அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 47

பாடல் 47. பாலைத் திணை  பாடியவர் - ஆலம்பேரிச் சாத்தனார்

துறை - தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது

 மரபு மூலம் - எழு இனி வாழிய நெஞ்சே

	அழிவி லுள்ளம் வழிவழிச் சிறப்ப
	வினையிவண் முடித்தன மாயின் வல்விரைந்
	தெழுவினி வாழிய நெஞ்சே ஒலிதலை
	யலங்குகழை நரலத் தாக்கி விலங்கெழுந்து
5	கடுவளி யுருத்திய கொடிவிடு கூரெரி	
	விடர்முகை யடுக்கம் பாய்தலி னுடனியைந்
	தமைக்கண் விடுநொடி கணக்கலை யகற்றும்
	வெம்முனை யருஞ்சுர நீந்திக் கைம்மிக்
	ககன்சுடர் கல்சேர்பு மறைய மனைவயி
10	னொண்டொடி மகளிர் வெண்டிரிக் கொளாஅலின்
	குறுநடைப் புறவின் செங்காற் சேவல்
	நெடுநிலை வியனகர் வீழ்துணைப் பயிரும்
	புலம்பொடு வந்த புன்கண் மாலை
	யாண்டுளர் கொல்லெனக் கலிழ்வோ ளெய்தி
15	யிழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன்
	மழைவிளை யாடும் வளங்கெழு சிறுமலைச்
	சிலம்பிற் கூதளங் கமழும் வெற்பின்
	வேய்புரை பணைத்தோள் பாயும்
	நோயசா வீட முயங்குகம் பலவே


 சொற்பிரிப்பு மூலம்

	அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
	வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து
	எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
	அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
5	கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி			
	விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
	அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
	வெம் முனை அரும் சுரம் நீந்திக் கைம்மிக்கு
	அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனை_வயின்
10	ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,		
	குறு நடைப் புறவின் செம் கால் சேவல்
	நெடு நிலை வியன் நகர் வீழ் துணைப் பயிரும்
	புலம்பொடு வந்த புன்கண் மாலை,
	“யாண்டு உளர்-கொல்” எனக் கலிழ்வோள் எய்தி
15	இழை அணி நெடும் தேர்க் கைவண் செழியன்		
	மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
	சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்
	வேய் புரை பணைத் தோள் பாயும்
	நோய் அசா வீட முயங்குகம் பலவே.

அருஞ்சொற் பொருள்:

ஒலி = தழைத்த; கழை = முள்ளுள்ள மூங்கில், Bambusa blumeana, Spiny Bamboo or Thorny Bamboo; 
நரலுதல் = (கொக்கு, நாரை போல்)கரகரத்த ஒலி; விலங்கு = குறுக்காக; கடு வளி = சூறாவளி; உருத்திய = வெப்பமுறச் செய்த; 
கொடி = பக்கவாட்டு; கூர் எரி = கொழுந்துவிட்டெரியும் நெருப்பு; விடர் = பிளவு; முகை=முழைஞ்சு, குகை; அடுக்கம் = மலைச் சரிவு; 
அமை = கெட்டி மூங்கில்; கண் = கணு; நொடி = வெடிப்பு; கணக் கலை = கலைமான்கள் கூட்டம்; வீழ் துணை = விரும்பும் துணை; 
பயிரும் = கூவி அழைக்கும். புன்கண் = துயரம்; கலிழ்வோள் = கலங்குவோள்; வேய் = பருத்த மூங்கில்; அசா வீட = வருத்தம் நீங்க.

பாடலின் பின்புலமும் பாடல் சுருக்கமும்

	தலைவன் பொருள்மேற் சென்றுள்ளான். கடத்தற்கரிய அரும் சுரம் கடந்து வினையின்கண் மூழ்கியுள்ளான். திடீரென 
நெஞ்சு மறுகி நிற்கின்றது. உடனே வீடு திரும்பவேண்டும் என்று அடம்பிடிக்கின்றது. வந்த வேலையை முடித்து மனநிறைவுடன் 
வீடு திரும்பித் தலைவியை முயங்கி மகிழலாம் என்று நெஞ்சினை ஆற்றுப்படுத்தித் தலைவன் கூறும் கூற்றாய் அமைகிறது 
இப் பாடல்.

