அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 58
	
பாடல்  58. குறிஞ்சித் திணை  பாடியவர் - மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

துறை - சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.

  மரபு மூலம் - பலர் மடி கங்குல்

	இன்னிசை யுருமொடு கனைதுளி தலைஇ
	மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல்
	காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது
	வரியதள் படுத்த சேக்கைத் தெரியிழைத்
5	தேனாறு கதுப்பிற் கொடிச்சியர் தந்தை
	கூதிரிற் செறியுங் குன்ற நாட
	வனைந்துவர லிளமுலை ஞெமுங்கப் பல்லூழ்
	விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற
	நின்மார் படைதலி னினிதா கின்றே
10	நும்மில் புலம்பினு முள்ளுதொறு நலியுந்
	தண்வர லசைஇய பண்பில் வாடை
	பதம்பெறு கல்லா திடம்பார்த்து நீடி
	மனைமர மொசிய வொற்றிப்
	பலர்மடி கங்கு னெடும்புற நிலையே

 சொற்பிரிப்பு மூலம்

	இன் இசை உருமொடு கனை துளி தலைஇ
	மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்
	காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது
	வரி அதள் படுத்த சேக்கைத் தெரி இழைத்
5	தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை
	கூதிர் இல் செறியும் குன்ற நாட
	வனைந்து வரல் இள முலை ஞெமுங்கப் பல் ஊழ்
	விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற
	நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
10	நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்
	தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை
	பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி
	மனை மரம் ஒசிய ஒற்றி
	பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே

அருஞ்சொற் பொருள்:

உரும் = இடி; கனை துளி = பெரும் மழை; தலைஇ = பெய்து; மடிந்த = துயின்ற; பானாள் கங்குல் = பாதியிரவு; 
விளிவிடம் = முடிவிடம்; வரி அதள் = புலித்தோல்; படுத்த = விரித்துள்ள; சேக்கை = படுக்கை; கதுப்பு = கூந்தல்; 
கொடிச்சி = குறிஞ்சிநிலப் பெண்; கூதிர் = குளிர்; வனை = வலைவாகச் செய்; ஞெமுங்க = அமுங்க; பல்லூழ் = பல முறை; 
புறம் = முதுகு; புலம்பு = தனிமை; நலியும் = மெலியும்; பதம் = குறித்த பருவம்; ஒசிய = முறிய, சாய்ந்து; 
ஒற்றி = வலித்து இழுத்து, நெருக்கமாக ஒதுங்கி; நெடும்புற நிலை = நீண்ட நேரம் புறத்தே நின்றுகொண்டிருத்தல்

.அடிநேர் உரை

	இனிய ஓசையுடன் கூடிய இடியுடன் பெரிய மழை பெய்ய,
	உலகத்து உயிர்களெல்லாம் துயின்ற பாதியிரவில்,
	காட்டில் தேடுகின்ற வேட்டை முடிவடையாமல்
	புலித்தோல் விரித்த படுக்கையில், தெரிந்தெடுத்த அணிகலன்களைக் கொண்ட
5	தேன் மணக்கும் கூந்தலையுடைய குறப்பெண்களின் தந்தையர்
	குளிரில் தம் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் குன்றுகளின் தலைவனே!
	வடிவமைக்கப்பட்டதைப் போன்ற இளமையான முலைகள் அமுங்க, பலமுறை 
	மின்னும் வளையணிந்த முன்கை வளைந்து முதுகினைச் சுற்றிக்கொள்ள
	உனது மார்பை அணைப்பதிலும் இனியதாயிற்று –
10	நீவிர் இல்லாத தனிமையில் நும்மை நினக்குந்தோறும் வருந்தி மெலியும்,
	குளிருடன் அசைந்து வரும் பண்பு இல்லாத வாடையில்,
	நீ வரப்பெறாமல் நும் வருகையைப் பார்த்துப் பதனழிந்து,
	வீட்டு மரத்தில் சாய்ந்து ஒட்டிக்கொண்டு
	பலரும் துயிலும் இரவில் நீண்ட நேரம் வெளியில் நின்றுகொண்டிருக்கும் என் நிலை

பாடலின் பின்புலம் 

	இரவில் தலைவன் தலைவியைச் சந்திக்க வருவது தாமதமாகிறது. பலரும் உறங்கும் நள்ளிரவில், வாட்டும் குளிரில், 
வீட்டுக்குப் பின்னுள்ள ஒரு மரத்தில் சாய்ந்து ஒட்டிக்கொண்டு தன்னந்தனியாக நிற்கிறாள் தலைவி. ஒருவழியாகத் தலைவன் 
வருகிறான். அவனைப் பலமுறைத் தழுவி மகிழ்கிறாள் தலைவி. எனினும் அவனுக்காகக் காத்திருக்கும் நிலையானது, அவன் 
வந்த பின்னர் அவனைப் பலமுறை அணைத்துக்கொள்ளும்போது கிடைக்கும் இன்பத்தினும் இனியது என்கிறாள் அவள்.

