அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 59
	
பாடல்  59. பாலைத் திணை  பாடியவர் - மதுரை மருதனிளநாகனார்

துறை - தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.

  மரபு மூலம் - பொருட்பிணி முன்னி சேண் உறைநர்

	தண்கயத் தமன்ற வண்டுபடு துணைமலர்
	பெருந்தகை யிழந்த கண்ணினை பெரிதும்
	வருந்தினை வாழியர் நீயே வடாஅது
	வண்புனற் றொழுநை வார்மண லகன்றுறை
5	யண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர்
	மரஞ்செல மிதித்த மாஅல் போலப்
	புன்றலை மடப்பிடி யுணீஇய ரங்குழை
	நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுள்
	படிஞிமிறு கடியுங் களிறே தோழி
10	சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற்
	சினமிகு முருகன் டண்பரங் குன்றத்
	தந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை
	யின்தீம் பைஞ்சுனை யீரணிப் பொலிந்த
	தண்ணறுங் கழுநீர்ச் செண்ணியற் சிறுபுறந்
15	தாம்பா ராட்டிய காலையு முள்ளார்
	வீங்கிறைப் பணைத்தோ ணெகிழச் சேய்நாட்
	டருஞ்செயற் பொருட்பிணி முன்னிநப்
	பிரிந்துசே ணுறைநர் சென்ற வாறே

 சொற்பிரிப்பு மூலம்

	தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
	பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்
	ருந்தினை, வாழியர் நீயே! வடாஅது
	வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
5	அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
	மரம் செல மிதித்த மாஅல் போலப்
	புன் தலை மடப் பிடி உணீஇயர் அம் குழை
	நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்
	படி ஞிமிறு கடியும் களிறே, தோழி!
10	சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்
	சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
	அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை
	இன் தீம் பைம் சுனை ஈர் அணிப் பொலிந்த
	தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம்
15	தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
	வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டு
	அரும் செயல் பொருள்பிணி முன்னி நப்
	பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே

அருஞ்சொற் பொருள்:

தண் கயம் = குளிர்ந்த குளம்; துணை மலர் = இரட்டை மலர்; பெருந்தகை = பெரிய அழகு; தொழுநை = யமுனை; 
அண்டர் மகளிர் = ஆய்ச்சியர்; மாஅல் = திருமால், கண்ணன்; ஒற்றி = வளைத்து; ஞிமிறு = வண்டு; கடியும் = விரட்டும்; 
சூர் = சூரபதுமன்; மருங்கு = உடனிருந்தோர்; சந்து = சந்தனம்; ஈரணி = ஈரமான மேலாடை; செண் = கொண்டை; 
சிறுபுறம் = முதுகு; ஆறு = வழி.

.அடிநேர் உரை

	குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற
	பெரிய அழகினை இழந்த கண்களையுடையவளாய்ப் பெரிதும்
	வருந்துகின்றாய் வாழ்வாயாக நீயே; வடக்குத் திசையில் உள்ள
	வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில்
5	ஆயர் பெண்கள் குளிர்ந்த தழைகளை உடுத்திக்கொள்ள
	மரம் வளையும்பட மிதித்துத் தந்த கண்ணன் போல
	புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை
	உயர்ந்து நிற்கும் யா மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில்
	படியும் வண்டுகளை ஓட்டும் ஆண்யானை - தோழி
10	சூரபதுமனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிவிடும் இலையுள்ள நீண்ட வேலின்
	சினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து
	அந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள
	இனிய சுவையுள்ள புதிய சுனையில் வழவழப்பான மேற்பகுதியையுடைய
	குளிர்ந்த மணமுள்ள குவளை போன்ற கொண்டை அசையும் முதுகினை
15	தான் பாராட்டிய காலத்தினையும் நினைத்துப்பாராமல்,
	புடைத்த பக்கங்களைக் கொண்ட மூங்கில் போன்ற தோள்கள் மெலிய, தொலைநாட்டில்
	அரிய செயலாகிய பொருளிட்டலை நினைத்து, நம்மைப்
	பிரிந்து தூரத்தே தங்கியிருப்பவர் சென்ற வழியில்.

