அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 41

பாடல்  41. பாலைத் திணை    பாடியவர் - குன்றியனார் (சேரமானந்தையர் என்றும் பாடம்)

துறை - தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்துக் கிழத்தியை நினைத்துச் சொல்லியது.

  மரபு மூலம் - மாஅயோள் வருந்தினள் கொல்லோ!

	வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக்
	கருநனை யவிழ்ந்த வூழுறு முருக்கி
	னெரிமருள் பூஞ்சினை யினச்சித ரார்ப்ப
	நெடுநெல் லடைச்சிய கழனியேர் புகுத்துக்
5	குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர
	அரிகால் போழ்ந்த தெரிபகட் டுழவர்
	ஓதைத் தெள்விளி புலம்தொறும் பரப்பக்
	கோழிண ரெதிரிய மரத்த கவினிக்
	காடணி கொண்ட காண்டகு பொழுதின்
10	நாம்பிரி புலம்பின் நலஞ்செலச் சாஅய்
	நம்பிரி பறியா நலனொடு சிறந்த
	நற்றோள் நெகிழ வருந்தினள் கொல்லோ
	மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
	தாதின் துவலை தளிர்வார்ந் தன்ன
15	அங்கலுழ் மாமை கிளைஇய
	நுண்பல் தித்தி மாஅ யோளே

 சொற்பிரிப்பு மூலம்

	வைகு புலர் விடியல் மை புலம் பரப்பக்
	கரு நனை அவிழ்ந்த ஊழ்_உறு முருக்கின்
	எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப
	நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்துக்
5	குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர
	அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
	ஓதைத் தெள் விளி புலம்-தொறும் பரப்பக்
	கோழ் இணர் எதிரிய மரத்த கவினிக்
	காடு அணி கொண்ட காண்_தகு பொழுதில்
10	நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்
	நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
	நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ
	மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
	தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன
15	அம் கலுழ் மாமை கிளைஇய
	நுண் பல் தித்தி மாஅயோளே

அருஞ்சொற் பொருள்:

மை = எருமை, செம்மறியாடு; நனை = மொட்டு; ஊழுறு = மலர்தலுற்ற; முருக்கு = காட்டு முருங்கை, முள்முருங்கை; 
எரி = தீ; சிதர் = ஒருவகை வண்டு; கோழ் = கொழுவிய; இணர் = பூங்கொத்து; துணர் = பூங்கொத்து; தித்தி = தேமல்

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	பாடல் 37-இல் கண்டபடி, இந்தப் பாலைத்திணைப் பாடலும் வைகறைக் காட்சிகளைக் கொண்டது. தலைவியை 
விட்டுப் பிரிந்த தலைவன் ஒருநாள் பயணம் முடிந்து இரவில் ஓரிடத்தில் தங்கிக் காலையில் கண்விழிக்கிறான். விழித்ததும் 
அவனுக்குத் தலைவியின் நினைப்பு வருகிறது. இதுவரை அவளை அவன் ஒருநாளும் பிரிந்ததில்லை. நம் பிரிபு அறியா 
நலனொடு சிறந்த நற்றோள் நெகிழ வருந்தினள் கொல்லோ எனத் தன் மனைவியின் பிரிவு நிலையை எண்ணித் தலைவன் 
இரங்கிப் பாடும் பாடல் இது.

	அதிகாலை நேரத்தில் கண்விழித்த தலைவன் எண்ணிப்பார்க்கிறான் – ‘இன்னேரம் அங்கே எருமைகளை 
மேய்வதற்காக ஓட்டியிருந்திருப்பார்கள். ஊர் ஓரத்தில் இருக்கும் முள்முருங்கை மரத்தில் தீப்பிடித்தது போல் பூத்திருக்கும் 
சிவந்த மலர்களில் வண்டுகள் தேனெடுக்க மொய்த்துக்கொண்டிருக்கும். கழனிகளில் ஏர்களை எடுத்துச் சென்று 
அரிதாளையுடைய நிலம் பிளக்கும்படி உழும் உழவர்கள் தம் காளைகளை அதட்டி ஓட்டும் ஒலி காடுகள் எங்கும் 
கேட்டவண்ணம் இருக்கும். காடுகளின் வரப்புகளில் கொத்துக்கொத்தாய் மலர்கள் பூத்துச் சிரிக்கும் மரங்கள் அழகு சேர்க்க, 
அந்தக் காட்டுவெளி இப்போது எவ்வளவு அழகுறத் தோன்றும்! இந்த அழகிய காட்சிகளுக்கு முற்றிலும் மாறாக, நம்மை விட்டு 
இதுவரை பிரிந்து அறியாத தலைவி, நாம் பிரிந்து வந்ததினால் நலமிழந்து மெலிந்து, தன் தோள்கள் நெகிழ 
வருந்திக்கொண்டிருப்பாளோ!’ - இதுவே தலைவனின் புலம்பல்.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக்
	கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
	எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப
	நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்துக்
5	குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர
	அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்
	ஓதைத் தெள்விளி புலம்தொறும் பரப்பக்