அடிநேர் உரை

	கொண்ட உறுதியினின்றும் பிறழ்வுபடாத உள்ளம் பன்னெடுங்காலம் சிறந்து விளங்க,
	இவ்விடத்தில் வந்த வேலையை முடித்தோமென்றால், மிகவும் விரைவாக
	எழுவாயாக, நெஞ்சே நீ வாழ்வாயாக; தழைத்த உச்சியினையுடைய
	ஆடுகின்ற மூங்கிலை ஒலி எழுமாறு தாக்கி, குறுக்காக எழுந்து
5	சூறாவளி வெப்பமுறச் செய்த, பக்கங்களில் நீண்டும், கூரான கொழுந்துவிட்டும் எரியும் நெருப்பு
	பிளவுகளும் குகைகளும் கொண்ட மலைச் சரிவில் பரந்து விரிதலால், அதனுடன் சேர்ந்து,
	மூங்கில் கணுக்கள் வெடித்தலால் எழும் ஒலி மான் கூட்டத்தை விரட்டும்
	கொடும் போர்முனையைப் போன்ற அரிய பாதையைக் கடந்து, அளவுகடந்து,
	பெரிய ஞாயிறு மலையைச் சேர்ந்து மறைய, வீட்டில்
10	ஒளிரும் வளையணிந்த பெண்கள் வெள்ளிய திரிகளைக் கொளுத்த,
	சிறுநடை போடும் புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா
	உயர்ந்த மாடங்களை உடைய பெரிய மனையில் உள்ள தான் விரும்பும் பெடையை அழைக்கும்
	தனிமைத் துயருடன் வந்த துன்பத்தைத் தரும் மாலைவேளையில்,
	“எங்கு இருக்கின்றாரோ” என நினைத்துக் கலங்கியிருக்கும் தலைவியை அடைந்து,
15	இழைகள் அணியப்பெற்ற நெடிய தேரினைக்கொண்ட வள்ளல்தன்மை நிறைந்த செழியனின்
	முகில்கள் தவழும் வளம் மிக்க சிறுமலை என்னும் மலையின்
	சாரல்களில் கூதளம் கமழும் மலையின்
	மூங்கிலைப் போன்ற பருத்த தோளில் பரவியுள்ள
	பசலை நோயின் வருத்தம் நீங்கப் பலமுறையும் முயங்குவோம்.

பாடல் விளக்கம்

	ஊர்திரும்ப நோங்கிநிற்கும் நெஞ்சினைப் பார்த்து தலைவன் கூறுகிறான் :- 

	“சுழற்றியடிக்கும் சூறைக்காற்றால் மூங்கிற்காடுகள் தீப்பிடித்து எரிந்தாலும் நாம் அவற்றைக் கடந்து செல்வோம். 
ஊரில் மாலையில் மகளிர் விளக்கேற்றும் நேரத்தில் போய்ச் சேரலாம். நம் வீட்டு முற்றத்தில் இரைதேடி நடைபோடும் புறாகூட 
அண்டை வீட்டு மாடப்புறாவைக் கூவியழைக்கும் அந்த மாலை வேளையில், ‘எங்கே இருக்கிறாரோ, என்ன செய்கிறாரோ’ என்று 
நம்மைப் பற்றி எண்ணிக் கலங்கிக்கொண்டிருப்பாள் நம் தலைவி. அவளை அப்படியே அள்ளிக்கொண்டு கட்டிக்கொள்ளலாம். கொண்ட 
கொள்கையினின்றும் வழுவாமல் பணியாற்றிய உறுதிகொண்ட நம் உள்ளத்தை நம் பரம்பரையே வாழ்த்தும். நெஞ்சே! நீ விரைவில் 
எழுந்து பணியினை மேற்கொள்வாயாக”.

பாடலின் தனிச் சிறப்பு

	ஆயிரக்கணக்கான பாடல்களினின்றும் நானூறு பாடல்களை மட்டும் தெரிந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில், ஒரு பாடல் 
முதல் 50 பாடல்களுக்குள் தேர்வுசெய்யப்பட்டிருக்குமேயானால் அப் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கத்தான் வேண்டுமன்றோ!

