அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 56
	
பாடல்  56. மருதத் திணை  பாடியவர் - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

துறை - பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

  மரபு மூலம் - நகையாகின்றே தோழி

	நகையா கின்றே தோழி நெருநல்
	மணிகண் டன்ன துணிகயந் துளங்க
	விரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை
	யாம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
5	கூம்புவிடு பன்மலர் மாந்திக் கரைய
	காஞ்சி நுண்டா தீர்ம்புறத் துறைப்ப
	மெல்கிடு கவுள வல்குநிலை புகுதரும்
	தண்டுறை யூரன் திண்டா ரகலம்
	வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய
10	பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
	புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழிட்
	டெம்மனைப் புகுதந் தோனே வதுகண்டு
	மெய்ம்மலி யுவகை மறையினெ னெதிர்சென்
	றிம்மனை யன்றஃ தும்மனை யென்ற
15	வென்னுந் தன்னு நோக்கி
	மம்மர் நெஞ்சினோன் றொழுதுநின் றதுவே

 சொற்பிரிப்பு மூலம்

	நகை ஆகின்றே தோழி நெருநல்
	மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க
	இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை
	ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
5	கூம்பு விடு பன் மலர் மாந்திக் கரைய
	காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப
	மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும்
	தண் துறை ஊரன் திண் தார் அகலம்
	வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய
10	பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
	புனிற்று ஆப் பாய்ந்து எனக் கலங்கி யாழ் இட்டு
	எம் மனைப் புகுதந்தோனே அது கண்டு
	மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று
	இம் மனை அன்று அஃது உம் மனை என்ற
15	என்னும் தன்னும் நோக்கி
	மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே

அருஞ்சொற் பொருள்:

நெருநல் = நேற்று; மணி = பளிங்கு; துணி கயம் = தெளிந்த குளம்; துளங்க = கலங்க; இயன்றன்ன = செய்தததைப்போன்ற; 
கோடு = கொம்பு; அடை = இலை; மாந்தி = நிறைய உண்டு; புறம் = முதுகு; உறைப்ப = உதிர்ந்து விழ; 
கவுள = கன்னத்தையுடையதாய்; அல்குநிலை = தங்குமிடம்; திண் தார் = செறிந்த மாலை; அகலம் = மார்பு; 
வதுவைநாள் = திருமண நாள். புனிற்று ஆ= அண்மையில் ஈன்ற பசு; மம்மர் = மயக்கம், மருட்சி.

அடிநேர் உரை

	சிரிப்பை உண்டாக்குகின்றது தோழி, நேற்று
	பளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க
	இரும்பினால் செய்தது போன்ற கரிய கொம்பை உடைய எருமை
	ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியுமாறு, குவளையின்
5	அப்போது மலர்ந்த பல மலர்களை நிறைய உண்டு, கரையிலிருக்கும்
	காஞ்சி மரத்துப் பூவின் நுண்ணிய தாதுக்கள் ஈரமான முதுகில் உதிர்ந்து விழ,
	மெல்லும் கதுப்புகளையுடையவாய்த் தன் கொட்டிலுக்குள் நுழையும்
	குளிர்ந்த துறையினையுடைய ஊரனின் செறிந்த மாலையணிந்த மார்பினில்
	மணக்கோலத்திலிருக்கும் புதிய பெண்களைச் சேர்க்க
10	ஆசையுடன் வந்த பாணன், தெருவில்
	அண்மையில் ஈன்ற ஒரு தாய்ப்பசு தன்மீது பாய்ந்ததால் கலங்கிப்போய், யாழினைக் கீழே போட்டு,
	எமது வீட்டுக்குள் புகுந்துவிட்டான், அதனைக் கண்டு
	மனத்தில் தோன்றிய மிகுந்த மகிழ்ச்சியை மறைத்து, அவனை எதிர்கொண்டு
	இந்த வீடு அல்ல , அதுவே உமது வீடு என்ற
15	என்னையும் தன்னையும் நோக்கி
	மருண்ட மனத்தினனாய் (என்னைத்) தொழுதுநின்ற நிலையே!

பாடலின் பின்புலம் 

இது மருதத்திணைப் பாடல். எனவே இதன் உரிப்பொருள் ஊடலும் ஊடல்நிமித்தமும். ஊடலுக்குப் பெரிதும் காரணமாயிருப்பது 
தலைவன் பரத்தையிடம் செல்லுதல். 