பாடலின் பின்புலம் 

	பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தொலைதூர நாட்டிற்குச் சென்றுவிட்டான். அவன் வரத் தாமதமானது. 
பிரிவாற்றாமல் தலைவி பெரிதும் வருந்தி உடல் மெலிந்தாள். அதைக் கண்ட தோழி, தலைவியை ஆற்றுவிக்கிறாள். 
தலைவர் சென்ற வழியில், ஆண்யானையானது யா மரத்தின் உச்சிக் கொப்பை வளைத்துப் பெண்யானைக்கு 
உண்ணக்கொடுத்து அதன் பசி தீர்க்கும் காட்சியைப் பார்த்திருப்பார்; எனவே அவர் உன் துயர் தீர்க்க விரைவில் 
வந்துவிடுவார் என்று ஆறுதல் சொல்லித் தேற்றுகின்றாள்.

பாடலின் விளக்கம்

	பதினெட்டு அடிகள் கொண்ட இப் பாடலில், முதல் ஒன்பது அடிகளில் ஒரு புராணச் செய்தியையும், அடுத்த 
ஒன்பது அடிகளில் வேறொரு புராணச் செய்தியையும் புலவர் குறிப்பிடுகிறார். முதல் பாதியில் தலைவியின் துயரத்தைக் 
குறிப்பிட்டு அதனை ஆற்றுவிக்கும் மொழிகளைக் கூறுகிறாள். அடுத்த பாதியில் தலைவியை ஆற்றுவிக்கும் மொழிகளைக் 
கூறிவிட்டு, அவளின் துயர நிலையையும் எடுத்துரைக்கின்றாள் தோழி.

	முதலில் தலைவியின் நிலையைத் தோழி எவ்வாறு எடுத்துரைக்கிறாள் பாருங்கள்.

	தண் கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப்
	பெருந்தகை இழந்த கண்ணினை; பெரிதும்
	வருந்தினை, வாழியர் நீயே!

	குளிர்ந்த குளத்திலே நிறைந்திருக்கும் இரட்டை மலர்கள் – குளிர்ந்த முகத்தில் அமைந்திருக்கும் பெரிதான 
இரண்டு கண்கள் – என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? அமல் என்பதற்கு நெருங்கி வளர்ந்த என்ற பொருள். 

	புத்தம் புதிதாய்ப் பூத்தமலர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் அவற்றின் மீது வண்டுகள் விடாது 
மொய்க்கும்போது அம் மலர்கள் தம் புதுமைத் தன்மையோடு தம் பொலிவையும் இழக்கின்றன. எனவேதான் வண்டுபடு 
துணைமலர்ப் பெருந்தகை இழந்த என்கிறார் புலவர். தகை என்பது அழகு. கண்கள் வாட்டமுற்றிருக்கின்றன என்பதையே 
இத்துணை பொலிவுடன் கூறுகிறார் புலவர். கண்கள் வாட்டமுறுவதற்கு வேறு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். 
மன வருத்தமே இந்தக் கண்களின் வாட்டத்துக்கும் காரணம் என்கிறாள் தோழி. பெரிதும் வருந்தினை என்கிறாள் அவள். 
“கவலைகொள்ளாதே, நலமாயிரு” என்பதனையே “வாழியர் நீயே” என்று கூறுகிறாள் தோழி.

			

	“நம்மைவிட்டுப் பிரிந்து வெகுதொலைவில் வாழ்கின்றாரே, அவர் சென்ற வழி (பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே) 
எப்படிப்பட்டது தெரியுமா?” என்று கேட்கிறாள் தோழி. 

