அகநானூறு - படவிளக்கவுரை

(முழுத்திரையில் காண இடதுபக்கம் இருக்கும் மூன்றுகோடுகளைச் சொடுக்குங்கள். பழைய நிலைக்கு, மீண்டும் அதனையே சொடுக்குங்கள்)

தொகுதி-1  தொகுதி-2   தொகுதி-3  தொகுதி-4   தொகுதி-5  
தொகுதி-6  தொகுதி-7   தொகுதி-8  தொகுதி-9   தொகுதி-10  

பாடல்கள்
41   42   43   44   45   46   47   48   49   50  
51   52   53   54   55   56   57   58   59   60  
61   62   63   64   65   66   67   68   69   70  
71   72   73   74   75   76   77   78   79   80  
 
ஏதேனும் ஒரு பாடல் 
எண்ணைச் சொடுக்குக.
                          அகநானூறு - 44

பாடல் 44. முல்லைத் திணை  பாடியவர் - குடவாயில் கீரத்தனார் (உறையூர்ச் சல்லியங் குமரனார்)

துறை - வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

 மரபு மூலம் - ஊர்க பாக ஒருவினை கழிய

	வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
	தந்திறை கொடுத்துத் தமரா யியினரே
	முரண்செறிந் திருந்த தானை யிரண்டு
	மொன்றென அறைந்தன பணையே நின்டேர்
5	முன்னியங் கூர்தி பின்னிலை யீயாது
	வூர்க பாக வொருவினை கழிய
	நன்ன னேற்றை நறும்பூ ணத்தி
	துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி
	பொன்னணி வல்விற் புன்றுறை யென்றாஆங்
10	கன்றவர் குழீஇய வளப்பருங் கட்டூர்ப்
	பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக்
	கண்டது நோனா னாகித் திண்டேர்க்
	கணைய னகப்படக் கழுமலந் தந்த
	பிணையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி
15	யழும்பி லன்ன வறாஅ யாணர்ப்
	பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவைப்
	பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளைத்
	தண்குட வாயி லன்னோள்
	பண்புடை யாகத் தின்றுயில் பெறவே

 சொற்பிரிப்பு மூலம்

	வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
	தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே
	முரண் செறிந்து இருந்த தானை இரண்டும்
	ஒன்று என அறைந்தன பணையே நின் தேர்
5	முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது
	ஊர்க பாக ஒருவினை கழிய
	நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
	துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
	பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
10	அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்ப்
	பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டு எனக்
	கண்டது நோனான் ஆகித் திண் தேர்
	கணையன் அகப்படக் கழுமலம் தந்த
	பிணையல் அம் கண்ணிப் பெரும் பூண் சென்னி
15	அழும்பில் அன்ன அறாஅ யாணர்ப்
	பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவைப்
	பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளைத்
	தண் குடவாயில் அன்னோள்
	பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே

அருஞ்சொற் பொருள்:

இறை = கப்பம்; தமர் = உறவினர், நண்பர்; முரண் = மாறுபாடு; தானை = சேனை; பணை = முரசு; 
பின்னிலை = பின்தங்கிய நிலை; ஒருவு = விட்டுவிலகு, ஒருவினை = விட்டு விலகியவனாய்; 
ஏற்றை = வலிய ஆண் விலங்கு, சேரனின் படைத்தலைவன்; கட்டூர் = பாசறை; நோனான் = பொறுக்காதவன்; 
யாணர் = புதுவருவாய்; பரவை = பரந்த வெளி, expanse; பொங்கடி = யானை; கயம் குளம்; மண்டிய = அடர்ந்த; 
பசு மிளை = பசுமையான காவற்காடு; ஆகம் = மார்பு.