	இப் பாடல்தலைவனும் பரத்தமை ஒழுகுகிறான். அவனுக்குப் புதிய பெண்களை அறிமுகப்படுத்துகிறான் ஒரு பாணன். 
அந்தப் பாணன் ஒருநாள் தன் யாழுடன் தலைவியின் வீட்டுப்பக்கம் வருகிறான். அப்போது கன்றுடன் வரும் ஒரு தாய்ப்பசு 
அவன்மீது பாய்கிறது. வெருண்ட பாணன் அருகிலிருந்த தலைவியின் வீட்டுக்குள் நுழைகிறான். தலைவியோ அவன்மீது 
சினங்கொள்ளாமல், “இது நீ போகும் மனை அன்று, நீ போகும் மனை வேறு அல்லவா” என்று வினவுகிறாள். இத்தகைய 
சொற்களைத் தலைவியிடம் எதிர்பாராத பாணன் அவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறான். இந் நிகழ்ச்சியைத் தன் தோழியிடம் 
சிரித்துக்கொண்டே கூறுவதாக அமைந்துள்ளது இப் பாடல்.

பாடலின் விளக்கமும் சிறப்பும்நகையாகின்றே தோழி” என்ற கூற்றுடன் பாடல் தொடங்குகிறது. எனவே நடந்த நிகழ்ச்சியை நினைத்துத் தலைவி 
சிரித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் பாடல் துவங்குகிறது. அந்த நிகழ்ச்சி முந்தைய நாள் நடந்திருக்கிறது. 

	தலைவனைப் புதுப்புது பரத்தையரிடம் அறிமுகம் செய்தற்காகப் பாணன் தலைவனின் வீடு தேடி வருவதுண்டு. 
தலைவனும் அத்தகைய புதிய மகளிரை நாடி அவரிடம் இன்பந்துய்த்துப் பின்னர் வீடுதிரும்புவான் என்பதை அருமையான 
ஓர் உள்ளுறை உவமம் மூலம் புலவர் குறிப்பிடுகின்றார்.

	மணிகண்டன்ன துணிகயம் துளங்க
	இரும்பு இயன்றன்ன கருங்கோட்டு எருமை
	ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
	கூம்புவிடு பன்மலர் மாந்திக்க் கரைய
	காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப
	மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் 
	தண்துறை ஊரன்

	என்கிறார் புலவர். ஓர் எருமை தெளிந்த நீருள்ள ஒரு குளத்தில் இறங்கி, அதனைக் கலக்கி, அங்குள்ள இலைகளைக் 
கிழித்து, புதிதாய்ப் பூத்துநிற்கும் குவளை மலர்களை வயிறார உண்டு, பின் கரையேறி, காஞ்சிப் பூக்களின் நுண்ணிய தாதுக்கள் 
அதன் ஈரமான முதுகில் படிய, அசைபோட்டுக்கொண்டே தன் இருப்பிடம் திரும்பும் என்கிறார் புலவர். இங்கே எருமை என்பது 
தலைவனைக் குறிக்கும். இரும்பு இயன்றன்ன கருங்கோட்டு எருமை என்பது இரும்பு நெஞ்சங்கொண்ட தலைவனைக் குறிக்கும். 
தான் பரத்தையிடம் செல்வதால் தலைவியின் மனம் எந்த அளவு நோகும் என்று சற்றேனும் சிந்தித்துப் பார்க்காத இரும்பு மனம் 
கொண்டவன் என்கிறார் புலவர். பளிங்கு மணியைக் கண்டாற் போன்ற தெளிந்த கயம் என்பது பரத்தையர் சேரி. பொதுவாக எருமை 
வயற்காட்டு வரப்புப் புல்லை மேய்ந்து திரும்பும். இந்த எருமையோ குளத்துக்குள் இறங்குகின்றது. வழக்கமாகத் தலைவியிடம் 
இல்லறம் நடத்தும் தலைவன் இயல்பு மீறி சேரிக்குச் செல்கிறான். சேரியின் அமைதியைக் குலைத்தவாறு ஆர்ப்பரித்துச் செல்கிறான். 
எருமை ஆம்பலின் மெல்லிய இலைகளைக் கிழிக்கிறதாம். பழைய பரத்தையரின் வீட்டார் மனம் நொந்துபோக, அவரை அசட்டை 
செய்து போகிறான் தலைவன். குவளைக் கூம்புவிடு பன்மலர் மாந்துகிறதாம் எருமை. புதிதாய்ப் பருவமடைந்த இளம் பரத்தையர் 
பலரைக் கூடிக்களிக்கிறான் தலைவன் என்கிறார் புலவர். பின்னர் கரையிலிருக்கும் காஞ்சிப்பூக்களின் நுண்ணியதாதுக்கள் அதன் 
ஈரமான முதுகில் உதிர்ந்துவிழ, அந்த எருமை கரையேறுகிறது. புதிய பரத்தையரிடம் அழைத்துச் செல்லும் பாணர்கள் திரும்பிவரும் 
தலைவனைப் புகழ்ந்து நிற்பதையே இதன்மூலம் குறிக்கிறார் புலவர். இவ்வாறு திரும்பும் தலைவன் சேரியில் நடந்ததை 
நினைத்துக்கொண்டே வீடு திரும்புவதையே, மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் என்று புலவர் குறிப்பிடுகிறார். 

