அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 50
	
பாடல்  50. நெய்தல் திணை    பாடியவர் - கருவூர்ப் பூதஞ்சேந்தனார்

துறை - தோழி பாணனுக்குச் சொல்லியது

  மரபு மூலம் - வாராதோர் நமக்கு யாஅர்

	கடல்பா டவிந்து தோணி நீங்கி
	நெடுநீ ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும்
	வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினு
	மாணிழை நெடுந்தேர் பாணி நிற்பப்
	பகலு நம்வயி னகலா னாகிப்			5
	பயின்றுவரு மன்னே பனிநீர்ச் சேர்ப்ப
	னினியே, மணப்பருங் காமந் தணப்ப நீந்தி
	வாரா தோர்நமக் கியாஅரென் னாது
	மல்லல் மூதூர் மறையினை சென்று,
	சொல்லி னெவனோ பாண யெல்லி		10
	மனைசேர் பெண்ணை மடிவா யன்றிற்
	றுணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக்
	கண்ணிறை நீர்கொடு கரக்கு
	மொண்ணுத லரிவையா னென்செய்கோ வெனவே

 சொற்பிரிப்பு மூலம்

	கடல் பாடு அவிந்து, தோணி நீங்கி,
	நெடு நீர் இரும் கழிக் கடுமீன் கலிப்பினும்,
	வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
	மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப,
	பகலும் நம்வயின் அகலான் ஆகிப்,			5
	பயின்று வரும்மன்னே பனி நீர்ச் சேர்ப்பன்!
	இனியே, மணப்பு அரும் காமம் தணப்ப, நீந்தி,
	வாராதோர் நமக்கு யாஅர் என்னாது,
	மல்லல் மூதூர் மறையினை சென்று,
	சொல்லின் எவனோ? பாண! “எல்லி			10
	மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
	துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண்” என
	கண் நிறை நீர் கொடு கரக்கும்
	ஒண் நுதல் அரிவை, யான் என் செய்கோ? எனவே.

அருஞ்சொற் பொருள்:

பாடு=ஓசை; அவிந்து=முற்றிலுமாக அடங்கி; கடுமீன்=சுறாமீன்; கலிப்பினும்=செருக்கித் திரியினும்; வெவ்வாய் = கொடுஞ்சொற்கள்; 
கௌவை=அலர், பழிச்சொல்; மாண் இழை = நன்றாகச் செய்த; பாணி = காத்திரு; பயின்று=அடுத்தடுத்து; 
மணப்ப அரும் = கூடுதற்கரிய; தணப்ப = நீங்க; நீந்தி= துறந்து; மல்லல் = வளமை; எல்லி = இரவில்; பெண்ணை = பனைமரம்; 
மடிவாய் = வளைந்த மூக்கு; கரக்கும் = ஒளிக்கும், மறைக்கும்.

அடிநேர் உரை

	கடலில் ஓசை குன்றி, தோணிகள் கடலைவிட்டு நீங்கி(க் கரையில் கிடக்க)
	நெடியவாய் நிறைந்த நீரைக்கொண்ட பெரிய கழியில் சுறாமீன்கள் செருக்கித் திரிந்தாலும்,
	கொடிய பேச்சைக்கொண்ட பெண்டிர் பழிசொல்லித் திரிந்தாலும்,
	நன்கு அலங்கரிக்கப்பட்ட நீண்ட தேர் காத்துநிற்கப்,
5	பகலிலும் நம்மைவிட்டு அகலாதவனாகி,
	(முன்பெல்லாம்)அடிக்கடி வருவானே! குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவன்;
	இப்பொழுதோ, ஒன்றுசேர்வதற்கு அரிதாயிருந்த (பழைய)விருப்பம் நீங்கிவிட, (இப்பொழுது இருக்குமிடத்தைத்) துறந்து
	வராமலிருப்பவர் நமக்கு யார் என்று வாளாவிராமல்,
	(இப்பொழுது தலைவன் இருக்கும் அந்த)வளமிக்க பழமையான ஊருக்கு மறைவாகச் சென்று
10	(அவனிடம்) சொன்னால் என்ன பாணனே!, “இரவில்
	(நம்)வீட்டைச் சேர்ந்துள்ள பனைமரத்தில், வளைந்த அலகையுடைய அன்றில் பறவைகள்
	ஏதேனும் ஒரு துணை பிரிந்திருந்தாலும் தூங்கமாட்டா, காண்பாயாக என்று
	கண்ணில் நிறைந்து இருக்கும் கண்ணீரைக்கொண்டு தன் துயரை மறைப்பாள்
	ஒளிபொருந்திய நெற்றியையுடைய தலைவி, இதற்கு யான் என்ன செய்வேன்?” என்று. 

