அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 52
	
பாடல் 52. குறிஞ்சித் திணை பாடியவர் - நொச்சி நியமங்கிழார் – 
				மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் என்றும் பாடம் 

துறை - தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நிற்குமெனத் 
	தலைமகள் சொல்லியது

 மரபு மூலம் - அறிவிப்பேம்கொல் - அறிவியேம்கொல்

	வலந்த வள்ளி மரனோங்கு சாரற்
	கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப்
	பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமக
	ளின்னா விசைய பூசல் பயிற்றலி
5	னேக லடுக்கத் திருளளைச் சிலம்பி
	னாகொள் வயப்புலி யாகுமஃ தெனத்த
	மலைகெழு சீறூர் புலம்பக் கல்லெனச்
	சிலையுடை யிடத்தர் போதரு நாட
	னெஞ்சமர் வியன்மார் புடைத்தென வன்னைக்
10	கறிவிப் பேங்கொ லறியலங் கொல்லென
	விருபாற் பட்ட சூழ்ச்சி யொருபாற்
	சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
	யின்னுயிர் கழிவ தாயினு நின்மகள்
	ளாய்மல ருண்கட் பசலை
15	காம நோயெனச் செப்பா தீமே.

 சொற்பிரிப்பு மூலம்

	வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
	கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
	பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
	இன்னா இசைய பூசல் பயிற்றலின்
5	ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்
	ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது எனத் தம்
	மலை கெழு சீறூர் புலம்பக் கல்லெனச்
	சிலை உடை இடத்தர் போதரும் நாடன்
	நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
10	அறிவிப்பேம்-கொல் அறியலம்-கொல் என
	இருபால் பட்ட சூழ்ச்சி ஒருபால்
	சேர்ந்தன்று வாழி! தோழி! யாக்கை
	இன் உயிர் கழிவதாயினும் நின் மகள்
	ஆய் மலர் உண்கண் பசலை
15	காம நோய் எனச் செப்பாதீமே!

அருஞ்சொற் பொருள்:

வலந்த=சுற்றிய; வள்ளி=ஒருவகைக் கொடி; மரன்=மரம்; வேங்கை=காட்டு வேம்பு; பொங்கர்=கிளை; பூசல்=ஒலி; 
ஏகல்=உயர்ந்த பாறை; அடுக்கம்=மலை; அளை=குகை; சிலம்பு=மலைச்சரிவு; சிலை=வில்; அமர்=விரும்பு; 
வியன்=அகன்ற; சூழ்ச்சி= ஆலோசனை,எண்ணம்; சேர்ந்தன்று=சேர்ந்தது; ஆய்மலர்=ஆராய்ந்தெடுத்த மலர்(போன்ற); 
உண்கண்=மைதீட்டிய கண்; பசலை=colour paleness due to love-sickness. காம நோய் = காதல்.

அடிநேர் உரை

	சுற்றிய வள்ளிக் கொடியையுடைய, மரங்கள் உயர்ந்த மலைச் சரிவில்
	செழித்தெழுந்த வேங்கை மரத்தின் மிக உயர்ந்த நெடிய கிளையிலுள்ள
	பொன்னைப் போன்ற புதிய மலரினைப் பறிக்க விரும்பிய குறமகள்,
	இனிமையற்ற குரலில் “வேங்கை வேங்கை” என்ற ஆரவாரத்தை அடுத்தடுத்து எழுப்பியதால்
5	உயர்ந்த பாறைகளின் அடுக்குகளில் இருண்ட குகைகள் கொண்ட மலைச் சாரலில்
	பசுவைக் கவரும் வலிய புலியைக் கண்டு எழுப்பிய ஒலி அது என்று எண்ணி, தமது
	மலையை அடுத்துள்ள சிறிய ஊரை விட்டுவிட்டு, பெருத்த ஒலியுடன்
	இடது கையில் வில்லை உடையவராய் ஓடிவரும் நாட்டினைச் சேர்ந்த நம் தலைவனது
	அகன்ற மார்பில் அடங்கியுள்ளது அவனை விரும்பும் நமது நெஞ்சம் என்பதை அன்னைக்குத்
10	தெரிவிப்போமா, தெரிவிக்காமல் இருப்போமா என்று
	இருவகையால் நாம் எண்ணி ஆய்ந்தது, இப்போது (தெரிவிக்கலாம் என்ற) ஒரு முடிவுக்கு
	வந்துள்ளது; நீ வாழ்வாயாக தோழியே! நம் உடம்பினின்றும்
	இனிய உயிர் பிரிவதாயினும் உன் மகளின்
	ஆய்ந்தெடுத்த மலர் (போன்ற) மைதீட்டிய கண்களில் படர்ந்துள்ள பசலையானது
15	காதல்நோயால் உண்டானது என்று(மட்டும்) உரைத்துவிடாதே!