	அப்படி என்ன தனிச் சிறப்பு இருக்கிறது இந்தப் பாடலில்?

	சோம்பிக் கிடக்காதே! இடக்கு-மடக்கு பண்ணாதே! வந்த வேலையை முதலில் முடி. அப்புறம் மற்றதைப் பார்ப்போம் என்று 
தனக்குத்தானே ஒருவன் சொல்கிற பாடல் இது. அந்த மற்றது என்ன என்பதைச் சுவைபடச் சொல்ல முனைகிறது பாடல். ஆனால் 
இப் பாடல் பாலைத்திணையைச் சேர்ந்தது என இனம்பிரிக்கப்பட்டுள்ளது. 

	நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
	முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே – அகத்திணையியல் - 9

	என்பது தொல்காப்பியம். 

	இங்கே சுட்டுப்பொசுக்கும் உச்சி வெயில் இல்லை. சுடர் மதி மயக்கும் வேனில் இல்லை. உலர்ந்து கிடக்கும் ஓமை இல்லை. 
உயரப் பறக்கும் கழுகுகள் இல்லை. கத்துகின்ற ஓநாய் இல்லை. கடுவில் ஏந்திய எயினர் இல்லை. பாழ்நிலம் இல்லை. பருந்து இல்லை. 
சரி, இல்லாதவை போகட்டும். இருக்கிறது என்ன?

	உச்சியில் தழைத்த பச்சை மூங்கில் – ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளுத்தல் – குறுநடைப் புறா – குன்றுகளில் 
கணக்கலை – மழை விளையாடும் வளங்கெழு சிறுமலை – அதன் சாரல்களில் மணக்கும் கூதளம் – பணைத்து வளர்ந்த வேய் – பகல் 
முடிந்த மாலை - இத்தனை வளப்பமும் இது பாலைத்திணை என்றால் அது எப்படி?

	ஓர் அகப்பாடலுக்கு முதற்பொருளான நிலமும் பொழுதும் உரமூட்டுகின்றன. கருப்பொருளான விலங்கு, மரம், பறவை 
போன்றவை உயிர்ப்பூட்டுகின்றன. சொல்லவந்த உரிப்பொருளுக்கு இவை உரித்தானவையாய் அமைய, அந்தப் பாடல் இறப்பை 
வெல்லுகிறது. ஆனால் இங்கே அத்தனையும் மாறிக்கிடக்கின்றனவே! 

	அதுதான் இந்தப் பாடலின் தனிச் சிறப்பு எனலாம். 

	ஒலிதழை அலங்கு கழை நரலத் தாக்கப்படுகிறது - தலைவியின் பணைத்தோளில் பாய்ந்த பசலை நோயால் தாக்கப்பட்ட 
தலைவனின் உரம்பெற்ற நெஞ்சம் போல. 

	விலங்கெழுந்து கடுவளி உருத்துகிறது – கலக்கம் கொண்ட நெஞ்சத்தின் காமத்தீ போல. 

	கூர் எரி விடர் முகை அடுக்கமெல்லாம் பாய்கிறது – வேதனைத்தீ எலும்பு சதையெல்லாம் பாய்ந்து இளக்குவது போல. 

	உடன் இயைந்து அமைக்கண் நொடிவிடுகிறது – வேதனைத்தீயுடன் சேர்ந்து விரகத்தீயும் எழுந்து நரம்புகளை முறுக்கித் 
தெறிக்கவைப்பது போல. 

	அந்த அமைக்கண் விடும்நொடி கணக்கலை அகற்றுகிறது – முறுக்கேறிய நரம்புகளால் தெறித்து வந்த சபலஒலி அந்த 
கொள்கைக் குன்றை குலைத்துச் சிதறடிப்பதைப் போல.

	குளிர்ந்த மூங்கில் காடுகள் சூழ்ந்த நிழலூறும் நெடுஞ்சுரம் வெம்முனை அருஞ்சுரமாய் மாறுகிறது – பொற்காசை 
அள்ளித்தரும் புலம்பெயர்ந்த வேலை முடியாமல் நீண்டு முழுநரகாய் மாறியது போல.