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும் 

	தலைவனும் தலைவியும் காதல் மணம் புரிந்து இனிதே வாழ்ந்திருந்த காலத்தில், தலைவன் புதிய உறவை விரும்பிப் 
பரத்தையர் இல்லம் செல்ல, அப்படிச் சென்ற தலைவனிடம் கோபம்கொண்டு தலைவி அவனிடம் ஊடல்கொண்டால் அது 
மருதத்திணையின்பாற்படும். ஆனால் இப் பாடலில் பிரிந்துசென்ற தலைவனை எண்ணி தலைவி வருந்தித் துயருறுகிறாள். 
இது இரங்கல். எனவே இது நெய்தல் திணைக்குரிய பாடலாக அமைந்துள்ளது. அதனால் பாடலுக்குப் பின்புலமாக கடற்கரைக் காட்சிகள் 
காட்டப்பட்டுள்ளன.

	தலைவியைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வெளியூரில் வேற்று மனையில் தங்கிவிடுகிறான் தலைவன். அவனுடைய 
நண்பனான பாணனிடம் தலைவியின் தோழி தலைவியின் இரங்கத் தக்க நிலையை எடுத்துக்கூறுகிறாள். அதனைப் பாணன் 
தலைவனிடம் சென்று சொல்லவேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொள்கிறாள்.

	தான் துயருற்ற நிலையிலும் தலைவி தலைவனைப் பழிசொல்லாமல் தன் கண்ணீரை மறைத்துக்கொள்வதுமன்றி, 
வேற்று மகளை நாடிச் சென்றவனையும் அவள் வெறுக்கவில்லை என்பதைத் தோழி பாணனுக்குத் தெளிவுபடுத்துகிறாள். 

	தலைவன் - தலைவி களவு வாழ்க்கையின்போது, எத்தகைய இடர்ப்பாடுகளையும் பொருட்டென்று எண்ணாமல் தலைவியைச் 
சந்திக்கத் தவறாது வந்த தலைவனின் பழைய பாசம் மறைந்துபோனதற்காக அவனுடைய உறவை அற்றுக்கொள்ளமுடியுமா என்று 
கேட்கிற தோழி கூற்றில் பெண்மையின் ஆற்றாமையைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் புலவர்.

	கடல் பாடு அவிந்து, தோணி நீங்கி,
	நெடு நீர் இரும் கழிக் கடுமீன் கலிப்பினும்,
	வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
	மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப,
	பகலும் நம்வயின் அகலான் ஆகி,			5
	பயின்று வரும்மன்னே பனி நீர்ச் சேர்ப்பன்!

	கடலின் பாடு என்பது அது அலையெழுப்பி ஓசையிடுகிற நிலை. கடல் அலைகளும் ஓசையும் இல்லாமல் அமைதியாக 
இருக்கிறது என்றால் காற்றே அடிக்கவில்லை என்றுதானே பொருள்! அந்த நேரம் பாய்விரித்து கடலுள் நெடுந்தொலைவு சென்று மீன்பிடிக்க 
ஏற்ற காலம் அல்ல. எனவே தோணிகள் கடலில் மிதந்து நிற்காமல், கடலைவிட்டு நீங்கிக் கரைமீது ஏற்றப்பட்டிருக்கும். அதனால், மீனவர் 
மீன்பிடிக்கச் செல்லாமல் ஊருக்குள்ளும் கடற்கரையிலும் குழுமிப் பேசிக்கொண்டிருப்பர். 