	நெடுநெடுவென வளர்ந்திருக்கும் யாமரத்தின் (நெடுநிலை யாஅம்)உயரத்தில் இருக்கும் கிளையைப் பற்றி இழுத்துத் 
தன் பெண்யானைக்கு உண்ணக்கொடுக்குமாம் ஆண்யானை (மடப்பிடி உணீஇயர்). அப்படி இழுத்துப்பிடிக்கும் ஆண்யானையைத் 
தொடர்ந்து இழுத்துப்பிடிக்கவிடாமல் தொந்தரவு செய்கின்றது ஒரு வண்டுக் கூட்டம் – ஆண்யானையின் கன்னத்தை நனைக்கும் 
மதநீரில் அவை வந்து வந்து படிகின்றன. துதிக்கையைக் கொண்டு அவற்றை விரட்ட நினைத்தால் வளைந்த மரம் மேலே செல்ல 
பெண்யானை ஏமாந்துவிடும். எனவே கிளையைப் பிடித்த பிடியையும் விடாமல், கிளையின் வேறொரு பக்கத்து தழைகளால் 
அந்த வண்டுகளை ஓட்டுகின்றதாம் அந்த ஆண்யானை (நனை கவுள் படி ஞிமிறு கடியும்). பெண்யானையின் பசியைப் போக்க 
ஆண்யானை காட்டும் பரிவினைப் பார்த்த தலைவன், தன் மனைவியின் பிரிவுத்துயரத்தைத் தீர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் 
விரைவில் வீட்டுக்குத் திரும்புவான் என்கிறாள் தோழி. பெண்யானைக்குப் பசிக்கும்போது ஆண்யானைக்கும் பசிக்காதா? ஆனால் 
அது தன் பசியைப் பெரிதாக எண்ணாமல் தன் மடைப்பிடி உண்ணுவதற்காகக் கிளையை வளைத்துக்கொடுக்கிறதாம். எனவே 
தலைவன் பொருள் சேர்க்கவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் பெரிதாக எண்ணாமல், தலைவியின் பிரிவுத்துயர் நீக்க 
மனங்கொள்வான் என்பது தோழியின் குறிப்பு. 

	இந்த இடத்தில் ஓர் அருமையான உவமையைக் கையாள்கிறார் புலவர். வடக்கே யமுனை ஆற்றில் பெண்கள் 
குளிக்கும்போது அவரின் ஆடைகளை எடுத்து ஒளித்துவைத்த கண்ணனாகிய மால், பின்னர் அங்கு பலதேவர் வந்தபோது, 
நீரில் இருந்த மங்கையர் தம்மை மறைத்துக்கொள்ள, தான் ஒளிந்திருந்த குருந்தை மரத்தின் கிளையைத் தன் காலால் மிதித்து 
வளைத்து அவரின் மானம் காத்தான் என்ற நிகழ்ச்சியைச் சொல்லி அதைப்போல இந்தப் பாலைநிலத்துக் களிறு தன் மடப்பிடிக்கு 
யா மரத்தை வளைத்துக்கொடுத்தது என்கிறார் புலவர்.

	வடாஅது,
	வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை
	ஆண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
	மரம் செல மிதித்த மாஅல் போல 

	என்கிறார் புலவர். தொழுநை என்பது யமுனை ஆறு. அது வற்றாத நதியாதலால் வண்புனல் தொழுநை என்கிறார் அவர். 
பெருவெள்ளம் வரும்போது ஆற்றோரத்தில் அடித்துக்கொண்டுவரும் மணலே வார் மணல். வெள்ளம் வடிந்தபின் அது ஆற்றுக்குள் 
இறங்கும் துறை ஆகிறது. அந்தத் துறையே மிகவும் அகன்ற துறை என்றால் ஆறு எத்துணை அகலமானதாக இருக்கவேண்டும்.

			

	இரு நிகழ்ச்சிகளிலும் மரம் வளைக்கப்படுகிறது என்றாலும், களிறு கீழேயிருந்து இழுக்க மரம் வளைகிறது. 
இதனை நெடுநிலை யாஅம் ஒற்றி என்கிறார் புலவர். ஒற்றுதல் என்பது வலித்து இழுத்தல். கண்ணன் ஆற்றங்கரை மரத்தின் 
மீதிருந்து அதன் கிளையைக் காலால் அழுத்தி வளைக்கிறான். இதனை மரம் செல மிதித்த மாஅல் என்கிறார் அவர். 
வளைக்கப்படுவதே இங்கு உவமையேயொழிய, அது ஒற்றியா அல்லது மிதித்தா என்ற கேள்வி எழக்கூடாது என்பதற்காக 
அதனையும் வேறுபடுத்திக்காட்டும் நுட்பம் நுண்ணிதின் நோக்கி மகிழ்தற்குரியது.

	அடுத்து, தலைவியின் தலைக்கொண்டை அமைப்பைக் குறிப்பிடுகிறார் புலவர். செண் இயல் சிறுபுறம் என்கிறார் அவர். 
செண் என்பது கொண்டை. சிறுபுறம் என்பது முதுகு. கொண்டை அசையும் முதுகு என்பது இதன் பொருள்.

