அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 60
	
பாடல்  60. நெய்தல் திணை  பாடியவர் - குடவாயிற் கீரத்தனார்

துறை - தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.

  மரபு மூலம் - அறனில் யாய்

	பெருங்கடற் பரப்பிற் சேயிறா நடுங்கக்
	கொடுந்தொழின் முகந்த செங்கோ லவ்வலை
	நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக்
	குப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோ
5	றயிலை துழந்த வம்புளிச் சொரிந்து,
	கொழுமீன் றடியொடு குறுமகள் கொடுக்குந்
	திண்டேர்ப் பொறையன் றொண்டி யன்னவெம்
	மொண்டொடி ஞெமுக்கா தீமோ தெய்ய;
	வூதை யீட்டிய வுயர்மண லடைகரைக்
10	கோதை யாயமொடு வண்ட றைஇ 
	யோரை யாடினு முயங்குநின் னொளியெனக்
	கொன்னுஞ் சிவப்போள் காணின், வென்வேற்
	கொற்றச் சோழர் குடந்தை வைத்த
	நாடுதரு நிதியினுஞ் செறிய
15	வருங்கடிப் படுக்குவ ளறனில் யாயே

 சொற்பிரிப்பு மூலம்

	பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்கக்
	கொடும் தொழில் முகந்த செம் கோல் அம் வலை
	நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
	உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
5	அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து
	கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
	திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன, எம்
	ஒண் தொடி ஞெமுக்காதீமோ! தெய்ய!
	ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை
10	கோதை ஆயமொடு வண்டல் தைஇ
	ஓரை ஆடினும், ‘உயங்கும் நின் ஒளி’ என
	கொன்னும் சிவப்போள் காணின், வென் வேல்
	கொற்றச் சோழர் குடந்தை வைத்த
	நாடு தரு நிதியினும் செறிய
15	அரும் கடிப் படுக்குவள்! அறன் இல் யாயே!

அருஞ்சொற் பொருள்:

சேயிறால் = சிவந்த இறால்; திமில் = மீன்பிடி படகு; நொடை = விலைக்கு விற்றல்; மூரல் = பதமான சோறு; 
அயிலை = அயிரை மீன்; துழந்த = துழாவிய, கிளறிய; ஞெமுக்கு = வருத்தி அமுக்கு; 
தெய்ய = அசைச் சொல் (poetic expletive); ஊதை = பனிக்காலத்தில் வேகமாக வீசும் காற்று. வண்டல் = மணல்வீடு; 
தைஇ = செய்து; ஓரை = மகளிர் விளையாட்டு; உயங்கும் = வாடும்; கொன்னும் = காரணமின்றி; செறிய = செறிந்த; 
அருங்கடி = கட்டுக்காவல்; யாய் = எம்முடைய தாய்.

அடிநேர் உரை

	பெரிய கடற்பரப்பில் சிவந்த இறால் மீன் நடுக்கமுறும்படி
	கொடிய தொழிலான (மீனை) முகக்கும் நேரான கோலையுடைய அழகிய வலையைக் கொண்ட
	நீண்ட திமிலிலிருந்து மீன்பிடிக்கும் தொழிலில் நிலைத்த தந்தைக்கு
	உப்பைவிற்றுக்கொண்ட நெல்லினின்றும் ஆக்கிய பதமான வெண்சோற்றில்
5	அயிரை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பைச் சொரிந்து
	கொழுத்த மீனின் துண்டத்தோடே சிறுமி கொடுக்கும் இடமாகிய
	திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டிநகரைப் போன்ற எமது
	ஒளிவிடும் தோள்வளையை அமுக்கவேண்டாம்; 
	ஊதற்காற்று குவித்த உயர்ந்த மணல் மேடாகிய கரையில்,
10	மாலையையுடைய தோழிகளுடனே மணல்வீடு கட்டி
	விளையாடினும் குன்றும் உன் மேனி அழகு என்று,
	காரணமின்றியே கோபிக்கும் அன்னை கண்டால், வெல்லும் வேலையுடைய
	அரசாண்மை உள்ள சோழரின் குடந்தை நகரில் வைத்த
	பகை நாடுகள் தரும் செல்வத்தின் காவலைக் காட்டிலும், செறிந்த 
15	கடுமையான காவலில் வைத்துவிடுவாள் அறனில்லாத எம்முடைய தாய்.

