அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                                                   அகநானூறு - 53
	
பாடல்  53. பாலைத் திணை  பாடியவர் - சீத்தலைச் சாத்தனார்

துறை - வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது

  மரபு மூலம் - பொருளே காதலர் காதல்

	அறியாய் வாழி தோழி யிருளற
	விசும்புடன் விளங்கும் விரைசெலற் றிகிரிக்
	கடுங்கதி ரெறித்த விடுவாய் நிறைய
	நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய்
5	நீரற வறந்த நிரம்பா நீளிடை
	வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
	கள்ளியங் காட்ட கடத்திடை யுழிஞ்சி
	லுள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
	பொரியரை புதைத்த புலம்புகொ ளியவின்
10	விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோ
	ரெழுத்துடை நடுக லின்னிழல் வதியும்
	அருஞ்சுரக் கவலை நீந்தி யென்று
	மில்லோர்க் கில்லென் றியைவது கரத்தல்
	வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
15	பொருளே காதலர் காத
	லருளே காதல ரென்றி நீயே


 சொற்பிரிப்பு மூலம்

	அறியாய் வாழி தோழி இருள் அற
	விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
	கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய
	நெடும் கால் முருங்கை வெண் பூத் தாஅய்
5	நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
	வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
	கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில்
	உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
	பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
10	விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
	எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும்
	அரும் சுரக் கவலை நீந்தி என்றும்
	இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
	வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
15	பொருளே காதலர் காதல்
	அருளே காதலர் என்றி நீயே

அருஞ்சொற் பொருள்:

திகிரி = சூரியன் ; விடுவாய் = வாய் விடுத்தது, பிளவு; தாஅய் = பரவி; வள் எயிறு = கூரிய பற்கள்; பிணவு = பெண் நாய்; 
கடம் = கடுமையான வறண்ட நிலம்; உழிஞ்சில் = வாகை மரம்; நொள்ளை = சிறு நத்தை; அரை = அடிமரம்; இயவு = வழி; 
விழுத்தொடை = நன்றாகக் கட்டப்பட்டது; கவலை = கிளைத்துச் செல்லும் வழிகள்; கரத்தல் = மறைத்தல்; வலிப்ப = வற்புறுத்த; 

அடிநேர் உரை

	(நீ) அறியமாட்டாய் தோழி, வாழ்வாயாக!, இருள் நீங்கும்படியாக
	வானம் முழுவதிலும் ஒளிவிட்டு, வேகமாகச் செல்லும் ஞாயிற்றின்
	கடுமையான கதிர்கள் எறித்து உண்டாக்கிய வெடிப்புகள் நிறையும்படியாக,
	நீண்ட அடிமரத்தைக் கொண்ட முருங்கையின் வெண்மையான பூக்கள் பரவியிருக்க,
5	நீரில்லாமல் வரண்டுபோன முடிவில்லாமற்செல்லும் நீண்ட இடைவெளியில்,
	கூரிய பற்களையுடைய செந்நாய் பசியால் வருந்தும் தன் பெண்நாயுடன் -
	கள்ளிகள் நிறைந்த கட்டாந்தரை நிலத்தில் வாகைமரத்தின் (அடிமரத்தை)
	உள்ளிருக்கும் ஊன் வாடிப்போன சுருண்ட மூக்குள்ள சிறிய நத்தைகள்
	பொரித்துப்போனது போலக் கூட்டமாய் மொய்த்திருக்கும் ஆளரவமற்ற வழியில்
10	இழுத்துக்கட்டிய வில்லையுடைய மறவர்கள் அம்பு எய்ய, இறந்து வீழ்ந்தோரின்
	பெயரெழுதிய நடுகல்லின்  - இனிய நிழலில் தங்கியிருக்கும்
	அரிய பாலைநிலத்தின் கிளைத்துச் செல்லும் வழிகளைக் கடந்துசென்று, என்றும்
	இல்லாதவர்களுக்கு இல்லையென்று கூறி அவரைப் போலிருந்து மறைத்தலைச்
	செய்ய மாட்டாத நெஞ்சம் வற்புறுத்தலால், நம்மைக்காட்டிலும்
15	பொருளே காதலரின் விருப்பம்;
	(அதைவிடுத்து, அவரின்) காதல் அருள்மீதுதான் என்கிறாய் நீ.


