அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 49
	
பாடல் 49. பாலைத் திணை  பாடியவர் - வண்ணப்புறக் கந்தரத்தனார்

துறை - உடன் போயின தலைமகளை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது

 மரபு மூலம் - இறீஇயர் என் உயிர்!

	கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோ
	ளளியு மன்புஞ் சாயலு மியல்பு
	முன்னாட் போலா ளிறீஇயரென் னுயிரெனக்
	கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த
	கடுங்கட் கறவையிற் சிறுபுறம் நோக்கிக்		5
	குறுக வந்து குவவுநுதல் நீவி
	மெல்லெனத் தழீஇயினே னாக வென்மகள்
	நன்ன ராகத் திடைமுலை வியர்ப்பப்
	பல்கால் முயங்கினள் மன்னே யன்னோ
	விறன்மிகு நெடுந்தகை பலபா ராட்டி		10
	வறநிழ லசைஇ வான்புலந்து வருந்திய
	மடமா னசாவினந் திரங்குமரல் சுவைக்குங்
	காடுடன் கழித லறியின் றந்தை
	யல்குபத மிகுத்த கடியுடை வியனகர்ச்
	செல்வுழி செல்வுழி மெய்ந்நிழல் போலக்		15
	கோதை யாயமொ டோரை தழீஇத்
	தோடமை யரிச்சிலம் பொலிப்பவவ
	ளாடுவழி யாடுவழி யகலேன் மன்னே

 சொற்பிரிப்பு மூலம்

	கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்
	அளியும் அன்பும் சாயலும் இயல்பும்
	முன்நாள் போலாள், “இறீஇயர் என் உயிர்” என
	கொடும் தொடைக் குழவியொடு வயின் மரத்து யாத்த
	கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கிக்		5
	குறுக வந்து குவவு நுதல் நீவி
	மெல்லெனத் தழீஇயினேன் ஆக என் மகள்
	நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்பப்
	பல் கால் முயங்கினள்-மன்னே; அன்னோ!
	விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,		10
	வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
	மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
	காடு உடன்கழிதல் அறியின், தந்தை
	அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர்ச்
	செல்வுழிச் செல்வுழி மெய்ந் நிழல் போலக்		15
	கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
	தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப அவள்
	ஆடுவழி ஆடுவழி அகலேன்-மன்னே!

அருஞ்சொற் பொருள்:

கிளி = கிளியுடன் பேச்சு; பந்து = மகளிருடன் பந்து விளையாட்டு; கழங்கு = கழற்சிக்காய், molucca bean, மகளிருடன் தட்டாங்கல் 
போன்ற கழங்காட்டம்; வெய்யோள் = விரும்புபவள்; அளி = தன்னைச் சாராதவரிடத்தும் கொண்ட அன்பு; சாயல் = மென்மை; 
இறீஇயர் = இற்றுப்போவதாக, be worn off; கொடும் = வளைந்த; குழவி = பசுவின் கன்று; யாத்த = கட்டிய; 
கடுங்கண் = மிக்க விருப்பு, கடுமை; கறவை = பால் கொடுக்கும் பசு; சிறுபுறம் = முதுகு; குறுக = அண்மையில்; 
குவவு = குவிந்திருக்கும்; நுதல் = நெற்றி; நன்னர் = நலமுள்ள; ஆகம் = மார்பு; இடைமுலை = முலை இடை; 
விறல் = வலிமை, வெற்றி; நெடுந்தகை = உயர்ந்தவன்; வற நிழல் = வற்றிப்போன மரத்து நிழல்; அசைஇ = தங்கி, 
இளைப்பாறி; வான் = மேகம்; புலந்து = வெறுத்து; அசா = தளர்ச்சி; திரங்கு = காய்ந்து சுருங்கிப்போன; 
மரல் = ஒருவகைக் கற்றாழை, bowstring hemp, sansevieria zeylanica; அல்குபதம் = சேமித்துவைத்த உணவுப்பொருள்; 
கடி = காவல்; வியல் நகர் = பெரிய இல்லம்; கோதை = மாலையணிந்த மகளிர்; ஆயம் = கூட்டம்; 
ஓரை = ஒருவகை மகளிர் விளையாட்டு; தோடு = வெளிக்கூடு, பூவேலைப்பாடு; அரி = பரல்.

