அகநானூறு - பாடல் கதைகள்


   1. பாடல் 46 - ஓர் எருமைப் பாடம்
   2. பாடல் 47 - நல்லா இருப்படா, சாமி!
   3. பாடல் 48 - “ஆம்பள-ன்னா இவந்தான்!”
   4. பாடல் 49 - “அப்பவே தெரியாமப் போச்சே!”
   5. பாடல் 50 - அன்றில் பாடம்
   6. பாடல் 51 - நெஞ்சின் முகத்தில் கரி!
   7. பாடல் 52 - சொல்லலாமா வேண்டாமா?
   8. பாடல் 53 - பொருளே காதலர் காதல்
   9. பாடல் 54 - முகிழ் நிலா
 10. பாடல் 55 - போதல் செல்லா என் உயிர்


 11. பாடல் 56 - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது
 12. பாடல் 57 - பீர்க்கு போல் நெற்றி
 13. பாடல் 58 - காத்திருப்பது இனிது
 14. பாடல் 59 - பொருள் தேடிப்போனவர்
 15. பாடல் 60 - வீட்டுக்காவல் உறுதி
 16. பாடல் 61 - பழகிப்போய்விடமாட்டாரா?
 17. பாடல் 62 - நேற்று வந்த கொல்லிப் பாவை
 18. பாடல் 63 - தூக்கம் கெட்டுப்போகுமே
 19. பாடல் 64 - பசுவின் மணியொலி கேட்டு மயங்கியவள்
 20. பாடல் 65 - இனிமேல் மகிழ்ச்சிதான்

 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.
அகநானூறு - பாடல் கதை
பாடல் 61 - நோற்றோர் மன்ற தாமே
                
                                 பழகிப்போய்விடமாட்டாரா?
(அகம் பாடல் 59 - இன் பாடல் கதையின் தொடர்ச்சி) திருமணமாகி அடுத்த ஊரில் இருக்கும் தோழி முல்லையைப் பார்த்துவிட்டு அடுத்தநாள் ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று சென்ற பொன்னிக்கு, முல்லையின் ஊரில் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு முல்லையின் கணவன் அவளைத் தனியே விட்டுவிட்டு அயல்நாட்டுக்குப் பொருள் சம்பாதிக்கச் சென்றுவிட்டான். மேனியெல்லாம் இளைத்துப்போய் வாட்டமுடன் இருந்த முல்லைக்கு என்ன சமாதானம் சொல்வது என்று பொன்னிக்குப் புரியவில்லை. “ஒன்னப் பெத்தவங்களுக்குத் தெரிஞ்சா துடிச்சுப்போவாங்க. வாடி, அடுத்த வீட்டுல சொல்லிட்டு, அண்ணன் திரும்பி வர்ர வரைக்கும், நம்ம ஊருக்கே போயிரலாம்” என்றாள் பொன்னி. “அங்க போனா, என்னாலயும் சந்தோசமாக இருக்கமுடியாது. என்னயப் பாத்துப்பாத்து அவங்க சந்தோசமும் கெட்டுப்போகும். நீ ஊருக்குக் கிளம்புடி. நான் எப்படியோ சமாளிச்சுக்கிறேன்” என்றாள் முல்லை. “ந்தா பாரு, நான் இங்க வராம இருந்தாக்கூட பரவாயில்ல. இங்க வந்துட்டு, ஒன்னயும் பாத்துட்டு ஊருக்குப் போனா ஒன்னப் பெத்தவங்க என்னயக் கேப்பாங்களே, நான் சொல்லாம இருந்தா நல்லா இருக்குமா? நாளப்பின்ன தெரிஞ்சதுக்கப்புறம் ’நீயும் சேந்து மறச்சிட்டியில்ல’ன்னு ஒங்கம்மா என்னய உருட்டி எடுத்துரும்” “சும்மா அவங்ககிட்ட சொல்லிருடி, ’அவரு பொருள் தேட வேற ஊருக்குப் போயிருக்காரு. அவ தெம்பாத்தான் இருக்கா. நாங்கூடக் கூப்பிட்டேன். நீ போடி, அவரு வந்ததுக்கப்புறம் வர்ரோம்’னு சொல்லிட்டா’ன்னு சொல்லிரு” ”என்னால அங்க இருக்கமுடியாதுடி - இப்படி இங்க ஒன்னத் தனியா விட்டுட்டு. நான் இப்ப போகாட்டியும் என் அப்பன் ஆத்தா என்னமோ’ன்னு நெனப்பாங்க. எங்கப்பன் என்னயத் தேடிக்கிட்டு இங்கயே வந்திரும். அப்புறம் நெலம