பாடலின் பின்புலமும் பொருள் முடிபும் 

	தலைவன் பொருள் சம்பாதிக்கப் புறப்பட்டுச் சென்றுவிட்டான். அவன் பிரிவைத் தாங்கமாட்டாத தலைவி 
அரற்றுகின்றாள். “என்னைக் காட்டிலும் அவருக்குப் பொருள் பெரிதாகப்போய்விட்டதோ?” என்று புலம்புகின்றாள். தோழி 
அவளைச் சமாதானப்படுத்துகின்றாள். “இல்லையென்று கேட்டுவருவோர்க்கு இல்லையென்று கூறி உள்ளதை மறைக்க 
முடியாத கருணையுள்ளம் கொண்டவன் அவன்” என்கிறாள் தோழி. “தலைவன் பிரிவுக்கு உண்மையில் அவனது 
பொருளாசைதான் காரணம், நீ சொல்வது போல் கருணையுள்ளம் அல்ல” என்று மறுத்துரைக்கிறாள் தலைவி.

பாடலின் சிறப்பு

	இது பாலைத்திணைப் பாடல். எனவே எனவே பாலைத்திணைக்குரிய சிறுபொழுதாகிய நண்பகலும் 
பெரும்பொழுதாகிய வேனிலும் வெகு சிறப்பாகவே பாடல் முழுதும் பரந்து நிறைந்திருக்கின்றன. பாலைநிலத்தின் 
கடுமையை நம் கண்முன் கொண்டுவர மூன்று காட்சிகளை முன்னிறுத்துகிறார் புலவர்.

	முதலாவது, 
	
			இருள் அற
	விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
	கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய
	நெடும் கால் முருங்கை வெண் பூத் தாஅய்
	நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை

	இது ஒரு நீண்ட வெளி – 	நீள் இடை. அது ஏன் அகன்ற இடை இல்லை? நாம் செல்லுகின்ற திசையில்தான் நம் 
பார்வை செல்லும். அக்கம்பக்கம் எப்படியிருந்தால் என்ன? செல்லுகின்ற பாதை இருக்கும் வெளி நீண்டுகொண்டே போகிறது. 
அதனால்தான் நீள் இடை என்கிறார். It is not a vast land; but is a prolonged land. செல்லச் செல்ல சென்றுகொண்டே 
இருக்கும் இடை – தண்ணீர் ஊற்ற ஊற்றத் தளும்பாத குடம் போல – நடக்க நடக்க முடிவுறாத வெளி – நிரம்பா நீள் இடை. 
சரி, கண்ணுக்கெட்டியவரை கரும்பச்சைப் போர்வையாய் கண்ணுக்கினிய கவின் சோலைகள் நிரம்பிய வெளியா அது? 
வறந்த இடை – காய்ந்துபோன மரங்கள் குச்சி குச்சியாய்க் கம்பங்கொல்லைப் பொம்மைகளாய் நின்றுகொண்டிருக்கும் 
வறண்ட பூமி அது. எங்கிருந்தோ வந்து குறைந்தபட்சம் கரையோரங்களையாவது பசுமைப்படுத்தி, தோண்டினால் நீர் கொடுக்க, 
ஏதாவது காய்ந்துபோன காட்டாறு தென்படுகிறதா? இல்லை, நீரின் அடையாளமே இல்லாமற்போய்விட – நீரற வறந்த நிரம்பா 
நீள் இடை. ஒவ்வொரு சொல்லிலும் இத்துணை பொருள்களையும் பொதிந்து வைத்திருக்கிறார் புலவர். சங்க இலக்கியங்களின் 
பெருமையே இதுதான். அவர்கள் எழுதிய மிகப் பெரிய பனை ஓலையே 8” x 3” அளவுதான். இதற்குள் குத்தூசியை வைத்துக் 
குதறிக் குதறி எழுதும்போது, இறுகத் திணித்த சொற்களைத்தான் அவர்கள் எழுதுவார்கள். 