பாடலின் பின்புலமும் பாடல் சுருக்கமும்

	இது தலைவி தலைவனுடன் சென்ற உடன்போக்கின் பின்னர் பாடப்பட்டதாயினும், உடன்போக்கால் பிரிவுத்துயர் 
அடைந்த செவிலித்தாயின் நிலையைக் கூறுவதால் பாலைத்திணையைச் சேர்ந்த பாடலாகிறது.

	வீட்டுக்குள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் தலைவி ஒருநாள் மாறித் தோன்றுகிறாள். 
அவள் ஆசையுடன் கொஞ்சி மகிழும் கிளியுடன் அவள் இன்று பேசவே இல்லை. தோழியருடன் வாசல் முற்றத்து 
மணற்பரப்பில் பந்து வீசி விளையாடிக்கொண்டிருப்பவள் இன்று அவ்வாறு செய்யவில்லை. வீட்டுக்குள்ளும் திண்ணையில் 
அமர்ந்து விளையாடும் பல்லாங்குழி, தட்டாங்கல் போன்ற விளையாட்டுகளிலும் அவள் நாட்டமின்றி இருக்கிறாள். 
அவளுக்குள் ஏதோ சஞ்சலம் இருப்பதை உணர்ந்த செவிலித்தாய் அவளை நெருங்கி அணைத்துக்கொள்கிறாள். தலைவியும் 
செவிலியைத் திரும்ப அணைத்துக்கொள்கிறாள். நெடுநேரமாகத் தலைவி இறுக்கமாக செவிலியின் மார்புகள் வியர்க்கும் 
அளவுக்கு அவளை அணைத்துக்கொண்டிருக்கிறாள். 

	மறுநாள் தலைவி வீட்டுக்குத் தெரியாமல் தலைவனுடன் சென்றுவிடுகிறாள். தலைவியின் முந்தின நாள் மாறுபட்ட 
போக்கை எண்ணிப்பார்த்த செவிலி, “இப்படி ஆகும் எனத் தெரிந்திருந்தால் அவளை இன்னும் கண்ணும் கருத்துமாகக் 
காத்திருப்பேனே” என்று புலம்புகிறாள்.

அடிநேர் உரை

	கிளி, பந்து, கழங்கு ஆகியவற்றை விரும்பியள் (இப்போது)
	அருள், அன்பு, மென்மை, செயல் ஆகியவற்றில்
	முன்பு போல் இல்லை; “என் உயிர் போவதாக” என்று கூறி,
	வளைந்த தொடையினை உடைய கன்றுடன் மரத்தில் கட்டப்பெற்ற
5	ஆசைமிக்க பசுவைப் போல, (அவள்) முதுகினைப் பார்த்து,
	கிட்டே வந்து குவிந்திருக்கும் நெற்றியைத் தடவி,
	மென்மையாகத் தழுவிக்கொண்டேனாக – என் மகள்
	என்னுடைய நல்ல மார்பின் முலைகளிடையே வியர்வை உண்டாக
	பலமுறை என்னைத் தழுவிக்கொண்டாள்; ஐயகோ!
10	வெற்றி மிகு பெருந்தகையாளன் பலபடியாகப் பாராட்ட,
	பட்டுப்போன மரநிழலில் தங்கி, தலையை மேல்நோக்கிப் பார்த்து வருந்தும்
	இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும்
	பாலைநிலத்தில் உடன்போகுதலை அறிந்திருந்தால் - இவள் தந்தையின்
	உணவிருப்பு மிகுந்த காவல் பொருந்திய அகன்ற இல்லத்தில்
15	செல்லுமிடமெல்லாம் கூடவரும் நிழல் போல
	மாலை சூடிய தோழியரோடு ஓரை விளையாட்டில்
	கூடு போன்ற சிலம்பின் பரல்கள் ஒலிக்க, அவள்
	ஆடுகின்றபோதெல்லாம் அகலாதிருந்திருப்பேனே!

பாடல் எளிய உரை

	ஒரு வளர்ப்புத்தாய் தன் வளர்ப்பு மகள் ஒருநாள் தனித்து யோசனையில் மூழ்கி இருப்பதைக் காண்கிறாள். தன் மகளுக்குள் 
ஒரு மாற்றத்தைக் கண்ட அந்தத் தாய் கூறும் கூற்றாக அமைந்திருக்கிறது இப் பாடல்.

	நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் வளர்க்கும் கூண்டுக்கிளியுடன் பேசுவதைப் பெரிதும் விரும்புவாளே இவள்;

	தோழியருடன் பந்துவிளையாட்டில் சுறுசுறுப்பாய் ஆடிக்கொண்டிருப்பாளே!

	கற்களைத் தூக்கிப்போட்டு விளையாடும் தட்டாங்கல் போன்றவற்றை ஆசையுடன் ஆடிக்கொண்டிருப்பாளே!

	இப்போது மற்றவர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டேன் என்கிறாள்; தனக்கு வேண்டியவர்களிடத்திலும் அக்கறை 
கொள்ளாதிருக்கிறாள். தோற்றத்திலும் மாறியிருக்கிறாள். அவளுடைய செயல்பாடுகள் அனைத்தும் மாறியிருக்கின்றன. மொத்தத்தில் 
அவள் முன்னைப்போல் இல்லை.

	தான் வளர்த்த மகளின் போக்கைத் தன்னாலேயே புரிந்துகொள்ள முடியாத நிலையில் தாய் தன்னையே நொந்துகொள்கிறாள். 

	அன்றைக்குத்தான் கன்றினை ஈன்ற ஒரு தாய்ப்பசு தன் கன்றுக்குட்டியை எவ்வளவு பாசத்துடன் பார்க்குமோ அவ்வளவு 
பாசத்துடன் தலைவியைப் பார்க்கிறாள் செவிலி.

	தலைவியின் முதுகுதான் அவளுக்குத் தெரிகிறது. மெல்லத் தலைவியிடம் நெருங்கிச் செல்கிறாள் அந்தத் தாய். கையை நீட்டித் 
தான் ஆசையாக வளர்த்த மகளின் குவிந்த நெற்றியைத் தடவிக்கொடுக்கிறாள். அடுத்த கையால் அவளை மெல்லத் தழுவிக்கொள்கிறாள். 

	தலைவியும் தன் தலையைச் செவிலியின் மார்மீது சாய்க்கிறாள். உடலைத் திருப்பி அவள் மார்பில் முகம் புதைக்கிறாள். 
இரு கைகளாலும் தன் தாயின் இடுப்பை வளைத்து இறுக்கிக்கொள்கிறாள். முகத்தை மேலும் மார்பில் அழுத்திக்கொள்கிறாள். அந்தப் 
புழுக்கத்தில் செவிலியின் மார்புகளுக்கிடையே வியர்த்தது.

	தலைவி ஏதோ சஞ்சலத்தில் ஆழ்ந்திருக்கிறாள் என்பது செவிலிக்குப் புரிந்தது. அது என்னவென்று தெரியாத காரணத்தால் 
செவிலிக்கு அவள் மீது மிகவும் இரக்கம் பிறந்தது.

	அடுத்தநாள் தலைவி தலைவனுடன் உடன்போக்குப் போய்விடுகிறாள். இதனைச் செவிலி மறைமுகவாகவே குறிப்பிடுகிறாள்.

	அவளைக் கூட்டிச் சென்றவனைக் கெட்டிக்காரன் என்கிறாள். உயர்ந்த பண்பினன் என்கிறாள். அவள்மீது மிகுந்த விருப்பம் 
கொண்டிருப்பவன் என்கிறாள். இதெல்லாம் அவன் அவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற செவிலியின் விருப்பத்தின் வெளிப்பாடே.

	இருப்பினும் செல்வச் செழிப்பான சூழ்நிலையில் வளர்ந்த தன் மகள் செல்கின்ற வழியின் இன்னல்களை எவ்வாறு 
பொறுத்துக்கொண்டிருப்பாள் என்று தனக்குள் அங்கலாய்த்துக்கொள்கிறாள் செவிலி. பசி,தாகம் பொறுக்காத தன் மகள் நீருக்கு ஏங்கும் 
மான்கூட்டம் காய்ந்துபோன கற்றாழைகளைச் சுவைத்துப்பார்க்கும் கடுமையான வறண்ட நிலத்தில் என்ன செய்கிறாளோ என்று 
எண்ணி எண்ணி மாய்ந்துபோகிறாள்.