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும் 

	தினைப்புனக் காவலுக்குச் சென்ற ஓர் இளம்பெண் அங்கு வந்த ஒரு மலைநாட்டு இளைஞனிடம் மனத்தைப் 
பறிகொடுக்கிறாள். அறுவடைக் காலம் முடிந்ததும் வீட்டிற்குள்ளேயே அடைக்கப்பட்ட தலைவி, தன் தலைவனைக் 
காணமுடியாமையால் காதல்நோய் வயப்படுகிறாள். ஊரிலும் அவளின் காதல்பற்றிய அலர் எழுகிறது. எனவே, தாமாக 
முன்வந்து தன்னை வளர்க்கும் செவிலித்தாயிடம் தனது காதல்பற்றித் தெரிவிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்துத் 
தீர ஆய்கிறாள். ஆய்ந்து, தன் தோழியின்மூலம் தன் காதல் பற்றிய செய்தியைத் தாய்க்குச் சொல்லிவிடலாமென்ற 
முடிவுக்கு வருகிறாள். அப்படிச் சொல்லபோகும் முன் தன் தோழியிடம் ஓர் அன்பு வேண்டுகோளை வைக்கிறாள் 
தலைவி. “உயிரே போனாலும், தாயிடம் ‘உன் மகளின் வாட்டத்துக்குக் காரணம் அவளுள் எழுந்த காதல் நோயே’ 
என்று மட்டும் சொல்லிவிடாதே” என்று தோழியிடம் ஒரு வேண்டுகோளையும் வைக்கிறாள் தலைவி.

	மகள் காதல் நோயால் வாட்டமுற்றிருக்கிறாள் என்ற செய்தியை அவளது வீட்டார் அவளது உள்ள உணர்ச்சிகளாக 
எடுத்துக்கொள்ளாமல், ஆண்துணை விரும்பும் உடல் உணர்ச்சிகளாக எடுத்துக்கொண்டால் என்னாவது என்ற அவளது 
தன்மான உணர்வுதான் அவளைத் தடுமாறவைக்கிறது. அந்தத் தடுமாற்றத்தைப் புலவர் மிக அழகாகப் படம்பிடித்துக்காட்டும் 
நேர்த்தி பாராட்டுக்குரியது.

பாடலின் சிறப்பு

	15 அடிகளுள்ள இந்தப் பாடலில் முதல் 8 அடிகளில் ஓர் உள்ளுறை உவமம் பொதிந்துவைக்கப்பட்டிருப்பதே 
இப் பாடலின் தனிச் சிறப்பாகும். அதைத்தவிர இப் பாடலில் வேறு வெளிப்படையான உவமம் ஏதும் கிடையாது. 
உள்ளுறை உவமம் என்பது, சில குறிப்பிட்ட நிகழ்வுகளைக் கூறி, அவற்றைப் பாடலின் மையக்கருத்துடன் மறைமுகமாகத் 
தொடர்புபடுத்திக் கூறுவதாகும். 

