பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 12 - கூட்டாஞ்சோறு


அந்த மேனிலைப்பள்ளியின் மாலை வகுப்புகள் முடிந்து மணி அடித்து ஓயக்கூட இல்லை. அவன் அவசரம் அவசரமாகத் 
தன் முதுகுப்பையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். “என்ன அப்படி அவசரம் இன்னிக்கி?” என்று கேட்டான் அடுத்து 
இருந்தவன். “இன்னக்கி எங்க campus-ல pot luck dinner. அம்மாவுக்கு உதவி செய்யச் சீக்கிரம் போகணும்” என்றான் 
அவன். “பாட் லக் டின்னர்-னா?” இவன் ஐயத்தைக் கிளப்பினான். மூன்றாவன் குறுக்கிட்டான். “அப்படீனா, ஒரு area-வுல 
இருக்கிறவுங்க ஒண்ணாக் கூடுவாங்க. வரும்போது அவரவர் வீட்டிலிருந்து சமச்சு எடுத்துக் கொண்டுவருவாங்க. 
எல்லாத்தயும் மொத்தமா வச்சு, எல்லாம் ஒண்ணா அவங்கவங்க வேணுங்கிறத எடுத்துப்போட்டுச் சாப்பிடுவாங்க” 
என்றான் அந்த மூன்றாமவன். “நம்ம கூட்டாஞ்சோறு மாதிரி’ன்னு சொல்லு” என்றான் கேள்வி கேட்டவன். தன் 
முதுகுப்பையின் பாரம் தாங்கமாட்டாமல் அதனை இறக்கி வைத்துவிட்டு, முன்னவன் கேட்டான், “கூட்டாஞ்சோறா”. 

“இது தெரியாதா” என்று ஆரம்பித்தான் இவன். இவன் பக்கத்துக் கிராமத்திலிருந்து தூக்குச்சட்டியில் சோறை 
எடுத்துக்கொண்டு நடந்து வந்து படித்துச் செல்பவன். அவன் சொன்னான், “போன ஞாயிற்றுக்கிழமை, எங்க தெருக்காரங்க 
எல்லாம், அவங்கவங்க அரிசி, பருப்பு, காய்கறி இன்னும் மத்த சாமான், பாத்திரமெல்லாம் எடுத்துக்கிட்டு ஊரவிட்டுத் 
தள்ளியிருக்கிற தம்பிரானூத்து எங்கிற இடத்துக்குப் போனோம். அது தோப்பு மாதிரி இருக்கும். ஒரு சுனை இருக்கும். 
சின்னவங்க எல்லாம் வெளயாடிக்கிட்டு இருக்கிறப்ப, பெரியவங்க எல்லாம் ஒண்ணுசேந்து, அடுப்பப் பத்தவச்சு அரிசி, 
பருப்பு, காய்கறியெல்லாம் போட்டு ஒரே சோறா ஆக்குனாங்க. அப்புறம் எல்லாத்தயும் ஒக்காரவச்சு பரிமாறுணாங்க. 
அதுதான் கூட்டாஞ்சோறு. ரொம்ப நல்லா இருந்துச்சு” என்று சொல்லி முடித்தான் அவன். 

“என்னடா, இன்னும் வீட்டுக்குப் போகலியா?” என்று கேட்டுக்கொண்டே நான்காவதாய் வந்தான் ஒரு புதியவன். 
“டே, இவனுக்குக் கூட்டாஞ்சோறு’ன்னா என்னான்னு தெரியலடா” என்று சொல்லிச் சிரித்தார்கள் மற்ற இருவர். 
“கூட்டாஞ்சோறா?” என்று யோசனையில் ஆழ்ந்தான் அந்தப் புதியவன். அவனது தந்தை ஒரு தமிழாசிரியர். 
அவனுக்கும் தமிழில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. “டே, நேத்து எங்கப்பா ஒண்ணப் படிச்சு எனக்குச் சொன்னார்’டா. 
அந்தக் காலத்துல, மலையடிவாரத்துல இருக்கிறவங்க, ஏதோ ஒரு நாள்’ல ஊருக்கு வெளியில இருக்கிற காட்டுப்பக்கம் 
போவாங்களாம். வேட்டநாயெல்லாம் கூட்டிக்கிட்டு போவாங்களாம். அங்க புதர்’ல பதுங்கியிருக்கிற முயல்கள 
வெரட்டுவாங்களாம்”

“எப்படி?”

எல்லாப் புதரச் சுத்தியும் நீளமான கம்பால அடிப்பாங்களாம். பயந்துபோயி முயலுக வெளியில வந்து ஓடுமாம். அதுக 
கண்டமேனிக்கு ஓடாம, ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போற மாதிரி சுத்தி வளச்சு நின்னு போக்குக் காட்டுவாங்களாம். 
அப்படி மாட்டிக்கிட்ட முயலுகளயெல்லாம் பிடிச்சுக் கொண்டுவந்து சமச்சு எல்லாம் ஒக்காந்து சாப்பிடுவாங்களாம். 
பெரும்பாணாற்றுப்படை’னு ஒரு பாட்டுல இருக்கு’ன்னு அப்பா சொன்னாரு.”

“இப்ப அதுக்கு என்னா?”

“இல்லடா, அப்படிச் சாப்புடறத ‘கடறு கூட்டுண்ணுதல்’னு அந்தப் பாட்டுல போட்டிருக்கு’ன்னு அப்பா சொன்னாரு”

“கடறு’ன்னா?”

“கடறு’ன்னா காடு. காட்டுல ஒண்ணாச்சேந்து சமச்சு சாப்பிடறது காட்டுக் கூட்டாஞ்சோறு. இங்க சோறு இல்லாம, 
வெறும் கறி மட்டும்தான. அதனால இது கூட்டுணவு”

அந்தத் தமிழாசிரியர் மகன் குறிப்பிட்டது இந்த அடிகளைத்தான்:

பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக்
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்” – பெரும். 112 – 116

இதன் பொருள்:

பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,
குவிந்த இடத்தையுடைய வேலியில் (ஒன்றோடொன்று)பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி,
முள்(இருக்கும்)தண்டு (உடைய) தாமரையின் புற இதழைப் போன்ற
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து(ப் பிடித்து),	
கடுமையான கானவர் (அக்)காட்டில் (கூட்டாஞ்சோறாகக்)கூடியுண்ணும்

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!