	எப்படியெல்லாம் ஆசையுடன் வளர்த்த மகள் நன்றிகெட்டு நேற்று வந்தவனுடன் சொல்லாமல்கொள்ளாமல் சென்றுவிட்டாளே 
என்று அந்தத் தாய் புலம்பவில்லை. “உன்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தேனே, வளர்த்தவளிடம்கூடச் சொல்லாமல் இப்படிச் 
செய்துவிட்டாயே” என்று பழியைத் தலைவியின்மீது போடவில்லை அந்த அன்பு உள்ளம்.

	மாறாக, “இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், நிழல் போலச் செல்லுமிடமெல்லாம் கூடவே இருந்து அவளைவிட்டு அகலாது 
இருந்திருப்பேனே” என்றுதான் அந்த அன்பு உள்ளம் தவிக்கிறது.

பாடல் விளக்கம்

	பாடல் இரண்டு பகுதிகளை உடையது. 18 அடிகளைக் கொண்ட இப் பாடலில் முதல் 9 அடிகள் தலைவியின் முந்தைய 
நிலையைக் கூறுவது. இது உடன்போக்கு நிகழ்ந்த நாளுக்கு முந்திய நாள். எப்போதும் உற்சாகத்தோடு ஓடியாடி விளையாடிக்கொண்டிருக்கும் 
தலைவியின் நிலையில் ஒரு பெருத்த மாற்றத்தைக் காண்கிறாள் வளர்ப்புத்தாயான செவிலி. தலைவியின் உள்ளத்தில் ஏதோ சஞ்சலம் 
குடிகொண்டிருப்பதை உணர்ந்த செவிலி அவள் மீது மிகுந்த இரக்கம் கொள்கிறாள். ஒரு தாய்ப் பசுவின் பரிவோடு, தலைவியின் அருகில் 
சென்று அவளை அணைத்துக்கொள்கிறாள். இருவருமே ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை என்று பாடலில் அறிகிறோம். 
இதுதான் Healing touch. 

	அணைத்த செவிலியைப் பலமுறை இறுக்க அணைத்துக்கொண்டு நிற்கிறாள் தலைவி. செவிலியின் மார்புகள் வியர்த்துப்போகும் 
அளவு இறுக்கிப்பிடிக்கிறாள் தலைவி. இதுதான் பிரிவுணர்த்தல். இதைச் செவிலி உணரத் தவறுகிறாள். உடன்போக்குக்குப் பின்னர், இதனை 
நினைத்துப்பார்த்த செவிலிக்கு “ஐயோ தெரியாமல் போச்சே” என்ற கழிவிரக்கம் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடுதான் “இடைமுலை 
வியர்ப்பப், பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ” என்ற இரக்கக் குறிப்புகள். 

	அடுத்த 9 அடிகள் செவிலியின் இன்றைய நிலையைக் காட்டுகின்றன. இவ்வாறு வீட்டுக்குத் தெரியாமல் தம் பெண்ணைக் கூட்டிச் 
சென்றவனை வீட்டார் பழிப்பர். ஆனால் இவளோ அந்த ஆடவனை விறல் மிகு நெடுந்தகை என்கிறாள். தன் காதலை வெற்றிபெறச் செய்தவன் 
விறல் மிகுந்தவன்தானே! அவன் வலியவனாகவும் இருந்தததனால்தான் தலைவியின் காவல் மிகுந்த பெரிய வீட்டிலிருந்து 
(கடியுடை வியல் நகர்) அவளைக் கடத்திச் செல்கிறான். மனத்துக்குள் அவள் அவனைப் பாராட்டவே செய்கிறாள். அதுதான் தாயுள்ளம். அந்த 
வெற்றிவீரன் தன் மகளை நன்கு வைத்துக்கொள்ளவேண்டும் என்பது அவள் விருப்பம். நன்கு வைத்துக்கொள்வான் என்பது அவள் நம்பிக்கை. 
இவற்றின் வெளிப்பாடுதான் அவன் அவளைப் பலபாராட்டுவான் என்ற சொற்கள். இவள் என்ன அங்கே நடப்பதைப் பார்த்துக்கொண்டா 
இருக்கிறாள்? இருப்பினும் அவளது விருப்பத்தின் வெளிப்பாடே இந்தச் சொற்கள். அடுத்த நொடி, மகள் செல்லும் பாதையில் அவள் 
எதிர்கொள்ளும் தீங்குகளைப் பற்றியது. தலைவி வளர்ந்த அந்த பெரிய வீட்டைச் சுற்றிலும் பார்க்கிறாள் செவிலி. பாதுகாப்புக்குக் காவலர்; 
காவலுக்கு நாய்; ஏவலுக்குப் பணியாட்கள். ஆண்டு முழுதுக்குமான உணவுப் பொருள்கள். இந்தச் செல்வச் செழிப்பில் வளர்ந்தவள் இப்போது 
வறண்டுபோன காட்டில்; வற்றிப்போன மரநிழலில்; காய்ந்துபோன கற்றாழைக்கருகில். இருப்பினும் வெற்றி செல்வன் பலபாராட்டும்போது 
அவளுக்கு இதெல்லாம் தூசுக்குச் சமானம் என எண்ணி மனம் அமைதிகொள்கிறது. 

