அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 54
	
பாடல் 54. முல்லைத் திணை பாடியவர் - மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்

துறை - வினைமுடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது

 மரபு மூலம் - மூவாத்திங்கள்!

	விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப
	வேந்தனும் வெம்பகை தணிந்தனன் றீம்பெயல்
	காரு மார்கலி தலையின்று தேரும்
	ஓவத் தன்ன கோபச் செந்நிலம்
5	வள்வா யாழி யுள்ளுறு புருள
	கடவுக காண்குவம் பாக மதவுநடைத்
	தாம்பசைக் குழவி வீங்குசுரை மடியக்
	கனையலங் குரல காற்பரி பயிற்றிப்
	படுமணி மிடற்ற பயநிரை யாயங்
10	கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர்
	கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க
	மனைமனைப் படரும் நனைநகு மாலைத்
	தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
	பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்
15	புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
	நீர்குடி சுவையிற் றீவிய மிழற்றி
	முகிழ்நிலாத் திகழ்தரு மூவாத் திங்கள்
	பொன்னுடைத் தாலி யென்மக னொற்றி
	வருகுவை யாயின் றருகுவென் பாலென
20	விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்
	திதலை யல்குலெங் காதலி
	புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே

 சொற்பிரிப்பு மூலம்

	விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப
	வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல்
	காரும் ஆர்கலி தலையின்று தேரும்
	ஓவத்து அன்ன கோப செம் நிலம்
5	வள் வாய் ஆழி உள் உறுபு உருள
	கடவுக காண்குவம் பாக மதவு நடை
	தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய
	கனையல் அம் குரல கால் பரி பயிற்றி
	படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
10	கொடு மடி உடையர் கோல் கை கோவலர்
	கொன்றை அம் குழலர் பின்றை தூங்க
	மனைமனை படரும் நனை நகு மாலை
	தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன்
	பண்ணன் சிறுகுடி படப்பை நுண் இலை
15	புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர்
	நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி
	முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள்
	பொன் உடை தாலி என் மகன் ஒற்றி
	வருகுவை ஆயின் தருகுவென் பால் என
20	விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி
	திதலை அல்குல் எம் காதலி
	புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே

அருஞ்சொற் பொருள்:

விருந்தின் மன்னர் = புதிய அரசர்; அருங்கலம் = அரிய அணிகலன்; தெறுப்ப = திறையாகக் குவிப்ப; வள்வாய் = உறுதிவாய்ந்த; 
ஆழி = சக்கரம்; மதவு நடை = செருக்கான நடை; தாம்பு அசை = கயிற்றால் பிணிக்கப்பட்ட; குழவி = பசுவின் கன்று; 
சுரை = பசுவின் மடி; மடிய = வற்றிப்போக; பரி = ஓட்டம்; மிடற்ற = கழுத்திலுடையன; நனை நகும் = மொட்டுகள் சிரிக்கும் (மலரும்); 
தீவியம் = இனிய சொல்; மிழற்றி = (மழலையில்)மென்மையாகப் பேசி; மூவாத் திங்கள் = மூப்பு அடையாத (இளைய) சந்திரன்;

 அடிநேர் உரை

	புதிதாய் முளைத்த அரசர்கள் அரிய அணிகலன்களைத் திறையாகக் கொட்ட
	(நம்)வேந்தனும் கொடிய பகைமை தீர்ந்தனன்; இனிமையான மழையைப் பெய்யும்
	மேகமும் பேரொலி எழுப்புகிறது; தேரை
	ஓவியம் போன்ற இந்திரகோபம் போன்று சிவந்த செம்மண் நிலத்தில்
5	உறுதியான சக்கரங்கள் பதிந்து உருண்டுவர,
	விரைந்து செலுத்துக! காண்போம் பாகனே! செருக்கான நடையுடன்
	கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க
	ஒலிக்கும் மணிகளைக் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்
	வளைந்த (வேட்டி)மடிப்பினையுடைய, கோலைக் கையிலே கொண்ட இடையர்,
10	கொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர,
	வீடுகள்தோறும் செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்;
	தனக்கென வாழாமல் பிறர்க்கு எல்லாம் உரியவனான
	பண்ணனின் சிறுகுடித் தோட்டத்திலுள்ள, நுண்ணிய இலைகளையும்
	புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
15	நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
	வளரும் நிலவினால் விளங்கும் பிறைமதியே!
	(கழுத்தில்)பொன்சங்கிலி அணிந்த என் மகன் இருப்பிடம் தெரிந்து
	வந்தால் (உனக்குப்) பால் தருவேன் என்று
	ஓரக்கண்ணால் பார்த்தவளாய் விரலால் (நிலவை) மீண்டும் மீண்டும் அழைத்து,
20	தேமல் படர்ந்த அல்குலையுடைய என் காதலி,
	புதல்வனிடம் பொய்யாகக் கூறும் பூங்குடியின் நிலையை(காண்போம் பாகனே) 

