அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 48
	
பாடல் 48. குறிஞ்சித் திணை  பாடியவர் - தங்கால் முடக்கொற்றனார்

துறை - தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது

 மரபு மூலம் - மற்று இவன் மகனே! தோழி!

	அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
	பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு
	நனிபசந் தனளென வினவுதி யதன்றிறம்
	யானுந் தெற்றென வுணரேன் மேனாள்
	மலிபூஞ் சாரலென் றோழி மாரோ		5
	டொலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப்
	புலிபுலி யென்னும் பூசற் றோன்ற
	வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித
	ழூசி போகிய சூழ்செய் மாலையன்
	பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்	10
	குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
	வரிபுனை வில்ல னொருகணை தெரிந்துகொண்
	டியாதோ மற்றம் மாதிறம் படரென
	வினவி நிற்றந் தோனே யவற்கண்
	டெம்மு ளெம்முள் மெய்ம்மறை பொடுங்கி	15
	நாணி நின்றனெ மாகப் பேணி
	யைவகை வகுத்த கூந்த லாய்நுதல்
	மையீ ரோதி மடவீர் நும்வாய்ப்
	பொய்யு முளவோ வென்றனன் பையெனப்
	பரிமுடுகு தவிர்த்த தேர னெதிர்மறுத்து		20
	நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச்
	சென்றோன் மன்றக் குன்றுகிழ வோனே
	பகல்மா யந்திப் படுசுட ரமையத்
	தவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன்
	மகனே தோழி என்றன				25
	ளதனள வுண்டுகோள் மதிவல் லோர்க்கே


 சொற்பிரிப்பு மூலம்

	அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள்
	பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
	நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
	யானும் தெற்றென உணரேன் மேல் நாள்
	மலி பூம் சாரல் என் தோழிமாரோடு		5
	ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்
	புலி புலி என்னும் பூசல் தோன்ற
	ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
	ஊசி போகிய சூழ் செய் மாலையன்
	பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்		10
	குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி
	வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு
	யாதோ மற்று அ மா திறம் படர் என
	வினவி நிற்றந்தோனே அவன் கண்டு
	எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி	15
	நாணி நின்றனெமாகப் பேணி
	ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
	மை ஈர் ஓதி மடவீர் நும் வாய்ப்
	பொய்யும் உளவோ என்றனன் பையெனப்
	பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து	20
	நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
	சென்றோன் மன்ற அக் குன்று கிழவோனே
	பகல் மாய் அந்திப் படு சுடர் அமையத்து
	அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன்
	மகனே தோழி என்றனள்				25
	அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே

அருஞ்சொற் பொருள்:

பழங்கண் = துன்பம்; தெற்றென = தெளிவாக; ஒலி சினை = தழைத்த கிளை; பூசல் = ஆரவார ஒலி; 
செச்சை = வெட்சி, scarlet ixora; குயம் = இளமை, juvenility; ஆகம் = மார்பு; முடுகு = வேகம்; தேஎம் = திசை. 

பாடலின் பின்புலமும் பாடல் சுருக்கமும்

	குறிஞ்சித்திணைப் பாடலான இது தலைவன் தலைவி ஆகியோரிடையே எழுந்த காதலைப் பற்றிப் பாடுகிறது. 
குறிப்பாக, தலைவனும் தலைவியும் சந்தித்துக்கொள்ளும் முதல் சந்திப்பைப்பற்றியும், அதன் பின்விளைவுகளையும் பற்றிக் 
கூறுகிறது. 