	இருப்பினும் இன்னும் நல்ல முறையில் அவளை மணமுடித்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பியிருக்கலாமே என்று செவிலியின் மனம் 
எண்ணத் தொடங்குகிறது. இந்த உடன்போக்கைத் தவிர்த்திருக்கலாம். இதே மணத்தை முடிக்க வேறு வழிமுறைகளைப் பார்த்திருக்கலாம்., 
எப்படி வாயைவிட்டு ஒரு இளம்பெண் தன் விருப்பத்தைக் கூறுவாள்? நாம்தான் அதனை உணர்ந்துகொண்டிருக்கவேண்டும் என்ற உள்ளுறுத்தல் 
அவளுள் மீண்டும் மேலோங்குகிறது. இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் இன்னும் அவளை நெருக்கமாக இருந்து கவனித்திருந்திருக்கலாமே 
என்ற தாய்மனத்தின் தவிப்பைப் பாடலின் இறுதி அடிகள் மிக அழகாகக் காட்டுகின்றன.

பாடல் நயம்

	ஒரு பாடலில் பொருள் நயம், தொடர் நயம், சொல் நயம், உவமை நயம் எனப் பலவித நயங்கள் பொதிந்திருக்கும். சொல்ல வந்த 
பொருளைப் புலவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதுவே பொருள் நயம். இது பாலைத்திணைப் பாடல். பிரிவைப் பற்றியது. இங்கு செவிலியின் 
பிரிவுத் துயரத்தை ஆசிரியர் வெளிப்படையாக விவரிக்கிறார். இருப்பினும் தலைவியுள்ளும் அந்தத் துயரம் மேலோங்கி இருப்பதையும் புலவர் 
மறைமுகமாகக் காட்டுகிறார்.

	தலைவி தன் வழக்கமான செயல்களில் ஈடுபாடு காட்டாமல் இருக்கிறாள். வழக்கமான தன்மையையிலும் மாறித் தோன்றுகிறாள். 
தனிமையில் இருக்கும் அவளின் துயரைத் தாயின் பரிவு மேலும் அதிகரிக்கிறது. குறுக வந்து குவவு நுதல் நீவி, மெல்லெனத் தழுவும் 
செவிலியை அவளின் இடைமுலை வியர்க்க இறுக்க, நெடுநேரம் கட்டிக்கொள்கிறாள் தலைவி. இதன்மூலம் தலைவியின் துயரத்தின் ஆழத்தை 
நன்கு புலப்படுத்துகிறார் புலவர். வீட்டைவிட்டுத் தலைவனுடன் சென்றுவிடத் தலைவி முடிவெடுக்கிறாள். ஆனால் அது மகிழக்கூடிய முடிவல்ல. 
தான் மிகவும் விரும்பி நேசிக்கும் கிளியையும், பந்தையும் கழங்கையும் அவள் இனி என்று நுகரப்போகிறாள்? அனைத்தையும் விட்டுப் பிரியும் 
காலம் வந்ததை எண்ணி வேதனை கொண்ட நெஞ்சின் வெளிப்பாடே அந்த வியர்வை எழுப்பும் இறுக்கம். அந்தக் கலக்கத்தைக் காட்சிப்படுத்திய 
புலவரின் கூர்த்த அறிவு போற்றத்தகுந்ததல்லவா!