பாடலின் பின்புலம் 

	வேந்தனுடன் போர்மேற் சென்றிருக்கிறான் தலைவன். பகை மன்னர் சீக்கிரத்தில் பணிந்துவிட போர் முடிந்துவிடுகிறது. 
தலைவன் தன் தேரில் ஊருக்குப் புறப்படுகிறான். தன் இனிய மனைவி இனிய மொழியில் சிறுகுழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டும் 
அழகிய காட்சியைக் காணும் ஆவலில் தேர்ப்பகனை நோக்கி விரைவாகத் தேரைச் செலுத்தும்படி கூறுகிறான் தலைவன்.

பாடலின் சிறப்பு

	பாடலுக்குப் பின்புலமாகப் போர்முடிந்து மீளும் தலைவனைக் காட்டுகிறார் புலவர். வெம்பகையுடன் படையெடுத்துவரும் 
வேந்தனின் சினம் தணிக்க என்ன செய்யவேண்டும்? பெரும்செல்வத்தை அவன்முன் அள்ளிக்கொட்டவேண்டும். வேந்தனின் பலம் 
அறியாத அந்தச் சிற்றரசரை விருந்தின் மன்னர் என்று இகழ்ந்து பேசுகிறார் புலவர். புதுப்பணக்காரன் என்று நாம் இன்று இகழ்ந்து 
கூறுவதைப் போல. போரைத் தவிர்க்க அவர்கள் சீரிய செல்வத்தை அள்ளிக்கொட்டுவதை அருங்கலம் தெறுப்ப என்று விதந்து 
புகழ்கிறார் புலவர். 

	இது முல்லைத்திணைப் பாடல். எனவே முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுதாகிய காரும் சிறுபொழுதாகிய மாலையும் 
வெகு சிறப்பாகவே பாடலில் பரந்து காணப்படுகின்றன. போர்முடியக் கார் தொடங்குகிறது. ஆர்கலி தலையின்று என்ற புலவர் கூற்று 
இடியுடனும் மின்னலுடனும் பெருத்த ஓசையுடன் இறங்கும் கார்கால மழையை நம் கண்முன் காட்டுகிறதல்லாவா! பின்னர் ஓரிடத்தில் 
பசுக்கள் வீடு திரும்பும் மாலை நேரத்தை நனைநகு மாலை என்று அழகுற வருணிக்கிறார் புலவர். மொட்டுக்கள் சிரிக்கின்ற மாலையாம்!
என்ன அருமையான கற்பனை பாருங்கள்!

	முல்லை நிலம் என்பது செம்மண் பூமி. கார்கால முதல்மழையில் இலைகளிலிருந்த மேல்அழுக்கெல்லாம் கழுவப்பட்டுவிட, 
மரங்களும் செடிகளும் பச்சைப்பசேலென்று இருபறமும் எழுந்து நிற்க, அவற்றில் பசிய கொடிகள் உயரப் படர்ந்து நிற்க, 
செக்கச்செவேரென்ற நிலத்தில் வளைந்து வளைந்து செல்லும் ஒரு வண்டிப்பாதையைக் கற்பனைசெய்து பாருங்கள். எந்த ஒரு ஓவியக் 
கண்காட்சியிலும் கட்டாயம் இடம்பெறும் காட்சி இது. அப்படி ஒரு ஓவியக் காட்சி போல இருந்ததாம் தலைவன் வரும் தேரின் பாதை. 
ஓவத்தன்ன கோபச் செந்நிலம் என்கிறார் புலவர். ஓவம் என்பது ஓவியம். கோபம் என்பது செக்கச் செவேரென்ற இந்திரகோபப்பூச்சி. 
இது தம்பலப்பூச்சி என்றும் அழைக்கப்படும். அதுதான் கோபச் செந்நிலம். 