	இருள் அற விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரியின் கடுங்கதிரால் காய்ந்து பிளந்துபோன கட்டாந்தரை நிலம் 
அது. பிற காலங்களில் கதிரவன் காலையில் எழுந்தபின், மெதுவாக வெகுநேரங்கழித்தே ‘சுள்’-ளென்ற வெயில் தாக்கும். 
ஆனால் கோடைக்காலத்தில் கதிரவன் இருளைக் கிழித்துக்கொண்டு வெளியேறிய சில மணி நேரத்திலேயே வெப்பம் தாக்கத் 
தொடங்கிவிடும். இதைத்தான் விரைசெலல் திகிரி என்று புலவர் குறிப்பிடுகிறார். இதனை வேறு விதமாகவும் நோக்கலாம். 
குளிர்காலத்தில் பகல் சிறுத்து இரவு நீண்டு இருக்கும். ஆனால், வேனிற்காலத்தில் பகற்பொழுது நீண்டு இரவுப்பொழுது 
சிறுத்துவிடும். இப்பொழுதுதான் இருண்டது என்று கண்ணயர்ந்த சிறிது நேரத்தில் இருள் அற விசும்புடன் விளங்கும் திகிரி 
விரைவாகத் தோன்றிவிடும் என்ற கருத்தில் புலவர் விரை செலல் திகிரி என்று சொல்வதாகவும் கொள்ளலாம்.

	அடுத்து, வெயிலின் கடுமையால் தரை பாளம் பாளமாக வெடித்திருக்கிறதாம். கடுமையான வறட்சிக் காலத்தில்தான் 
இவ்வாறு நிகழும். எனவே பாலைநிலத்தில் இத்துணை வறட்சி நிலவும்போது பாலை நிலத்தை ஒட்டிய பகுதியிலும் வறட்சி 
இருந்திருக்கலாம். எனவேதான் பொருளீட்ட தலைவன் வெளிநாடு சென்றிருக்கலாம். இந்தப் பாளம்பாளமான வெடிப்புகளில் 
முருங்கைபூக்கள் பரவி வெடிப்பை மூடிக்கிடக்குமாம். நீரின்றி நிலமே வெடித்துக்கிடக்கும்போது முருங்கை மட்டும் எப்படிப் 
பூத்துக்கிடக்கும். பயிரியலார் கூறுகிறார்கள், “Moringa is a sun- and heat-loving plant“. பார்த்தீர்களா, முருங்கைக்கு வேனில் 
பிடிக்குமாம். அதுமட்டுமல்ல, நீரற்ற இடத்தில் வளரும் முருங்கை ஆண்டுக்கு ஒருமுறைதான் பூக்குமாம். அதுவும் எப்பொழுது? 
ஏப்ரல் முதல் ஜூன் வரை – அதாவது சுட்டுப்பொசுக்குகிற வெயிற்காலத்தில்! புலவர் கூற்று சரிதானே!

	நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை என்று சொல்லிவிட்டுப்போகாமல், பிளவுகளில் முருங்கைப்பூக்கள் மூடிக்கிடக்கும் 
என்ற அடைமொழியைப் புலவர் ஏன் குறிப்பிடுகிறார்? அந்த வறட்சியிலும் ஒரு செழுமையைக் காட்டுகிறார் புலவர். அந்தப் பூக்கள் 
தாமாக உதிர்வதில்லை. மேல் காற்றடிக்கப் பூக்கள் உதிர்ந்து, கீழ் காற்றடிக்க அவை புரண்டுபோய் பள்ளங்களில் விழுகின்றன. 
ஆக, வறட்சிக் காலத்தில் உழைப்புக் காற்றடிக்க, பொருளென்னும் முருங்கைப்பூக்கள் வறுமையென்னும் பிளவுகளை மூடிமறைக்கும் 
என்று புலவர் சொல்கிறாரோ!