	குறுநடைப் புறா வீழ்துணைப் பயிருகிறது – களிறுநடைத் தலைவன் தன் கண்மணியை நினைத்து ஏங்குவது போல.

	அவளை நினைத்தவுடன் அவளின் வேய் புரை பணைத் தோள்கள் கண்முன் தோன்றுகின்றன. அத் தோள்களில் புரளும் 
துவர்முடித்த கூந்தலின் மணம் சிறுமலைச் சிலம்பில் கமழும் கூதளத்தின் விரையாய் அவன் நாசியை நிறைக்கின்றது. 

	தலைவிக்குத் தோளில் பரந்துள்ளது நோய் – இவனுக்கோ தூக்கத்தைக் கெடுக்கிறது பிரிவு. 

	தோள்களில் பாய்ந்த நோய் அசா வீட இவன் முயங்கும்போது, வினை முடித்துவந்த அழிவில் உள்ளம் வழிவழிச் 
சிறக்குமன்றோ!

	பிரிவுத் துயரை இதைவிட நுணுக்கமாக இன்னொருவரால் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. 

	வெயிலில் நடக்கும்போது வியர்வை வருவதில் வியப்பில்லை. குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்து ஒரு கொலையைப் 
பற்றிய துப்பறியும் குறுநாவலைப் படிக்கும்போது உங்களுக்கு வியர்த்துக் கொட்டினால்? அது அந்த ஆசிரியரின் கதைசொல்லும் 
பாணிக்குக் கிடைத்த வெற்றி. அப்படித்தான் இந்த ஆசிரியர் ஆலம்பேரிச் சாத்தனார் வெற்றியடைந்திருக்கிறார். பாலை நிலத்துக்குரிய 
முதல், கரு ஆகிய இரண்டு பொருள்களையும் பயன்படுத்தாமல், குறிஞ்சி வளப்பத்தையும், முல்லைச் செழிப்பையும் காட்டிப் 
பாலையின் இரங்கலில் உங்களைப் பதறவைத்திருக்கிறார் இல்லையா! அதுதான் இந்தப் பாடலின் தனிச் சிறப்பு.

	இந்தப் பாடலுக்கு இன்னுமொரு தனிச் சிறப்பு உண்டு. அது என்ன?

	ஒருவேளை அவன் வேதனை பொறுக்காமல், அதனால் வினையை முடிக்காமல் திரும்பி வந்து முயங்கியிருந்தால் 
தலைவியின் நோய் வருத்தம் நீங்கியிருக்கக் கூடும். அவனது முறுக்கேறிய உடலும் முறுக்குத் தளர்ந்து அமைதியடைந்திருக்கக்கூடும். 
ஆனால் அவனது உள்ளம்? பொருள் சேர்க்கவேண்டும் என்று உறுதியுடன் புறப்பட்டுச் சென்ற அவனது உள்ளம் அழிந்துபோயிருக்கும் – 
தோற்றுப்போயிருக்கும். வழிவழியாய் வரும் பிள்ளைகள், பெயரர்கள் நகையாடியிருப்பர் – வினைமுடிக்க இயலாத வெற்றுப்பயல் என்று. 
ஊக்கத்துடன் முனைந்து வினைமுடித்துத் திரும்பினால் அந்த அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறக்காதா?

	பாடலின் முதல் அடி பொருள்பொதிந்ததாய் இருக்கிறது. அதைப் பெரும்பாலோர் உற்றுக்கவனியாமல் சென்றுவிடுவர். 
ஒரு விழா அரங்கின் வாசலில் இருப்பதை நிறையப்பேர் கவனிப்பதில்லை. அவசரம் அவசரமாய் உள்ளே சென்று ஆர அமர உட்கார்ந்து 
நிகழ்ச்சிகளின் இனிமையை நுகர்வர். இனிமையைச் சுவைப்பது நல்லதுதான். அதனை எப்படிச் சுவைப்பது என்பதுவும் முக்கியம் அன்றோ. 
அதைத்தான் வலியுறுத்துகிறது இப் பாடல். 

	அடைவது முக்கியமல்ல – எப்படி அடைகிறோம் என்பதுவே முக்கியம்.