			

	அப்பொழுதுதான் மழைபெய்து ஓய்ந்திருக்கிறது. தரையெல்லாம் சேறும் சகதியாகவும் இருக்கும். அப்படிப்பட்ட தரையில் தேர் 
சென்றால் அதன் சக்கரங்கள் சகதியில் அமிழ்ந்துதானே செல்லும். அதைக்கூடப் புலவர் விட்டுவைக்கவில்லை. வள்வாய் ஆழி உள்ளுறுபு 
உருள என்கிறார் அவர். அந்தத் தேரின் சக்கரங்கள் உறுதிவாய்ந்தவை. அதனால் சகதியில் அமிழ்ந்தாலும் அதைப் பிளந்துகொண்டு 
செல்லக்கூடியவை. இருந்தாலும் தேரின் வேகம் சற்றுக் குறையத்தானே செய்யும்! எனவேதான் கடவுக பாக என்று தேர்ப்பாகனை நோக்கிச் 
சொல்கிறான் தலைவன். கடவுதல் என்பது முயன்று செலுத்துதல். நிலம் சகதியாய் இருக்கிறது, குதிரைகளை அடித்து விரட்டு என்பது 
இதன் பொருள். இவ்வளவு விரைந்து வீட்டுக்குச் செல்லவேண்டியதன் நோக்கம் என்ன? தன் காதலியாகிய பூங்கொடியின் நிலையைக் 
காண்குவம் என்று தன் பாகனிடம் மனம்விட்டுச் சொல்கிறான் தலைவன். மீதமுள்ள பாடல் அந்தக் காதலியின் நிலையைப் பற்றியது.

	இருப்பினும் அந்தக் காதலியின் நிலையை நேரடியாக அடுத்துக் கொணரவில்லை நம் புலவர். மேயச் சென்ற பசுக்கள் தத்தம் 
வீடுகளுக்குத் திரும்பும் மாலைநேரத்தை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார்.

	பகலெல்லாம் இரைமேய்ந்த பசுக்களுக்கு மாலை வந்தவுடன் வீட்டிலிருக்கும் தம் கன்றுகளின் நினைவு வந்துவிடுகிறது. 
எனவே திரும்பும்போது அவை மிகவும் ஆர்வத்துடன் விரைந்து நடந்துவரும் அல்லவா! தம் கன்றினை நினைத்து ‘அம்மா, அம்மா’ 
என்று அடித்தொண்டையில் குரலெழுப்பிக்கொண்டு அவை ஓட்டம் பிடிக்கும் காட்சியை அழகுற விவரிக்கிறார் புலவர். 
கனையல் அம் குரல, கால் பரி பயிற்றி என்கிறார் அவர். நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து வருவதே பரி பயிற்றுதல். அவ்வாறு ஓடும்போது 
பசுக்களின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிகள் ‘கணீர் கணீர்’ என ஒலிக்கும் அல்லவா! படுமணி மிடற்ற என்கிறார் புலவர். மிடறு 
என்பது கழுத்து. படுதல் என்பது ஒலித்தல். அவையெல்லாம் பால்தரும் பசுக்கள். எனவேதான் அவற்றை பயநிரை ஆயம் என்கிறார் அவர். 
தம் கன்றுகளை நினைத்தவுடனே பசுக்களுக்கு மடி பெருக்கத் தொடங்கிவிடுகிறது. இனி அது எவ்வாறு சிறிதாகும்? அப் பசுக்களின் 
அன்புக் கன்றுகள் வாய்வைத்து சப்பிச் சப்பி இழுக்கும்போதுதான் அந்த மடிகள் தன் கனம் குறையும். வீங்கு சுரை மடிய என்று 
அழகாகவும் சுருக்கமாகவும் கூறுகிறார் புலவர். சுரை என்பது பசுவின் மடி. மடிய என்பது குறைய என்று வரும். பசுக்கள் நாடியோடும் 
கன்றுகளின் நிலை என்ன? அவை மதவுநடைக் கன்றுகளாம். ஒரு கைக்குழந்தையை இடுப்பிலிருந்து இறக்கிவிட்டால் அது எப்படி நடக்கும்? 
அதுதான் மதவு நடை. ஈன்று சில நாள்களே ஆன கன்றுகள் அப்படித்தான் நடக்கும். எனினும் அவை அங்குமிங்கும் போய்விடக்கூடாதே 
என்று அவற்றைக் கயிற்றால் கட்டிவைத்திருப்பார்கள். தாம்பு அசைக் குழவி என்கிறார் புலவர். அசை என்றால் தங்கு என்று பொருள். 
தாம்புக்கயிற்றால் தங்கவைக்கப்பட்டிருக்கும் கன்றுகள் அவை. 