	வேங்கை மரத்தினின்றும் மலர் பறிக்கத் தோழியரோடு தலைவி செல்கிறாள். இது மலைவேங்கை. எனவே குன்றில் 
ஏறி மலர் பறிக்கச் செல்கிறது அந்த மகளிர் கூட்டம். மரத்தில் எட்டுகின்ற அளவுக்கு உள்ள மலர்களையெல்லாம் கொய்தபின் 
வெகு உயரத்தில் இருக்கும் பூக்களைப் பறிக்க அவர்கள் முயல்கிறார்கள். அச் சமயங்களில் “புலி, புலி” என்று கத்தினால் மரம் 
வளைந்துகொடுக்கும் என்பது அக்காலத்திய மகளிர் நம்பிக்கை. எனவே அப் பெண்கள் அவ்வாறே உரத்த ஒலி எழுப்புகிறார்கள். 
அச் சமயத்தில் அங்கு வில்லுடன் வேட்டையாடத் தேரில் வந்த ஓர் இளைஞன் அச் சத்தத்தைக் கேட்கிறான். ஒலி வந்த திக்கு 
நோக்கி விரைந்து வருகிறான். அங்கே அவன் அந்த மகளிர் கூட்டத்தைக் காண்கிறான். “அந்தப் புலி எத் திசையில் சென்றது?” 
என அம் மகளிரை அவன் வினவுகிறான். விளையாட்டாகக் கூறியதை மெய்யென நம்பி ஒருவன் வந்துவிட்டானே என்ற 
அச்சத்தாலும், அவன் ஓர் அழகிய ஆண்மகனாயிருக்கக் கண்ட நாணத்தாலும், அந்த மகளிர் தங்களுக்குள்ளேயே ஒருவர்பின் 
ஒருவர் ஒளித்துக்கொண்டு, நாணத்துடன் வாய்பேசாமல் நின்றனர். “அழகிய இளமங்கையரின் வாய் பொய்யும் உரைக்குமோ?” 
என்று கூறிய அவன் தன் தேரில் புறப்பட்டான். ஆனால் தன் குதிரைகளை அவன் விரைந்து செலுத்தாமல், திரும்பித் திரும்பித் 
தலைவியையே பார்த்தவண்ணம் சென்று மறைகிறான். மாலையும் வந்தது. அவன் சென்ற திக்கையே நோக்கிக்கொண்டு நின்ற 
தலைவி இவனே ஆண்மகன் என்று கூறுகிறாள். 

	இந்த முதல் சந்திப்பைப் புலவர் தன்-கூற்றாகவோ, தலைவி கூற்றாகவோ கூறவில்லை. தோழியின் கூற்றாகக் 
கூறுகிறார். அதற்கும் ஒரு சூழலைப் புனைகிறார். 

	தலைவனைப் பார்த்து வீடு திரும்பிய தலைவி அவன் நினைவாகவே இருந்து ஏங்குகிறாள். அவளது மாற்றத்தைக் 
கண்ட செவிலித்தாய், தலைவியின் தோழியைச் சந்தித்து, தலைவியின் நோய்க்குக் காரணம் கேட்கிறாள். “நோய்க்குரிய காரணம் 
இன்னதென்று நான் சரியாக அறியேன்” என்று கூறத்தொடங்கிய தோழி, செவிலியிடம் இந்தக் கதையைக் கூறுகிறாள். 
அறிவுமிக்கோர் இதன் காரணத்தை அறிவர் என்றும் சொல்லி முடிப்பதாகப் புலவர் இப் பாடலை இயற்றியுள்ளார். தலைவியின் 
காதலைப் பற்றித் தோழி அவளைச் சார்ந்தவரிடம் பக்குவமாகக் கூறி, தலைவியை அத் தலைவனுக்கு மணமுடித்துவைப்பதே 
நல்லது என்ற தொனியில் தோழி பேசுவதை அறத்தொடு நிற்றல் என்கின்றன சங்க இலக்கியங்கள். களவுக்காதல் கற்புக்காதலாய் 
மாறுவதுதானே அறம். இந்த அறத்துக்குத் துணைபோதலே அறத்தொடு நிற்றல்.

