அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 43

பாடல்  43. பாலைத் திணை    பாடியவர் - மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

துறை - தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

  மரபு மூலம் - அளியரோ அளியர்

	கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
	சுடர்நிமிர் மின்னொடு வலனேர் பிரங்கி
	யென்றூ ழுழந்த புன்றலை மடப்பிடி
	கைமாய் நீத்தங் களிற்றொடு படீஇய
5	நிலனும் விசும்பும் நீரியைந் தொன்றிக்
	குறுநீர் கன்ன லெண்ணுந ரல்லது
	கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்த்
	தளிமயங் கின்றே தண்குர லெழிலி - யாமே
	கொய்யகை முல்லை காலொடு மயங்கி
10	மையிருங் கான நாறு நறுநுதற்
	பல்லிருங் கூந்தல் மெல்லியல் மடந்தை
	நல்லெழி லாகஞ் சேர்ந்தன மென்று
	மளியரோ வளியர் தாமே யளியின்
	றேதிற் பொருட்பிணிப் போகித்தம்
15	மின்றுணைப் பிரியும் மடமை யோரே

 சொற்பிரிப்பு மூலம்

	கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை
	சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி
	என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
	கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய
5	நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றிக்
	குறுநீர் கன்னல் எண்ணுநர் அல்லது
	கதிர் மருங்கு அறியாது அஞ்சுவரப் பாஅய்த்
	தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே
	கொய் அகை முல்லை காலொடு மயங்கி
10	மை இரும் கானம் நாறும் நறு நுதல்
	பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தை
	நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும்
	அளியரோ அளியர் தாமே அளி இன்று
	ஏதில் பொருள்_பிணிப் போகித் தம்
15	இன் துணைப் பிரியும் மடமையோரே

அருஞ்சொற் பொருள்:

கமம்சூல் = நிறைந்த கர்ப்பம்; மா மழை = கரிய மேகம்; இரங்கி = ஒலித்து; என்றூழ் = வெம்மை; கை = தும்பிக்கை; 
மாய் = மறை; நீத்தம் = வெள்ளம்; கன்னல் = நீர்க்கடிகாரம், நாழிகை வட்டில்; தளி = நீர்த்துளி, மழை; எழிலி = மேகம்; 
அகை = செழி; கால் = காற்று; ஆகம் = மார்பு; அளி இன்று = இரக்கம் இன்றி; பொருள்பிணி = பொருளீட்டும் பற்று; 
அளியர் = இரங்கத்தக்கவர்.

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	வெளிநாடு சென்று பொருளீட்ட புறப்பட்டுச் செல்கிறது ஒரு கூட்டம். முதலில் அவர்களுடன் போக எண்ணிய 
தலைவன் கடைசி நேரத்தில் மனம் மாறிப் போகாமல் இருந்துவிடுகின்றான். சிறிது நாளில் கார்கால மழை இறங்குகிறது. 
பகலிரவு தெரியாமல் பெய்யும் பெருமழையில் தன் தலைவியின் ஆகத்தைப் புல்லி மகிழ்கிறான் தலைவன். ‘நல்ல வேளை 
நான் செல்லவில்லை; தம் துணையைப் பிரிந்து சென்றவர் எல்லாரும் அளியர் – பாவம் - இரங்கத்தக்கவர்” என்று தனக்குள் 
கூறி மனநிறைவடைகின்றான் பிரிவைத் தவிர்த்த பெருமகன்.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	கடல்முகந்து கொண்ட கமம்சூல் மாமழை
	சுடர்நிமிர் மின்னொடு வலனேர்பு இரங்கி
	என்றூழ் உழந்த புன்தலை மடப்பிடி
	கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய

	கடல்நீரை அள்ளி எடுத்த நிறைந்த சூல்கொண்ட கரு மேகம்
	ஒளி நிமிர்ந்த மின்னலோடு வலமாக எழுந்து ஒலித்து
	வெம்மையினால் வருந்திய புல்லிய தலையை உடைய இளைய பெண்யானை
	தன் துதிக்கை மறையத்தக்க வெள்ளத்தில் தன் ஆண்யானையுடன் படிந்து விளையாட

