அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 57
	
பாடல்  57. பாலைத் திணை  பாடியவர் - நக்கீரனார்

துறை - பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது..

  மரபு மூலம் - ஆனாது அழுவோள்

	சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
	நெடுநீர் வானத்து வாவுப்பறை நீந்தி
	வெயிலவி ருருப்பொடு வந்துகனி பெறாஅது
	பெறுநாள் யாண ருள்ளிப் பையாந்து
5	புகலேக் கற்ற புல்லெ னுலவைக்
	குறுங்கா லிற்றிப் புன்டலை நெடுவீ
	ழிரும்பிணர்த் துறுகல் தீண்டி வளிபொரப்
	பெருங்கை யானை நிவப்பிற் றூங்குங்
	குன்ற வைப்பி னென்றூழ் நீளிடை
10	யாமே யெமிய மாகத் தாமே
	பசுநிலா விரிந்த பல்கதிர் மதியின்
	பெருநல் லாய்கவி னொரீஇச் சிறுபீர்
	வீயேர் வண்ணங் கொண்டன்று கொல்லோ
	கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
15	முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக்
	களிறுபட வெருக்கிய கல்லென் ஞாட்பி
	னரும்புண் ணுறுநரின் வருந்தினள் பெரிதழிந்து
	பானாட் கங்குலும் பகலு
	மானா தழுவோ ளாய்சிறு நுதலே

 சொற்பிரிப்பு மூலம்

	சிறு பைம் தூவிச் செம் கால் பேடை
	நெடு நீர் வானத்து வாவுப் பறை நீந்தி
	வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது
	பெறு நாள் யாணர் உள்ளிப் பையாந்து
5	புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை
	குறும் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
	இரும் பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப்
	பெரும் கை யானை நிவப்பின் தூங்கும்
	குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை
10	யாமே எமியம் ஆகத் தாமே
	பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
	பெரு நல் ஆய் கவின் ஒரீஇச் சிறு பீர்
	வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ
	கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
15	முதுநீர் முன்துறை முசிறி முற்றிக்
	களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
	அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து
	பானாள் கங்குலும் பகலும்
	ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே

அருஞ்சொற் பொருள்:

பைந்தூவி = மெல்லிய சிறகு; பேடை = பெட்டை(வௌவால்); நெடுநீர் = நீண்ட தன்மை; வாவுப்பறை = தாவித்தாவிப் பறத்தல்; 
அவிர் உருப்பொடு = ஒளிவிடும் வெம்மையுடன்; யாணர் = புதிய வளம்; உள்ளி = நினைந்து; பையாந்து = வருந்தி; 
புகல் ஏக்கற்று = (மரங்களில்) புகுவதற்கு ஏங்கி; உலவை = மரக்கிளை; குறுங்கால் = குட்டையான அடிமரம்; இற்றி = இத்தி மரம்; 
நெடுவீழ் = நீண்ட விழுது; பிணர் = சொரசொரப்பு; துறுகல் = உருண்டைப் பாறை; வளி = காற்று; நிவப்பு = உயர்ச்சி; 
தூங்கு = தொங்கி அசை; வைப்பு = சிற்றூர்; என்றூழ் = கோடைகாலம்; எமியம் ஆக = தனியாக இருக்க; ஒரீஇ = நீங்கி; 
பீர் = பீர்க்கு; வீ = பூ; ஏர் = ஒத்திரு; எருக்கிய = அழித்த; ஞாட்பு = போர்; 