			

	மீனவர் கடலுக்குள் செல்லாத காலத்தில் கடலில் இருக்கும் மீன்களுக்குக் கொண்டாட்டம்தான். அவைபாட்டுக்குத் துள்ளி 
விளையாடிக்கொண்டு திரியும். அப்படி விளையாடிக்கொண்டிருக்கும் சுறாமீன்களில் சில ஆள் அரவம் இல்லாததால் துணிச்சலாகக் 
கடற்கரை அருகிலேயும் வரும். அப்படி வந்த சில கடுமீன்கள் தற்செயலாக கழிமுக வாயில் வழியாகக் கடற்கரை ஓரமுள்ள பெரிய 
கழிகளுக்குள் நுழைந்துவிடுவதும் உண்டு. அங்கும் அச்சமின்றி அந்தச் சுறாமீன்கள் துள்ளித்திரியும். ஊரார் அவரவர் வேலைகளைப் 
பார்த்துக்கொண்டிருப்பர். அப்பொழுது யாருக்கும் தெரியாமல் தலைவன் தலைவியைச் சந்திக்க வரமுடியாதல்லவா! அப்படி ஊர் முழுக்க 
நடமாட்டம் மிகுந்து காணப்படும் நேரத்திலும் தலைவன் எப்படியாவது தலைவியைச் சந்திக்க வந்துநிற்பானே என்கிறாள் தோழி.

	சில பெண்களுக்கு வாயில் நல்ல சொற்களே வராது. எப்பொழுதும் யாரையேனும் பழிசொல்லிக்கொண்டே இருப்பார்கள். 
ஊருக்குப் புதியவனான தலைவன் அப்படிப்பட்டவர்கள் கண்ணில்பட்டால் அவ்வளவுதான். இல்லாத புனைந்துரைகளையெல்லாம் 
கட்டிவிட்டுத் துற்றித்தூற்றியே பெயரைக் கெடுத்துவிடுவார்கள். அப்படிப்பட்ட நேரத்திலும் அந்தக் காலத்தில் தலைவன் எப்படியாவது 
தலைவியைச் சந்திக்க வந்துநிற்பானே என்கிறாள் தோழி.

			

	தலைவன் வளமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தேரில்தான் வருவான். பலவித அலங்காரப் பொருள்களால் அவன் 
தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பூட்டியிருக்கும் புரவிகளை ஓய்வெடுக்கவிட்டுத் தேரை நிறுத்தியிருப்பான். காரணம், அவன் வந்தவுடன் 
திரும்பிச் செல்கிறவன் இல்லையே. ஊரில் மக்கள் நடமாட்டம் இல்லாத நாட்களில் பகலிலும் வருவான். பகல்முழுக்க இருப்பான். ஒருநாள் 
முழுக்கப் பார்த்துவிட்டோமே என்று வாளாவிருக்கமாட்டான். மறுநாளும் வருவான். திரும்பத் திரும்ப வருவான். 

			

	இப்படியிருந்த இந்தக் கடற்கரைத் தலைவன் இப்பொழுது எப்படி ஆகிவிட்டான்? 

	இனியே, மணப்பு அரும் காமம் தணப்ப, நீந்தி,
	வாராதோர் நமக்கு யாஅர் என்னாது,

	மணப்பதற்கு முன் கிட்டுதற்கு அரியதாக இருந்தது அவர்களின் சந்திப்பு. எனவே மிகுந்த வேட்கையுடன் அவன் ஒவ்வொரு 
நாளும் வருவான். மணந்த பின்னர் அந்த வேட்கை நீங்கிவிடுகிறதே! இப்பொழுது அதே வேட்கையுடன் தான் சென்றிருக்கும் இடத்தைக் 
கடந்து நம்மிடம் வராமல் இருந்துவிட்டாரே! போனால் போகட்டும், இனி அவர் நமக்கு யாரோ என்று சும்மா இருந்துவிட முடியுமா?

