பில் இரு கைகளையும் கோத்தவாறு அவனது மார்பில் சாய்ந்து கிடந்த அந்த மதிமுகத்தை வலது உள்ளங்கையால் தாங்கிப் பிடித்து நிமிர்த்தினான் அவன். அப்படியே அவளைக் கண்களால் விழுங்குவது போல் பார்த்துக்கொண்டே இருந்த அவனைப் பார்த்து அவள் கேட்டாள் “என்ன இப்படிப் பாக்குறீங்க?” “தண்ணிக்குள்ள நிக்கிற பஞ்சாய்க் கோரையைப் பிடுங்குனா, அந்தத் தூர்ல இருக்குற குருத்துப் போல பளபள’ன்னு இருக்கு ஒம் பல்லு” “அப்புறம்?” “பவளம் போலச் சிவந்த இந்த அழகு உதடு” “அப்புறம்?” ”ந்தா, என் நெஞ்சக் குத்துற மாதிரி குமுறிக்கிட்டு எழுந்து நிக்கிற உன் மார்பு” அவள் சட்டென விலகி நிற்க முயன்றாள். அவள் தோளைப் பிடித்திருந்த அவன் பிடி மேலும் இறுகியது. “மீதத்தையும் கேளேன்!, மூங்கிலப் போல ‘கிண்ணு’னு இருக்கிற இந்தத் தோளு” “இன்னக்கி என்ன அகநானூறு குறிஞ்சித்திணைப் பாடல் படிச்சுட்டு வந்தீங்களா?” அவன் அவள் கேலியைச் சட்டைசெய்யவில்லை. “கருப்புத் தண்டோடு இருக்குற ரெண்டு குவளைப் பூவ எதுக்க எதுக்க நிப்பாட்டுன மாதிரி ‘சில்லு’னு ரெண்டு கண்ணு - அதுக்கு மேல பெருசா நீளமா இமை, இந்த எல்லாத்தையும் வச்சிருக்குற இந்த மாநிற மேனி” “போதும், போதும் இன்னக்கி, வீட்டுல எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்காங்க. யாராச்சும் முழிச்சுக்கிட்டாங்கன்னா நாம மாட்டிக்கிறுவோம். அப்புறம் அடுத்து எப்பப் பாக்கலாம்?” “பேய்க்குக் கூடத் தெரியாது நாம பாத்துக்கிறது!” ”அப்படி நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. இந்த ஊரு பொம்பளய்ங்க இருக்காளுகளே, ரொம்பப் பொல்லாதளுக. எவளாவது ஒருத்தி கண்ணுல பட்டாக்கூடப் போதும். கூடிக்கூடிப் பேசுவாளுக, அங்கங்க பிரிஞ்சு போயி அவளுக்குள்ளயே பேசிக்கிருவாளுக. ’டும்மு டும்மு’னு அடிக்கிற உடுக்கப் போல ‘டம்மு, டம்மு’னு ஊர் முழுக்கப் பரப்பிப்புடுவாளுக. அப்புறம் நாம பாத்துக்கிறது லேசுல முடியாது” இனிமேல் பார்க்க முடியாமற் போய்விடுமோ என்ற நினைப்பு வந்தவுடனே அவள் கலங்கிப்போனாள். சுழித்துக்கொண்டு ஓடும் காவிரி வெள்ளத்தில் சடக்கென்று மூழ்கி எழுந்தவள் போல் அவள் மேனி நடுங்க ஆரம்பித்தது. அதனை மறைக்க, அவனை இன்னும் இறுக்கமாக அவள் தழுவிக்கொண்டாள். கண்களை மூடி, மெய்மறந்து நின்றுகொண்டிருந்த அவன், படபடவென்று திடீரென்று எழுந்த ஓசையைக் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தான். பக்கத்துக் கூரையில் படுத்திருந்த சேவல், தன் இறக்கைகளைக் அடித்துக்கொண்டு தன் முதற் கூவலைக் கூவியது. அதுவரை, முந்தைய நாள் நினைவுகளிலேயே மூழ்கிக்கிடந்த அவன் நெஞ்சம் அவன் திடுக்கிட்டு விழித்த பின் நிலைமையை அறிவுறுத்தியது. ஆக, இன்றைக்குச் சந்திப்பு இல்லை. அடுத்த சந்திப்பு பற்றி முடிவு செய்யவும் இல்லை. முதற்கோழி கூவிவிட்டது. இனிமேல் ஊர் ஒவ்வொன்றாக விழிக்க ஆரம்பித்துவிடும். அவள் நேற்றுச் சொன்னது போல் யார் கண்ணிலாவது அகப்பட்டுவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். அவன் திரும்பி வந்த வழியே பைய நடக்க ஆரம்பித்தான். பாடல் - அகநானூறு - 62 : திணை - குறிஞ்சி : ஆசிரியர் - பரணர் அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள் மா தாள் குவளை மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் மாஅயோளொடு 5 பேயும் அறியா மறை அமை புணர்ச்சி பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின் கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல 10 நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல் ஆகம் அடைதந்தோளே வென் வேல் களிறு கெழு தானை பொறையன் கொல்லி ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்ப கடவுள் எழுதிய பாவையின் 15 மடவது மாண்ட மாஅயோளே அருஞ்சொற்பொருள் அயம் = நீர்நிலை; பைஞ்சாய் = ஒரு வகைக் கோரைப் புல், cyperus rotundus tuberoses; முருந்து = குருத்து; துவர் = பவளம்; ஆகம் = மார்பு; பணை = மூங்கில்; துடி = உடுக்கு; கரப்பு = மறைவாகப் பழகுதல்; நீத்தம் = வெள்ளம்; மண்ணு = குளி; அஞர் = துன்பம்; நெருநல் = நேற்று; அடிநேர் உரை பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும், மார்பில் அரும்பிய முலைகளையும், பருத்த தோள்களையும், கரிய தண்டினையுடைய குவளை மலர்களைச் சேர்த்து வைத்தாற் போன்ற கரிய இமைகளையுடைய குளிர்ந்த கரிய கண்களையும் உடையவளாகிய அவளுடன், பேயும் அறியாத காலத்தில் நடந்த மறைவான சந்திப்பினை ஒலிக்கும் உடுக்கினைப் போன்று தனித்தும் சேர்ந்தும் பழித்துக் கூறுவதால் மறைவான ஒழுக்கத்தில் இனி நாம் செல்வது அரிதாகிவிட்டது; அதனால் கடுமையான வெள்ளம் பெருகிய காவிரி ஆற்றில் நெடிய சுழியுள்ள நீரில் மூழ்கி எழுபவள் போல, உள்ளம் நடுங்கும் துன்பம் போகத் தழுவி, நேற்று என் மார்புள் புதைந்துகிடந்தாள்; வெல்லும் வேலினையும் யானைகள் மிக்க படையினையுமுடைய சேரனது கொல்லி மலையின் ஒளிறும் அருவியினை உடைய மலைச் சரிவின் அகலமான இடம் பொலிவுபெற தெய்வமாக அமைத்த கொல்லிப்பாவையினைப் போன்ற பேதைமையால் சிறந்த மாநிறத்தவளாகிய தலைவி.