அடிநேர் உரை

	சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
	நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து,
	வெயில் தகதகக்கும் வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது
	அம் மரத்தில் எந்நாளில் புதிய கனிகள் கிடைக்குமோ என நினைந்து வருந்தி,
5	உட்புகுந்து கனிதின்ன ஏங்கிப்போகும் புல்லிய கிளைகளையுடைய
	குட்டையான அடிமரத்தையுடைய இத்திமரத்தில் புல்லிய உச்சியை உடைய நீண்ட விழுதுகள்
	பெரிய சொரசொரப்பான உருண்டைக் கல்லைத் தொட்டுக்கொண்டு, காற்றடிப்பதால்
	பெரிய துதிக்கையையுடைய யானை உயர்த்தினாற்போன்று ஆடும்,
	குன்றத்துச் சிற்றூர்களைக் கொண்ட கோடைகாலத்து நெடிய வெளியில்
10	யான் தனியனாக இருக்க, தலைவியோ,
	குளிர்ந்த நிலா விரிந்த பல கதிர்களையுடைய குறைமதியைப் போல,
	மிகவும் சிறந்த ஆராயத்தக்க அழகு நீங்கப்பெற்று,
	சிறிய பீர்க்கம்பூவினைப் போன்ற நிறம் கொண்டதோ!
	கொய்த பிடரி மயிர்க் குதிரைகளையுடைய, கொடி கட்டிய தேரையுடைய பாண்டியன்
15	பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து,
	யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்
	விழுப்புண்பட்டவரைப் போல மிகவும் மனம் நொந்து வருந்தி
	நடு இரவிலும் பகலிலும் 
	நிற்காமல் அழுவோளின் அழகிய சிறு நெற்றியே!

பாடலின் பின்புலம் 

	இது பாலைத்திணைப் பாடல். எனவே இதன் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல்நிமித்தமும். தலைவியைவிட்டுப் 
பிரிந்து சென்ற தலைவன், பலநாள்கள் ஆயினும் பயணம் முடியப்பெறாதவனாய், ஒரு நீண்ட வெளியில் கொடிய வெயிலில் 
காய்ந்துபோன ஒரு இற்றி மரத்தின் நிழலில் ஓய்வெடுத்தவாறு, தலைவியை எண்ணி இரங்கிக் கூறுவதாக இப்பாடல் 
அமைந்துள்ளது.

பாடலின் விளக்கமும் சிறப்பும்

	தலைவன் பயணம் மேற்கொண்டு பலநாள்கள் ஆகிவிட்டன என்பதனை, பானாள் கங்குலும் பகலும் அழுவோள் 
என்ற அவனது கூற்றாலேயே அறியலாம். பொருள்சேர்க்கும் பணியின் நிமித்தமாக வெளியூருக்கு நடந்து செல்லும் தலைவன், 
ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுகிறான். இரவில் தங்கியும் பகலில் நடந்தும் செல்லும் அவன், இந்தப் பாடலைப் பாடும் 
வேளையில் வெயில் தகிக்க, ஒரு நீண்ட வெளியில் நடந்து செல்கிறன். முதலில் அவன் காணுவது தொலைவில் ஒரு மரம். 
வறண்ட சூழ்நிலையில் அது பெரும்பாலும் இலைகளற்று நிற்கிறது - புல்லென் உலவை என்கிறார் புலவர். உலவை என்பது 
காய்ந்துபோன மரக்கிளைகள். அந்த மரம் நெடு நெடுவென்று வளர்ந்து நிற்காமல் குட்டையான அடிமரம் கொண்டதாக 
இருக்கிறது – குறுங்கால் - என்கிறார் அவர். காய்ந்துபோன அதன் உச்சியிலிருந்து விழுதுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன – 
புன்தலை நெடுவீழ் - என்கிறார் புலவர். எனவே அதனை இற்றி மரம் என்று தலைவன் அடையாளம் கண்டுகொள்கிறான். 
அவன் அந்த மரத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கும்போதே, வானத்தில் ஒரு பெரிய பழந்தின்னி வௌவால் அம் 
மரத்தை நோக்கிப் பறந்து வருவதைக் காண்கிறான். இந்த இடத்தில் புலவர் அந்த வௌவாலை வருணிப்பதைப் பாருங்கள்:

	சிறு பைந்தூவி செங்காற் பேடை 

	தூவி என்பது சிறகு. பைந்தூவி என்பது மெல்லிய சிறகு. வௌவாலின் சிறகு மற்ற பறவைகளினதைப் போல் பல 
இறகுகளால் ஆனது அல்ல. ஒரு மெல்லிய சவ்வு போன்ற அமைப்பு, குடைக்கம்பி போன்ற பலவித சிறிய எலும்புகளின்மீது 
போர்த்தப்பட்டிருப்பது போல் இருக்கும். எனவேதான் இதனைப் பைந்தூவி என்கிறார் புலவர். மிகவும் இளைய மென்மையான 
பிஞ்சுக் குழந்தைகளைப் பச்சைக் குழந்தை என்று அழைப்பது போல. அதன் சிறகுகள் சிறியவை என்கிறார் புலவர். 