	It is not the end but it is the means that is important.

பாடல் நயம்

	காட்டுத்தீயைக் காட்டுகிற புலவர் அதை மிக நுணுக்கமாக விவரித்திருக்கிறார். வேண்டுமென்றே அவர் பச்சை மூங்கிலைத் 
தேர்ந்தெடுக்கிறார். ஒலி தழை அலங்கு கழை என்கிறார். ஒலித்தல் என்பது செழித்தல், தழைத்தல் என்ற பொருள்தரும். பெண்களின் 
செழுமையான கூந்தலை ஒலி மென் கூந்தல் என்பர். காற்று கடுவளியாய் அடிக்கும்போது மூங்கில் வேரோடு சாய்ந்து ஆடும். அதிலும் 
உச்சியில் தழைத்த இலைகள் நிரம்பியிருக்க ஆட்டம் பலமாகவே இருக்கும். அப்போது மூங்கில் கழைகள் ஒன்றோடொன்று 
உரசிக்கொள்ளுமல்லவா? ‘நர நர’-வென்று அவை எழுப்பும் ஒலியே நரலும் ஒலி. மூங்கில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக 
இருந்தால் அவற்றின் ஊடே காற்று புகுந்து சென்றுவிடும். மூங்கில் புதர்கள் வெகு நெருக்கமாக வளர்ந்திருப்பதால் அவற்றின் ஊடே 
புகுந்து செல்ல முடியாத காற்று குறுக்காக மேலெழுகிறது. இதையே புலவர் விலங்கெழுந்து என்கிறார். விலங்குதல் என்பது குறுக்கிடுதல்.
மூங்கில் கழைகளின் உராய்வினால் தீப்பொறி கிளம்பிக் கீழே உதிர்கிறது. விலங்கு எழுந்து வீசும் கடுங்காற்றால், கீழே காய்ந்து கிடக்கும் 
சருகுகளில் தீப்பொறி ‘குப்’-பென்று பிடித்துக்கொள்கிறது. அப்படியே ‘மள மள’-வென்று தீ நெடுகப் பரவுகிறது. இதனையே புலவர் 
கொடிவிடு கூர் எரி என்கிறார். 

					

	முற்காலத்தில் வீடுகளில் மண் அடுப்பு இருக்கும். சமையலறைகளில் இரட்டை அடுப்பு பதித்திருப்பர். ஒரு பெரிய அடுப்பும், 
அதனை ஒட்டி ஒரு சிறிய அடுப்பும் இருக்கும். பக்கத்து அடுப்பு கொடி அடுப்பு என்னப்படும். காட்டில் எங்கும் சருகுகள் விழுந்துகிடப்பதால், 
ஓரிடத்தில் பற்றிக்கொண்ட தீ பக்கவாட்டில் நெடுகப் பரவும். இவ்வாறு பரந்து செல்லும் தீ சில இடங்களில் உயரமாகக் கொழுந்துவிட்டு 
எரியும். இதனையே புலவர் கொடிவிடு கூர் எரி என்கிறார்.

			

	காட்டுத்தீயினின்றும் பாதுகாத்துக்கொள்ள எங்கேயாவது தீ பரவமுடியாத இடத்துக்குச் சென்று ஒளிந்துகொள்ளவேண்டும். 
பெரிய வெடிப்புகளோ (விடர்), ஆழமான பொந்துகளோ (முகை) இருந்தால் அங்குச் செல்லலாம். ஆனால், காற்றால் பறந்த சருகுகள் 
எங்கெங்கும் பரவியிருப்பதால் எல்லா இடங்களிலும் தீ பற்றிக்கொள்கிறது. வேறுவழியாக மலையைவிட்டு இறங்கி ஓடவேண்டியதுதான். 
நல்ல வேளை, இது மலைச் சாரல் – அடுக்கம். ‘சரசர’-வென்று இறங்கி ஓடிவிடலாம். இருந்தாலும் தீ விரட்டிக்கொண்டு வேகமாக 
வரும். அதே நேரத்தில் பற்றிக்கொண்ட மூங்கில்களின் கணுக்கள் ‘படார் படார்’-என்று வெடிக்கின்றன. தூரத்தில் எரியும் நெருப்பைப் 
பார்த்த ஒரு மான்கூட்டம் முதலில் நின்று வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது. வேகமாக நெருங்கிவரும் தீயைக் கண்ட மான்கள் 
வெருள்கின்றன. பின்னர் வெடிச் சத்தத்தைக் கேட்டவுடன் தலைதெறிக்கப் பாய்ந்தோடுகின்றன. இதுவரை குளிர்ந்த சோலையாக இருந்த 
மலைக்காடு கொடிய போர்க்களமாய் மாறுகிறது என்கிறார் புலவர். 