பாடலின் பின்புலம்

	தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்தில் நெருங்கிப் பழகுகின்றனர். இருப்பினும் தலைவன் திருமணம் 
முடிக்குங் காலத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கிறான். தலைவன் தலைவியின் தோளை நெருங்கித் தழுவுவதால் 
தோள்வளைகள் அவளின் தோளில் அழுந்தப் பதிந்து தடம் பதித்துவிடுகின்றன. இதனைத் தாய் கண்டால், தலைவியின்மீது 
ஐயம்கொண்டு அவளை இற்செறித்துவிடுவாள் என்று தோழி தலைவனிடம் சொல்லுகிறாள். இதன்மூலம் தலைவியை 
விரைவில் மணம்புரிந்துகொள்ள தலைவனை அவள் தூண்டுகிறாள்.

பாடலின் விளக்கம்

	ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை
	கோதை ஆயமொடு வண்டல் தைஇ
	ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என
	கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல்
	கொற்றச் சோழர் குடந்தை வைத்த
	நாடு தரு நிதியினும் செறிய
	அரும் கடிப் படுக்குவள் அறன் இல் யாயே

	இது தலைவியின் தாயைப் பற்றிய செய்தி. கடற்கரையின் ஈரமணலில் பலவித உருவங்களைச் செய்து தலைவி 
தோழியருடன் விளையாடுகிறாள் (கோதை ஆயமொடு வண்டல் தைஇ ஓரை ஆடினும்). நெடுநேரம் வெயிலில் இருந்தால் மேனி 
கருத்துவிடும் (உயங்கும் நின் ஒளி என) என்று தாய் அதனைத் தடுக்கிறாள். 

			

	இப்படி ஒன்றுக்கில்லாததுக்குக்கூட கோபித்துக்கொள்ளும் தாய் (கொன்னும் சிவப்போள்) தலைவியின் மேனியில் 
தழும்புகளைக் கண்டால் சும்மா விடுவாளோ? கடுமையான காவலுக்குள் தள்ளிவிடுவாள் (அரும் கடிப் படுக்குவள்) என்கிறாள் 
தோழி. எத்துணை கடுமை என்பதையும் ஓர் உவமை மூலம் விளக்குகிறாள் தோழி. வெற்றியையுடைய வேலினால் அரசாட்சி 
செய்யும் சோழர்கள் தம் நாட்டிலும், பகைவர் நாட்டிலும் பெற்ற பெருஞ்செல்வத்தைக் குடந்தை என்ற ஊரில் வைத்திருக்கிறார்கள். 
அந்தப் பெருஞ்செல்வத்தைக் காக்கப் பெரும்படையைக் காவலுக்கு வைத்திருக்கின்றனர். அந்தக் கட்டுக்காவலினும் கடுமையான 
காவலைத் தாய் தலைவிக்கு வைத்துவிடுவாள் என்று கூறுகிறாள் தோழி. 