அடிநேர் உரை

	அன்னையே வணக்கம், நான் கூறுவதைக் கேட்குமாறு வேண்டுகிறேன். ‘உனது மகள்
	பாலையும் பருகாள், துன்பம் கொண்டு
	மிகவும் மெலிவடைந்துள்ளாள்’ என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை
	நானும் தெளிவாக அறியேன், முன்பொருநாள்
5	நிறைந்த பூக்களையுடைய மலைச்சாரலில் என் தோழிமாருடன்
	தழைத்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் பூக்களைக் கொய்யச் சென்றபோது
	‘புலி, புலி’ என்று நாங்கள் கூச்சலிட,
	ஒளி பொருந்திய செங்கழுநீரின் கண்போன்ற அழகிய இதழ்களை
	ஊசியினால் கோத்துத் தைத்துக் கட்டிய மாலையை அணிந்தவன்,
10	தலையின் ஒரு பக்கத்தே சேர்த்துச் செருகிய வெட்சிப்பூவாலாகிய தலைமாலை அணிந்தவன்,
	இளமை தங்கும் மார்பினில் சிவந்த சந்தனத்தைப் பூசி,
	வரிந்து கட்டிய வில்லையுடையவன், ஒரு நல்ல அம்பைக் கையினில் கொண்டு,
	‘அந்தப் புலி சென்ற வழி எது?’ என்று
	வினவி நின்றான்; அவனைக் கண்டு
15	எமக்குள்ளே ஒருவரையொருவர் மறைத்துக்கொண்டு
	நாணி நின்றோம், அதனால், ‘அக்கறையுடன்
	ஐந்துவகையாக வகுத்த கூந்தலையும், அழகிய நெற்றியையும்,
	கரிய நெய்தடவிய கொண்டையினையும் உடைய இளமங்கையரே! உமது வாயில்
	பொய்யும் உண்டோ?’ என்றனன், (பின்னர்) மெதுவாகச் செல்லுமாறு
20	தன் தேரின் குதிரைகளின் வேகத்தைத் தடுத்தவன், எதிர்நோக்கலாக
	நின் மகளின் மையுண்ட கண்களைப் பலமுறை நோக்கிச்
	சென்றான், அந்தக் குன்றுக்கு உரியவன்;
	பகல் முடிந்த அந்தியில் மலையில் ஞாயிறு மறையும் நேரத்தில்
	அவன் சென்று மறைந்த திசையை நோக்கியவாறே, ‘இவனே
25	ஆண்மகன், தோழியே’ என்றாள் உன் மகள்;
	அது எத்தகையது என்று அறிவு மிக்கோர் அறிந்துகொள்வார்’.

பாடல் விளக்கம்

	காட்டுவேங்கை மிக உயரமான மரம். ஓரளவுக்குத் தாழ்ந்திருக்கும் கிளைகளில் பூத்திருக்கும் மலர்களைக் கொய்த 
பின்னர், மங்கையர் “புலி, புலி” என்று கூவினால் உயரத்தில் இருக்கும் கிளைகள் வளைந்துகொடுக்கும் என்பது அன்றைய 
நம்பிக்கை. பொதுவாகப் பூவுடன் இருக்கும் வேங்கைமரத்தைப் புலியின் தோற்றத்துடன் ஒப்பிட்டுப்பேசுவார்கள். 

			

	ஒண் செங்கழுநீர் கண்போல் ஆயிதழ் ஊசி போகிய சூழ்செய் மாலையன் என்பதற்கு, கண் போன்ற ஒளி பொருந்திய 
அழகிய செங்கழுநீர்ப் பூக்களை ஊசியால் கோத்துச் சுற்றிக்கட்டிய மாலையன் என்று பொருள் கொள்வதுண்டு. ஆனால் இங்கே 
ஒளி பொருந்திய செங்கழுநீர்ப் பூவின் கண் போன்ற அழகிய இதழ்களை, ஊசியால் கோத்துச் சுற்றிக்கட்டிய மாலை என்று 
பொருள்கொள்ளப்பட்டுள்ளது. குவளை மலர்களையே மாலையாக அமைத்தால் அது சிறப்பாக அமையாது. மேலும் அவற்றை 
ஊசியினால் குத்திக் கோக்கவேண்டிய அவசியம் இல்லை. நாரினாலேயே கட்டிச் சேர்த்துவிடலாம். அதன் அழகிய இதழ்களை 
ஒவ்வொன்றாக எடுத்து அவற்றை ஊசியினால் குத்திச் சேர்த்துக் கட்டிய மாலை என்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. 
மேலும் ஊசி என்பதைக் குவளைமலரின் நடுவில் இருக்கும் கூம்பிய பகுதி என்றும் அந்த ஊசி போன்ற கூம்பிய பகுதிய 
நீக்கிவிட்டு மலர்களால் மாலை செய்யப்பட்டது என்றும் கொள்வாருண்டு.

				

	குயம் மண்டு ஆகம் என்பதில் பெரிய விவாதமே நடைபெற்றது. குயம் என்பது மகளிர் முலையைக் குறிக்கும். 
எனவே குயம் மண்டு ஆகம் என்பது மகளிர் முலைகள் பாய்தற்குரிய மார்பு எனப் பொருள்கொள்வார் பெருமழைப் புலவர். 
மகளிர் முலைகளைப் பாய்தற்குரிய மார்பு எனப் பொருள்கொள்வார் சிலர். இரண்டுமே சரியல்ல என்பார் சிலர். ஆண்மகனின் 
இருபால் மார்பகப் புடைப்பு என்பார் செங்கை பொதுவன் 
(ref: http://vaiyan.blogspot.com/2014/11/blog-post_91.html நன்றி.தேமொழி-மின்தமிழ்). 