			

	பாடலின் அடிகளைப் புலவர் படைத்திருக்கும் முறையிலேயே ஒரு நாடகப் பாங்கு தெற்றெனத் தெரிகிறது. 

	‘அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப’ என்ற முதல் தொடரின் சிறப்பை முன்பு பார்த்தோம்.

	‘வினை இவண் முடித்தனம் ஆயின்’ என்ற இரண்டாம் அடியின் பகுதி ‘நோய் அசாவீட முயங்குகம் பலவே’ என்ற இறுதி 
அடியுடன் இயைகிறது. எனவே இதைத் தூக்கி அங்குவைத்துப் பொருள்கொள்ள வேண்டியுள்ளது. இது ஏன்?

	இறுதி அடியாக வந்திருக்கவேண்டிய பகுதி, ‘வல்விரைந்து எழு இனி, வாழிய நெஞ்சே’ என்பது. இதுதான் இந்தப் பாடலின் 
பொருள் தொகுப்பு முடிவு.

	முற்காலத்தில் பாட்டிமார் கதை சொல்ல எப்படித் தொடங்குவார்கள்? ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்’ அல்லது 
‘ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சாம்’ என்றோதான். ஆனால் இப்போது புதிதாய்க் கதை எழுதுகிறவர்கள்கூட, தம் கதையின் ஏதோ 
ஒரு நிகழ்ச்சியின் நடுவே கதை சொல்லத் தொடங்குகிறார்கள். பின்னர் அதை எப்படி நடத்திச் செல்கிறார்கள், அவ் வழியில் கதையின் 
பின்புலத்தையும், கதை மாந்தரையும் எவ்வாறு படிப்போருக்குப் புரியவைக்கிறார்கள் என்பதில்தான் கதையின் வெற்றி அமைகிறது. 
அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப – முதலில் ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் யோசித்தோமானால் உள்ளத்தை உறுதி இழக்கச் 
செய்யக்கூடிய ஏதோ ஒன்று நிகழ்வதைத் தடுக்கும் முயற்சி இது என யூகிக்கலாம். அல்லது அடுத்த அடிக்குச் செல்லலாம்.

	வினை இவண் முடித்தோமாயின் – புரிந்துவிட்டது. ஏதோ பணி நடந்துகொண்டிருக்கிறது. அதை முடிக்காமலிருக்க யாரோ 
தடுக்கிறார்கள். தடுப்பதை மறுத்து யாரோ பேசுகிறார்கள்.

	வல் விரைந்து எழு இனி வாழிய நெஞ்சே – நன்கு தெளிவாகிவிட்டது. வினையை முடிக்கவிடாமல் தடுப்பது நெஞ்சம். 
மறுத்துக்கூறுவது நெஞ்சத்துக்கு உரிய ஆள். 

	‘முடித்தோமாயின்’ என்று சொல்வதால், முடித்தபின் விளையக் கூடிய நன்மைகள் தொடர்ந்து கூறப்படும் என 
எதிர்பார்க்கிறோம். 

	வெம்முனை அருஞ்சுரம் நீந்தி –
	கைம்மிகக் கலிழ்வோள் எய்தி –
	முயங்குகம் பலவே. 

	அவ்வளவுதான். இவற்றுக்கு இடைப்பட்ட அடிகள் கதைக்காக அல்ல – கதையின் அழகுக்காக – புலவரின் மொழிநயத்துக்காக.

	இருப்பினும் நெஞ்சம் ஒரு கேள்வி கேட்கலாம். வினையை முடிக்காமல் சென்றாலும் அவளை முயங்கலாமே என்று.

