அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 46

பாடல்  46. மருதத் திணை    பாடியவர் - அள்ளூர் நன்முல்லையார்

துறை - வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.

  மரபு மூலம் - சென்றி பெரும! நின் தகைக்குநர் யாரோ!

	சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
	ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
	கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
	நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய
5	அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
	வண்டூது பனிமலர் ஆரும் ஊர
	யாரை யோநிற் புலக்கேம் வாருற்று
	உறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தல்
	பிறரும் ஒருத்தியை நம்மனைத் தந்து
10	வதுவை அயர்ந்தனை யென்ப அஃதியாங்
	கூறேம் வாழியர் எந்தை செறுநர்
	களிறுடை அருஞ்சமந் ததைய நூறும்
	ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
	பிண்ட நெல்லின் அள்ளூ ரன்னவென்
15	ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
	சென்றி பெருமநின் தகைக்குநர் யாரோ

 சொற்பிரிப்பு மூலம்

	சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
	ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து,
	கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
	நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
5	அம் தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
	வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர,
	யாரையோ நின் புலக்கேம்! வார்_உற்று
	உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல்
	பிறரும் ஒருத்தியை நம் மனைத் தந்து
10	வதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம்
	கூறேம்! வாழியர் எந்தை! செறுநர்
	களிறு உடை அரும் சமம் ததைய நூறும்
	ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்
	பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
15	ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க,
	சென்றி பெரும! நின் தகைக்குநர் யாரோ

அருஞ்சொற் பொருள்:

முனைஇய= வெறுத்த; காரான்=கரிய நிறமுள்ள ஆன், எருமை; மடி=துயில்கொள்; கங்குல்=இரவு; நோன்=வலிய; தளை=கட்டு; 
பரிந்து=அறுத்துக்கொண்டு; கோட்டின்=கொம்பால்; பழனம்=குளம்; தூம்பு=உள்துளை; ஆரும்=உண்ணும்; உறை=மழை; 
தகைக்குநர்=தடுப்பவர்.

பாடலின் பின்புலமும் பாடல் சுருக்கமும்

ஒரு தலைவன் தலைவியை விட்டுப்பிரிந்து பரத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டான். அதனால் மனம் நொந்து இருக்கிறாள் 
தலைவி. ஒருநாள் இரவில் தலைவன் வீடு திரும்புகிறான். வாசலிலேயே அவனை மறித்த தலைவியின் தோழி, அவனை 
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். உன் விருப்பப்படி நீ எங்கு சென்றாலும் இங்கு கவலைப்பட ஆளில்லை என்று வெகு 
காட்டமாகவே தலைவனிடம் கூறுகிறாள். சங்க இலக்கியங்களில் இதற்கு வாயில் மறுப்பு என்று பெயர்.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
	ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு
	கூரான முள்ளாலான வேலியைத் தனது கொம்பினால் தட்டிவிட்டு
	நீர் மிக்க குளத்தில் மீன்கள் எல்லாம் வெருண்டோட
5	அழகிய துளையையுடைய வள்ளைக்கொடியைச் சிதைத்துக்கொண்டு, தாமரையின்
	வண்டுகள் ஒலியெழுப்பும் குளிர்ந்த மலரை ஆசையுடன் தின்னும் ஊரனே!
	உன்னை யாம் கடிந்துகொள்வதற்கு நீ யாரோ? நீளத் தொங்கவிடப்பட்டு
	மேகங்கள் இறங்குவதைக் காட்டிலும் (மிக்க அழகுடன்) பளபளப்புடன் விளங்கித் தாழ்ந்திருக்கும் கரிய கூந்தலையுடையவள்
	ஒருத்தியை, இவ்வூரார் நம் மனைக்குக் கூட்டிவந்து
10	“நீ அவளை மணந்தாய்” என்று கூறினர்; அதனை நாங்கள்
	கூறவில்லை; நீ வாழ்வாயாக! பகைவரின்
	யானைப் படையைக் கொண்ட அரிய போரினை சிதையுமாறு கொல்லும்
	ஒளிவீசும் வாள்படையைக் கொண்ட வெற்றி பொருந்திய செழியனது
	நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது
15	ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
	போய்விடு பெருந்தகையே! உன்னைத் தடுப்பவர் யாருமில்லை.

	சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்

	வீட்டைவிட்டு ஓடிப்போன எருமையைப் புலவர் எப்படி வருணிக்கிறார் பாருங்கள். செங்கட் காரான் என்கிறார். 
காரான் கருமை நிற ஆன். அது எருமை. எருமைக்குக் கண்கள் சிவப்பாகவா இருக்கும்? பொதுவாக அப்படி இருக்காது. ஓரிரண்டு 
எருமைகளுக்குக் கண்கள் பிறவியிலேயே சிவந்து இருக்க வாய்ப்புண்டு. எருமையின் செய்கையைத் தலைவனின் செய்கையுடன் 
ஒப்பிடப்போகும் புலவர் அதற்கு இங்கே அடித்தளம் இடுகிறார். தலைவனுக்குக் கண்கள் ஏன் சிவந்து காணப்படுகின்றன. தூக்கக் 
கலக்கம். வருகின்ற தூக்கத்தை அடக்கிக்கொண்டு நள்ளிரவு தாண்டும்வரை காத்திருந்து ஊர் மடியும் கங்குலில் வெளியேறவேண்டும் 
அல்லவா! அதனால்தான் அவனது கண்கள் சிவந்திருக்கின்றன. 

			

	சேற்று நிலை முனைஇய என்று புலவர் வீட்டைவிட்டு எருமை வெளியேறுவதற்கான ஒரு காரணத்தையும் கூறுகிறார். 
அந்த எருமைக்கு வண்டூதும் பனிமலர்மீது ஆசை இல்லையாம். இங்கே தொழுவத்தில் இருக்கிற நிலை வெறுத்துப்போய்விட்டதாம். 
எருமைக்கு எப்படியோ, தலைவன் அவ்வாறு நினைக்கிறான் என்கிறார் புலவர். இந்தச் சேற்று நிலைக்கும் என்ன காரணம்? அந்த 
எருமைதானே! நீரையும் சாணத்தையும் ஒருங்கே கழித்துவிட்டு அதன்மீதே நின்றுகொண்டு உளப்பிக்கொண்டிருந்தால் அந்த இடம் 
சேறும் சகதியுமாய்த்தானே ஆகிவிடும். தானே ஒரு நிலையை உருவாக்கிவிட்டு அது தனக்கே பிடிக்கவில்லை என்று அறுத்துக்கொண்டு 
போய்விட்டால்? இந்தச் சொற்றொடரை வைத்துத்தான் வீட்டின் அகநிலையை ஓரளவு ஊகிக்கவேண்டும். எனவேதான் தலைவிக்கு 
மகவு பிறந்த நிலை எனக் கொள்ளப்பட்டது. பிள்ளை பிறந்த வீட்டில் ஒருவிதக் கவுச்சி நாறும். பால் கவுச்சி, சிறுகுழந்தை அடிக்கடி 
நீர், மலம் கழித்தல் ஆகியவற்றால் வீட்டின் நிலை மாட்டுத்தொழுவின் சேற்று நிலையை எட்டும். இதனால்தான் ஏகப்பட்ட வேலைகளைக் 
கொண்ட பொன்னி தடுமாறுகிறாள். அவளால் எல்லாவற்றையும் அடிக்கடி சுத்தம் செய்துகொண்டிருக்க முடியவில்லை. அதனால் 
வீட்டுக்குள்ளும், தொழுவத்திலும் சேற்றுநிலை. இதனால் வெறுப்புக்கொண்ட அவன் மணங்கமழும் பனிமலரை நாடிப்போவதாகப் புலவர் 
ஒப்பிடுகிறார். “இதற்கு நீதானே காரணம், அதைப் பொறுக்க முடியாதா உன்னால்” என்று சொல்லாமல் சொல்கிறார். 