	பாடலின் தொடக்கத்தில் ஒரு குறத்திமகள் ஒரு வேங்கை மரத்தில் பூப்பறிக்கும் காட்சி வருணிக்கப்பட்டுள்ளது. 
பொன்னை நிகர்த்த நிறமும் அழகும் கொண்ட புத்தம் புதுமலர்கள் ஒரு வேங்கை மரத்தில் பூத்துக்குலுங்கிக் கொண்டிருக்கின்றன. 
அவற்றைப் பறிக்க ஒரு குறமகள் முயல்கிறாள். ஓரளவு அவளுக்கு எட்டுகின்ற வரை தன் கைக்குக் கிட்டுகின்ற பூக்களைப் 
பறித்துக் கொள்கிறாள். ஆனால் இன்னும் பல பூக்கள் மிக உயர்ந்த நெடிய கிளைகளில் பூத்துத் தொங்குகின்றன. அவற்றையும் 
பறிக்க அவள் விழைகின்றாள். அதற்கு அவள் ஓர் உபாயம் செய்கிறாள். “புலி, புலி” என்று உரத்த குரலில் ஓங்கிக் கத்துகின்றாள். 
அதைக் கேட்ட ஊர்மக்கள், மேய்கின்ற பசுக்களைக் கொல்ல ஏதோ ஒரு புலி வந்திருப்பதைக் கண்ட ஒரு பெண் எழுப்பும் ஒலி 
என்று எண்ணுகிறார்கள். ஊரிலுள்ள ஆண்கள் அனைவரும் தத்தம் வில்லை எடுத்துக்கொண்டு அவ்விடம் நோக்கி ஓடுகிறார்கள். 
இத்தகைய நாட்டைச் சேர்ந்தவன் தலைவன் என்கிறாள் தலைவி. பாடல் வேங்கை மரத்து வருணனையுடன் தொடங்குகிறது. 
சுற்றிவளைத்த கொடிகளைக் கொண்ட, ஓங்கி வளர்ந்த மரங்களைக் கொண்ட ஒரு மலைச் சாரல். அங்கே செழித்தெழுந்து 
நிற்கிறது ஒரு வேங்கை மரம்.

	அந்த மலைச் சாரலைப் போன்றது தலைவனின் சிற்றூர். அங்கு நிற்கும் மரங்களைப் போன்றவர்கள் அங்கு வாழும் 
இளைஞர்கள். அந்த மரங்களைச் சுற்றிவளரும் கொடிகளைப் போன்றவர்கள் அந்த ஊர்ப் பெண்மக்கள். கிளர்ந்தெழுந்து நிற்கும் 
வேங்கை மரம் போன்றவன்தான் நம் தலைவன். மற்ற மரங்களில் உள்ளதைப் போலவே இந்த வேங்கையிலும் கொடிகள் 
சுற்றியிருக்காதா என்ன? அதுதான் நம் தலைவி. 

	வலந்த வள்ளி மரனோங்கு சாரல் கிளர்ந்த வேங்கை –

	என்கிறபோது உங்கள் மனத்தில் மலைச்சாரலும் வேங்கை மரமும் மட்டுமா தோன்றுகின்றன? உள்ளுறை உவமத்தின் 
நயம் தெரிந்தோர்க்கு ஓர் ஊரே தெரிகிறதல்லவா? வேங்கை மரத்தின் பொன்னேர் புதுமலர் என்பது தலைவனின் மனத்தில் 
முகிழ்த்து மலர்ந்து மணம்வீசி நிற்கும் காதல். அது சேண் நெடும் பொங்கரில் இருக்கிறதாம்! மிக்க உயரத்தில் உள்ள நீண்ட 
கிளையில் மலர் இருக்கிறது. தலைவனைப் பார்க்கக்கூட முடியாமல் இற்செறிப்பில் (house confinement) இருக்கும் தலைவிக்குத் 
தலைவனின் காதல் என்பது இப்போது எட்டாக்கனி போன்றது என்பதற்குப் பதிலாகப் புலவர் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் 
புதுமலர் என்கிறார். உள்ளுறையின் அருமையைப் பாருங்கள்! 

	எட்டாத உயரத்திலிருக்கும் கிட்டாத பூவைப் பறிக்கக் குறமகள் ஓர் உபாயம் செய்கிறாள். “புலி, புலி” என்று உரத்துக் 
கத்துகிறாள். அது உண்மையான புலி என்றெண்ணிய ஊரார் ஓடோடி வருகிறார்கள் – எப்படி? கல்லென – பெரும் ஆரவாரத்துடன். 
சிலையுடைய இடத்தராய் – வில் அம்பு ஏந்தி. வந்து, அது உண்மைப் புலி அல்ல என்று தெரிந்து சினங்கொள்வார்கள்தானே! 
“நானெங்கே பொய் சொன்னேன்? அதோ மஞ்சள் நிறப் பூங்கொத்துகளைப் பாருங்கள்! சிறுத்தை ஒன்று மேலே இருப்பதாக 
எண்ணினேன்” என்று குறத்தி சொல்லலாம். ஓடி வந்தவர்களில் ஒருசிலரேனும் மரத்தில் ஏறிக் குறத்திக்கு எட்டாத பூவை 
அவளுக்காகப் பறித்துக்கொடுக்கலாம் அல்லவா? எப்படியிருப்பினும் பூவைப் பார்த்து புலியென்று கூச்சல்போட்ட குறத்தியின் 
பேதைமையை ஊரார் எள்ளி நகையாடிருப்பார்தானே!