			

	ஆமாம் இந்த பசுக்கூட்டம் தாமாகவா மேய்ந்து திரும்பும்? இல்லை, அவற்றை ஓட்டிச் செல்ல இடையர்கள் உண்டு. அவர்கள் 
கோவலர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் வேட்டியைக் கட்டும்போது ஒரு பக்க மடிப்பில் தின்பொருள்களை நிறையச் 
சுருட்டிவைத்திருப்பார்கள். கொடுமடி உடையர் என்கிறார் புலவர். மடியில் வளைத்துச் சுருட்டியிருப்பதே கொடுமடி. மாடுகளை 
வழிநடத்தவும், அவற்றுக்கு இலைதழை பறித்துப்போடவும் ஒரு கோலை அவர்கள் வைத்திருப்பர். அதனையே கோல் கைக் கோவலர்
என்கிறார் அவர். கொன்றைக்காய் நீளமாக இருக்கும். அது நெற்றானால் கருப்பாக மாறிவிடும். உள்ளே துளை இருக்கும். எனவே 
கொன்றை நெற்று ஒரு குழல் போலிருக்கும். அதைப் பிடுங்கி புல்லாங்குழல் போல் வாயில்வைத்து ஊதினால் ஒலி எழும்பும். 
கோவலருக்குப் பொழுது போக வேண்டுமே. இந்தக் கொன்றை நெற்றுகளைப் பறித்து ஊதிக்கொண்டு இருப்பார்களாம். கொன்றையங்குழலர் 
என்கிறார் புலவர். பசுக்கள் நாலுகால் பாய்ச்சலில் ஓடுகின்றனவே, அவற்றின் பின்னால் கோவலர்களும் ஓடிக்கொண்டிருப்பார்களோ? இல்லை, 
மாறாக மெதுவாக நடந்துவந்துகொண்டிருக்கிறார்கள். பின்றைத் தூங்க என்கிறார் அவர். ஓடுகிற மாடுகள் ஓட மெதுவாகச் செல்லும் 
மாடுகளும் இருக்கத்தானே செய்யும். அவற்றின் பின்னால் மெதுவாக நடந்துவந்துகொண்டிருக்கிறார்கள் இந்தக் கோவலர்கள். தூங்குதல் 
என்பது மெதுவாக நடத்தல். ஓடுகின்ற பசுக்கள் வழிமாறிப் போய்விடமாட்டாவோ? இல்லை, அவை தம் கன்றுகளை நாடி ஓடுகின்றன. 
எனவே அவை தத்தம் மனைகளில் சரியாகச் சென்று புகுந்துகொள்ளுகின்றன. மனைமனைப் படரும் நனை நகு மாலை என்கிறார் புலவர். 
நனை நகு மாலையை ஏற்கனவே பார்த்து இரசித்திருக்கிறோம். இத் தொடர் எத்துணை அழகாக வந்து விழுந்திருக்கிறது பார்த்தீர்களா? 
இதுதான் புலமையின் சிறப்பு. முல்லைநிலத்தின் சிறப்பை நம் கண்முன் கொண்டுவர இந்த மாலைக் காட்சியை முன்னிறுத்துகிறார் புலவர். 
ஒரு கைதேர்ந்த ஓவியன் ஓர் அழகான இளம்பெண்ணை அவளது முழு அணிகலன்களுடன் வரையும்போது, அந்த அணிகலன்களின் 
ஒவ்வொரு நுணுக்கமான வேலைப்பாடையும் எத்துணை நுண்ணிய கோடுகளால் கவனமாகக் குறிப்பாரோ, அத்துணை நுணுக்கத்தோடு 
இந்த மாலைக் காட்சியைப் புலவர் ஒரு சொற்சித்திரமாகப் படைத்திருக்கும் விந்தையைப் படித்துப் படித்துப் பரவசமடையலாம்.

