அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 51
	
பாடல் 51. பாலைத் திணை  பாடியவர் - பெருந்தேவனார் 

துறை - பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது

 மரபு மூலம் - நினை மாண் நெஞ்சம்

	ஆள்வழக் கற்ற சுரத்திடைக் கதிர்தெற
	நீளெரி பரந்த நெடுந்தா ளியாத்துப்
	போழ்வளி முழங்கும் புல்லென் னுயர்சினை
	முடைநசை யிருக்கைப் பெடைமுகம் நோக்கி
	யூன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி			5
	யெருவைச் சேவற் கரிபுசிறை தீய
	வேனில் நீடிய வேயுயர் நனந்தலை
	நீயுழந் தெய்துஞ் செய்வினைப் பொருட்பிணிப்
	பல்லிதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்
	பிரியிற் புணர்வ தாயிற் பிரியா				10
	தேந்துமுலை முற்றம் வீங்கப் பல்லூழ்
	சேயிழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்
	மனைமுதல் வினையொடு முவப்ப
	நினைமாண் நெஞ்சம் நீங்குதன் மறந்தே

 சொற்பிரிப்பு மூலம்

	ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற
	நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்துப்
	போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை
	முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி
	ஊன் பதித்து அன்ன வெருவரு செஞ் செவி				5
	எருவைச் சேவல் கரிபு சிறை தீய
	வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை
	நீ உழந்து எய்தும் செய்வினை பொருட்பிணி
	பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
	பிரியின் புணர்வது ஆயின், பிரியாது				10
	ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ்
	சே இழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்
	மனை முதல் வினையொடும் உவப்ப
	நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே

அருஞ்சொற் பொருள்:

சுரத்திடை – சுரம் = அத்தம், காட்டுவழி; தெற=சுட; எரி = வெம்மை; தாள் = அடிமரம்; யா = ஒரு பாலைநில மரம்; 
போழ் வளி = ஊடுறுவிச் செல்லும் காற்று; முடை = மாமிசம்; நசை = விருப்பம்; ஊன் = புலால் துண்டு; 
எருவை = காட்டுப்பருந்து, கழுகு; கரிபு = கரியும்படி; தீய = கருகிப்போக,தீய்ந்துபோக; வேய் = மூங்கில்; நனந்தலை = அகன்ற வெளி; 
பொருட்பிணி = ஈட்டும் வருமானம்; பல்லிதழ் = பூ (ஆகுபெயர்); மாயோள் = மாநிறத்தவள்; முற்றம் = முபகுதி; பல்லூழ் = பலமுறை; 
சேயிழை = சிவந்த அணிகலன்கள்; தெளிர்ப்ப = ஒலிக்க; கவைஇ=தழுவி; 

அடிநேர் உரை

	ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுவழியில், சூரியனின் கதிர்கள் சுடுதலால்
	மிக்க வெம்மை பரவிய - நீண்ட அடிமரத்தை உடைய யா மரத்தில்
	புகுந்துகொண்டு செல்லும் காற்று முழங்கும் பொலிவற்ற உயர்ந்த கிளையில்,
	புலால் விருப்பத்துடன் இருக்கும் தன் பேடையின் முகத்தைப் பார்த்து வரும்
5	மாமிசத்துண்டைப் பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய
	ஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக,
	வேனில் நீண்டிருக்கும் - மூங்கில்கள் உயர்ந்த - அகன்ற காட்டுவெளியில்
	நீ துன்புற்றதால் கிடைக்கும் வேலையினால் அடையும் சம்பாத்தியம்
	பூப்போன்ற குளிர்ந்த கண்களையுடைய மாநிறத்தவளைப்
10	பிரிவதால் பெறுவது என்றால், அவளைப் பிரியாமல்
	அவளின் நிமிர்ந்த மார்பகங்கள் விம்ம, பலமுறை
	சிவந்த அணிகலன்கள் ஒலிக்க அவளைத் தழுவி, நாள்தோறும்
	தலைவியுடன் இல்வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க
	நினைப்பாயாக! சிறந்த நெஞ்சமே! நீ அவளைவிட்டுப் பிரிதலை மறந்து - 

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும் 

	தலைவன் பொருள்வயிற் பிரிய நினைக்கிறான். எனினும் அவனுள் ஒரு தடுமாற்றம் இருக்கிறது. மிகப் பெரிய பாலை 
நிலத்தைக் கடந்து செல்லவேண்டுமே என்று எண்ணுகிறான். எனினும் அவ்வாறு சென்று வந்தால் பொருள் கிட்டுமே என்ற எண்ணம் 
மேலோங்குகிறது. இருப்பினும் இப்போது மனைவியோடு இன்புற்றிருக்கும் நிலையை எண்ணிப்பார்க்கிறான். அந்த இன்பத்தைவிட 
பிரிவதனாற் கிடைக்கும் பெருஞ்செல்வமும் பெரிதல்ல என்று தன் நெஞ்சைத் தேற்றுகிறான்.