			

	எட்டாத பூவைப்பறிக்க எழுப்பிய கூச்சல் ஊரைக்கூட்டியதால் எழுந்த பேராரவாரம் போல, கிட்டாத காதலை எண்ணித் 
தலைவியின் மேனிநலம் கெட்டுப்போக, ஊரார் பழிமொழி பேசத் தொடங்குகிறார்கள். அந்த ஆரவாரத்தைப் போல இந்த அலர் 
எழுந்ததாம். இருப்பினும் யாரேனும் இரக்கப்பட்டு, தலைவிக்குத் தலைவனின் உறவு கிட்டிவர உதவலாம் இல்லையா? நம் 
தலைவியின் தோழியைப் போல! வில் அம்புடன் ‘புலி’யைக் கொல்ல ஊரார் ஓடிவந்ததைப் போல, வாயில் வம்புமொழியுடன் 
தலைவியை வெளிப்படையாய்ப் பழிக்க ஊரார் தருணம் பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர் என்கிறார் புலவர்.

	ஆக, பாதிப் பாடலுக்கு மேல் ‘வேலையற்றுப்போய்’ப் புலவர் விவரிப்பதாகத் தோன்றும் காட்சிகள் பாடலின் 
மையக்கருத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன அல்லவா! இதனையும் நேரடியாகச் சொல்லாமல், வள்ளி, சாரல், 
வேங்கை, குறமகள், அடுக்கம், அளை, சிலம்பு, புலி, வில்லர் ஆகிய குறிஞ்சித்திணைக்குரிய கருப்பொருள்களுடன் புலவர் ஓர் 
மறைமுக உவமமாக இந்த உள்ளுறை உவமத்தைக் கூறியிருப்பது பாடலின் சிறப்பைப் பலமடங்கு உயர்த்தி இருக்கிறது அல்லவா!

	அடுத்து, பாடலுக்குச் சிறப்புச் சேர்ப்பது தலைவியின் கூற்று – பாடலின் இறுதி இரண்டு அடிகளில் பொதிந்திருக்கும் 
பெண்மையின் மாண்பு. காதல் கைகூடவேண்டும் என்ற ஆத்திரம் தோழி, தலைவி ஆகிய இருவருக்கும் உண்டு. எனவேதான் 
இருபாற்பட்ட சூழ்ச்சி ஒருபாற் சேர்கிறது. அது எந்தப் பக்கம் என்று புலவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. எனினும் அந்த இறுதி 
அடிகளால் காதலைச் சொல்லிவிடவேண்டுமென்ற அவர்களின் முடிவை மறைமுகமாக நாம் உய்த்துணரும் வகையில் நமக்குத் 
தெரிவிக்கிறார் புலவர். இன்னுயிர் கழிவதாயினும் தலைவியின் பசலைக்குக் காரணம் அவளது காதல் நோயே என்று 
வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டாம் என்று விரும்புகிறாள் தலைவி. காதலா தன்மானமா என்ற கேள்விக்குத் தன்மானத்துடன் 
சேர்ந்த காதல் என்பது தலைவியின் முடிவு. தலைவியின் நெஞ்சு தலைவனை விழைகிறது. எனவே தலைவனின் வியன் மார்பில் 
அது ஒடுங்கிவிடுகிறது. ஆக, தலைவனின் வியன் மார்பில் தலைவியின் நெஞ்சு அமர்ந்திருக்கிறது என்று தலைவன் மேல் 
பாரத்தைப் போட்டு, எனவே இவளை அவனுக்கு மணமுடித்துவிடுங்கள் என்று தோழி சொல்லவேண்டும் என்று எண்ணிய தலைவி 
கூறுகிறாள், “நெஞ்சு அமர் (நாடன்) வியன் மார்பு உடைத்து” என. எத்துணை சாதுரியமாகத் தலைவி தோழியானவள் என்ன 
சொல்லவேண்டும் என்பதை மிகவும் நுண்ணயத்தோடும் (நாசூக்காக) என்ன சொல்லக்கூடாது என்பதை வெளிப்படையாக அழுத்தியும் 
கூறுகிறாள் பாருங்கள். 

	பாடல் முழுக்க ஒரு நுண்மைப் பொருள் (சூட்சுமம் – subtlety) இழையோடிக்கிடப்பதே இப் பாடலின் தனிப்பெருஞ் சிறப்பு.