பிற கட்டுரைகள் - 23. என்னே தமிழின் இளமை - கட்டுரைத்தொகுப்பு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

   பிறகட்டுரைகள் ( 1 - 22)

   1. அழகு பெத்த
   2. நல்லா இருக்கு
   3. வெள்ளென
   4. அம்புட்டு அழகு
   5. அப்படி ஒரு
   6. மூக்கு முட்ட
   7. அவனெல்லாமொரு ஆளு
   8. வகையா அமைஞ்சிருக்கு
   9. அசந்துபோய்
   10. பைய பையப்பைய
   11. கம்முனு
   12. கூட்டாஞ்சோறு
   13. கொள்ள மீனு
   14. அன்னக்கித்தொட்டு
   15. விருந்துக்கு வரக் கரைந்த காக்கை

   16. கூப்பிடு தூரம்
   17. சும்மாடு
   18. எத்து
   19. செத்தை
   20. கால்கழுவு
   21. நடுக்கத்தப் பாரு
   22. கலர்ப்பூ
   23. போர் மாடு
   24. சாடு
   25. நிலா நிலா ஓடி வா
   26. அவல் உப்புமா
   27. இம்மென்றால்
   28. மூச்சுவிடமாட்டேன்
   29. இனிமேல் வரும்
   30. இனிமேல் வரும்


 
ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக.

 
என்னே தமிழின் இளமை
 25 - நிலா நிலா ஓடி வா


அன்றைக்கு விடுமுறை. முழுநிலவு நாள்கூட – அதாவது பௌர்ணமி. வீட்டில் தனது அலுவலகக் கோப்புகளைப் 
புரட்டிக்கொண்டிருந்தான் அவன். அவளோ ஏதோ பாடங்களுக்கான குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தாள். பிள்ளைகள் 
விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள்.

அவனுக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது. தன் மனைவியைப் பார்த்துக்கேட்டான், “இன்னிக்குப் பௌர்ணமி 
இல்லையா? ராத்திரி மொட்டை மாடியில நிலாச்சோறு சாப்பிடலாமா?”

“நல்ல யோசனைதான்” என்றாள் அவள். “அப்படீன்னா, இன்னக்கி மத்தியானம் லேசாச் சாப்டுட்டு, சாயங்காலமும் 
வெறும் காபி மட்டும் வச்சுகிட்டம்’னா ராத்திரிக்கு நிலாச்சோறு தயார் பண்ணிடலாம்” என்றாள்.

“பேருக்குத்தான் நிலாச் சோறு. நிலா வேணும்னா இருக்கும். சோறு இருக்காதே! நீதான், இட்டிலி, தோசை, பூரி, 
சப்பாத்தி’ன்னு ஏதாவது டிபன்தான செய்வ” என்றான் அவன்.

“வேணும்’னா பலவகை அன்னம் தயார் பண்றேன்” என்றாள் அவள்.

“அதென்ன பலவகை அன்னம்?”

“அதாங்க, சித்ரான்னம், variety rice”

பின்னர் அவர்கள் அவரவர் வேலையில் மூழ்கிவிட்டனர்.

இரவு எட்டுமணிவாக்கில் ஒரு கட்டைப்பை நிறைய பலவித பாத்திரங்களில் தேவையானதை எடுத்துக்கொண்டு 
“நான் தயார்” என்றாள் அவள்.

பிள்ளைகளைப் பார்த்து, “வாங்கடா மொட்டை மாடிக்குப் போகலாம், இன்னிக்கி நிலாச் சோறு” என்றான் அவன்.

“அதென்னப்பா நிலாச்சோறு?” என்றான் இளையவன்.

“நிலா வெளிச்சத்தில ஒக்காந்து சாப்புடணும். அதான் நிலாச்சோறு” என்று மூத்தவன் சொல்ல, ஆளுக்கு முந்தி 
பிள்ளைகள் மாடியை நோக்கி விரைந்தனர்.

மாடியில் சமுக்காளம் விரித்து, பாத்திரங்களை வெளியில் எடுத்துப் பரப்பினாள் அவள்.