	எனினும் பெண்களின் மார்பு என்பதற்குப் பதில் ஆண்களின் மார்பு எனக் கொள்கிறது இது. ஆகம் என்பதுவும் 
மார்புதானே. எனவே குயம் மண்டு ஆகம் எனக் கூறல் எப்படி? குயம் என்பதற்கு இளமை, Youth, Juvenility எனத் திவாகரம் 
கூறுவதாகப் பேரகராதி கூறுகிறது. 

				

	இதுவே இங்கு பொருந்தும் எனத் தோன்றுகிறது. இளமை ததும்பும் மார்பு என்பதுவே இதற்குச் சரியான பொருள் எனத் 
தோன்றுகிறது. ஒருவகையில் பூங்குன்றன் அவர்களின் கருத்துடனும் ஒத்தது இது. கடினமான உடற்பயிற்சி செய்து உடம்பைக் 
‘கிண்’-ணென வைத்திருக்கும் இளைஞனின் மார்பே குயம் மண்டு ஆகம். 

பாடல் நயம்

	பாலும் உண்ணாமல், பழங்கண் கொண்டு தலைவி நனி பசந்த நிலைக்குக் காரணம் தெற்றென உணரேன் என்று முதலில் 
சொன்ன தோழி, அதன் காரணத்தை மிகத் தெளிவாக உரைக்கும் திறம்தான் இந்தப்பாடலின் சிறப்பம்சம். மேலும் மிகக் கடின 
நடை இன்றி, எளிதான சொற்களைக் கொண்டு இயல்பாக நிகழ்ச்சிகளை வருணிக்கும் புலவரின் திறம் வியந்துபோற்றற்குரியது. 

	மேலும், திடீரென்று ஓர் ஆடவன், அதிலும் முற்றிலும் புதியவன், நல்ல உடற்கட்டுள்ள இளைஞன், ஒரு இளம்பெண்முன் 
தோன்றும்போது அந்த இளம்பெண் அவனை எவ்வாறெல்லாம் நோட்டமிடுவாள் என்பதை நுண்ணிதின் உணர்ந்தவராய்ப் புலவர் 
வருணிப்பதைப் பாருங்கள். வந்த இளைஞன் முதலில் யாரைப் பார்ப்பான்? அந்த மகளிர் கூட்டத்தில் மிக அழகாக இருக்கும் 
தலைவியைப் பார்த்தே பேசுவான். எனவே கூட இருக்கும் தோழி, அவனைத் துணிச்சலுடன் பார்வையால் அளவிடுகிறாள். 
தோழி தலைவனைப் பற்றி முதலில் கூறும்போது அவனது தேரைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. எனவே, தேரில் வந்துகொண்டிருந்த 
தலைவன், ‘புலி புலி’ என்ற மகளிரின் கூச்சலைக் கேட்டவுடன் தேரை விட்டிறங்கி வேகமாக ஒலி வந்த இடத்தை நோக்கி 
ஓடிவந்திருக்கவேண்டும். அப்போது அவனது மார்பில் செங்கழுநீர்ப் பூவிதழ்களால் ஆன மாலை கிடந்து ஆடிக்கொண்டிருக்கிறது. 
எனவே தோழியின் பார்வை முதலில் அந்த மாலைமீது விழுகிறது (ஒண் செங்கழுநீர்க் கண்போல் ஆயிதழ் ஊசி போகிய சூழ்செய் 
மாலையன்). பின் அவளது பார்வை அவன் தலையின் உச்சிக்கொண்டையில் ஒரு பக்கம் செருகிவைத்திருக்கும் வெட்சிப்பூவை 
நோக்கிச் செல்கிறது(பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்). 