	அதை எதிர்நோக்கியே அழிவில் நெஞ்சம் வழிவழிச் சிறப்ப என்று தன் கூற்றைத் தொடங்குகிறான் தலைவன். 

	எனவே பாடலின் முக்கிய நிகழ்வு நெஞ்சம் மறுகிநிற்பது. அங்கிருந்து தன் பாடலைத் தொடங்குகிறார் புலவர். 

பாடலோடு இயைந்த இடங்கள்

	பாடல் நிகழ்விடம் எது? இடைச்சுரம் என்கிறது பாடல் குறிப்பு. இதற்கு நடுவழி என்று பொருள். தலைவன் பொருளீட்டச் செல்லும் 
வழியில் நடுவிலேயே நெஞ்சம் மறுகிநிற்கின்றதா? இல்லை. வினை இவண் முடித்தோமாயின் என்ற தொடரில் இவண் என்பது தலைவன் 
நிற்கின்ற இடம்தானே! எனவே பாடல் நிகழ்கின்ற இடம் வினை நடக்கும் இடம் – தலைவனின் பணியிடம். இடைச் சுரம் என்பதை பாதை 
எனக்கொள்ளாமல், பணி என்று கொள்ளவேண்டும். அந்தப் பணிக்காலத்தின் இடைவழியில் மறுகும் நெஞ்சுக்குத் தலைவன் சொல்லியது 
என்பதுவே சரியான பொருள்.

	பணியை முடித்துத் திரும்பும்போது, தலைவன் மூங்கிற்காடுகள் நிறைந்த அடுக்கத்தில் ஏறி இறங்குகிறான். எனவே அந்தப் 
பாதையில்தான் அவன் முன்பு பணிக்குச் சென்றிருக்கிறான். தலைவன் வினைமேற் செல்லும்போது வறண்ட பாலைநிலத்தைக் கடந்து 
சென்றால், அவன் தமிழ்நாட்டுக்கு வடக்கே இருக்கும் வேங்கடமலையைக் கடந்து சென்றிருக்கிறான் என்று பொருள். ஆனால் இங்கு தலைவன் 
செழித்துவளர்ந்த மூங்கில்காடுகளின் நடுவே சென்றிருக்கிறான். இது மேற்குமலைத் தொடரைக் குறிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையைத் 
தாண்டி அவன் பணிமேல் செல்வதானால், அது மேலைக் கடற்கரைப் பட்டினமாக இருக்கவேண்டும். இவன் பாண்டிய நாட்டினன். செழியனின் 
சிறுமலைக் கூதளத்தின் மணத்தை நுகர்ந்தவன். எனவே மேலைக் கடற்கரையில் பாண்டியனின் கட்டுப்பாட்டில் இருந்த வேலைவாய்ப்புள்ள 
பெரிய நகரம் யவனப் பயண ஆசிரியர்களால் குறிக்கப்படும் Nelcynda நகர்தான். அங்கு என்ன வேலை? மேலைநாட்டுக் கப்பல்கள் தமிழகத்துக்குப் 
பொன்னையும் பொருளையும் சுமந்துகொண்டு வந்து, இங்கிருந்து மிளகையும், மணியையும் ஏற்றிக்கொண்டு செல்லும். தென்மேற்குப் 
பருவக்காற்றில் கப்பல்கள் வந்து, வடகிழக்குப் பருவக்காற்றில் மீண்டும் திரும்பும். இந்தக் குறுகிய காலத்தில் இறக்குமதி, ஏற்றுமதி வேலைகளை 
மேற்கொள்ள, மேற்பார்வையிட, கணக்கெடுக்க, சுங்கம் வசூலிக்க எனப் பல பணிகளைச் செய்ய ஆட்கள் தேவை. அவ்வகைப் பணியின் நிமித்தமே 
தலைவன் இங்கு வந்துள்ளான் என்று கொள்ளப்பட்டே, பாடலுக்கான பின்புலக் கதையில் தலைவன் இந்தப் பட்டனத்துக்குச் சுங்கச் சாவடியில் 
பணிபுரியச் சென்றான் என்று கொள்ளப்பட்டிருக்கிறது.