பாடலின் சிறப்பு

	பொருள்வயிற் பிரிய நினைக்கும் தலைவன் நெஞ்சினுள் நடக்கும் போராட்டமே பாடலின் மையக்கருத்தாதலால் பாடலில் 
பல்வேறு பெரிய நிகழ்வுகள் இல்லை. ஆனால் அந்தப் போராட்டம் எந்த வகையில் நடைபெறுகிறது என்பதைக் காட்சிகள் மூலம் 
சித்தரித்திருக்கும் புலவரின் திறன் வியந்து போற்றற்குரியது. 

	முதலில் பாலைநிலத்துக் கொடுமையை நெஞ்சுக்குத் தலைவன் எடுத்தோதுகிறான். “ஆளே இல்லாத காடு, மொட்டையாக 
உயர்ந்து இருக்கும் யா மரத்தில் நிழலே இருக்காது. பருந்துக்கும் உணவு கிட்டாது. தேடித்தேடி அலைந்து இறக்கைகளும் 
தீய்ந்துபோனதுதான் மிச்சம்” என்று சொல்லும் தலைவனிடம் முடை நசைஇ இருக்கும் பெடை முகம் நோக்கி, வாயில் ஊன்துண்டு 
இல்லாமல், ஊன் துண்டைப் போன்ற காதுடன் பருந்து வேண்டுமானால் சும்மா வரலாம். நமக்குத்தான் உழந்து சென்றாலும் செய்கின்ற 
வினைக்கேற்ற பொருள் நிறையக் கிடைக்குமே. பருந்துப்பெடை ஏமாந்ததுபோல் உன் மனைவி ஏமாறமாட்டாள் என்று நெஞ்சு கூறுவது 
போல் இருக்கிறதல்லவா புலவரின் பாடல் அமைப்பு! 

	அடுத்து, அத்துணை கொடிய பாலை நிலத்தைக் கடந்து செல்லவேண்டுமே என்ற தலைவன் “நீ உழந்து எய்தும் செய்வினைப் 
பொருட்பிணி” என்று கூறுகிறான். அவன் நெஞ்சை முன்னிலைப் படுத்திக் கூறுவதைக் கவனியுங்கள். பொதுவாக நெஞ்சையும் 
தன்னிலைப் படுத்திக் கூறுவதுதானே வழக்கம். இங்கே நெஞ்சை அவன் வேறுபடுத்திக் கூறுவதிலிருந்து தலைவனுக்குப் பிரிந்து செல்வதில் 
உடன்பாடில்லை என்பதைத் தெளிவாக்குகிறது இல்லையா? இதைத் தலைவனின் மனம் எனக்கொள்ளலாம். 

	பொருட்பிணி என்பது கிடைக்கும் பொருள். நீ உழந்து எய்தும் பொருட்பிணி என்று சொல்லாமல், நீ உழந்து எய்தும் செய்வினைப் 
பொருட்பிணி என்று கூறுவதையும் உற்றுப் பாருங்கள். நீ வருந்தி முயன்று பெறும் பொருள் என்றால், செல்லும் வழியில் உள்ள 
இன்னல்களைப் பொறுத்துக்கொண்டு அடுத்த நாட்டுக்குச் சென்று அங்கு எய்தும் பொருள் ஒருவேளை எளிதிற் கிட்டலாம். அவ்வாறில்லாமல் 
அங்குச் சென்றும் வினைசெய்துதான் பொருள் சேர்க்கப்போகிறாய். அப் பொருளை உள்ளுரிலேயே வினைசெய்து ஈட்டலாமன்றோ என்ற 
தொனியில்தான் புலவர் நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி என்று குறிப்பிட்டிருக்கிறார் போலும். ஒருவேளை வெளிநாட்டில் 
உழந்து எய்யும் பொருட்பிணியின் அளவுக்கு உள்நாட்டில் கிட்டாது என்று நெஞ்சம் கூறியிருக்கலாம். முதலாவது வெளிநாட்டுக்குச் 
செல்வதற்கே நீ உழலவேண்டியிருக்கிறது. அங்கும்போய் வினை செய்யவேண்டியிருக்கிறது. உள்நாட்டிலிருந்தால் நீ உழலத் தேவையில்லை. 
மேலும் அவ்வாறு வெளிநாடு சென்று அங்குத் தங்கியிருக்கும் அந்த நீண்ட காலத்தில், போகாமல் இங்குத் தங்கியிருந்தால் பல்லூழ் சேயிழை 
தெளிர்ப்பத் தழுவிக்கொண்டிருந்திருக்கலாமே, அந்த உவப்புக்கு முன் அந்தக் கூடுதல் பொருள் எம்மாத்திரம் என்ற பொருளில், இறுதியில் 
மூன்று அடிகளில் தலைவன் தலைவியிடம் பெறும் இன்பத்தைக் கூறுகிறானே, அந்தக் கூற்றுத்தான் அவனது போகவேண்டாம் என்ற 
முடிவுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது எனலாம். 