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	ஒரு மன்னனின் தேர்ப்படையைச் சேர்ந்தவன் நம் தலைவன். படையிலும் முன்னணி வீரன். போரில் மன்னன் 
வெற்றிபெற்றுவிட்டான். மிக்க ஆரவாரத்துடன் மன்னன் பின்னர் படைகள் நின்றுகொண்டிருக்கின்றன. நம் தலைவனின் 
தேர் முதல் வரிசையில் நிற்கிறது. நிலையற்ற பரபரப்புடன் இருக்கும் குதிரைகளைப் பாகன் சிரமப்பட்டு 
அடக்கிக்கொண்-டிருக்கிறான். இதோ! தோற்றுப்போன பகை அரசர்கள், மன்னன் முன்னால் வந்து திறைசெலுத்துகின்றனர். 
இதன்மூலம் அவர்கள் மன்னனுக்கு உட்பட்டவர்கள் ஆகின்றனர். எனவே இனி அவர்கள் மன்னனின் சுற்றம் ஆகின்றனர். 
அவர்களின் படையும் மன்னனின் படையுடன் இணைகின்றது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கும் வண்ணம் முரசு 
ஒலிக்கின்றது. அவ்வளவுதான், வெற்றிவிழா நிறைவுற்றது. இனி? வீடு திரும்பவேண்டியதுதான். இதுவரை 
அடக்கிவைத்திருந்த ஆர்வம் எல்லாம் பொங்கி வழிய, “எடுறா வண்டிய” என்று கூவுகிறான் தலைவன். “எவனயும் 
முந்தவிடாதே! எல்லாப்பயலும் பின்னால காணாமப் போகணும். வீட்ல போயி அவ மடியில நிம்மதியாப் படுத்துத் தூங்கணும்”. 

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

	வந்துவினை முடித்தனன் வேந்தனும், பகைவரும்
	தம்திறை கொடுத்துத் தமர் ஆயினரே
	முரண்செறிந்து இருந்த தானை இரண்டும்
	ஒன்றுஎன அறைந்தன பணையே, ----------

	மேற்கொண்ட செயலை (போர்)முடித்துவிட்டான் நம் வேந்தனும்; பகைவரும்
	தாம் கொடுக்கவேண்டிய கப்பத்தைச் செலுத்தி வேண்டியவர்கள் ஆகிவிட்டனர்;
	பகைமை மிகுந்திருந்த படைகள் இரண்டும்
	ஒன்றாகிவிட்டதாக ஒலிக்கப்பட்டது முரசு.

	வேந்தன் மேற்கொண்ட வினை போர். அதனைச் செய்துமுடித்துவிட்டான் அவன். வந்த காரியம் ஆயிற்று என்றால் 
வீடு திரும்பவேண்டியதுதான். ஆனால் அதற்கு முன்னர் இன்னும் சில வினைகள் நடந்தேறவேண்டும். இது வந்த வினை அல்ல. 
எனவே இது முடியப் பொறுமை காப்பது கடினம். ஆக்கப் பொறுக்கலாம்; ஆறப்பொறுக்காதன்றோ! தனக்குத் திறை கொடுக்க 
மறுத்துப் பகைமை பாராட்டிய அரசரைப் போரில் வென்று அவர்களை வழிக்குக் கொண்டுவருகிறான் வேந்தன். தோல்வியை 
ஒப்புக்கொண்ட அரசரும், வேந்தனுக்குச் செலுத்தவேண்டிய கப்பத்தைப் போர்க்களத்திலேயே செலுத்துகின்றனர். பகைமை தீர்ந்த 
பின் ஒருவரையொருவர் கட்டித்தழுவி உறவும் ஆகின்றனர். இனிமேல் இரு வேறு படைகள் எதற்கு? எனவே அவை 
ஒன்றாகின்றன. இதை எல்லாரும் அறிய முரசு அறையப்படுகிறது.