	பின்னிருட்டு புலர்ந்த விடியல் வேளையில் எருமைகளை மேய்நிலத்திற்கு ஓட்டிவிட,
	கருஞ்சிவப்பான அரும்புகள் தம் பிணியவிழ்ந்த மலர்ச்சியடைந்த முருக்கமரத்தின்
	நெருப்பைப் போன்ற பூக்களைக் கொண்ட கிளைகளில் வண்டினம் மிக்கு ஒலிக்க,
	நெடிய நெற்பயிர்களைச் சேர்த்துக் கட்டிய கழினியினுள் ஏர்களை எடுத்துச்சென்று
	தலை குவிந்த மண்கட்டிகளையுடைய தோட்டத்தைப் போன்று சிறந்து விளங்க
	அரிதாள்களைப் பிளந்து உழுகின்ற, தெரிந்தெடுத்த காளைகளையுடைய உழவர்கள்
	(காளைகளை அதட்டும்)ஓசையாகிய தெளிந்த குரல் காடுகள்தோறும் பரக்க,

	இது அதிகாலைக் காட்சி. வைகு புலர் விடியல் என்பதைப் பாடல்-37-இல் பார்த்தோம். 
அது வைகறைக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரம். வெயில்காலத்தில் காலை 5 மணி – மழைக்காலத்தில் 
காலை 5 1/2 மணி எனலாம். மை என்பது எருமை, ஆடு ஆகியவற்றைக் குறிக்கும். இது உழவர் பகுதியாதலால் இங்கு 
எருமை எனக் கொள்ளப்பட்டது. “ ‘பல பல’-ன்னு விடியறதுக்கு முன்ன மாடு கன்னெல்லாம் மேய்ச்சலுக்குப் பத்திவிடு” 
என்பது இன்றைக்கும் வழக்கு. முருக்கு என்பது கல்யாண முருங்கை அல்லது முள்முருங்கை – Indian Coral tree, 
Erythrena Indica எனப்படும். இதன் இளம் மொட்டு இலேசான கருஞ்சிவப்பாக இருக்கும். அதனையே கருநனை என்கிறார் 
புலவர். முற்றிலும் மலர்ந்த பூக்கள் தீக்கொழுந்து போல் தோற்றமளிக்கும். எனவேதான் அதனை எரி மருள் பூஞ்சினை 
என்கிறார் புலவர். 	

			

	சிதர் என்பது வண்டு – ஒருவகைத் தேனீ. இதே பாடலில் மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர் என்றும் 
வருவதால் சிதர் எனப்படுவது வேறுவகை வண்டு என்பது பெறப்படும். 

	நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்துக்
5	குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர
	அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்

	என்ற அடிகளுக்கு வெவ்வேறு விதமான உரைகள் எழுதப்பட்டுள்ளன.

	நெடுநெல் அடைச்சிய கழனிஏர் , குடுமிக் கட்டிய படப்பையொடு புகுத்து, மிளிர, 
	அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்

	என்று முன்னும் பின்னும் மாற்றி எடுத்துக்கொள்கிறார் ந.மு.வே.

	நெடிய நெற்பயிரினை நட்ட கழினியிலுள்ள ஏர்களை, தலைகுவிந்த கட்டிகளையுடைய தோட்டத்தில் சேர்த்து, 
மண் பிறழும்படி, அரிதாளையுடைய நிலத்தைப் பிளந்து உழுத ஆராய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்களது – என்பது 
அவர் உரை (கழகம்)

	வயலில் இருந்து அறுத்த நெற்குவியல் தோட்டங்களில் விளங்கும். பின்பு விளைந்த புன்செய் நிலங்களில் 
ஏர்களைக் கொண்டு உழுகின்ற உழவர்களின் – என்பார் ச.வே.சு (மணிவாசகர்)