“அம்மம்மா, எனக்குத்தான் மொதல்ல” என்று துடித்தான் சின்னவன்.

“கொஞ்சம் பொறுடா, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்” என்றான் அவன்.

அப்போழுது அவர்கள் வீட்டுக்கு அடுத்து வீட்டு மாடியில் ஒரு பெண் தன் கைக்குழந்தையை இடுப்பில் 
வைத்துக்கொண்டு வந்தாள். இடுக்கிய கையில் ஒரு பாத்திரம். அதில் அந்தக் குழந்தைக்கான குழைத்த சோறைக் 
கொண்டுவந்திருந்தாள்.
“நிலாப் பாரு கண்ணு! நிலாவப் பாத்துக்கிட்டே சாப்பிடலாமா?” என்று சொல்லிக்கொண்டே ஒரு வாய்ச் சோற்றை 
எடுத்து அந்தக் குழந்தைக்கு ஊட்ட முயன்றாள் அந்தப் பெண்.

அந்தக் குழந்தை வாயை இறுக்க மூடிக்கொண்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டது.

“இந்தா பாரு! நீ சாப்பிடலைன்னா, அந்த நிலாவுக்குக் கொடுத்துருவேன். நிலா! ஓடிவா! வந்து இத வாங்கிக்க” 
என்று நிலவை நோக்கியவாறு அந்தப் பெண் தன் கையை நீட்டினாள்.

“அச்சச்சோ! ஆசை ஆசை! அந்த நிலாவுக்கு! இது எம் பாப்பாவுக்கு” என்று கூறியவாறு நீட்டிய கையைக் 
குழந்தையின் வாய்க்கருகில் கொண்டுசென்றாள் அந்தப் பெண். அந்தக் குழந்தைக்கு என்ன புரிந்ததோ 
தெரியவில்லை, இப்போது வாயைத் திறந்து கொடுத்த சோற்றை வாங்கிக்கொண்டது.

இந்த மொட்டை மாடியில் அமர்ந்திருந்த அவன் சிரித்தான்.
 
“அங்க என்னடான்னா மனுசன் அந்த நிலாவுக்கே போயிட்டு வந்துட்டான், இங்க பாத்தா, இன்னமும் நாம் அதக் 
காட்டிச் சோறு ஊட்டிவிட்டுக்கிட்டு இருக்கோம்” என்றான் இளக்காரமாக.

“இந்த இளக்காரம்தான வேண்டாம்’கிறது. இது சின்னப் பிள்ளைங்க உலகம். அதுல வந்து ஒங்க அறிவியலைப் 
புகுத்தக்கூடாது. ஏன், அவ்வளவு முன்னேறுன அந்த நாட்டுலதான் சின்னப்பிள்ளைங்க மாயாஜாலக்கதையான 
Harry Potter கோடிக்கணக்குல விற்பனையாகுது. அதுக்கும் இதுக்கும் முடிச்சுப் போடாதீங்க. ஏன் நம்ம நாட்டுல 
கூட சந்திராயன் விட்டாங்கல்ல. அந்தக் குழுவில இருந்த முக்கியமான ஒருத்தரு தமிழர்தானே. அவர் பேரு 
மயில்சாமி அண்ணாத்துரை. அவருகூட சின்னப்பிள்ளையா இருந்தப்ப, இப்படி அவங்க பாட்டி இடுப்புலயோ, 
அம்மா இடுப்புலயோ ஒக்காந்துகிட்டு நிலாச்சோறு சாப்டுட்டு இருந்திருப்பாரு. இப்ப அவர் நிலாவுக்கு விண்கலம் 
விடலியா?” என்று படபடத்தாள் அவள்.

“ஆமா, இப்படிச் சின்னப்பிள்ளங்களுக்கு எத்தன நாளா நிலாச்சோறு ஊட்டிக்கிட்டு இருக்கோம். நீதான் சொல்லேன். 
நம்ம இலக்கியத்துல இதப் பத்திய குறிப்பு இருக்கா?” அவன் பேச்சை மாற்றினான். அவள் சிறிது கோபப்பட்டாலும் 
இலக்கியத்தைப் பற்றிப் பேசினால் இளகிவிடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். தமிழ்ப் பேராசிரியை அல்லவா!