	வண்டல் என்பது மணல்வீடு போன்று மகளிர் செய்வது. ஓரை என்பது மகளிர் விளையாட்டு. எனவே வீடுகட்டி 
விளையாடுதல் சிறுமியரும் மகளிரும் ஆடும் விளையாட்டு என்றாகிறது. இன்றைக்கும் கிராமங்களில் சிறுபெண்கள் பொம்மையான 
சட்டி பானை வைத்து விளையாடுவதைக் காணலாம். இவ்வாறு விளையாடுவது மகளிர் இயல்பு. இந்த இயல்பான செய்கைக்கே தாய் 
கோபித்துக்கொள்ளுவாள் என்பதனைக் கொன்னும் சிவப்போள் என்ற அழகிய சொற்றொடரால் குறிக்கிறார் புலவர். கொன் என்பதற்கு 
வீணான, சரியான காரணமின்றி என்று பொருள். அப்படிப்பட்ட தாய் தலைவியின் காதல் விளையாட்டை அறிய நேர்ந்தால் சும்மா 
விடுவாளோ? வீட்டிலேயே பூட்டிவைத்துவிடமாட்டாளா? தலைவியைப் பொருத்தமட்டில் அது ஒரு கொடிய செயல் அல்லவா? 
எனவேதான் அப்படிச் செய்யக்கூடியவள் இந்த அறன் இல் யாய் என்கிறாள். “பாவி மக ஆத்தா, வீட்டுக்குள்ள பூட்டி வச்சுட்டா நீ 
என்னய்யா செய்வ?” என்று தோழி கேட்பதையே அறனில் யாய் என்ற சொற்களால் குறிக்கிறார் புலவர். யாய் என்பது 
என்னுடைய/எம்முடைய என்ற பொருள் தரும். தோழி தலைவியின் தாயையே எம்முடைய தாய் என்கிறாள்.

	தலைவி எங்கே மணல் வீடு கட்டி விளையாடுகிறாளாம்? ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை என்கிறார் புலவர். 
ஊதை என்பது ஊதல் காற்று. “ஊய், ஊய்” என்ற ஊளைச் சத்தத்தோடு ஓங்கிச் சுழற்றியடிக்கக்கூடியது இந்த ஊதைக் காற்று. 
அவ்வாறு அடிக்குபோது கடற்கரை மணலை வாரிச் சுருட்டி வீசிப் பெரும் திட்டுகளாக ஆக்கிவிடும். இதையே 
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை என்கிறார் அவர். காற்றால் வீசித் தூக்கியெறிபடுவதால் அது குறுமணலாக இருக்கும். 
கடற்கரை ஓரத்து மணலாக இருப்பதால் அது ஈரமாகவும் இருக்கும். எனவே அது வீடுகட்டி விளையாடச் சரியான பக்குவத்தில் 
இயற்கையாகவே அமைந்திருக்கும். எத்துணை நுட்பமாக இதனையும் குறிப்பிடுகிறார் புலவர் பாருங்கள்!

			

	தலைவியின் தாய் இத்துணை கடுமையானவளாய் இருப்பதால், தலைவனே, தலைவியிடம் பழகும்போது அவளின் 
தோள்வளையை இறுக்க அமுக்காதே என்கிறாள் தோழி (எம் ஒண்டொடி அமுக்காதீமோ). ஒள்ளிய தொடி ஒண்டொடி ஆனது. 
தொடி என்பது தோள்வளை. வந்திகை என்றும் சொல்லப்படும். முன்கை தொடி என்றால் அது கைவளையைக் குறிக்கும். 
இங்கே அது குறிப்பிடப்படவில்லை. 

			

	ஒண்டொடி என்பதை அன்மொழித்தொகையாகக் கொண்டு ஒண் தொடி அணிந்த தலைவியைக் குறிப்பதாகக் 
கொள்ளலாம். தலைவன் தலைவி சந்திப்பின்போது தலைவன் தலைவியை இறுகத் தழுவினால் அவளின் மேனி கன்றிப்போகாதா? 
வெயிலில் விளையாடியதால் முகம் கன்றிப்போவதற்கே கோபித்த தாய், இவ்வாறு மேனி கன்றிப்போய் வரும் தலைவியைக் 
காணும்போது என்ன செய்வாள்? இருப்பினும் இப்பொருள் அத்துணை சிறப்பானது அன்று என உரைகாரர்கள் இதனைக் 
கொள்வதில்லை.