	மாலையில் கதிரவன் ஒளி மங்கும்போது கிழக்கில் பிறைநிலா பிரகாசிக்கத் தொடங்கும். அமாவாசைக்கு அடுத்த சில நாள்களில் 
இது நடக்கும். அதைப் பார்த்தவுடன் பிறைநிலவைக் காட்டித் தன் பிள்ளைக்குப் பாலூட்டும் தன் அன்பு மனைவியின் நினைவு தலைவனுக்கு 
வருகிறது. பால்குடிக்க மறுக்கும் பிள்ளைக்கு நிலவைக் காட்டி, “நிலா வா, இந்தப் பாலக் குடிச்சுட்டுப்போ” என்று தன் இனிய குரலால் 
பொய்யாக நிலவை விளிக்கும் காட்சியும் தலைவன் நினைவில் நிழலாடுகிறது. தன் மனதுக்குகந்த மனைவியின் இனிய குரலால் அவன் 
சொக்கிப்போயிருக்கிறான். சிறுகுடி என்ற ஊரில் வாழும் பண்ணன் என்றொரு வள்ளலின் தோட்டத்தில் காய்க்கும் நெல்லியைத் தின்றவர் 
நீர்குடித்தால் இனிக்குமே அதைப்போன்ற தித்திக்கும் குரலிலிருக்குமாம் தலைவின் மொழி. இங்கு பண்ணன் பற்றிய செய்தி தேவையற்றது 
போல் தோன்றினும், தனக்கென வாழா ஒரு பிறர்க்குரியாளனைப் போற்றும் நோக்கில் புலவர் இந்த உவமையைப் படைத்திருக்கிறார் எனலாம். 
தமிழக மன்னர்களைப் பற்றிய நிறைய வரலாற்றுச் செய்திகள் அகப்பாடல்களுக்குள் புதைந்துகிடக்கின்றன. எனவே இப் பாடல்கள் நமக்கு 
ஒரு வரலாற்றுப் பெட்டகமாகவும் திகழ்கின்றன. அப்படிப்பட்ட குறிப்புத்தான் இதுவும் என எடுத்துக்கொள்ளலாம். அந்த நெல்லிக்குக்கூட 
இவர் கொடுக்கும் அடைமொழிகளின் அழகைக் கவனித்தீர்களா! புன்காழ் நெல்லிப் பைங்காய் என்கிறார் புலவர். நெல்லிக்கொட்டை அழகான 
உருண்டையாக இல்லையாம். புன்காழ் என்கிறார். காழ் என்பது விதை. புன் என்பது புல்லிய, அழகில்லாத என்று பொருள் தரும். நெல்லி 
மரத்தில் இலையைக்கூடப் புலவர் பாடாது விட்டுவைக்கவில்லை. நுண்ணிலை என்கிறார். எவ்வளவு சிறிய இலை, படத்தில் பாருங்கள்! 
பாடல் முழுக்கப் புலவர் காட்டும் இத்தகைய மிக நுணுக்கமான விவரணங்கள்தாம் இந்தப் பாடலைச் சிறந்த ஒரு பாடலாக ஆக்குகின்றன.

			

	தன் மனைவியின் குரல் தலைவனுக்கு இனிய மழலையாகத் தோன்றுகிறதாம். காதல் மயக்கத்திலோ, கலியாணம் ஆன 
புதுதிலோ தலைவன் இவ்வாறு கூறினால் அது வியப்பல்ல. ஆனால் ஒரு குழந்தையும் பிறந்து அது கெண்டியில் பால்குடிக்கும் நிலைக்கு 
வளர்ந்த பின்னரும் தலைவியின் பேச்சை தீவியம் மிழற்றி என்று தலைவன் கூறுவானானால், தலைவன் தலைவி ஆகியோரின் அன்பு 
வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருந்திருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம். அந்த அளவுக்கு நேசிக்கும் அன்பு மனைவியைச் சீக்கிரம் 
பார்க்கவேண்டும் என்ற ஆவலில் கடவுக பாக என்று தலைவன் கூறுவதின் பொருள் இப்பொழுது விளங்குகின்றது அல்லவா!