	நீண்ட நெல் நெருங்கிய கழனி, கூட்டிக் குடுமியாகக் கட்டிய பக்கத்தோடு விளங்கவும், பிளவுபட்ட காலுடையை 
எருதை உழவர் – என்பார் ந.சி.கந்தையா (தமிழ்மண்)

	`வயலினின்றும் அரிந்து கொண்டுபோய்க் குவித்த பெரும்போர்கள் தோட்டங்களில் விளங்கும். பின்பு, ஏர்களைப் 
புகுவித்து நெல் விளைந்த அந்தப் புன்செய்கள் நெல்தாளான குடுமிகளைக் கொண்ட கட்டிகளை உடையனவாய் விளங்க, 
நிலம் பிளப்ப உழுது ஆராய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்களின் – என்பார் புலவர் அ. மாணிக்கம் (வர்த்தமானன்)

	முதல் அடி பரப்ப என முடிகிறது. இரண்டாம் மூன்றாம் அடிகள் ஒரே தொடராக அமைந்து அது ஆர்ப்ப என 
முடிகிறது. அதைப் போல மூன்றாம் நான்காம் அடிகள் ஒரே தொடராக அமைந்து மிளிர என்று முடிவதாக எடுத்துக்கொள்ளலாம். 
அப்படியென்றால், அது பரப்ப, ஆர்ப்ப என்ற சொற்களைப் போல் ஒரு செயல் வினையாக இருக்கவேண்டும். எனவே, இங்கு மிளிர 
என்பதற்கு விளங்க என்ற பொருள் ஒத்துவராது. மேல்கீழாக்கு என்ற செயற்பொருளே அதற்கு ஒத்துவரும். 1+ 2 + 4 என 
எடுத்துக்கொண்டு, முதல் அடி ஒரு தொடர், அடுத்த இரண்டு அடிகளும் (2,3) ஒரு தொடர், அடுத்த நான்கு அடிகளும் ஒரு தொடர் 
என்ற அமைப்பில் 4,5,6,7 ஆகிய நான்கு அடிகள் ஒரு தொடராக அமையும் எனவும் எடுத்துக்-கொள்ளலாம். 5-ஆம் அடியின் இறுதிச் 
சீரான மிளிர என்பதற்குத் தலைகீழ் ஆகும்படி என்றும் சிறந்து விளங்க என்றும் பொருள் கொள்ளலாம். படப்பை என்பதற்குத் 
தோட்டம் என்று பொருள்கொண்டால், படப்பையொடு என்பதற்கு படப்பையைப் போல் என்று பொருள் கொள்ளலாம். 
தெரி பகட்டு உழவர் என்று புலவர் கூறுவதால், தெரிந்தெடுத்த (வலிய) காளைகளைக் கொண்டு உழவர் உழவேண்டியதன் 
அவசியம் என்ன; அந்தக் காளைகளையும் அதட்டி வேலைவாங்க (ஓதைத் தெள்விளி) வேண்டியதின் தேவை என்ன என்று 
சிந்திக்கவேண்டியுள்ளது.

	அடைச்சிய என்பதற்கு ஒன்றுசேர்த்துக் கட்டிய (குவித்த) என்று பொருள். பெரும்பாலும் பூக்களைத் தலையில் சூடுவதற்கு 
இது பயன்படுத்தப்பட்டாலும், பூக்களைக் கூந்தலுடன் சேர்த்துக் கட்டி என்றே பொருள்கொள்ளவேண்டும்.

	நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி – மது 588
	குறுஞ்சுனைக் குவளை அடைச்சி – நற்.204/3
	உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி – நற் 357/8
	கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி – குறு 80/1

	போன்ற அடிகளால், குவளை போன்ற பெரிய மலர்களைச் சேர்த்துவைத்துக் கட்டுவதையே அடைச்சி எனக் 
கூறப்படுவதைக் காண்லாம்.

	நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய தோலெறி பாண்டிலின் – அகம் 217/7,8
	வெருவார் இனத்து, அடி விராய வரி குடர் அடைச்சி, அழுகுரல் பேய்மகள் அயர – புறம் 370/23-25

	போன்ற அடிகள் அடைச்சிய என்பதற்கு ஒருங்கு சேர்த்து(க் கட்டி எடுத்து) என்ற பொருளில்தான் அமைந்துள்ளன.

	எனவே நெடுநல் அடைச்சிய என்பதற்கு நெடிய நெல்தாள்கள் சேர்த்துக் கட்டப்பட்ட என்ற பொருளே அமையும் 
என்பது தெளிவு.