	இந்த ஒண்டொடி எப்பேர்ப்பட்டது என விளக்குவதே பாடலின் தொடக்கம். பாடலின் பிற்பகுதியில் தலைவியின் 
இற்செறிப்புக்குக் கொற்றச்சோழர் குடந்தை வைத்த நிதிக்குரிய காவலைப் பற்றிப் பேசும் புலவர், பாடலின் முற்பகுதியில் தலைவியின்
சிறப்பைச் சொல்லவரும்போது திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் ஒண்டொடி என்கிறார். தொண்டி நகரம் சேர மன்னரின் 
புகழ்பெற்ற துறைமுகப்பட்டினம். மேல்நாட்டுச் செல்வத்தோடு யவனக் கப்பல்கள் வந்து நிற்குமிடம் இந்தத் தொண்டி. இத்தகைய 
சிறப்புள்ள தொண்டியைப் போன்று அழகும் உயர்வும், செழிப்பும்கொண்டு பொலிவுடன் விளங்குவன தலைவியின் தோளணிகள். 

	இந்தத் தொண்டி நகரம் எப்பேர்ப்பட்டது என்று கூறும் முகத்தான் ஓர் அழகிய நெய்தல் காட்சியை விவரிக்கிறார் புலவர். 
அதனுள் ஓர் அருமையான உள்ளுறை உவமத்தையும் பொதித்துவைக்கிறார் அவர்.

	தொண்டி நகரம் ஒரு துறைமுகப் பட்டினம் என்று பார்த்தோம். எனவே அங்குள்ள கடற்கரையை ஒட்டிய பகுதியில் 
மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வர். அவருள் ஒரு மீனவச் சிறுமியின் அன்புத்தந்தையும் இருக்கிறார். பெரிய கடற்பரப்பில் நெடுந்திமில் 
என்ற நீண்ட படகில் இறால் மீன்களைப் பிடிக்க வலையுடன் செல்கிறார். இறால்களில் பலவகை உண்டு. இவற்றுள் சிறியவகையின 
கடலை ஒட்டிய கழிக்குள் இருக்கும். ஆனால் கடலுக்குள் இருக்கும் இறால்கள் அளவில் பெரியன. அவற்றினும் சிவந்த வகை 
இறால்கள் சுவையானவை; எனவே விலையுயர்ந்தவை. 

			

	அந்தச் சேயிறா மீன்களைப் பிடிக்க இந்தத் தந்தை கடலுக்குள் தன் வலையுடன் செல்கிறார். இந்த வலையில் 
மாட்டிக்கொண்ட இறால்கள் துள்ளிக்குதிக்குமாம். எனவே இந்தச் சேயிறால் நடுங்க அவர் வலையைப் போடுகிறார் என்கிறார் புலவர். 
இந்த வலையைச் செங்கோல் அவ்வலை என்கிறார் அவர். ஒரு நீண்ட செவ்வக வடிவிலான வலையின் இரு முனைகளிலும் நீண்ட 
கழிகள் கட்டப்பெற்றிருக்கும். நீண்ட படகின் ஒவ்வொரு முனையிலும் வலையின் ஒரு முனையை இருக்க வைத்து, வலையைக் 
கடலுக்குள் வீசியெறிவர், வலை மூழ்கிவிடாதிருக்க அதன் மேற்பரப்பில் மிதப்புகள் கட்டப்பெற்றிருக்கும். இரு முனைகளிலும் உள்ள 
செங்குத்தான கழிகள், இந்த வலை கடலுள் விரிந்து நிலையாக நிற்க உதவும். இதனையே செங்கோல் அம் வலை என்கிறார் அவர். 