			

	முருங்கை மரங்கள் நெட்டுக்குத்தாய் உயர வளரும். வீட்டில் வளரும் முருங்கைகளை வெட்டிவிட்டாலும், புதிதான 
கிளைகள் மீண்டும் நெடிதாக நீண்டுயரும். இதையே புலவர் நெடுங்கால் முருங்கை என்கிறார். வெள்ளிப்பணம் போல அந்த 
முருங்கை மரங்கள் வெண்மையாய்ப் பூத்திருக்கும் என்று கூறவந்தவர் முருங்கை வெண்பூ என்கிறார்.

	இவ்வாறு ஒரு சிற்பி பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிற்பம் போல எண்ணி எண்ணி எழுதிய இந்த சங்கச் செய்யுள் 
எத்தனை அழகுகளைத் தாங்கிநிற்கிறது!!

	அடுத்து, புலவர் காட்டுவது தமக்குக் கிடைத்த சிறிய நிழலை இன்னிழலாய் எண்ணிப் படுத்திருக்கும் ஒரு செந்நாயும் 
அதன் பிணவும்.

	வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
	---------- ------------ ------------
	---------- ------------ ------------
	---------- -------- புலம்புகொள் இயவின்
	விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
	எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும்
	அரும் சுரக் கவலை

	கவலை என்பது கவர்த்த வழிகள். ஆளரவமற்ற ஒரு கட்டாந்தரைப் பூமியில் இதுதான் வழி என்று எவரோ சொல்ல, 
நெடுந்தூரம் நடந்து சென்ற பின், அந்த வழி இரண்டு மூன்றாகப் பிரிந்துகிடந்தால் என்ன செய்வீர்கள்? குத்துமதிப்பாக ஏதோ 
ஒன்றைத் தெரிந்தெடுத்துச் செல்லவேண்டும். சிறிதுதொலைவு போய்ப்பார்த்துவிட்டுத் திரும்பலாமா என்றால் அதுவும் முடியாது. 
இருப்பதுவோ அருஞ்சுரம். கடப்பதற்கரிய காட்டுவழி. அங்கே வேறு யாராவது இருந்தால் வழி கேட்கலாம். சுற்றும் முற்றும் 
பார்த்தால் ஒரு செந்நாய் தன் துணையுடன் கிடைத்திருக்கிற ஒரு சிறிய நிழலில் படுத்துக்கொண்டு நம்மையே 
பார்த்துக்கொண்டிருக்கிறது. அதன் பிணவுக்கு ஒரே பசி. நீங்கள் சற்றுத் தள்ளாடினாலும் போதும். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து 
உங்களைக் குதறித் தன் பெடையின் பெரும்பசியைத் தீர்த்துவிடும். பாருங்கள், இப்போதே உங்களைத் தன் எச்சில் ஒழுகப் 
பார்த்துக்கொண்டிருக்கிறது. தன் உதடுகளை நாவால் தடவும்போது அதன் பற்களைப் பார்க்கிறீர்கள். அப்பப்பா, என்ன கூர்மை! 
வள்ளெயிற்றுச் செந்நாய்! அதனுடைய பசியை அது பொறுத்துக்கொள்ளும். தன் மனத்திற்கினியவளின் பசியைக் (வருந்து பசிப் 
பிணவொடு) கண்டபின் சும்மா இருக்கமுடியுமா? இருப்பினும் காத்துக்கிடக்கிறது. எங்கே? ஒரு குத்துக்கல்லின் நிழலில். 
பொசுக்குகின்ற வெயிலில், பொட்டைக்காட்டில், இருக்கின்ற நிழலும் இனிய நிழல்தானே! அந்த இன்னிழல் வதியும் செந்நாய் 
பார்க்கவே ஒரு பயங்கரக் காட்சி. இந்தக் கட்டாந்தரையில் ஒரு குத்துக்கல் எப்படி வந்தது? ஆமாம், அது நடுகல் - யாரோ நட்டது. 
அது வெறுங்கல் அல்ல – எழுத்துடை நடுகல். போகிற இடத்தின் தொலைவைப் பற்றி ஏதாவது எழுதியிருக்குமோ என்று 
உற்றுப்பார்த்தால் – அது இறந்தோருக்கு எழுதப்பட்ட நடுகல். செல்கின்ற வழியில் முடியாமலோ, நோய்வாய்ப்பட்டோ, 
இடையிலேயே இறந்துபோனவருடையதோ? இல்லை அவர்கள் மறவர் வில்லிட வீழ்ந்தோர்.  ஆறலைக் கள்வர் எனப்படும் 
வழிப்பறிக்காரர்கள் போவோர் வருவோரின் உடைமைகளைக் கைப்பற்ற அவருடன் மல்லுக்கட்ட வேண்டும். எனவே, அவர்கள் 
தொலைவில் வரும்போதே அவர்மீது அம்பெய்து அவரைக் கொன்று பின்னர் அவரின் உடைமைகளை எடுத்துக்கொள்வர். மிகத் 
தொலைவில் வரும்போதே அவர் மீது அம்பெய்யவேண்டுமென்றால் அந்த வில் வலிமையான கட்டுமானம் உள்ளதாக 
இருக்கவேண்டும். அதனால்தான் புலவர் சொல்கிறார் விழுத்தொடை மறவர் – தொடை என்றால் தொடுக்கப்பட்டது – 
கட்டப்பட்டது. அது சிறப்பாக இருந்தால் அதுவே விழுத்தொடை. 

