அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 55
	
பாடல்  55. பாலைத் திணை  பாடியவர் - மாமூலனார்

துறை - புணர்ந்துடன் போகிய தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியர்க்கு உரைத்தது

  மரபு மூலம் - போதல் செல்லா என் உயிர்

	காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின்
	நீந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை
	உளி முக வெம் பரல் அடி வருத்து_உறாலின்
	விளி முறை அறியா வேய் கரி கானம்
5	வய களிற்று அன்ன காளையொடு என் மகள்
	கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம்
	ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ
	வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
	கண்படை பெறேன் கனவ ஒண் படை
10	கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலை
	பொருது புண் நாணிய சேரலாதன்
	அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என
	இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
	அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
15	பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண்
	காதல் வேண்டி என் துறந்து
	போதல் செல்லா என் உயிரொடு புலந்தே

 சொற்பிரிப்பு மூலம்

	காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின்
	நீந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை
	உளி முக வெம் பரல் அடி வருத்து_உறாலின்
	விளி முறை அறியா வேய் கரி கானம்
5	வய களிற்று அன்ன காளையொடு என் மகள்
	கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம்
	ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ
	வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
	கண்படை பெறேன் கனவ ஒண் படை
10	கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலை
	பொருது புண் நாணிய சேரலாதன்
	அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என
	இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
	அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
15	பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண்
	காதல் வேண்டி என் துறந்து
	போதல் செல்லா என் உயிரொடு புலந்தே

அருஞ்சொற் பொருள்:

கனலி = சூரியன்; குருகு = கொக்கு என்றூழ் = வெப்பம்; நீள் இடை = நீண்ட இடைவெளி; பரல் = சரளைக் கற்கள்; 
விளிமுறை = எதிர்பாரா ஆபத்து; வேய் = மூங்கில்; வயக்களிறு = வலிமைமிக்க ஆண்யானை; ஊதுலை குருகு = கொல்லன் துருத்தி; 
கண்படை = தூக்கம்; கனவ = கனவுகாண; அரும்பெறல் உலகம் = சுவர்க்கம்; பெரும்பிறிது ஆகுதல் = உயிர் நீத்தல்.

அடிநேர் உரை

	வெம்மையுடன் செல்லும் ஞாயிறு (சூரியன்) பாறைகள் பிளக்கச் சுடுவதால்
	பறக்கும் கொக்குகள் வருந்தும் வெப்பம் மிக்க நீண்ட வெளியில்,
	உளிபோன்ற வாயை உடைய பரல் கற்கள் பாதங்களை வருத்துவதால்
	உயிர் எப்போது போகும் என்று தெரியாத, மூங்கிலும் எரிந்து கரியாக நிற்கும் காட்டில்
5	வலிமைமிக்க ஆண்யானை போன்ற தலைவனுடன் என் மகள்
	சென்றுவிட்டதற்காக நான் வருந்தவில்லை. அவளைப் பிரிந்து
	உலையில் ஊதும் துருத்தி போல பெருமூச்சு விட்டு
	தீயில் வேவது போன்ற வெம்மையான நெஞ்சமுடன்
	கண்ணைமூடாமல் கனவு காண்கிறேன்; ஒளியுடைய படையையுடைய
10	கரிகால்வளவனோடு வெண்ணிப்பறந்தலையில்
	போரிட்டு (முதுகில்) காயமடைந்த சேரலாதன்
	போர்க்களத்தருகே வாளையுயர்த்தி வடக்கிருக்க,
	அச் செய்தியைக் கேட்ட சான்றோர்
	சுவர்க்கத்துக்கு அவனோடு செல்வதற்காக
15	உயிர் நீத்ததைப் போல, என் மகளைவிட்டுப் பிரிந்து இங்கே
	இவ்வுலகத்து ஆசையை விரும்பி, என்னை விட்டுப் பிரிந்து
	போகாத என் உயிரை வெறுத்து (அழுகின்றேன்.)

பாடலின் பின்புலம் 

தலைவி ஒருநாள் தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிடுகிறாள். அதையறிந்த தாய் அரற்றுகின்றாள் – தான் பிரியமாய் வளர்த்த 
மகள் சொல்லாமல்கொள்ளாமல் போய்விட்டாளே என்று அல்ல – மகள் போனபின்னும் இன்னும் தன் உயிர் போகாமல் இருக்கிறதே 
என்று. இதற்கு, தாய் சொல்வதாகப் புலவர் ஒரு அருமையான வரலாற்று உண்மையையும் உவமையாகக் குறிப்பிடுகிறார்.