				

	இப் பாடலைப் பாடியவர் மதுரைக்காரர். உள்நாட்டவர். இருப்பினும் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு 
மண்டலமே நாட்டுக்கு மழையைக் கொணருகிறது என்கிற உண்மையை அறிந்திருக்கிறார். உயரத்தே வானத்தில் 
அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தெரியும் வெண்மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கருமைநிறம் அடைகின்றன. 
சிதறிக்கிடக்கும் மேகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதைத்தான் வானம் இருட்டிக்கொண்டு வருகிறது என்பார்கள். இதையே 
புலவர் கமம்சூல் மா மழை என்கிறார். இங்கே மா என்பதற்குக் கரிய, இருண்ட என்று பொருள். கமம் சூல் என்பது 
நிறைமாதக் கருப்பம். சூல் முற்றிய பசு கன்றை ஈனும். சூல் முற்றிய மேகம் நீரைப் பொழியும். So, the rain is imminent. 
அடிவானத்தில் தெரிந்த மேகமூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயரே எழும்புகிறது. அந்த அசைவில் தரையுடன் மின்தொடர்பு 
ஏற்பட்டு வானத்துக்கும் பூமிக்குமாய் மின்னலாய்க் கிழிக்கும் ஒளி உச்சிக்குத் திரும்பப் பாய்ந்து உயரே வெடிக்கிறது. 
சுடர் நிமிர் மின்னொடு இரங்கி என்பது எத்துணை உண்மை என்பதைப் படத்தில் பாருங்கள். நிமிர்ந்து எழும் ஒளிக்கோட்டையே 
சுடர் நிமிர் மின் என்றும், இடிக்கின்ற இடியின் குரலையே இரங்கி என்றும் புலவர் கூறுகிறார். இரங்குதல் என்பது ஒலித்தல். 

	மழைக்கு முன்னால் மடப்பிடி என்றூழ் உழந்தது என்கிறார். என்றூழ் என்பது ஞாயிற்றின் வெப்பம். எனவே வந்த 
மழை கோடைமழை. கோடை மழையின் இடிக்குரல் நாம் அறிந்ததே. 

	சேய்உயர் விசும்பின் நீர்உறு கமம்சூல்
	தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்
	பெயல்தாழ்பு இருளிய புலம்புகொள் மாலை – குறு.314/1-3

என்ற குறுந்தொகை அடிகள் நம் பாடலை அப்படியே எதிரொலிப்பது போல் இல்லையா?

5 	நிலனும் விசும்பும் நீர்இயைந்து ஒன்றிக்
	குறுநீர் கன்னல் எண்ணுநர் அல்லது
	கதிர்மருங்கு அறியாது அஞ்சுவரப் பாஅய்த்
	தளிமயங் கின்றே தண்குரல் எழிலி 

	நிலமும் வானமும் நீரால் பொருந்திச் சேர
	குறுநீரையுடைய நாழிகை வட்டிலில் நாழிகை பார்ப்போர் அன்றி
	ஞாயிறு உள்ள பக்கம் தெரியாது உலகமே அஞ்சிக்கிடக்கப் பரவி
	நீர்த்துளிகளைக் கொட்டியது குளிர்ந்த, முழக்கத்தையுடைய மேகங்கள் –

	மழை இறங்கி அடிப்பதால், தரை எது, வானம் எது என்று தெரியாத அளவுக்கு எல்லாமே ஒன்றிப்போயுள்ளன. 
பொதுவாகப் பகலில் சூரியன் தெரியும் இடத்தை வைத்து பொழுதைக் கணிப்பார்கள். மோடம்போட்டிருந்தாலும் வானம் 
வெளுத்திருக்கும் பக்கத்தை வைத்துத் தோராயமாகப் பொழுதைச் சொல்லலாம். இங்குதான் வானம், பூமி எல்லாம் ஒன்றாய்க் 
கலந்து தோன்றுகின்றனவே! எனவே, நாழிகை வட்டிலில் நேரத்தைக் கணக்கிடுவோர் தவிர மற்றவர்கள் நேரம் இன்னதென்று 
அறியாமல் குழம்பிப்போயிருக்கிறார்கள். 

	நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்
	------------------------------------------------------------------
	பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
	------------------------------------------------------------------
	குறிநீர்க் கன்னல் இனைத்தென்று இசைப்ப – முல்.50-58

	என்ற முல்லைப்பாட்டு அடிகள் மூலமும் water hour glass என்ற நீர்க்கடிகாரம் அன்று பரவலாகப் 
பயன்படுத்தப்பட்டது என்று அறியலாம். 

	எழிலி என்பதுவும் மேகம் எனப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மழையைக் கொணரும் முதல் மேகமே 
எழிலி எனப் பெரும்பாலும் கூறப்பட்டது. மேலும் மழை பெய்யவிருக்கும் நிலையிலோ, பெய்துகொண்டிருக்கும் நிலையிலோ, 
அப்போதுதான் பெய்துமுடித்திருக்கும் நிலையிலோ உள்ள மேகமே எழிலி எனப்பட்டது. எனவே எழிலி என்பது பொதுவாகக் 
குளிர்ச்சி, இடியொலி ஆகியவற்றுடன் இணைத்துப் பேசப்படுகிறது.

	கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி
	பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை – முல். 5,6
	கறங்குகுரல் எழிலி கார்செய்தன்றே – ஐங். 452/2
	பல்குரல் எழிலி பாடு ஓவாதே – நற்.154/3
	பெய்துபோகு எழிலி வைகு மலை சேர – நற்.396/1

	போன்ற அடிகளால் இதை உணரலாம்.

				

			- யாமே
	கொய்அகை முல்லை காலொடு மயங்கி
10	மைஇரும் கானம் நாறும் நறுநுதல்
	பல்இரும் கூந்தல் மெல்லியல் மடந்தை
	நல்எழில் ஆகம் சேர்ந்தனம் 

			நானோ	
	கொய்யும்போது துண்டிக்கப்பட்ட முல்லைமலரின் மணம் காற்றில் கலந்து
	இருண்ட பெரிய காடு (மணக்கின்றதைப் போல்) மணக்கும் நறிய நெற்றியையும்
	செழித்த கரிய கூந்தலையுடைய மென்மையான இயல்புடைய தலைவியின்
	நல்ல அழகுள்ள மார்பினைச் சேர்ந்திருக்கின்றேன்

	இவ்வாறு இடியும் மழையுமாய் உலகமே இருண்டுகிடக்க, பொழுது என்னவென்றே தெரியாமல் உயிர்கள் 
புலம்பிக்கிடக்க, மேடுபள்ளம் தெரியாமல் நிலமே வெள்ளக்காடாய் மாறிவிட, மருண்டுபோன மன்பதை சுருண்டு 
முடங்கிக்கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பல்லிருங்கூந்தல் மெல்லியல் மடந்தை பக்கத்தில் இருக்கிறாள். அவள் கொய்த 
முல்லை போல் நாறும் நறுநுதலாள். நல்லெழில் ஆகம் கொண்டவள். “நல்லவேளை, நான் வெளியூருக்குப் போகவில்லை” 
என்று தலைவியை அணைத்து மகிழ்கிறான் அவன். அதுமட்டுமா?

			என்றும்
	அளியரோ அளியர் தாமே அளிஇன்று
	ஏதில் பொருள்பிணிப் போகித்தம்
15	இன்துணைப் பிரியும் மடமை யோரே
	
	எப்போதுமே
	(நிச்சயமாய்) இரங்கத்தக்கவராவர் – இரக்கமின்றி
	அயல்நாட்டுப் பொருளீட்டும் ஆசையால் பிரிந்து சென்று தம்முடைய
	இனிய துணையைப் பிரியும் மடமையையுடையோர்.