பாலைநிலத்தை புலவர் நம் கண்முன் காட்டும் திறத்தைப் பாருங்கள்.

	ஆள் வழக்கற்ற சுரம் –
	தெறுகின்ற கதிர் –
	பரந்திருக்கும் நீள் எரி –
	அண்ணாந்து பார்க்கவைக்கும் நெடுந்தாள் யா மரம் –
	அதன் உயர்சினைகளைப் போழ்ந்து வெளிவரும் வளியின் முழக்கம் –
	வெருவரு செஞ்செவி எருவைச் சேவல் –
	அதன் தீய்ந்து கருகிய சிறை -
	முடை நசை இருக்கைப் பெடை –
	நீடிய வேனில் –
	உயர்ந்த வேய் –
	நனந்தலை –

	இவை யாவற்றையும் உங்கள் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்திப் பாருங்கள். 

			

			

இதனைக் கடந்து சென்று உழல யாருக்குத்தான் மனம் வரும்? அப்படியும் கடந்து செல்ல நெஞ்சம் துடிக்கிறது. பொருளாசை! பொருட்பிணி 
என்பதற்குப் பொருளின் மீது கொண்ட பற்று என்றும் பொருள் உண்டு. அந்த பொருட்பிணியை அமுக்கி அடக்க வழி – 

1. பல்லிதழ் மழைக்கண் மாயோளைப் பிரிந்து நீ புணரும் பொருட்பிணி, பிரியாது இருப்பின் மனையில் உனக்குக் கிடைக்கும் 
சுகத்தினும் பெரிதோ - 

			

2. அடுத்து மனைவிக்குக் கிடைக்கும் உவப்பு. மனைமுதல் வினையொடும் நாளும் உவக்கவேண்டும். இங்கே மனைமுதல் என்பது 
தலைவியை. மனைக்கு முதலானவள் அவள்தானே! இல்லறநெறிதான் அவளுக்கு வினை. பிரியாது இருப்பின், அவள் ஒவ்வொரு நாளும் 
இதில் உவப்பாளே! இந்த உவப்பினும் பெரிதோ அந்தப் பொருட்பிணி?

			

எனவே, நெஞ்சே! நீ நீங்குதல் மறந்து பிரியாதிருக்க நினை. 

பாடலின் நயம்

	இது சொல்நயம், பொருள்நயம், உவமை நயம் எனப் பலவகைப்படும். இவற்றைத் தனித்தனியாகப் பார்க்காமல் பாடல் அடிகளின் 
வரிசையில் காண்போம்.
நெடுந்தாள் யா மரம் என்கிறார் புலவர். இதனை ஒருவகை மரம் என்றே கூறுகின்றன அகராதிகள். இந்த யா என்பது shorea robusta என்ற 
மரம் என்கிறார் திரு.நாசா கணேசன். அதற்கு அவர் சங்க இலக்கியங்களினின்றும் பல்வேறு சான்றுகள் காட்டியுள்ளார். இதனை 
ஏற்றுக்கொள்ளலாம். இந்த வகை மரங்கள் வெகு ‘நெடு நெடு’-வென்று உயரத்துக்கு வளரக்கூடியவை. உச்சியில் ஓரளவு கிளைகள் 
பரந்திருக்கும். 

			

	காய்ந்துபோன பாலை நிலத்தில் இவை எப்படி நிற்கும் என்று நினைத்துப்பாருங்கள். இதன் தனிப்பண்பு இதன் நீண்ட நெடிய உயரம். 
நெடிய அடிமரம் என்ற பொருளில் நெடுந்தாள் யா என்கிறார் புலவர். காய்ந்துபோன அதன் உச்சி எவ்வாறு இருக்கும். ஒரு பரட்டைத் தலை 
போன்று இருக்கும். இதனையே புல்லென் உயர் சினை என்கிறார் புலவர். இந்த நெருங்கிய குச்சிகளுக்குள் காற்று புகுந்தடித்தால் 
எப்படியிருக்கும்? போழ்கின்ற வளி இதனூடே முழங்கும் என்கிறார். யா மரத்தின் சிறப்பியல்புகளை நம் கண்முன் காட்டுவதோடு, பாலை 
நிலத்தின் பயங்கர ஒலியையையும் நம் காதுகள் கேட்கவைக்கிறார் புலவர். 