	அடுத்து, தலைவி குழந்தைக்கு நிலவைக்காட்டும் காட்சியை இன்னோர் அழகுச் சித்திரமாகப் புனைந்துகாட்டுகிறார் புலவர். 
இடுப்பில் குழந்தை - எதிரில் நிலா. முகம் நிலவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. கண்களோ குழந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. 
எனவே அவள் கடைக்கண்ணில் குழந்தையைப் பார்த்துக்கொண்டு, நிலவை அழைக்கட்டுமா? என்கிறாள். பின்னர் குழந்தையை 
ஏய்க்கும்வண்ணம், முகம் குழந்தையைப் பார்க்க, கடைக்கண்ணால் நிலவைப் பார்த்து “வருகுவையாயின் தருகுவன் பால்” என்கிறாள். 
இவ்வாறு அவளது முகமும் கண்ணும் மாறுபட்ட நிலையில் இருப்பதை விலங்கமர் கண்ணள் என்கிறார் புலவர். விலங்கு என்பது குறுக்கு 
நிலை. முகமும் கண்களும் ஒன்றுக்கொன்று குறுக்காக இருத்தல். ஒருக்கணித்த பார்வை என்கின்றன உரைகள். இவ்வாறு நிலவைப் 
பார்த்து அழைக்கும் தலைவி, சில விரல்களால் கெண்டியை இறுகப் பிடித்தவாறு, சுட்டுவிரலை நீட்டி வளைத்து, நிலவை “வா வா” 
என்கிறாளாம். விரல்விளி என்கிறார் புலவர். இவ்வாறு அழைக்கும்போது ஒரேஒருதரம் மட்டும்தான் அழைப்போமா?, மீண்டும் மீண்டும் 
விரலை முன்னும் பின்னும் அசைத்துப் பலமுறை செய்யமாட்டோமா? விரல் விளி பயிற்றி என்று அதனையும் விடாமல் குறிப்பிடுகிறார் 
புலவர். பயிற்றுதல் என்பது திரும்பத் திரும்பச் செய்தல். எத்துணை நயம் எத்துணை அழகு பாருங்கள். கீழ்வானில் மெதுவாக எழும் 
பிறைநிலவை முகிழ் நிலா என்கிறார் அவர். முகிழ்தல் என்றால் மெதுவாகத் தோன்றுதல் அல்லது முளைத்தெழுதல். அது பிறைமதி. 
எனவே இளைய மதி – மூப்பு அடையாத மதி – மூவாத் திங்கள். என்ன பொருத்தமான சொல்கட்டு! சற்றே இருட்டிவிட்டதால் பிறை 
நிலாவும் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டதாம். முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள் என்பது என்ன அருமையான கட்டமைப்பு 
பார்த்தீர்களா! திகழ்தல் என்பது ஒளிர்தல், பொலிவுடன் இருத்தல். 

			

	பொன்னுடைத் தாலி என் மகன் என்ற தொடரில் தலைவனின் செல்வநிலையைச் சிக்கனமாகக் குறிப்பிட்டுவிட்டார் புலவர். 
தலைவி கிழக்கு நோக்கி நிலவைக் காட்டிக்கொண்டிருக்கிறாள். தலைவன் மேற்கிலிருந்து வருகிறான். தொலைவிலிருந்து பார்க்கும்போது 
தலைவியின் பின்புறம் நிழல்வடிவமாகத் (silhouette) தெரியும். அவளது அகன்ற முதுகு இறங்கிச் சிறுத்த இடை ஆகிப் பின் பருத்த 
பின்புறமாக எழும் அந்த அழகை மனதால் கண்டு சொக்கிய தலைவன் திதலை அல்குல் என் காதலி என்று தித்திக்கும் மொழிகளால் 
அவளை வருணிக்கிறான்.

	இவ்வாறு சொல்லுக்குச்சொல் பொருளைத் திணித்து, அடிக்கு அடி அழகை நுழைத்து, காட்சிக்குக் காட்சி கவின்சித்திரத்தைக் 
காட்டி நம்மை மயக்கும் மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனாரின் இந்த அற்புதப் படைப்பைப் பன்முறை படித்துப் படித்துச் 
சுவைக்கலாம்.