பாடலின் விளக்கமும் சிறப்பும்

	பாடலின் தொடக்கத்தில் தலைவி நடந்து செல்லும் பாலைநிலத்தின் கொடுமையை நான்கு அடிகளில் புலவர் விரிவாக 
எடுத்துரைக்கிறார். வெப்பத்தை உமிழ்ந்துகொண்டு செல்லும் ஞாயிற்றைக் காய்ந்து செலல் கனலி என்கிறார் புலவர். கனல் என்றாலே 
தகி என்று பொருள். அவ்வாறு தகிக்கின்ற சூரியனைக் கனலி என்பது பொருத்தம்தானே! சொல்லுக்குப் பொருள் உண்டு. ஆனால் 
சொல்லுக்குள் பொருள்வைத்துப் பேசுபவர் நம் புலவர் மாமூலனார். அந்தக் கனலி கற்பாறைகளையும் பிளந்துவிடுமாம். 
கல் பகத் தெறுதலின் என்கிறார் அவர். தெறுதல் என்றால் சுடுதல் – scorching sun என்கிறோமே அது. 

			

	வானத்தில் நீந்திச் செல்லும் குருகுகளும் அடிக்கின்ற வெயிலில் உருகுப்போய்விடுவோமோ என்று அஞ்சுமாம். 
அப்படியென்றால் தரையில் நடந்து செல்வோரின் நிலை எப்படி இருக்கும்? சரி, சிறிது தொலைவுதான், வேகமாகக் கடந்து 
சென்றுவிடலாம் என்றாலோ, அதனை நீள் இடை என்கிறார் புலவர் – பெரிய நீண்ட நிலப்பரப்பு அது. பாதையில் பரல் கற்கள் வேறு. 
வெம்மையை உள்ளிழுத்துக்கொண்ட அந்தக் கற்கள் பாதங்களை நன்கு பதம்பார்த்துவிடும். அந்தக் கற்கள் வெம்மையானவை மட்டுமா? 
கூரான உளியைப்போன்று கூரிய முனைகளைக் கொண்டிருக்குமாம். உளிமுக வெம்பரல் என்கிறார் புலவர். உளிமுகப் பரல் என்றாலே 
அதன்மீது நடக்கமுடியாது. அது வெம்பரல் ஆகவும் இருந்தால்? அந்தப் பரல்கற்களின் இருவிதக் கடுமையை எத்துணை சுருக்கமாக 
எடுத்துக் கூறிவிடுகிறார் பார்த்தீர்களா! ஆக அவை இருமுனைத் தாக்குதல் நடத்துகின்றன. எப்போது எங்கே செத்துவிழுவோம் என்று 
தெரியாது – விளிமுறை அறியாக் கானம் என்கிறார். விளித்தல் என்பது இறத்தல். சரி, அங்கே ஏதாவது நிழல் இருந்தால் தங்கிச் 
செல்லலாமே என்றால் வேய் கரி கானம் என்கிறார் புலவர். வேய் என்பது மூங்கில். மூங்கில் எந்த அளவுக்கு நிழல் கொடுக்கும்? 
ஏதோ கொஞ்சம் கிடைக்கும் என்றாலும் அதுவும் கரிந்துபோய் நிற்கிறதாம். 

			

	ஆக, இப்படிப்பட்ட கொடிய பாலைநிலப் பாதையில் தன் மகள் எவ்வாறு நடந்து செல்லப்போகிறாளோ என்று தாய் புலம்புவாள் 
என்று எதிர்பார்த்து மேலும் படிப்போருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்தப் பாலை நிலத்தின் வழியே என் மகள் கழிந்ததற்கு 
அழிந்தன்றோ இலனே என்கிறாள் தாய். அப்படியென்றால் இவள் அந்தக் கொடிய பாலைவழியே மகள் போனதற்காக அழவில்லை. அப்புறம் 
என்ன நினைப்போம்? ஆசையாசையாய் வளர்த்த அருமைமகள் இவ்வாறு சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாளே என்ற கோபத்தில் 
அழுகிறாளோ? அவ்வாறு மகள் மேல் கோபம் கொண்டவளாகவும் தெரியவில்லை. அப்படியிருந்தால் மகளின்மீது கோபம் 
கொள்வதைக்காட்டிலும், அவள் யாருடன் சென்றாளோ அந்த ஆடவனைக் கரித்துக்கொட்டியிருக்கமாட்டாளோ? வயக் களிறு அன்ன 
காளையொடு சென்ற என் மகள் என்று புலம்புகிறாள் தாய். இந்தப் பிரிவுக்குக் காரணமான அந்தக் காளையின் மீதும் அவளுக்குக் கோபம் 
இல்லை. பின் எதற்கு இந்தத் தாய் இப்படி அரற்றுகிறாள்? நம்முடைய எதிர்பார்ப்பை நீட்டிக்கொண்டேயும், பாடலைத் தொடர்ந்து படிக்கும் 
ஆர்வத்தை தூண்டிவிட்டுக்கொண்டேயும் புலவர் செல்லும் நயத்தை இங்குக் காணலாம்.