	அதுமட்டுமல்ல, தலைவி என்ன, இலேசுப்பட்டவளா? பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன ஒண்தொடி அவள். அள்ளூருக்கு என்ன 
அழகு? அதன் நெல்தான் அதற்கு அழகு. நெல் எப்படி வரும்? வயல்! பிண்ட நெல் என்பதை நெற்பொலி மிக்க என்கிறார் வேங்கடசாமி 
நாட்டார். அதாவது அங்கு நெல் குவிந்துகிடக்கிறதாம். ஆக, ஊரைச் சுற்றி எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலெனப் பச்சைக் கம்பளம் 
விரித்தாற்போன்ற வயல்கள்! கண்ணுக்கு எவ்வளவு இனிமையான காட்சி! அத்துணை அழகுமிக்கவள் தலைவி. அவளை மணங்கொண்டான் 
தலைவன். இனிதான இல்லறம் சிறக்க வாழ்ந்தான். கட்டிலில் பெற்றதைத் தொட்டிலில் கிடத்துகிறாள் தலைவி. இப்போது இது மட்டும் 
சேற்று நிலை என்றால்? தலைவனின் செயற்பாட்டுக்கு இது ஒரு நொண்டிச்சாக்கு என்கிறார் புலவர்.

	ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து,

	அடுத்து ஊர் மடி கங்குல் என்கிறார் புலவர். வண்டூதும் பனிமலர் என்றும் பின்னால் கூறுகிறார் அவர். நள்ளிரவில் வண்டுகள் 
எப்படிப் பூவை மொய்க்கும்? எனவே இந்த வண்டுகள் முதல் நாள் மாலை மலர்ந்திருந்த தாமரை மலர் கூம்பும்போது உள்ளே 
மாட்டிக்கொண்டவை என்றும் அவை மலரின் உள்ளிருந்து ஒலியெழுப்புகின்றன என்றும் கூறுவர் உரைகாரர். ஆனால் இது நள்ளிரவா? 
மடி என்பதற்குச் சோம்பியிரு, தூங்கு, தலைசாய், வாடி வளை என்றெல்லாம் பொருள் உண்டு. நள்ளிரவில்கூடத் தூக்கத்தை 
அடக்கிக்கொண்டு அமர்ந்திருக்கலாம். சுமார் 2 மணி வாக்கில் ஓர் அசத்து அசத்துமல்லவா! அதுதான் ஊர் மடி கங்குல். தமிழரைப் 
பொருத்தமட்டில் இது கடையாமம் கழிந்த விடியலின் துவக்கம். 

	கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
	அச்சம் அறியாது ஏமமாகிய
	மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப்
	போது பிணிவிட்ட கமழ்நறும் பொய்கைத்
	தாது உண் தும்பி போது முரன்றாங்கு
	ஓதல் அந்தணர் வேதம் பாட – மது. 651- 656

	என்கிறது மதுரைக்காஞ்சி. மதுரை நகரில், கடைசி யாமம் கழிந்த பின்னர், முறுக்குவிட்டு மலரும் பூக்களில் மொய்த்துப்பாடும் 
தும்பிகளைப் போல், அந்தணர் வேதம் ஓதுவர் என்கிறார் மாங்குடி மருதனார். 

	மேலும் மருதத்திணைக்குரிய சிறுபொழுதைக் கூறவந்த தொல்காப்பியர்,

	வைகுறு விடியல் மருதம் – தொல். – பொருள் – அகத்திணையியல் – 8/1
	
	என்பார். விடியல் என்பது நம் நேரப்படி அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை. வைகுறு விடியல் என்பதால் 
இது விடியலின் தொடக்கமான அதிகாலை நேரம் 2 மணியை ஒட்டியது என்று எடுத்துக்கொள்ளலாம்.

	இங்கு, கடையாமக் கடைசியில் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்ற எருமை விடியலின் தொடக்கத்தில் நீர் முதிர் பழனத்தைச் 
சென்றடைகிறது. அப்போது தாமரை முறுக்குவிடத் தொடங்குகிறது. வண்டுகளும் ஊதத்தொடங்குகின்றன. எனவேதான் வண்டுகள் ஊதும் 
பனிமலரை எருமை ஆர்வதாகப் புலவர் பாடுகிறார்.