	இதோ நீண்டு செல்கிறதே இந்தப் பாதையில் போவோர் வருவோர் யாரையும் காணோமே! யாரேனும் வரப்போக 
இருந்தால் கள்வர்கள் பயம் இராது. இதுவோ ஆளரவமற்ற அத்துவானக் காடாக இருக்கிறதே – புலம்புகொள் இயவு என்பார்களே 
அதுதான் இதுவோ? இயவு என்பது பாதை. புலம்பு என்பது தனிமை. தனிமை என்றால் என்னவென்று உணரவைக்கும் 
புகலிடமற்ற நெஞ்சு நடுக்குறும் இயவு.

				

	வள்ளெயிற்றுச் செந்நாய் ஒரு பயங்கரம் – அது படுத்துக்கிடக்கும் நிழலைத்தரும் நீத்தார் நினைவுக்கல் இன்னொரு 
பயங்கரம். அவர்கள் எப்படி இறந்தனர் என்ற காட்சி இன்னும் பயங்கரம். நிற்கின்ற இடமோ குழப்பத்தை உண்டாக்கும் வகையில் 
கிளைத்துச் செல்லும் கவர்த்த வழிகள். துணைக்கு வேறு யாரையும் அழைக்கமுடியாத புலம்புகொள் இயவு. இத்தனை 
பயங்கரங்ளைச் சுமந்துகொண்டிருக்கிறது அந்த இரண்டாவது பாலைக் காட்சி.

	மூன்றாவதாகப் புலவர் காட்டும் பாலைக் காட்சி, இரண்டாவது பாலைக் காட்சிக்கு இடையில் அடங்கிக்கிடக்கும் 
நத்தைக் கூட்டம். 