	அடுத்து, தலைவியின் இருப்பிடம் எது என்ற கேள்வி எழுகிறது. Nelcynda –வுக்கு நேர் கிழக்கே மலையில் ஏறி இறங்கினால் கம்பம் 
பள்ளதாக்கு வருகிறது. அப் பகுதியைச் சேர்ந்த ஊர் ஏதேனும் இருக்கலாம். தலைவன் திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலையின் கூதளம் பற்றிப் 
பேசுகிறான். எனவே தலைவி அப் பகுதியைச் சேர்ந்தவளாக இருந்திருக்கலாம். பொதினியிலிருந்து வரும் ஒரு வணிகப் பெருவழி மதுரைக்குச் 
செல்கிறது. மதுரையிலிருந்து மேற்குமுகமாக இடுக்கிப் பகுதிக்கு ஒரு நீண்ட பெருவழி இருந்திருக்கிறது. இதுபற்றித் தொல்லியல் அறிஞர் 
திரு. சாந்தலிங்கம் இவ்வாறு கூறுகிறார்.:

	பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி இப்பகுதியில் முன்பு இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி 
செல்லும் பெரும் பாதை இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அகஸ்டஸ் சீசர் காலத்தைய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று 
கிடைத்துள்ளது. கம்பம் – உத்தமபாளையம் – சின்னமனூர் – வீரபாண்டி – சித்தர்மலை – விக்கிரமங்கலம் – கொங்கர்புளியங்குளம் – 
முத்துப்பட்டி பெருமாள்மலை – கீழ்குயில்குடி – மதுரை என வழியெங்கும் வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. உத்தமபாளையத்தில் 
சமணத்துறவிகள் தங்கியிருந்த படுகைகள் காணப்படுகிறது. சின்னமனூரில் ஏழாம் (அ) எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான 
சிவன்கோயில் ஒன்று காணப்படுகிறது. வீரபாண்டி கௌமாரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. முருகனின் பெண் வடிவமாகக் கூட 
கௌமாரியைச் சொல்வார்கள். அவர் கௌமாரன். பெண் வடிவில் கௌமாரி. ஏழாவது தாமரையில் தோன்றியவள் என்பார்கள். - 
- தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் -https://maduraivaasagan.wordpress.com/page/12/

	இங்குக் கூறப்படும் இடுக்கியை அடுத்தே பண்டைய Nelcynda இருந்திருக்கிறது. அங்கே நெல் அதிகமாக விளைந்த காரணத்தால் 
அது நெற்குன்றம் என்று அழைக்கப்பட, அதை யவனர்கள் தம் உச்சரிப்பில் Nelcynda என்று அழைத்தனர் எனலாம்.

			
		படம்: http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/of-commerce-and-cupid/article4315984.ece

	ஓர் அகப்பாடலுக்கு இத்தனை புறக்குறிப்புகள் தேவையா? சங்கப் புலவர்களின் அகப்பாடல்கள் கூறும் நிகழ்வுகள் அவர்களின் 
கற்பனையாக இருக்கலாம். அந்த நிகழ்வுகளில் நிழலாடும் மாந்தரும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அந்தப் புலவர்கள் குறிப்பிடும் 
நிகழ்விடங்கள் கற்பனை இடங்கள் அல்ல. அந்தக் கற்பனை மாந்தரைத் தாம் அறிந்த இடங்களிலேயே நடமாடவிடுகிறார்கள். அவர்களைக் 
கொண்டு அந்த கற்பனை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகிறார்கள். அவர்கள் மனக்கண்முன் கண்ட அந்தக் காட்சிகளை சொல்லோவியங்களாய்த் 
தீட்டுகிறார்கள். அந்தக் காட்சிகளைப் படிப்பது மட்டும் அல்ல, அந்தப் புலவர்கள் தம் மனக்கண்ணில் கண்ட காட்சிகளை நாமும் 
காணவேண்டுமென்றால், அவர்கள் காட்சிப்படுத்தியதை நாமும் முற்றிலும் சுவைக்கவேண்டுமென்றால் அந்தக் காட்சிகள் நடந்த இடங்களையும் 
நாம் நம் மனக்கண்முன் கொண்டுவரவேண்டும். அதற்குத்தான் இந்தப் புரிதல் முயற்சி.