	அந்த எருமை நோன்தளை பரிந்து சென்றதாகப் புலவர் கூறுகிறார். இப்படி நடக்கலாம் என்பதால்தான் இப்பொழுது எருமைகளை 
இரும்புச் சங்கிலியால் கட்டுவர். எருமை மிக்க வலுவான விலங்கு. எனவே மிகவும் வலிய தளையை அறுத்துக்கொண்டு செல்கிறது எருமை. 
ஆசை வந்ததால் வந்ததன் விளைவு. திருமண உறவு என்பது எவ்வளவு வலிமையான தளை - கால்கட்டு! பெற்றவரையும் உடன் 
பிறந்தோரையுமே சற்றுத் தள்ளி நிற்கவைக்கும் இறுக்கமான தளை அல்லவா! இந்தத் தளை என்பது உள்ளங்களின் பிணைப்புத்தானே! 
இதனை வலிதிற் பிய்த்துக்கொண்டுதானே அவன் மாற்றாள் மனை நோக்கிச் செல்கிறான். 

	கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,

	தளையை அறுத்தபின் எருமை எதிர்கொள்வது முள்வேலி. கூரிய முள் கொண்டது. இந்தக் கூர் முள் வேலி அன்னியரை உள்ளே 
அண்ட விடாது. உள்ளிருப்பவர்கள் உடைக்க விரும்பினால் ஊடுருவிக் குத்தும். எருமைகூட முள்ளுக்குப் பயந்து அதை உரசித் தள்ளிவிட 
முயலவில்லை. மாறாக அந்தக் கூர்முள் வேலியைத் தன் கோட்டினால் நீக்கிவிடுகிறது -  தான், தன் மனைவி, தன் குழந்தை எனத் 
தன்னைச் சுற்றி இருக்கும் பந்த வேலியைத் தன் திமிரினால் தட்டிவிட்டுப் போகிறான் அவன்.

	நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய,
	அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
	வண்டு ஊது பனி மலர் ஆரும் 

	வேலியை நீக்கிய எருமை நீர் முதிர் பழனத்துக்குச் செல்கிறது. நெடுநாள் நீர் நிற்கும் குளம் அது. எனவே செடி, கொடிகள் அடர்ந்து 
படர்ந்திருக்கும். மீனினம் பலுகிப் பெருத்திருக்கும். தாமரைகளும் குவளைகளும் தழைத்து வளர்ந்திருக்கும். தலைவன் செல்வது ஊருக்குப் 
புறம்பேயுள்ள சேரிக்குத்தான். அந்த ஊர் என்றைக்கிருந்து இருக்கிறதோ அன்றைக்கிருந்து இதுவும் இருக்கிறது. சேரி என்பது பரத்தையர் 
குடியிருப்பு அல்ல. ஊருக்குத் தேவையான உழைப்பை நல்கும் உழைப்பாளிகள் குடியிருக்கும் இடம். அப்படியென்றால் அவர்கள் ஏன் ஊரின் 
ஒதுக்குப்புறத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் செய்யும் தொழிலின் தன்மை அப்படி. குயவர்கள் பானை வேகவைக்க, சலவைசெய்வோர் 
வெள்ளாவி வைக்க என அவர்களுக்குப் பரந்த, ஒதுக்குப்புறமான இடம் தேவை. ஏனையோர் எடுபிடி வேலை செய்வர். மீன்பிடித்து ஊருக்குள் 
விற்பர். நீர் முதிர் பழனம் போல மகிழ்ச்சி பொங்கித்ததும்பும் இடம் அது. மீன் போன்று எப்போதும் சுறுசுறுப்புடன் விளங்கும் இளைஞர் 
கூட்டம் நிறைந்த பகுதி அது. வள்ளைக்கொடி போல இறுக்கமான உறவுகொண்டு வாழ்வர் அந்த மக்கள். தூம்பு என்பது உள்துளை. 
வள்ளைக் கொடி குழாய் போன்ற அமைப்பு கொண்டது. உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசாமல் வெள்ளந்தி மனத்தையுடைய 
சேரிமக்களை அம் தூம்பு வள்ளை எனப் புலவர் கூறுவதும் சரிதானே! சேற்றுக்குள் செந்தாமரை போன்று அங்கு சிவப்பியராய்த் தனித்துத் 
தோன்றும் அழகு மங்கையரும் உண்டு. அந்தப் பனிமலர் மேனியால் கவரப்பட்டு ஊதுகிற வண்டாய் அவர்களைச் சுற்றி தோழியர் கூட்டம் 
மொய்த்துக்கிடப்பதும் உண்டு. 