பாடலின் விளக்கம்

	காதலின் இன்பம் காத்திருத்தலில் இருக்கிறது என்பதை விளக்கும் பாடல் இது. காத்திருத்தல் – சேர்ந்திருத்தல் ஆகிய 
இரண்டில் இனிமையானது எது என்ற கேள்விக்கு விடையிறுக்கிறாள் தலைவி. சேர்ந்திருத்தல் எத்துணை இனிமையானது என்று 
அவளே முதலில் விவரிக்கிறாள்.

	எடுப்பாயிருக்கும் அவளது இள முலைகள் அவனது மார்பில் நன்கு பதிய, (வனைந்துவரல் இளமுலை ஞெமுங்க) 
வளையணிந்த தன் இருகைகளையும் வளைத்து அவனது முதுகைச் சுற்றி இறுக்க (விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற), 
மார்போடு மார்பணைந்து (நின் மார்பு அடைதலின்), அவன் பிரிய முனையும்போதெல்லாம் அவனைப் பலமுறை (பல்லூழ்) இவ்வாறு 
இறுகத் தழுவ, மிக இனிமையாகப் பொழுது கழிகின்றது.

	ஆனால், அவன் வருவதற்கு முன், அவன் இல்லாத தனிமை - (நும் இல் புலம்பின்) அவன் எங்கு இருக்கின்றானோ, 
எப்போது வருவானோ என்று நினைக்கும்போதெல்லாம் உள்ளம் நலிந்துபோகிறது (நும் உள்ளுதொறு நலியும்) – மேனியே 
நடுங்கும் வண்ணம் வீசுகின்ற சில்லென்ற வாடைக்காற்று – எப்போ வருவானோ எப்போ வருவானோ என்று அவன் வரவு நோக்கிக் 
காத்திருந்து பதனழிந்து – யாரும் பார்த்துவிடுவார்களோ என்று மரத்தில் சாய்ந்துகொண்டு மரத்தோடு மரமாக ஒட்டிக்கொண்டு 
(மனைமரம் ஒசிய ஒற்றி) – ஊரே உறங்கும் நேரத்தில் ஒருத்திமட்டும் கண்ணுறங்காமல் (பலர்மடி கங்குல்) நீண்ட நேரம் 
காத்திருக்கும் நிலை (நெடும் புற நிலை) – இது என்ன இனிமையான நிலையா? ஆம் என்கிறாள் தலைவி. முன்னதைக் காட்டிலும் 
இது இனிமையானது என்கிறாள் அவள். ஏன்?

	முதலில் தலைவி தலைவனுடன் இருக்கும் நிலையில் இன்பம் துய்ப்பது அவளது உடல். அந்த அரவணைப்பில் அவள் 
உடலின் ஒவ்வொரு அங்கமும் துய்த்து மகிழ்கிறது. ஆனால் உள்ளமோ, இன்னும் சிறிது நேரத்தில் அவன் பிரிந்துவிடுவானே என்ற 
ஏக்கத்தில் துவண்டுகிடக்கிறது. இந்த இன்பம் நீடித்திருப்பதல்ல – இதன் பின்னர் வரப்போவது பிரிவு என்ற நினைப்பு அந்த 
இன்பத்தையும் முழுவதுமாக நுகரமுடியாமற் செய்துவிடுகிறது.

	மாறாக, காத்திருக்கும் நேரத்தில் வாடுவது அவள் உடல். தனிமையிலும், தனிமை நினைவினிலும் மெலிந்து போவது 
அவள் மேனி. பண்புகெட்ட வாடைக்காற்றில் வாடி நடுங்குவதுவும் அவள் மேனி. வரவில்லையே வரவில்லையே என்று வானத்தைப் 
பார்த்துக் காலம் செல்வதைக் கண்டு நொந்துபோவன அவள் கைகால்கள். இந்தத் துன்பம் நீடித்திருப்பதல்ல – இதன் பின்னர் 
வரப்போவது சந்திப்பு என்ற நினைப்பு அந்தத்  துன்பத்தையும் இன்பமாக மாற்றிவிடுகிறது.