	வறண்ட பாலை நிலத்தில் தலைவி தலைவனுடன் உடன்போக்குச் செல்கிறாள். அந்த வறட்சியின் கொடுமையை எண்ணி நெஞ்சு 
நடுக்குறுகிறாள் செவிலி. ‘வற நிழல்’ என்ற இக் குறுகிய தொடரில் பாலை வழியின் கொடுமையையும் கடுமையையும் நம் கண்முன்னே 
கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார் புலவர். ஏதோ ஒரு மரம் என்னவோ ஒரு காரணத்தினால் பட்டுப்போயிருந்தால் அதன் நிழலும் வற 
நிழலாகத்தான் இருக்கும். ஆனால் வழிநடப்பவர்கள் அந்த நிழலில்தான் தங்கி இளைப்பாறினர் என்றால், மொத்தக் காடே காய்ந்துகிடக்கும் 
காட்சி நம் கண்முன் விரியவில்லையா? சரி, அங்கங்கே எங்கேயாவது குளம் குட்டைகள் தென்படாதா? இளமான்கள் வான் புலந்து 
வருந்துகின்றனவாம். வயதான மான்களுக்கு வறட்சி பழகிப்போயிருக்கும். தங்கள் வாழ்க்கையில் முதன்முதலின் இந்த வறட்சியைப் 
பார்க்கின்றனவாம் அந்த மான்கள். மட மான் என்ற தொடரில் மட என்ற இந்தச் சிறு சொல்லில் எத்துணை ஆழம் பொதிந்திருக்கிறது 
பார்த்தீர்களா? தலைத்தீபாவளி, தலைப் பொங்கல் போல, இவற்றுக்கு இது தலைப் பஞ்சம்! தாகம் கொண்ட இளமான்கள் என்ன செய்யும்? 
நாவறட்சி பொறுக்காமல், தங்கள் நாடியைத் தூக்கி, வானத்தைப் பார்ப்பது போல் கழுத்தை வளைத்து உயர்த்தும். இது அவை வானத்தின் 
மீது கோபம்கொண்டு வருந்துவது போல் தோன்றுகிறது புலவருக்கு. ‘வான் புலந்து வருந்திய’ என்ற சொற்றொடர் விலங்குகளின் 
மெய்ப்பாட்டையும் புலவர் எத்துணை நுணுக்கமாகக் கவனித்திருக்கிறார் எனக் காட்டவில்லையா? 

			

	மரல் என்பது ஒருவகை நார்க் கற்றாழை. பாலைநிலத்தில் வளர்வது. நெடுநாட்கள் நீரின்றி இருக்கக்கூடியது. அந்தக் கற்றாழையே 
வற்றிக் காய்ந்துவிட்டதாம். திரங்கு மரல் என்கிறார் புலவர். நீரின்றிக் காய்ந்து சுருண்டுபோயினவாம் அவை. அவை ஓரளவுக்கு நீர்ச்சத்துடன் 
இருக்கும்போது விலங்குகள் அவற்றின் மடலைக் கவ்விச் சப்பி. தம் தாகத்தை ஓரளவு தீர்த்துக்கொள்ளும். இந்தச் சுருண்டுபோன கற்றாழையில் 
என்ன இருக்கும்? மான்கள் அவற்றைச் சுவைக்கும் காட்சியில் எத்துணை வறட்சியைச் சொல்லாமல் சொல்கிறார் புலவர்! நிழலுக்கும் நீருக்குமே 
இந்தப் பஞ்சப்பாடு என்றால் உணவுக்கு வேறு என்ன வழி? 

			