			

			, நின் தேர்
5	முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது
	ஊர்க பாக ஒருவினை கழிய

			, உனது தேர்
	முன்னிடத்தில் செயல்படுகின்ற ஊர்தி – அதற்குப் பின்னடைவு ஏற்படுத்தாமல்
	(விரைந்து)செலுத்துக, பாகனே! (ஏனையோரை) விட்டு விலகியவனாய்க் கடந்துசெல்ல;

	பள்ளி விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்ட சிறார், பேச்சாளர் உரையும், நன்றியுரையும் நாட்டுவாழ்த்தும் எப்போது 
முடியும் என்று பொறுமையின்றி காத்திருப்பது போல தலைவன் தன் தேரில் முன்வரிசையில் காத்திருக்கிறான். நன்றியுரை முடிந்து 
நாட்டுவாழ்த்தும் முடிந்தவுடன், “ஹா!” என்று என்று இரு கைகளையும் உயர்த்தி “ஓ”-வென்ற பெருங்குரலுடன் வீடு நோக்கி 
ஓடுகின்ற சிறாரைப் போல, பகைமை தீர்ந்து, வந்த வேலையும் முடிந்து, பணையும் அறைந்த பின்னர், “ஊர்க பாக” என்று 
கூவுகிறான் தலைவன். 
			

	தலைவனின் தேர் முன்னடியில் நிற்கிறது. ஒன்று அவன் முன்னணி வீர்ர்களில் ஒருவனாக இருந்திருக்கவேண்டும், 
அல்லது வெற்றி விழாவில் முண்டியடித்துக்கொண்டு முன்வரிசைக்கு வந்திருக்கவேண்டும். சிவப்பு விளக்கில் அனைத்து ஊர்திகளும் 
காத்துக்கொண்டிருக்க, இண்டு இடுக்குகளில் நுழைந்து முண்டியடித்து முதலில் வந்து accelerator-ஐ உறுமவிட்டுக்கொண்டு 
நிற்கும் I.T. இளைஞனைப் போல, தலைவனின் தேர் முன்னால் நிற்கிறது. மஞ்சள் விழுந்தவுடன் உறுமிக்கொண்டு சீறிப் புறப்படும் 
வாகனத்தைப் போல தேரும் கிளம்பத் தேரோட்டியை முடுக்கிவிடுகிறான் தலைவன். இவனைப் போலவே ஏனையோரும் கிளம்புவார்கள் 
இல்லையா? மிக அருகில் அவர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள். திரும்பிப் பார்த்த தலைவன் கூவுகிறான், “பின்தங்கிப்போய்விடாதே!
(பின்னிலை ஈயாது), இவர்களையெல்லாம் பின்னாலே ஒதுக்கிவிட்டு (ஒருவினை) இந்த இடத்தைவிட்டுச் (கழிய)சீக்கிரமாய்ச் 
சென்றுவிடு (ஊர்க பாக)”. 

	நன்னன், ஏற்றை நறும் பூண் அத்தி,
	துன் அரும் கடும் திறல் கங்கன், கட்டி,
	பொன் அணி வல் வில் புன்றுறை, என்று ஆங்கு
10	அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்ப்
	பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டு எனக்

	நன்னனும், ஏற்றையும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
	(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
	பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
	முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
	பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,