	கொண்டை அலங்காரத்தில் பலவகை உண்டு. இந்த அலங்காரம் செய்துகொள்ள நீண்ட நேரம் ஆகும். பொதுவாக, 
அந்த அலங்காரங்களில் கொண்டை தலையில் உயரத் தூக்கிக் கட்டப்படும். அப்படியெனில், கொண்டை முதுகில் எப்படி அசையும்? 
பெண்கள் நீண்டிருக்கும் தம் கூந்தலை அவசரத்துக்கு அள்ளிமுடியும்போது அது கோடலி முடிச்சு எனப்படும். கோடலிக் கொண்டை 
என்று அதனைக் கூறுவர். பொதுவாக இது பின்கழுத்தில் தொங்கும். மிகவும் அடர்ந்த நீளமான கூந்தல் இருப்பின் இந்தக் 
கொண்டையும் நீண்டு முதுகில் விழுந்து புரளும். இது அவசரத்துக்குச் செய்வது. பெண்கள் ஒப்பனையின்றி இருக்கும்போது 
செய்துகொள்வது. இவ்வாறு சிறப்பான தலையலங்காரம் இன்றி, சாதாரணமாக அள்ளி முடித்த கொண்டையிலேகூடத் தலைவி 
அத்துணை அழகாக இருக்கிறாளாம்! செண் இயல் சிறுபுறம் தாம் பாராட்டிய காலை என்கிறார் புலவர். தலைவி அத்துணை இயற்கை 
அழகுமிக்கவள் என்று புலவர் குறிப்பிடுகிறார். இந்தக் கொண்டை கவிழ்த்துப்போட்ட கழுநீர் மலரின் மொட்டைப் போன்றிருக்கும்.

 			

	படத்தில் காட்டப்பட்டுள்ளது சிறிய கோடலி முடிச்சு. இதுவே நீளமான கூந்தலுக்குப் போட்டால் முதுகில் விழுந்து அசையும்.

	இந்தக் கழுநீர் மலரை விவரிக்க ஓர் அருமையான நிகழ்ச்சியைக் கூறுகிறார் புலவர். இந்த விவரணத்தை அதன் 
வரிசையில் காண்போம்.

	முதலில் இந்தக் குவளை மலர் சுனையில் பூத்தது என்கிறார் அவர். 

	இன் தீம் பைஞ்சுனை ஈரணிப்பொலிந்த
	தண் நறும் கழுநீர் 

	என்கிறார் அவர். பொதுவாகச் சுனைநீர் சுவையாக இருக்கும். இந்தச் சுனைநீர் மிகவும் சுவையாக இருக்குமாம் – 
இன் தீம் பைஞ்சுனை என்று மூன்று அடைமொழிகள் கொடுக்கிறார் புலவர். பைஞ்சுனை பசிய சுனை எனப்படுகிறது. இங்கே 
பசிய என்பதனைப் புதிய (fresh) என்ற பொருளில் கொள்ளவேண்டும். நெடுநாள் தங்கிய நீரைக் கொண்ட சுனை பழஞ்சுனை. 
அவ்வப்போது புதிய நீர் வரத்து இருந்துகொண்டேயிருந்தால் சுனையின் நீர் புதியதாக இருக்கும் அல்லவா! இன், தீம் என்ற 
இரு சொற்களும் இனிமையைக் குறிக்கின்றன. தீம் என்பது சுவைத்தால் இனிப்பது. இன் என்பது கண்டாலே இனிமை தருவது. 
நீரிலேயே இந்த மலர் இருப்பதால் அது குளிர்ச்சியாக இருக்கிறது. அதனுடன் மணமும் கொண்டுள்ளது. தண்ணறும் கழுநீர் 
என்கிறார் புலவர். இத்துடன் வேறொரு புதுமையான அடைமொழியையும் இதற்குத் தருகிறார் புலவர். 
ஈரணிப் பொலிந்த தண்ணறும் கழுநீர் என்கிறார் அவர். அதென்ன ஈரணி? புனலாடும்போது மகளிர் அணியும் ஆடை ஈரணி எனப்படும். 
இன்றைக்கும் ஆறு, ஏரி ஆகியவற்றில் குளிக்கும் மகளிர், ஒரு பெரிய துணியால் அல்லது தம் சேலையின் ஒரு தலைப்பால் தம் 
மார்பு வரை மூடிக்கொண்டு குளிப்பர். இதுவே ஈரணி. இந்த ஈரணிப் பொலிந்த என்ற தொடருக்கு பெரிய ஒப்பனையாற் பொலிவுற்ற 
என்று பொருள் கொண்டு அதனைத் தலைவியின் கொண்டைக்கு அடைமொழி ஆக்குவர். ஆனால் இத் தொடரை தண்ணறும் கழுநீர் 
என்பதற்கு முன்னர் புலவர் குறிப்பிடுகிறார். 