	இத்துணை வறட்சியைக் காட்டிய புலவர், அடுத்த அடியில் தலைவியின் தந்தையின் மனையின் செல்வச் செழிப்பைக் காட்டுகிறார். 
‘தந்தை அல்குபதம் மிகுந்த கடியுடை வியல் நகர்’ என்கிறார் புலவர். தந்தை ஒன்றும் அன்றாடங்காய்ச்சி அல்ல. அல்குபதம் என்பது வைத்து 
உண்ணும் உணவுப்பொருள். ஆண்டு முழுதுக்குமுரிய உணவு. பதம் என்றால் பக்குவம், பயன்பாட்டுக்கு ஏற்ற தன்மை. அடுப்பில் போட்டால் 
அடுத்த நொடி சாப்பிடலாம். நெல்லாக இல்லாமல் அரிசியாக – பயறாக இல்லாமல் பருப்பாக – புளி, தோடுடன் இல்லாமல் கொட்டையும் 
தட்டியெடுத்த நிலையில். இவை தேவையான அளவு மட்டும் இருந்தால் வசதியான குடும்பம். மிகுந்து இருந்தால் செழிப்பான குடும்பம். 
இந்தச் செழிப்புக்குக் காவல் தேவை அல்லவா? அதுவும் உண்டு. ஒரு பெரிய வீட்டினுடைய பல்வேறு அங்கங்களையும் ஒன்றுவிடாமல் கொண்ட 
வியல் நகர் அது. இதையெல்லாம் விட்டுவிட்டுத்தான் தலைவி, குடிக்க நீரும், இருக்க நிழலும் அற்ற காடு உடன் கழியத் துணிந்தாள் என்றால் 
இது அவளின் காதலின் ஆழத்தைப் புலப்படுத்தவில்லையா? 

	“செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே!” என்ற சொற்றொடரில் செவிலியின் அங்கலாய்ப்பில் 
காணப்படுவது புலம்பலா, அழுகையா, இழப்பின் குரலா, ஏமாற்றத்தின் ஒலிப்பா?

	இப் பாடலில் ஒரே ஓர் உவமையைக் காண்கிறோம். மறுபுறம் நோக்கி நிற்கும் தன் மகளின் சிறுபுறம் (முதுகு) நோக்கிப் பார்க்கிறாள்
செவிலி. ‘கொடும் தொடைக் குழவியொடு மரத்து வயின் யாத்த கடுங்கண் கறைவை’-யைப் போலச் செவிலி தன் மகளைப் பார்க்கிறாள். 
கறவை என்பது பால் கறக்கும் நிலையிலுள்ள பசுமாடு. இது முந்தின நாள்தான் கன்று ஈன்றிருக்கிறது. எப்படித் தெரியும்? பசுவின் கன்று 
(மனிதக் குழந்தைகளைப் போல் அன்றி) பிறந்து இரண்டு நாள்களுக்குள் நன்றாக ஓடியாடத் தொடங்கிவிடும். அவ்வாறன்றி பிறந்த பொழுதில் 
அதன் பின் தொடைகளுக்கு வலு இருக்காது. எனவே அவை பின்னங்காலை ஊன்றி எழுந்திருக்க முடியாது. அவ்வாறு முயலும் போது 
பின்னந்தொடைகள் வளைந்துகொள்ளும். இந்த நிலையையே கொடும் தொடைக் குழவி என்று கூறுகிறார் புலவர். ஈன்று அண்மைய நிலையில் 
உள்ள கன்று அது. அந்த நிலையில் பசு தன் கன்றின்மீதே குறியாக இருக்கும். ஆசையுடன் முதுப்பகுதியை நக்கிக்கொடுக்கும். யாரேனும் 
கன்றை அதனிடமிருந்து பிரிக்க முயன்றால் கடுங்கோபத்துடன் முறைத்துப் பார்க்கும். முட்டக்கூடத் துணியும். அதன் கண்களில் தெறிக்கும் 
கடுமை அதன் பாசத்தையும், பரிவையும் காட்டும். அப்படிப்பட்ட பாசமும் பரிவும் கொண்ட கண்களுடன் செவிலி தன் மகளைப் பார்க்கிறாள். 

	கன்றினை ஈன்ற பசு, தன் அளவுகடந்த பாசத்தால் கன்றைக் கையாள விரும்பும் மனிதரைத் தாக்கவும் முற்படும். எனவே 
அந் நிலையில் பசுவை ஒரு மரத்தில் கட்டிப்போட்டிருப்பார்கள். அந்தக் கட்டை மீறிச் செல்லமுடியாத தாய்ப்பசு, கன்றைத் தூக்கும் மனிதரைக் 
கடுமையாகவும், பரிதாபமாகவும் பார்க்கும். பாசம், பரிவும், கடுமை, பரிதாபம், இயலாமை ஆகிய இத்தனை உணர்வுகளையும் கொண்ட அந்தச் 
செவிலியின் மனநிலையை விவரிக்க இதனினும் சிறந்த உவமை வேறு உண்டோ? உவமையின் ஒவ்வொரு சொல்லுக்கும் எத்துணை ஆழமான 
பொருள் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

			

பாடலின் சில சொற்கள்

	கழங்கு என்பது கழற்சிக்காய் கொண்டு மகளிர் விளையாடும் ஒரு உள்மனை விளையாட்டு (indoor game). 
அகநானூறு பாடல் – 17 –உக்கான உரையில் விளக்கப்பட்டுள்ளது.

