பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 1 - அழகுபெத்த


ஒரு தாய் தன் கைக்குழந்தையைக் கொஞ்சும்போது பெரும்பாலும் கூறுவாள், “என்னப்பெத்த ராசா” அவள் தன் குழந்தையைத் 
தன் தந்தையே மறுபிறப்பெடுத்து வந்ததாகக் கருதியதால் வந்த கொஞ்சல் இது.

அவளே இன்னொரு சமயம் தன் குழந்தையைக் குளிப்பாட்டி, அழகுசெய்து, தன் முன்னால் அமர்த்திக்கொண்டு, அவன் 
கன்னங்களை வழித்து, “ என் அழகுபெத்த ராசா” என்பாள். அதென்ன ‘அழகு பெத்த’? இங்கே இதற்குப் பொருள், நிரம்ப 
அழகினைப் பெற்ற என்பதுவே! அதாவது அழகிய, அழகான, அழகுள்ள, அழகினையுடைய என்பது இதன் பொருள்.

ஒரு பெண் மிக அழகான கண்ணாடி வளையலை அணிந்திருக்கிறாள். பல நிறங்கள் கொண்டு அம்சமாக அமைந்த மிக அழகிய
வளையல் அது. ஒரு நாள் அவள் அந்த வளையலை உடைத்துவிடுகிறாள். ஆத்தாள்காரிக்கு நல்ல வளையல் போச்சே என்ற 
வயிற்றெரிச்சல். அவள் கூறுகிறாள், “அழகுபெத்த வளையலை ஒடச்சுப்புட்டு நிக்கிறேயேடீ”. இங்கும் இதற்கு அழகிய, 
அழகான, அழகுள்ள, அழகினையுடைய என்றெல்லாம் பொருள் இருந்தாலும், அழகுபெத்த என்று சொல்லும்போது, ஒரு 
நெருக்கம், ஒரு பிரியம், ஒரு ஆசை எல்லாம் தொனிக்கின்றதல்லவா!

இது இன்றைய பேச்சு வழக்கு. பெரும்பாலும் படிக்காத மக்களிடம் காணப்படுவது. ஆனால் இந்த வழக்கு ஈராயிரம் 
ஆண்டுகட்கு முன்னரே இலக்கியத்திலும் வழக்கிலிருந்திருக்கிறது என்பதுதான் விந்தையான செய்தி.

இலக்கியங்கள் இளமங்கையரின் நெற்றியழகைப் போற்றிப் பாடும். நுதல் என்பது நெற்றி. சுடர் நுதல், அவிர் நுதல், ஒளிர் 
நுதல் என்றெல்லாம் அவை நெற்றியழகைப் பாராட்டுகின்றன. 

போர் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் தலைவன் தன் இளைய மனைவியைப் பார்க்கும் ஆவலில் விரைந்து வருகிறான். 
இன்னும் சிறிது நேரத்தில் அவளின் அழகிய நெற்றியைப் பார்ப்போம் என்று நினைத்த அவன் கூறுகிறான்,

காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல் - ஐங் 443/3.

இதை இன்றைய வழக்கில் சொல்லப்போனால், ‘அவளின் அந்த அழகுபெத்த நெற்றியை இன்னும் சிறிது நேரத்தில் 
பார்க்கலாம்’ என்று சொல்லலாம். கவின் என்பது அழகு. இங்கும் அழகிய, அழகான, அழகுள்ள, அழகுடைய என்று 
சொல்வதைக் காட்டிலும் அழகுபெற்ற என்ற சொல்லாட்சி தலைவன் தன் மனைவியின் மீதுள்ள அன்பினை எடுத்துக்கூறும் 
நுணுக்கத்தோடு அமையவில்லையா!

இவ்வாறு பல இடங்களில் அழகுபெத்த, என்ற இன்றைய பொருளில், கவின் பெறு என்று வருகின்ற அடிகளில் இந்த 
நெருக்கத்தையும், ஆசையையும் காணலாம்.

இதோ சில:-

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் - திரு 17  
காடும் காவும் கவின் பெறு துருத்தியும் - திரு 223  
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் - மது 388  
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை - நற் 56/3. 
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை - நற் 396/5. 
கவின் பெறு சுடர்_நுதல் தந்தை ஊரே - ஐங் 94/5. 
காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல் - ஐங் 443/3. 
கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல் - கலி 58/3. 
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை - கலி 108/37. 
காண் வர இயன்ற இ கவின் பெறு பனி துறை - கலி 127/14. 
கார் செய்தன்றே கவின் பெறு கானம் - அகம் 4/7. 
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் - அகம் 38/10. 
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை - அகம் 86/5. 
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே - புறம் 131/4. 

ஈராயிரம் ஆண்டுகட்கு மேலாகத் தமிழில் இவ்வாறு தொட்டுத் தொடர்ந்து வரும் பாரம்பரியம் அதன் இறவாத்தன்மையை 
எடுத்தோதுகிறது அல்லவா!

என்னே தமிழின் இளமை!