ரொம்ப மோசமாயிரும். அதனால, நான் இப்ப ஊருக்குப் போயி, இன்னும் ரெண்டு மூணு நாள்ல என்னத்தயாவது சொல்லிட்டுத் திரும்பி இங்க வர்ரேன். அண்ணன் வர்ர வரைக்கும் ஒனக்குத் துணையா இருக்கேன்.” “அதெல்லாம் வேண்டாம்டி, நான் பாத்துக்கறேன்” என்று மறுத்துப்பேசிய முல்லையின் சொற்களைக் கேளாமல், இன்னும் சில நாட்களில் திரும்ப வருவதாகச் சொல்லிவிட்டு, மறுநாள் பொன்னி ஊருக்குப்போய்விட்டாள். அதேபோல் இரண்டு நாள் கழித்து, நீண்ட நாள் தங்குவதற்கான துணிமணிகளுடன் பொன்னி வந்துவிட்டாள். “ஏண்டி, நானும் அரசல் புரசலா விசாரிச்சுப் பாத்தேன். அண்ணன் போயிருக்கிற ஊருக்குப் போற வழி ரொம்ப ஆபத்தானதாமே. களவு ரொம்ப அதிகமாம் போற வர்ரவங்ககிட்டப் பொருளப் பறிச்சுக்கிட்டு அடிச்சும் கொன்னுபோடுவாங்களாமுல்ல” என்று படபடப்புடன் சொன்னாள். “எனக்கும் தெரியும்’டி. நானும் அவர்ட்ட சொல்லிப்பாத்தேன். என்னய்க்கோ ஒருநாள் எப்படியோ போகப்போற உசுரு, நம்ம பொருளக் காப்பாத்த வீரத்தோட சண்டை போட்டுப் போகட்டுமே’ன்னு சொல்லிச் சிரிக்குறாரு” என்று கூறிய முல்லையின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து இறங்கியது. “சரி, சரி, அழுகக்கூடாது. அண்ணன் நல்ல மனசுக்கு அப்படி ஒண்ணும் நடக்காது. எப்படியும் பொருள் சம்பாதிக்கணும்’னு அண்ணன் ரொம்ப ஊக்கமா இருந்திருக்காரு. அதுல செயிக்கணும்’கிறதுக்காகத்தான் தொலவட்டுக்குப் போயிருக்காரு.” என்று முல்லையின் கண்களைத் துடைத்துவிட்டாள் பொன்னி. அப்போதுதான் அதைக் கவனித்தாள் பொன்னி. முல்லையின் வலதுகை ஆள்காட்டிவிரலில் நுனிப்பகுதி செம்மண் பூசியதைப் போலச் சிவந்துபோயிருந்தது. விரலைப் பிடித்துப்பார்த்தவள், “இதென்ன?” என்று கேட்டாள். ஒரு வறட்டுச் சிரிப்புச் சிரித்த முல்லை, ”திரும்பி அங்க சுவத்தப் பாரு” என்றாள். முல்லை திரும்பி அந்தப்பக்கம் இருந்த நீண்ட வெண்மையாய்ச் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட சுவரைப் பார்த்தாள். அங்கே சிறுசிறு கோடுகளாக வரிசையாகச் செம்மண்ணில் குறியீடுகள் காணப்பட்டன. “ஒங்க அண்ணன் போயி அத்தன நாள் ஆச்சு. இன்னக்கிப் போட்ட கோடுதான் இது” என்று தன் விரலைக் காண்பித்தாள். “இதப் பாத்துப் பாத்துத்தான் பெருமூச்சு விட்டுக்கிட்டு அழுதழுது கன்னம் வீங்கிப்போயி இருக்கியா? எத்தன நாள் ஆனாத்தான் என்ன? அண்ணன் அங்கேயே இருந்துடவா போறாரு?” “ஏண்டி, அந்த இடம் பழகிப்போச்சுன்னா, அப்பொறம் அதவிட்டுக் கெளம்ப மனசு வராம அங்கயே இருந்துட்டார்’னா?” மறுகினாள் முல்லை. “ஏன்டி, புல்லி தெரியுமா, புல்லி? இந்த மழவ நாட்டோட சண்டை போட்டு அவங்கள மடக்கிப்போட்ட புல்லி?” “கேள்விப்பட்டிருக்கேன். குறிதவறாம அம்பு விட்டு எதிரிங்களக் கொல்லுறதுல தெறமசாலி இளவட்டங்க பலபேரு அவனச் சுத்தி இருப்பாங்களாம். அந்த நாட்டுல யானைக் கொம்பு நெறயக் கெடய்க்குமாம். கள்ளு ரொம்ப வெளையுமாம். ரெண்டயும் கொடுத்திட்டு நெல்ல வாங்கிட்டுப் போவாங்களாம். அங்க வேங்கடம்’கிற ஊரு இருக்காம். ரொம்பப் பேர்போனதாம். எந்த நேரமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்துகிட்டே இருக்குமாம். இப்ப அதுக்கென்ன? “அதத்தான் சொல்ல வந்தேன். அப்படிப்பட்ட வேங்கடத்தையே தூக்கிக்கொடுத்தாலும் அண்ணன் அங்கயே இருந்துறமாட்டாருடீ” ”ஒருவேளை அவ்வளவு சொத்தைப் பாத்ததுக்கப்புறம் என்னயவே மறந்துட்டார்’னா?” “ஏன்டி, எத மறந்தாலும் மறப்பாரு அண்ணன், இத மறப்பாராடீ?” “எத?” “பொன்னுக்குப் பேர்போன பொதினியப் போல, மின்னிக்கிட்டு இருக்கிற இந்த மேனிய அணைச்சுக்கிட்டுக் கிடக்கிற அளவில்லாத சொகத்த” அகநானூறு : பாடல் 61 - திணை : பாலை - பாடியவர் : மாமூலனார் நோற்றோர் மன்ற தாமே கூற்றம் கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் என தாள் வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர் நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து ஆழல் வாழி தோழி தாழாது 5 உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால் வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன் அண்ணல் யானை வெண் கோடு கொண்டு நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் 10 கழல் புனை திருந்து அடி கள்வர் கோமான் மழ புலம் வணக்கிய மா வண் புல்லி விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி 15 பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின் ஒண் கேழ் வன முலை பொலிந்த நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே அருஞ்சொற்பொருள்: நோற்றோர் = கொடுத்துவைத்தவர், தவம் செய்தவர்; கூற்றம் = யமன்; விளிதல் = இறத்தல்; தாள் = முயற்சி; வலம்படு = வெற்றியடை; சேண்புலம் = தொலைநாடு; ஆழல் = அழவேண்டாம்; நிறம் = மார்பு; வெண்கோடு = தந்தம்; நறவு = கள்; நொடை = விலைகூறல்; அடிநேர் உரை ‘புண்ணியம் செய்தவர்கள் அவர்கள், இயமனால் கொள்ளப்பட்டு இறக்காமல், பிறரால் கொள்ளப்பட்டு இறந்தோர்’ என்று முயற்சி வெற்றிசிறக்க, தொலைநாட்டுக்குச் சென்றோர் (சென்ற) நாள்களைக் குறித்துவைக்கும் நெடிய சுவரை நோக்கி, வருத்தமெனும் துன்பத்துள் ஆழ்ந்துவிடாதே தோழி! தாழ்க்காமல் இடியைப்போன்று ஒலிக்கும் ஊக்கத்துடன், புதிய காலும் வரியும் கொண்டு மாண்புற்று விளங்கும் வலிய நாண் பூட்டிய வலிய வில்லை ஏற்றி அரிய மார்பில் அழுத்தும் அம்பினையுடையவர்கள் பலருடன், தலைமை வாய்ந்த யானைகளின் வெண்மையான கொம்புகளைக் கொண்டு, கள்ளை விற்றுக்கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச் செய்யும் கழலினைப் புனைந்த திருத்தமான அடிகளைக் கொண்ட கள்வர்களின் தலைவன், மழவரின் நாட்டை வணக்கிய மிகுந்த வள்ளண்மைகொண்ட புல்லி என்பானின் விழாக்களையுடைய மிக்க சிறப்பு வாய்ந்த திருவேங்கடத்தைப் பெறினும், அந்த இடம் பழகிப்போய் அங்கேயே தங்கியவராதல் நடவாததாகும் - மிகப் பழமையான, முரசைப்போன்ற திணிந்த தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின் பொன் மிகுந்த பெரிய நகரமாகிய பொதினியைப் போன்ற உனது ஒளி விளங்கும் அழகிய முலைகளில் பொலிவுற்று விளங்கும் நுண்ணிய பூணினை அணிந்த மார்பினில் பொருந்துதலை மறந்து -