			

	மல்லல் மூதூர் மறையினை சென்று,

	தலைவன் இருக்கும் வளமிக்க ஊருக்கு யாருக்கும் தெரியாமல் போ என்று பாணனிடம் கூறுகிறாள் தோழி. இவ்வாறு 
ஒளிந்துகொண்டு செல்லவேண்டியதன் காரணம் என்ன? திருமணத்துக்கு முன்னர் ஒருவரையொருவர் காண ஒளிந்துகொண்டு 
செல்லவேண்டிய காலத்தில்கூட அஞ்சாமல் வெளிப்படையாக ‘ஜல் ஜல்’-என்று வண்டிகட்டி வந்துபோயிருக்கிறான் தலைவன். 
இப்போது திருமணம் ஆன பின்னர், அவனைப் பார்க்க மறைந்து ஒளிந்து செல்லவேண்டியதாகப் போய்விட்டது. காரணம் அவனது 
நடத்தை என்று சொல்லாமல் சொல்லுகிறாள் தோழி. தலைவன் பரத்தையர் சேரியில் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் 
இருக்குமிடத்தை மல்லல் மூதூர் என்கிறாள் தோழி. மதுரை போன்ற பெருநகர்களைத்தான் மல்லல் மூதூர் என்பர். மல்லல் என்பது 
வளப்பத்தைக் குறிக்கும். கழிவுநீரில் பன்றிகள் புரண்டுகொண்டிருக்கும் சேரியை மல்லல் மூதூர் என்று தோழி அழைத்திருக்கமாட்டாள். 
மேலும் பரத்தையரிடம் செல்கின்ற தலைவன் ஒருசில நாட்களில் திரும்பிவிடுவான். இங்கே அப்படி இல்லை. எனவே தலைவன் 
அண்டையிலுள்ள வேறு ஓர் ஊரில் வேறு ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறான். இன்றைய வழக்கில் அது 
சின்னவீடு. ஆனால் சிலர் போல் அவ்வப்போது சென்றுதிரும்பும் சின்னவீடாக இல்லாமல், தலைவன் நிரந்தரமாகத் தங்கிவிடும் 
இன்னொரு மனை ஆகிவிடுகிறது. எனவேதான் அவன் தலைவியை முழுதுமாக மறந்துவிட்டான். ஆனால் தலைவியும் இனி அவர் 
நமக்கு யார் என்று சும்மா இருந்துவிடமுடியுமா? எனவேதான் தலைவன் இருக்குமிடத்தைத் தேடிச் செல்ல ஒரு பாணனைத் தோழி 
அனுப்புகிறாள்.

	தலைவன் வசிக்கும் பகுதிக்கு வெளிப்படையாகச் சென்றால், “யார் நீ?, யாரைப் பார்க்கவேண்டும்?” என்ற கேள்விகள் கேட்பர். 
அப்போது “இன்னார் அனுப்பி, இன்னாரைத் தேடிவந்தேன்” என்று பாணன் சொன்னால் அது தலைவனுக்கு இழுக்காகிவிடாதா என்று 
தோழி கவலைப்படுகிறாள். இது சங்ககாலத்து ‘அன்னக்கொடியும் ஐந்துபெண்களும்’ கதை. இந்த முத்துப்பாண்டியின் நிலையில் 
இருக்கிறாள் அன்றைய தலைவி.

	சொல்லின் எவனோ? பாண! “எல்லி			
	மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
	துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண்” என
	கண் நிறை நீர் கொடு கரக்கும்
	ஒண் நுதல் அரிவை, யான் என் செய்கோ? எனவே.

	யாருக்கும் தெரியாமல் மறைந்துசென்று பாணன் தலைவனிடம் சொல்லவேண்டிய செய்தியைத் தோழி இங்கு கூறுகிறாள்.