	(கள்ளி அம் காட்ட கடத்து இடை) உழிஞ்சில்
	உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
	பொரி அரை புதைத்த (புலம்பு கொள் இயவின்)

	சில மரங்கள் காய்ந்துபோனால் அதன் அடிமரத்துப் பட்டைகள் தொட்டவுடன் ‘பொலபொல’-வென்று உதிரும். இதனைப் 
பொரியரை மரம் என்பர் – பொரிந்துபோன நடுப்பகுதியைக் கொண்ட மரம். இந்தக் கட்டாந்தரைப் பாதையோரத்தில் சில காய்ந்துபோன 
மரங்கள் இருக்கின்றன. புலவர் காட்டுவதுவோ உழிஞ்சில் என்ற வாகை மரம். இது காய்ந்துபோய் நின்றாலும் இதன் நடுமரம் 
உறுதியான, வழவழப்பான தண்டால் ஆனது. 

				

	இந்த நடுமரத்தைச் சுற்றிலும் நொள்ளை எனப்படும் சிறு நத்தைகள் மொய்த்துக்கிடக்கின்றன. சரியான உணவின்றி 
இவை மேனி மெலிந்துள்ளன – உள்ளூன் வாடிய நொள்ளை. இவற்றுக்கு மேலே கூடு போர்த்தியிருப்பதால் அதன் உள்ளே இருக்கும் 
மேனியை உள்ளூன் என்கிறார் புலவர். எத்துணை கூர்த்த நோக்கு – அதனையும் குறித்துச் சொல்லும் நுண்மை விவரணம் 
பார்த்தீர்களா? அதுமட்டுமல்ல, அவை எப்போதாவது வெளியுலகைப் பார்க்கும்போது தலையைக் கூட்டுக்கு வெளியே நீட்டும். 
அப்போது அதன் முன்பக்கம் ஓர் உருவமற்ற உருவமாய்த் தோன்றும். அதனையே சுரிமூக்கு என்கிறார் புலவர். அது ஏன் மரத்தில் 
அடைந்துகிடக்கிறது? நத்தைகள் தம் மேனியை முழுதும் தரையில் பரவவிட்டு, இழுத்து இழுத்து ஊர்ந்து செல்லும். இந்தப் பொசுக்குகிற 
நிலத்தில் அப்படிப் போக முடியுமா? எனவேதான் கிடைக்கிற மரத்திலேறி மொய்த்துக்கொள்கின்றன. இதுவே தொட்டால் உதிர்ந்துபோகிற 
பொரிந்துபோன மரத்தண்டுபோல் இருக்கிறதாம். உயரே கிளைகளைப் பார்த்தால் இறுக்கமான வாகைமரம்போல் தெரிகிறது. ஆனால் 
அடியில் மரத்தைப் பார்த்தால் பொரிந்துகிடக்கிறதே என்று பார்த்தவர்கள் வியப்புறுவார்கள். 

				

	போகிற போக்கில் இந்த பொரியரை புதைத்த வாகைமரத்தைத் தலைவன் பார்க்கிறான். இந்த வாகை மரத்துக் 
கிளைகளைப்போல் வழுக்கலாகவும், வளமையாகவும் இருக்கும் தன் நெஞ்சை, ‘பொருள் தேடவேண்டும்’ என்ற எண்ணமாகிய 
சுரிமூக்கு நொள்ளை மூடிக்கிடப்பதால் வலுவிழந்த பொரிந்துபோன நெஞ்சத்தவனாய்த் தன்னைத் தலைவி எண்ணிவிட்டாளே என்று 
தலைவன் வருந்தியிருக்கலாம். தலைவியை விட்டுப் பிரியவேண்டும் என்ற எண்ணம் மட்டும் நல்ல எண்ணமாக்கும்! சுரிமூக்கு 
நொள்ளை போல. எனினும் சுட்டுப்பொசுக்கும் இல்லாமை என்ற கடத்திடை மரத்தின்மேல் சுருண்டுகொள்ளும் நத்தையாய் 
பொருளாசை முடங்கிக்கிடக்கிறதே. தலைவியைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்தவுடனே இந்தப் பொருளாசை 
உதிர்ந்துவிடாதா? - இந்தப் பொரியரை போல் புதைக்கும் சிறுநத்தைக் கூட்டம் போல. 