	நம் எதிர்பார்ப்பை நீட்டித்துக்கொண்டே செல்வது மட்டும் அல்ல, அதனை உயர்த்திக்கொண்டும் செல்கிறார் புலவர் அடுத்த மூன்று 
அடிகளில். கொல்லன் ஊதுகின்ற துருத்தியைப் போல் தனது நெஞ்சம் உள்ளே உயிர்த்து அசைகின்றதாகக் குறிப்பிடுகிறாள் தாய். ஊதுலைக் 
குருகின் உள்ளுயிர்த்து அசைஇ என்கிறாள் அவள். இங்கே ஊதுலை என்பது கொல்லர்கள் வைத்திருக்கும் துருத்தி. இது அமுங்கி அமுங்கி 
விரியும். விரியும்போது காற்று உட்புகுந்து, அமுங்கும்போது ஒரு சிறு குழாய் வழியாக வேகமாகப் பீய்ச்சப்படுவது போல் காற்று வெளிவரும். 
குருகு என்பது அந்தக் குழாயின் முகப்புத் துவாரம். நாசி எனலாம். தாயின் நுரையீரல்கள் விம்மி விம்மித் தணிந்து மூக்கு வழியாகப் 
பெருமூச்சாய் வெளிவரும் காட்சி நம் மனக்கண்முன் நிழலாடுகிறது. 

	அவ்வாறு துருத்தியிலிருந்து வெளிவரும் காற்று நெருப்பை அதிகமாக்கி, சுடவைக்கும் பொருளை இளக்குகிறது. அதைப் போல 
தாயின் நெஞ்சு வேகின்றதாம்! வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு என்கிறாள் அவள். மகளின் மீது கோபமும் இல்லை ; பிரிந்து சென்ற 
வருத்தமும் இல்லை; பின் ஏன் தாய்க்கு இந்த நிலை? அதுமட்டுமல்ல, நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டாள் மகள். சற்று 
நேரத்திலேயே தாய்க்குத் தெரிந்துவிட்டது. பின்னர் விடியவிடியத் தூங்கவில்லை அவள். கண்படைபெறேஎன் என்கிறாள் அவள். அந்த 
நிலையில் யாருக்குத்தான் தூக்கம் வரும்? ஆனால் அதைத் தொடர்ந்து கனவ என்கிறாள் தாய். அதாவது கனாக்காண்கிறாளாம். கண்ணை 
மூடாமல் கனவு காண்பது எப்படி? நாம் எப்போதாவது சுற்றுச்சூழலை மறந்து ஏதாவது சிந்தனை வயப்பட்டவராய் யாரேனும் வருவதைக்கூட 
உணராமல் இருந்தால், வந்தவர்கள் நம்மை உலுக்கியெடுத்து “என்ன கண்ண தொறந்துகிட்டே கனவா?” என்று வினவுவதில்லையா? 
அதேபோல் சிந்தனை வயப்பட்டவளாய் பகலிலும் கண்ணை மூடாமல் கனவு காண்கிறாள் அவள். அப்படி என்ன சிந்தனை? 

			

	தாய்க்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பலர் சொல்லிக் கேள்விப்பட்டது. மன்னன் சேரலாதன் கரிகால் வளவனோடு 
வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் போரிடுகிறான். அப்போது கரிகாலன் எய்த ஓர் அம்பு சேரலாதனின் மார்பில் தைத்து முதுகுவரை 
ஊடுறுவிச் சென்றது. இப்போது அம்பை எடுத்துவிட்டால் முதுகிலும் அல்லவா புண் தெரியும். அதனை புறமுதுகிட்டு ஓடியதால் ஏற்பட்டது 
என்றுதானே மற்றவர் நினைப்பர்? இந்த மானக்கேட்டுக்கு அஞ்சிய சேரலாதன் அந்த இடத்திலேயே ஓங்கிய வாளுடன் வடக்கு நோக்கு 
உட்கார்ந்துவிட்டான். வடக்கிருந்து பட்டினிகிடக்கிறான். அவனுக்கு வேண்டிய சில சான்றோர் அவனை அந்த நோன்பை விடும்படி 
வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு அவன் தன் நிலையை எடுத்துக்கூறி உயிரை விடுகிறான். இறுதியில் அந்தச் சான்றோரும் அவனுடன் 
புத்தேளுலகம் புகுகின்றனர். அந்த நிகழ்ச்சிதான் தாயின் மனத்தில் இப்போது நிழலாடுகிறது. உயிர்துறந்த சேரலாதனைப் போல் பெற்ற மகள் 
தன்னைத் துறந்து சென்றுவிட்ட பின்னும், மன்னனுடன் மாண்ட அந்த மாண்பு மிக்கோரைப் போல் தன் உயிர் தன்னைவிட்டுப் 
போய்விடவில்லை, “இன்னுமா இந்த உலகத்தில் இருக்க உனக்கு ஆசை” என்று தன் உயிர்மீதே அந்தத் தாய் வருத்தம் கொண்டு 
அழுகின்றாளாம்.

	‘இவண் காதல் வேண்டி, என் துறந்து போதல் செல்லா என் உயிரொடு புலந்தே’ அந்தத் தாயின் மனம் அழிகின்றது என்பதை 
அவள் கூற்றாகப் பாட்டின் இறுதியில் வைத்து தாயின் அழுகையின் காரணத்தைக் கடைசிவரை கூறாமல் பாடலின் இறுதிவரை நம்மை 
ஒரு எதிர்பார்ப்புடன் இழுத்துச் செல்லும் புலவர் மாமூலனாரின் நுண்மாண்நுழைபுலம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.