	நன்னன் என்பான் சேரமன்னனின் படைத்தலைவன். எனவே அவனுடன் சேர்த்துக் கூறப்பட்டிருப்போரும் சேரனின் 
படைத்தலைவர்களே எனக் கொள்ளலாம். ஏற்றை என்பது அவ்வாறான ஒருவனின் பெயர் என்பர். நன்னன் ஏற்றை எனக்கொண்டு, 
நன்னனின் கீழ்ப் பணிபுரியும் ஏற்றை என்பான் என்றும் கூறுவர். ஏற்றை என்பது ஆற்றலுடைய ஆண் விலங்கைக் குறிக்கும். இதனை 
நறும்பூண் அத்திக்கு அடையாகக் கொண்டு ஏற்றையைப் போன்ற நறிய பூண்களை அணிந்திருக்கும் அத்தி என்பாரும் உளர் 
(ஏற்றை நறும் பூண் அத்தி). நறும் பூண் என்பதை நறிய (மலர்களால் செய்யப்பட்ட) பூண் எனக் கொள்ளலாம். ஒருசிலர் தோள்களிலும், 
கைகளிலும், காதுகளிலும் மலர்ச் சரங்களைச் சுற்றிக்கொள்வதைப் பார்த்திருக்கிறோம் இல்லையா! அது போல எனக் கொள்ளலாம். 
யாரும் கிட்ட நெருங்கமுடியாத வல்லமை படைத்தவன் கங்கன் (துன் அரும் கடும் திறல் கங்கன்). பொன்னாலான ஆரங்களைப் 
பூட்டிக்கொண்டிருப்பவன் வில்லில் வல்ல புன்றுறை (பொன் அணி வல் வில் புன்றுறை). எனவே கங்கன் மற்போரிலோ, வாட்போரிலோ, 
சிலம்பத்திலோ திறமை மிக்கவனாயிருக்கவேண்டும். இந்த ஐவர் அல்லது அறுவரும் ஓர் எண்ணற்ற குடில்களைக் கொண்ட 
(அளப்பு அரும் கட்டூர்) பாசறையில் ஒரு குடிலில் குழுமியிருக்கிறார்கள்(குழீஇய). அப்படியென்றால் அங்கு எத்துணை கட்டுக்காவல் 
இருந்திருக்கும்! அனைத்தையும் கடந்து, மிகச் சரியாகத் தலைவர்கள் குழுமியிருக்கும் குடிலுக்குள் சென்று அவர்களைத் தாக்குகிறான் 
பழையன். இவன் சோழன் பெரும்பூண் சென்னியின் படைத்தலைவன். இவன் ஒரு படையுடன்தான் உள்ளே புகுந்திருக்கவேண்டும். 
அங்கு நடைபெற்ற போரில் பலர் மாண்டிருப்பர். இரத்த வாடையை மோப்பம் பிடித்த பருந்துக் கூட்டம் வானத்தை வட்டமிடுகிறது. 
அப் போரில் பழையன் வீழ்த்தப்படுகிறான்.

			

	கண்டது நோனான் ஆகித் திண் தேர்
	கணையன் அகப்படக் கழுமலம் தந்த
	பிணையல் அம் கண்ணிப் பெரும் பூண் சென்னி

	அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
	கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
	பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்

	தன் தானைத் தலைவனான பழையன் கொல்லப்பட்டதை அறிந்த சோழ மன்னன் பெரும்பூண் சென்னி இனியும் பொறுக்க 
முடியாதென(கண்டது நோனான் ஆகி)ச் சீறி எழுகின்றான். இறுகக் கட்டிய தலைமாலையுடன்(பிணையல் அம் கண்ணி) விரைந்து 
களத்துக்கு வருகிறான். இதனைக் கேள்விப்பட்ட சேரனின் தலைமைத் தளபதியாகிய கணையனும் தன் துணைத்தலைவர்களுடன் 
சேர்ந்துகொள்கிறான். இருப்பினும் கணையன் உள்ளிட்ட (கணையன் அகப்பட) அனைவரையும் தோற்கடித்து அவர்களின் கையிருப்பில் 
இருந்த கழுமலம் என்ற ஊரின் கோட்டையையும் கைப்பற்றுகிறான் சோழன் (கழுமலம் தந்த). 

	அழும்பில் அன்ன அறாஅ யாணர்ப்
	பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவைப்
	பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளைத்
	தண் குடவாயில் அன்னோள்
	பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே

	அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய
	பழமையான பலவான நெல்லையுடைய பல குடிப் பரப்பினை உடையதும்
	யானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய)
	குளிர்ந்த குடவாயில் என்னும் ஊரைப் போன்றவளின்
	நல்ல பண்புகளையுடைய மார்பினில் இனிய துயிலைப் பெறுவதற்கு.