	வௌவால்களில் பல இனங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றுக்குச் சிறகுகள் சிறியவையாக இருக்கும் என்று சொல்வர் 
விலங்கியலார். இது அப்படிப்பட்ட ஒருவகை வௌவாலாக இருக்கவேண்டும். 

	சிறு என்பது சிறுகு என்பதன் குறுக்கமாக இருக்கலாம். சிறுகு என்பதற்கு சுருங்கு (shrink, diminish) என்ற பொருள் 
உண்டு. வௌவாலின் சிறகு ஒரு மெல்லிய சவ்வினால் ஆனது என்று பார்த்தோம். எனவே மற்ற பறவைகள் தம் சிறகை விரித்து 
மடக்குவதற்கும், வௌவால் தன் சிறகை விரித்து மடக்குவதற்கும் வேறுபாடு உண்டு. சில சிறு சிறு பாகங்களை இணைத்துச் 
செய்யப்பட்ட மடக்கு விசிறியைப் பார்த்திருப்பீர்கள். ஏனைய பறவைகளின் சிறகுகள் இப்படிப்பட்டவை. ஆனால் வௌவால் தன் 
சிறகை மடக்குவது இதைப் போலன்று. ஒரு குடையை விரித்து மடக்குவதைப் போலவே வௌவால் தன் சிறகை விரித்து 
மடக்குகிறது. அதாவது தன் சிறகை ஒரு வௌவால் மடக்கும் போது அது சுருங்கிக்கொள்கிறது. இதனையே சிறுகு தூவி – 
சிறுதூவி என்று புலவர் குறிக்கிறார் எனலாம்.

	ஆனால் இந்த வௌவாலின் கால்கள் சிவந்தன என்றும் அது ஒரு பேடை என்றும் புலவரால் எவ்வாறு 
கணிக்கமுடிகிறது?

	கோழி, குருவி, மயில் போன்ற பறவை இனங்களில் ஆண், பெண் வேறுபாடு காண்பது எளிது. ஆனால் வௌவாலில், 
அதுவும் உயரே பறக்கும் போது, அதனை ஆண், பெண் என்று காண்பது எளிதா? நம்பும்படியாக இல்லையே எனலாம். பறவை 
ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.

 “ Females have one pair of mammae located in the chest region.” 

	அதாவது பெண்வௌவால்களுக்கு மனித இனத்தைப்போலவே இரண்டு மார்பகங்கள் உண்டு. எனவே, உயரே பறந்தாலும் 
மரத்தருகில் வரும்போது கீழிருந்து பார்த்து இனம் காணுவது எளிதானதே. இரவில்தானே அவை வெளிவரும், எப்படி இனம் 
காணுவது என்கிறீர்களா? புலவர் பகலில் பறக்கும் வௌவால்பேடையைப் பற்றித்தானே குறிப்பிடுகிறார்! 
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாது என்கிறார் புலவர். பகலில் வௌவால்கள் பழந்தின்னப்போகுமா? 
நியாயமான கேள்வி! பறவை ஆய்வாளர் என்ன சொல்கிறார் என்று மீண்டும் கேட்போம்: 

	“The camp is the base from which they make their night time foraging trips. Then they prefer nectar and pollen of 
native trees and rainforest fruits. Daytime is surprisingly busy for these animals that we usually think of as creatures 
of the night. You will see them fanning their wings to keep cool when it is hot, grooming, giving birth, tending 
young, mating, looking around, even flying around: all during daytime. However they will not be eating”. 

	பகலில் அவை இரை தேடமாட்டா என்ற செய்தி சற்று அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், அவை கூட்டமாகத்தான் 
இரைதேடிப் போகும் எனவும் காண்கிறோம். தொடர்ந்து பறவை ஆய்வாளரின் கூற்றைப் படிக்கையில்தான் தெளிவு பிறந்தது. 

“Only once, when there was a terrible food shortage, have I seen a flying fox eating leaves during the daytime in the camp.”