			

				

	திமிர் ஏறிய உடம்பின் தினவினால் தளையை மீறி வந்த அந்தத் தறிகெட்ட காளை சேரிக்குள் புகுகிறான். ஊர்துஞ்சும் கங்குல் 
அல்லவா! குறுகிய தெருக்களில் பாயை விரித்துக் குறுக்கும் நெடுக்குமாய் வள்ளைக்கொடி போல் மக்கள் தூக்க வயப்பட்டிருக்கின்றனர். 
அவரில் சிலரைத் தாண்டியும், சிலர் மீது தடுக்கியும், சிலரை மிதித்துக்கொண்டும் வள்ளையை மயக்கும் எருமையாய் அவன் 
நடந்துசெல்கின்றான். அந்தத் தூக்க நேரத்திலும் ஆங்காங்கு குழுமியிருக்கும் இளைஞர் கூட்டம் மீன்கள் இரிவது போல் வெருண்டு 
ஒதுங்குகிறது. ஒரு வீட்டில், வண்டுகள் எனத் தோழியர் புடை சூழக் கதைபேசிக் களைத்திருக்கும் பனிமலர் போன்ற அவளைப் பார்வையால் 
விழுங்கியபடி அவன் நெருங்க, வண்டுகள் சிட்டாய்ப் பறக்கின்றன. பிடுங்கிய மலரைக் கடைவாய்க்குக் கொண்டுசென்று கொஞ்சம் 
கொஞ்சமாகக் கடித்து ஆரச் சுவைக்கும் காரான் போல அவன் அந்த மலரைக் கசக்கி நுகர்கிறான்.

	பாடலின் தொடக்கத்தில் புலவர் பயன்படுத்தும் உள்ளுறை உவமத்தின் நயம் தெரிந்து உள்ளம் உவக்கவில்லையா? 

	“யாரையோ நின் புலக்கேம்?” என்பது தலைவன் ஏதோ கூற அதற்குத் தோழி கூறும் மறுமொழியாய்த்தானே தோன்றுகிறது. 
“அஃது யாம் கூறேம்” எனத் தோழி கூறுவதும், “நின் தகைக்குநர் யாரோ” என்ற தோழி கூற்றும் அவ்வாறே அமைகின்றன. இதை ஒட்டியே 
தோழி தலைவனுடன் உரையாடும் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டன. “ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க” என்ற கூற்றில் தோழியின் 
உறுதிப்பாடான நிலை தெரிகிறது. “பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் ஒண்தொடி” என்ற கூற்றில், திருமணத்துக்கு முன்பு இருந்த 
தலைவியின் பேரழகு தெரிவிக்கப்படுகிறது. இன்றைய சேற்று நிலைக்குக் காரணமானவன் நீயே என்று குத்திக்காட்டுவது போல் இல்லையா? 
பிள்ளைப்பேற்றால் உருமாறிய அழகு, இப்பொழுது உன் நடத்தையால் நெகிழ்ந்து உருக்குலைந்து போனாலும் போகட்டும் என்று தோழி 
கூறுவதாகக் கொள்ளலாம். என் ஒண்தொடி என்பதை ஒள்ளிய தொடி அணிந்த எனது தலைவி என்று அன்மொழித்தொகையாகக் 
கொள்ளாமல், அவள் அணிந்திருக்கும் ஒள்ளிய வளையல்கள் என்றும் கொள்ளலாம். என் ஒண்தொடி என்று தோழி கூறுவது தான் அவள் 
என்னும் வேற்றுமையின்மையால் என்பர் வேங்கடசாமி நாட்டார். இன்றைக்கும் அந்த வழக்கம் உண்டு. வேறொருத்தியைப் பற்றி நம்மிடம் 
புகார் கூறும் ஒரு பெண், திடீரென்று, “இன்னக்கி இப்படிப் பேசிட்ட, நாளக்கி ஒனக்கு ஒன்னு வந்த அப்ப நீ என்ன செய்வ?” என்று 
கூறுவதில்லையா? இங்கு ‘ஒனக்கு, நீ’ என்பதெல்லாம் எதிரே நிற்கும் நாம் அல்ல, அவள் முன்பு குறிப்பிட்ட அந்த வேறொருத்தி என்பதைப் 
புரிந்துகொள்ளவேண்டும். இதைப்போலத்தான் அதுவும்.