	அழும்பில் என்பது பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஓரூர் என்பர். இதனை மான விறல்வேள் என்பான் ஒருகாலத்தில் 
ஆண்டுவந்தான். இவ்வூர் மிக்க வளமுடையது என்பதை,

	நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
	விளங்குபெரும் திருவின் மான விறல்வேள்
	அழும்பில் அன்ன 	-- மதுரைக்காஞ்சி 343-345

	என்ற அடிகளால் அறிகிறோம். இந்த அழும்பில் என்ற ஊர் புலவரின் காலத்தில் சோழனின் கீழ் இருந்திருக்கவேண்டும். 
எனவேதான் இதனை மான விறல்வேள் அழும்பில் என்னாமல் பெரும்பூண் சென்னி அழும்பில் என்று புலவர் குறிக்கிறார். யாணர் 
என்பது புதுவருவாய் - மாதத் துவக்கத்தில் வரும் சம்பளம் போல - தைமாதத்தில் வரும் அறுவடை நெல் போல. இவ்வாறு 
ஏதேனும் ஒருநாளில் வரும் புது வருவாய் போல் அன்றி, இடையறாது புதுவருவாய் ஒவ்வொரு நொடியும் வந்துகொண்டிருந்தால்? 
அதுவே அறா யாணர் – அற்றுப்போகாத புதுவருவாய். அழும்பில் நகருக்கு அப்படி ஒரு வருவாய் வந்துகொண்டே இருக்குமாம்! 
எனவேதான் இது புலவர்களால் பலவிடங்களிலும் பாடப்பட்டிருக்கிறது.

	இத்தகைய வளம் மிக்க அழும்பில் ஊரைப் போன்ற வளத்தைக் கொண்டது சோணாட்டுக் குடவாயில் என்னும் ஊர். 
பெரும்பூண் சென்னி அழும்பில் அன்ன என்று கொள்ளாமல், பெரும்பூண் சென்னி (அழும்பில் அன்ன அறாஅ யாணர்க்) குடவாயில் 
என்றும் கொள்ளலாம். எனில், வளம் மிக்க பாண்டியநாட்டு அழும்பில் போன்ற வளத்தைப் பெற்ற சோணாட்டுக் குடவாயில் என்று 
புலவர் கூறியிருப்பதாகக் கொள்ளலாம். தை கழிந்து மார்கழியில் கடையில் அரிசி வாங்கிச் சமைத்தால் சோறு குழைந்துபோகும். 
அது புதிதாக வந்த நெல்லில் இருந்து பெறப்பட்டது. எனவே கடைகளில் பழைய அரிசி என்று கேட்டு வாங்கவேண்டும். அதற்கு 
விலை சற்று அதிகம். வீட்டில் மூடைக்கணக்கில் நெல் வைத்திருப்பவர்கள் கவலைப்படவேண்டியதில்லை. புதிதாக வந்த நெல்லைத் 
தொடமாட்டார்கள். அடுக்கிவைத்துவிட்டு ஆறுமாதம் கழித்து எடுப்பார்கள். அழும்பிலில் இப்படிப்பட்ட பழைய நெல் மூடைக்கணக்கில் 
ஒவ்வொரு வீட்டிலும் இருக்குமாம் (பழம் பல் நெல்லின்). இந்த மாதிரி ஒரு நூறு இருக்குமா? இல்லை, நூற்றுக்கணக்கில் வீடுகளைக் 
கொண்ட பேரூர் அது (பல் குடி). ரொம்பவும் நெருக்கமாக, ‘கசகச’-வென்று இருக்குமோ? இல்லை, பரந்து விரிந்து அகன்று இருக்கும் 
பெரிய ஊர் (பரவை). ஆனையே மூழ்கும் அளவுக்கு ஆழமான குளங்களைக் கொண்டது.(பொங்கடி படி கயம்). பொங்கினால் போன்று 
இருக்கும் பாதங்களைக் கொண்டதால் யானையைப் பொங்கடி என்கிறார் புலவர். 