			

	கரையையொட்டிய கழிகளுக்குள் இருக்கும் இறாலைப் பிடிக்கக் கூம்பு போன்ற வலையைப் பயன்படுத்துவர். கடலுக்குள் 
படகில் சென்று அங்கு இருக்கும் இறாலைப் பிடிக்கவே இத்தகைய செங்கோல் வலை பயன்படுத்தப்படுகிறது இது 
boat seine prawn fishing என அழைக்கப்படும். இதனையே புலவர் பெருங்கடற் பரப்பில் சேயிறால் நடுங்க, நெடுந்திமில் தொழில் 
என்கிறார். தான் சொல்லவந்ததை ஐயத்துக்கிடமின்றி எத்துணை விரிவாக விளக்குகிறார் புலவர் பாருங்கள்! 

	படகின் இரு முனைகளிலும் இருப்போர் இந்தச் செங்கோலில் கட்டப்பட்ட கயிறுகளைத் தம்மை நோக்கி இழுக்கும்போது 
இந்த வலைக்குள் சிக்கிக்கொண்ட மீன்கள் சேர்த்துக் கொணரப்படும். இதனையே அந்தச் செங்கோல் வலை இந்த மீன்களை முகந்து 
கொண்டுவருகின்றன என்கிறார் புலவர். கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ்வலை என்பதில் உள்ள முகந்த என்ற சொல்லைக் 
கவனியுங்கள். படகு நீளமானதாக இருந்தால் பெரிய அளவிலான பரப்பளவில் வலையை வீசலாம் என்பதையும் குறிக்கிறார் புலவர். 
நெடுந்திமில் என்கிறார் அவர்.

			

	இவ்வாறு தொழில்செய்யப்போய் கரைக்குத் திரும்பும் தன் தந்தை பசியோடு வருவாரே என்ற எண்ணத்தில் அவருக்கு 
உணவு எடுத்துச் செல்கிறாள் ஒரு மீனவச் சிறுமி. அவளையே குறுமகள் என்கிறார் புலவர். உப்பங்கழிகளிலே விளைந்த உப்பை, 
ஊர்களுக்குச் கொண்டுசென்று அங்கு நெல்லுக்குப் பதிலாக அவற்றை விற்று, அவ்வாறு கொண்டுவந்த நெல்லைக் குற்றி அரிசியாக்கி, 
பொல பொல-வென்று பருக்கைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பதமாக வேகவைத்த வெண்சோற்றில் (உப்பு நொடை நெல்லின் 
மூரல் வெண்சோறு), அயிரை மீனை இட்டுச் செய்த அழகிய புளிக்குழம்பை ஊற்றி (அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து), 
வெஞ்சனமாக கொழுத்த மீனின் துண்டத்தைப் பொரித்து எடுத்துச் செல்கிறாள் அவள். 

	பிழைப்புக்காக உழன்று மீன்பிடித்துவரும் தந்தையின் உணவுக்காக இச் சிறுமி துழந்து உணவு சமைத்து எடுத்துச் செல்கிறாள். 
இத்தகையவர்கள் வாழும் தொண்டி நகரைப்போலச் சிறப்புப் பெற்றது தலைவியின் ஒண் தொடி என்கிறாள் தோழி. இவ்வாறு 
தோழியைப் பேசவைத்த புலவரின் நோக்கம் என்ன?

	தலைவியை மணந்துகொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும், அதற்கான பொருள் ஈட்டவும் தலைவன் 
எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறான். அவன் களைத்து வரும்போது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கத் தலைவி அவனுடன் 
நெருங்கிப் பழகுகிறாள். உணவை உண்ட தந்தை ஒரேயடியாக ஓய்வெடுக்கச் செல்வதில்லை; மறுநாள் மீண்டும் தன் பணிக்குச் 
செல்வதுபோல, தலைவனே, தலைவியை மணந்துகொள்ளும் முயற்சியில் தளராது ஈடுபடுவாயாக: யாமும் எம் பங்கை ஆற்றுவோம்; 
ஆனால் அதற்குத் தாய் இடையூறாக இருக்கக்கூடும்; எனவே விரைவில் மணம் முடிக்கும் வழியைப் பார் என்று தோழி தலைவனுக்கு
உள்ளுறையாக வைத்துக் கூறும் உவமம் இது.