	இன் தீம் பைஞ்சுனை ஈரணிப்பொலிந்த 
	தண்ணறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம் 

	என்பதை உடைத்து 

	இன் தீம் பைஞ்சுனை தண்ணறும் கழுநீர் 
	ஈரணிப்பொலிந்த செண் இயல் சிறுபுறம் 

	என்று பொருள்கொள்ளுவது பாடலின் ஓட்டத்துக்குப் பொருந்தாது.

	எனவே இந்த ஈரணிப் பொலிந்த என்ற அடைமொழியை கழுநீருக்கே கொள்ளவேண்டும். கழுநீருக்கு ஏது ஈரணி? 
கழுநீரைப் போன்ற கொண்டை என்பதால் இது கழுநீர் மலர் அல்ல என்றும் கழுநீர் மொட்டு என்றும் கொள்ளவேண்டும். 
கவிழ்த்துப்போட்ட கழுநீர் மொட்டு, கோடலிக்கொண்டைக்கு உவமம் என்று கண்டோம்.

	கழுநீர் மொட்டு என்பது பூவின் அக இதழ்கள் மூடிய நிலையில் இருப்பது. அந் நிலையில் கூம்பிய அந்த இதழ்களை 
பச்சையான புற இதழ்கள் மூடியவண்ணம் இருக்கும். இது Calyx எனப்படும். பூவை மூடிய இந்தப் புறவிதழ்களையே குளிக்கும்போது 
பூவையர் மூடும் ஈரணி என்கிறார் புலவர். என்ன அருமையான கற்பனை பாருங்கள்! மற்றப் பூக்களுக்கும் இந்த புறவிதழ்கள் உண்டு. 
ஆனால் இந்தக் கழுநீர்ப் பூ நீருக்குள்ளேயே இருப்பதால் அது ஈரணி அணிந்துகொண்டிருக்கிறது என்று கூறுகிறார் நம் புலவர்.

			

	இந்தப் பைஞ்சுனை எங்கே இருக்கிறதாம்? அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரையில் இருக்கிறதாம். 
சந்து என்பது சந்தனமரம். அந்துவன் என்பவர் பரிபாடலின் எட்டாம் பாடலின் ஆசிரிரியர் நல்லந்துவனார். அந்துவன் என்ற பெயர் 
நல், ஆர் என்ற முன், பின் ஒட்டுகளைப் பெற்று நல்லந்துவனார் ஆனது. இவர் தமது பரிபாடல் பாடலில்,

	இமயக் குன்றினிற் சிறந்து
	நின் ஈன்ற நிரையிதழ்த் தாமரை
	மின் ஈன்ற விளங்குஇணர் ஊழா
	ஒரு நிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின்
	அருவி தாழ் மாலைச் சுனை – பரிபாடல் 8 : 12 – 16

	என்று குன்றின் அருவி தாழும் சுனையைக் குறிப்பிடுகிறார். இந்த நெடுவரை இருக்குமிடம் திருப்பரங்குன்றம். 
அது இங்கே தண்பரங்குன்றம் என்று அழைக்கப்படுகிறது. சந்து கெழு நெடுவரையாதலால் இது தண்பரங்குன்றமாயிருப்பதில் 
வியப்பில்லை. இந்தத் தண்பரங்குன்றத்தில் யார் இருக்கிறார்களாம்? 

	சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
	சினம் மிகு முருகன்.

	இருக்கிறார். இதன் வழியாக இன்னொரு புராணச் செய்தியை நமக்குத் தெரிவிக்கிறார் புலவர்.