“இப்ப பிள்ளைங்ககூட மகிழ்ச்சியா பேசிக்கிட்டு இருக்க வந்திருக்கோம். நான் இலக்கியத்தப் பத்திச் சொன்னா 
அவங்களுக்குப் புரியுமா? எல்லாத்தயும் முடிச்சுக்கிட்டுக் கீழ போனப்புறம் சொல்றேன்” என்றாள் அவள்.

பின்னர் அவர்கள் கலகலப்பாகப் பேசிக்கொண்டே வேண்டியதைப் பெற்றுக்கொண்டு சாப்பிட்டனர்.
 
வெகுநேரம் கழித்துக் கீழே இறங்கியதும், பிள்ளைகள் படுக்கப்போன பின்னர் அவன் விசயத்தைக் கிளறினான்.

“அந்த நிலாச்சோறு - இலக்கியக் குறிப்பு – சொல்றேன்னு சொன்னியே” அவன் இழுத்தான்.

“சொல்றேன், சொல்றேன், வேலைய முடிச்சுக்கிட்டு வர்ரேன்” என்று அடுப்பறைக்குள் நுழைந்தவள் அரைமணி 
நேரம் கழித்து வந்தாள்.

அதற்குள் அவன் அவர்களின் படுக்கை அறைக்குள் வந்துவிட்டான்.

உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்த அவள் பேசத் தொடங்கினாள்.

“அகநானூறுல ஒரு காட்சி. பாடல் 54-ன்னு நெனைக்கிறேன். அதுல ஒரு தலைவன் அந்த நாட்டு அரசனோட 
போருக்குப் போறான். போர் முடிஞ்சு திரும்பி தேர்ல வந்துகிட்டு இருக்கான், ஒரு மாலை நேரம். மேற்கு 
வானத்தில தோன்றுன பிறை நிலா கொஞ்சம் கொஞ்சமா இருட்ட இருட்ட பிரகாசமாகிகிட்டே வருது. 
அப்ப அவனுக்குத் தன் மனைவி நினைவுக்கு வர்ரா. அவங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு. ரொம்பச் சின்னக் 
குழந்தை. இந்நேரம் அவ அந்தக் குழந்தையை இடுப்புல வச்சுக்கிட்டு நிலாவக் காட்டிப் பால் கொடுத்துக்கிட்டு 
இருப்பா. சத்தம்போடாமப் போயி அவ முதுகச் சேத்துக் கட்டிகிட்டா எப்படியிருக்கும்’னு நெனச்சுப் பாக்குறான்.

முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவையாயின் தருகுவன் பால் என
விலங்கு அமர்க்கண்ணள் விரல் விளி பயிற்றி – அகநானூறு 54 : 17 - 20

அப்படீங்கிறது அந்த அடிகள்”.

“கொஞ்சம் புரியுது. இதுக்கு என்ன அர்த்தம்?” என்றான் அவன்.

“வளர்கின்ற பிறையினால் ஒளிவிடும் முழுதும் வளராத திங்களே!
கழுத்தில் பொன்சங்கிலி அணிந்த என் மகனின் இருப்பிடம் தெரிந்து
வந்தால் உனக்குப் பால் தருவேன் என்று
ஓரக்கண்ணால் பார்த்தவளாய் விரலால் நிலவை மீண்டும் மீண்டும் அழைத்து,”

“அப்படீங்கிறது இதன் பொருள். பாத்தீங்களா? இந்தச் சங்ககாலத் தலைவி, நிலாவையே பாத்து நேர்ல வா, வந்தா 
இந்தப் பால் ஒனக்கு’ங்கிறா. இப்படிச் செய்யுறது நம்ம தமிழ்நாட்டு வழக்கம். மத்த நாட்டப் பத்தி தெரியாது. ஆனா 
இங்க இது ரொம்ப நாளா நடக்குது, இல்லையா?

“அது மட்டும் இல்ல. இந்தக் கலித்தொகைப் பாடலப் பாருங்க.