			

	மண்டிய பசு மிளை என்பதில் உள்ள மண்டிய என்பது மண்டு என்ற வினையின் எச்சம். மண்டுதல் என்பது அடர்ந்திருத்தல். 
இந்த அடர்த்தி காட்டுக்கு எப்படி வந்தது? மரங்கள் நெருக்கமாயிருந்தால்மட்டும் வந்துவிடாது. மரங்களின் உச்சிப்பகுதி 
நெருங்கியிருந்தாலும் அடிமரங்கள் விலகி விலகியே இருக்கும். மரங்களைச் சுற்றிக் கொடிகள் படர்ந்திருந்தாலும் இடைவெளி 
இருக்கவே இருக்கும். இந்த வெளியில் புகுந்து எளிதாகச் சென்றுவிடலாம். அப்படியின்றி, மரங்களின் விதைகள் விழுந்து, அவை 
முளைத்து, பெரிய மரங்களுக்கிடையே சின்னஞ்சிறு கன்றுகள் வளர்ந்து, அவற்றிலும் கொடிகள் சுற்றியிருந்தால் – இந்தக் கொடிகளும் 
வேரிலிருந்து தழைத்து வளர்ந்துகொண்டிருந்தால், மிகச் சிறிதளவுகூட இடைவெளியின்றி இருக்குமே ஒரு அடர்த்தி – அதுவேதான் 
மண்டுதல். வீடுகளில் வைக்கும் ரசத்தில் அடியில் படிந்திருக்கும் வண்டலை மண்டி என்கிறோம். இவ்வாறு புகழ் மண்டிக்கிடக்கிறதாம் 
தமிழ்நாட்டில் – பாரதியார் கூற்று நினைவுக்கு வரலாம். இவ்வாறு காடு மண்டிக்கிடக்கிறதாம். காரணம், இது காவற்காடு. பகைவர்கள் 
நகரத்தை எளிதில் நெருங்காவண்ணம் ஊரைச் சுற்றி வளர்க்கப்படும் காடுதான் மிளை. பொய்க்காத மழையிருந்தாலொழிய காடு 
இவ்வாறு மண்டிக்கிடக்காது. ஒருவேளை காய்ந்துபோயும் மண்டிக்கிடக்கலாம். அப்படியில்லை என்பதற்காகப் பசு மிளை என்கிறார் புலவர். 
இவ்வாறு மழைவளம் மிக்க குடவாயில் குளிர்ச்சியாக இருப்பதில் வியப்பில்லை. எனவே இது தண் குடவாயில் எனப்படுகிறது. இது 
சோழர்களின் சிறைக்கோட்டமாகவும், நெற்களஞ்சியமாகவும் இருந்திருக்கிறது என்பர். 

			

	இந்தக் குடவாயில் போன்றவள் என் தலைவி என்கிறான் தலைவன். ஒவ்வொரு நாளும் புதுப்பொலிவுடன் தோன்றும் தன் 
எழிலரசியை அவன் அறாஅ யாணர் குடவாயிலுடன் ஒப்பிட்டதில் வியப்பில்லை. 

	பழம் நெல்லைப் பலவாய்க் கொண்ட குடவாயில் போல அவள் பழம் மரபைத் தன்னுள் 
	பதுக்கிவைத்திருக்கிறாள் அல்லவா!. 

	பல் குடியைக் கொண்டு பரந்து விளங்கும் குடவாயில் போல், அவள் பல் திறமைகளைக் கொண்ட பரந்த மனத்தளாயும் 
	இருக்கிறாள் அன்றோ! 

	யானையையும் மூழ்க்கும் ஆழமான கயம் போன்ற அவளின் கண்கள் தலைவனை அப்படியே விழுங்குவனவாய்ப் பார்க்குமே! 

	அவளது கற்பு வளையம் அவளைச் சுற்றிப் பசுமிளையாய் மண்டிக்கிடக்கிறதே! கொடும் கோடையிலும் ‘குளுகுளு’-வென்றிருக்கும் 
	தண் குடவாயில் அன்றோ அவள் தளிர் மேனி! 

	சிற்பமாய் வடிக்கத்தக்க அளவுக்கு ஒரு சிலைக்குரிய அத்தனை சிறந்த பண்புகளையும் கொண்ட அவளின் மேனியைப் 
	பண்புடை ஆகம் என்கிறான் தலைவன். 

	ஆகம் என்பது மார்பு. இங்கு மார்பினைக் கொண்ட தலைவி. அவளது இறுக்கிய தழுவலில் மெய்மறந்து துயிலவேண்டும் 
	என்பது தலைவனின் அவா. 