	எனவே, உணவு கிடைக்காத நேரத்தில் பகலில்கூட தனியாகச் சில வௌவால்கள் இரைதேடப் போகும் எனக் 
காண்கிறோம். ‘Camp’ என்பது இந்த வௌவால்கள் வாழும் இருப்பிடம். கனிகள் கிடைப்பதைப் பொருத்து அவை தங்கள் 
இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும். மேலும் அவை தாங்கள் கனி உண்ட பழைய இடங்களை நன்கு நினைவில்வைத்துக்கொள்ளும்’ 
என்றும் பறவை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படி, தான் கனி உண்ட ஒரு பழைய இடத்தை நோக்கித் தனியாகச் செல்லும் 
ஒரு பெண் வௌவாலைப் புலவர் ஒருநாள் உச்சி வெயிலில் கண்டிருக்கிறார். தலைவியை விட்டுப் பிரிந்து வறண்ட 
காட்டுப்பகுதியில் தனியே செல்லும் தலைவன் ஒருவன், அங்கு பழம் தேடி வந்து ஏமாந்து இருக்கும் ஒரு வௌவாலைப் பார்த்து, 
இப்படித்தானே தன் தலைவியும் தன்னுடன் வாழ்ந்த பழைய இன்பமான நாட்களை எண்ணி வருந்திக்கொண்டிருப்பாள் என்று 
எண்ணி வருந்துவதாகப் புலவர் ஒரு அருமையான கற்பனை அகப் பாடல் இயற்றுவதற்கு அவர் கண்ட தனித்த வௌவால் 
தூண்டுகோலாய் அமைந்திருக்கவேண்டும்.

	வௌவாலின் கால்கள் சிவப்பாகவா இருக்கும். வௌவால்களில் எத்தனையோ வகையுண்டு. அவற்றில் சிலவற்றுக்குக் 
கால்கள் மட்டும் என்ன, சிறகுகளின் எலும்புகளும் சிவப்பாகவே இருக்கும். படத்தைப் பாருங்கள்.

			

	தனித்து வந்து திரும்பும் ஒரு வௌவாலை இத்துணை நுணுக்கமாகப் பார்க்கமுடியுமா?

	காட்சிப்படுத்துதலில் இரண்டுவகை உண்டு. முதலாவது, கண்ணுக்கெதிரே தோன்றும் ஒரு காட்சியைக் காட்சிப்படுத்தல். 
ஓர் உருவத்தைப் பார்த்தோ அல்லது ஓர் இடத்தைப் பார்த்தோ அதனை அப்படியே (தத்ரூபமாக) வரையும் ஓவியரின் வேலையைப் 
போன்றது இது. ஆனால் எல்லா ஓவியங்களும் அவ்வாறு அமைவதில்லை. ஓர் ஓவியர் ஒரு காட்சியை மனக்கண்ணாற் கண்டு, 
அதனை நேரில் காண்கிறாற்போல் வரையலாம். அந்த காட்சிப்பொருளைப் பற்றிய நுண்மையான செய்திகளை அவர் பார்த்தோ, 
கேட்டோ அல்லது படித்தோ தெரிந்துகொண்டிருந்திருப்பார். அவ்வாறு தெரிந்ததை அவர் உயிரோட்டத்துடன் வரைவார்.

	இந்தப் பாடலின் புலவரும் வௌவாலைப் பார்த்துத் தெரிந்த உண்மைகளையே, தலைவன் பாலைநிலத்தில் பார்ப்பதாகப் 
பாடியுள்ளார் என்று கொள்ளலாம்.