	தலைவி எத்துணையோ எடுத்துக்கூறியும் விடாப்பிடியாகத் தலைவன் பொருள் சேர்க்கப் புறப்பட்டுப் போய்விட்டான். ஏன்? 

	இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
	வல்லா நெஞ்சம் வலிப்ப – தலைவன் சென்றுவிட்டானாம்.

	“பொருளீட்டப்போ, பொருளீட்டப்போ” என்று தலைவனின் நெஞ்சம் வற்புறுத்தியதாம் (நெஞ்சம் வலிப்ப) - 
இது தலைவியின் புலம்பல். வற்புறுத்துவதற்கும் ஒரு வலிமை வேண்டும். இதுதான் வலிமையற்ற நெஞ்சம் ஆயிற்றே – 
வல்லா நெஞ்சம் வலிப்பச் சென்றாராம். எதற்கு வல்லாதது இந்த நெஞ்சம்? “இல்லை” என்று வருவோரிடம் (இல்லோர்க்கு) 
“இல்லை” என்று (இல்லென்று) அவரோடு ஒத்துப்பாடி (இயைவது) உண்மைநிலையை மறைப்பது (கரத்தல்) இந்த நெஞ்சத்தால் 
முடியாதாம்! (வல்லா நெஞ்சம்) 

	தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்துசெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த அந்த நெஞ்சத்தைத் திட்டித் தீர்க்கிறாள் தலைவி. 

	வல்லா நெஞ்சம் – அந்தப் பொசகெட்ட நெஞ்சம் சொல்லிச்சுன்னு இந்தப் பொசகெட்ட மனுசன் பொறப்பட்டுப் போனாராம். 
பார்த்தீர்களா, அடுத்த வசவு யாருக்கு? அவனுக்குத்தான். காசாச புடிச்ச மனுசன். 

		நம்மினும்
	பொருளே காதலர் காதல் - 

	கட்டுனவளப் பெரிசா நெனக்காம (நம்மினும்) – காசுமேல அம்புட்டு ஆசயா? (பொருளே காதலர் காதல்) -

	தலைவியின் நினைவோட்டத்தை எவ்வளவு இயல்பாகக் கொண்டுசெல்கிறார் புலவர் பார்த்தீர்களா!

	இப் பாடலின் கடைசி இரண்டு அடிகளைப் படிக்கும்போது ஒரு நெருடல் தோன்றவில்லையா?
	
		நம்மினும்
	பொருளே காதலர் காதல்
	அருளே காதலர் என்றி நீயே

	‘பொருளே காதலர் காதல்’ என்பதன் நேர் வடிவம், ‘காதலர் காதல் பொருளே; என்பதாகும். இதனை மறுத்துத் 
தோழிகூறுவதாகத் தலைவி சொல்வது ‘அருளே காதலர் காதல்’ என்று வரவேண்டும். இவ்விரண்டு கூற்றுகளிலும் காதலர் என்பது 
எழுவாய். தமிழில் எழுவாய் மறைந்து வரலாம்.

	“இராமன் கவிதை எழுதினானா?” என்ற கேள்வியை மறுத்துக்கூறும்போது,

	(இல்லை) “அவன் கட்டுரை எழுதினான்” எனலாம். அதாவது எழுவாய்க்குப் பதிலி (Substitute noun) அமைக்கலாம். 

	அல்லது, எழுவாயை மறைத்து “கட்டுரை எழுதினான்” எனலாம். ஆக, மறுப்புக்கூறும்போது எழுவாய் திரும்ப வருவதில்லை. 
பதிலியாகவோ அல்லது மறைந்தோ வரலாம். எனவே பொருளே காதலர் காதல் என்னும் கூற்றை மறுக்கும்போது (இல்லை)அருளே 
அவர் காதல் என்றோ, “அருளே காதல்” என்றோ வரலாம். 

	இதைவிடுத்து, பொருளே காதலர் காதல் என்பதனை மறுக்கும் தோழி கூற்றாகத் தலைவி கூறுவது “அருளே காதலர்” 
என்கிறாய் நீயே என்பது. இவ்வாறு காதலர் என்ற எழுவாய், மறுப்புமொழியிலும் முழுமையாக வரவேண்டிய காரணம் என்ன?