	இத்தனை நாட்களும் அவன் பாசறையில் நிம்மதியாகப் படுத்துத் தூங்கியிருக்க முடியுமா? 

	எனவே இனிமேல் கொள்ளப்போவது இன் துயில் என்கிறான் அவன். 

	போர்ப்பாசறையில் அவன் மிகவும் வசதியுடனா படுத்திருந்திருப்பான்? கரடுமுரடான தரையில், தலைக்கென்று ஒன்றுமின்றி 
	அரைகுறைத் தூக்கம்தான் அவனுக்குக் கிடைத்திருக்கும். 

	இனிமேல் அவளின் மெத்தென்ற ஆகத்தில் சாய்ந்து மேனியின் நறுமணம் முகர்ந்து இடையூறு வேறு இன்றிக் கிடைக்கும் 
	துயில் இன்துயில்தானே!

	இப் பாடலைப் பாடியவர் குடவாயில் கீரத்தனார். இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் குடவாயில் ஊர்க்காரர். பாடபேதமாக, 
இப் பாடலின் ஆசிரியர் உறையூர்ச் சல்லியங் குமரனார் என்றும் காணப்படுகிறது. எப்படியெனினும் இதன் ஆசிரியர் சோழநாட்டுக்காரர் 
என்பது உறுதி. ஆசிரியருக்குத் தன் நாட்டு அரசன் பெரும்பூண் சென்னியைப் பற்றியும் அவன் கழுமலத்தில் பெற்ற வெற்றியையும் 
போற்றிப்பாடும் நோக்கமோ, அவனது வெற்றியை வரலாற்றுப் பதிவாகச் செய்யும் நோக்கமோ இருந்திருந்தால் அவர் ஒரு புறப்பாடலைப் 
பாடியிருந்திருக்கலாம். அதனை விடுத்து ஓர் அகத்துறைப் பாடலைப் பாடும் சாக்கில் அரசன் புகழ் பாடுவானேன்? 
குடவாயில் அன்னோள் என்று தன் தலைவியின் நலனைத் தலைவன் பாராட்டுவது இயல்புதான். குடவாயில் பற்றி அவ்வளவாகத் 
தெரியாதவர்களுக்காக, அழும்பில் அன்ன அறாஅ யாணர்க் குடவாயில் என்று கூறுவதும் சரிதான். ஆனால் பெரும்பூண் சென்னியின் 
குடவாயில் என்றும், இந்த சென்னி தன் படைத்தலைவன் பழையனைக் கொன்றதற்காகப் பழிதீர்த்துக்கொண்டு கணையனைப் பிடித்துக் 
கழுமலம் கொண்டான் என்றும் கூறுவது எதற்காக? கழுமலம் கொள்வதற்காக அவன் மாய்த்த சேரநாட்டுத் தலைவர்களின் பெயரை 
விலாவாரியாக விவரிக்கவேண்டிய காரணம் என்ன?

	இப்பொழுதெல்லாம் பள்ளிகளில் இலக்கணத்தைத் தனியே சொல்லிக்கொடுப்பதில்லை. பாடங்களை நடத்தும்போது அவற்றில் 
வரும் சொற்றொடர்களைக் கொண்டு அவற்றில் பொதிந்துள்ள இலக்கணத்தைக் கற்றுத் தருவது புதியமுறை (இதனால் மாணவரின் 
இலக்கண அறிவு மிகுந்திருக்கிறதா என்பது விவாதத்துக்கு உரியது?) இதைப் போலவே, வரலாற்றுச் செய்திகளைத் தனியே புறப்பாடலாகக் 
கொள்ளாமல் அவற்றை அகத்துறைக்குள் பொதித்துக் கூறுவது தேனில் கலந்துதரும் மருந்து போல. தேன் சுவைக்காக – மருந்து 
நலத்துக்காக. அகத்துறைக்குள் புறம் என்றால், அகம் சுவையூட்ட – புறம் நாட்டுப்பற்றை ஊட்ட.