	ஆக, இன்பமாக இருந்து பின் துன்பம் வேண்டுமா, அல்லது, துன்பமாக இருந்து பின் இன்பம் வேண்டுமா என்ற 
கேள்விகளில் பின்னதைத் தேர்ந்தெடுக்கிறாள் தலைவி.

	நள்ளிரவில், நடுக்கும் குளிரில் தன்னந்தனியளாய்க் காத்திருக்கும் தலைவியைக் காணத் தாமதமாக வருகிறான் தலைவன்.
அப்படி வந்தவனைச் சும்மா விடுவாளா அந்தத் தலைவி? தாமதத்துக்குக் காரணம் கேட்கிறாள். ஏதோ வேலையாய் இருந்துவிட்டேன் 
என்று சொல்லியிருப்பான் அவன். “வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, செய்வதற்கு வேறு வேலை இல்லாவிடாலோ, அல்லது 
பொழுதுபோக்க வேறு வழியில்லாவிட்டாலோதான் என் நினைப்பு உங்களுக்கு வருமோ” என்று சாடுகிறாள் அவள். 

	“‘கடமுட’-வென்ற இன்னிசையோடே கனத்த மழை பெய்யும் நள்ளிரவில், உலகத்து உயிர்களெல்லாம் உறங்கிக் கிடக்கும் 
வேளையில், வீட்டைப் பற்றிய நினைவில்லாமல் வேட்டைக்குச் சென்றுவிட்டு, ஒதுங்குவதற்கு இடமில்லாமல், குளிரில் 
நடுங்கிக்கொண்டே தம் வீடு எனும் கூட்டுக்குள் ஓடிவந்து ஒதுங்குபவர்கள் தானே உனது நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்று சாடுகிறாள் 
அவள். “அந்தப் புத்திதானே உனக்கும் இருக்கும்” என்று அவள் முதலில் கோபித்துக்கொள்வதையே பாடலின் தொடக்கமாக 
வைத்திருக்கிறார் புலவர் இளந்தேவனார்.

	ஊடலின் கோபமெல்லாம் ஒழிந்துபோன வேளையில், அவர்கள் மிக நெருக்கமாக இருக்கும் நேரத்தில், “இப்பொழுது 
மகிழ்ச்சிதானே, காத்திருந்த துன்பமெல்லாம் கலைந்துபோய்விட்டதல்லவா?” என்று அவன் வினவியபோது அவள் கூறுகிறாள், 
“அந்தக் காத்திருப்பின் சுகமே தனிதான்”

பாடலின் சிறப்பு

	எத்துணை நுணுக்கமான உளவியல் கருத்துகளைப் பொதிந்துவைத்திருக்கிறார் புலவர் இளந்தேவனார் என்று கண்டோம். 
இந்தக் கருத்துகளை எடுத்துரைப்பதில் அவர் எத்துணை நயம் காட்டுகிறார் என்று பார்ப்போம்.

	இன்னிசை உரும் என்கிறார் புலவர். உரும் என்பது இடி. அது இடிப்பது எப்படி இனிமையாக இருக்கும்? மன்னுயிர் மடிந்த 
என்கிறார் அடுத்த அடியில். உலகமெல்லாம் தூங்கும் நள்ளிரவு. ‘துடும்’-என்று ஓங்கி இடி இடித்தால் ‘துணுக்’-கென்று உலகம் 
விழித்துக்கொள்ளாதா? அப்படி இல்லையாம். ஓங்கி மத்தளத்தை அறைவது போலன்றி, மெல்லிதாகத் தாளம்போடுவது போல் 
மின்னலடித்து இடிக்கிறதாம் வானம். எனவே உயிர்களின் தூக்கம் கலையாது. அது மட்டுமன்றி அந்த இனிய தாளத்தின் ஓசையால் 
அவர்கள் இன்னும் ஆழமான தூக்கத்திற்கும் போகலாம். சிறிய மழை என்றால் சிறிது நேரத்தில் நின்றுவிடும். ஓங்கி இடி இடித்தாலோ 
கொஞ்ச நேரத்தில் கொட்டித் தீர்த்துவிடும். ஆனால் இன்னிசை உருமொடு கனத்த மழை பெய்கிறதாம். கனைதுளி என்கிறார் புலவர். 
இது நெடுநேரம் பெய்யும். அதுமட்டுமல்ல, ஒரு மரத்தினடியிலோ பாறை இடுக்கிலோ ஒளிந்துகொண்டு மழை நிற்கும் என்று 
காத்திருக்கமுடியாது. அப்படிப்பட்ட கனை துளி. எனவே வேட்டைக்குக் காட்டுக்குள் சென்றவர்கள் சற்று நேரத்துக்குத்தானே என்று 
வேறு இடத்தில் ஒதுங்கி நிற்க முடியாது. ,எனவே வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்புகிறார்கள். கனத்த புலித்தோலின் கணகணப்பில் 
தங்களைப் புகுத்திக்கொள்கிறார்கள். இவர்கள் யார்? தெரி இழை தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தையர். 