	குடுமிக் கட்டிய படப்பையொடு என்ற தொடரில்தான் மிகுந்த குழப்பம் நேர்கிறது. கட்டி என்பதைப் பெயர்ச்சொல்லாகக் 
கொண்டு, குடுமியையுடைய கட்டிகளை உடைய – என்ற பொருள் கொள்ளப்படுகிறது. எனவே படப்பை என்பது வேறொரு 
தோட்டமாகவும் கொள்ளப்படுகிறது. எனவே இந்த அடி, அடுத்த அடிக்குத் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்படுகிறது. அடுத்து, 
கட்டிய என்பதைக் கட்டு என்ற வினையின் எச்சமாகக் கொண்டு குடுமிக் கட்டிய என்பதனைக் குடுமி கட்டிய என்று கொண்டு, 
குடுமியாகச் சேர்த்துக் கட்டிய என்ற பொருளும் கொள்ளப்படுகிறது. இவ்வாறு குடுமியாகச் சேர்த்துக் கட்டிய படப்பையில் அரிகால் 
எப்படி இருக்கும்? கட்டிய குடுமியுடன் இருக்கும் தாள்களையே அரிகால் என்றால், அதனுடனே உழவர் உழுவார்களா? 

	படப்பு – படப்பை என்பதற்குத் தோட்டம் என்ற பொருள் உண்டு. கழனி என்பது வாய்க்கால் பாசனம்.  செழும்ப நீர் 
கிடைக்கும். நீர்பாய்ச்சி உழலாம். ஆனால், தோட்டம் என்பது கிணற்றுப் பாசனம் உடையது. கமலை வைத்து நீர் இறைக்கவேண்டும். 
எனவே தோட்டத்தை உழும்போது அது கட்டாந்தரையாக இருக்கும். உழுதால் மண்கட்டிகளாகத் தரை பிளக்கும். காளைகளையும் 
அதட்டி வேலைவாங்க வேண்டும்.

	இந்தச் சிந்தனையின் முடிவாக, எனக்குத் தோன்றிய பொருள்:

	வயலில் அறுத்துச் சேர்த்த (அடைச்சிய) நெற்கதிர்களைக் களத்துக்குக் கொண்டுவர முடியாத சூழ்நிலை – களத்தில் 
இடமில்லை – இது கழனி – பல வயல்களைக் கொண்ட பெரிய வயல்வெளி (பார்க்க கழனி, செறு, வயல் வேறுபாடு - அகம்-13). 
எனவே அறுத்த நெல்தாள்களை வயல் வரப்பில் சேர்த்துவைத்திருக்கிறார்கள். உடனே மறுநாள் காலை கழனியை உழுவதற்கு 
வருகிறார்கள் (கழனி ஏர் புகுத்து). அப்போது கழனியின் தரை காய்ந்து இருக்கும் (அறுவடைக்காகக் காயப்போட்டது). அதில் நீர் 
பாய்ச்சி, இளக்கி இலகுவாக உழ முடியாத அவசரம். எனவே, வலிமையுள்ள காளைகளைத் தெரிந்தெடுத்து (தெரி பகட்டு), 
அவற்றையும் அதட்டி அதட்டி ஓட்டி (ஓதைத் தெள்விளி), அரிதாள்களை வேருடன் கிளறிவிட்டு (அரிகால் போழ்ந்த), உழும்போது
வயலின் பரப்பு கட்டிகட்டியாகக் காணப்படுகிறது. வயலில் தரை நனைய நீர் பாய்ச்சி, வயற்பரப்பை இளக்கிய பின்னர் 
உழுதிருந்தால் வயல் சேறும் சகதியுமாகத்தான் மாறும். ஆனால் இப்போதோ உழுது முடித்த தோட்டம் கட்டிமுட்டியாய்க் 
காணப்படுவதுபோல் (குடுமிக் கட்டிய படப்பையொடு) காட்சியளிக்கிறது (மிளிர). 