	சூரைக் கொன்ற முருகன் – அந்த முருகன் வாழும் பரங்குன்றம் – அதில் அந்துவன் பாடிய நெடுவரை – அங்கிருக்கும் 
பைஞ்சுனை – அச் சுனையிலிருக்கும் தண்ணறுங் கழுநீர் – அதைப் போன்ற செண் இயல் சிறுபுறம்.

	எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ போய் முடிப்பதைப் போல் தோன்றினாலும், அதில் அத்தனை செய்திகளையும் வைத்து, 
அத்துணை இனிமையையும் சேர்த்து வைத்திருக்கும் புலவரின் திறம் பாராட்டற்குரியதன்றோ.

	சாதாரணக் கோடலிக் கொண்டை போட்டுக்கொண்டிருந்தாலே அதனைப் பாராட்டி மகிழ்வாரே – அந்தத் தலைவர் 
அதனையும் நினைத்துப்பார்க்காமல் வீங்கிறைப் பணைத்தோள் நெகிழ பிரிந்து சென்றுவிட்டாரே தலைவர் என்று தோழி 
புலம்புவதுபோல் தோன்றினாலும் பாடலின் இறுதியில் ஒரு நம்பிக்கைக் கீற்றையும் பதித்துவைக்கிறாள் அந்தத் தோழி. 

	உள்நாட்டில் பொருளீட்ட எத்தனையோ வழிகள் இருப்பினும் தொலைநாட்டுக்குப் பொருள்தேடச் செல்லும் செயலைச் 
சேய்நாட்டு அருஞ்செயல் என்கிறாள் தோழி. அந்தச் செயல் என்ன என்பதையும் விளக்கிக் கூறுகிறாள் – அது பொருள்பிணி. 
பிணி என்பதற்கு நோய் என்ற ஒருபொருள் உண்டு. தலைவன் பிரிந்து செல்லவேண்டியிருப்பதால், தலைவியைப் பொருத்த மட்டில் 
இது நோயே. ஆனால் பிணி என்பதற்குத் தன்வயப்படுத்தல் என்றும் பொருள் உண்டு. எங்கோ கிடக்கும் செல்வத்தைத் தன்வயப்படுத்திக் 
கொணர்வதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் செயலே பொருள்பிணி. இந்தப் பொருளீட்டலுக்காக தொலைதூரத்துக்குச் சென்று 
அங்குத் தங்கியிருக்கும் தலைவன், தான் சென்ற வழியில் பெண்யானை உண்பதற்காகக் கிளைகளை வளைத்துக்கொடுக்கும் 
ஆண்யானையையும் பார்த்திருப்பான். அது நினைவுக்கு வரும்போது அவன் விரைவில் வீடு திரும்புவான் என்ற தெம்பூட்டும் 
செய்தியோடு தன் உரையை முடிக்கிறாள் தோழி.

	இது பாலைத்திணப் பாடல். தலைவனின் பிரிவை நினைத்து இரங்கும் தலைவியின் நிலையைப் பற்றிய பாடல். 
இங்கே புன்தலை மடப்பிடி உண்டு. நெடுநிலை யாம் உண்டு  இவை பாலைநிலக் கருப்பொருள்கள். ஆனால் பாடல் முழுக்கப் புலவர் 
வளப்பத்துக்குரிய சொற்களையே பயன்படுத்துவதைக் காணலாம். தண்கயம் – வண்டுபடு துணை மலர் – வண்புனல் – தண்தழை – 
தண் பரங்குன்றம் – சந்து செழு நெடுவரை – இன் தீம் பைஞ்சுனை – ஈரணி – தண் நறும் கழுநீர் – என வளமையைக் குறிக்கும் 
எத்தனை சொற்கள் பார்த்தீர்களா? அதிலும், தண்கயம், தண்தழை, தண்பரங்குன்றம், தண் நறும் கழுநீர் என குளிர்ச்சிக்குரிய தண் என்ற
சொல்லை நான்குதரம் பயன்படுத்துகிறார் புலவர். பாடலே தண் கயத்து என்று தான் தொடங்குகிறது. இவ்வாறு முற்றிலும் வேறு 
திணைக்குரிய சொற்களைக் கொண்டு பாலைத்திணைக்குரிய இரங்கல் உணர்வினை மேலோங்கச் செய்யும் பாடலை இயற்றமுடியும் 
என்று புலவர் காட்டியிருப்பது அவரின் திறனுக்குச் சான்றுபகர்கிறது இல்லையா?