			

	தேன் என்பதற்கு நறுமணம் என்ற ஒரு பொருள் உண்டு. இருப்பினும் தேன் என்பதனை, தேனைக் கொண்ட பூ என்று 
கொள்ளலாம். பூக்களை, மலர்வதற்குச் சற்று முன்னர் மொட்டாக இருக்கும் நிலையிலேயே பறித்துத் தொடுத்துச் சூடினால், சூடிய பின் 
சற்று நேரங்கழித்து அவை வாய்திறந்து மலரும். அவையே தேன் நாறும் மலர் எனலாம். இந்தப் பூச்சரம் நெடுநேரம் வாடாமல் மணம் 
வீசும். வேட்டைக்குச் சென்றவர்கள் மழையில் ஒதுங்கப் புகலிடம் இல்லாமல் விரைந்து வீட்டுக்குத் திரும்பிக் கதவைத் தட்ட, பூச்சூடிய 
மகளிர் கதவைத் திறந்துவிட, உள்ளே நுழைபவருக்கு வீடே மணப்பதுபோல் தெரியும். இந்த மகளிரைத்தான் தேன் நாறும் கதுப்பின் 
கொடிச்சியர் என்கிறார் புலவர்.

	வேட்டையாடக் காட்டுக்குள் சென்று (காடுதேர் வேட்டத்து) மழையில் வேட்டையாடவும் முடியாமல், மழைக்கு வேறெங்கும் 
ஒதுங்கவும் முடியாமல் வீடு திரும்பியவர்கள், புது மலர்கள் மணக்கின்ற சூழ்நிலையில் புலித்தோல் படுக்கையின் 
(வரி அதள் படுத்த சேக்கை) கதகதப்பில் முடங்குவது போல், காதலியின் வீடுதேடி வந்து அவளது அணைப்பின் கதகதப்பில் சுகம் 
காணவந்தாயா தலைவனே! என்று அவள் சாடுகிறாள். 

			

	“அப்படியென்றால் இரவில் வேறு வேலை இன்றி, வேறெங்கும் போவதற்கும் இன்றி, நான் இங்கு புகலிடம்தேடி 
வந்திருக்கிறேன் என்கிறாயா” என்று அவன் சினந்து கூறலாம். “நான் உங்களைச் சொல்லவில்லை; ஊர் நடப்பைச் சொன்னேன், அதுவும் 
உங்களது மலையைச் சேர்ந்த ஊரினரின் நடப்பைச் சொன்னேன் என்று அவள் எளிதாகத் தப்பித்துக்கொள்ளும்வண்ணம், இதனைப் பாடல் 
தொடக்கத்தில் உள்ளுறையாக வைத்திருக்கும் புலவரின் நயம் உற்று நோக்கிச் சுவைப்பதற்குரியது.

	வனைந்துவரல் இளமுலை என்கிறார் புலவர். வனைதல் என்றால் செய்தல் என்று பொருள் சொல்லிவிட்டுப் 
போய்விடமுடியாது. குயவர்களின் சக்கரம் சுழலும்போது, நடுவில் வைத்த களிமண் உருண்டைக்குள் அவர்கள் கைவைத்துச் சற்று 
அமுக்குப்போது உருண்டு திரண்டு குடம் போல் மெதுவாக எழும்புகிறதே அதுதான் வனைந்து வரல். குயவன் பானையை வனைந்து 
இயற்றுவது போல, இயற்கை இவளின் மார்பை வனைந்து வரச் செய்திருக்கிறதாம். எத்துணை பொருத்தமான உவமை பாருங்கள். 
புலவரின் சொல் திறம் இங்கு மிகவும் மேலோங்கி நிற்பதை உணரலாம். 