	வௌவாலுடன் ஒப்பிடும்போது அது பறந்துவரும் வானத்தின் அளவு மிகப் பெரியது. அதனால்தான் நெடுநீர் வானம் 
என்கிறார் புலவர். நீர் என்பது நீர்மை – தன்மை. நீண்ட தன்மையுள்ள வானம். எனவே வௌவால் நெடுந்தொலைவு பறந்து 
வந்திருக்கிறது. வௌவால்கள் 30 கி.மீ தொலைவு கூடப் பரந்து சென்று இரைதேடும் என்பர் விலங்கியலார். 
சிறு பைந்தூவி – நெடுநீர் வானம் என சொற்களால் புலவர் காட்டும் முரண்தொடையின் அழகைக் கவனித்தீர்களா?
வாவுப்பறை என்கிறார் புலவர். வாவுதல் என்பது தாவுதல் (leap). நீந்துவதில் எத்தனையோ வகையுண்டு. இரு கைகளையும் 
முழுதும் முன்னே நீட்டி, அப்படியே பக்கவாட்டில் அவற்றை வலித்து உள்ளங்கைகளால் நீரைப் பின்னே தள்ளி உடலை முன்னே 
செலுத்துதலே வாவுதல். சிறிய சிறகுகளைக்கொண்ட குருவி போன்ற பறவைகள் தம் சிறகுகளைப் படபட-வென்று அடித்துக்கொண்டு 
பறக்கும். ஆனால் கொக்கு நாரை போன்றவைகளுக்குச் சிறகுகள் பெரியதாக இருக்கும். அவற்றை மேலும் கீழும் மெல்ல 
அசைத்து அசைத்து அவை பறக்கும். இதுதான் வாவுப் பறை. பழந்தின்னி வௌவால்கள் பெரிய சிறகுகளைக் கொண்டவை. 
எனவேதான் புலவர் வாவுப் பறை என்கிறார். மனிதர்கள் நீரில் வாவி வாவி நீந்துவது போல, இந்த வௌவால் வானத்தில் 
வாவி வாவி நீந்துகிறதாம். வாவுப் பறை நீந்தி என்ற சொல்லாக்கம் எத்துணை பொருத்தமாக வந்து விழுந்திருக்கிறது பாருங்கள்!

	அந்த வௌவால் பழம் தேடி வரும் நேரம் உச்சிவேளை. வெயிலில் காற்று கானல்நீராய்த் தோன்றுகிறது. அதன் ஒளிர்வில் 
கண்கள் கூசுகின்றன. வெப்பம் உச்சியைத் தாக்குகிறது. அதுவே வெயில் அவிர் உருப்பு. அவிர்தல் என்பது ஒளிர்தல். 
உருப்பு என்பது வெம்மை. 

	உச்சி வெயிலில் ஒரு தனித்த வௌவால் ஓங்கியோங்கிச் சிறகுகளை அடித்துக்கொண்டு ஒரு மரத்தை நோக்கி வருகிறது. 
மரத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. மரத்துள் நுழைந்து கிளைகளில் தொங்கிப் புசிக்க மரத்தில் ஒரு கனிகூட இல்லை. சோர்ந்துபோய் 
பக்கவாட்டில் சாய்ந்தவண்ணம் பறந்து சென்று மறைகிறது. “இனி இந்த மரம் பூத்து, காய்த்து, பழுத்து, புதிய பழங்கள் என்றைக்கு வர?” 
என்று மனம் வருந்தி ஏங்கிப்போய் அந்த வௌவால் திரும்பிப்போகிறதாம். அந்த வௌவாலின் மனத்துள் நுழைந்தா பார்த்தான் 
அந்தத் தலைவன்? பெறுநாள் யாணர் உள்ளிப் பையாந்து புகலேக்கற்றுத் திரும்புகிறது என்கிறான் அவன். தன் மனத்துள் எழும் 
எண்ணங்களை அந்த வௌவாலுக்கு ஏற்றிச் சொல்கிறான் அவன். பொருளீட்டச் சென்ற தலைவனை நினைந்து ஏங்கிய வண்ணம் 
வீட்டில் காத்துக்கிடக்கும் தலைவியைப் பற்றிய எண்ணம் அவனிடம் மேலோங்கி நிற்கிறது. அவன் பிரிந்து வந்து சில நாள்களே 
ஆகின்றன. இன்னும் பொருளீட்டும் இடத்துக்கூடப் போய்ச் சேரவில்லை. நடுவழியில் பாலை நிலத்து மரத்தடியில் நின்றுகொண்டு, 
பானாள் கங்குலும் பகலும் ஆனாது அழுவோளைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறான். “இனி இந்தத் தலைவன் ஊர்போய்ச்சேர்ந்து, 
பொருளீட்டி, மீண்டும் திரும்பி வந்து, புதிய இன்பங்கள் என்றைக்கு வர?” என்று அந்தத் தலைவி துயருற்றுக்கிடப்பாளே என்று 
எண்ணிய அவனது எண்ணங்களை அந்த வௌவாலுக்கு ஏற்றிச் சொல்கிறான் எனலாம்.