				

	எதிரிலிருப்பவன் ஆடவனாயிருந்தாலும் பார்ப்பவள் பெண்தானே. அவளது கண்கள் அவன் மேனியில் பூ இருக்கும் 
இடங்களையே நாடிச் செல்கிறது. பின்னர் அவனது செஞ்சாந்து தடவிய ஆண்மை மிக்க மார்பழகு அவளைக் கவர்கிறது
(குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி). தலைவன் வேட்டையாட வந்திருக்கிறான். எனவே அவன் கைகளில் வில்லும் அம்பும் தயார் 
நிலையில் இருந்திருக்கின்றன (வரிபுனை வில்லன்). இப்போது ‘புலி புலி’ என்ற சத்தமும் கேட்கிறது. உடனே நாணேற்றிய அம்புடன் 
கூடிய வில்லை உயர்த்திய வண்ணம்(ஒரு கணை தெரிந்துகொண்டு) அவன் ஓடிவருகிறான். வந்தவன் மகளிரைப் பார்க்கிறான். 
அப்படியே சுற்றுமுற்றும் பார்க்கிறான். பின்னர் அவன் என்ன பேசியிருப்பான்? “எங்க அந்தப் புலி?” (யாதோ மற்று! அம் மா திறம் படர்)

	ஓர் இளம்பெண் வீட்டில் தனியே இருக்கிறாள். அவளின் பெற்றோர் வெளியே சென்றிருக்கிறார்கள். அவர்களும் வரும் நேரம். 
வாசல் கதவு தட்டப்படுகிறது. மகிழ்ச்சியுடன் ஓடிக் கதவைத் திறக்கிறாள். வெளியே ஒரு கட்டழகன் நிற்கிறான். அவளின் உடனடி 
மெய்ப்பாடு என்னவாக இருக்கும்? அச்சம், நாணம். அவன் புதியவன் என்பதால் அச்சம். அவன் இளைஞன் என்பதால் நாணம். அவளின் 
உடனடிச் செயல் என்னவாக இருக்கும்? ‘சட்’-டென்று கதவை ஓரளவுக்கு மூடி, அதன்பின் தன்னை மறைத்துக்கொண்டு, மிகவும் 
சிறிதாக எட்டிப்பார்த்து “யார் வேணும்” என்று கேட்பாள். பாடலுக்கு வருவோம். அந்த நட்ட நடுக்காட்டில் மறைவிடம் ஏது? 
எனவேதான் அந்தப் பெண்கள் அச்சத்தால் ஒவ்வொருவரும் அடுத்தவர் உடலுக்குப் பின்னே சென்று தங்களை ஒளித்துக்கொள்ள
முயல்கின்றனர் (எம்முள் எம்முள் மெய்ம்மறைபு ஒடுங்கி). பின்னரே அவர்களை நாணம் மேற்கொள்கிறது(நாணி நின்றனம்). 

				

	இன்றைய காலப் பெண்களாயிருந்தால் ஒருவேளை, “ஐய, நாங்க பொய்யா புலி புலி-ன்னு சொல்லி வெளயாடிக்கிட்டு 
இருந்தோம். நல்லா ஏமாந்தியா?” என்று கேலி பேசியிருந்திருப்பர். அது சங்ககாலம். எனவே தங்கள் கேலிப்பேச்சால் விளைந்த 
விபரீதத்தை எண்ணி அவர்கள் வாயடைத்துப்போயினர். எம்முள் எம்முள் மெய்ம்மறைபு ஒடுங்கி என்ற அந்த அடுக்குச் சொல்லின் 
அழகும், பொருளின் ஆழமும் வியந்து பாராட்டற்குரியன அல்லவா!