	இந்தத் தலைவனின் மார்பில், மணநாள் போன்ற ஒப்பனையையுடைய புதிய பரத்தையரைச் சேர்த்துவிட ஒரு பாணன் 
வருகிறான். 

	தண் துறை ஊரன் திண் தார் அகலம்
	வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய
	பரிவொடு வரூஉம் பாணன் 

	என்று நேரிடையாகவே புலவர் இதனைக் குறிப்பிடுகிறார். 

	வதுவை நாள் என்பது மண நாள். 

	பொதுவாகத் தெருவில் செல்வோரைக் காளைமாடுகள் முட்ட வரும். இங்கு ஒரு பசுமாடு பாணனை முட்ட வருகிறது. 
அதிலும் அந்தப் பசுவை புனிற்றா என்கிறார் புலவர். கன்று ஈன்று சில நாள்களே ஆன பசுவே புனிற்று ஆ. இப் பாடலில் தலைவியைப் 
பற்றிய வேறு குறிப்புகள் இல்லை. அவளும் சில நாள்களுக்கு முன்னர் ஒரு மகவு ஈன்றிருக்கலாம். அதுவே தலைவன் பரத்தைபால் 
சென்றதற்கான காரணமுமாக இருக்கலாம். எனவே இதனையும் உள்ளுறையாகப் புலவர் குறிப்பிட்டிருக்கலாம். 

	புனிற்றா பாய்ந்துவருவதைக் கண்ட பாணன் தன் யாழையும் போட்டுவிட்டுத் தலைவியின் வீட்டுக்குள் ஓடி 
நுழைந்துகொள்கிறான். அச்சத்தின் காரணமாகத் தன்னுடன் எப்போதும் இருக்கும் எச்சரிக்கை உணர்வையும் விடுத்து, தான் வஞ்சிக்கும் 
தலைவியின் வீட்டுக்குள்ளேயே நுழையும் நிலை பாணனுக்கு ஏற்படுகிறது என்கிறார் புலவர். ஆனால் உள்ளேயும் ஒரு தாய்ப்பசுவை 
அவன் எதிர்கொள்கிறான். இந்தப் பசுவும் அவனை முட்டித்தூக்கி எறிந்தால்? அவன் நடுநடுங்கிப்போகிறான். அந்த நிலையில் இந்தத் 
தலைவி செய்தது என்ன?

	பாணனின் பரிதாப நிலையை எண்ணிய தலைவிக்குச் சிரிப்பு வருகிறது. ஏன், உள்ளமே குளிர்ந்துபோகிறது. மெய்ம்மலி உவகை 
என்கிறாள் அவள். தனக்கு வஞ்சகம் இழைத்த பாணன் தன் வீட்டிலேயே தஞ்சம் அடையநேர்ந்ததை எண்ணி முதலில் கொண்ட 
உவகையை மறைத்துக்கொள்கிறாள் தலைவி. “உனக்கு நன்றாக வேண்டும் இது” என்று அவள் இளக்காரம் பண்ணியிருந்திருக்கலாம். 
ஆனால் அது நல்ல மனிதப் பண்பு அல்ல என்று அவள் தன் உவகையை மறைத்துக்கொள்கிறாள். ஆனால் அவனை நேருக்கு நேர் 
பார்க்கிறாள் தலைவி. எதிர்சென்று என்று கூறுகிறார் புலவர். மனத்துணிவோடு அவனை எதிர்கொள்கிறாள் அவள். 

	இம் மனை அன்று, அஃது உம் மனை

	என்று பாணனிடன் அமைதியாகக் கூறுகிறாள். ஒருவேளை பாணனின் வீடு அதே தெருவில் எதிரிலோ அல்லது சற்றுத் 
தள்ளியோ இருந்திருக்கலாம். ஆனால் சங்க காலத்தில் பாணர்கள் தமக்கெனச் சேரி அமைத்துக்கொண்டு தனியாக வாழ்ந்தார்கள் என 
அறிகிறோம். எனவே, தலைவி உம் மனை என்றது பரத்தையர் மனை ஆகலாம். இந்தக் கூற்றில் உள்ள கேலியைப் பாணன் 
புரிந்துகொள்கிறான். இந்தக் கூற்றை மறுத்துரைக்கவும் அவனால் முடியாது. தான் வஞ்சகம் இழைத்த ஒரு பெண் தன்னிடம் இத்துணை 
அமைதியாகப் பேசியதால் அவன் வாயடைத்துப் போகிறான். அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவன் நெஞ்சம் மயங்குகிறது. 
அவளைப் பார்த்த கண்களைத் தாழ்த்திக்கொள்கிறான். இருகைகளையும் கூப்பி அவளைத் தொழுகிறான்.

	என்னும் தன்னும் நோக்கி,
	மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்ற

	காட்சியை நினைத்து நினைத்து அவளுக்குச் சிரிப்பு வருகிறது. நகை ஆகின்றே தோழி என்று தோழியிடம் சொல்லிச் சொல்லிச் 
சிரிக்கின்றாள் தலைவி.