	அந்த மரத்தை அண்ணாந்து பார்க்கிறான் தலைவன். அது ஒரு இத்தி மரம். மிகக் குட்டையான அடிமரத்தைக் கொண்ட அந்த 
மரத்தின் (குறுங்கால்)   கிளைகள் காய்ந்துபோய்க் குச்சிகுச்சியாய் நீட்டிக்கொண்டிருக்கின்றன (புல்லென் உலவை). அதன் உச்சியிலாவது 
ஓரிரண்டு இலைகள் இருக்கின்றனவா என்று உற்றுப்பாக்கிறான் அவன். பரட்டைத் தலையாய்ப் படர்ந்து கிடக்கிறது அந்த மரத்தின் உச்சி 
(புன்தலை). ஆனால் அந்த உச்சியிலிருந்து நீண்ட விழுதுகள் (நெடு வீழ்) தொங்கிக்கொண்டிருக்கின்றன. அங்கே ஒரு பெரிய 
சொரசொரப்பான கரும் பாறை இருக்கிறது (இரும் பிணர்த் துறுகல்). அதன் உச்சியைத் தொட்டுக்கொண்டு அந்த விழுதுகள் காற்றில் 
அசைந்தவண்ணம் இருக்கின்றன (துறுகல் தீண்டி வளிபொர - தூங்கும்)

			

	அசப்பில் பார்த்தால் யானை ஒன்று தன் துதிக்கையை மேலே தூக்கியிருப்பதைப் போல் தோன்றும் 
(பெருங்கை யானை நிவப்பின்). 

	வௌவால் காட்சியைத் தொடக்கத்தில் ஏன் புலவர் வைத்திருக்கிறார் என்று பார்த்தோம். இந்த யானை உவமத்தை அடுத்து 
ஏன் வைத்திருக்கிறார்? இது ஒரு மாயத்தோற்றம். தொலைவிலிருந்து பார்க்கும்போது யானை போல் தெரிகிறது ஒரு கருத்த பாறாங்கல். 
அதைத் தொட்டுக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் விழுதுகள், யானையின் உயர்த்தப்பட்ட துதிக்கையாய்த் தெரிந்து மருட்டுகின்றன. 
அந்தப் பாலை நில வெட்டவெளியில், மத்தியான வெயிலில், தொலைவில் ஒரு மரத்தைப் பார்த்த தலைவன் முதலில் 
மகிழ்ந்துபோயிருப்பான், சற்றே அருகில் வந்த பின்னர்தான் அந்த ‘யானை’ கண்ணுக்குத் தெரிகிறது. முதலில் மிரண்டுபோயிருப்பான். 
இப்போது அந்த மரத்தை நெருங்கலாமா என்று யோசித்திருப்பான். யோசித்துக்கொண்டே இன்னும் சற்றுக் கிட்டே போனபின்னரே 
அது ஒரு மாயத்தோற்றம் எனத் தெரிகிறது. பயணத்தை மேற்கொண்ட தலைவன் தகிக்கின்ற வெயிலில், நீண்ட வெட்ட வெளியில் 
நடந்துபோகமுடியுமா என்று யோசித்திருப்பான், மாயமாய்த் தோன்றுகின்ற கானல்நீரைக் கண்டு மருண்டுபோயிருப்பான். இதைக் கடந்து 
செல்லமுடியுமா என்று திகைத்துப்போயிருப்பான். சுற்றுமுற்றும் பார்க்கிறான். ஆங்காங்கே குன்றுகள் – அவற்றின் சரிவிலும் 
அடிவாரத்திலும் கூட்டம் கூட்டமாக வீடுகள் - குன்ற வைப்பு.  வைப்பு என்பது சிற்றூர். அங்கும் மக்கள் வாழத்தான் செய்கிறார்கள். ஆக, 
அறுபது நாழிகையும் அங்கு மக்கள் வசிக்கும்போது, சிறிது நேரத்தில் இதைக் கடந்து செல்ல முடியாதா என்ற உறுதி அவனிடத்தில் 
பிறந்து மருட்டித் தோன்றிய மாயத்தோற்றம் மறைந்துபோகிறது.