			

	ஊரெல்லாம் மேய்ந்துவிட்டு இரவானால் பறவைகள் தத்தம் கூடுகளுக்கு வந்துசேரும். (பறவைகளுக்குத் தெரிந்ததுகூடத் 
தலைவனுக்குத் தெரியவில்லையா?). அதுவும் இந்த அன்றில் பறவைகள் இருக்கின்றனவே அவை ஒன்றை விட்டு ஒன்று பிரிந்திருக்கவே 
மாட்டா. ஒரு குளத்தின் மேற்பரப்பில் இரண்டு அன்றில் பறவைகள் சேர்ந்து வேகமாகப் பறந்துசென்றுகொண்-டிருக்கின்றன. அப்போது 
திடீரென்று ஒரு பூ இடையில் இருப்பதைப் பார்க்கின்றன. இரண்டும் சட்டென்று ஒரு பக்கமாக ஒதுங்க நேரமில்லை. எனவே அவை 
ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்துசென்று மீண்டும் கூடுகின்றன. ஒருசில விநாடிகள்தான் பிரிவு. இருப்பினும், அவ்வாறு அவை பிரிந்து 
சேர்கையில் ஒரு வருடம் பிரிந்திருந்து சேர்வதைப் போல ஒன்றையொன்று தழுவிக்கொள்ளுமாம். அன்றில் பறவைகளின் நெருக்கமான 
உறவைக் கூற இப்படி ஒரு வழக்கு உண்டு. 

	அப்படிப்பட்ட இரண்டு அன்றில் பறவைகள் வீட்டை அடுத்த ஒரு பனைமரத்தில் குடியிருக்கின்றன. ஒருநாள் அவற்றில் ஒன்று 
இராத் தங்க வரவில்லை. அடுத்த பறவை இரவு முழுக்க எப்படி இருக்கும்?

	இரவில் தனிமையில் தூக்கம் வராமல் தலைவி வருந்திக்கொண்டிருப்பதைத் தோழி பார்த்துவிடுகிறாள். கண்களில் 
நீர்கோர்த்துக்கொண்டிருக்கிறது. காரணம் தெரிந்திருந்தும் ஆறுதலுக்காகத் தோழி தலைவியை வினவுகிறாள். அப்பொழுதுகூடத் தலைவி 
தன் துயரை வெளிக்காட்ட விரும்பவில்லை. ‘கண் நிறை நீர் கொ(ண்)டு கரக்கும்’ என்கிறார் புலவர். கரத்தல் என்பது மறைத்தல். 
கண்ணீரை மறைக்கமுடியாத தலைவி, கண்ணீருக்குரிய காரணத்தை மறைக்கிறாள். 

	மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
	துணையொன்று பிரியினும் துஞ்சா, காண்!

	என்கிறாள் தலைவி. துணையைப் பிரிந்து தூங்காமல் தவிக்கும் அந்த ஒற்றை அன்றிலை எண்ணி நான் கண்கலங்கி நிற்கிறேன் 
என்கிறாளாம் தலைவி. இப்படித் தோழி சொல்கிறாள் என்று தலைவனிடம் சொல்லும்படி பாணனிடம் கூறுகிறாள் தோழி.

			
  	http://tamil.nativeplanet.com/begusarai/photos/7187/   http://literature-comp.blogspot.in/2011_08_01_archive.html

	எந்தச் சூழ்நிலையிலும் தலைவனின் பெயருக்கு இழுக்கு நேர்ந்துவிடக்கூடாது என்றும், மனம்விட்டுப் பேசும் தோழியிடம்கூட 
தலைவனை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் நினைக்கும் மாண்புடையவள் தலைவி என்பதைத் தலைவனிடம் சொல்லிவா என்பதே 
தோழியின் செய்தி.

பாடலின் சிறப்பு

	பொதுவாக ஒருவரின் போக்கு மாறிவிட்டால், முன்பெல்லாம் அவர் எவ்வாறு நல்ல முறையில் நடந்துகொண்டார், 
இப்போது எந்த அளவுக்கு மாறிவிட்டார் என்று ஒப்புமைகூறி எடுத்துச் சொல்வது உலக வழக்கு. இதனை அப்படியே புலவர் 
கையாண்டிருக்கும் நயம் பாராட்டுக்குரியது அன்றோ! தலைவன், தலைவி, தோழி, பாணன், நெய்தல், இரங்கல் போன்றவை எல்லாம் 
செய்யுளுக்காகப் படைத்துக்கொண்ட நாடகவழக்கு. 

	நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
	பாடல் சான்ற புலன் நெறி வழக்கம்
	கலியே பரிபாட்டு ஆ இரு பாவினும்
	உரியது ஆகும் என்மனார் புலவர் – தொல்.- பொருள் – அகத். 53

	என்பார் தொல்காப்பியர். அந்த நாடக வழக்கையும் உலகியல் வழக்கொடு இயைத்துப் பாடல் புனைந்திருப்பதுதான் சங்கப் 
பாடல்களின் தனிச் சிறப்பு. அது இப் பாடலில் மிகுந்து காணப்படுவதைக் காணலாம்.

	பரத்தைவழிப் பிரிவு ஊடலுக்கு வழிவகுக்கும். அது மருதத்திணையின்பாற்படும். ஊடல் ஒருசில நாட்களில் உதிர்ந்துவிடும். 
ஆனால் இது நெய்தல் திணைப் பாடல். இரங்கல் குறித்தது. நெடுநாள் பிரிவால் துயருற்று வருந்துவது. எனவே இங்கு தலைவனின் பிரிவு 
பரத்தைவழிப் பிரிவு அல்ல என்பதை மிக நுணுக்கமான மொழிகளால் புலவர் நமக்குப் புலப்படுத்துகிறார். வாராதோர் நமக்கு யார் என்னாது 
என்ற தோழியின் சொற்களில்தான் முதல் குறிப்பு உள்ளது. ‘இப்படியே வராமல் இருந்துவிட்டால்,  அப்படியே விட்டுவிடமுடியுமா?’ என்ற 
பொருளில் “அவருக்குத்தான் நாம் யாரோ ஆகிவிட்டோம், ஆனால் நமக்கு அவர் யாரோ என்று சொல்லிவிட முடியுமா?” என்று கேட்கிற 
தோழியின் கூற்றில்தான் தலைவன் பிரிவின் தன்மையை உட்பொதிந்துவைத்திருக்கிறார் புலவர். அடுத்து ‘மல்லல் மூதூர் மறையினை 
சென்று’ என்ற மொழிகளிலும் இதே கருத்தை மீண்டும் நமக்குப் புலப்படுத்துகிறார் புலவர். ஊருக்குப் புறத்தே இருக்கும் புறஞ்சேரிப் 
பரத்தையர் வளமிக்க வாழ்க்கை வாழ்வதாக நம் இலக்கியங்கள் காட்டவில்லை. எனவே அவரின் இருப்பிடத்தை மல்லல் மூதூர் என்று 
புலவர் சொல்லமாட்டார். எனவே தலைவன் இருப்பது ஒரு பெரிய ஊர். சேரி போன்ற சிறிய பகுதிக்குள் மறைந்து செல்வது என்பது 
இயலாதது. எனவே மறையினை சென்று என்ற தோழியின் கூற்றும் தலைவனின் இருப்பிடம் ஒரு பெரிய நகர்ப்பகுதி என்பதைத் 
தெளிவாக்குகிறது. இவ்வாறு உய்த்துணரும் வகையில் செய்திகளைப் பொதித்து வைத்துப் பாடுவதில் சங்கப் புலவர்கள் வல்லவர்கள். 
அவர்களின் அந்த வல்லமைத் திறத்தையும் இப் பாடலில் காண்கிறோம்.

	மனையைச் சேர்ந்த ஒரு பனைமரத்தில், துணையைப் பிரிந்த ஒரு அன்றில் பறவை துஞ்சாமல் இருக்கிறது என்ற செய்தியில் 
மனைக்குள் இருக்கும் ஒரு படுக்கை அறையில் துணையின்றி வாடும் ஒரு பெண்மகள் துயிலின்றிக் கிடக்கிறாள் என்ற செய்தி 
அடங்கியிருக்கிறதல்லவா? இதைச் சொன்னால் அது புரியாதா தலைவனுக்கு என்பது தோழியின் நம்பிக்கை.

	ஒண்ணுதல் அரிவை என்று தலைவியின் அழகை நினைவூட்டித் தலைவனை இழுக்கப்பார்க்கிறாள் அவள். 

	மடிவாய் அன்றில் என்ற கூற்று அன்றிலின் சிறப்புத் தோற்றத்தை அப்படியே நம் கண் முன் கொண்டுவந்து காட்டுகின்றதே!