	அவனுக்குக் கோபம் வந்திருக்கலாம். “ஆளப் பாத்தா ஜம்-முனு சீவி முடிச்சுச் சிங்காரிச்சிக்கிட்டு வந்திருக்கீங்க” என்று 
எகத்தாளமாக ஆரம்பிக்கிறான்(பேணி ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல் மை ஈர் ஓதி மடவீர்). அப்போது தலைவியின் அழகு அவனைத் 
தாக்கிக் கிறங்கடிக்கிறது. அவன் போக்கு மாறுகிறது. மிக மெதுவாக அந்த மங்கையர் கூட்டத்தை நெருங்குகிறான். கைகளைப் பின்பக்கம் 
கட்டியவாறு தலைவியின் முகத்தருகே குனிகிறான். “இந்த அழகு ஒதட்ல பொய்யும் வரலாமா?”. (நும் வாய்ப் பொய்யும் உளவோ?) 
அந்த நொடியில்தான் அந்தக் காதல் கனிந்திருக்கவேண்டும்! இயற்கை செய்யும் இராசயன மாற்றம்! இந்த மாற்றம் நடந்ததை நமக்கு 
அடுத்த அடிகளில் உறுதிப்படுத்துகிறார் புலவர். இங்கு நமக்கு வேலை இல்லை என்று தலைவன் தன் தேருக்குத் திரும்புகிறான். தேரில் 
ஏறும் அவன் குதிரைகளின் கடிவாளங்களைக் கையில் பிடித்து உயரத்தூக்கி வேகமாகக் கீழே இறக்கி ஏற்றுவான். “போ” என்பதற்கான 
சைகை அது. உடனே குதிரைகள் பாய்ச்சலெடுக்கும். ஆனால் நடந்தது என்ன? தலைவியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவண்ணம் சென்ற
தலைவன் மெதுவாகத் தேரில் ஏறுகிறான். கடிவாளத்தைப் பிடிக்கிறான். ஆனால் சைகை கொடுக்கவில்லை. தலைவியையே 
பார்த்துக்கொண்டிருக்கிறான். குதிரைகளுக்குப் பொறுமை இல்லை. சைகை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று அவை வழக்கம்போல் 
வேகமெடுக்கின்றன. அவன் விடவில்லை. கடிவாளத்தை இழுத்துப் பிடிக்கிறான். குதிரைகளின் வேகத்தைத் தவிர்க்கிறான்
(பையெனப் பரி முடுகு தவிர்த்த தேரன்). வண்டியைப் பையச் செலுத்துகிறான். மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தவண்ணம் அவன் 
நின்றுகொண்டிருக்க தேர் சென்று மறைகிறது(எதிர்மறுத்து நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச் சென்றோன்). என்ன அருமையாகத் 
தலைவனின் இதயத்தில் காதல் பூத்த கதையைக் கட்டவிழ்க்கிறார் புலவர் பாருங்கள்!

				

	பித்துப்பிடித்தவள் போல் தலைவி நின்றுகொண்டிருக்கிறாள். அவன் சென்ற பாதையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். 
கண்ணுக்கெட்டியவரை அவனைக் கண்ணாலேயே பின்தொடர்கிறாள். காட்சி மறைந்துவிட மூச்சு பெரிது விடுகிறாள். 
“ஆம்பள-ன்னா இவந்தான்’டி” (மற்று இவன் மகனே தோழி) என்கிறாள். பொதுவாகக் காதல்வயப்பட்ட ஒரு பெண் தன் மனத்துக்குள் வியந்து 
சொல்லிக்கொள்ளும் மொழிகள் இவை. பக்கத்தில் இருப்பவள் உயிர்த்தோழி அல்லவா! எனவே அவளையும் அறியாமல் இதனைத் தன் 
தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள். 

	பொதுவாக அகப்பாடல்கள் தலைவன், தலைவி, தோழி, தாய், பாணன் போன்றவருள் யாரேனும் ஒருவரின் கூற்றாகவே அமையும். 
பல கலித்தொகைப் பாடல்கள் மட்டும் பலர் கூற்றாக ஒரு நாடகப் பாங்கில் அமையும். ஆனால் இந்த அகநானூற்றுப் பாடல் ஒருவர் கூற்றாக 
அமைந்தாலும், செவிலி, தலைவன், தலைவி ஆகியோரின் கூற்றுகளை உள்ளடக்கிய தோழியின் கூற்றாக அமைந்திருப்பதால், இதில் ஒரு 
நாடகப்பாங்கு உள்ளடங்கி இருப்பதைக் காணலாம். அத்துடன் செவிலியின் கேள்விக்குப் பதிலிறுக்கும்வண்ணம் தோழி தலைவியின் 
காதல்கதையைக் கூறுவது போல் அமைந்திருப்பதால் இதில் ஒரு சிறுகதையின் அமைப்பு இருப்பதையும் காணலாம். இது குறிஞ்சித்திணைப் 
பாடலாக இருந்தாலும் குதித்தோடும் அருவியின் நடை இதில் இல்லை. மாறாக, தண்பணைகளைத் தழுவியோடும் ஒரு பேராற்றின் பெருமித 
நடை இதில் காணப்படுவதைக் காணலாம். மொத்தத்தில் வேங்கை மலர்களின் அழகையும், முல்லை மலர்களின் மணத்தையும், 
குவளைப்பூக்களின் தண்மையையும் கொண்ட அருமையான ஒரு பாடலைத் தந்ததற்குத் தங்கால் முடக்கொற்றனாருக்கு நாம் நன்றிசொல்லக் 
கடமைப்பட்டுள்ளோம்.