	எங்கும் பரந்து கிடக்கிறது அந்த நீண்ட வெளி. தெறிக்கின்ற உச்சி வெயில் அப் பரப்பெல்லாம் தகதக்கின்றது 
(என்றூழ் நீள் இடை). தன்னந்தனியனாக இலையற்ற மரம் தரும் நிழலில் அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றான் 
(யாமே தமியம் ஆக). இப்பொழுது அவன் நினைவு அவனது இன்னுயிர் மனைவியை நோக்கித் திரும்புகிறது. இப்படி 
இந்த வெயிலில் நான் – அங்கு அவள் நிழல்தரும் மனையில் நிம்மதியாக இருப்பாள் என்றா அவன் எண்ணுகிறான்? 

	இந்தத் தகிக்கின்ற வெயிலில் குளிர்ந்த அவளது முகம் அவனுக்கு நினைவுக்கு வருகிறது. தீப்பிழம்பாய் அனல்காக்கும் 
பகலவனின் கீழ் நின்றுகொண்டு முழுமதியாய்க் குளிர்விக்கும் தன் மனைவியின் முகமலரை எண்ணிப்பார்க்கிறான். பளபளக்கும் 
அவளது நெற்றியின் அழகை எண்ணிப்பார்க்கிறான். இப்போது அந்த அழகெல்லாம் இன்னும் அங்கே இருக்குமா? பசு நிலா விரிந்த 
பல்கதிர் ஆய் கவின் இப்போது தொலைந்தல்லவா போயிருக்கும்? ஒரீஇ என்கிறார் புலவர். ஒருவுதல் என்றால் துறத்தல் – renounce. 
முகத்துக்கு அழகு தருவது நெற்றி. அழகுபெற்ற அந்த நெற்றி, இப்போது பீர்க்கம்பூவைப் போல மஞ்சள்பூத்தல்லவா போயிருக்கும்?  

			

	தலைவன் ஊரைவிட்டு வந்து எவ்வளவோ நாள்கள் ஆகிவிட்டன. இரவும் பகலும் பயணம் மேற்கொண்டுள்ளான். 
ஆனால் இரவும் பகலும் தூங்காமல் (பானாட் கங்குலும் பகலும் ஆனாது அழுவோள்) அவள் அழுதுகொண்டே அல்லவா இருப்பாள்? 

இந்த வருத்தம் தீரக்கூடிய வருத்தமா?

	குதிநடை போடும் குதிரைகள் கட்டிய கொடிகள் உயர்த்திய தேரை உடைய செழியன், பழமையான கடற்கரை நகரமாகிய 
முசிறியை வளைத்து, அந்த மன்னனின் யானைப்படையை வென்று ஆரவாரத்துடன் வெற்றிக் கூச்சல் எழுப்பியபோது போரில் வீரப்புண் 
பெற்ற வீரர், அந்தப் புண்தரும் வேதனையில் துன்புறுவதைப் போல் மனம் பெரிது வருந்திக்கிடப்பாள் தன் தலைவி என்று 
எண்ணி எண்ணி மாய்ந்துபோகிறான் தலைவன்.

	போரில் வீரர்கள் விழுப்புண் பெற்றால் மகிழ்வர். போர்புரியும்போது வீர்ர் தம் மார்பில் பெறும் புண்ணே விழுப்புண். 
இதனை இங்கு அரும்புண் என்கிறார் புலவர். விழுப்புண் பெறுவது ஒரு வீரனின் வீரத்துக்கு அடையாளம். ஆனால், அது 
விழுப்புண்ணேயாயினும் அந்தப் புண் தரும் வேதனை உடலை வருத்தத்தானே செய்யும். தலைவன் பொருளீட்டத்தான் பிரிந்து 
சென்றிருக்கிறான். ஊரிலுள்ள ஏனையோர் போலச் சோம்பியிராமல் நெடுந்தொலைவு பயணத்தை மேற்கொண்டாலும் பெரும்பொருளோடு 
திரும்ப வருவான் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இருப்பினும் அந்தப் பிரிவு தரும் வேதனை உள்ளத்தை வருத்தத்தானே செய்கிறது 
என்பதை எத்துணை பூடகமாகப் புலவர் குறிப்பிடுகிறார் பார்த்தீர்களா?