“ஒரு தாய் அவளோட குழந்தைக்கு நிலாவக் காட்டுறா.

“ஐய! திங்கள் குழவி! வருக! என யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது – கலித்தொகை 80: 18-19

“பாத்தீங்களா, இங்க திங்கள் குழவி’ங்கிறா. குழவி’ன்னா குழந்தை இல்லையா? இது பிறை நிலாவைக் 
குறிக்கலாம். அல்லது நிலவையே இன்னொரு குழந்தையாப் பாக்குறா’ன்னும் சொல்லலாம். தன் குழந்தைக்கு
அந்தக் குழந்தையக் காட்டி மகிழ்ச்சியூட்டுறா இந்தத் தாய். இத அம்புலி காட்டல்’னு சொல்றா. ஒரு விசயம் 
தெரியுமா ஒங்களுக்கு? இந்த அம்புலி’ங்கிற சொல் சங்க இலக்கியத்துல இந்த ஒரு இடத்துல மட்டும்தான் 
வருது. அதுவும் குழந்தையைப் பற்றிப் பேசும்போதுதான் வருது. இதத்தவிர பழமொழி நானூறு என்கிற 
பாடல்லயும் இந்த அம்புலி வருது. 323-ஆவது பாடல்’னு நினைக்கிறேன். ‘சோத்த அந்த நிலாவுக்குக் 
கொடுத்துருவேன்’னு பிள்ளைகளைப் பயமுறுத்தும் தாய்மார் போல’ - அப்படீன்னு சொல்ல வரும்போது 
இந்த அம்புலி’ங்கிற சொல்லைப் பயன்படுத்துறார் புலவர். பொதுவா சின்னப்பிள்ளங்களுக்கு சோறு ஊட்டும்போது
‘புவா சாப்பிடு’ன்னு சொல்லுவோம். பெரியவங்களுக்குச் சொல்றதில்ல. எப்படி புவா’ன்னா சின்னப்புள்ளங்க 
சாப்பாடோ, அப்படி அம்புலி’ன்னா சின்னப்புள்ளங்க நிலா”

கடகடவென்று பேசி மூச்சு வாங்க நிறுத்திய அவளை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் கேட்டான், 
“அப்புறம் இந்த அம்புலி வேற எங்க வருது?”

“அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு, கம்பராமாயணத்துல இந்த அம்புலி வருது. எங்க தெரியுமா? யுத்தகாண்டத்துல. 
அதுல இராவணன் சோகப் படலத்துல, தன் மகன் இந்திரசித்துவுக்கு அவன் சின்னப்புள்ளயா இருந்தப்ப அவனுக்கு
நிலாவக் காட்டுனதப் பத்தி இராவணன் சொல்லும்போது அம்புலி! அம்ம! வா! என்று அழைத்தலும்’னு இராவணன்
சொல்றமாதிரி இது வருது.

“அப்புறம் இது பிற்கால இலக்கியங்களில ரொம்பவே வருது. தெய்வத்தப் பத்தியோ, ஒரு மன்னனைப் பத்தியோ 
பாடும்போது அவங்க சின்னப்புள்ளயில’ருந்து வளந்துவர்ரதப் பத்திப் பாடுவாங்க. அதுல அம்புலிப் பருவம்’னே 
ஒரு பகுதி இருக்கும்.”

“ஆமாமா, நான்கூட சின்னப்பிள்ளையில அம்புலிமாமா’ங்கிற புத்தகத்தைப் படிச்சுருக்கேன். இப்பக்கூட வருதோ 
என்னமோ?” என்றான் அவன்.

“வந்துகிட்டு இருக்குன்னுதான் நெனைக்கிறேன். அதனால, இந்த சின்னப்புள்ளங்களுக்கு நிலாவக் காமிக்கிறதும் 
அந்த நிலாவ அம்புலிங்கிறதும் இன்னிக்கு நேத்து இல்லீங்க, ரொம்ப நாளா நம்மகிட்ட இருக்கு இந்தப் பழக்கம்.” 
என்று சொல்லி முடித்தாள் அவள்.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்! 

என்னே தமிழின் இளமை!