			

	நள்ளிரவு நேரம் – பலர் மடி கங்குல் என்கிறார் புலவர். எனவே சிலர் இன்னும் தூங்கவில்லை. அவருள் இவளும் ஒருத்தி. 
என்னதான் கங்குல் என்றாலும் விண்மீன்களின் ஒளியேனும் சிறிதளவு தெரியும்தானே! இவள் தன் கைகளை நீட்டி அவனது மார்பைச் 
சுற்றித் தழுவும்போது (முன்கை வளைந்து புறம் சுற்ற) அவளின் முன்கையில் தொங்கிக்கொண்டிருக்கும் வளையல்கள் உள்புறமாகக் 
கீழே சரியும்போது அந்த விண்மீன்களின் ஒளியில் அவை பளபளக்கின்றனவாம் – விளங்கு தொடி என்கிறார் புலவர். இவ்வாறு அவள் 
பலமுறை (பல்லூழ்) செய்கிறாள். ஏன்? காத்திருந்த ஏக்கத்தில், அவனைக் கண்டவுடன் கட்டித் தழுவுகிறாள். பின்பு சிறிது சிறிதாக 
அந்தப் பிடி தளரும். “சரி நான் வரட்டுமா” என்று அவன் செல்வதற்கு முயலுகையில், அவளின் பிடி மீண்டும் இறுகுகிறது. “சரி இன்னும் 
சிறிது நேரம் இருந்துவிட்டுப் போகிறேன்” என்கிறான் அவன். மீண்டும் பிடி தளருகிறது. சற்று நேரங்கழித்து, “புறப்படட்டுமா?” என்று 
அவன் மீண்டும் எத்தனிக்கையில் மீண்டும் அவளின் பிடி இறுக்குகிறது. இவ்வாறு பலமுறை அவள் விட்டுவிட்டுத் தழுவுவதையே 
பல்லூழ் என்ற ஒற்றைச் சொல்லால் குறிப்பிட்டுவிடுகிறார் புலவர். 

	தன்னந்தனியாய் இருக்கும் ஒரு பெண்ணைத் தாக்கலாமா? அதுவும் காதலனின் வரவுக்காக ஏக்கத்துடன் காத்திருப்பவளை 
இதமாகத் தொட்டுத்தடவி ஆறுதல்படுத்தாமல், விரைக்கின்ற குளிரினால் அவளை வேதனைப் படுத்தலாமா? குளிர்ச்சியைச் 
சுமந்துகொண்டு வந்து மேனியைக் குளிரவைத்து நடுக்கும் இந்த வாடைக் காற்றுக்குக் கொஞ்சம்கூட நாகரிக நயம் இல்லை. 
தண் வரல் அசைஇய பண்பில் வாடை என்கிறார் புலவர். “சே, இப்பத்தானா இந்தச் சில்லுனு காத்து இப்படி வீசணும்” என்ற தலைவியின் 
முணுமுணுப்பை இந்தச் சொற்கள் காட்டவில்லையா?

	தயிரில் தண்ணீர் சேர்த்துக் கடையக்கடைய மெல்ல மெல்ல வெண்ணெய் திரண்டு வரும் அதுதான் பதம் பெறுதல். கண்களில் 
ஏக்கத்தைச் சேர்த்துவைத்துக்கொண்டு, காத்திருக்கக் காத்திருக்க,  அங்கே காதலன் தோன்றுவான். அதுதான் அவளுக்குப் பதம்பெறுதல். 
ஆனால் அவன்தான் வரவில்லையே! பதம்பெறுகல்லாது இடம்பார்த்து நீடி என்கிறார் புலவர். 

	நள்ளிரவில் ஒரு பெண் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தால் யாராவது ஒருவர் எதற்காவது வெளியில் வந்தால் அவர்கள் 
கண்ணில் பட்டுவிடமாட்டாளா? எனவே அவள் ஒரு மரத்தில் சாய்ந்துகொண்டு மட்டுமன்றி, அதனோடு மிகவும் ஒட்டிக்கொண்டு 
நிற்கிறாளாம். இருட்டில் சட்டென்று தெரியாதல்லவா! மனைமரம் ஒசிய ஒற்றி என்கிறார் புலவர். ஒசிதல் என்பது சாய்ந்திருத்தல். 
ஒற்றுதல் என்பது நெருக்கமாகச் சேர்ந்திருத்தல். மரத்தை ஒட்டியவாறு அவள் சாய்ந்து நின்றுகொண்டிருக்கிறாள். அவள் பெண்ணல்லவா! 
வீட்டைவிட்டு வெகுதூரம் வெளியில் வரவில்லை. வீட்டுமரம் ஒன்றின் அடியில்தான் நின்றுகொண்டிருக்கிறாள். மனைமரம் என்பதன் 
நுணுக்கம் புரிகிறதா?