	ஓரை என்பதுவும் ஒரு மகளிர் விளையாட்டே. இதைப் பற்றிப் பல சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

	1. விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது - நற் 68/1
	இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்

	2. தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
	ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும் - நற் 143/3

	3. நீர் அலை கலைஇய கூழை வடியா
	சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து
	ஓரை மகளிரும் ஊர் எய்தினரே - நற் 398/5

	4. தாதின் செய்த தண் பனி பாவை
	காலை வருந்தும் கையாறு ஓம்பு என
	ஓரை ஆயம் கூற கேட்டும் - குறு 48/3

	5. உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரை
	ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட- குறு 316/5
	ஆய்ந்த அலவன் துன்புறு துணை பரி

	6. அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்
	நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
	ஓரை மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு - குறு 401/3
	கடலில் பரிக்கும் 

	7. நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
	நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார்
	சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும்
	ஓரை மகளிர் ஓதை - கலி 75/4

	8. மட குறு_மாக்களோடு ஓரை அயரும்
	அடக்கம் இல் போழ்தின்கண் - கலி 82/9

	9. கோதை ஆயமொடு ஓரை தழீஇ - அகம் 49/16
	தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப அவள்
	ஆடுவழி

	10. ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை
	கோதை ஆயமொடு வண்டல் தைஇ
	ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என - அகம் 60/11

	11. சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி
	ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் - அகம் 219/2

	12. ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் - புறம் 176/1

	13. ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் - நற் 155/1

	ஓரை என்பது பஞ்சாய்க்கோரையில் பாவை செய்து மகளிர் ஆடும் விளையாட்டு என்பார் நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூரார். 
மேற்கண்ட பாடல் வரிகளினின்றும் நாம் அறிவன:-

	1. இது மகளிர் குழும விளையாட்டு. ஆண்கள் கலந்துகொள்வது அவருக்கு இழுக்கு(group game). 

	ஓரை என்ற சொல் ஆயம் என்ற சொல்லோடு ஒட்டிவருவதைக் காண்க. ஆயம் என்பது பெண்கள் கூட்டம். கலித்தொகை 82-இல் 
மகளிருடன் ஓரை ஆடும் ஆடவனை அடக்கம் இல்லாதவன் என்று கூறப்பட்டுள்ளது.

	2. இது ஒரு திறந்த வெளி விளையாட்டு (open air game). 

	3. இது ஓடியாடி விளையாடவேண்டிய விளையாட்டு. 
	தம் காற்சிலம்பு ஒலிக்க பெண்கள் ஓரை ஆடுவதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஓரை ஆடும்போது கடற்கரை நண்டுகள் 
வெருண்டு ஓடும்.

	4. பெரும்பாலும் மணற்பரப்பில் ஆடும் விளையாட்டு. 

	வீட்டில் மணல் பரப்பிய முற்றத்திலோ அல்லது ஆற்றங்கரை, கடற்கரை ஆகிய பகுதிகளிலோ பெண்கள் ஓரை ஆடுவர்.

	ஓரை என்பது ஞாயிறு, சுக்கிரன் என்ற வெள்ளி, புதன் என்ற அறிவன், சந்திரன் என்ற திங்கள், சனி என்ற காரி, குரு என்ற 
வியாழன், செவ்வாய் என்ற அங்காரகன் ஆகிய ஏழு கோள்களுக்கும் உரியது என்பர் இந்திய வானியலார். எனவே ஏழு பெண்கள் அடங்கிய 
ஒரு குழுவாகத் தமக்குள்ளோ அல்லது ஒவ்வொன்றும் ஏழு பெண்கள் கொண்ட இரண்டு குழுக்களாக எதிரெதிராகவோ பெண்கள் ஆடும் 
விளையாட்டாக இது இருந்திருக்கலாம்.