	அந்த யா மரத்து வறிய உச்சியில் பருந்துப்பெடை காத்திருக்கிறது. எதற்கு? இரைதேடச் சென்ற ஆண்பருந்து – எருவை சேவல் - 
திரும்பி வருவதற்கு. அத்துணை பிரிவு ஏக்கமா? இல்லை. அது கொண்டுவரும் புலால் துண்டுக்காகக் காத்திருக்கிறதாம் பெடை. 
ஒரு பருந்துகூட வெளியில் சென்ற கணவன் கொண்டுவரும் புலாலுக்காகக் காத்திருக்கும்போது, ஒரு மானுடப் பெண் தலைவன் 
சம்பாரித்துக்கொண்டுவரும் பெரும் பொருளுக்காகக் காத்திருக்கமாட்டாளா என்று நெஞ்சம் கூறுவதுபோல் இல்லையா இது? தன் இறக்கைகள் 
தீய்ந்து கரிப்பிடுத்துப் போகுமளவு தேடியும் ஒன்றும் கிடைக்காத பருந்து ஊனைப் பதித்தது போன்ற செவியுடன் வாயில் ஊன் இன்றி 
வருகிறதாம். முதலில் ஊன் போன்ற செவியைப் பார்த்து ஒருவேளை பேடைப் பருந்து ஏமாந்துகூடப்போயிருக்கும் என்று சொல்லாமற் 
சொல்கிறார் புலவர். ஆனால் உன் மனைவி ஏமாறமாட்டாள், நீ போய்வா என்று நெஞ்சு உறுதியுடன் கூறுவது போல் இல்லையா? 

	பொதுவாகப் பறவைகளுக்குக் காதுகளில் மடல் இருக்காது. உடம்போடு உடம்பாக ஒட்டிக்கொண்டிருக்கும் செவித்துளைகளை 
உரோமங்கள் காத்துநிற்கும். எனவே பறவைகளின் செவித்துளையைப் பார்ப்பது கடினம். அதிலும் பருதுகளுக்குத் தலைநிறைய முடி இருக்கும். 
அது சரிந்து விழுந்து செவித்துவாரங்களை மூடியிருக்கும். பருந்துகளின் செவித்துளை கண்களுக்குப் பின்னால் சற்றுக் கீழே தள்ளி இருக்கும். 
அந்தத்துளை சிவப்பாக இருக்கும்போலும். ஏதோ பருந்தைப் பிடித்துப் பார்த்திருக்கிறார் புலவர். உரோமத்துக்குள் ஒரு ஊன் துண்டைப் 
புதைத்துவைத்ததைப் போன்ற செவி என்னும் பொருளில் ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி எருவைச் சேவல் என்கிறார் புலவர். வாயில் 
ஊனை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பேடைப் பருந்து காதின் ஊன் நிறத்தைக் கண்டு ஒரு நிமிடம் களிகூர்ந்திருக்கும். புலவரின் கூர்த்த 
நோக்கும் அதை ஏற்ற இடத்தில் கூறும் நயமும் போற்றுதற்குரியதல்லவா!

	பொதுவாகக் காடுகளில் உயர்ந்த மூங்கில்கள் புதராய் மண்டியிருக்கும். உச்சிப்பொழுது தவிர மற்றை வேளைகளில் அதன் நிழல் 
பரந்திருக்கும். எனவே நிலப்பரப்பின் வெம்மை தணிந்திருக்கும். ஆனால் இது பாலை நிலமல்லவா! நீண்ட நாள் மழையின்றி மூங்கில்கள் 
வாடிப்போய், இலையுதிர்த்து, மொட்டையாக நின்றிருக்கும். கோடை வெயில்தான் மாலை வரை சுள்ளென்று அடிக்கிறதே! அப்போது நிழலே 
தராத உயர்ந்த மூங்கில்களால் என்ன பயன்? வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை என்ற அடியில் ஒவ்வொரு சொல்லும் ஒரு கதை 
சொல்வதைக் கேட்டீர்களா!

			

	இத்துணை வெம்மையைக் காட்டிய புலவர் அடுத்து தலைவியின் குளிர்ந்த கண்களைக் காட்டுகிறார். பல்லிதழ் மழைக்கண் 
என்கிறார் புலவர். மழை என்பது குளிர்ச்சியைக் குறிக்கும். இரண்டே இதழ்களைக் கொண்ட கண்ணைப் பல்லிதழ் மழைக்கண் என்கிறாரே 
புலவர்? இங்கே பல்லிதழ் என்பது பல இதழ்களைக் கொண்ட மலர். பல இதழ்களைக் கொண்ட மலர் போலன்றி, இவை இரண்டே இதழ்களை 
(இமைகளை)க் கொண்ட மலர்கள் என்கிறாரோ புலவர்?