	முடக்கும் குளிரில் தலைவியின் மார்புக்குள் முடங்கிக்கிடப்பவன் அந்த இன்பத்தை அனுபவித்துப் பாடியிருந்தால் 
இது குறிஞ்சித்திணைப் பாடலாய் அமைந்திருக்கும். மாறாக, அவன் அப்போது பிரிவைப் பற்றி நினைக்கிறான்.

“இந்தக் குளிர்ல மடப்பய எவனும் மனைவிய விட்டுப் போவானோ? (இன்துணைப் பிரியும் மடமை யோரே)” 

“என்ன பண்றது? பொருள் மேல ஆசவச்சுப் போய்க்கிட்டுதான இருக்காக”

“இரக்கமத்த பாவிக! (அளி இன்று) பொண்டாட்டிய நெனச்சுப் பாக்க மாட்டானுகளோ? அப்படியும் வேணுமாக்கும் இந்த 
அசல்தேசக் காசு! (ஏதில் பொருள்பிணி). ஆனா அப்படிப் போனவய்ங்க என்னக்கிமே ரொம்பத்தான் பாவம்! 
(என்றும் அளியரோ அளியர் தாமே)

பிரியாமையும் பிரியாமை நிமித்தமும் - பாலை

	பாலைத் திணை என்றால் ‘சுள்’ளென்ற வெயிலும், ‘சுரீர்’-என்று பொசுக்கும் தரையும், பரட்டைத்தலை 
யா மரங்களில் பருந்துகள் கூடுகட்டியிருப்பதுவும்தான் என எண்ணவேண்டாம் என்பதற்கு இப்பாடல் மற்றுமொரு சான்று. 
பிரிவின் கொடுமையையும், பிரிந்து செல்லும் பாதையின் கடுமையையும், நொந்துபோன நெஞ்சமும், நோவெடுக்கும் 
உள்ளமும் தலைவனின் மனதுடன் நடத்தும் போராட்டத்தையும் மட்டுமே பாலை குறிக்காது. பிரியாமையின் இன்பமும், 
பிரிந்து சென்றோர் மீது கொண்ட இரக்கமும் பாலையின்பாற்படும் என்பதை இப் பாடல் மூலம் தெளிகிறோம். 

	தமிழ்நாட்டில் நிரந்தரமான பாலைநிலம் இல்லை. எனவே திணையொழுக்கத்தில் பாலை என்பதற்குத் 
தனி நிலம் இல்லை. 

	முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
	----------------------------------------------------------------------------------
	பாலை என்பதோர் படிமம் கொள்ளும் – என்பர். 
	
	எனவே (முல்லை + குறிஞ்சி)  (absolutely no rain) பாலை  பிரிவு

	இதன் எதிராக: (முல்லை + குறிஞ்சி)  (plenty of rain) பாலையின்மை  பிரிவின்மை

	எனவேதான் பிரிவின்மையைப் பற்றிப் பேசவந்த புலவர் கொட்டுகின்ற மழையைப் பற்றிப் பாதிப்பாடலுக்கும் 
மேலே பேசுகிறார். மேலும் கொய்யகை முல்லையுள்ள மையிருங் கானத்தைப் பற்றியும் பேசுகிறார். 

	வெஞ்சுடர் அவிர்விடும் வெளி காணும் அச்சத்தைத் தவிர்த்து, நிலனும் விசும்பும் நீரியைந்து ஒன்ற கதிர் 
மருங்கறியாத அச்சம் பற்றிக் கூறுகிறார் புலவர்.

	நண்பகல் வேனிலின் நடுங்கு கதிர் ஞாயிற்றின் கதிரைத் தவிர்த்துவிட்டு, தளி மயங்கிய தண்குரல் எழிலி 
பற்றிப் பேசுகிறார்.

	வெயிலில் இருந்தால்தான் நிழலின் அருமை தெரியும் என்பதற்கு மாறாக, நிழலில் இருந்துகொண்டு வெயிலின் 
வெம்மையில் சென்றோரை அளியரோ அளியர் என்கிறார் புலவர்.