	கோழ்இணர் எதிரிய மரத்த கவினிக்
	காடுஅணி கொண்ட காண்தகு பொழுதில்
10	நாம்பிரி புலம்பின் நலம்செலச் சாஅய்
	நம்பிரிபு அறியா நலனொடு சிறந்த
	நல்தோள் நெகிழ வருந்தினள் கொல்லோ
	மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
	தாதுஇன் துவலை தளிர்வார்ந்து அன்ன
15	அம்கலுழ் மாமை கிளைஇய
	நுண்பல் தித்தி மாஅ யோளே

	செழித்த பூங்கொத்துகள் எதிர்த்துத் தோன்றிய மரங்களையுடைவாய் அழகுற்று,
	காடு அழகு பெற்ற காண்பதற்கினிய பொழுதில்,
	நாம் பிரிந்திட்டதன் தனிமையால் அழகுகெட மெலிந்து
	நம் பிரிவை இதுவரை அறியாத அழகுடன் சிறந்து விளங்கிய
	நல்ல தோள்கள் நெகிழும்வண்ணம் வருந்துவாளோ!
	மெல்லிய சிறகினை உடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள
	தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
	அழகு ததும்பும் மாநிறமேனியில் கிளைத்துத்தோன்றும்
	நுண்ணிய பல தேமல் புள்ளிகளையுடைய நம் தலைவி.

	கோழ் இணர் எதிரிய மரத்த என்ற தொடரில் எதிரிய என்ற சொல்லுக்குத் தேவை என்ன? இணர் என்பது பூங்கொத்து. 
கோழிணர் என்றால் கொழுத்த – செழுமையான – திரட்சியுடைய கொத்து என்று பொருள் - ஒரு பெரிய திராட்சைக் குலையைப் 
போல. ஆனால் திராட்சைக் குலை கீழே தொங்குவது போல்தானே இருக்கும்! அப்படியில்லாமல் முன்னால் நீட்டிக்கொண்டிருந்தால்?
 – அதுதான் எதிரிய என்பது. 

	பூங்கொத்துகள் மரங்களில் எவ்வாறு காட்சியளிக்கும்?

	கவிழ்ந்த வண்ணம் இருக்கும் பூங்கொத்துகள் - மாமரம்
	கவிழ் இணர் மா முதல் தடிந்த – திரு 59/60

	தொங்கிக்கொண்டும், சுருண்டுகொண்டும் நீண்டு இருக்கும் பூங்கொத்துக்கள் – கொன்றை, மரா
	(ஈங்கை இலவம்) தூங்கு இணர் கொன்றை – குறி.86
	நீடு சுரி இணர சுடர் வீ கொன்றை – நற் 302/2
	நெடுங்கான் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி, வலஞ்சுரி வாலிணர் கொய்தற்கு – ஐங் 383/2,3
\
	குவித்துவைத்ததுபோல் மேல் நோக்கி இருக்கும் பூங்கொத்துகள்-புன்னை, குரவு, தோன்றி முதலியன.
	குவி இணர்ப் புன்னை – நற்.94/5,6
	குறுங்கால் குரவின் குவி இணர் வான் பூ – நற்.266/2
	குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன – குறு 107/1
	குவி இணர் ஞாழல் – பதி.51/5
	குவி இணர்ப் புல்லிலை எருக்கம் – புறம் 106/1,2
	பூத்த இருப்பை குழை பொதி குவி இணர் – அகம் 225/11

	தாழ, இறங்கி இருக்கும் பூங்கொத்துகள்- ஞாழல், எருக்கம், இருப்பை
	ஞாழல் அம் சினை தாழ் இணர் – நற் 106/7
	எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை – ஐங் 142/1
	விரிந்து இருக்கும் பூங்கொத்துகள்- எறுழ், வெண்கடம்பு, வேங்கை
	விரி இணர்க் கால் எறுழ் ஒள் வீ தாஅய – ஐங் 308/2,3
	அவிழ் இணர் கருங்கான் மராஅத்து வைகுசினை வான்பூ – ஐங் 331/1,2 
	விரி இணர் வேங்கையொடு – ஐங் 367/2
	ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் – பரி.7/12

	உருண்டு இருக்கும் பூங்கொத்துகள் - கடம்பு
	உருள் இணர் கடம்பின் – பரி.5/81

	நீங்கள் மரத்தைப் பார்க்கும்போது பூங்கொத்துகள் உங்களை நோக்கிச் சிரிப்பது போல் இருந்தால் அதுவே எதிரிய இணர். 

			

	இத்தகைய கோழிணர் எதிரிய மரங்களைக்கொண்டு கவினி காடு அணிகொண்டது என்கிறார் புலவர். கவினி, 
அணிகொண்டு என்ற இருசொற்களுக்குமே அழகுபெற்ற என்ற பொருள் கொள்ளப்படுகிறது. அவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு என்ன?