	“சேகருக்குப் பொருள் மீதுதான் ஆசை; கந்தனுக்கு அருள்மீதுதான் ஒரு இது” என்ற பேச்சு வழக்கில் ‘ஒரு இது’ என்பது 
ஆசை என்பதன் பதிலியாகும். இந்தப் பதிலி முழுதுமாக மறைந்தும் வரலாம். 

	“சேகருக்குப் பொருள் மீதுதான் ஆசை; கந்தனுக்கு அருள்மீதுதான்” என்றும் வரலாம். இங்கே சேகர், கந்தன் என்பன 
வெவ்வேறு ஆள்களைக் குறிக்கின்றன. எனவே எழுவாய் மறைந்தோ, பதிலியாகவோ வருவதில்லை. மாறாக முழுமையாக வெவ்வேறு 
சொற்களில் வருகிறது. இதன் மறுதலையாக, ஒரு மறுப்புக்கூற்றில் எழுவாய் மறைந்தோ, பதிலியாகவோ வராமல், முழுமையாக 
வந்தால் அதற்கு வேறு பொருள் உண்டு எனலாம். எனவே,

	பொருளே காதலர் காதல்,
	அருளே காதலர் –

	என்ற கூற்றுகளில் வரும் காதலர் என்ற எழுவாய்கள் வெவ்வேறு ஆள்களைக் குறிப்பன. அது எவ்வாறு? முதலில் 
குறிப்பிடும் காதலர் என்ற சொல் பொதுவாக எந்த ஒரு குடும்பத் தலைவரையும் குறிக்கும். அடுத்துவரும் காதலர் பாடலின் 
தலைவனைக் குறிக்கும். 

	“இந்த ஆம்பிளைகளுக்கே பொண்டாட்டியக் காட்டிலும் பொருள்மேலதான் ஆசை” அப்படீன்’னு சொன்னா 
“ஒன் ஆம்படையானுக்கு அருள்மேலதான்” என்கிறேயே நீ.” என்றுதான் இதற்குப் பொருள் கொள்ளவேண்டும். முதலில் வரும் காதலர் 
என்ற சொல் பொதுவாகக் கணவன்மார்களைக் குறிக்க, அடுத்து வரும் காதலர் என்ற சொல் பாட்டின் தலைவனைக் குறிக்கும்.

	இப்படிப்போயிருக்கலாம் அவர்களின் உரையாடல்:-

தலைவி:- “இந்த புருசங்களுக்கே பொண்டாட்டியக் காட்டிலும் பொருள்மேலதான் ஆச”

தோழி :- “ஒம் புருசனுக்கு அருள்மேலதான்’டி”

	அகப்பாடல்களில் உரையாடல் (dialogue) வரலாகாது. யாராவது ஒருவரின் கூற்றாகவே அமையும் (monologue). 
இப் பாடல் தலைவி கூற்றாகவே வருதலால், தோழி கூற்றையும் தலைவியே கூறுவதுபோல் அமைத்திருக்கிறார் புலவர்.

	இன்னொரு வகையிலும் இந்தக் கூற்றைப் புரிந்துகொள்ளலாம். அருளே காதலர் என்பதற்கு அருளையே காதலித்துடையர் 
என்றலுமாம் என்பர் பெருமழைப் புலவர். அதாவது முதல் காதலர் என்ற சொல்லுக்குக் கணவர் என்ற பொருளும், அடுத்த காதலர் 
என்ற சொல்லுக்கு (அருள்மீது) காதல்கொண்டவர் என்ற பொருளும் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. எப்படியாயினும் இந்த 
இரண்டு சொற்களுக்கும் இருவேறு பொருளைப் புலவர் புதைத்து வைத்திருக்கிறார் என்பதுவே இப் பாடலின் தனிச் சிறப்பாகிறது.