	கவின் என்ற வினைக்கு அழகுடன் தோன்று என்று பொருள்கொள்ளலாம். கவின் என்ற பெயர்ச்சொல்லுக்கு 
தோற்றப்பொலிவு – structural beauty எனப் பொருள் கொள்ளலாம்.

	கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பு – திரு. 17
	கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த – நெடு.57
	வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த – குறி.198
	கண் களி பெறூஉம் கவின் பெறு காலை – நற்.56/3
	மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால் – அகம் 212/3

	எனவே கவினி என்பதற்குத் தோற்றப்பொலிவுடன் விளங்கி என்ற பொருள் சரியாகும். இதனை மரத்துக்கு 
அடைமொழியாக்கி, கவினி கோழிணர் எதிரிய மரத்த என்று கொள்வர்.

	அணிகொள்ளுதல் ஒருபொருள் வேறு ஒரு பொருளுக்கு அழகூட்டுதல் அல்லது வேறு ஒரு பொருளால் அழகு பெறுதல். 
அலங்கரி/அலங்கரிக்கப்படு என்ற பொருள் ஒத்துவரும். 

	புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ
	  புறவு அணிகொண்ட பூநாறு கடத்திடை – நற்.48/3-5
	சாரல், சிலம்பு அணிகொண்ட வலஞ்சுரி மராஅத்து – குறு.22/2,3
	பீர் அலர் அணி கொண்ட பிறைநுதல் – கலி 124/8
	குருதி யாடிய புலவுநா றிருஞ்சிறை
	  எருவைச் சேவல் ஈண்டுகிளைத் தொழுதி
	  செக்கர் வானின் விசும்பு அணிகொள்ளும் – அகம் 381/9-12

	கோழிணர் எதிரிய தோற்றப்பொலிவுடன் தோன்றும் (கவினி) மரங்களால் காடு அலங்கரிக்கப்பட்டு அழகுபெற்றது 
(அணிகொண்ட) என்கிறார் புலவர் எனலாம். 

	கோழ்இணர் எதிரிய மரத்த --------- (9)
	மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர் (13)

	என்ற அடிகளில் இணர், துணர் ஆகிய இருசொற்களுக்குமே பூங்கொத்து என்ற பொருளே கொள்ளப்படுகிறது. 
அவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு என்ன?

	கோட்டு இணர் வேம்பின் – பெரும் 59
	புகர் இணர் வேங்கை – பெரும் 194
	தூங்கு இணர்க் கொன்றை – குறி 86
	இன மாவின் இணர்ப் பெண்ணை – பட் 18

	என்ற அடிகளுக்குரிய படங்களைப் பார்ப்போம்.

			

	இவற்றினின்றும் நாம் பெறுவது : இணர் என்பது மிகவும் அடர்த்தியாக, ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமைந்துள்ள 
பொருள்களின் தொகுதி அல்லது கொத்து. அது பூவாகவோ, காய், பழமாகவோ இருக்கலாம். அடுத்து துணர் பற்றிப் பார்ப்போம்.

	சாரல் பலவின் கொழும் துணர் – ஐங்.214/1
	நறுவடி மாவின் பைம் துணர் – கலி 41/14
	வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் – அகம் 45/1
	வேனில் முருக்கின் விளை துணர் – நற் 73/1 (பார்க்க – படம் முருக்கம் பூ)

என்ற அடிகளுக்குரிய படங்களைப் பார்ப்போம்.

			

	இவற்றினின்றும் நாம் பெறுவது : துணர் என்பது ஒரே கொத்தில், தனித்தனியான நீண்ட காம்புகளைக் கொண்டு 
ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமையாமல் இருக்கும் பொருள்களின் தொகுதி. அது பூவாகவோ, காய், பழம் அல்லது 
நெற்றாகவோ இருக்கலாம்.

	எரி மருள் பூஞ்சினை இனச் சிதர் ஆர்ப்ப – அடி 3
	மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர் – அடி 13

	ஆகிய அடிகளில் சிதர், வண்டு ஆகிய இரு சொற்களுக்கும் ஒரே பொருள் கொள்ளப்படுகிறது. இதைப் பற்றி ஆராயப் 
புகுந்தால் list நீண்டுகொண்டே செல்கிறது – வண்டு, சிதர், தும்பி, சுரும்பு, ஞிமிறு, மிஞிறு. இன்னும் வரலாம். எனவே, வண்டு 
இன வகைகளைப் பற்றித் தனியான ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வடிக்கவேண்டும். அதற்கு இது இடம் இல்லை.